11/03/2013

நாடக ஆசிரியர் கோமல் சுவாமிநாதன் - ஆர்.கனகராஜ்


பத்திரிகையாளர், நாடகப் படைப்பாளி, சினிமா கதாசிரியர், அரசியல் அபிமானி எனப் பல பரிமாணம் கொண்ட கோமல் சுவாமிநாதன் குறிப்பிடத்தக்கக் கலையுலகவாதி.

1935-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி, செட்டிநாட்டில், ஸ்ரீநிவாசன்-அன்னபூரணி தம்பதிக்குப் பிறந்தவர். மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். 1952-களில் காங்கிரஸ் பொதுக்கூட்ட மேடைகளில் பேசத் தொடங்கினார். அவரின் ஆவேசப் பேச்சாற்றலால் "கோடையிடிக் கோமல்' என்று அடைமொழியோடு அழைக்கப்பட்டார். காமராஜரிடம் இவருக்கும், இவரிடம் காமராஜருக்கும் தனி மதிப்பு இருந்தது. "சுவாமிநாதன்' என்ற பெயரில் காமராஜருடன் பலர் இருந்ததால், இவருக்குத் தனித்த அடையாளம் வேண்டும் என்ற நோக்கில், இவரது சொந்த ஊரான "கோமல்' என்ற ஊரைச் சேர்த்து, "கோமல் சுவாமிநாதன்' என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

1969-இல் காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்தபோது, "இதயத்துடிப்பு' என்னும் அனல் பறக்கும் காங்கிரஸ் பிரசார நாடகத்தை அரங்கேற்றி வந்தார். பிறகு அரசியலில் தார்மிக ஆதரவாளராக மட்டும் செயல்பட்ட அவரது முழு கவனமும் நாடகத்துறைக்குத் திரும்பியது. சென்னைக்கு வந்து, "சேவா ஸ்டேஜ்' எஸ்.வி.சகஸ்ரநாமம் மற்றும் பி.எஸ்.ராமையா, வி.கோபி, நடிகர் முத்துராமன் ஆகியோருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். சேவா ஸ்டேஜுக்காக புதிய பாதை, மின்னல் காலம், தில்லை நாயகம் ஆகிய நாடகங்களை எழுதினார்.

சினிமாவில் ஈடுபாடு ஏற்பட்டு இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் கற்பகம், கைகொடுத்த தெய்வம் மற்றும் அவருடைய பல வெற்றிப்படங்களிலும், இந்தியில் தயாரிக்கப்பட்ட "சாரதா' படத்திலும் பணியாற்றினார். அதே காலகட்டத்தில் தேவர் பிலிம்ஸின் இந்தித் திரைப்பட கதை விவாதங்களில் கலந்துகொண்டு தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தினார்.

சில நண்பர்களுடன் இணைந்து "ஸ்டேஜ் பிரண்ட்ஸ்' என்னும் நாடகக் குழுவை சொந்தமாக உருவாக்கிய கோமல் சுவாமிநாதன், சன்னதி தெரு, நவாப் நாற்காலி, மந்திரி குமாரி, பட்டணம் பறிபோகிறது, வாழ்வின் வாசல், ஜீசஸ் வருவார், யுத்த காண்டம் எனப் பல நாடகங்களை மேடையேற்றினார். அந்நாள்களில் அபத்த நகைச்சுவைக் குவியல்களான மேடை நாடகங்களுக்கு எதிரான மேதைத்துவம் மிக்க பகடிகளாக இவருடைய நாடகங்கள் செயல்பட்டு தனி கவனம் பெற்றன.

இவரது "பெருமாள் சாட்சி' என்ற நாடகம், "பாலாழி மதனம்' என்னும் பெயரில் மலையாளத்திலும், "குமார விஜயம்' என்னும் பெயரில் தமிழிலும் திரைப்படங்களாயின. மற்றும் நவாப் நாற்காலி, யுத்த காண்டம், பாலூட்டி வளர்த்த கிளி ஆகிய படங்களும், "அனல் காற்று, தண்ணீர்...தண்ணீர்..., ஒரு இந்தியக் கனவு எனச் சிறப்பாகப் பேசப்பட்ட படங்களும் இவருடைய நாடகங்களேயாகும். வணிக நாடக உலகம் நினைத்துப்பார்க்க முடியாத நவீன நாடக வடிவ சோதனைகளை மேடைகளில் நிகழ்த்திய சாதனையாளர் கோமல் சுவாமிநாதன். மேடை நாடகங்களை மேன்மைப்படுத்த தன்னை இறுதிக்காலம் வரை அர்ப்பணித்தவர்.

தமிழ்ப் பிராமணக் குடும்பப் பின்னணியை வைத்து, நடிகை மனோரமாவுக்காக இவர் எழுதிய ஒரே நாடகம், "என் வீடு, என் கணவன், என் குழந்தை'. மேஜர் சுந்தர்ராஜனும் கோமலும் மதுரையில் பள்ளிப் பருவத்திலிருந்தே நண்பர்கள். பின்னர், மறுபடியும் 60-களில் (சென்னையில்) நாடக உலகில் சந்தித்துக் கொண்டார்கள். மேஜருக்காக "அப்பாவி', "டெல்லி மாமியார்', "அவன் பாத்துப்பான்' ஆகிய நாடகங்களை கோமல் எழுதினார்.

நடிகர் சிவகுமார், சத்யராஜை கோமலிடம் பரிச்சயம் செய்ய, தனது "கோடு இல்லா கோலங்கள்' நாடகத்தில் ஒரு சிறுவேடம் கொடுத்து சத்யராஜை அறிமுகம் செய்தவர் கோமல்.

அனல் காற்று, யுத்த காண்டம், ஒரு இந்தியக் கனவு என்ற மூன்று படங்களைக் கோமல் இயக்கினார். இலங்கைக்குப் பயணம் செய்து, ஈழத்தமிழ் சார்ந்த இலங்கை அன்பர்களைச் சந்தித்தார். அங்கு சொற்பொழிவாற்றினார்.

இவருடைய மனைவி பெயர் விஜயலெட்சுமி. இவர்களுக்கு ஒரு பெண், இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

 நாடகம் மற்றும் திரைத்துறை தவிர, பத்திரிகைத் துறையிலும் கோமல் அடியெடுத்து வைத்தார். அவரின் நெருங்கிய நண்பரும், எழுத்தாளருமான நா.பார்த்தசாரதியின் "தீபம்' இலக்கியப் பத்திரிகையின் தாக்கத்தால், அந்த இதழின் பெயரைக்கொண்டே ஓர் இதழ் நடத்த எண்ணினார். ஆனால் அவரது எண்ணம் கைகூடவில்லை. அதனால், வணிக இதழாக வெளிவந்து கொண்டிருந்த "சுபமங்களா' இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று, அந்த இதழைத் தரமான இலக்கிய இதழாக மாற்றினார். இதனால், "சுபமங்களா' இலக்கிய இதழ் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவர் ஆசிரியரான பிறகு வெளிவந்த இரண்டாவது இதழிலிருந்து, "பறந்துபோன பக்கங்கள்' என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றைத் தொடராக எழுதினார். இவர் இறப்பதற்கு முன்பு வரை அத்தொடர் வெளிவந்தது. இறந்த பிறகு "சுபமங்களா' மூன்று இதழ்கள் மட்டுமே வெளிவந்து பின் நிறுத்தப்பட்டது.

"கலைமாமணி' மற்றும் பல விருதுகளைப் பெற்ற கோமல் சுவாமிநாதன், 1995-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி காலமானார்.

ஜனரஞ்சகத் தளங்களில் சமூக பொறுப்புமிக்க கலைஞராக இயங்கியவர்கள் வரிசையில் கோமல் சுவாமிநாதனுக்கும் இடமளித்திருப்பது பெருமைக்குரிய விஷயம்!

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: