1903-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ள கடப்பேரி என்னும் கிராமத்தில், ராகவன்-முனியம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தவர். வாலாஜா அருகிலிருந்த கிராமத்துப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைப் பயின்றார். வேலூர், ஊரிஸ் கல்லூரியில் கல்லூரிக் கல்வியை 1926-இல் முடித்து, சென்னைப் பல்கலைக்கழகத்தின் இடைநிலை கலையியல் பட்டம் பெற்றார்.
பள்ளி மாணவராக இருந்த காலத்திலிருந்தே விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டிருந்த ஜமதக்னிக்கு, ஜாலியன் வாலாபாக் படுகொலை இந்தியா முழுவதும் ஏற்படுத்திய அதிர்வலைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த உணர்வின் தாக்கத்தால், காங்கிரஸ் இயக்கத்தின் மீது தீவிர பற்றுகொண்டார்.
கல்லூரி படிப்பை முடித்தவுடன் காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அப்போது வேலூர் கோட்டையின் மீது கல்வீசி வன்முறையில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் காவல் துறை அவரை 1926-ஆம் ஆண்டு முதன் முறையாகக் கைதுசெய்து, ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை விதித்தது.
விடுதலைப் போராட்ட வீரர் ஆக்கூர் அனந்தாச்சாரியார் 1968-இல் எழுதி வெளியிட்ட "அரசியல் நினைவு அலைகள்' என்ற நூலில், நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் ஜமதக்னி எவ்வளவு துடிப்போடு செயல்பட்டார் என்பதை விளக்கியுள்ளார்.
இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட ஜமதக்னிக்கு பிரிட்டிஷ் அரசு ஓராண்டு ஒரு மாதம் சிறைத் தண்டனை வழங்கியது. சிறையில் இருந்து விடுதலை அடைந்த ஜமதக்னியை, 1928-இல் பிரிட்டிஷ் அரசு ராஜ துரோக குற்றத்தைப் பொய்யாகச் சுமத்தி ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கி லாகூர் சிறையில் அடைத்தது.
சிறையில் இருந்து வெளிவந்த ஜமதக்னி தொடர்ந்து பிரிட்டிஷ் எதிர்ப்புப் பிரசாரத்தை மேற்கொண்டார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்குபெற்று, ஓராண்டு சிறைத் தண்டனையைப் பெற்றார்.
இக்காலக்கட்டத்தில்தான் சிறையில் இருந்த பொதுவுடைமைச் சிற்பி சிங்காரவேலரை முதன்முதலாக சந்தித்தார். ""சிங்காரவேலரோ தனக்கு தரப்பட்ட மாமிச உணவை எனது வயிற்றுப் பசிக்கு அன்புடன் அளித்தார். அறிவுப் பசிக்கோ மார்க்சிய உணவை அளித்தார். இந்தப் பயிற்சியே மார்க்சிய நூல்களை முறையாகக் கற்கும் பக்குவத்தை எனக்கு அளித்தது. சிறையில் இருந்த மற்ற தலைவர்களுக்குப் பிற்காலத்தில் மார்க்சிய வகுப்புகளை எடுப்பதற்கு வழிவகுத்தது. "மூலதனம்', "மிகை மதிப்பு' நூல்களைத் தமிழில் முழுமையாக மொழியாக்கம் செய்வதற்கு எனக்குப் பெரிதும் உதவியது'' என்று கூறியுள்ளார் ஜமதக்னி.
சிறையில் இருந்து வெளிவந்த சில மாதங்களிலேயே சட்டமறுப்பு இயக்கத்தில் ஈடுபட்டு, ஓராண்டு சிறைத்தண்டனைப் பெற்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1939-இல் இந்திய பாதுகாப்பு விதியின்படி கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகள் வேலூர், கோவை சிறைகளில் அடைக்கப்பட்டார். அப்போது பெருந்தலைவர் காமராஜரும் இவரும் பக்கத்து பக்கத்து அறைகளில் இருந்தனர். 1975 ஜூன் மாதத்தில் தலைவர் காமராஜரை அவரது இல்லத்தில் சந்தித்தபோது, காமராஜர், ""ஜமதக்னிதான் எனக்கு மார்க்சியம் என்ன என்பதைக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்'' என்று நினைவுகூர்ந்துள்ளார்.
மீண்டும் இந்தியப் பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இருந்தார். அப்போது சம்ஸ்கிருதம், இந்தி, மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளைக் கற்றார். இதுகுறித்து ஜமதக்னி குறிப்பிடுகையில், ""மூதறிஞர் ராஜாஜி, சிங்காரவேலர், டாக்டர் இராசன், பட்டாபி சீத்தாராமையா, பலுசு சாம்பமூர்த்தி, ஈ.எம்.எஸ். நம்பூதிபாட், ஏ.கே.கோபாலன், கொண்டா வெங்கடசுப்பையா, காளா வெங்கட்ராம், அன்னபூர்ணய்யா ஆகியோருடன் சிறையில் இருந்தமையால் பல மொழிகளையும் கற்பதற்குத் தனக்கு வாய்ப்பு ஏற்பட்டது'' என்று அடிக்க நினைவுகூர்வார்.
சம்ஸ்கிருத மொழியை முழுமையாகக் கற்றுணர்ந்த அறிஞர்களில் ஜமதக்னியும் ஒருவர். காளிதாசரின் மேகசந்தேசம், ரகுவம்சம் ஆகிய நூல்களைத் தமிழில் கொண்டு வந்த பெருமைக்குரியவர். புகழ்பெற்ற ஜெய்சங்கர் பிரசாத் இந்தியில் எழுதியுள்ள "காமாயிணி' என்னும் காப்பியத்தை, தமிழில் "காமன் மகள்' என்று மொழிபெயர்த்து வழங்கினார். விடுதலைப் போராட்டக் காலத்தில் தலைமறைவாய் வாழ்ந்த தனக்கும், தனது தோழர்களுக்கும் பணம் தேவைப்பட்ட போது, திருமுருகாற்றுப்படை, கந்தரலங்காரம், கந்தரனுபூதி, குமரேச சதகம் ஆகிய நூல்களுக்கு விளக்க உரை எழுதி வருவாய் ஈட்டினார்.
1938-இல் சோஷலிஸ்ட் கட்சி உருவானபோது சிங்காரவேலர், ஜீவானந்தம் ஆகியோருடன் இணைந்து இக்கட்சி தமிழகத்தில் உருவாவதற்குப் பெரிதும் பாடுபட்டார். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானதும் அதன் நிறுவன உறுப்பினரானார். அக்கட்சியின் வட ஆர்க்காடு மாவட்டத்தின் முதல் செயலாளராகப் பணியாற்றினார். 1938-ஆம் ஆண்டில் மார்க்சியம், நீ ஏன் சோஷலிஸ்ட் ஆனாய்?, இந்தியாவில் சோஷலிசம் போன்ற நூல்களையும் எழுதி வெளியிட்டார். இதற்காக சிறைத் தண்டனையையும் பெற்றார். கம்பனுடைய சில முக்கிய பாடல்களைத் தமிழிலிருந்து இந்தியில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார்.
1947-இல் இந்தியா விடுதலை பெற்றபின், ஜமதக்னி தனது வாழ்நாளை எழுத்து, இலக்கியப் பணிகளுக்கு செலவிட்டார்.
ஜமதக்னியின் குடும்ப வாழ்க்கை சிறைத் தொடர்பு கொண்டதுதான். கடலூர் மாவட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளை சிறையில்தான் சந்தித்தார். அவரின் மகள்தான் அம்மாக்கண்ணு. இந்த அம்மாக்கண்ணுவின் பெயரை காந்தியடிகள் லீலாவதி என மாற்றினார். பின்னாளில் அஞ்சலையம்மாள் சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். அஞ்சலை அம்மையாருக்கு அளித்த வாக்குப்படி விடுதலைப் போராட்ட வீரர் லீலாவதியை 1942-ஆம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் (சிவாஜி), இரு மகள்களும் (கிருபா, சாந்தி) பிறந்தனர் (கட்டுரையாளர் பேராசிரியர் மு.நாகநாதனின் மனைவிதான் முனைவர் சாந்தி). மகன் சிவாஜி, மகள் கிருபா ஆகிய இருவரும் மறைந்து விட்டனர்.
1981-இல் தனது பயணத்தை முடித்துக் கொண்டார் ஜமதக்னி. அவரின் பல படைப்புகள் இன்னும் வெளியிட வேண்டியுள்ளன. ஜமதக்னியின் சிந்தனைப் பயணம் தொடர்கிறது...
1998-ஆம் ஆண்டு க.ரா.ஜமதக்னி மொழிபெயர்த்த மூலதனம் மற்றும் மிகைமதிப்பு நூல்களுக்கு தமிழ்நாடு அரசு ரூபாய் ஐந்து லட்சம் உதவி வழங்கிச் சிறப்பித்தது.
நன்றி - தமிழ்மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக