ஈச்சேரில் விழுந்த” சந்திர சேகரம் கோழி உறக்கத்தை வாலாயம் பண்ணி, அதனைச் சுகிக்கின்றார்.
யாழ்தேவியிலே பகற் பயணம். அகோர வெயில். காட்டு வெக்கை. இத்தனைக்கும் மேலாகச் சிவசம்பு
சாப்பாட்டுக்கடைச் சோற்றைக் கொறித்தார். மனசார ஒரு மயக்கம். சாய்வு நாற்காலியிற் தாம்
தூங்குவதான நினைப்பே அவருக்கு யாரோ உடம்பைப் பிடித்து விட்டது போன்ற சுகத்தைக் கொடுத்தது.
வள்ளிசாக மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், அவருடைய குடும்பம் தாயடி வீட்டிலே
வந்திருக்கிறது. பெத்துப் பெருகிய குடும்பம். அவருடைய மனைவி சரஸ்வதி மூலம் ஐந்து பிள்ளைகளையும்
பெட்டைக்குஞ்சுகளாகவே பீச்சி விட்டாள். அரிய விரதங்கள் பிடித்து, இருக்காத தவம் எல்லாம்
கிடந்து, கண்ட கண்ட தெய்வங்களையெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டது வீண் போகவில்லை. சோட்டைத்
தீர்க்க ஆறாம் காலாகப் பொடியன் பிறந்தான். சந்தான விருத்தியில் அவனே மங்களமாக அமைந்தான்.
பயணக் களைப்பைப் பாராட்டாமல் சரஸ்வதியும் புத்திரிகளும் வீட்டைத் துப்பரவு
செய்யும் உழவாரத் திருப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
சந்திரசேகரத்தை சயனநங்கை முற்றாகச் சரித்துவிடவுமில்லை. இமைகளைப் பிளந்து
காங்கை ஏறுவதான கூச்சத்தில், அவருடைய கண்களின் இமைக் கதவுகள் சற்றே அகலும். இமைகளின்
ஈயக் குண்டுகளைச் சுமக்க இயலாது என்கிற வாக்கில் மீண்டும் மூடிக் கொள்ளும். இமைகள்
இலேசாகத் தோன்றுகின்றன. முற்றத்தில் மாமரங்கள் செழுங்கிளைகள் பரப்பியிருக்கின்றன. அவை
வெக்கையை உறிஞ்சுவதினாலேதான் இத்தகைய இதம் விடிந்திருக்கிறது என்பதை அனுமானிக்க முடிகிறது.
மாமரங்களுக்கப்பால் “கேற்”
தெரிகிறது. அதிலே கறள் மண்டிக் கிடக்கிறது.
கேற்றிலே நிலை குத்திய விழிகளைப் பிரித்தெடுத்து, இடப்பக்கமாகவே மேய
விடுகிறார். மதிலில் பாசி சடைத்து நுதம்பி வழிகின்றது. சுவரின் வெடிப்பிலே ஆலங்கன்று
ஒன்று வேர் விட்டு, கொழுத்து வளர்கின்றது. “உதை உப்பிடியே வளரவிட்டால் சுவருக்கு மோசம்
தரும்” ஐயரின்
வளவைச் சுற்று மதில் வளவு என்றுதான் சொல்வார்கள். அந்த எல்லையைப் பற்றியும் அறிக்கையைப்
பற்றியும் கவலையில்லை. வலப்பக்கமும் கொல்லையும் வேலியும். வலப்புற வேலியிலே ஊரும் அவருடைய
பார்வை தரிக்கின்றது. அந்த வேலி கறையான் தின்று இறந்து கிடக்கின்றது. கோழி ஒன்றும்
அதன் குஞ்சுகளும் ஒரே சுரத் தொனியைச் சாதகஞ் செய்து கொண்டு, வேலியிலுள்ள கறையான்களை
மேய்கின்றன. … பூரணத்திற்கு வேலியைப் பற்றி என்ன கவலை? சோட்டைக்குத்தானும் அவளுக்கு
ஒரு பெட்டைக்குஞ்சு பிறக்கவில்லை. சீமாட்டிக்கு எல்லாம் கடுவன்கள்.
வேலியையும் தாண்டி சேகரத்தாரின் மனம் அலை மோதுகிறது. முப்புறமும் எரிக்கமுனையும்
முக்கண்ணனாகச் சாம்பசிவத்தார் காட்சியளிக்கிறார். சொற்கள் அனற் குழம்பை அள்ளிச் சொரிகின்றன.
“உந்த
வேலியைப் பிரிச்செறிஞ்சு போட்டு மதிள்தான் கட்ட வேணும். உவளவை கோயில் கிணத்திலை போய்த்
தண்ணி அள்ளட்டுமன்…
ம்… பக்கத்திலை
பாவங்கள் – ஏழை பாளையள் – வந்து தண்ணி அள்ளட்டும், போகட்டும் வரட்டும் என்று ஒரு பொட்டு
விட்டால், தட்டுவாணியள் மாப்பிள்ளையல்லோ கொள்ளப் பாக்கிறாளவை…”
“பொட்டு” மேவப்பட்டு, பனையுயரத்தை எட்ட
முனைந்த புதுவேலி சாம்பசிவத்தாரின் வைராக்கியத்தைப் பறை கொட்டியது. பூரணத்தைப் பார்க்க
முடியாது. தூண்டிற் புழுவின் ஆக்கினையைத் தமதாக்கிச் சந்திரசேகரம் சாம்பினான்.
அழகு என்ற சொல்லின் அர்த்தப் பொலிவு முழுவதையும் தனதாக்கி எழில் பிழிந்தவள்
பூரணம். இடையை இறுக்கிச் சுருக்கும் பாவாடையோடும், குரும்பை மார்பை அமுக்கி விறைத்த
சட்டையோடும், சருவக்குடம் சுமந்து, அவள் தன் வீட்டிற்கும் அயல் வீட்டுக் கிணற்றுக்கும்
நடைபயில… அந்த
நடைபயிலும் நர்த்தனைக் கால்களிலே தன் உள்ளத்தை வெள்ளிப் பாதசரமாகத் தொங்க விட்டு…
விழிமொழிக் கொஞ்சல் முற்ற முற்ற, கிணற்றடி கமுக மரவட்டில் காதற்கடிதங்கள்
கனிந்து தொங்கத் தொடங்கின. கமுக மரம் சமத்தான தபாற்காரன்தான். ஆனால் காற்றும் காகமும்
செய்த திருக்கூத்தால் பூரணத்தின் கடிதமொன்று சாம்பசிவத்தின் கைகளிலே கிட்டியது. உறவு
பிளவுற்றது. வேலி பனையுயரத்தை எட்ட முனைகிறது.
வேரோடி விளாத்தி முளைத்தாலும் தாய்வழி தப்பாது என்று சொல்வார்கள். தாய்வழியில்,
பூரணம் சந்திரசேகரத்தின் மனைவியாக வாழத்தக்க உறவு முறை. ஆசையின் தொங்கு தாவல்கள், பூரணத்தை
அடைவதற்குத் தாயின் ஆதரவைத் திரட்டும் நள்ளல். இரவுச் சாப்பாட்டின் போது இதைப் பற்றி
சேகரம் மெதுவாகப் பிரஸ்தாபிக்கிறான். சித்திரைப் புழுக்கத்திற்காக விறாந்தையில் விசிறியுடன்
இருந்த சாம்பசிவத்தாரின் செவிகளிலே அந்த உரையாடலின் சில நறுக்குகள் விழுந்து விடுகின்றன.
காலம் அப்பிய சாம்பற் புழுதியை உதிர்த்துக் கொண்டு, கோபம் அம்மணமான அக்கினி உடம்பைக்
காட்டலாயிற்று.
“உங்கை
என்ன காத்தையைக்…
கதையள்? இப்பவே தாய்க்கும் மேனுக்கும் சொல்லிப்போட்டன். அந்த எடுப்பை மறந்து போடுங்கோ.
நான் மசிவனென்டு கனவிலும் நிலையாதையுங்கோ… உதுக்குக் கன்னிக் கால் நடுகிறதிலும் பார்க்க நான் பாடையிலைப்
போக ஓமெண்டுவன்”.
அதிலே தொனித்த உறுதி சேகரத்தின் தாய்க்குத் தெரியும். மகனுடைய ஆசையின்
பக்கம் தன்னால் சாய முடியாது என்ற நிதர்சனத்தின் உறைப்பு.
“உங்களுக்குத்தான்
ஆண்டவன் கண்டறியாத தொண்டையைப் படைச்சிருக்கிறான். இப்ப என்ன நடந்து போச்சு எண்டு துள்ளுறியள்?
இவன் வாயுழையைப் புசத்துறான் எண்டு கேட்டுக் கொண்டிருந்தால், நான் என்ன சுகத்தைக் கண்டன்?
மத்தளம் போல இரண்டு பக்கமும் அடிபடுறன்…” என்று சலித்து, மூக்குச் சிந்தி, முன்றானைக்கும் வேலையைக்
கொடுத்தாள் தாய்.
தொடர்ந்து புகுந்த மௌனம் நீண்டது.
“டேய்
சந்திரன்! ஏண்டா, இப்படி எங்களைக் கொல்லுறாய்? உன் விருப்பப்பட்டி ஆட, எனக்கும் உன்
கோத்தைக்கும் முதலிலை ஏதேன் நஞ்சைத்தாவன்? கண்டறியாத பலகாரத்தைக் கண்டவனைப் போல, இடியப்பக்
காரியின்ரை வாடிப்போன நோடாலத்தை நினைச்சு இந்தப் பேயன் உருகுகிறான்…” என்று விவகாரத்திற்குச் சாம்பசிவத்தார்
புதிய வேகம் கொடுத்தார்.
அடுக்களையிலிருந்து எவ்வித சளசண்டியும் எழும்பவில்லை. இளகிய இரும்பும்,
கருமத்தில் மனம் குத்திய கொல்லனும்! குரலின் சுருதியைத் தாழ்த்தி, அதிலே பாசத்தைக்
குழைத்து, “தம்பி, நீ ஒருத்தன் நல்லா வாழ வேண்டுமெண்டுதானே இவ்வளவு பாடுபட்டம்? உனக்கு
ஒரு கெடுதல் வந்து அண்ட விட்டிடுவமே? கலியாணம் எண்டால் சின்னச் சோறு கறி ஆக்கிற அலுவலிலை.
அதைப் பெரியவங்களின்ரை பொறுப்பிலை விட்டிடு.. சோதினை பாஸ் பண்ணினாப் போலை போதுமே? நல்ல
உத்தியோகம் ஒண்டிலை உன்னைக் கொழுவிவிட வேணும் எண்டு நான் ஓடித் திரியிறன். நீ என்னடா
எண்டா குறுக்கால தெறிக்கப் பார்க்கிறாய்… இனிமேல், ஒண்டு சொல்லிப் போட்டன். அந்தப் பலகாரக்காரியளின்ரை
கதை இந்த வீட்டிலை எடுக்கப்படாது…” எனப் பேசி முடித்தார்.
பேச்சுக்கு முத்தாய்ப்பு வைத்ததுடன் சாம்பசிவத்தார் நின்று விடவில்லை.
ஓடி அலைந்து பிற்கதவுகளில் நுழைந்து பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து இழுக்க வேண்டிய
கயிறுகளை இழுத்து மகன் சந்திரசேகரத்தை நல்லதொரு உத்தியோகத்திலே மாட்டிக் கொழும்புக்கு
அனுப்பி வைத்தார். அதற்குப் பின்னர்தான் சாம்பசிவத்தார் நிம்மதியாகத் தூங்கினார் என்று
கூடச் சொல்லலாம்.
தூங்குவதான பாவனையில் பழைய சம்பவங்களை அசை போட்டுக் கொண்டு கிடக்கிறார்
சந்திரசேகர்.
“சரசக்கா!
எப்பிடிப் பாடுகள், உடம்பு கொஞ்சம் இளைச்சுக் கிடக்குது” – இது பூரணத்தின் குரல்.
“அவளின்ரை
குரல் அப்பிடித்தான் கிடக்குது? ஒரு உடைவோ ஒரு கரகரப்போ?”
பக்கத்து வீட்டாரைப் பற்றிய நினைவின்றி இயந்திர வாழ்க்கை உருளும் கொழும்பில்
வாழ்ந்த பிள்ளைகளுக்கு அயல் வீட்டுப் பிரிவு புதுமைச் சுவையை ஊட்டுகிறது.
“வாருங்கோ
பூரணமக்கா! பழக்கமில்லாமல் பூட்டிக் கிடந்த வீடு. உதைத் துடைச்சுத் துப்பரவாக்கிறதுக்
கிடையிலை இடுப்பு முறிஞ்சு போடுமெணை. உதென்ன சருவச் சட்டீக்கை?”
“இதெணை
கொஞ்சம் இராசவள்ளிக் கிழங்கு. புள்ளையளுக்குப் பிரியமா இருக்குமெண்டு கிண்டினனான்.
இதுதானே மூத்த பொடிச்சி? உங்கைப் பாருங்கோவன் நல்ல வடிவா வளந்திருக்கிறான். எக்கணம்
என் கண்ணும் பட்டுப்போகும்…
எடுங்கோ புள்ளை. ஐயா நித்திரையே? அவருக்கும் கொஞ்சம் கொண்டு போய்க்குடு தங்கச்சி…”
சந்திரசேகரத்தார் தான் நித்திரையில் ஆழ்ந்து விட்டதாக நடிக்கிறார்.
“ஐயா, நித்திரையெண்டால் எழுப்பக் கூடாது” என்ற ஞாயிற்றுக்கிழமை – பிற்காலத்தில் போயா தின – ‘மெட்னி’த் தூக்கங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த
பொதுவிதி அவரைக் காப்பாற்றுகிறது.
“பழைய
பூரணமே? பெருவிரல்களால் பத்து இடங்களில் குழிதோண்டி, இரண்டு வார்த்தைகள் பேசத் திக்குவாளே,
அந்த மங்குளிப் பெண்ணா இவள்? இப்பொழுது கதை கண்டவுடன் சொர்க்கம்”
சந்திரசேகரத்தாரின் மனம் நினைவோடையைக் கிழித்துச் செல்கின்றது.
உத்தியோகமான புதிதிதில் கொழும்பிலே போர்டிங் சீவியம். அலாம் மணி – பிளேன்
டீ – பேப்பர் – முகச்சவரம் – தந்த சுத்தி – குளிப்பு முதலியன் – பாண் – விறுக்கு நடை
– பஸ் – ஓட்டம் – கந்தோர் – அலுவல்கள் – டீயும் முசுப்பாத்தியும் – அலுவல்கள் – சோறு
என்ற நினைப்பில் கல்லைக் கொறிக்கும் லன்ச் என்ற வித்தை – வம்பு மடம் – அலுவல் – டீ
– நடை – பஸ் – மெது நடை – அரட்டை – சாப்பாடு – இங்கிரமெண்டைக் காப்பாற்றப் படிப்பு
– லைட் அவுட் – தூக்கம்!
இராணுவ ஒழுங்கிலே நேரத்தின் ஆட்சிக்குள் உடலை வசக்கி எடுக்கும் இயந்திர
இயக்கம். பின்னேர டீயுடன் ஒரு வடை – கடுதாசி விளையாட்டு – வசுக்கோப்புப் படம் என்ற
விதிவிலக்குகளுக்கு மேற்படி நேரசூசியில் மிகமிக ஒறுப்பாக அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
மற்றும் பிரக்ஞை கூட ஸ்மரித்த இயக்கம். பக்கத்து வீட்டுப் பூரணத்தின் முகம் தலை நீட்டுவதுண்டு.
நேரத்தின் இராக்கதம் அதனைப் பிடித்து விழுங்கும்.
சாம்பசிவத்தார் அனுபவசாலி, மகனை “தனிக்க” விடாது அடிக்கடி கொழும்புக்கு இஷ்டமான
சோட்டைத் தீன்களுடன் வந்தார். எத்தனையோ குழையடி கோசுகளுக்குப் பிறகு, சரஸ்வதியை அவனுடைய
வாழ்க்கைத் துணைவியாக்கி விட்டார். சரஸ்வதி ஆதனபாதங்களுடன் சீமாட்டியாக வந்து சேர்ந்தார்.
“அப்பன் கீறிய கோட்டைத் தாண்டாத சற்புத்திரனாக” நற்பெயரெடுத்து சந்திரசேகரம் இல்லற வாழ்க்கையில் இறங்கினான்.
மூன்று ஆண்டுகளாக மலடியோ என்று பூச்சாண்டி காட்டிய சரஸ்வதி, தொட்ட சொச்சம் விட்ட மிச்சம்
ஐந்து பெண்களையும் ஒரு கடுவனையும் அடுக்கடுக்காகப் பெற்று விட்டாள். அத்துடன் கணவருக்கு
“ஆர்” விகுதியையும்
சேர்த்து சந்திரசேகரத்தாராக மகிமைப்படுத்தி விட்டார். அவள் தாயில்லாதவள். நல்லதுக்கும்
கெட்டதுக்கும் மாமியார் வீடுதான். மூன்றாம் பிள்ளையின் பிரசவ வீட்டில் சாம்பசிவத்தார்
கண்களை மூடினார். “பேத்தி பிறந்த ஜாதக பலன்” என்று அந்த நிகழ்ச்சிக்கு விவரணம் கூறிய ஊர்ச்சனம், “நெய்ப்பந்தம்
பிடிப்பதற்கு ஒரு பேரன் இல்லையே” என்று ஒறுவாயையும் சுட்டிக்காட்டியது.
சாம்பசிவத்தாரின் மனைவி வலுத்த சீவன். ஆறாம் பிள்ளைப் பேறுக்காக பழக்க
தோசத்திலேதான் வீட்டுக்கு சரஸ்வதியைக் கூட்டி வந்தார். அவளுடைய தாயாருக்கு இயலாத நிலை.
பொடியன் பிறந்தான். அவனைத் தடுக்கிலே கண்டு களித்த நிலையிலே பெத்தாச்சிக் கிழவி மோசம்
போனாள். ஆண்டு திவசத்திற்குப் பிறகு இந்த வீட்டை அவர் சரியாகப் பராமரிக்கவில்லை. பொடியனுக்கு
இப்பொழுது வயது நாலு. “ஊமை”
என்ற பட்டத்தைச் சுமக்கிறான். டாக்டர்கள் அவன் பெரிய “பேச்சாளனாக” விளங்குவான் என்று அபிப்பிராயப்படுகிறார்கள்.
அவைன் பற்றி வளர்ந்து வரும் விசாரமும் ஒரேயடியாக வீட்டோடு வந்து குடியேறுவதற்குக் காரணமாக
அமைந்தது.
“மூத்தவன்
இந்த கோர்சுதான் யூனிவேஸிடி என்றன்ஸ் எடுத்தவன். கூப்பிட்டிருக்கிறாங்களாலம். எடுபடுவன்
எண்டுதானெணை சொல்லுறான்..” பூரணம் இன்னும் போகவில்லை.
எல்லோரும் பேச்சிலே குந்திவிட்டார்கள்.
“என்னை
எடுத்தவர்? என்ஜினியரிங்கோ?” சரஸ்வதி மூத்த பெண்
திலகம் கேட்கிறாள். அவள் யாருடனும் சட்டென்று பழக்கம் பிடித்துக் கொள்ளுவாள்.
“இல்லை,
புள்ளை டாக்குத்தர் படிப்புக்கும் போக வேணும் எண்டு இஞ்சினை சொல்லித் திரிஞ்சான்…” பூரணத்தின் குரலிலேய எவ்விதப்
பெருமையும் மண்டவில்லை. புதிதாகச் சேர்ந்துள்ள பணத்தின் செருக்கு துளி கூட இல்லை.
சந்திரசேகரத்தார் மறுபக்கம் திரும்பிப் படுப்பதான அபிநயத்துடன் புரளுகின்றார்.
மனம் பூரணத்தைப் பற்றிய நினைவுகளிலே மொய்த்துச் சுவிக்கின்றது.
“கடையப்பக்காரியள்” என்று சாம்பசிவத்தார் சிந்திய
சுடுசொற்கள் பூரணத்தின் தாயாரை வெகுவாகத் துன்புறுத்தியது. அன்று தொடக்கம் அவள் நாயாக
அலைந்து, தன் மகளுக்குக் குடும்ப வாழ்க்கை ஒன்று குதரிச் செய்து விட்டாள். சின்ன வயது
தொடக்கம் எல்வெட்டித் துறையாருடைய கடையிலே வேலை செய்த அநாதைப் பையன் சோமசுந்தரத்தைக்
கைப்பிடித்த ராசி, அள்ளிக் கொடுத்தது. திருச்சி பீடிக் கொம்பனிக்கு ஏஜன்சி எடுத்து
ஆரம்பமானது அவனுடைய தனி வியாபாரம். இன்று இங்கு ஒரு கடை, குருநாகலில் இரண்டு கடைகள்,
கொழும்பில் பீடிபக்டரி, கிளிநொச்சியில் வெள்ளாண்மைப் பூமி, ஐந்து லொறிகள் என்று செல்வம்
பொங்கி வழிகின்றது. “புளியுருண்டை” வியாபாரமும் உண்டு என்று பேசிக் கொள்கிறார்கள். காகம் குந்தியே
மாடு சாகப் போகுது? சென்ற ஆண்டு அவருக்கே ஜே.பி. பட்டமும் கிடைத்திருக்கிறது!
“ஓமெணை,
அவர் யாவார விஷயமாத்தான் கொழும்புக்குப் போயிருக்கிறார். என்னதான் அள்ளிக் குவிச்சாலும்
வீட்டுச் சோறுக்கும் தண்ணிக்கும் பொசிப்பில்லை. அந்தரிச்சை சீவியமெணை..”
“பூரணம்
உண்மையிலை சீதேவிதான். இல்லாட்டில் என்னைக் கட்டிக் கொண்டுதானே கஷ்டப்பட்டிருப்பாள்?
அவளுக்கு நாலும் கடுவன்கள். ஆசைக்குக் கூட ஒரு பெட்டையில்லை. அவளுக்கு எல்லாம் பெண்களாகப்
பிறந்திருந்தாலும் கவலைய்யில்லை. தெறிச்சிப் பார்த்து நல்ல மாப்பிள்ளை எடுக்கிறதுக்கு
வேண்டிய காசு இருக்கு. எனக்கு எல்லாம் பொடியன்களாகப் பிறந்தாலும் என்ன புண்ணியம்? சீனியரோடை
நில், என்னைப் போலக் கிளாக்கராகு என்றுதானே சொல்லியிருப்பன்? இந்த வீடும் வளவும்! காடலைந்த
முயலாட்டம் இந்த வளையை நாடி வநிதருக்கிறேன். சரஸ்வதி கொண்டு வந்ததுகள் சில ஈட்டிலை
கிடக்கு. அதுகளை மீட்டாலும் கோமணத் துண்டளவிலை ஒரு வளவும், பேரளவுக்கு ஒரு வீடும் கட்டிக்
குடுக்கத்தான் தேறும்…
பத்து வருஷ சேர்விஸோட ஸ்பெஷல் கிரேடிற்குப் போகேக்கிள்ளை எல்லாத்தையும்
வெட்டிப் புளக்கலாம் எண்டுதான் நினைச்சன். நான் கிளறிக்கல் சேர்விஸிலை சேர்ந்து கொட்டப்பெட்டிச்
சம்பளத்தோடை சமாளித்தது போலேதான் நடக்குது. சரசுவுக்கு என்ன தெரியும்? பிள்ளையளுக்கு
என்ன விளங்கப் போகுது? பாவம், அதுகளும் ஏதோ அந்தஸ்தைப் பற்றிப் பெரிசா நினைச்சுக் கொண்டிருக்குதுகள்…”
காதலின் மெல்லிய உணர்ச்சிகள் என்ற பழைய நினைவுகளை அசைபோட்ட சந்திரசேகரத்தார்
புத்திபூர்வமான லோகாயுத விசாரணையில் இறங்கி மனத்தைப் புண்ணாக்கி அப்படியே தூங்கி விட்டார்.
விழித்த பொழுது, வள்ளிசாக ஒரு மணி நேரமாவது தாம் தூங்கி விட்டதை அவர்
உணர்ந்தார். கை கால்களை அலம்பிக் கொண்டு தேநீர் குடிக்க வந்தமர்ந்தார். சரஸ்வதி ராசவெள்ளிக்கிழங்கைக்
கொடுத்தாள். “யார் தந்தது?” என்று கேட்காமலேயே
சாப்பிடத் தொடங்கினார்.
“பூரணத்தின்
சுபாவத்தைப் போலவே கிழங்கும் இனிக்கிறது”
“கேட்டியளேய்யா… இண்டைக்கும் நாளைக்கும் உலை
வைக்கக் கூடாதாம். நாளையண்டைக்குத்தான் நல்ல நாளாம்…”
“கொழும்பிலை
இருந்த உமக்குமெணை உந்தப் பஞ்சாங்களங்களைப் பாக்க நல்லாத் தெரியுது போல…”
“பூரணக்காதான்
சொன்னா. இண்டைக்கும் நாளைக்கும் தானே சமைச்சு அனுப்பப் போறது எண்டும் சொன்னாவு. நான்
வேண்டாமெண்டு சொல்லவும் அவ கேக்கிறாவு இல்லை…”
“ஓமணை
உனக்கும் இஞ்சை துடைச்சுக் கழுவத்தானே ரெண்டு நாளும் சரியாப் போகும்”
“பூரணமக்கா
தங்கமான மனுஷி.. பொடியளும் அப்பிடித்தான்”
“நான்
கொஞ்ச நேரம் நித்திரை கொள்ளுறத்துக்குள்ளை நீர் ஊருலகமெல்லாம் அறிஞ்சிட்டீர்” என்று சிரித்தபடி தேநீரைக்
குடித்து முடித்தார்.
“நான்
ஒருக்கா வேலி அடைக்கிற நாகப்பனைப் பார்த்திட்டு வாறன்”
பூரணம் முற்றத்தில் நின்று சிரிக்கிறாள். அவரும் பதிலுக்குச் சிரித்தார்.
“மனசார
இவள் ஒரு மனுஷியுந்தான், ஒரு வடிவுந்தான்”
நாகப்பனும் சின்னவனும் வேலியடைக்கிறார்கள். கொல்லை வேலி சின்னன். விடியற்புறம்
வந்தவர்கள் அதனை அடைத்து முடித்த பிறகுதான் சாப்பாட்டைப் பார்த்தார்கள்.
வெயில் ஏறத் தொடங்கியது. பூரணத்தின் வளவுப் பக்கத்து வேலி பிரிக்கப்பட்டது.
அடைப்பு வேலை ஆரம்பமாகியது. சந்திரசேகரத்தார் கூட மாட நின்று வேலை செய்கிறார். “கட்டுக்கோத்துக்” கொடுக்கக் கூட ஓர் ஆண் பிள்ளை
இல்லையே.
சோட்டைக்குப் பிறந்த பொடியன் பூரணத்தின் இடுப்பிலே குந்தியிருக்கிறான்.
“நடுவாலை
ஒரு பொட்டு வைச்சு அடையுங்கோ. புள்ளை குட்டியள் போய் வரட்டும்” என்று பூரணம் சொல்லுகிறாள்.
அந்தப் பொட்டினை அடைத்து தன் மகனின் வாழ்வைக் காப்பாற்றுவதாக சாம்பசிவத்தார்
நினைத்தார்.
பொட்டுகள் உறவுக்கான வாசல்கள். உறவுகளே… அன்று பூரணத்தின் அழகிலே அவர் மனம்
அலைந்தது. இன்று – அவளுடைய ஆளுமையிலே ஒரு கனவும் சுகமும் இருப்பதை உணர்கிறார். அந்தச்
சுகத்தில் நெஞ்சிலை தைத்துச் சீழ் வைத்து விட்ட சிறாம்பை சந்திரசேகரத்தார் மெதுவாக
இழுக்கிறார்.
இருபது வருடங்களுக்குப் பின்னர் “பொட்டு” ஒன்று விடப்பட்டு வேலி அடைக்கப்படுகின்றது.
நன்றி - பண்புடன் குழுமம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக