02/03/2013

மொழிபெயர்ப்புக் ‘கலைச்செல்வி' சரஸ்வதி ராம்நாத் - சிவமானசா


தமிழிலிருந்து இந்திக்கும் இந்தியிலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்ப்பு செய்து மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளராகத் திகழ்ந்தவர் சரஸ்வதி ராம்நாத்.

மொழிபெயர்ப்பு என்பது கயிற்றில் நடப்பதைப் போன்றதொரு கலை. அது செம்பைப் பொன்னாக்கும் ஒரு ரசவாதக் கலையும்கூட. மொழித்திறன், சொற்களஞ்சிய அறிவு, சொற்பொருளியல் அறிவு, சமூகப் பண்பாட்டு உணர்வு, இலக்குமொழி மரபுகளை ஒட்டி மொழிபெயர்ப்பு செய்யும் ஆற்றல், இலக்கண அறிவு - என இவை அனைத்தும் மொழிபெயர்ப்பாளருக்கான தகுதிகள். மூல மொழியில் படைக்கப்பட்ட முதல் நூலைப்போல இயல்பாக ஆற்றொழுக்கான நடையில் தெளிவான சிந்தனை வெளிப்பாடாக அமைவதே சிறந்த மொழிபெயர்ப்பு என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறந்த மொழிபெயர்ப்புகளைத் தமிழுக்குத் தந்தவர் சரஸ்வதி ராம்நாத்.

1925-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி பிறந்தவர். கோவை மாவட்டம் தாராபுரம் இவரது சொந்த ஊர். இந்தி மொழியில் வித்வான் (பண்டிட்) பட்டம் பெற்றவர். தமிழில் சிறந்த எழுத்தாளராகத் திகழ்ந்தவர். 1993-ஆம் ஆண்டு தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது, 1994-இல் கேந்திரிய இந்திய சன்ஸ்தான் விருது, இந்தி சன்ஸ்தான் விருது, பாரதீய அநுவாத் பரிஷத் துவிவாகிஷ் புரஸ்கார் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

விடுதலைக்கு முன் நிலவிய இலக்கியச் சூழலே சரஸ்வதி ராம்நாத்துக்கு இந்திமொழி கற்றுக்கொள்ள ஓர் உந்து சக்தியாக இருந்துள்ளது. தனது மொழிபெயர்ப்பு அனுபவத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, ""தினமணி கதிர் ஆசிரியர் துமிலன், எனக்குப் பெரும் ஆதரவளித்தார். முதலில் "காவேரி'யில்தான் என் மொழிபெயர்ப்பில் "வீர சுதந்திரம்' என்கிற குஜராத்தி நாவல் வெளிவந்தது. தொடர்ந்து சுதேசமித்திரன், தினமணி கதிர், தீபம், தாமரை, கலைமகள் போன்ற இதழ்களுக்காக மொழிபெயர்த்துத் தந்தேன்''.

கோபுர் கா தீப் (அகிலன் சிறுகதைகள்), நாரி (அகிலனின் "பெண்'), ஜெயகாந்தன் கதைகள், "பாரதி லலித் நிபந்த்' (பாரதி நூல்கள்), ரா.சு.நல்லபெருமாளின் போராட்டங்கள், தமிழ்ச் சிறுகதைகள், தற்காலத் தமிழ்க் கதைகள், "பவ்பதகி' (சிறந்த தமிழ் எழுத்தாளர்கள் சிறுகதைகள்) ஆகிய படைப்புகளைத் தமிழிலிருந்து இந்தியில் மொழிபெயர்த்துள்ளார்.

புகழ்பெற்ற வடமொழி எழுத்துச் சித்தரான பிரேம்சந்தின் மகன் அமிர்தராய் நடத்திய "கஹானி', மாத்ருபூமி பிரசுரித்த "யுகபிரபாத்' "தர்மயுக்', "சாரிகா', "ஆஜ்கல்' முதலிய பல பத்திரிகைகளுக்குத் தமிழின் தலைசிறந்த படைப்புகளை இந்தியில் மொழிபெயர்த்துள்ளார். குறிப்பாக, தி.ஜா., தொ.மு.சி.ரகுநாதன், ஆர்.வி., அகிலன், ஆதவன், சு.ரா., ஜெயகாந்தன் போன்றோரது எழுத்துகளை இந்தியில் மொழிபெயர்த்து வடநாட்டாரும் படித்துச் சுவைக்க வழிவகைசெய்து, தமிழில் முன்னணியில் உள்ள எழுத்தாளர்கள் பலரையும் பலருக்கும் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.

இந்தியில் ஸ்ரீலால் எழுதிய தர்பாரிராகம், ஸ்ரீராமசந்திர தாகூர் எழுதிய ராஜநர்த்தகி, கே.எம்.முன்ஷி எழுதிய ஜெயதேவன் அல்லது கூர்ஜரத்தின் செல்வன், கன்யாலால் மனேக்லால் முன்ஷி எழுதிய ஜெயசோமநாத் (குஜராத்திமொழி), பாலிகிருஷ்ண பகவந்த போர்கர் எழுதிய தேவதாசி (மராட்டி), சுமதிதேவி தன்வாடே எழுதிய "புயலும் ஒளியும்', வீரசுதந்திரம், சப்தபதி, கங்கை தாய் ஆகிய சிறந்த நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவை தவிர, இதுவா நாகரிகம்?, சேடன், கதாபாரதி, லேடி டாக்டர், ராதிகா, நதி ஓரத்து சிப்பிகள், இந்திய மொழிச் சிறுகதைகள் (22) பிரேம்சந்த் மோகன் ராகேஷின் நாடகங்கள் ஆகியவையும் இவரால் மொழிபெயர்க்கப்பட்டவை.

இவை தவிர இந்திமொழி நாடகங்களையும் மொழிபெயர்த்துள்ளார். அரையும் குறையும், புதுவாழ்வு, இந்திய மொழி நாடகங்கள் முதலியவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 1993-ஆம் ஆண்டு "இந்திய மொழி நாடகங்கள்' சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாதெமி விருது சரஸ்வதி ராம்நாத்துக்கு வழங்கப்பட்டது.

சர்வதேச பெண்கள் ஆண்டையொட்டி (1990) "இந்திய பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்' எனும் தலைப்பில் 19 எழுத்தாளர்களைத் (படைப்புகளை) தமிழில் மொழிபெயர்த்து ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளார்.

"மொழிபெயர்ப்பு இலக்கியம் பற்றிய நமது சமூகப் பார்வையே குறுகியதாக உள்ளது. படைப்பிலக்கியத்துக்கு அளிக்கப்படும் அந்தஸ்தும் மரியாதையும் மொழிபெயர்ப்புகளுக்கு அளிக்கப்படுவதில்லை. மொழிபெயர்ப்பும் ஒரு படைப்பாக்கம் என்று ஏற்றுக்கொள்ளப்படாத வரையில் இந்நிலை நீடிக்கத்தான் செய்யும். ஏன் என்பதற்கு என்னிடம் நீண்ட பெருமூச்சுதான் பதில்'' என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் சரஸ்வதி ராம்நாத். என்றாலும், மொழிபெயர்ப்பின் மூலம் தமிழுக்கும் இந்திக்கும் பாலம் அமைத்த பெருமை சரஸ்வதி ராம்நாத்தையே சேரும்.

1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி தம் 76-வது வயதில் காலமானார்.

"மொழிபெயர்ப்புக்குத் தகுந்த மரியாதை அளிக்கப்படவில்லை, மொழிபெயர்ப்பாளருக்குரிய மரியாதையும் வழங்கப்படுவதில்லை' என்ற சரஸ்வதி ராம்நாத்தின் மனக்குறை இனிமேலாவது நிறைவு செய்யப்படுமா என்ற கேள்விக்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

"பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
 தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்''

என்று மகாகவி பாரதி கூறிய வாக்கை மெய்ப்பிக்கும் இவரைப் போன்ற சிலர் இருந்ததால் - இருப்பதால்தான் பாரதியின் வாக்குக்கு வாழ்வு கிடைத்துக் கொண்டிருக்கிறது!

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: