எஸ்.ராமகிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எஸ்.ராமகிருஷ்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜி.சிந்தாமணிக்கும் தேவிகாவுக்கும் சம்பந்தமில்லை! - எஸ்.ராமகிருஷ்ணன்

ஜி. சிந்தாமணிக்கு இன்று காலையில்தான் நாற்பது வயது துவங்கியது. அவள் அதைப் பற்றி யாரிடமும் சொல்லிக்கொள்ளவில்லை. பொதுவாகவே அவள் பள்ளி வயதைத் தாண்டிய பிறகு தனது பிறந்தநாள் வருவது பற்றி அதிகம் உற்சாகம் அடைந்ததில்லை. அதை நினைவு வைத்துக்கொள்வது கூட குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவது போலவே உணர்ந்தாள். எப்படியாவது தனது பிறந்த நாளை மறந்து போய்விட மாட்டோமா என்று அவள் பலமுறை முயன்றிருக்கிறாள். ஆனால், தண்ணீருக்குள் வீசிய ரப்பர்பந்து தானே மேலே வந்துவிடுவது போல, அவள் எவ்வளவு முயன்றாலும் பிறந்த நாள் தானே நினைவுக்கு வந்துவிடுகிறது.

ஜி.சிந்தாமணி ராயப்பேட்டையில் வசிக்கிறாள். 40 வயதை நெருங்குவதற்குள் நரையேறி, பருத்த சரீரம் கொண்டவளாகிவிட்டாள். அவளுக்கு ஸ்டிக்கர் பொட்டு வைப்பதற்குக்கூட இப்போதெல்லாம் மறந்து போய் விடுகிறது.

அதை யார் கவனிக்கப் போகிறார்கள்! இப்போது அவள் முகத்தை கூர்ந்து நோக்குகிறவர்கள் யார் இருக்கிறார்கள். அவளாகவே தன்னைப் பார்த்துக்கொள்வதைத் தவிர மற்றவர்களுக்கு அவளிடம் ஈர்ப்பில்லை.

அவள் கடந்த சில வருடங்களாகவே எப்போதும் ஒரு வட்டக்கண்ணாடியை தனது ஹேண்ட்பேகில் வைத்திருக்கிறாள். அலுவலகத்தில் வேலை செய்துகொண்டு இருக்கும்போதோ, சாப்பிட்டு முடித்த பிறகோ அந்தக் கண்ணாடியில் தன்னை ஒரு முறை பார்த்துக்கொள்வாள். அப்போதெல்லாம் அவளுக்குத் தன் மீதே தாங்க முடியாத வேதனை கவிழத்தொடங்கிவிடும். கண்ணுக்குத் தெரியாமல் உப்பு தண்ணீரில் கரைந்துவிடுவதைப் போல அவளிடமிருந்த அழகு யாவும் கரைந்து போய்விட்டது அவளை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.

இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அவளுக்குத் தனது பிறந்தநாள் வரப்போவது நினைவுக்கு வந்தது. அதை அலுவலகத்தில் உள்ள யாரிடமாவது சொல்லலாமா என்று யோசித்தாள். கேலி செய்வதைத் தவிர அவர்களால் தனது பிறந்தநாளைப் பகிர்ந்துகொள்ள முடியாது என்று தோன்றியது.

இந்த முறை எப்படியாவது அந்த நாளை மறந்துவிடவேண்டும் என்று மனதுக்குள்ளாக முடிவு செய்துகொண்டாள். ஆனால், வழக்கத்துக்கு மாறாக அவளுக்கு இரண்டு நாட்களாகவே பார்க்கும் ஒவ்வொருவரும் என்ன வயதில் இருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும் போலிருந்தது.தன்னை அறியாமல் ஒவ்வொருவரையாகக் கூர்ந்து பார்க்கத் துவங்கினாள். உலகில் 40 வயதைக் கடந்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பது ஆறுதல் தருவதாக இருந்தது. அதோடு, எவரும் தங்கள் வயதை நேரடியாக வெளிக்காட்டிக்கொள்வது இல்லை என்பது அவளுக்கு மகிழ்வைத் தந்தது.

இன்றைக்கும் அவள் விழிப்பதற்கு முன்பாகவே மனதுக்குள் ஒரு குரல் ‘இன்றைக்கு உனது பிறந்தநாள்’ என்று கூவியது. அதற்குச் செவிசாய்க் காதவளைப் போல கொஞ்ச நேரம் வேண்டுமென்றே படுக்கையில் கிடந்தாள். கல்லூரிக்குச் செல்லும் மகள் குளித்துவிட்டு ஈரத்தலையோடு அறைக்குள் வந்து தனது உடையை தேடிக்கொண்டு இருப்பது தெரிந்தது. மணி ஆறரையைத் தாண்டி யிருக்கவேண்டும்.

சிந்தாமணி எழுந்து எப்போதும் போல அவசர அவசரமாகச் சமையல் செய்யத் துவங்கினாள். இருப்பதிலேயே அவளுக்குக் கொஞ்சமும் பிடிக்காத அரக்கு நிற பூ போட்ட சேலையை எடுத்துக் கட்டிக்கொண்டாள். சாப்பிடவேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை. வீட்டில் அவளது கணவன் டி.வி. பார்த்தபடியே சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். சின்னவள் பள்ளிக் கூடம் கிளம்புவதற்காகபுத்த கங்களை எடுத்துத்திணித்துக் கொண்டிருந்தாள்.

யாராவது தனது பிறந்த நாளை நினைவில் வைத்திருப்பார்களோ என்று ஒரு நிமிஷம் தோன்றியது.அவர வருக்கு அவரவர் அவசரம். இதில் தானே சொல்லாமல் எப்படித் தன் பிறந்தநாளை நினைவு வைத்திருப்பார்கள் என்று நினைத்தபடியே, தன் டிபன்பாக்ஸில் சாப்பாட்டை அடைத்துக்கொண்டாள். மணி எட்டு இருபதை நெருங்கும்போது அவள் மணிக்கூண்டு பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கியிருப்பாள். இன்று ஐந்து நிமிஷம் லேட்!

பேருந்து நிலையத்தில் பூ விற்பவள் முன்பாக சிவப்பு, மஞ்சள் ரோஜாக்கள்குவிந்து கிடந்தன. கூவிக்கூவி விற்றுக்கொண்டு இருந்தவள் சிந்தாமணியைக் கண்டதும் மௌனமாகிவிட்டாள். தான் மஞ்சள் ரோஜாவை வாங்கமாட்டோம் என்று எப்படி இந்தப் பூக்காரி முடிவு செய்தாள் என்று அவள் மீது ஆத்திரமாக வந்தது. அவளிடம் இனிஒரு போதும் பூ வாங்கக்கூடாது என்று முடிவு செய்துகொண்டாள்.

பேருந்து நிலையத்தில் காத்திருந்த பள்ளி மாணவிகள் எதற்கோ சத்தமாகச் சிரிப்பதும் ஒருவரையருவர் வேடிக்கையாக அடித்துக்கொள்வதுமாக இருந்தார்கள். ‘40 வயதைத் தொடும்போது உங்களிடமிருந்து சிரிப்பு யாவும் வடிந்து போய்விடும். அதற்குள் சிரிக்கிற மட்டும் சிரித்துக் கொள்ளுங்கள்’ என்று தனக்குள்ளாக சொல்லிக்கொண்டாள்.

ஜி.சிந்தாமணியின் அலுவலகம் சானிடோரியத்தை ஒட்டியிருந்தது. இரண்டு பேருந்துகள் மாறிச் செல்ல வேண்டும். அன்றைக்கு பேருந்துகளில் கூட்டம் ததும்பிக்கொண்டு வந்தது. அதோடு பேருந்து நிறுத்தத்தை விட்டுத் தள்ளி நிறுத்தினார்கள். அவள் ஓடிப்போய் ஏறுவதற்குள் பேருந்து கிளம்பிவிட்டது. பெருமூச்சு வாங்க அவள் நின்றபோது, பிறந்த நாளும் அதுவுமாக ஏன்தான் இப்படி உயிரைக் கொடுத்து ஓடுகிறோமோ என்று வருத்தம் கொப்பளித்தது.

பிரமாண்டமாக சிதறிக்கிடக்கும் இந்த நகரம், அதன் லட்சக்கணக்கான மக்கள், இரக்கமில்லாத சூரியன், நெருக் கடியான சாலைகள், எவரையும் அர வணைத்துக்கொள்ளாத கடல், புகையும் தூசியும் படிந்துபோய் காற்றில்லாமல் நிற்கும் மரங்கள் என எல்லாவற்றின் மீதும் கோபம் பொங்கியது. தனக்குத்தானே அவள் எதையோ பேசிக்கொண்டு இருப்பதை அருகில் இருந்த பெண்கள் முறைத்துப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

வெயில் அவள் முகத்தில் ஊர்ந்து கொண்டு இருந்தது. முன்பாவது அவள் குடை வைத்திருந்தாள். அதை கல்லூரிக்கு செல்லும் மகள் கொண்டு போக துவங்கியபிறகு புதிதாக குடை கூட வாங்கத் தோன்றவில்லை.

ஒவ்வொரு பேருந்தாகக் கடந்து சென்றபடியே இருந்தது. மணி 9:20-ஐ தாண்டியது. அலுவலகம் போய்ச் சேர் வதற்குள் மணி பத்தரை ஆகிவிடும் போலிருந்தது. இன்றைக்கு ஏலச்சீட்டு விடும் நாள் வேறு. அவள் சீட்டு பிடிக்கிறவள் என்பதால், அதை முடித்துக்கொண்டு வீடு திரும்ப இரவு ஒன்பது ஆகிவிடும்.

சாலையோரம் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரை ஒரு பசு தின்றுகொண்டு இருந்தது. போஸ்டர் தின்னும் பசுவின் பாலைத்தான் நாம் குடித்துக் கொண்டு இருக்கிறோம் என்று சிறு ஆத்திரம் முளைவிட்டு எழுந்து, மறுநிமிஷமே அடங்கியது.

ஷேர் ஆட்டோ வந்து நின்றது. ஜி.சிந்தாமணி அதற்குள் தன்னைத் திணித்துக்கொண்டபோது மூச்சு முட்டியது. ஆட்டோவினுள் ஆண் பெண் பேதமில்லாமல் ஒருவரோடு ஒருவர் நெருங்கி, அடைந்து கிடந் தார்கள். அந்த முகங்களில் நிம்மதி இல்லை.

ஆட்டோ சம்ஸ்கிருத கல்லூரியைக் கடந்தபோது, ‘எதற்காக நான் அலுவலகம் போகவேண்டும்? ஏன் இப்படிப் பறந்து பறந்து வேலை செய்யவேண்டும்? யாருக்குப் பயந்து இப்படி அல்லாடவேண்டும்?’ என்று தோன்றியது. அந்தக் கேள்விகள் அவளுக்குள் நீருற்று போல வேகத்தோடு பொங்கி வழியத்தொடங்கின.ஏதோ முடிவு செய்தவளைப் போல, லஸ் கார்னரில் ஆட்டோ நின்றபோது இறங்கிக்கொண்டாள்.

சாலையைக் கடந்து எதிர் திசைக்கு வந்தபோது, மனது சிக்கலில் இருந்து விடுபட்டது போன்ற நிம்மதி அடைய துவங்கியது. என்ன செய்வது என்று யோசித்தாள். முதலில் ஒரு பூக்காரியிடம் மஞ்சள் ரோஜாவாகப் பார்த்து வாங்கவேண்டும் என்று தோன்றியது.அவள் தன் ஹேண்ட் பேகை திறந்து பார்த்தாள். சீட்டுப் பணம் ரூ.2000 இருந்தது. ஒன்று போல உள்ள இரண்டு மஞ்சள் ரோஜாக்களை வாங்கிக் கூந்தலில் சொருகிக்கொண் டாள். பிறகு, தன் வட்டக்கண்ணாடியை எடுத்து முகம் பார்த்துக்கொண் டாள். அந்த ரோஜா அவளுக்குப் பொருத்தமாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மெல்லிய வெட்கம் அவள் முகத்தில் தோன்றி மறைந்தது.

ஏதாவது ஓட்டலில் போய் இனிப்பு சாப்பிடவேண்டும் போல் இருந்தது. ஆட்டோவில் ஏறிக் கொண்டு, பெங்கால் ஸ்வீட்ஸ் விற்கும் கடைக்குப் போகச் சொன்னாள். கடை முழுவதும் குளிர்சாதனம் செய்யப் பட்டிருந்தது. காலை வேளை என்ப தால் ஆட்கள் அதிகம் இல்லை. அவள் ரசகுல்லா, குலோப் ஜாமூன் என நான்கு விதமான இனிப்பு சாப் பிட்டாள். பில் கொடுக்கும்போது, கடையில் இருந்த வயதானவங்காளியிடம் தனக்கு இன்று பிறந்தநாள் என்று சொன்னாள். அவர் மௌனமாகத் தலையாட்டியபடியே மீதிச் சில்லறையைக் கொடுத்தார்.

வெளியே வந்தபோது, சாலையில் வெயில் ஒரு சினைப்பாம்பு போலத் திணறியபடியே ஊர்ந்துகொண்டு இருந்தது. அவள் ஒரு கூலிங்கிளாஸ் வாங்கிப் போட்டுக்கொள்ளலாம் என்று நினைத்தாள். கடைக்குச் சென்று, பெரிய ஃப்ரேம் வைத்த கறுப்புக் கண்ணாடி ஒன்றை 200 ரூபாய் கொடுத்து வாங்கிப் போட்டுக் கொண்டாள். கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்க அவளுக்கு வேடிக் கையாக இருந்தது.

திடீரென உலகம் தன் நிறத்தை மாற்றிக்கொண்டு சாந்தம்கொண்டது போலிருந்தது. ஸ்பென்சருக்குப் போகலாம் என்று முடிவு செய்தாள். அவள் தன் மகளோடு ஸ்பென்சருக்கு சென்றிருக்கி றாள். ஆனால், தனியே இது போன்ற இடங்களுக்குப் போனதில்லை.

ஸ்பென்சரில் போய் இறங்கியபோது, உள்ளே இருபது வயதைத் தொட்டும் தொடாமலும் உள்ள இளைஞர்கள் ஆண் பெண் பேதமின்றி ஆங்காங்கே நிரம்பியிருந்தார்கள். இவ்வளவு பேர் இங்கே என்ன வாங்குவார்கள் என்று யோசனையாக இருந்தது.

நீலநிற ஜீன்ஸ் அணிந்த பெண் ஒரு இளைஞனின் இடுப்பைக் கட்டிக்கொண்டு, மறுகையால் அவன் முகத்தைத் தடவியபடி நடந்துபோய்க்கொண்டு இருந்தாள். ஆங்காங்கே இளவயதுப் பெண்களும் ஆண்களும் மிக நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டும், ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கொண்டும் இருந்தார்கள்.

தான் வாழ்வில் ஒரு முறைகூட இதுபோலப் பொதுஇடங்களில் கணவனோடு கை கோத்து வந்ததில்லை; ஐஸ்க்ரீம் சாப்பிட்டதில்லை. வாழ்க்கை ஏன் இப்படி அர்த்தமற்றுக் கடந்து போய்விட்டது! 17வயதில் கல்யாணம் நடந்தது.அப்போதும் சிந்தாமணி வேலைக்குப் போய்க்கொண்டு தான் இருந்தாள். திருமணத் துக்காக ஐந்து நாள் லீவு கொடுத் தார்கள். அந்த ஐந்து நாட்களும் அவள் உறவினர்கள் வீட்டுக்கு விருந்து சாப்பிடப் போனதும், ஒரேயரு சினிமா வுக்குப் போனதும் மட்டுமே நடந்தது.

திருமணமான மூன்றாம் மாதமே அவள் சூல்கொண்டு விட்டாள். அதன் பிறகு எங்கேயும் போகவே முடிந்ததில்லை. அடுத்த வருஷம் ஒரு பையன், அதன் இரண்டு வருஷம் தள்ளி ஒரு பெண் என்று மாறி மாறி குழந்தைப் பேறு. வைத்தியம், வீடு, வேலை தவிர, அவள் இந்த யுவதிகள் போல ஐஸ்க்ரீமை கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்துச் சாப்பிடுவதை அறிந்ததே கிடையாது.

சிந்தாமணி மிகப்பெரிய ஐஸ்க்ரீம் ஒன்றை வாங்கிக்கொண்டு, தனியே கிடந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். ஐஸ்க்ரீமை உதட்டின் நுனியில் வைத்து சுவைத்துச் சாப்பிடத் தொடங் கினாள். இந்த ஐஸ்க்ரீம் கரைந்துபோவது போல தன் வயதும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போய்விடக்கூடாதா என்று தோன்றியது.

15 வயதில் அவளைப் பார்த் தவர்கள், அவள் நடிகை தேவிகாவைப் போலவே இருப்பதாகச் சொல்வார்கள். இப்போது ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவளுக்கு தேவிகா வின் நினைவு வந்தது. ‘நீலவானம்’ படத்தில் தேவிகா இப்படியரு கறுப்புக் கண்ணாடி அணிந்து, ஓலைத் தொப்பியும் அணிந்திருப்பாள். அவள் சிரிப்பது தன்னைப் போலத்தான் இருக்கிறது. அதை யார் ஒப்புக்கொள்ளாவிட் டாலும் கவலை இல்லை என்று தோன்றியது. தனது ஹேண்ட் பேகில் இருந்த வட்டக் கண்ணாடியை எடுத்து தன் முகத்தைப் பார்த்துக்கொண்டாள். முகத்தின் ஊடாக எங்கோ தேவிகாவின் சாயல் ஒளிந்துகொண்டிருப்பது போலி ருந்தது.

தான் இப்படிக் கறுப்புக் கண்ணாடி அணிந்தபடி ஐஸ்க்ரீம் சாப்பிடுவதை ஒரு புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்போல் இருந்தது. அதோடு, எதற்காகவோ தான் சத்தமாகச் சிரிக்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. இது போன்ற வணிகவளாகங்களில் எங்கு பார்த்தாலும் சிரிப்பு சிந்திக்கிடக்கின்றது. ஆனாலும், தன் வயதுடைய பெண்களில் எவரும் சிரிக்கிறார்களா என்று ஒரு முறை திரும்பிப் பார்த்துக்கொண்டாள். அவள் மேஜையைச் சுத்தம் செய்ய வந்த பையனிடம் இன்று தனக்குப் பிறந்தநாள் என்று சொன்னாள். அவன் அதைக் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.

எழுந்து லிப்டில் ஏறி, மூன்றாவது தளத்துக்குச் சென்றாள். விரல் நகங்களுக்கு பூசும் மினுமினுப்பாக பச்சையும் ஜிகினாவும் கலந்த நெயில்பாலீஷ் ஒன்றை வாங்கி பூசிக் கொண்டாள். பினாயில் வாசம் வீசும் பாத்ரூமின் மிகப் பெரிய கண்ணாடி முன் நின்றபடியே தன்னைத்தானே பார்த்துச் சிரித்துக்கொண்டாள்.

வயது அன்று ஒரு நாள் மட்டும் அவளிடமிருந்து பின்திரும்பிப் போய்க்கொண்டு இருந்தது போலிருந்தது. அவள் சிரிப்பை அடக்கமுடியாமல் கர்சீப்பால் வாயைப் பொத்தியபடி வெளியே வந்தாள். தனது டிபன்பாக்ஸில் இருந்த சாப்பாட்டை அங்கிருந்த குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டு காலி டிபன்பாக்ஸை பையில் போட்டுக்கொண்டாள். நாள் முழுவதும் அப்படியே சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது.

திடீரென இந்த நகரம் அவளுக்கு மிகப் புதிதாக தெரிந்தது. தான் இதுவரை பார்த்திராத கட்டடங் களும் கார்களும் மனிதர்களும் நிரம்பியதைப் போல் இருந்தது. கால் டாக்ஸியிலும் ஆட்டோவிலு மாக அவள் சுற்றி அலைந்தபடியே இருந்தாள். தனக்கு இந்த நகரில் வீடில்லை. குடும்பமில்லை. தெரிந்த மனிதர்கள்கூட யாருமில்லை. தான் தனியாள், தன் பெயர் தேவிகா என்று சொல்லிக்கொண்டாள். அன்றைய பகல் முழுவதும் திரையரங்கம், உணவகம், ஜவுளிக் கடைகள் என்று அலைந்து திரிந்தாள்.

மாலையில் அவள் கடற்கரையைக் கடந்தபோது, ஆயிரமாயிரம் கால்கள் தழுவிச் சென்றபோதும் கடல் தனிமையில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தாள். அலுவலகம் முடிந்து ஆட்கள் வீடு திரும்பும் நேரத்தில், அன்றைய நாள் முடிந்து கொண்டு இருப்பது அவளுக்குள் புகையைப் போல ஒரு மெல்லிய வேதனையை வளர்க்கத் துவங்கியது. இன்றைக்கு ஏல நாள்; தன்னை எதிர்பார்த்துக்கொண்டு ஆட்கள் காத்திருப்பார்கள் என்று தோன்றியது. மறுநிமிஷமே அது தனக்கில்லை; ஜி.சிந்தாமணிக்கு! தான் தேவிகா என்று அவளாகவே சொல்லிச் சிரித்துக்கொண்டாள்.

இரவில் ஒளிரும் விளம்பரப் பலகைகளைப் பார்த்தபடியே நகரின் வீதிகளில் நடந்துகொண்டிருந்தாள். இரானி டீக்கடையில் அமர்ந்து சமோசாவும் டீயும் குடித்தாள். புதிதாக ஒரு செருப்பு வாங்கிக் கொண்டாள். யோசிக்கும்போது, அவளுக்கு தன்னிடம் ஆசைகள்கூட அதிகம் இல்லை என்று தோன்றியது.

சாலையைக் கடந்தபோது காய்கறிக் காரன் ஒருவன் அப்போதுதான் பறித்து வந்தது போன்ற கேரட்டுகளை குவித்துப் போட்டு விற்றுக்கொண்டு இருந்தான். கொஞ்சம் வாங்கிக்கொண்டு போகலாமா என்று நினைத்தாள். திருமணமான இந்த 22 வருஷத்தில் எவ்வளவு காய்கறிகள் வாங்கிவிட்டோம்! இனியும் எதற்காக வாங்கவேண்டும் என்று எரிச்சலாக வந்தது. ஒரேயரு கேரட்டை மட்டும் காசு கொடுத்து வாங்கிக் கடித்துத் தின்றபடியே, சாலையைக் கடந்து நடக்கத் தொடங்கினாள்.

சாலையோரம் ஒரு ஆள் ரப்பர் பந்துகள், பிளாஸ்டிக் பொம்மைகள் போன்ற விளையாட்டுப் பொருட்களை விற்றுக்கொண்டு இருந்தான். அவன் முன்னால் நாலைந்து பேர் தரையில் கொட்டிக்கிடந்த பொருட்களில் தேடி ஏதோ வாங்கிக்கொண்டு இருந்தார்கள். சிந்தாமணி குனிந்து தானும் ஒரு தண்ணீர்த் துப்பாக்கி வாங்கிக் கொண்டாள். அதில் எப்படி தண்ணீர் ஊற்றுவது என்று கேட்டதும், பொம்மை வியாபாரி தன்னிடமிருந்த வாட்டர் பாட்டிலில் இருந்த கலங்கிய தண்ணீரை அதில் ஊற்றி அடித்துக் காட்டினான். அவள் அதைக் கையில் வாங்கி சாலையை நோக்கித் துப்பாக்கி விசையை அமுக்கினாள். தண்ணீர் சாலையில் நெளிந்து போனது அவளுக்குச் சிரிப்பாக வந்தது.

மணிக்கூண்டை நெருங்கும் போது, மணி ஒன்பதரையைக் கடந்திருந்தது. பேருந்து நிலையத் தில் யாருமே இல்லை. ஒரேயரு பிச்சைக்காரன் மட்டும் தனியே ஏதோ கிழிந்த துணியைத் தைத்துக்கொண்டு இருந்தான். அவள் தன் வீட்டை நோக்கி நடந்து வர துவங்கியபோது நடை வேகம் கொள்ளத் துவங்கியது. எங்கிருந்தோ மறைந்திருந்து வயது தன்மீது தாவி ஏறிக் கொண்டது போலிருந்தது. அவள் தன்னிடமிருந்த கறுப்புக் கண்ணாடி மற்றும் நெயில் பாலீஷை என்ன செய்வது என்று தெரியாமல், இருட்டில் தூக்கி எறிந்தாள். அவள் வீடு இருந்த சந்தில் தெருவிளக்கு விட்டுவிட்டு எரிந்துகொண்டு இருந்தது.

தன்னிடமிருந்த தண்ணீர்த் துப்பாக்கியை தனது நெற்றியில் வைத்து ஒரு அழுத்து அழுத்தினாள். தண்ணீர் பீய்ச்சிக்கொண்டு அவள் முகத்தில் வழிந்தது. ஒரு நிமிஷம் தன்னை மறந்து நின்றபடியே அழத் தொடங்கினாள். அன்றைக்குத் தனது பிறந்த நாள் என்பதை நினைத்து, கேவிக் கேவி அழுதாள். பிறகு, ஆத்திரத்தோடு அந்தத் துப்பாக்கியை குப்பைத் தொட்டியை நோக்கி வீசினாள்.

கடகடவென வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். வீடு பூட்டிக்கிடந்தது. உள்ளே தொலைகாட்சி ஓடும் சத்தம் கேட்டது. காலிங்பெல்லை அமுக்கும்போது, ஒரு முறை அவளை அறியாமல் தேவிகாவின் நினைவு வந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு தான் ஜி.சிந்தாமணி என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.


கதவு திறந்து, வீடு எந்த மாற்றமும் இல்லாமல் அவளை உள்வாங்கிக் கொண்டது.

நன்றி - விகடன்

கபிலரும் மருதனும் காற்றில் வாழ்கிறார்கள் - எஸ்.ராமகிருஷ்ணன்

சங்க காலத் தடயங்கள் என தமிழகத்தில் நூற்றுக்கும் மேலான ஊர்களைக் குறிப்பிடுகிறார்கள். அவற்றில் இன்றும் அகழ்வாய்வு மேற்கொள்கையில் அணிகலன்களும், முதுமக்கள் தாழியும், சங்கினால் பொருட்கள் செய்யும் தொழிலகங்களும் இருந்த மிச்சங்களைக் காண முடிகிறது. 

நான் சங்க கவிஞர்கள் வாழ்ந்த சுவடுகளைத் தேடிக்காண்பதில் விருப்பமுள்ளவன். வெள்ளிவீதியாரைப் படித்துவிட்டு மதுரையில் எந்த வீதி வெள்ளிவீதி, எங்கே வெள்ளிவீதியார் நடமாடியிருப்பார் என்று தேடி அலைந்திருக்கிறேன். ஆண்டாளின் திருப்பாவையை ஆண்டாள் கோவில் பிராகாரத்தில் உட்கார்ந்து வாசித்துவிட்டு அந்தவீதிகளில் சுற்றியலைவதில் சுகம் காண்கிறவன் நான்.  

சங்கப்பாடல்களில் இடம் பெற்றுள்ள ஊர்களைத் தேடிப்போய் காணும்போது மனதில் இனம் புரியாத ஏதோவொரு சந்தோஷம் உண்டாகிறது. சங்க இலக்கியத்தின் கபிலர் தனிப்பெரும் ஆளுமை கொண்ட கவி. அவர் பாடிய பறம்பு மலைக்கு நண்பர்களுடன் போயிருந்தேன். பறம்பு மலை, வள்ளல் பாரி வாழ்ந்த மலையாகும். சங்க காலத்தில் பறம்பு மலை, திருநெலக் குன்றம், திருக்கொடுங்குன்றம் என இரண்டு விதமான பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. தற்போது அதன் பெயர் பிரான்மலை. 

புதுக்கோட்டையிலிருந்து தென்மேற்கே நாற்பத்தைந்து கி.மீ. தொலைவில் உள்ளது. 2450 அடி உயரத்துடன்  கம்பீரமாக உள்ளது பிரான்மலை. பிரான்மலையைத் தொலைவில் இருந்து பார்க்கையில் ஒரு அனுபவமாகவும் நெருங்கி மேலேறிப் பார்க்கையில் இன்னொரு விதமான அனுபவமாகவும் இருக்கிறது.   

முந்திய நாள் அந்த மலையினை அருகாமை கிராமம் ஒன்றில் இருந்து பார்த்துக் கொண்டேயிருந்தேன். என்னுடன் இருந்த நண்பர் முரளி சொன்னார்:   

“மலையினைப் பார்க்கப் பார்க்க பாரியின் நினைவு வருகிறது. எவ்வளவு பெரிய வள்ளல்!”  

“எனக்கு கபிலரின் நினைவுதான் மேலோங்குகிறது. எவ்வளவு மகத்தான கவி கபிலர். அவரது கவிதைகளுக்கு நிகரில்லை” என்றேன். இருவரும் மலையைப் பார்த்தபடியே மௌனமாக இருந்தோம். இதமான காற்று கடந்து போனது. அந்தக் காற்றில் கபிலரின் குரல் புதையுண்டிருக்கிறது என என் மனதில் தோன்றியது.

இந்த மலை காலத்தின் ஒரு சாட்சி. கபிலர் நடமாடி அலைந்த சுவடுகள் இம் மலை யினுள் உள்ளன. காலம் அவற்றினை நம் கண்ணில் இருந்து அழித்து மறைத்திருந்தாலும் மனது அதைக்  கற்பனை செய்து கொள்ளத்தானே செய்கிறது. 

கவிதைகளின் வழியே கபிலர் இந்த மலையை விட மிகஉயரமானவராக எனக்குள் பதிந்து போயிருக்கிறார். கிரேக்க கவிதைகளை உலகின் சிறந்த கவிதைகள் என வாசித்து வியக்கும் நாம் அதே காலகட்டத்தில் கிரேக்க கவிதைகளை விடவும் உன்னதமான கவிதைகளைத் தந்த கபிலரை வியந்து கொண்டாடுவதில்லை.  
கபிலர் பறம்பு மலையின் வளம் குறித்துப் புகழ்ந்து பாடியிருக்கிறார். இங்கே பல்வேறுவிதமான பூக்கள், பழங்கள், அரிசி கிடைத்தன என்ற நீண்ட பட்டியலை கபிலர் தருகிறார்.  அத்துடன் பறம்புமலையில் சுரக்கும் நீரின் ருசி அலாதியானது என்ற குறிப்பும் காணப் படுகிறது.   

பறம்பு நாடு என்பது பறம்பு மலையைத் தலைமை யிடமாகக் கொண்ட நிலவெளி. இது பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாகவே இருந்து வந்திருக்கிறது. வள்ளல் பாரி இதனைச் சிறப்பாக ஆட்சி செய்திருக்கிறான். பாரியை ஔவையர், கபிலர், மிளைக்கந்தனார், நக்கீரர், புறத்திணை நன்னாகனார், பெருஞ்சித்திரனார், நல்லூர் நத்தத்தனார் ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.   

மலையின் அடிவாரத்தில் அருள்மிகு குயிலமுதநாயகி உடனுறை கொடுங்குன்றீசர் கோவில் ஒன்று காணப் படுகிறது. இது குன்றக்குடி ஆதீனத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோவிலில் சுந்தரபாண்டியன் மண்டபம், ஆறுகால் மண்டபம், லட்சுமி மண்டபம் என மூன்று மண்டபங்கள் காணப்படுகின்றன.  

இங்கு குலசேகரப் பாண்டியன் காலத்துக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. 80 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன என்கிறார்கள். கல்வெட்டுகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் கோடுகள் இழுத்தும் கரியால் பெயர்களை எழுதியும் அசிங்கப்படுத்தியிருக் கிறார்கள். இந்தக் கோவிலில் பெயரில்லாத விருட்சம் என்று ஒரு செடியைக் குறிப்பிடுகிறார்கள், சித்திரை மாதம்  இங்கே நடைபெறும் “பாரி உற்சவம்” அன்று, முல்லைக்குத் தேர் கொடுத்த வைபவம் ஒரு நிகழ்ச்சியாக நடக்கும் என்றார்கள். இம்மலையில் சிவன் பாதாளம், பூலோகம், கைலாயம் என மூன்று அடுக்குகளில் இருந்து காட்சி தருகிறார் என்ற ஐதீகம் உள்ளது.

குறிஞ்சி நிலத்தில்  அமைந்த கோயில் என்பதால், இந்நிலத்திற்கு உரிய தேன், தினைமாவு மற்றும் பச்சரிசி மாவில் செய்த தோசையை நைவேத்யமாகப் படைக்கின்றனர். கைலாயம் எனப்படும் மேலடுக்கிலுள்ள கோயில் குடவறையாக அமைந்துள்ளது. இந்த சன்னதி யின் முன்மண்டப மேற்சுவரில் கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் காணச்சென்ற தேவலோகவாசிகளின் சிற்பம் வடிக்கப்பட்டிருக்கிறது. சிவன், அகத்தியருக்கு திருமணக் கோலத்தில் காட்சி கொடுத்தபோது, நந்திதேவர் மத்தளம் வாசித்துக் கொண்டிருந்தார். எனவே, சிவன் இங்கு நந்திதேவர் இல்லாமல் காட்சி தருகிறார் என்கிறார்கள். பறம்பு மலையில்  தர்கா ஒன்று காணப்படுகிறது.  

கபிலர் பாரியோடு கொண்டிருந்த நட்பு நெகிழ்ச்சி யானது. கவிஞர், புரவலர் என்பதைத் தாண்டிய உறவது. பாரி கொல்லப்பட்ட துயரம் பற்றிய கபிலரின் பாடல்கள் நெஞ்சை உருக்குபவை.  பாரிக்குப் பின் பாரியின் மகளிரான அங்கவை, சங்கவை இருவருக்கும் நல்வாழ்வு அமைக்க கபிலர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார், பாரியின் மகளிரைத் தம் மகளிராகவே கருதி அவர்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி விச்சிகோன், இருங்கோவேள் என்ற இரண்டு அரசர்களை கபிலர் வேண்டினார் என புறநானூறு தெரிவிக்கிறது. 

இறுதியில், பாரி மகளிரை திருக்கோவிலூர் மலை யமானுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, தென் பெண்ணை ஆற்றில் உள்ள ஒரு குன்றில் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்தார் என்கிறார்கள்.  

கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த இடம் கபிலர் குன்று என்று அழைக்கப்படுகிறது. இது விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் பேரூராட்சி அருகே உள்ள தென்பெண்ணை ஆற்றினுள் அமைந்துள்ளது.  
இந்த கபிலக்கல்லையும் தேடிச்சென்று பார்த்தேன். தென்பெண்ணை ஆற்றினுள் உள்ளது இந்த கபிலர் குன்று. உள்ளுர் மக்கள் இதனை கபிலக்கல் என்றே குறிப்பிடுகிறார்கள். ஆற்றில் தண்ணீர் ஓடாத காலம் என்பதால் நான் சென்றபோது வறண்டு போயிருந்தது பாறை. ஆற்றில் தண்ணீர் ஓடும்போது அது மிகுந்த அழகுடையதாக இருக்கக்கூடும்.  

பெரிய ஒற்றைப் பாறை. அதன் மீது சிறுகோவில் போன்ற அமைப்பு காணப்படுகிறது, கோயிலின் மேலே நான்கு பக்க மேல்பகுதிகளிலும் சிற்பங்கள் தெரிகின்றன. அச்சிலையின் மேல்பகுதியில் இரண்டு ஆண் உருவங்களும், இரண்டு பெண் உருவங்களும் தெரிகின்றன. இந்தப் பெண் உருவங்கள் அங்கவை, சங்கவையாகவும், ஆண் உருவம் அவர்களை மணந்தவர்களாகவும் உள்ளுர் மக்கள் கருதுகிறார்கள். 

என்னோடு வந்திருந்த தமிழ் ஆய்வாளர் கணேசன்,  திருக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோயிலின் கருவறை யின் வடபுறச்சுவரில் உள்ள முதலாம் இராசராசசோழனின் காலத்துக் கல்வெட்டில், “செஞ்சொற் கபிலன் மூரிவண் தடக்கைப் பாரிதன்னடைக்கலப் பெண்ணை மலை யர்க்குதவி மினல்புகும் விசும்பின் வீடுபேறெண்ணி அந்தரிக்ஷம் செல கனல்புகும் பெண்ணை அலைபுனல் அழுவத்து கபிலக் கல்லது”  என்ற குறிப்பு காணப்படுகிறது. ஆகவே தென் பெண்ணையாற்றில் உள்ள கபிலக்கல்லில் தான் கபிலர் உயிர்நீத்தார் என்பது வரலாற்று சாட்சி என்றார்.   

இருட்டும் வரை அங்கேயே இருந்தேன். உலர்ந்த காற்றும் மங்கிய மாலை வெளிச்சமும் அந்த இடத்தின் மீதான நினைவுகளைக் கொப்பளிக்கச் செய்து கொண்டிருந்தன.  

கபிலர் குன்றினைத் தொல்லியல் துறை பராமரிக்கிறது என்றார்கள். முறையான பராமரிப்பு இல்லாமல் வழியில் பாதி குடித்து எறிந்த மதுப்புட்டிகளுடன் அந்த இடம் அசுத்தமாகவே இருந்தது. தொகை நூல்களில் நூறு பாடல்களுக்கு மேல் பாடியவர்கள் ஐவரே. கபிலர், அம் மூவனார், ஓரம்போகியார், பேயனார், ஒதலாந்தையார். இவர்களில் கபிலர் முதன்மையானவர். இவர் மொத்தம் 235 பாடல்களைப் பாடியிருக்கிறார் என்கிறார் தமிழ் அறிஞர் ம. ரா. போ. குருசாமி.   

இவர் கபிலரின் பாடல்களை மட்டுமே தனித்து தொகுத்து கபிலம் என்றொரு நூலாக வெளியிட்டிருக்கிறார். வாசிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான நூலிது.   

கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக்
களிற்று முக வரியின் தெறுழ்வீ பூப்பச்  
செம் புற்று ஈயலின் இன்அளைப் புளித்து!   
மெந்தினை யாணர்த்து; நந்துங் கொல்லோ;   
நிழலில் நீளிடைத் தனிமரம் போலப்  
பணைகெழு வேந்தரை இறந்தும்  
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!  

என பாரி இல்லாமல் போனபிறகு பறம்புமலையின் வளம் கெட்டு அழிந்துவிடுமோ என்று பயந்து கபிலர் பாடுகிறார். இப்பாடலில் மழைபெய்து ஓய்ந்த பின்பு செந்நிறத்தெறுழம் பூ ஆங்காங்கே மலர்ந்து காட்சி தருவது யானையின் முகத்தில் உள்ள செம்புள்ளிகள் போல விளங்குகின்றன என்று மிகுந்த கவித்துவமான உவமை கூறுகிறார். பாரியில்லாமல் போன துக்கம் இந்தப் பாடலில் ஆழமாக எதிரொலிக்கிறது. 

பிரான்மலையும் கபிலர் குன்றும் பிரதான சாலையின் அருகாமையில் இருந்தபோதும் அவற்றைப் பொதுமக்கள் விருப்பத்துடன் தேடி வந்து காண்பதில்லை. தமிழ் பெருமை பேசும் பல்லாயிரம் பேரில் பத்துப் பேர் கூட இந்த இடங்களை நேரில் சென்று பார்த்து அதன் பெருமையை உணரவில்லை என்பது வருத்தமான உண்மை. 

கபிலரைப் போல இன்னொரு முக்கிய கவியாளுமை மாங்குடி மருதனார். இவர் பத்துப்பாட்டில் ஒன்றாகிய  மதுரைக் காஞ்சியை இயற்றியவர். பாண்டிய மன்னரான. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்  அரசவையில் புலவராக இருந்தவர், புறநானூற்றில் இவரது பெயர் ‘மாங்குடி கிழார்’ என்று உள்ளது. 

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனுக்கு  வாழ் வின் நிலையாமை பொருளுணர்த்த மதுரைக் காஞ்சி எழுதப்பட்டது. இவரது பிறந்த ஊரான மாங்குடி, ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் விருதுநகர் மாவட்ட எல்லை முடியும் இடத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் உள்ளே சென்றால் இருக்கிறது. மாங்குடி மருதனாரைச் சிறப்பிக்க மாங்குடியில் ஒரு நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. அதைக் காண்பதற்காகச் சென்றிருந்தேன். 

வெயிலேறிய சாலைகள், கையில் நாயைப் பிடித்த படியே முயல் வேட்டைக்கு அலையும் சிறுவர்கள், இரையெடுத்த பாம்பு போல வானில் மெதுவாக நகரும் சூரியன், மேற்கில் அடிவானம் தெரியும் வெட்டவெளி. 
பிரதான சாலையை விலக்கிச் செல்லச் செல்ல ஊரே கண்ணில் படவில்லை. சிறிய தார்சாலையில்  சென்று திரும்பும்போது ஊர் சரிவில் வீழ்ந்து கிடக்கிறது. பெரிய கண்மாய் ஒன்றும் அதன்முன்னால் பேருந்து நிறுத்தமும் காணப்படுகிறது. ஆயிரம் பேர் வசிக்கும் சிறிய ஊர். ஒரு காலத்தில் நாட்டுச்சாராயத்திற்குப் பேர்போன ஊராக இருந்திருக்கிறது. இன்று ஊரெங்கும் ஆயத்த ஆடைகள் அதிலும் குறிப்பாக, நைட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள் காணப்படுகின்றன. 

சிறிய ஊர் ஆனாலும் பல்லாயிர வருசத் தொன்மை கொண்ட நிலம். 

மாங்குடியை ஒட்டிய பகுதிகளில் தொல்கற்காலத்திலே மனிதர்கள் வசித்த தடயங்கள் அகழ்வாய்வில் கிடைத்திருக்கின்றன. சங்ககாலத்தில் இந்தப் பகுதியில் நிறைய ஊர்கள் இருந்திருக்கின்றன. அவை காலமாற்றத்தில் அழிந்து போய்விட்டன என்கிறார்கள். இந்த ஊரில் நடைபெற்ற அகழ்வாய்வில் சங்க கால நாணயங்கள், பானைகள், கல் ஆயுதங்கள் கிடைத்திருக்கின்றன. 

மாங்குடி மருதனாரின் நினைவுத்தூண் ஒரு வேப்பமரத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கிறது.  1992ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தத் தூணின் இரண்டு பக்கமும் இரண்டு யானைகள். அடியில் ஒரு பீடம். அதில் புறநானூற்றுப் பாடல் பற்றிய குறிப்பு.  தூணில் மாங்குடி மருதனார் பற்றிய கல்வெட்டு காணப்படுகிறது. தமிழகத்தின் மூவேந்தர்களைக் குறிக்கும் புலி, மீன் மற்றும் வில் முத்திரை காணப்படுகிறது. மற்றபடி முறையான பராமரிப்பின்றி குப்பைகளும்  கழிவுநீரும் தேங்கிக் கிடக்க, நிழலுக்கு உறங்கும் நாயுமாக அந்த இடம் அதன் புராதனப் பெருமையை மறந்து கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. வருடம் ஒரு முறை பொங்கல் நாளில் இங்கே விழா எடுப்பதுண்டு என்கிறார்கள் உள்ளூர்வாசிகள். 

மதுரை மாநகரின் சிறப்புகளை ஒரு ஆவணப்படம் போல மிக நுட்பமாக விவரிக்கும் மதுரைக்காஞ்சி, பண் டைய மதுரையின் உன்னத சாட்சியாக உள்ளது, அதற்கு முக்கியகாரணம் மாங்குடி மருதனாரின் கவித்துவமே. 

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன்  தலைவனாக  
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்  
என்ற புறநானூற்றுப் பாடலால் மாங்குடி மருதனாரின் பெருமை  நன்கு விளங்குகிறது.  

குறுந்தொகையில் மூன்று பாடல்கள்,  நற்றிணையில் இரண்டு பாடல்கள், அகநானூற்றிலே ஒரு பாட்டு, புறநானூற்றிலே ஆறு பாடல்கள், திருவள்ளுவமாலையில் ஒன்று மாங்குடி மருதன் பெயரால் இடம் பெற்றுள்ளன.  ஆசிரியப்பாவால் இயற்றப்பட்ட  மதுரைக் காஞ்சி 782 வரிகளைக் கொண்டது. 

மழைகொளக் குறையாது, புனல்புக மிகாது 
கரைபொருது இரங்கும் முந்நீர் போல,  
கொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது.  

என்று மதுரை நகரில் நடைபெற்ற வணிகத்தைப் பற்றி மதுரைக்காஞ்சி விவரிக்கிறது. அதாவது  பொருள்களைக் குவிக்கக் குவிக்க, மக்கள் வாங்கிப் போய்க் கொண் டிருப்பார்களாம். கடல்நீரை மேகம் கொள்ளுவதால் கடல் ஒருபோதும் அளவில் குறைவதில்லை; ஆறுகள் சேர்வதால் கடல் மிகுதியாவதும் இல்லை. அதே போல் தான், மதுரையின் கடை வீதிகளும்.  

மக்கள் கூட்டமாக வந்து பொருள்களை வாங்குவதால் குறைந்து போனதாகவோ, பலர் விற்கக் கொண்டு வரும் பொருட்களால் அதிகமாகிப் போனதாகவோ இன்றி எப்போதும் போல் விரிந்து விளங்கியது என்கிறது மதுரைக்காஞ்சி. மதுரையில் ஒரு இரவு எப்படியிருக்கும் என்று அறிந்து கொள்ள அவசியம் மதுரைக்காஞ்சியை ஒருமுறையாவது வாசிக்க வேண்டும்.  முதல் யாம, இரண்டாம் யாம நிகழ்ச்சிகள் எப்படி நடைபெறுகின்றன, கடைகள் எப்படி மூடப்படுகின்றன என விரிவாக மாங்குடி மருதன் விவரிக்கிறார். 

கள்வரையும், அவர்கள் வராது ஊர்க்காவல் செய்யும் காவலர்களையும்  அவர் வர்ணிப்பது அற்புதமானது . பேய்களும், துஷ்ட தெய்வங்களும் கூடித்திரியும் மூன்றாம் சாமத்தில், பெண்யானையின் கருத்த தோலைப் போன்று அடர்ந்த கரிய இரவில் கள்வர் வருவார்கள்.  பயமற்ற கண்கள் கொண்ட அவர்கள் கையில் கல்லும், மரத்தையும் துண்டாக்கும் கூர்மையான வாளும் இருக்கும். காலில் செருப்பு அணிந்திருப்பார்கள்.  இடையில்  உடைவாள். கருமையான மேலாடை. சுவரில் ஏற ஒரு நூலேணி கொண்டு வருவார்கள். ஊரைக்காவல் காக்கும் காவலர் கள் தூக்கம் அறியாதவர்கள். அஞ்சாத வீரம் கொண்ட வர்கள். களவு சாஸ்திரம் கற்றுத் தேர்ந்தவர்கள். தப்பி ஓட முயலும் கள்வரை அம்புகளால் அடித்து வீழ்த்து வார்கள். யானையைப் பிடிக்கச் செல்லும் புலிபோல் கள்வரை மடக்கிப்  பிடிப்பார்கள் என்கிறார். 

மதுரை நகரில் விதவிதமான கொடிகள் பறந்ததை மருதனார் விவரிப்பது ஒலிம்பிக்ஸில் காண்பது போலவே இருக்கிறது,  தச்சர், கொல்லர், பூ விற்போர், நெசவாளர், உழவர் உள்ளிட்ட தொழிலாளர்கள் மதுரை நகரில் வாழ்ந்தனர். அறுத்த சங்கைக் கொண்டு வளையல் போன்ற அணிகலன்களைச் செய்பவர்கள்  தனியே இருந் தனர். இரத்தினக் கற்களிலே துளையிட்டு அவைகளை மாலையாகக் கோர்த்துக் கொடுப்போர் வசித்தனர்.   

புடம்போட்டு எடுத்த பொன்னால் நகைகள் செய்பவர்களும் புடவைகளை விலை கூறி விற்கும் வியா பாரிகள், செம்பை நிறுத்து விலைக்கு வாங்கும் வணிகர் கள், மலர்கள், அகில், சந்தனம் ஆகியவற்றை விற்பனை செய்வோரும் எதனையும் உயிரோட்டமாக வரையும்  ஓவியர்களும் இருந்தனர். இதனை, 

கோடுபோழ் கடைநரும் திருமணி குயினரும் சூடுறு நன்பொன் சுடர் இழை புனைநரும்  
பொன்உரை காண்மரும், கலிங்கம் பகர்நரும்  
செம்புநிறை கொண்மரும் கலிங்கம் பகர்நரும் செம்புநிறை கொண்மரும்,  
வம்புநிறை முடிநரும் பூவம்புகையும் ஆயும் மாக்களும்,  
எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின் கண்ணுள் விளைஞரும் 
என்ற மதுரைக்காஞ்சி வரிகள் தெளிவாக  எடுத்துக் காட்டுகின்றன.  

மதுரையில் சமணர்கள் வாழ்ந்த சமணப் பள்ளியின் சுவர்களில் அழகான இயற்கை வண்ண ஓவியங்கள் தீட்டப்பெற்றிருந்தமையை,  

கயம்கண் டன்ன வயங்குடை நகரத்துச் செம்பியன் றன்ன செஞ்சுவர் புனைந்து நோக்குவிசை தவிர்ப்ப மேக்குயர்ந் தோங்க  
இறும்பூது சான்ற நறும்பூண் சேக்கையும் என்று மாங்குடி மருதனார் எடுத்துக் காட்டுகின்றார். 

இப்படித் தமிழ் மக்களின் வாழ்வைக் கொண்டாடிய ஒரு கவிஞரின் நினைவுத்தூண் கவனிப்பாரற்றுக் கிடக்கிறது. எப்போதாவது வெளியூரில் இருந்து ஒரு தமிழ் ஆய்வாளர் அல்லது வரலாற்று அறிஞர் வந்து இந்த நினைவுத்தூணைப் பார்வையிடுவதோடு சரி, வேறு எந்தக் கவனமும் கிடையாது. எங்கள் ஊர் விருதுநகர், திருநெல்வேலி இரண்டு மாவட்டங்களுக்கும் எல்லையில் இருப்பதால் இருவருமே எங்களைக் கண்டுகொள்வதில்லை என்று குறைபடுகிறார்கள் உள்ளூர்மக்கள்.  

செம்மொழி நிறுவனங்கள் கல்லூரி கல்லூரியாக  ஆண்டிற்கு நூறு கூட்டங்கள் நடத்தி பல லட்சங்கள் செலவு செய்கின்றன. ஆனால் இது போன்ற நினை வகங்களைக் கண்டுகொள்வதேயில்லை. செம்மொழி மையமோ, தமிழக அரசோ இதையும் கபிலர் குன்றினை யும் முறையாகப் பராமரித்து மாங்குடி மருதனாருக்கும் கபிலருக்கும் விழா எடுத்துக் கௌரவிக்க வேண்டும். அதுதான் நம் மண்ணையும் மக்களையும் பாடிய கவிஞர் களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை. 


நன்றி - உயிர்மை ஏப்ரல் 2013

வேனல்தெரு - எஸ்.ராமகிருஷ்ணன்


பதினாலாம் நூற்றாண்டு யுத்தத்தில் தப்பிய குதிரை போல வேனல் தெரு வசீகரமாக வாலை ஆட்டி அழைத்துக்கொண்டிருந்தது. நீண்ட உருவங்களாகவும் தோற்றம் கலைவுற்றவர்களாகவும் குடிகாரர்கள் நடந்து கொண்டிருந்தனர். வேனல் தெருவின் இரு பக்கமும் நீண்ட வரிசையாக மதுக்கடைகளே நிறைந்திருந்தன. கண்ணாடிக் குடுவைகளில் தேங்கிய மது தன் நீள் தொடு கொம்புகளால் பார்ப்பவரின் கண்களைச் சுருட்டி அடைத்துக் கொண்டிருந்தது. நகரின் தொல் பழமையான இந்தத் தெருவின் இமைகள் இரவு பகல் பேதமின்றி சிமிட்டிக்கொண்டிருந்தன. வயதை மறந்த குடிகாரர்கள் தங்களை மீறி ஸ்நேகித்துக் கொண்டும், பரஸ்பரம் அன்பில் கட்டுப்பட்டவர்களாய் நேசம் மட்டுமே வழியும் மதுக் குடுவையுடன் விடாது பேசியபடியிருக்க, எரிந்து கொண்டிருக்கும் ஒன்றிரண்டு குண்டு பல்புகளுக்கு ஊடே பெண்களும் கூடி கபடின்றி சிரித்தபடி முக்காடு விலக்கிக் குடித்துப் போகின்றனர். போதை ததும்பியவென் கனவிலோ உருக்கொண்டது போல வியாபித்திருக்கிறது வேனல் தெரு. மனிதர்கள் மதுவுடன் தங்கள் ஆகிருதிகளைக் கரைத்துவிட்டு திரவம் போலாகி மதுப்புட்டியினுள் சேகரமாகிவிட முயன்று கொண்டிருந்தனர்.

நீண்ட தாடியும் கருத்த ரம் புட்டியுமாக நிற்கிறாரே… அதோ கட்டத்தின் கடைசியில் – அவரிடம் கேளுங்கள். தனது விநோத கனவுகளில் நூறு நடிகைகளைக் காதலித்துத் தோற்ற கதை அவரிடம் ஒரு சுருள் பூச்சியாய் ஆயிரம் கால்கொண்டு ஊர்ந்துகொண்டிருக்கிறது. என்றோ இறந்துபோய்விட்ட எல்.பி.வனமோகினிக்காகத்தான் அவர் இப்போது மது அருந்திக் கொண்டிருக்கிறார். இருபது வயதிற்குள் எண்ணற்ற நடிகர்களால் காதலிக்கப்பட்டு, எவரையும் வெறுக்கத் தெரியாமல் சுயமரணம் செய்து கொண்ட அந்த நடிகையின் சுருள் கூந்தல் இழையொன்று மதுவின் வழியே தன்மீது படர்வதாகவே அவர் நினைத்துக்கொள்கிறார். எல்.பி. வனமோகினியை அவர் நேரில் கண்டவரில்லை.

யாரோ தந்த சினிமா புகைப்படத்தாளில் சுழித்த உதடுடன் இருந்த அவள், நரி ஒன்றைத் தன்னோடு அணைத்துக் கொண்டிருந்தாள். நரியே அவளைக் காதலிக்கச் செய்தது. இந்த நூற்றாண்டின் இரண்டாம் பத்தில் இறந்து போனாள் வனமோகினி. என்றாலும் என்ன? அவளை உயிருடன் எழும்பும் மதுப்புட்டிகள் அவரிடம் இருந்தனவே. அவரின் மனதில் அன்பின் சிறு துவாரங்களின் வழியே தீர்க்க முடியாத துக்கம் சுரந்துகொண்டிருக்கிறது. அன்பே துக்கத்தின் துளிதானோ? உலகில் வனமோகினியின் காலம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இருக்கும்? அவரிடமிருந்து தேவைப்படுமாயின் மதுவை நீங்களும் பெற்றுக் கொள்ளலாம். இன்று அவரிடமிருந்த மதுப்புட்டியைப் பிடுங்கிக்கொண்டு அவரை மிதித்துத் தள்ளியபடி நகர்கிறானே அந்த இளைஞன், அவன் பெயர் என்னவாகயிருக்கும்?

வேனல் தெருவிற்குள் வருபவர்கள் எவராகயிருப்பினும் பெயர் ஒன்றுதானே? இளைஞன் தன்னிடமிருந்த சில்லறைகளைத் தெருவெங்கும் வீசி இறைக்கிறான். எவனோ ஒரு கடைக்காரன் தன்னிடம் சில்லறையில்லை என எந்த ஊரிலோ மறுதலித்ததின் பதிலாக இங்கே சில்லறைகள் வீசுகிறான். புpன்பு மெதுவாகத் தன்னிடமிருந்த நூறு ரூபாய் தாளை சுருட்டி அதன் முனையில் நெருப்பிட்டுப் புகைக்கிறான். அவனைப் பார்த்து யாரோ சிரிக்கிறார்கள். ஏழாம் நம்பர் கடை மூலையில் இருக்கும் இருவர்தானே சிரித்தது. அவர்களில் ஒருவனுக்கு, பணத்தைப் புகைப்பவனிடமிருந்து ஒரேயொரு தம் அடிக்க ஆசை எழ, கால் பின்னிய நிலையில் எழுந்து வந்து அவனிடம் தம் கேட்கிறான். வந்தவன் உதட்டிலும் பணத்தின் நீல நிறம் ஒட்டிக்கொள்கிறது. இருவரும் புகைக்கிறார்கள். அவர்களுக்குள் ஏற்பட்ட புதிய நட்பிற்காக இருவரும் ஒரே மதுக்கோப்பையைப் பகிர்ந்துகொள்கிறார்கள். கோப்பை காலியானதும் இருவருக்குள் விரோதம் துவங்குகிறது. தனது பணத்தைப் பிடுங்கி சுருட்டிப் புகைத்துவிட்டான் என வந்தவனுக்கு எதிராகக் கூச்சலிடுகிறான் இளைஞன்.

 ஏழாம் கடையில் இருந்தவனோ தன்னுடன் இருந்த நண்பன் எவன் என அறியாது மற்றொருவன் தோளில் சாய்ந்துகொண்டு உறவை விளித்து மாப்ளே… மாப்ளே.. என செல்லமிடுகிறான். இத்தனை குடிகாரர்களுக்கும் நடுவில் சிதறிய நாணயங்களைக் குனிந்து அவசரமும் ஒடுக்கமுமாக பொறுக்கிக் கொண்டிருக்கிறாளே அந்த செங்கிழவி, அவளை விடவும் திருடக்கூடியவர் இந்த வேனல் தெருவில் எவரும் கிடையாது. நாணயங்களைக் குனிந்து சேகரித்தபடியே அவள் கால் செருப்புகளைத் திருடி ஒளிக்கின்றாள் பாருங்கள். அவள் உடைந்த குப்பிகளுக்குள் நாணயங்களைப் போட்டுக் குலுக்குகிறாள். அவைதான் எத்தனை இனிமையாகச் சப்தமிடுகின்றன. நாணயங்கள் நிரம்பிய மதுப்புட்டியுடன் வேனல் தெருவில் இருந்த இருள் சந்தில் போகிறாள். அங்கும் சிலர் குடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அவர்கள் நிலத்தோடு உரையாடிக்கொண்டிருப்பது போல முணுமுணுக்கின்றனர்.

விலை மலிந்த சாராய வீதி அந்த இருள் சந்து. தகரக் குவளைகளில் மஞ்சள் சாராயம் மினுக்கிறது. செங்கிழவி தன் மதுப்புட்டியை ஒரு தகரக் குவளையில் கொட்டுகிறாள். மிச்சமான சாராயத்தில் ஊறுகின்றன நாணயங்கள். தங்கத்தைப் போன்ற வசீகரமான அத்திரவத்தை அவள் உதடு தீண்ட விரிகின்றது. ஒரு வான்கோழியைப் போல சப்தமிட்டபடி அவள் குடித்துவிட்டுத் தகரக் குவளையைத் தருகிறாள். அவளுடைய வயது மெல்லக் கரைந்து மீண்டும் பால்யம் கண்டவள் போல தனது மார்புகளை சாராயக்காரனிடம் காட்டி இச்சை மொழியில் பேசுகிறாள். அவனோ கிழட்டு நாயே என ஏசியபடி மீண்டும் தகரக் குவளையில் சாராயம் தருகிறான். இனி இரவு முழுவதற்கும் வேறு கிடைக்காது என்பது தெரியும். நீண்ட கயிற்றால் காலி மதுப்புட்டியை இடுப்பில் சுற்றி நாணயம் தேடி அலையத் துவங்குவாள். வேனல் தெருவிற்கு எல்லா இரவும் மது வாங்க வரும் பக்கீர் வந்திருக்கக்கூடும்.

அவரது மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் ஓசையைக் கேட்டதும் கிழவி ஓடுகிறாள். பக்கீர் என்றைக்கும் போலவே இரண்டாம் கடை முன் நிற்கிறார். அவருக்கு உரியதைப் பெற்றுக்கொள்கிறார். இளம் பெண்ணைப் போல அவரை உரசிச் சிரிக்கிறாள் செங்கிழவி. அவர் வண்டியில் அமர்ந்தபடி எல்லா நாளையும் போலவே தனது இடது காலால் அவளை உதைத்துத் தள்ளிவிட்டு ஐந்து ரூபாயை எறிந்து புறப்படுகிறார். அதை எடுக்க மனம் அற்றவளாக அவரின் மனைவிகளைப் பற்றியவசைகளைப் பெருக்கியபடி நிற்கிறாள். அந்தப் பணம் இரவெல்லாம் எவராலும் எடுக்கபடாமல் அந்த இடத்தில் கிடக்கும். விடிந்த பின்பு அதை அவளே எடுத்துக்கொள்ளக் கூடும். ஆயினும் இரவில் அவள் அதன்மீது மூத்திரம் பெய்வதையோ, காறி உமிழ்வதையோ எவர் தடுக்க முடியும்? வழியற்ற ஒருவன் அப்பணத்தை எடுத்த நாள் ஒன்றில் கிழவி அவன் உடைகளை அவிழ்த்துவிட்டு ஆடையற்ற அவன் உறுப்பில் புட்டியால் அடித்திருக்கிறாள் என்கிறார்கள். எனினும் புறக்கணிக்கப்பட்ட பணம் வெறும் காகிதமாகஇருளில்வீழ்ந்துகிடக்கும்.

வேனல் தெருவிற்குப் புதிதாக வந்த அந்தப் பையனைப் பாருங்கள். இப்போதே மீசை அரும்பத் துவங்கியிருந்த அவன், எதிர் வீட்டில் குடியிருந்து வேறு ஊருக்கு மாற்றலாகிப் போன மாணவிக்காகவும் தன் முதல் காதலுக்காகவும் மதுப்புட்டியைத் திறக்கிறான். அவனிடம் சொல்லவொண்ணாத காதல் இருக்கிறது. தோற்றுப்போன தன் முதல் காதல் பற்றி யாரிடமும் பேச முடியாத தவிப்பில் அவன் கடைசியில் தன்னிடமே பேச முயலுகிறான். தன்னிடம் பேசுவதைவிடவும் வேறு எவர் கிடைக்கக்கூடும் நல்துணை. அவனுக்கு குடிக்கத் தெரியாமல் இருக்கக்கூடும். ஒருவேளை மது அவனை வீட்டிற்குத் திரும்பவிடாமல் ஏதோ ஒரு தெரு இருளில் விழச் செய்யக்கூடும். ஆனாலும் அவனுடன் பேசுவதற்குக் கற்றுத் தரக்கூடும். அவன் கறுப்புத் திரவம் ஒன்றை வாங்கியிருக்கிறான்.

அத்திரவம் அவன் உடலில் கண்ணாடி இதழ் போல நீர்தட்டானின் சிறகை விடவும் மெல்லியதாக இரு சிறகுகளைக் கிளைவிடச் செய்யும். இதை நினைத்தபடியே குடிக்கிறான். பனை விசிறியைப் போல வடிவம் கொண்ட அந்தச் சிறகு அருகில் குடித்துக் கொண்டிருப்பவன் கண்ணுக்குக்கூடத் தெரிகிறது. அவனுள் மிதந்து கொண்டிருந்த திரவம், மாற்றலாகிப் போன பெண்ணின் சுவடுகளைப் பற்றிச் சென்று, தெரியாத ஊரில் உறங்கும் அவள் வெண்பாதங்களை முத்துகின்றன. அவன் இப்போது அந்தப் பெண்ணையே குடித்துக் கொண்டிருக்கிறான். புட்டியில் ஒரு துளி திரவமும் இல்லாமல் தீர்த்துவிட்டான். நீர்மை படர்ந்த கண்களுடன் தன் முதல் காதலைப்பற்றித் தன்னிடமே பேசிக்கொள்கிறான். விசும்பலும் ஏக்கமும் ஊர்கின்றன உடலெங்கும். சக குடிகாரன் ஒருவன் அவனை நோக்கித் தன் கைகளை விரிக்கிறான். கரங்களின் ஊடே நுழைந்த மாணவனை முத்தமிடுகின்றன பெரு உதடுகள். மாறி மாறி முத்தமிட்டுக்கொள்கிறார்கள்.

பின் இருவரும் தோளில் கைபோட்டபடி அடுத்த மதுக்கடைக்குப் போகிறார்கள். அவர்களை இடித்துக்கெர்ணடு போகும் நபர் பையனின் நல்லாசிரியராக இருக்கிறார். எனினும் என்ன? இரவின் ரகசிய படிக்கட்டுகளின் வழியே உலவும் குடிகாரர் அவரும்தானே. காலி மதுப்புட்டிகளில் விரல் நுழைத்து துழாவும் குருடன் செபாஸ்டியன் புட்டிகளில் மிஞ்சிய மதுவைத் துளிதுளியாக தன் சிரட்டையில் சேகரிக்கிறான் பாருங்கள். எவனோ குடித்து மீதம் வைத்துப்போன பாதி புட்டி ஒன்றால் சிரட்டையே நிரம்பி விடுகிறது. இனி அவனை விடவும் யோகமும் சந்தோஷமும் கொள்ளக்கூடிய மனிதன் எவனிருக்கிறான். வேனல் தெரு இடிந்த மூத்திரப் பிறையின் படிக்கட்டில் அமர்ந்தபடி அவன் இரவு உணவையும் சிரட்டை மதுவையும் ருசித்துக் குடிக்கிறான். பகல் முழுவதும் கூவிப் பெற்ற நாணயங்களையும் மனிதர்களையும் மறந்துவிட்டு, தான் கண் பார்த்து அறியாத வேனல் தெருவின் வாசனையை முகர்ந்தபடி களிப்புறுகிறான். சந்தோஷம் ஒரு சல்லாத்துணி போல உடல்மீது படர்கிறது.

 தன்னிடமிருந்த பீடியைப் புகைக்கத் துவங்கியதும் உலகம் ஏன் இத்தனை சந்தோஷமாகவும், இடைவிடாத களிப்பையும் கொண்டிருக்கிறது என எண்ணிக்கொண்டான். ஸ்திரீகளையும் வீட்டையும் மறந்த வேனல் தெரு மதுக்குடியர்களுக்குள் மட்டும் எப்படி வற்றாமல் களிப்பு பீறிடுகிறதோ என புரியவேயில்லை. கசப்பு முளைத்த நாவுடன் அவர்கள் உலகின் மொத்தக் களிப்பையும் திருடி வந்துவிட்டார்களாயென்ன. வேடிக்கையும் உல்லாசமும் நிரம்பிய அத்தெருவிற்குள் குற்றம் என எதைச் சொல்லிக்கொள்ளக் கூடும். திறந்த இரவினுள் குற்றங்கள் நிழலைப்போல சப்தமிடாதபடியே உலவுகின்றன.

பண்டிகை நாள் தவிர வேறு காலங்களில் ஒப்பனையற்றுப் போன ஸ்திரீபார்ட்காரன் ஒருவன் மட்டும் குடியில் குரல் உயர்த்திப் பாடாமல் இருந்திருந்தால் உல்லாசத்தில் இந்த லயம் இருந்திருக்கக் கூடுமா? அவனுக்குப் பெண்களைவிடவும் அடர்ந்த கூந்தல். ஸ்திரீ முகம் கொண்ட அவன் வேனல் தெருவிற்குக் குடிப்பதற்கு ஒருபோதும் தனியே வருவதேயில்லை. ஒரு ஆட்டுக் குட்டியை மார்போடு அணைத்து எடுத்துக்கொண்டு வருவான். கற்பனையான உபவனத்தில் தோழியோடு அலையும் ராணியைப் போல நடக்கிறான்.

அவனுடைய தோளில் சரசரக்கும் தலைமயிர் குடிப்பவர்களுக்குள் சரசத்தின் மூச்சைக் கிளப்பிச் செல்கிறது. வேஷமிடாத போதும் அவனால் ஸ்திரீபார்டினின்னு தப்பிக்க முடியவில்லையே. பொய் மார்பகமும், உயர் கொண்டையும் அணியவில்லையே தவிர, அவன் முகத்தில் மஞ்சள் திட்டுகளும், கைகளில் வளையும் சப்தமிட வருகிறான். அவனுடைய ஆட்டுக்குட்டி துள்ளி குடிகாரர்களின் ஊடே அலைகிறது. ஆட்டின் கழுத்தில் புரளும் ஒற்றை மணி சப்தம் கேட்ட குடிகாரன் எவனோ தங்களுக்குக் குடிப்பதற்காக வாங்கிய புட்டியுடன் இருளில் மறைகிறான். ஆட்டின் கண்களில் பழகிய போதையின் சுகிப்பு தெரிகிறது. அவனும் ஆடுமாகக் குடிக்கிறார்கள். இருவரும் இரவெல்லாம் குடிக்கக்கூடும். குடித்த ஆடுகள் எப்போதும் இயல்பிலேயே புணர்ச்சிக்கு ஏங்குகின்றன. அவை மனித பேதமறியாது கால் தூக்கி நிற்கின்றன. நள்ளிரவு வரை அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆடு வேனல் தெருவின்று கிளம்பி அவர்கள் மஞ்சள் அழியும் உலர்ந்த வீதிகளில் காகிதத்தை மென்றபடி அலையத் துவங்குகிறது. மூடிய வீடுகளுக்கு வெளியே முரட்டுக் குடிகாரனைப் போல ஆடு மணியசைத்துச் சுழல்கிறது. தடுக்க யார் இருக்கிறார்கள். உல்லாசம் தெருவில் தனியே நடனமிடுகிறது என்பதைத்தவிர.

வேனல் தெரு மதுக்கடைகள் மூடப்படுவதேயில்லை. கடைகளுக்குக் குடிக்க வருபவர்கள் மட்டுமல்ல, கடையில் இருக்கும் விற்பனை செய்யும் நபர்கள் கூட ஒரே முகச் சாயலில் தானிருக்கிறார்கள். அவர்களுள் நான்காம் கடை சிப்பந்தியின் கண்கள், புட்டிகளை வாங்கும் எல்லா மனித முகத்தையும் துளையிட்டு அறிந்துவிடுகின்றன. மதுக்கடைச் சிப்பந்திகள் சில்லறை தராமல் ஏமாற்றும்போதோ, கள் மதுவை விற்கும்போதோ கூட குடியர்கள் ஏன் எதிர்;ப்பதில்லை. வேனல்தெரு இரவு எப்போதும் அரை மயக்கநிலையே இருக்கிறது. பொருள் வழி அலையும் வியாபாரிகளும் பயணிகளும் இதனுள் நுழையாமல் செல்ல முடிவதேயில்லை. தனது குறிப்பேட்டில் யாரோ பயணியின் கைகள் தெருவின் ஞாபகத்தினை எழத் தாக்குகின்றன. பின் அவனும் களைத்துவிடுகிறான். நேற்றாக இருக்கலாம்.

குடிக்க வந்த இருவர், நெடும் காலத்தின் பின் சந்திப்பு கொண்டு நினைவைப் பரிமாறியபடி குடித்தனர். அவர்கள் பர்மாவிலிருந்து நடந்து வந்தவர்கள் எனத் தெரிகிறது. மதுப்புட்டிகள் காலியாகியபடி இருந்தன. பின் இருவரில் மூத்தவன் மதுப்புட்டியை உயர்த்தி அதனுள் பர்மா மூழ்கியிருப்பதாகக் கூறுகிறான். திரவம் மெல்ல படிய பர்மா நகரம் கண்ணாடி மீறி விரிகிறது. இருவரும் யுத்தத்திற்கு முந்திய மரவீடுகளின் சாலையில் நடக்கின்றனர். ஜப்பானிய விமானங்களின் குண்டு நகர் மீது சிதறுகிறது. தெருக்களுக்குள் ஓடுகிறார்கள். துப்பாக்கி ரவை எட்டாத வெளியில் பயணித்து நடந்தபோது ஒருவன் மற்றவனை நோக்கி துப்பாக்கி நீட்ட, தோட்டா பீறிட்டு முதுகில் பாய்கிறது. விழித்துக் கொண்டவனைப் போல குடிப்பவன் கண்ணாடி புட்டியைத் தூக்கி உடைக்கிறான். பர்மா சிதறுகிறது. சுட்டுக்கொண்டது யார் யாரை என்ற புதிர் விலகாமல் சொந்த துயரத்திற்காக மீண்டுமொரு மதுப்புட்டி வாங்க நடக்கின்றனர்.

இரவு நீள நீள மயங்கிச் சரிந்த சாயைகளின் நடமாட்டம் ஓய்ந்த பின்பும் வேனல் தெரு விழித்தபடிதானிக்கிறது. என்றோ இந்த நகரையாண்ட வெள்ளைப் பிரபுவின் குள்ளமான சிலையைப் பாருங்கள். அதன் கண்கள்கூட இந்தத் தெருவைப் பார்த்தபடிதானிருக்கின்றன. பிறந்த தேசம் விட்டு கனவுக் கப்பலில் மிதந்தபடி அந்தத் துரை இந்நகரை நன்றாக அறிந்திருந்தான். அந்தச் சிலையின் கீழே உளறுகிறானே ஒருவன் அவன் எதைத்தான் பேசுகிறான் – காதில் விழுகிறதா? என்றோ மழை வெறித்த நாள் ஒன்றில் சிவப்புக் குடையுடன் வந்த இரண்டு சட்டைக்காரப் பெண்கள் கண்ணீர் மல்க, அந்தச் சிலையின் முன்பாக மௌனித்து விட்டு ரோஜா மலர்களை அங்குவிட்டுச் சென்றனரே அன்றும் அவன் அங்கு குடித்துக்கொண்டிருந்தான்.

ரோஜா மலர்கள் வேனல் தெரு மதுக்குடியர்களைப் பேச்சற்றுப் போகச் செய்தது. மதுக் கடைக்காரர்களுக்கு அந்த ரோஜாக்களைப் போல குற்ற உணர்வை ஏற்படுத்தும் அந்தப் பொருளும் இதுவரை உலகில் இருந்ததாக நினைவில்லை. இருபத்தி எட்டு மதுக்கடை சிப்பந்திகளும் ரோஜாக்களை எவராவது எடுத்துப் போய்விட வேண்டும் என ஆசைப்பட்டார்களே அன்றி எவனும் கீழ் இறங்கி அந்த ரோஜாக்களை எடுத்து எறிய இயலவில்லை. பதினாலாம் கடைச் சிப்பந்தி ஒருவன் தன் ஆறு வயது மகள் ஞாபகம் பெரு மைல்களுக்கு அப்பால் உள்ள கிராமத்து வீட்டின் கதவுகளைத் தட்டி முகம் பார்க்க ஆசையுற்றுப் புலம்பினான்.

அவனாலும் இந்த ரோஜாக்களை எடுத்து விடமுடியவில்லைதானே. மூன்று நாட்கள் வரை அதே இடத்தில் காய்ந்து சருகாகிய நிலையில் ரோஜாக்கள் இருந்தன. பின் காற்று அதைத் தன்னோடு கூட்டிப் போனது. காற்றில் மறைந்து விட்ட ரோஜா ஏற்படுத்திய வெறுமை கடைச் சிப்பந்தி ஒருவனுக்குத் தாளாமல், அவன் வீதியின்று அழித்து ஓடி, நகரையே விட்டுப் புலம்பி ஓடுகிறானே அது எதற்காம்? விசித்திரம்தான் மனிதர்களாக உருக்கொண்டு இங்கு வருகின்றதாயென்ன?
மழிக்கப்படாத மயிர் படர்ந்த முகத்துடன் ஒருவன் எல்லா மதுக்கடைகளிலும் இரஞ்சும் குரலில் பணத்தை வைத்துக்கொண்டு கேட்டும், எவரும் இல்லையெனத் தலையாட்டுகிறார்களே தெரிகிறதா? அவனுக்கான மதுப்புட்டிகள் உலகில் இல்லாமல் தீர்ந்து விட்டனவா? அவன் குடிப்பதற்காக எதையும் கேட்பதாகத் தெரியவில்லை. அருகில் வந்து அவன் குரலைக் கேளுங்கள். வேறு எதோ ஒரு பொருளிற்காக மன்றாடுகிறான். படர்ந்த மீசையில் கண்ணீர் துளிர்த்து நிற்க அவன் வேதனையுடன் எதைத்தான் கேட்கிறான்? நேற்றுதானோ இல்லை ஒரு வருடத்தின் முன்பாகவோ எதோ ஒரு மதுக்கடையில் அவன் இறந்துபோன மனைவியின் மணநாள் பட்டுப் புடவையொன்றை விற்றுக் குடித்து போயிருக்கிறான். இன்று புடவையின் ஞாபகம் பீறிட, தேடி மீட்டுக் கொள்ள அலைகிறான். அந்தப் புடவையின் ஒரு முனை தீயில் எரிந்து போயிருக்கும் என்பதும் அதைச் செய்தவன் அவன் என்பதையும் யார் அறிவர்? எல்லா மதுக்கடைக்காரர்களும் அவனையறிவர். புடவை என்றில்லை. கடிகாரங்கள், நிலைக்கண்ணாடி என எத்தனையோ விற்றுக் குடித்துப் போயிருக்கிறான்.

அந்தப் புடவையை அடைந்தவன் எக்கடையின் சிப்பந்தி எனத்தான் தெரியவில்i. அவனது பரிதாபம் தாங்காது சக குடிகாரன் ஒருவன் விடாது பேசுகிறான். ஒரு சிப்பந்தி அவனைக் கூப்பிட்டு குடிகாரர்கள் விற்றுப்போன பொருட்களின் சேகர அறையைத் திறந்து காட்டுவதாகக் கூறுகிறான். அந்த அறையினுள் புடவைகள், மரக்கண்ணாடிகள், கடிகாரங்கள், மணல்குடுவைகள், பழம் துப்பாக்கி, இசைத்தட்டுகள், புகை பிடிக்கும் குழல், கோப்பைகள், தைல ஓவியம் எனக் குவிந்து கிடக்கின்றன. தன் மனைவியின் புடவையைத் தேடிச் சலிக்கிறான். என்றோ அடமானத்தில் வைக்கப்பட்டுப் போன சித்திரக்காரனின் இதயம் ஒன்று மிக மெதுவாகத் துடித்துக்கொண்டிருந்தது அறையில். அந்த அறையை விட்டு அகலாது ஆறு நாட்கள் புடவையைத் தேடிக் கொண்டிருந்தான். பின்னொரு நாள் வெளிறிய முகத்துடன் மனைவியின் புடவையை நெருப்பிட்டு எரித்து சாம்பலாக்கிக் குடித்தவன் நானே எனக்கூறி தெருக் கடந்து சென்றான். கடைச் சிப்பந்திகள் அறிந்திருக்கிறார்கள் – குடிகாரர்கள் எதையும் நினைவில் வைத்துக்கொள்வதேயில்லை என்பதை.

வேனல் தெரு என்பதே ஒரு கண்ணாடி கூண்டுதான் போலும். இங்கே வருபவர்கள் மதுவால் மட்டும் போதையாடுகிறார்கள் என எவராலும் தீர்க்கமாகச் சொல்ல முடியாது. விசித்திரம் ஒரு மோதிரமென இவர்கள் விரல் சுற்றிக்கொள்ள, உறக்கமற்று எதைத்தான் அழிந்துவிடக் குடிக்கிறார்கள். வாகனங்கள் ஊர்ந்து அலையும் நகர வீதியில் கூக்குரலிட்டு வெறியுடன் ஒருவன் நீட்டுகிற கத்தியின் பரப்பில் வேனல் தெரு உருக்கொண்டு விடுவதைப் பல கண்களும் அறிந்தே கடக்கின்றன. என்றாலும் நண்பர்களே, மதுக்கடைகள் மூடப்படுவதேயில்லை. மீன்கறிகளையும் மிஞ்சிய மதுவையும் குடித்துப் பெருத்த எலிகளின் கூட்டமொன்று தெருவை கருமி பூமியினுள் இழுத்துச் சென்றுவிட முயல்கின்றன. தன் தலைமயிர் நிலத்தில் வேர்விட நூற்றாண்டுகளாக ஒருவன் இத்தெரு நடுவில் வீழ்ந்து உறங்கிக் கொண்டேயிருக்கிறான். அந்த மனிதன் விடுபட்டுப் போன சீன யாத்ரீகர்களில் ஒருவன் எனச் சொன்னால் நம்புவீர்களா நீங்கள்?

காலச்சுவடு - இதழ்19,1997

கோணங்கி எனும் மாயக்கதையாளன் - எஸ்.ராமகிருஷ்ணன்


எழுத்தாளன் மண்புழுவைப் போல கிராமத்து மண்ணைத் தின்று ஊர்ந்து திரிய வேண்டும். இருட்டுக்குள் கால் பின்னப்பட்டு நிற்கும் கழுதையின் மௌனம் அவனுக்குப் புரிய வேண்டும். சிம்னி விளக்கை விபூதியால் துடைத்து சுத்தம் செய்வது போல மொழியை அவன் சுத்தம் செய்து ஒளிர வைக்க வேண்டும். அடிவானம்வரை வீழ்ந்து கிடக்கும் ஒவ்வொரு கிராமத்தையும் அவன் சுற்றிவர வேண்டும். நரித்தடத்தில் கால் பதியாதவன் ஒரு போதும் படைப்பாளியாக இருக்க முடியாது. உவர்மண் எடுக்கப் போகும் கழுதைகளோடு சேர்ந்து நாமும் நடந்து போய் வந்தால் மட்டுமே அதை உணர முடியும். கிளியாக இல்லாமல் ஒரு நாளும் மரத்தைப் பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடியாது.

இப்படியான கிளர்ச்சியூட்டும் எண்ணங்களை அடுத்தடுத்து சொல்லிக் கொண்டும் இடைவிடாமல் ஊர் சுற்றிக்கொண்டுமிருந்த எழுத்தாளர் கோணங்கியை என் பள்ளியிறுதி வகுப்பின் விடுமுறையில் முதல் முறையாக சாத்தூரில் இருந்த என் தாத்தாவின் வீட்டில் சந்தித்தேன். அவர் என் அண்ணனின் நண்பர். என் மாமாவோடு ஒன்றாக கூட்டுறவு பயிற்சி படித்தவர்.

கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து முழுநேரப் பணியாளர் ஆகி மக்களுக்கு சேவை செய்வது என்ற பெருங் கனவுடன் கோணங்கியும் என் அண்ணனும் அடிக்கடி சந்தித்துப் பேசிக் கொள்வார்கள்.  அப்போது  கோணங்கியின் பெயர் இளங்கோ. கோணங்கி என்ற அவரது புனைபெயர்  மிக வசீகரமாயிருந்தது. அதைச் சொல்லும் போதே பலர் கிளர்ச்சியடைவதைக் கண்டிருக்கிறேன்.

கோவில்பட்டி அருகில் உள்ள கிராம கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். என் அண்ணன் கல்லூரிப் படிப்பை  முடித்திருந்தார்.  இருவருக்கும்  மக்கள் சேவையின் மீது மிகுந்த அக்கறையும் பிடிப்பும் இருந்தது. அதற்காக கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவ புத்தகங்கள் மற்றும் ஜார்ஜ் தாம்சன், மார்க்சிய அழகியல், ஜீலியஸ் பூசிக் என்று பேசிக் கொண்டிருப்பார்கள்.

வியப்போடு அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன். புத்தக வாசிப்பில் ஊறிக்கிடந்த எனக்கு அவர்களின் உரையாடலில் கலந்து கொள்ள விருப்பமாக இருக்கும். ஆனாலும் விலகியே இருந்தேன். அந்த நாட்களில் கோணங்கிக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் ஜோதி விநாயகம் மற்றும் தோழர். எஸ்.ஏ.பெருமாள். இருவரையும் அடிக்கடி சந்தித்து தன் திட்டங்களைப் பற்றி ஆலோசனை செய்து கொண்டிருப்பார். இருவரும் கோணங்கி மீது அளவற்ற அக்கறை கொண்டவர்கள்.

தோழர் எஸ்.ஏ.பெருமாள். ஆங்கில இலக்கியம் படித்தவர் என்பதால்  தீவிர இலக்கியம் அறிந்தவர். தேடித் தேடி உலக இலக்கியங்களை வாசித்தவர். தேர்ந்த பேச்சாளர். கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்தார். கோணங்கி அவரைச் சந்திக்க செல்லும்போது கூடவே இருப்பேன். இரவெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள்.

ருஷ்யக் கதைகள், அரசியல், வரலாறு எனப் பேச்சு நீளும். அந்தப் பேச்சின் ஆரம்பத்தில் உற்சாகமாகக் கலந்து கொள்ளத் துவங்கிய கோணங்கி சில நிமிசங்களிலே தான் கிராமப் புறங்களில் கண்ட மனிதர்கள் நிகழ்வுகளைப் பற்றி விவரிக்கத் துவங்கிவிடுவார். பேச்சு அப்படியே திசைமாற்றம் கொண்டுவிடும். கோணங்கியின் பேச்சு மிக சுவாரஸ்யமாக இருக்கும். அவர் தன் சொல்லின் வழியே அந்த மனிதர்களைக்  கண்முன்னே உயிருடன் நடமாட விடுவார்.

ஜிப்ஸிகளைப் போல தேர்ந்த நாடோடிக் கதைசொல்லி கோணங்கி என்று எஸ்ஏபெருமாள் மனதாரப் புகழ்வார். ஆனாலும் கோணங்கி தான் ஒரு எழுத்தாளர் ஆக வேண்டும் என்பதைவிட மக்கள் சேவையே முக்கியம் என்று உறுதியாகச் சொல்வார்.

இதற்காகவே சென்னை செல்வது என்று முடிவு செய்து சிலமாதங்கள் சென்னையில் கட்சி ஊழியராகப் பணியாற்றிவிட்டு ஒரு நாள் இரவு கோணங்கி என் அண்ணனைப் பார்க்கத் திரும்பி வந்திருந்தார். தோளில் ஒரு ஜோல்னா பை. அது நிறைய புத்தகங்கள். ஜிப்பா. பேண்ட் அணிந்திருந்தார். 

சென்னை எப்படியிருக்கிறது என்று அண்ணன் ஆர்வமாகக் கேட்டபோது, சென்னைக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் பஸ் வந்து கொண்டிருக்கிறது. எல்லா பஸ் பயணிகளும் நகரின் வெளியே நின்று ஒண்ணுக்கு அடிக்கிறார்கள். ஒரு நாள் யாராவது ஒரு ஆள் ஒண்ணுக்கு அடிக்கும் போது ஒரு சொட்டு மூத்திரம் தரையில் பட்டதும் நகரம் மூழ்கிவிடப்போகிறது பார். சென்னை ஒரு மாபெரும் கழிப்பறை போலிருக்கிறது. அந்த ஊரில் ஆந்தைகளே கிடையாது. காய்ந்து போன நத்தைக் கூடுகள் போலத்தான் வீடுகள் இருக்கின்றன. மனிதர்கள் தூக்கத்திலும் ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள். சுண்ணாம்புக் காளவாசல் போல நகரம் கொதித்துக் கொண்டிருக்கிறது. அங்கே போகவே கூடாது என்றார்.

அவர் சொன்னவிதம் யாவருக்கும் சிரிப்பை வரவழைத்தது. சென்னையைப் பற்றிய இது போன்ற விவரணை எதையும் நான் முன்கேட்டதேயில்லை. ஆனால் கோணங்கி அராபியக் கதைகளில் வரும் பாக்தாத்தைப் பற்றிச் சொல்வது போல சென்னையைப் பற்றிய வியப்பான கதைகளைச் சொல்லிக் கொண்டேயிருந்தார்.
சில வாரத்தின் பிறகு ஒரு நாள் வீட்டிற்கு வந்த கோணங்கி சிகரம் இதழில் தனது முதல்சிறுகதை இருட்டு வெளியாகி உள்ளது என்று அண்ணனிடம் படிக்கத் தந்தார். இரவெல்லாம் அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் அந்தக் கதையைப் படித்து பார்த்தேன். அற்புதமான சிறுகதை அது. நன்றாக இருக்கிறது என்று சொன்னதும் தான் மாயாண்டி கொத்தனின் ரசமட்டம் என்ற ஒரு கதையை எழுதத் திட்டம் வைத்திருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அதைக் கேட்கும் போது சுவாரஸ்யமாக இருந்தது.
அதன் பிறகு ஒருநாள் மாலையில் சாத்தூரில் உள்ள ஆற்றுப்பாலத்தின் அருகில் நான் நின்று கொண்டிருந்தபோது அருகாமை வீதியில் இருந்து கோணங்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். என்னைப் பார்த்த மாத்திரத்தில் சிரித்தபடியே கையில் ஒரு வெள்ளரிப்பிஞ்சைத் தந்து இந்த வெள்ளரிப்பிஞ்சிற்குள் கொல்ல பட்டி கிராமத்து வெயில் இருக்கிறது. தின்று பார். வெயிலின் ருசி தெரியும் என்றார்.

நானும் அவரும் சாலையில் நின்றபடியே வெள்ளரிப்பிஞ்சைத் தின்றோம். ஒரு டவுன்பஸ் வந்து கொண்டிருந்தது. வா ஏறு என்று சொல்லி அதில் ஏறச்சொன்னார். அதில் ஏறி சாத்தூருக்கு ரெண்டு டிக்கெட் என்று கேட்டார். கண்டக்டர் இதுதானே சாத்தூர் என்றதும் இல்லை இப்படியே சுற்றி சர்ச் பின்னாடி போய் பேருந்து நிலையம் வரை செல்லும் தானே. அதற்கு ஒரு டிக்கெட்  கொடுங்கள் என்றார். அந்தப் பேருந்தில் சாத்தூரில் ஏறி சாத்தூருக்கு டிக்கெட் கேட்ட முதல்ஆட்கள் நாங்கள் தான்.

அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். சில நிமிசங்களில் பேருந்து நிலையம் வந்தது. அவர் எப்படியிருந்தது பார்த்தியா இப்படி வித்யாசமான பயணம் போகவேண்டும் என்றார். அவரது செய்கை  காரணமில்லாமலே எனக்குப் பிடித்திருந்தது.

அதன்பிறகு அவரைப் பார்ப்பதற்காகக் கோவில்பட்டிக்குச் சென்றேன்.  கோணங்கி வீடு  ரயில்வே லைனை ஒட்டிய  இந்திரா  நகரிலிருந்தது. என்னைப்  பார்த்தவுடன்  நீண்ட நாள் பழகியவர் போல அன்போடு கூடவே வைத்துக் கொண்டார்.

மறுநாள் அவர் வேலை செய்யும் கீழஈரால் கிராமக் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்குச் சென்றோம். நிறைய வேம்பு அடர்ந்த கிராமம். சிறிய அலுவலகம். அது ஒரு நபர் அலுவலகம் போலும். அதன் வெளியே ஊழியர் இன்று அவசர அலுவல் காரணமாகத் தலைமை அலுவலகம் சென்றிருக்கிறார்  என்ற  பலகை  தொங்கிக் கொண்டிருந்தது. அது எப்பவும் தொங்கிக் கொண்டே தான் இருக்கும். நான் வந்தால் மட்டுமே உள்ளே எடுத்து வைப்பேன் என்றபடியே அந்தப் பல கையை உள்ளே எடுத்து வைத்து விட்டு அருகாமை வீடு ஒன்றிற்குப் போய் ஒரு செம்பில் தண்ணீர் வாங்கி வந்தார்.

தன்னுடைய வேலை கூட்டுறவுக் கடன்களை விவசாயிகளிடம் வசூல் செய்வது என்று சொல்லிவிட்டு என்னையும் அழைத்துக் கொண்டு ஒரு விவசாயி  வீட்டிற்குப்  போனார். அங்கே என்னைக் காட்டி, தலைமை அலுவலகத்தில் இருந்து வசூல் பண்ண வந்திருக்கிறார். ஆகவே வட்டியாவது கட்டிவிடுங்கள் என்று மிரட்டும் குரலில் சொன்னார்.

விவசாயியோ தன் கையில் பணமில்லை என்று சொல்லி, தவணை கொடுக்கும்படியாகச் சொன்னார். அப்போ கோழி அடிச்சி சாப்பாடாவது போடுங்கள் என்றார். அடுத்த சில மணிநேரங்களில் கோழிக் குழம்புடன் சாப்பாடு தயார் ஆனது. எனக்கோ சிரிப்பாக வந்தது. சாப்பிட்டுவிட்டு கயிற்றுக் கட்டிலைப் போட்டு உறங்கினோம். மாலை அலுவலகத்தைப் பூட்டிவிட்டு, கோவில்பட்டிக்கு டவுன் பஸ்ஸில் கிளம்பினோம்.

கோணங்கியின் ஆளுமை வியப் பூட்டக்கூடியது. கிராமத்து நினைவுகள் நிரம்பிய மனதும், தீராத புத்தக வேட்கையும் இலக்கற்ற பயணமும் புதிதாக எதையாவது கண்டு அடைய வேண்டும் என்ற ஆதங்கமும் நிரம்பிய படைப்பாளி அவர். தன்னைச் சந்திக்க வருபவர்களுடன் சில  நிமிசங்களில் தன்னைக் கரைத்துக் கொண்டு விடுபவர். நண்பர்களுக்காக எதையும் செய்யக் கூடியவர். அவரது சட்டை பேனா பை என்று எதை எவர் கேட்டாலும் உடனே தந்துவிடுவார். பருந்தைப் போல அவரும் ஒரு இடத்தில் நில்லாமல் வட்டமடித்துக் கொண்டேயிருப்பார்.

பழைய இசைத்தட்டுகள், புத்தகங்கள்,  கலைப்பொருட்கள்,  புகைப்படங்கள், மைக்கூடு, பேனா, ஹேண்ட் மேட் காகிதங்கள், குதிரையின் கால் எலும்புகள், கூழாங்கற்கள், விதவிதமான ஜோல்னா பைகள் என்று அவர் விசித்திரமான எதைஎதையோ சேகரித்து வந்தபடி இருப்பார்.

அவருக்கு அலுவலக வேலை செய்வதில் விருப்பமேயில்லை. நாடோடியாக அலைவதில்தான் மனம் ஒன்றியிருந்தது. சில வருசங்களில் அந்த வேலையை  விட்டு விலகியும்  விட்டார்.

கோணங்கி வீட்டில் நிறைய புத்தகங்கள் இருந்தன. எழுத்தாளர் தமிழ் செல்வன் அவரது அண்ணன் என்பதால் அவர் தீபம், கணையாழி, தாமரை என்று இலக்கிய இதழ்களும் சமகால இலக்கிய புத்தகங்களையும் சேகரித்து வைத்திருந்தார்.

கோணங்கியும் தன்பங்கிற்கு தேடித்தேடி புத்தகங்கள் சேகரித்து வருவதாகச் சொன்னார். அப்படிச் சேகரிக்கப்பட்ட புத்தகங்களை தான் யாருக்கும் காட்டுவதில்லை. ரகசியமாக பதுக்கி வைத்திருக்கிறேன் என்று சொல்லி என்னிடம் ஒரு புத்தகத்தைக் காட்டி இது தான் ஆரோக்கி நிகேதனம். மிகச் சிறப்பான வங்காள நாவல் என்றார். 

நான் படிப்பதற்காகச் சில புத்தகங்கள் வேண்டும் என்று கேட்டேன். இரு  எடுத்து  வருகிறேன்  என்று வெளியே காத்திருக்க வைத்துவிட்டு அவர் வீட்டின்  உள் அறையில் இருந்த புத்தகச் சுரங்கத்தில் இருந்து மூன்று புத்தகங்களைக் கொண்டுவந்து தந்தார். ஒன்று பிளக்கனோவ் எழுதியது. மற்றது எலியா ஹிரன்பெக் நூல். மூன்றாவது சோசலிச யதார்த்தவாதம்.

கோணங்கி கொடுத்த புத்தகங்கள் ஆயிற்றே என்று அதை மண்டையை உடைத்துக் கொண்டு படித்தேன். ஒரு வரி கூட உள்ளே போகமுடியவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு நாங்கள் குடியிருந்த மல்லாங் கிணறுக்கு கோணங்கி வந்து சேர்ந்தார். இந்தப் புத்தகங்களைப் படிக்கவே முடியவில்லை என்று சொல்லியதும் அவர் சிரித்துவிட்டு நானும் படிச்சதில்லை. யாராவது படிக்கட்டு மேனு வாங்கி வச்சிருக்கேன் என்றார்.
நாங்கள் இருவரும் மல்லாங்கிணற்றின் புறவெளியில் சுற்றியலைந்தோம். வறண்ட கிராமம் அவருக்கு ரொம்பவும் பிடித்திருக்கக்கூடும். அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். உடைந்த பாலத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது ஆந்தை அருகில் வந்து எங்களைப் பார்த்தபடியே இருந்தது. ஆந்தை பற்றி வியப்போடு பேசினார்.

அவருக்கும் எனக்குமான வயது படிப்பு போன்ற இடைவெளிகளைத் தாண்டி மிகுந்த நெருக்கம் உருவானது. நினைத்த நேரத்தில் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றினோம். கோணங்கியின் அம்மாவும் அக்காவும் போல அன்பைத் தந்தவர்கள் உலகில் இல்லை. எந்த நேரம் வந்தாலும் எங்களுக்குச் சாப்பாடு தந்து சிரித்தபடியே எங்கய்யா போயி ஊரைச் சுத்திவிட்டு வருகிறீர்கள் என்று கேட்பார்கள்.

கோணங்கி வீடுதான் என்னை வளர்த்தது. கோணங்கியின் அப்பாவும் எழுத்தாளர் என்பதால் அவர் எங்களை மிகுந்த அக்கறையுடன் பேசி என்ன எழுதிக் கொண்டிருக்கிறோம் என்று கேட்பார். தனது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார்.

கோணங்கியின் தாத்தா மதுரகவி பாஸ்கர தாஸ். அப்பா எழுத்தாளர் சண்முகம். அண்ணன் எழுத்தாளர் தமிழ்செல்வன். தம்பி நாடக இயக்குனர் முருகபூபதி, இப்படிக் குடும்பமே இலக்கியப் பங்களிப்பு நிரம்பியது. இந்தச் சூழல் என்னை மட்டுமில்லை. இன்று வரை பலரையும் படைப்பாளியாக்கியிருக்கிறது. அடர்ந்த ஆலவிருட்சம் போல அவர்கள் வீடு யாவருக்கும் புகலிடமாக இருந்தது.
 
நான் மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருந்த போது என் விடுதி அறையில் கோணங்கி தங்கிக் கொண்டு பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளா இருப்பார். நூலகத்திற்குச் சென்று படித்துவருவார். இரண்டு நாட்களில் அது அலுத்துப் போய்விடும். இருவரும் ஊர்சுற்றக் கிளம்புவோம்.
இருவரிடமும் போதுமான பணம் இருக்காது. ஆனால் அதைப்பற்றிய கவலையின்றிப் பயணம் செய்வோம். எந்தப் பயணமும் முன்திட்டமிட்டதில்லை. எந்த ஊர் பஸ் முதலில் வருகிறதோ அதில் ஏறிக்கொள்வோம்.
ஒருமுறை பேருந்தில் செல்லும்போது வழியில் மயில் தனியே அலைந்து கொண்டிருப்பதைக் கண்டு அடுத்த நிறுத்தத்தில் இறங்கி மயிலின் பின்னாலே சென்றோம். மயில் ஆடுவதை வேடிக்கை பார்த்தோம். பிறகு வெட்ட வெளியில் உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பயணம் எங்களுக்கு நிறைய கற்றுத் தந்தது.
குறிப்பாக மனிதர்களின் மீதான நம்பிக்கையையும் அன்பையும் பயணமே வளர்த்து எடுத்தது. முன்பின் அறியாத  மனிதர்களோடு  உறவு கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் அதுவே வழிவகுத்தது.

அதே நேரம் பயணம் எப்போதும் சந்தோஷம் தருவதல்ல. அது தந்த அவமானங்கள், புறக்கணிப்புகள், வெறுப்பு யாவும் கசப்பாக மனதின் ஒருபக்கம் மரப்பிசின் போல ஒட்டிக் கொண்டும் இருக்கிறது.

ஒரு இரவுப் பயணத்தில் வேலூர் அருகே பேருந்து நின்று போனது. மாற்றுப் பேருந்து வரும்வரை அங்கே பேருந்து நின்றது. நானும் கோணங்கியும் யாருமற்று நீண்டு கிடந்த நெடுஞ்சாலையில் படுத்துக் கொண்டோம். எங்களைப் பார்த்து மற்றப் பயணிகள் இறங்கி  வந்து  சாலையில் படுத்துக் கொண்டார்கள். தலைக்கு மேலாக நட்சத்திரம்.  முடிவற்ற ஆகாசம். சீரான காற்று. அந்த இரவு அற்புதமாக இருந்தது.

கோணங்கி எதற்காக நாம் இப்படி அலைகிறோம் என்று கேட்டார். நான் உரத்துச் சொன்னேன்:
“நாம் சனி ஞாயிறு என்று விடுமுறை நாட்களில் கதை எழுதுபவர்கள் அல்ல. தேடி அலைந்து நிலமெல்லாம் சுற்றிக் கதைசொல்பவர்கள். தமிழ்க் கதையுலகினை உலகம் அறிய செய்ய முயற்சிப்பவர்கள். நாடோடிக் கலைஞர்கள்.”

அதைக் கேட்டதும் உற்சாகத்துடன்  எழுந்து  உட்கார்ந்து  கொண்டார். விடியும் வரை இருவரும் கதைகள் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். பைத்திய மனநிலை அது. ஆனால் அதை விரும்பியே நாங்கள் பெற்று வந்தோம்.

கோணங்கிக்கு ரயில் பயணம் மிகவும் பிடித்தமானது. எங்கே கிளம்பினாலும் ரயிலில் போகலாம் என்பார். ரயிலில் அவர் உட்கார்ந்து பயணம் செய்யமாட்டார். ரயிலின் கதவைப் பிடித்தபடியேநின்று கொண்டிருப்பார். கடந்து செல்லும் காட்சிகளின் மீது அத்தனை ஆர்வம். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இறங்கி, கீழே போய் நின்று கொள்வார்.

ஒரு முறை சென்னை செல்வதற்காக இருவரும் வைகை ரயிலில் சென்று கொண்டிருந்தோம். விழுப்புரம் ரயில்நிலையத்தில் வண்டி நின்றது. இறங்கி, தண்ணீர் குடித்துவருவதாகச் சென்றார். ரயில் புறப்படும்வரை வரவேயில்லை. ரயில் கிளம்பி விட்டது. என்னவானார் என்று புரியாமல் திகைத்துப் போனேன். அவர் அந்த ரயிலில் வரவேயில்லை. எங்கே போயிருப்பார் என்று புரியாமல் சென்னையில் சுற்றியலைந்தேன்.
நாலு நாட்கள் பின்பு சென்னையில் ஒரு நண்பர் அறையில் அவரை திரும்ப சந்தித்தேன். எங்கே போனீர்கள் என்றதும் எதிரே வந்த கடலூர் பாசஞ்சர் ரயில் காலியாக இருந்தது. ஆகவே அதில் ஏறிப் போய்விட்டதாகச் சொல்லிச் சிரித்தார். அன்றிரவே நாங்கள் இருவரும் மறுபடி ஒரு திட்டம் போட்டு அடுத்த பயணம் கிளம்பினோம்.

கோணங்கியின் மதினிமார்கள் கதை சிறுகதைத் தொகுதி தமிழின் சிறந்த கதைதொகுதிகளில் ஒன்று. அதில் உள்ள கதைகள் வாழ்வின் ஈரம் நிரம்பியவை. கதை சொல்லும் முறையில் அவர் அற்புதங்கள் நிகழ்த்தியிருப்பார். குறிப்பாக கருப்பு ரயில், கழுதைவியாபாரிகள், மாயாண்டி கொத்தனின் ரசமட்டம் போன்றவை மிகச் சிறப்பான சிறுகதைகள்.

புதுமைப்பித்தனிடம் காணப்படும் நையாண்டி நிறைந்த எழுத்து கோணங்கியிடம் உண்டு. அதுபோலவே கு.அழகிரிசாமியைப் போல கிராமத்து மனிதர்களை உயிரோட்டமாக வார்த்தைகளில் உருவாக்க கோணங்கியால் முடிந்தது. ருஷ்ய இலக்கியம் அவரை ஆழமாக பாதித்திருந்தது. ஆகவே அந்த எழுத்தைப்போல கதாபாத்திரங்களின் தனிமையை, மனவோட்டத்தைத் தன் எழுத்தில் கொண்டு வந்தார் கோணங்கி

இந்தக் கதைகளுக்கு இலக்கியச் சூழலில் மிகுந்த வரவேற்புக் கிடைத்தது. அவரது கொல்லனின் ஆறுபெண் மக்கள் சிறுகதைத் தொகுதியில் உள்ள கைத்தடி கேட்ட நூறு கேள்விகள் தனித்துவமான குறுநாவலாகும். விவசாயக் கடனால் தன் வாழ்வு அழிந்து போன விவசாயி தோளில் குரங்குடன் பிழைக்க வழியில்லாமல் மதுரை டவுன் ஹால் ரோட்டில் அலைவதைப் பற்றிய கதையது. அப்படியொரு விவசாயியை நாங்கள் நேரிலே பார்த்தோம். அது ஆழ்ந்த மனவலி தருவதாயிருந்தது. தன் படைப்பின் வழியே அந்த வலியை வாசகன் உணரும் படியாகச் செய்திருந்தார் கோணங்கி.

தமிழ்நாட்டில் அதிக நண்பர்கள் உள்ள ஒரே எழுத்தாளர் கோணங்கி என்று சொல்வார்கள். அது உண்மை என்பதை நான் அறிந்திருக்கிறேன். வயது வித்தியாசம் பாராமல் பழகக்கூடியவர். அதுபோலவே தான் சந்திக்கச் செல்லும் நபர்களின் வீட்டோடு சிலமணி நேரத்தில் ஒன்றிப் போய்விடக்கூடியவர். இதற்காகவே  அவர் வருகையை எதிர்பார்க்க ஆரம்பிப்பார்கள்.

அவரது கற்பனையாற்றல் இயல்பாகவே மிகையுணர்வு கொண்டது. ஆகவே அது முடிவற்ற படிமங்களும் உருவகங்களுமாகத் தன்னை வெளிப்படுத்தக் கூடியது. ஆழ்ந்த கவித்துவ நிலைகளை அவரது கதைகளில் காணமுடியும். உரைநடையில் கவித்துவமான தளங்களை உருவாக்கியதில் கோணங்கி ஒரு முன்னோடிக் கலைஞன்.

அதே நேரம் வெகுஜன ஊடகங்களில் தன் படைப்புகள் வெளியாகக்கூடாது என்பதில் அவர் எப்போதுமே கூடுதல் கவனம் கொண்டிருந்தார். ஊடகப் பரபரப்பிற்கு வெளியில் தனித்து இயங்கி தன் அடையாளத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் என்றைக்கும் உள்ளது.

கல்குதிரை என்ற சிற்றிதழை கோணங்கி கொண்டு வந்த போது அதற்காக நானும் அவரும் ஊர் ஊராகச் சென்று படைப்புகள் மொழியாக்கங்கள் பெற்று வந்தோம். குறிப்பாக தஸ்தாயெவ்ஸ்கிக்காக சிறப்பு இதழ் ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, தேடித்தேடி படைப்புகள் சேகரம் செய்தோம்.

வெண்ணிற இரவுகள் குறித்த கட்டுரை ஒன்றிற்காக திருச்சியில் பேராசிரியர் ஆல்பர்ட் வீட்டிற்கு ஒருநாள் விடிகாலை நாலு மணிக்குப் போய், கதவைத் தட்டினோம். பின்னிரவின் இருள் படிந்த வீதி. மெலிதான மஞ்சள் வெளிச்சம் கதவின் பின்னால் கசிந்தது. கதவைத் திறந்து ஆல்பர்ட் வெளியே வந்து சிரித்தார்.

நாங்கள் தஸ்தாயெவ்ஸ்கி இதழுக்கான மேட்டர் என்றதும் வாருங்கள் என்று உள்ளே அழைத்துக் கொண்டு போனார். இரவெல்லாம் விழித்து தான் அதை எழுதிக் கொண்டிருப்பதாகவும் இன்னும் இரண்டு மணி நேரம் தந்தால் எழுதி முடித்துவிடுவதாகவும் சொன்னார். நாங்கள் அவரது உழைப்பைக்  கண்டு வியந்தபடியே வெண்ணிற இரவுகள் பற்றி அவர் எழுதியிருந்த கட்டுரையின் முதல் இரு பக்கங்களை வாசித்தோம். மிக நுட்பமாக தஸ்தாயெவ்ஸ்கியை அணுகியிருந்தார்.

அவருக்கு இந்த விடிகாலையில் இலக்கிய வேட்கை கொண்டு வந்திருக்கிறார்களே என்று எங்கள் மீது ஆச்சரியம். அவர் எழுதி முடிக்கட்டும் என்று மறுநாள் வருவதாகக் கிளம்பிப் புதுக்கோட்டைக்குச் சென்றோம். நாங்கள் தேடிச்சென்ற கந்தர்வன் ஊரில் இல்லை. எங்கே தங்குவது என்று தெரியவில்லை. வழியில்லாமல் அன்றிரவு கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் ஒன்றின் வெளியே போஸ்டர்களை எடுத்துப் போட்டுப்படுத்து உறங்கி விடிகாலையில் அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்தோம். கையில் காசில்லாமலே ஊர் சுற்ற முடியும் என்ற நம்பிக்கை கோணங்கியிடமிருந்தே நான் பெற்றேன். பசி தூக்கம் போன்றவை பெரிய பிரச்சினைகள் இல்லை என்பதை அவரே கற்றுத் தந்தார்.

சேர்ந்தே பயணம் செய்த போதும் இருவருக்குள்ளும் எந்த நேரமும் பிரிந்து விடுவோம் என்ற மனநிலை இருந்து கொண்டேயிருக்கும். ஒரு  திருமண வீட்டிற்காக இருவரும் இரவுப் பேருந்தில் திருவண்ணாமலை பயணம் மேற்கொண்டோம். வழியில் பேருந்துப் பயணத்தில் மௌனி பற்றிய பேச்சு வந்தது. நான் சில வரிகளைச் சுட்டிக்காட்டி இதற்கெல்லாம் மௌனியைக் கொண்டாட முடியாது என்றேன். அது கோணங்கிக்குப் பிடிக்கவில்லை என்பது தெரிந்தது.

அடுத்த பேருந்து நிறுத்தத்தில் அவர் இறங்கி தான் சென்னை செல்வதாகக் கிளம்பினார். நான் மதுரை போவதாக வேறு பேருந்தில் ஏறினேன். அந்த இடத்தில் இருவரும் பிரிந்துவிட்டோம்.

கோணங்கியோடு சண்டை போட்டதால் எதற்காக கல்யாண வீட்டிற்குப் போகாமல் இருக்க வேண்டும் என்று நான் தனியே கல்யாண வீட்டினைத் தேடிச் சென்றேன். கல்யாண வீட்டின் வாசலில் கிடந்த நாற்காலியில் அமர்ந்தபடியே தேநீர் குடித்துக் கொண்டிருந்தார் கோணங்கி.  என்னைப் பார்த்தவுடன் சிரித்தபடியே உட்காரச் சொன்னார். அவ்வளவு தான் கோபம். மறுபடி  ஒன்றுசேர்ந்து மறுபயணம் என்று சுற்றித் திரிந்தோம்.
இப்படி உறவும் பிரிவுமாக அவருடன் பதினைந்து ஆண்டுக்காலம் சுற்றியிருக்கிறேன். கோணங்கியின் எழுத்து மெல்ல மாறிக்கொண்டிருப்பதை அறியத் துவங்கினேன் பட்டு பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் துவங்கி பாழி, பிதுரா வரையான அவரது எழுத்துகளின் அதீதப் புனை கதையாடல் குறித்து அவரோடு நிறைய விவாதம் செய்திருக்கிறேன்.

அவர் மரபான கதை சொல்லும் முறைக்கு மாற்றாக புதிய கதை சொல்லும் முறையை உருவாக்குகிறார். அது புரியவில்லை என்று தீவிரமாக எதிர்வினை கொள்ளப்படுகிறது. புரியவில்லை என்பதைத் தாண்டி என்ன சொல்ல முயலுகிறது என்று ஆழ்ந்து வாசிக்க முயன்றால் கோணங்கி எவ்வளவு தளங்களை ஒன்றிணைக்கிறார் என்பது புரியக்கூடும்.

சரித்திரம், இசை, தொன்மம், ஓவியம், நுண்கலைகள் பௌத்தம் சமணம், கலோனியல் குறிப்புகள். செவ்வியல் இலக்கியம், என்று அவரது புனைவுகள் பல்தளங்களில் இயங்கக் கூடியது. சிதறுண்ட மனதின் வெளிப்பாடாகவே அவரது கதைகள் உள்ளன. சந்நதம் கொண்ட புராதனக் கதை சொல்லி அவர்.
நவீன ஓவியங்களின் மீது அதிக ஈடுபாடு அவருக்கு உண்டு.  லண்டன் பயணம் மேற்கொண்ட போது அங்குள்ள ம்யூசியம்களை, கண்டதை விரிவாக அவர் பேசிய போது அது அரிய பதிவாக இருந்தது.
அவரது சமீபத்திய சிறுகதைகள் நினைவுகளை சிதறடித்து பல்வேறு சங்கேத சரடுகளால் ஒன்றிணைந்தவை. அதை ஒரு கணிதப்பின்னல் போன்றே கருத வேண்டியிருக்கிறது. கதை சொல்லும் மொழியை பெரிதும் படிமங்களாகவே மாற்றியிருக்கிறார். அது போலவே கதை என்பது குறித்த தனது புரிதல்களையும் கதை மொழியிலே தருகிறார்.

இந்தக் கதைகளை நாம் வழக்கமான கதைகள் போல திரும்பச் சொல்ல முடிவதில்லை. அதனால் பலநேரம் அதை வாசிக்க இயலாமல் போகிறோம். கோணங்கியின் மொழியும் அதில் வெளிப்படும் அற்புதப் பிரயோகங்களும் தமிழ் உலகிற்குப் புதியது. அதன்மீதுள்ள விமர்சனத்தை ஒரு பக்கம் வைத்துக் கொண்டு அந்தக் கதையாடலின் ஆழத்தை நாம் கட்டாயம் கவனம் கொள்ளவே வேண்டும்.

கல்குதிரை இதழ்களின் வழியே உலக இலக்கியம் குறித்து தமிழில் ஆழமான பதிவுகளை முன்வைத்த கோணங்கி, தன் படைப்பாற்றல் மட்டுமின்றி, தனித்து இயங்கி ஒரு இலக்கிய இயக்கம் போலவே செயல்பட்டிருக்கிறார்.

அவர் நடத்தும் இலக்கியக் கூட்டங்கள் மாறுபட்டவை. தனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றின் வெளியீட்டினை அவர் மதுரையில் இருந்து போடி வரை செல்லும் பாசஞ்சர் ரயிலில் நடத்தினார். வாசகர்கள் அனைவரும் ரயிலின் ஒரு பெட்டியில் ஒன்று சேர்ந்து பயணித்து வழி முழுவதும் இலக்கியம் பேசினோம். அதுபோலவே இன்னொரு கூட்டத்தை பாண்டவர்மலையின் உச்சியில் இரவில் நடத்தினார்.  நவீன இலக்கியம் குறித்து கிராமப்புறங்களில் கூட்டம் நடத்திய முன்னோடி எழுத்தாளர் கோணங்கியே.

நானும் அவரும் ஒன்றாக எழுத்தாளர்களைத் தேடித்தேடிச் சந்தித்தோம். இலக்கில்லாமல் பயணம் மேற்கொண்டோம். பேருந்து நிலைய கழிப்பிடங்களில் குளித்துக் கொண்டு கதர்க்கடைகளில் மாற்றுடை வாங்கி அணிந்தபடியே மாநிலம் மாநிலமாகச் சுற்றியலைந்தோம். நூலகங்களைத் தேடிச்சென்று புத்தகங்களை வாசித்தோம். திருடி வந்தோம். அறிந்தவர் அறியாதவர் என யாவர் வீட்டிலும் தங்கினோம். கால்கள் போன படியே சுற்றியலைந்தோம். அவரவர் மனப்போக்கில் எழுதினோம்.

அவரது தொடர்ந்த உந்துதலே என்னை எழுத்தாளன் ஆக்கியதில் முக்கிய பங்கு வகித்தது. என் கதைகளின் தீவிர விமர்சகர் அவர். அதே நேரம் என் எழுத்தின் மீது எப்போதுமே அக்கறை கொண்டவர். அவரது படைப்புகள் குறித்து விமர்சனம் கொண்ட போதும் அவர் கதை சொல்லும் முறையில் அதிக ஈடுபாடு கொண்டவன் நான். கவித்துமான உரைநடையை கோணங்கி போல யாராலும் எழுதமுடியாது .
சென்னைக்கு நான் இடம்மாறி வந்த பிறகு அவரோடு சேர்ந்து சுற்றுவது குறைந்து போனது. ஆனாலும் சந்தித்த நேரங்களில் இருவரும்  எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு பயணம் கிளம்பிவிடுவது இன்றும் சாத்தியமாகவே உள்ளது.

சமீபத்தில் கோணங்கியின் மொத்த சிறுகதைகள் சலூன் நாற்காலியில் சுழன்றபடி அடையாளம் வெளியீடாக வந்துள்ளது. அதைத் திரும்பப் படித்த போது கோணங்கியும் நானும் சுற்றிய நாட்களின் ஈரம் மாறாமல் அப்படியே இருப்பதை உணர முடிந்தது.

சென்னையில் நாகர்ஜுனன் வீட்டில் கழித்த நீண்ட பகலிரவுகள், திருவண்ணாமலை பவா  செல்லதுரையோடு இலக்கியம் பகிர்ந்து கொண்ட நாட்கள், நகுலன்  வீடு,  பிரமீள் சந்திப்பு, நெய்வேலி ராமலிங்கத்தின் அன்பான நட்பு,  பத்தமடையில் உள்ள  தமிழ்செல்வன் வீட்டில் ஜோதி விநாயகத்துடன் பேசிய பேச்சுகள். மதுரை லோகு பாபு சுந்தர் சுபகுண ராஜனுடன் சுற்றிய வெயிலேறிய பகல்பொழுதுகள். ஏதோ ஊர்களில் எங்களுக்கு அடைக்கலம் தந்து உணவளித்த  நண்பர்களின் வீடுகள்.  சூறைக்காற்றைப் போல நினைவுகள் சுழல்கின்றன. 
புரிகிறது புரியவில்லை என்ற தடுமாற்றங்களைத் தாண்டி கோணங்கி தனக்கெனத் தனியான கதைமொழியும் கதைசொல்லும் திறனும் கொண்டவர். அவர் கையாண்ட விஷயங்களை வேறு எவரும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. அவரது கதைகளை மொத்தமாக வாசிக்கும் போது பெரிதும் வியப்பாக இருக்கிறது. மொழியின்  தீவிர  தளங்களை  அவர்  எவ்வளவு அநாயாசமாகத் தொட்டிருக்கிறார் என்று புரிகிறது..
பிராயத்தில் துவங்கிய கோணங்கியின் நட்பு இன்றும் வலிமையுடையதாக இருக்கிறது. முகமறியாதவர்களுடன்  தன்னைப் பகிர்ந்து கொள்ளப் பேரன்பு வேண்டும். அது கோணங்கியிடம் நிறையவே இருக்கிறது. அது தான் அவரை இன்றும் இயக்கிக் கொண்டிருக்கிறது.

கோணங்கி என்ற நித்யபயணி தன் எழுத்தின் வழியிலும் இயல்பிலும் மாயக்கதையாளனாகவே இருக்கிறார். பேக்பைப்பரின் இசைகேட்டு எலிகள் பின்னால் சென்றது போன்ற ஒரு மாயம் அவரிடமிருக்கிறது. அவரது எழுத்து செவ்வியல் இசை போல புராதனமானது. எவரையும் வசீகரம் செய்யக்கூடியது. திருமணம் செய்து கொள்ளாமல் முழுநேரப் படைப்பாளியாக அவர் கொண்ட சமரசமற்ற இலக்கிய ஈடுபாடு இன்றைக்கும் கோணங்கியை நோக்கி இளம்படைப்பாளிகளை வரச்செய்தபடி உள்ளது.

இன்றும் ஏதோ நகரில் யாரோ அறியாத நபரின் தோளில் கைபோட்டபடியே கோணங்கி சென்று கொண்டிருக்கக்கூடும். இன்றோ நாளையோ அவர் உங்களைத் தேடி வந்து ஸ்நேகிக்கக் கூடும். சகமனிதன் மீது அன்பும் அக்கறையும் கொள்வதே கலையின் ஆதார நோக்கம். அதைத் தன் தினசரி நடவடிக்கையாகக் கொண்டிருப்பதே கோணங்கியின் தனிச்சிறப்பு.

*

நன்றி - உயிரோசை

அவர் பெயர் முக்கியமில்லை - எஸ்.ராமகிருஷ்ணன்


அந்த இளைஞன் துர்காவை மறுபடியும் கடந்து சென்றான். காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த அரை மணி நேரத்துக்குள் அவனை மூன்று முறை பார்த்து விட்டாள். அந்தப் பையனுக்கு 20 வயது இருக்கக்கூடும். வெளிறிய ஜீன்ஸும் டி-ஷர்ட்டும் அணிந்து இருந்தான். இடது கையில் ஒரு பித்தளைக் காப்பு.

இவனைப் போன்ற பையன்கள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ஹாம்சன் பொறியியல் கல்லூரியில் படிப்பதற்காக வீடு எடுத்துத் தங்கி இருப்பவர்கள். அவளது வீட்டுக்குப் போகிற வழியில் உள்ள பிள்ளையார் கோயிலை ஒட்டிய வீட்டில்கூட கல்லூரி மாணவர்கள் தான் தங்கியிருக்கிறார்கள். கொடிகளில் நிறையத் துணிகள் காய்வதைக் கண்டிருக்கிறாள்.

இந்தப் பையனும் அப்படி எங்காவது தங்கியிருக்கக்கூடும். இவனைப்போன்ற இளைஞர்கள் வீட்டைவிட்டு வந்த பிறகு சமைக்கக் கற்றுக்கொள்வதில் காட்டும் ஆர்வத்தை வீட்டில் இருக்கும்போது ஒருநாள்கூட ஏன் காட்டுவதே இல்லை? பெண்கள் எந்த ஊரில், எந்த வேலைக்காகப் போனாலும் தாங்களாகவே சமைத்துத்தான் சாப்பிட்டுக்கொள்ள வேண்டும். அல்லது வுமன்ஸ் ஹாஸ்டலில் போடும் சாப்பாட்டினைச் சாப்பிட வேண்டும். மெஸ்ஸில் கணக்கு வைத்துக்கொண்டோ, இரவு நேர பரோட்டாக் கடைகளைத் தேடிப் போய் சாப்பிடும் பெண்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். வேலை ஒன்று, சம்பாத்தியம் ஒன்றாக இருந்தாலும் இரண்டுவிதமான வாழ்க்கை முறைதானே இருக்கிறது.  

அந்தப் பையன் காய்கறி மார்க்கெட்டில் எந்தப் பொருளையும் பேரம் பேசி வாங்குவது இல்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது. அவன் கையில் ஒரு ஜவுளிக் கடை பை வைத்திருந்தான். காய்கறிகள் வாங்குவதில் அனுபவம் இல்லை என்பது அவன் வாங்கிவைத்திருக்கிற முற்றிய முருங்கைக் காயிலேயே தெரிந்தது. துர்கா காய்கறிகளை வாங்கி முடித்திருந்தாள். இருட்டுவதற்குள் வீட்டுக்குப் போய்விட வேண்டும். வீட்டுச் சாவி அவளிடம் இருந்தது. அலுவலகம்விட்டு ஸ்ரீதரன் வந்து காத்திருந்தால் கத்துவான். புதினா கிடைத்தால் இரவுக்குத் துவையல் அரைக்கலாம் என்று தேடி நடந்தபோது மண்பாண்டக் கடையில் தற்செயலாக அந்த உண்டியலைப் பார்த்தாள். அந்த உண்டியல் மீன் வடிவத்தில் இருந்தது. வெளிர் நீல வண்ணம் அடித்திருந்தார்கள். கண்களும் செவுளும்கூடத் துல்லியம். மீனின் வயிற்றுக்குள் காசு போட்டுவைப்பது என்பது வேடிக்கையானது இல்லையா? துர்கா அந்த உண்டியலைக் கையில் எடுத்துப் பார்த்துத் தனக்குத்தானே சிரித்துக்கொண்டாள்.

சிறு வயதில் ஒரு நாள் கோதையாச்சி சொன்ன கதையில் ஒரு மீன் வயிற்றில் 20 தங்கக் காசுகள் இருந்து, அதை ஒரு மீனவன் எடுத்துப் பணக்காரன் ஆன கதை நினைவில் வந்துபோனது. அவள் சிறுமியாக இருந்த நாட்களில் இதுபோன்ற உண்டியல்கள் எதையும் பார்த்தது இல்லை. அப்போது எல்லாம் செம்மண் நிறத்தில் உள்ள மண் உண்டியல்கள்தான் விற்பனையாகின. இப்போதுதான் எத்தனை விதமான உண்டியல்கள்.

சிறு வயதில் காசு சேர்த்துவைத்து தேர்த் திருவிழாவின்போது விதவிதமான பாசி வளையல், ரிப்பன் எல்லாம் வாங்க வேண்டும் என்று துர்கா ஆசைப்பட்டு இருக்கிறாள். எப்போதாவது காரைக்குளத்தில் இருந்து வரும் கதிரேசன் சித்தப்பா மட்டும் ஊருக்குப் போகும்போது அவளுக்கெனத் தனியே பத்தோ இருபதோ ரூபாய்களைத் தந்துவிட்டுப் போவார். மற்றபடி வீட்டுக்கு வரும் விருந்தாளிகளில் அவளுக்குக் காசு தந்தவர்கள் வெகு குறைவு. கூச்சப்பட்டுக்கொண்டு அவள் கேட்கவும் மாட்டாள்.

அவளது தம்பி சிவப்பிரகாசம் அப்படிக் கூச்சப்பட மாட்டான். காசைக் கேட்டு வாங்கிக்கொள்வான். எவ்வளவு ரூபாய் கிடைத்தாலும் சினிமா பார்ப்பது, ஹோட்டலில் போய் பூரி சாப்பிடுவது, பஜ்ஜி வாங்கித் தின்பது என்று இரண்டு நாட்களுக்குள் செலவழித்துவிடுவான். அம்மா அவனை ஓட்டைக் கை என்று திட்டுவாள். அவர்கள் வீட்டில் காசு சேர்ப்பதில் கெட்டியாக இருந்தவள் தமயந்தி மட்டுமே. அவள் துர்காவைவிட மூன்று வயது மூத்தவள். அந்த கெட்டிக்காரத்தனம்தான் இப்போது அவளை அமெரிக்காவில் வாழவைத்திருக்கிறது. சிறு வயதில் கெட்டிக்காரத்தனமாக உள்ள பலர் பெரியவர்களானதும் தோற்றுப்போய்விடுகிறார்கள். சிலருக்குத்தான் அந்தக் கெட்டித்தனம் வாழ்நாள் பூராவும் அமைந்துவிடுகிறது.

துர்கா உண்டியலின் விலையைக் கேட்டாள். மண்பானைகள் விற்பனை செய்யும் அந்தப் பெரியவர் உண்டியலைக் கையில் வாங்கிப் பார்த்துவிட்டு முப்பது ரூவா குடும்மா என்றார். விலை அதிகம் என்று யோசித்தபடியே பார்த்தாள். ''உண்டியலை வாங்கிக் குடும்மா... உன் மக சந்தோஷப்படுவா'' என்று கடைக்காரர் சொன்னதும் அவளது முகம் மாறியது. திருமணமாகி பதினோரு வருஷங்கள் கடந்த பிறகும் அவளுக்குக் குழந்தை இல்லை. அந்த வலி ஒவ்வொரு விளையாட்டுப் பொருளைப் பார்க்கும்போதும் தெறிக்கவே செய்கிறது. இதற்காகவே டி.வி-யில் குழந்தைகள் தொடர்பான விளம்பரங்கள் வருவதைக்கூடப் பார்க்க மாட்டாள். ஸ்ரீதரன் குழந்தையின்மை பற்றிப் பேசுவதைக்கூட விரும்புவது இல்லை. ஒன்றிரண்டு வருஷங்கள் இருவரும் மாறிமாறி சிகிச்சை எடுத்துக்கொண்டார்கள். ஆனாலும் கர்ப்பம் தரிக்கவே இல்லை. முடிவில் ஒரு நாள் ஸ்ரீதரன் சொன்னான்... 'துர்கா, பிள்ளை பிறக்கிறப்போ பிறக்கட்டும்... ஒருவேளை பிறக்காமலே போயிட்டா, நமக்குக் கொடுத்துவெச்சது அவ்வளவுதான்னு நினைச்சிக்கிடுவோம். இப்படி ஒவ்வொரு டாக்டர்கிட்டயாப் போயி மருந்து மாத்திரை சாப்பிட்டு மாசக்கணக்கில் காத்துக்கிட்டு இருந்து ஏமாந்துபோறது மனசுக்குக் கஷ்டமா இருக்கு. இதுல உன் தப்பு, என் தப்புனு எதுவும் இல்லை. நமக்குக் கொடுப்பினை இல்லே, அவ்வளவுதான்!’

அதைக் கேட்டு துர்கா அழுதாள். ஸ்ரீதரன் அவளைத் தேற்ற முயற்சிக்கவே இல்லை. நீண்ட அழுகைக்குப் பிறகு அவன் சொன்னதுதான் சரி என்று அவளும் ஏற்றுக்கொண்டுவிட்டாள். எப்போதாவது பின்னிரவில் உறக்கம் பிடிக்காமல் இந்த நினைவு மேலோங்கத் துவங்கிவிடும். அப்போது என்ன செய்வது என்று தெரியாமல் முகத்தைப் புதைத்துக்கொண்டு சத்தம் இல்லாமல் அழுவாள். ஸ்ரீதரனும் அப்படித்தான் இருக்கக்கூடும். ஆனால், அவளிடம் அதைக் காட்டிக்கொண்டது இல்லை.

மண்பானை விற்பவருக்கு அவளது சொந்த வலி தெரியுமா என்ன? அவள் அந்தக் கிழவரையே பார்த்துக்கொண்டு இருந்தாள். அவளது நினைப்பு சட்டெனத் தாவி மாறியது. பெண் பிள்ளைகள் மட்டும்தான் உண்டியல் வாங்க வேண்டுமா என்ன? பையன்கள் செலவழிக்கப் பிறந்தவர்கள், பெண்கள் சேமிக்கப் பிறந்தவர்கள் என்று யார் சொன்னது? இந்த உண்டியலே வேண்டாம் என்று சொல்லிவிடலாமா என்று நினைத்தாள். அவளது முகச்சுழிப்பை அறிந்துகொண்டவரைப் போல, 'இருபத்தைந்து ரூபாய் குடும்மா போதும்’ என்று உண்டியலை அவள் முன்பாக நீட்டினார். 'வேணாம் இருக்கட்டும்’ என மறுத்தபடி அவள் தனது காய்கறிக் கூடையைத் தூக்கிக்கொண்டு கடையைவிட்டு விலகி நடப்பதுபோல நகர்ந்தாள்.

கடைக்காரக் கிழவர் தனது இருக்கையைவிட்டு எழுந்து நின்று, 'ஏம்மா வேணாம்கிறே, பதினஞ்சு ரூபாய்க்குத் தர்றேன், வாங்கிக்கோ’ என்றார். அவள் வாங்க வேண்டாம் என்ற நினைப்பில், ''பத்து ரூபாய்க்குத் தருவீங்களா?'' என்று கேட்டாள். அவர் நிமிஷ நேரத் தயக்கத்துக்குப் பிறகு, 'சரி குடு’ என்று உண்டியலை ஒரு காகிதத்தில் மடிக்கத் துவங்கினார்.  

இதில் காசு சேர்த்துவைத்து என்ன செய்வது? மாசச் சம்பளம் மொத்தமாக அவளிடம்தானே இருக்கிறது. ஆனாலும் சேமிக்கிற காசுக்குத் தனி மதிப்பு இருக்கவே செய்கிறது. பத்ரிநாத்துக்கு ஒரு முறையாவது போய்வர வேண்டும். அவ்வளவு பனியை நேரில் பார்த்ததே கிடையாது. அதிகபட்சம் அவள் அறிந்த ஜில்லிடல் வீட்டு பிரிஜ்ஜில் உறைந்துபோயிருக்கிற பனிக் கட்டியைச் சுத்தம் செய்ய முயன்று கையை வைத்ததுதான்.
பத்ரிநாத்தில்தான் எவ்வளவு பனி! மலைக்குப் போர்வை போர்த்திவிட்டதுபோல. அங்கே போய் வர எவ்வளவு செலவாகும்? இந்த உண்டியல் மொத்தமாக நிரம்பினாலும் ஆயிரம் ரூபாய்கூடத் தேறாதுதானே? பின் எதற்கு இந்த உண்டியல்? ஆனால், உண்டியலைக் கையில் எடுத்த அந்த நிமிஷம் தான் ஒரு சிறுமிபோல ஆனது சந்தோஷமாகத்தான் இருந்தது. அதற்கு விலைதான் அந்தப் பத்து ரூபாய் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.

கிழவர் உண்டியலை அழகாகக் காகிதத்தால் சுற்றினார். தெரு நாய் ஒன்று சாப்பிட எதுவும் கிடைக்காமல் வாலை ஆட்டியபடியே அவள் காலடியில் இருந்த காய்கறிப் பையை நெருங்கி வந்தது. அவள் கையைக் காற்றில் சூவென வீசி நாயை விரட்டிவிட்டு, பர்ஸைத் திறந்து காசை வெளியே எடுத்துக் கிழவரிடம் கொடுத்தாள். உண்டியலைப் பத்திரமாகக் காய்கறிக் கூடைக்குள் வைப்பது எளிதானதாக இல்லை. இதற்காக அவள் வாங்கியிருந்த புடலங்காய்களையும் தேங்காயையும் வெளியே எடுத்துவைத்தாள்.

அப்போது மார்க்கெட்டின் மேற்கு வாசலில் இருந்து ஒருவன் தலைதெறிக்க ஓடி வருவது தெரிந்தது. அவன் ஓங்காரமான குரலில் அலறியபடியே ஓடிவந்தான். அவனைத் துரத்திக்கொண்டு நாலைந்து பேர் ஓடி வந்தார்கள். கிழவர் கடையைவிட்டு எக்கி வெளியே பார்த்துவிட்டு பீதியான முகத்துடன், 'ஓரமாப் போய் நில்லும்மா’ என்று சொல்வதற்குள் ஓடிவந்தவன் வாழை மட்டை சறுக்கி, வெங்காயக் கூடையின் முன்பாக விழுந்தான். துரத்தி வந்தவர்கள் விழுந்துகிடந்த மனிதனைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள்.
துர்கா தன் வாழ்வில் முதன்முறையாக ஒரு மனிதனை ஐந்து பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டுவதை அப்போதுதான் பார்த்தாள். என்ன கோரம் இது? விழுந்துகிடந்தவன் எழுந்து கொள்வதற்காக திமிறித் தவித்தான். அவனது குரல்வளையில் ஒருவன் காலை வைத்து அழுத்த, மற்றவர்கள் அவனது கழுத்தில், அடிவயிற்றில் இடுப்பில் என அரிவாளால் மாறி மாறி வெட்டினர்.

மரண ஓலமும் ரத்தம் ஒழுகத் துடிக்கும் உடலுமாக அந்த மனிதனை அப்படியே போட்டு விட்டு வெட்டியவர்கள் வெளியேறிப் போனார்கள். துர்காவுக்குப் படபடப்பாக வந்தது. தான் ஒரு கொலையைப் பார்த்திருக்கிறோம். ஒரு மனிதன் துடிதுடித்துச் சாவதைக் கண் முன்னே பார்த்திருக்கிறோம். என்ன அவலம் இது? எதற்காகக் கொன்றார்கள்?
துர்காவின் தொண்டையை யாரோ இறுக்கிப் பிடித்து மூச்சு முட்டச்செய்ததுபோல் இருந்தது. அவள் கைகள் நடுங்கத் துவங்கின. அடிவயிற்றினைக் கைகொண்டு பிசைவதுபோல இருந்தது. அங்கிருந்து ஓடிவிட வேண்டும் என மனது பதைபதைக்கத் துவங்கியது.

கடையில் இருந்த கிழவரைக் கூடக் காணவில்லை. அருகில் இருந்த தேங்காய்க் கடை, இலைக் கடை, இஞ்சி பூண்டு விற்கும் கடை ஒன்றில்கூட ஆட்களைக் காணோம். அவள் ஏன்தான் இன்னமும் அங்கேயே நிற்கிறோம் என்ற குழப்பத்துடன் தன் காலடியில் விழுந்துகிடந்த புடலங்காயைப் பார்த்தாள். அதைக் குனிந்து எடுத்துப் பையில் வைப்பதற்குக்கூட அவளிடம் தைரியம் இல்லை. ஓரக்கண்ணால் செத்துக்கிடந்தவனைப் பார்த்தாள். அந்த மனிதனுக்கு 30 வயது இருக்கக்கூடும். கறுப்பு நிற பேன்ட்டும் ஊதா நிறக் கோடுகள் போட்ட முழுக்கைச் சட்டையும் அணிந்திருந்தான். கால்கள் திருகி, முகம் ஒரு பக்கம் புதைந்துகிடந்தது.
யார் அவன், எதற்காக அவனைக் கொன்றார்கள். அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்படியாவது பாதுகாப்பாக வீட்டுக்குப் போய்விட வேண்டும் என்ற பயம் அவளுக்குள் நிரம்பத் துவங்கியது. ஒவ்வொரு நாளும் காலையில் ஸ்ரீதரன் அலுவலகத்துக்குக் கிளம்பிப் போன பிறகு, துர்கா காய்கறி வாங்க வருவாள். அப்படி வாங்கி முடித்த பிறகு, தெற்கு வாசல் வழியாக வெளியேறி நடந்து மீரான் பழரசக் கடையில் போய் ரோஸ் மில்க் குடித்துவிட்டு, வெயிலேற நடந்து காந்தி நகரில் உள்ள தனது வீட்டுக்குப் போய்ச் சேருவாள். அதற்கு எப்படியும் 20 நிமிடங்கள் ஆகும்.

இன்றைக்கு ஏன் மாலை நேரம் மார்க்கெட்டுக்கு வந்தோம் என்று தன் மீதே ஆத்திரமாக வந்தது. அவள் பதற்றத்துடன் தனது காய்கறிக் கூடையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள். அப்போது சங்கரன்செட்டியார் சந்துக்குள் இருந்து நாற்பது ஐம்பது பேர் கையில் அருவாள் கட்டைகளுடன் மார்க்கெட்டினைச் சூறையாடிய படியே வருவது தெரிந்தது. வந்தவர்கள் 'ஓடு... ஓடு...’ என எதிர்ப்பட்டவர்களை வாழைத்தண்டால் அடித்து விரட்டினார்கள்.

அவளும் ஓடத் துவங்கினாள். அவளால் ஓட முடியவில்லை. உடல் ஏன் இப்படிக் கனத்துப்போயிருக்கிறது. கால்களை எடுத்துவைக்க முடியாமல் மூச்சு வாங்கத் துவங்கியது. காய்கறிக் கூடை வேறு ஒரு பக்கம் இழுத்தது. கேரட்டும் பீட்ரூட்டும் பூசணிக்காயும் விசித்திரமான பொருள்களைப் போலத் தோன்றின. பையை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிடலாமா என்று கூட யோசித்தாள். ஆனால், அப்படி விட மனசு வரவில்லை. மிகுந்த பிரயாசையுடன் அவள் கண்களை மூடிக்கொண்டு வடக்கு நோக்கி ஓடினாள்.

கண்களைத் திறந்து பார்த்தபோது வெல்லக் கிட்டங்கி அருகே வந்திருப்பது தெரிந்தது. 200 அடிகூட இருக்காது. இவ்வளவுதான் தன்னால் ஓட முடிந்திருக்கிறதா? வடக்கு வாசலுக்குப் போக இன்னும் நிறைய ஓட வேண்டுமே. ஏன் உடம்பு ஒத்துழைக்க மறுக்கிறது? அவள் பையை இழுத்துக்கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

ஜீன்ஸ் அணிந்த பையன் தற்செயலாகக் கண்ணில்பட்டான். அவன் இன்னொரு பக்கம் போய்க்கொண்டு இருப்பது தெரிந்தது. அவனை அழைக்கலாமா என்று யோசிப்பதற்குள் அந்தப் பையன் மறுபக்கம் போய்விட்டு இருந்தான். துர்கா ஓட முடியாமல் ஓடிக்கொண்டு இருந்தாள். யாரோ பின்னால் துரத்திவந்து அவளை அமுக்கிப் பிடித்து விடப்போவதுபோல் உணர்ந்தாள். குதிகால் வலிக்க ஆரம்பித்தது. கெண்டைச் சதைகள் இறுகக் கவ்விக்கொண்டதைப் போலாகின.

துர்கா பத்தாம் வகுப்பு வரை பள்ளி மைதானத்தில் ஓடியிருக்கிறாள். அதன் பிறகு, எம்.எஸ்சி. படிக்கும் வரை ஓடியதாக ஞாபகமே இல்லை. ஒரே ஒரு முறை மதுரையில் ராமேஸ்வரம் ரயிலைப் பிடிப்பதற்காக பிளாட்ஃபாரத்தில் ஓடியிருக்கிறாள். அதுவே மார் அடைப்பதுபோல வந்து ரயிலில் அன்றிரவு சாப்பிடக்கூட முடியாமல் போனது.

அவளுக்குப் பள்ளி வயதில் கூடைப் பந்து விளையாடுவது பிடிக்கும். தடகளப் போட்டியில் வேகமாக ஓடவும் செய்வாள். திருமணத்தோடு எல்லாமும் கைவிட்டுப் போய்விட்டது. இன்றைக்குத்தான் அவள் உடல் எடை எவ்வளவு பெரிய பாரம் என்பதை அவள் முழுமையாக உணர்ந்தாள். இத்தனை வருடங்கள் அந்த மார்க்கெட்டுக்கு வந்து போனபோதும் கிட்டங்கி பக்கம் எல்லாம் அவள் வந்ததே கிடையாது. ஒரே புகையிலை நாற்றமாக இருந்தது. அது சுருட்டுப் புகையிலை மற்றும் பீடி கம்பெனிகளின் கடைகள் உள்ள பகுதி. அந்தப் பக்கம் கடந்தாலே, புகையிலை வாடை மூச்சைத் திணறச்செய்யும். ஆனால், இன்றைக்கு அதற்குள்ளாகத்தான் நடந்தாள்.

இதற்கு மேல் வேகமாக நடக்க முடியாது என்பதுபோல அவளது கால்கள் நடுங்கின. அவள் பெருமூச்சிட்டபடியே நின்று திரும்பிப் பார்த்தாள். அவள் வயதையத்த ஒரு பெண் தனது இரண்டு பிள்ளைகளை இழுத்துக்கொண்டு ஓடினாள். அந்தப் பிள்ளைகள் தாயைவிட வேகமாக முன்னால் ஓடினார்கள். ''ஜெயா... ஓடாதே நில்லு. கேசவ் சொன்னாக் கேளுடா... அம்மா வர்றேன்'' என்று அந்தப் பெண் கத்திய படியே அவர்கள் பின்னால் ஓடினாள். அந்தப் பெண்ணாலும் ஓட முடியவில்லை. பிள்ளைகளை அழைக்கும் அவளுடைய குரல் உடைந்து சிதறுவதுபோல் இருந்தது. அவள் தன் நெஞ்சைப் பிடித்தபடியே போய்க்கொண்டு இருந்தாள்.
வடக்கே இருந்து அரிசிப் பொரி விற்கும் ஓர் ஆள் தனது சைக்கிளைத் தள்ளியபடியே வேகமாக வந்தான். அவன் பயத்தோடு ஓடிய ஆட்களைப் பார்த்துச் சொன்னான், ''வாழை மண்டியில பெட்ரோலை ஊத்திப் பத்தவெச்சிருக்காங்க. அந்தப் பக்கம் போக முடியாது. தீ கொழுந்துவிட்டு எரியுது. ராமசாமி தியேட்டர் பின்னாடி உள்ள சந்து ஒண்ணுதான் வெளியே போற வழி. படுபாவிப் பயக மார்க்கெட்ல வெச்சு எல்லாரையும் உயிரோடுகொல்லப் போறாங்க. எனக்குக் கண்ணைக் கட்டிக்கிட்டு வருது. எதுக்குத்தான் இப்படி சாதி வெறி பிடிச்சு அடிச்சிக்கிடுறாங்களோ..?''

வாழை மண்டியில் பற்றிய தீயின் காரணமாகக் காற்றெங்கும் புகை குபுகுபு எனப் பரவத் துவங்கியது. கண்ணில் புகைபட்டு எரிச்சல் உண்டாகியது. நெருப்பு பற்றிக்கொண்டுவிட்டால் எளிதாகக் கூரை வேய்ந்த கடைகள் யாவும் தீப்பற்றிக்கொண்டுவிடும். அந்தப் பொரி விற்பவன் சொன்னதுபோல கூட்டத்தோடு சிக்கி சாகப்போகிறோமா? ஏன் இப்படி மார்க்கெட்டில் மாட்டிக்கொண்டு யார் கையாலோ சாகப்போகிறோம்? நினைக்கவே அவளுக்கு அழுகையாகவும் பயமாகவும் வந்தது.

ஆட்கள் அங்கும் இங்கும் ஓடினர். எந்தப் பக்கம் போவது என்று புரியாமல் அவளும் கூட்டத்தோடு நெரிசலில் சிக்கினாள். ஒரு ஆள் மண்டை உடைந்து கன்னத்தில் ரத்தம் வழிய சேமியா பாக்கெட் விற்கும் கடையின் முன்பாக உட்கார்ந்து அழுதுகொண்டு இருந்தான். அந்தப் பக்கம் போகாமல் விலகி இடதுபுறம் ஒதுங்கி நடக்க ஆரம்பித்தாள். சாக்கடை உடைந்து ஓடியது. வழி எங்கும் ஒரே அழுகல் தக்காளிகளும் முட்டைக்கோஸ் இலைகளுமாக இருந்தன. அதற்குள் எப்படிக் கால்வைத்து நடப்பது என்றே தெரியவில்லை.

யாரோ சிலர் ஆவேசத்துடன் எதிர்ப் பக்கம் இருந்து ஓடி வந்தனர். நடக்க நடக்க அடைத்துச் சாத்தப்பட்டகடைகளாகத் தெரிந்தன. வெளியேறும் வழியே காணோம். தொலைவில் ஒரு பெண் அலறும் ஓசை கேட்டது. என்ன செய்கிறார்கள் அந்தப் பெண்ணை? எங்கே அது நடக்கிறது? அந்தப் பெண்ணின் அலறல் சத்தத்தைத் தொடர்ந்து, 'அய்யய்யோ... அய்யய்யோ...’ என்ற கூக்குரல் எழுந்து அடங்கியது.

எந்தப் பக்கம் இருந்து யார் வருகிறார்கள், யாரை அடித்துக் கொல்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், எலிப் பொறிக்குள் சிக்கிய எலி ஓடுவதுபோலக் குழப்பத்துடன் ஆட்கள் அங்கும் இங்கும் ஓடினர். துர்கா எந்த வழியாகப் போவது என்று புரியாமல் மூடிக்கிடந்த சர்பத் கடையின் மரத்தூணைப் பிடித்துக்கொண்டு சாய்ந்து அழுதாள். அவள் நின்றிருந்த இடத்தில் இருந்து சில அடிகள் தொலைவில் லுங்கி கட்டிய ஆளைப் பத்துப் பேர் சேர்ந்து அடித்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களைக் கடந்துபோனால் மட்டுமே பிரதான சாலைக்குப் போக முடியும். ஆனால், அதை எப்படிக் கடந்து போவது? இத்தனை பேர் சேர்ந்து ஒரு ஆளை உருட்டுக்கட்டையால் தாக்குகிறார்களே என்று துர்காவுக்கு நடுக்கமாக இருந்தது.

துர்கா அப்போதுதான் கவனித்தாள். மூடிக்கிடந்த புகையிலைக் கடை ஒன்றின் சாக்குப் படுதாவுக்குள் அந்த ஜீன்ஸ் அணிந்த பையன் ஒடுங்கி நின்றிருந்தான். அவனும் தன்னைப் போலவே பயந்துபோனவனாக ஒளிந்து இருக்கிறான்போலும். கும்பல் வெளியேறும் வரை ஒதுங்கியிருப்பது நல்லதுதானே என்று தோன்றியது. அவள் மெதுவாகப் படுதாவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

சாக்குப் படுதாவில் இருந்த சிறிய துவாரத்தின் வழியே அந்தப் பையன் அவள் வருவதைக் கண்டிருக்க வேண்டும். தனது கைகளை நீட்டி அவளை மறைவுக்குள் இழுத்துக்கொண்டான். ஆள் உயரப் படுதாவுக்குள் அவள் வந்து நின்றபோது அதற்குள் மறைந்துகொண்டுவிட்டால் வெளியே யாருக்கும் சுத்தமாகத் தெரியாது என்பது புரிந்தது. அந்தப் பையன் இறுக்கமான முகத்துடன் நல்லா உள்ளே வந்து நில்லுங்க என்றான். அவன் கைகளில் காய்கறிப்பை இல்லை. ஒருவேளை வீசி எறிந்திருக்கக் கூடும். அவன் தணிவான குரலில் சொன்னான், ''அந்த சந்து வழியா போனா வெளியே போற வழி இருக்கு. அந்த ஆட்கள் போனதும் வெளியே போயிரலாம்.'' அவள் தலையாட்டிக்கொண்டாள். அவள் கணவனைத் தவிர வேறு எந்த ஆணோடும் இவ்வளவு நெருக்கமாக ஒட்டிக்கொண்டு நின்றது இல்லை. அவனது கைகள் தற்செயலாக உரசுவதுபோல உரசிக்கொள்கின்றன. அவனது உடல் மணம், வியர்வை வாடை, மூச்சுக் காற்று, ச்சே... என்ன நினைப்பு அது. இந்தக் கும்பல் கலைந்துபோவதற்கு எவ்வளவு நேரமாகும்?

திருமண நாள் அன்று அவள் கணவனோடு புகைப்படம் எடுப்பதற்கு இவ்வளவு நெருக்கமாக நின்றிருக்கிறாள். அதன் பிறகு இன்றைக்குத்தான் வேறு ஓர் ஆணோடு நின்றிருந்தாள். காய்கறிப் பையைக் கீழே வெச்சிக்கோங்க என அவனாகப் பிடுங்கிக் கீழேவைத்தான். அவன் பக்கம் திரும்பிப் பார்க்கவே வேண்டாம் என்பதுபோல அவள் வேறு பக்கம் பார்த்துக்கொண்டே இருந்தாள். அவன் எதையோ யோசிப்பவனைப் போல நகத்தைக் கடித்துக்கொண்டே இருந்தான்.

எப்படியாவது வீடு போய்ச் சேர்ந்துவிட்டால் போதும் என்றிருந்தது. அந்தப் பையன் பொறுமை அற்றவனைப் போல அடிக்கடி சாக்குப் படுதாவைத் தூக்கி வெளியே ஆட்கள் போய்விட்டார்களா என்று பார்த்துக்கொண்டே இருந்தான். அவனோடு அப்படி ஒன்றாக நிற்பது அவளுக்கு என்னவோ செய்தது. அதை அவனும் உணர்ந்தானா என்பது தெரியவில்லை. வெளியே மாலை அடங்கி இரவு எழுந்தது. சாலையோர விளக்குகளின் வெளிச்சம் அவர்கள் நின்றிருந்த இடத்தின் அருகே நீரைப்போல ஓடியது. துளித் துளியாகச் சொட்டிக் கடந்துபோவதுபோல நிமிஷங்கள் கரைந்து கொண்டு இருந்தன. அவன் எதையோ நினைத்துப் பெருமூச்சிட்டபடியே தலையைக் குலுக்கிக்கொண்டான். துர்கா அவனைக் கவனிக்காதவள்போலவே நின்று இருந்தாள். அவன் எதையோ பேச விரும்பியவனைப் போல தொண்டையைச் செருமிக்கொண்டான். 
அவனோடு என்ன பேசுவது என்று அவளுக்குப் புரியாமல் அமைதியாக இருந்தாள். அவளது பையில் இருந்த உண்டியலைக் கவனித்தவனைப் போலக் கேட்டான்...

''இந்த உண்டியலை யாருக்காக வாங்கிட்டுப் போறீங்க?''

''எனக்குத்தான்.''

''இந்த வயசுல உண்டியல்ல சேர்த்துவெச்சு என்ன வாங்கப்போறீங்க?''

''சும்மா சேக்கணும்னு தோணுது... அதான்!''

''உண்டியலை உடைக்கிற நாள்ல அழுவீங்களா?''

''இல்லே... எதுக்குக் கேட்குறீங்க?''

''நான் அழுதிருக்கேன். எங்கப்பா எனக்குத் தெரியாம என் உண்டியலை எடுத்து உடைச்சி காசை எடுத்துட்டுப் போயிடுவார். அதுல இருந்து நான் உண்டியலே சேக்குறது இல்ல!''

ஒரு பள்ளிச் சிறுவனைப்போல அவன் பேசியது அவளுக்குப் பிடித்திருந்தது. இவனோடு பேசுவதில் தப்பொன்றும் இல்லை என்று இணக்கமாக உணர்ந்தாள்.

''ஹாம்சன்ல படிக்கிறீங்களா?'' என்று கேட்டாள்.

''ஃபர்ஸ்ட் இயர். நீங்க என்ன படிக்கிறீங்க...'' என்றான் அவன்.

வேண்டும் என்றே கேட்கிறான் என்பது புரிந்தது. ''ஹவுஸ் ஒய்ஃப்'' என்றாள். அவன் தலையசைத்துவிட்டுத் தனக்குத்தானே சிரித்துக்கொண்டான். எதற்குச் சிரிக்கிறான்? ஹவுஸ் ஒய்ஃப் என்பதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது? அவன் ஏதோ யோசனை செய்தவனைப் போல அமைதியாகிவிட்டான். அவளுக்கு அந்தப் படுதாவின் பின்னால் நிற்பது மூச்சுமுட்டுவதுபோல் இருந்தது. கைகளால் முகத்தின் முன்னால் வீசிக்கொண்டாள்.

அந்தப் பையன் அதன் பிறகு அவளிடம் எதுவும் பேசவில்லை. நீண்ட காத்திருப்பின் பிறகு, சாக்குப் படுதாவை விலக்கி வெளியே பார்த்தான். தொலைவில் யாருமே இல்லை. அந்தக் கும்பல் போயிருந்தது. அவள் குனிந்து தனது காய்கறிப் பையை எடுத்துக்கொண்டாள். அவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்போல் இருந்தது. மெல்லிய புன்னகையோடு திரும்பி அவனை ஏறிட்டுப் பார்த்த போது, அவன் ஒரு நிமிடம்கூட யோசிக்காமல் அவள் தோளைப் பிடித்து இழுத்து, அவள் முகத்தைத் தன் முகத்தோடு பொருத்தி உதட்டோடு அழுத்தி முத்தமிட்டான்.

அவள் விலக்க முயன்றாள். ஆனால், அவன் விடவில்லை. ஐஸ் கட்டியைப் பல்லால் கடித்துத் தின்றதுபோன்ற சிலிர்ப்பூட்டும் முத்தம். அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் நின்ற அவளைவிட்டு விலகி, படுதாவுக்கு வெளியே நின்று சோம்பல் முறித்தவனைப் போலச் சிரித்தான். பிறகு, அவளுடைய கூடையில் இருந்து ஒரு கேரட்டை எடுத்துக் கடித்தபடியே விடுவிடுவெனத் தனியே நடந்து போக ஆரம்பித்தான்.

அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. உதட்டைப் புடைவையால் அழுத்தித் துடைத்துவிட்டு, முகத்தையும் துடைத்துக்கொண்டாள். மனதில் இருந்த படபடப்பு அடங்கவே இல்லை. எதற்காக இப்படி நடந்துகொண்டான்? மார்க்கெட்டில் நடந்த கொலையும் இதுவும் ஒன்றுதான் இல்லையா? உலகில் எங்காவது ஒரு பெண் இப்படி நடந்திருக்கிறாளா? இந்த முத்தம் எதன் அடையாளம்? உன்னைப் போல எந்தப் பெண்ணையும் சந்தர்ப்பம் கிடைத்தால் என்னால் அடைய முடியும் என்பதை உறுதிசெய்துவிட்டுப் போகிறானா? 

இது காமத்தில் விளைந்த முத்தம் இல்லை. அதிகாரத்தில், அகம்பாவத்தில், தான் ஓர் ஆண் என்ற திமிரில் விளைந்த முத்தம் இல்லையா? முத்தம்கூடவா இப்படி வன்முறைக் கருவியாகிவிட முடியும்?

உதட்டில் படிந்த அந்த முத்தக் கறையை எப்படி அழிப்பது? யோசிக்க யோசிக்க... அவளுக்குள் குமட்டிக்கொண்டுவந்தது. இது போன்ற ஒரு வன்முறையைப் பற்றி ஸ்ரீதரனிடம் சொன்னால், அவன் எளிதாக எடுத்துக்கொள்வானா? அவனுடைய அம்மாவுக்குத் தெரிந்தால், அவளை வீட்டைவிட்டுத் துரத்திவிட மாட்டாளா? அவளுடைய வீதியில் வசிப்பவர்கள், அவளுடைய சொந்த அக்கா, தம்பிகள் என்ன நினைப்பார்கள்? அவளுக்கு யோசிக்க யோசிக்க... அழுகை முட்டிக்கொண்டுவந்தது.

என்ன வாழ்க்கை இது? ஏன் இப்படிப் பாதுகாப்பே இல்லாத உலகில் வாழ்கிறோம்? எல்லாத் தருணங்களிலும் காம உணர்ச்சி ஆணின் அடிமனதில் பொங்கிக்கொண்டேதான் இருக்குமா? இந்த அற்பப் புத்தி எங்கிருந்து வருகிறது? இதைத்தான் அவனது பெற்றோர்கள் உருவாக்கினார்களா?

சந்து வழியாக நடந்து அவள் பிரதான சாலைக்கு வந்தாள். ஒருவழியாக மார்க்கெட்டைவிட்டு வெளியே வந்துவிட்டோம். இனி பயம் இல்லை. அவள் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். சாலைஎங்கும் போலீஸ்காரர்களாக இருந்தார்கள். வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். கலவரம் காரணமாகச் சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன. வீட்டை நெருங்கி வரவர... அந்தப் பையன். அவன் இயல்பாகப் பேசிய விதம், அவனது முத்தம் என்று ஒவ்வொன்றாக மேல் எழுந்து வர... மனதுக்குள் குமட்டிக்கொண்டு வந்தது.
வீட்டை நெருங்கும்போது சாவியை எங்கே வைத்தேன் என்று கூடையில் கைவிட்டுப் பார்த்தாள். கூடையினுள் உண்டியலை வைக்கும்போது சாவியை வெளியே எடுத்த ஞாபகம் வந்தது. ச்சே... எல்லாம் இந்த உண்டியல் சனியால் வந்தது. இதை ஏன் வாங்கினேன் என்று ஆத்திரமாக வந்தது. உண்டியலை எடுத்து ஆத்திரத்துடன் அருகில் இருந்த வேலிப் புதரில் வீசினாள். அது உடைந்து நொறுங்கிய சத்தம் கேட்டது. சாவி இல்லாமல்போனதால் வீட்டுப் படிக்கட்டில் இருட்டுக்குள்ளாக உட்கார்ந்திருந்தாள். ஸ்ரீதரனிடம் உண்மையைச் சொன்னால் என்ன நடக்கும் என்பதைப் பற்றியே மனதில் நினைத்துக்கொண்டு இருந்தாள். நிஜத்தைச் சொன்னால் அதுதான் உண்மையான கலவரமாக இருக்கும். எதற்காக இதைச் சொல்ல வேண்டும்? சொன்னால் மட்டும் அந்த முத்தத்தை அழித்துவிட முடியுமா என்ன?

ஸ்ரீதரனின் பைக் சத்தம் கேட்டது. இருட்டில் இருந்து எழுந்து நின்றுகொண்டாள்.

''ஏன்டி... இருட்டுல உட்கார்ந்திருக்கே? வீட்டுச் சாவியைத் தொலைச்சிட்டியா?'' என்றான். பதில் சொல்லாமல் நின்றாள்.

''யாரோ ஒரு ஆளை மார்க்கெட்ல வெட்டிப் போட்டுட்டாங்க. ஒரே கலவரமாக்கிடக்கு... நீ கோட்டிக்காரி மாதிரி அங்கே போயி மாட்டிக்கிட்டியோனு நினைச்சிப் பயந்துபோயிட்டேன். உனக்கு ஒண்ணும் ஆகலையே!'' என்று கேட்டான்.

''நான் மார்க்கெட்டுக்குப் போகலை. தெக்கு பஜார் போயிட்டு வரும்போது சாவியைத் தொலைச்சிட்டேன்'' என்றாள்.

''உனக்கு தெக்கு பஜார்ல என்ன வேலை? வீட்ல தின்னுட்டுத் தின்னுட்டுக் கொழுத்துப் போயி ஊர் சுத்துறியா? வீட்டுச் சாவியைக்கூடப் பத்திரமா வெச்சிக்க முடியாம... என்னடி நினைப்பு? வெளியே போய் தனியா இருந்து பாரு... அப்போதான்டி உலகம் புரியும். நானே பலசரக்குல இருந்து துணிமணி, காய்கறி வரைக்கும் பாத்துப் பாத்து வாங்கிப் போடுறேன்ல... அதான் திமிரெடுத்து அலையுறே!'' என்றான்.

பதில் பேசாமல் கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள் துர்கா. இதற்குப் போய்... எதற்கு இப்படி அழுகிறாள்... என்று புரியாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான் ஸ்ரீதரன்.

நன்றி - விகடன்