சீவக சிந்தாமணி என்னும் பழைய காவியத்தை நான் ஆரய்ந்து வந்த காலத்திலேயே ஐம்பெருங் காப்பியங்கள் என்று தமிழில் வழங்கும் ஐந்து நூல்களில் மற்ற நான்காகிய சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பவற்றைப் பெயரளவில் மட்டும் தெரிந்து கொண்டிருந்தேன். சிந்தாமணியில் மணிமேகலையைப்பற்றி நச்சினார்க்கினயர் இரண்டிடங்களில் (செய்யுள், 1625, 2107) கூறுகின்றார். ஓரிடத்தில் மணிமேகலையிலிருந்து சில அடிகளையே எடுத்துக் காட்டியிருக்கின்றார். வேறு சில உரைகளிலும் பிரபந்தங்களிலும் உள்ள குறிப்புக்களால் மணிமேகலையென்பது ஒரு பழைய நூலென்பதும், அது பழைய நூலாசிரியர்களாலும் உரையாசிரியர்களாலும் மிகவும் பாராட்டப் படுவதென்பதும் வர வர உறுதி பெற்றன. சேலம் இராமசுவாமி முதலியாரவர்கள் அந்நூலின் மூலப் பிரதியொன்று தந்தார். ஆசை உண்டாகி விட்டால் ஊக்கமும் முயற்சியும் தொடர்ந்து உண்டாகின்றன. வேறு மணிமேகலைப் பிரதிகளைத் தேடித் தொகுத்தேன். சில சுவடிகள் கிடைத்தன. காகிதத்தில் ஒரு பிரதி செய்து வைத்துவிட்டேன்.
சிந்தாமணியை நான் சோதிக்கையில் இடையே மணிமேகலையையும் பார்ப்பேன். அதன் நடை சில இடங்களால் எளிதாக இருந்தது. ஆனாலும், சில சில வார்த்தைகள் நான் அதுகாறும் கேளாதனவாக இருந்தன. 'இந்நூல் இன்ன கதையைக் கூறுவது, இன்ன மதத்தைச் சார்ந்தது' என்பவற்றில் ஒன்றேனும் எனக்குத் தெளிவாகவில்லை.
சிந்தாமணி பதிப்பித்து நிறைவேறியவுடன் மணிமேகலை ஆராய்ச்சியில் நான் கருத்தைச் செலுத்தினேன். பத்துப்பாட்டு ஆராய்ச்சியும் அப்போது நடைபெற்று வந்தது. மணிமேகலை விஷயம் தெளிவுபடாமையின் பத்துப்பாட்டையே முதலில் வெளியிடலானேன்.
புதிய புதிய பரிபாஷைகளும், புதிய புதிய தத்துவங்களும் மணிமேகலையில் காணப்பட்டன. நான் பார்த்த அறிவாளிகளையெல்லாம் சந்தேகம் கேட்கத் தொடங்கினேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள். தெரியாததைத் தெரியாதென்று ஒப்புக் கொண்ட பெரியோர் சிலர்.
சிலர் தெரியாதென்று சொல்லிவிட்டால் தங்கள் நன்மதிப்புக்குக் கேடு வந்து விடுமென்ற கருத்தினால் ஏதோ தோன்றியபடியெல்லாம் சொன்னார்கள். தங்களுக்கே தெளிவாகாத விஷயமாதலின் ஒரே விஷயத்தை ஒருவரையே வெவ்வேறு சமயத்தில் கேட்டால் வெவ்வேறு விதமாகச் சொல்லத் தொடங்கினர். ஒரே விஷயத்தைக் குறித்துப் பலர் பல சமாதானங்களைச் சொன்னார்கள். இவ்வாறு தத்தளித்துத் தவித்துக் கொண்டிருந்த எனக்கு அமைதியே உண்டாகவில்லை. 'நாம் மணிமேகலையைத் துலக்க முடியாதோ!' என்ற சந்தேகம் என் மனத்திற் குடிபுக ஆரம்பித்தது. 'தமிழ் மகள் தன் மணிமேகலையை அணிந்து கொள்ளும் திருவுள்ளம் உடையவளாயின், எப்படியாவது நற்றுணை கிடைக்கும்' என்ற நம்பிக்கை மாத்திரம் சிதையாமல் இருந்தது.
அந்தக் காலத்தில் நான் கும்பகோணம் காலேஜில் இருந்தேன். என் கையில் எப்பொழுதும் கையெழுத்துப் பிரதியும் குறிப்புப் புத்தகமும் இருக்கும். ஓய்ந்த நேரங்களிலெல்லாம் அந்தப் பிரதியைப் புரட்டிப் பார்ப்பதும், குறிப்பெடுப்பதும் எனது வழக்கம்.
ஒரு நாள் ஒருமணிக்கு மேல் இடைவேளையில் உபாத்தியாயர்கள் தங்கும் அறையில் உட்கார்ந்து மணிமேகலைப்பிரதியை வழக்கம்போல் புரட்டிக் கொண்டிருந்தேன். அங்கே மற்ற உபாத்தியாயர்களும் இருந்தார்கள். அப்போது என்னோடு அதிகமாகப் பழகுபவரும் எனக்குச் சமமான பிராயம் உடையவருமாகிய ஸ்ரீ சக்கரவர்த்தி ஐயங்காரென்னும் கணித ஆசிரியர், " என்ன? அறுபது நாழிகையும் இந்தப் புஸ்தகத்தையே வைத்துக் கொண்டு கஷ்டப் படுகிறீர்களே?" என்று கேட்டார்.
"என்ன செய்வது? விஷயம் விளங்கவில்லை. நிதானமாகப் பார்க்கிறேன். ஒன்றும் புரியவில்லை" என்றேன் நான்.
"புரியாதபடி ஒரு புஸ்தகம் இருக்குமோ?"