25/06/2020

மணிமேகலையும் மும்மணியும் - தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர்

சீவக சிந்தாமணி என்னும் பழைய காவியத்தை நான் ஆரய்ந்து வந்த காலத்திலேயே ஐம்பெருங் காப்பியங்கள் என்று தமிழில் வழங்கும் ஐந்து நூல்களில் மற்ற நான்காகிய சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்பவற்றைப் பெயரளவில் மட்டும் தெரிந்து கொண்டிருந்தேன். சிந்தாமணியில் மணிமேகலையைப்பற்றி நச்சினார்க்கினயர் இரண்டிடங்களில் (செய்யுள், 1625, 2107) கூறுகின்றார். ஓரிடத்தில் மணிமேகலையிலிருந்து சில அடிகளையே எடுத்துக் காட்டியிருக்கின்றார். வேறு சில உரைகளிலும் பிரபந்தங்களிலும் உள்ள குறிப்புக்களால் மணிமேகலையென்பது ஒரு பழைய நூலென்பதும், அது பழைய நூலாசிரியர்களாலும் உரையாசிரியர்களாலும் மிகவும் பாராட்டப் படுவதென்பதும் வர வர உறுதி பெற்றன. சேலம் இராமசுவாமி முதலியாரவர்கள் அந்நூலின் மூலப் பிரதியொன்று தந்தார். ஆசை உண்டாகி விட்டால் ஊக்கமும் முயற்சியும் தொடர்ந்து உண்டாகின்றன. வேறு மணிமேகலைப் பிரதிகளைத் தேடித் தொகுத்தேன். சில சுவடிகள் கிடைத்தன. காகிதத்தில் ஒரு பிரதி செய்து வைத்துவிட்டேன்.


சிந்தாமணியை நான் சோதிக்கையில் இடையே மணிமேகலையையும் பார்ப்பேன். அதன் நடை சில இடங்களால் எளிதாக இருந்தது. ஆனாலும், சில சில வார்த்தைகள் நான் அதுகாறும் கேளாதனவாக இருந்தன. 'இந்நூல் இன்ன கதையைக் கூறுவது, இன்ன மதத்தைச் சார்ந்தது' என்பவற்றில் ஒன்றேனும் எனக்குத் தெளிவாகவில்லை.


சிந்தாமணி பதிப்பித்து நிறைவேறியவுடன் மணிமேகலை ஆராய்ச்சியில் நான் கருத்தைச் செலுத்தினேன். பத்துப்பாட்டு ஆராய்ச்சியும் அப்போது நடைபெற்று வந்தது. மணிமேகலை விஷயம் தெளிவுபடாமையின் பத்துப்பாட்டையே முதலில் வெளியிடலானேன்.


புதிய புதிய பரிபாஷைகளும், புதிய புதிய தத்துவங்களும் மணிமேகலையில் காணப்பட்டன. நான் பார்த்த அறிவாளிகளையெல்லாம் சந்தேகம் கேட்கத் தொடங்கினேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள். தெரியாததைத் தெரியாதென்று ஒப்புக் கொண்ட பெரியோர் சிலர்.


சிலர் தெரியாதென்று சொல்லிவிட்டால் தங்கள் நன்மதிப்புக்குக் கேடு வந்து விடுமென்ற கருத்தினால் ஏதோ தோன்றியபடியெல்லாம் சொன்னார்கள். தங்களுக்கே தெளிவாகாத விஷயமாதலின் ஒரே விஷயத்தை ஒருவரையே வெவ்வேறு சமயத்தில் கேட்டால் வெவ்வேறு விதமாகச் சொல்லத் தொடங்கினர். ஒரே விஷயத்தைக் குறித்துப் பலர் பல சமாதானங்களைச் சொன்னார்கள். இவ்வாறு தத்தளித்துத் தவித்துக் கொண்டிருந்த எனக்கு அமைதியே உண்டாகவில்லை. 'நாம் மணிமேகலையைத் துலக்க முடியாதோ!' என்ற சந்தேகம் என் மனத்திற் குடிபுக ஆரம்பித்தது. 'தமிழ் மகள் தன் மணிமேகலையை அணிந்து கொள்ளும் திருவுள்ளம் உடையவளாயின், எப்படியாவது நற்றுணை கிடைக்கும்' என்ற நம்பிக்கை மாத்திரம் சிதையாமல் இருந்தது.


அந்தக் காலத்தில் நான் கும்பகோணம் காலேஜில் இருந்தேன். என் கையில் எப்பொழுதும் கையெழுத்துப் பிரதியும் குறிப்புப் புத்தகமும் இருக்கும். ஓய்ந்த நேரங்களிலெல்லாம் அந்தப் பிரதியைப் புரட்டிப் பார்ப்பதும், குறிப்பெடுப்பதும் எனது வழக்கம்.


ஒரு நாள் ஒருமணிக்கு மேல் இடைவேளையில் உபாத்தியாயர்கள் தங்கும் அறையில் உட்கார்ந்து மணிமேகலைப்பிரதியை வழக்கம்போல் புரட்டிக் கொண்டிருந்தேன். அங்கே மற்ற உபாத்தியாயர்களும் இருந்தார்கள். அப்போது என்னோடு அதிகமாகப் பழகுபவரும் எனக்குச் சமமான பிராயம் உடையவருமாகிய ஸ்ரீ சக்கரவர்த்தி ஐயங்காரென்னும் கணித ஆசிரியர், " என்ன? அறுபது நாழிகையும் இந்தப் புஸ்தகத்தையே வைத்துக் கொண்டு கஷ்டப் படுகிறீர்களே?" என்று கேட்டார்.


"என்ன செய்வது? விஷயம் விளங்கவில்லை. நிதானமாகப் பார்க்கிறேன். ஒன்றும் புரியவில்லை" என்றேன் நான்.


"புரியாதபடி ஒரு புஸ்தகம் இருக்குமோ?"

தேவி - லா.ச.ரா


தென்காசியிலிருந்து குற்றாலத்துக்குப் போகும் சாலை வழி பஸ்ஸில் 15/20 நிமிடங்கள். மாலை வேளையில் நடையாக அரைமணியோ, ஒரு மணியோ, இன்னும் எத்தனை கூடுதலோ, அது நடப்பவனின் இஷ்டம். நடக்கும் சமயத்தில் அவனது மனநிலை.

நடந்து கொண்டிருந்தேன்.

சீஸன் மும்முரம்.

ஆனால் நான் சீசனுக்கு வரவில்லை, தென்காசிக்கு மாற்றலாகி வந்திருந்தேன். வந்த புதுசு. வீடு பார்த்துப் பேசி அமர்த்திப் பிறகு குடும்பத்தை வரவழைத்துக் கொள்ளணும்.

வந்து கிட்டத்தட்ட மாதமாகியும் இன்னும் இங்கு எனக்கு நிலை படியவில்லை. உத்தியோகத்தில் மாற்றலாகி வந்தவன். ஏற்கனவே இருப்பவருக்கு அவநம்பிக்கையானவன் தான். எத்தனையோ மானேஜர்கள் வந்தார்கள், போனார்கள் பார்த்திருக்கிறோம். இத்தனை நாள் நம் வழியில் தும்பு தட்டாமல் போய்க் கொண்டிருக்கிறோம். வந்தவன் நம் வழியில் படிவானா? அல்லது நம்மை ஆட்டி வைப்பானா? அவர்கள் கவலை இதுதான். அதுவும் புதிதல்ல. யாரும் பாதை மாற விரும்புவதில்லை.

கலைஞன், எழுத்தாளன், லட்சியவாதி - இவர்களைப் பார்க்கையில் எனக்கு ஒரு பக்கம் பரிதாபம், ஒரு பக்கம் சிரிப்பு. ஆரம்பத்தில் எல்லோரும், கங்கையின் கதியைத் திருப்பும் எண்ணத்தில் தான் இறங்குகிறார்கள். கடைசியில் கங்கையிலேயே பிணமாக மிதந்து செல்கிறார்கள். அப்பவும் சொர்க்கத்துக்கல்ல, கங்கையில் முதலையின் வாய்க்கு.

ஓட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை.

மதுரை தாண்டியதுமே, இங்கு மக்களின் உணவுப் பழக்கம், காலை பலகாரம், மதியம் சாதம், இரவு பலகாரம்.

ஊர் மக்கள் படி ஓட்டல்.

மூன்றுவேளையும் மிளகாய் நெடி நினைத்தாலே குடல் ஆவி கக்குகிறது. அதுவும் இப்போது சீசன் பணம் பண்ணும் வேளை. பண்டங்கள் மோசம். விலைகள் பற்றி எரிகின்றன. ஆனால் யாருக்கு அக்கரை? யாருக்கு இறக்கம்? அருவியில் குளிக்க எவனெவனோ எங்கிருந்தோ வருகிறான். 'சீஸனில்' அருவியில் குளிப்பதுதான் அந்தஸ்த்தின் சின்னம். இந்த மூன்றுமாதச் சூறையில்தான் குற்றாலம் வருடத்தில் மிச்சத்தை வாழ வழி தேடிக் கொள்கிறது. இப்போ வாழத் தெரியாதவன் வாழ லாயக்கற்றவன்.

பொழுது போக்குக்கோ, மனமாறுதலுக்கோ உகந்த புத்தகங்கள் கிடையா இருக்கும். ஒரே லைப்ரரியில், மானங்குலைந்து உடலும் பழகிப் போன ஸ்திரீ போல், பக்கங்கள் பாழாகி, உருக்குலைந்து இன்னும் தூக்கியெறியாமல், பேருக்கு அடுக்கி வைத்திருக்கும் பத்தாம் பசலிப் புத்தகங்கள்.

பேச்சுக்குத் தேடிப்போகும் அளவுக்கு எனக்கு இன்னும் நட்புகள் வாய்க்கவில்லை. அதற்கு முதல் நிபந்தனை சீட்டாட்டம் எனக்கு அறவே தெரியாது. இந்த அறியாமைக்கு இப்போது தலையிலடித்துக்கொண்டு என்ன பயன்?

24/06/2020

ஆவாரம்பூ... ஆக்காட்டி! - முனைவர் விமலா அண்ணாதுரை

தமிழ்நாட்டில், இன்று கணந்துள் பறவையை எங்கே காணலாம்? என்று கேட்டால் என்ன பதில் வருமோ தெரியாது. ஆனால், ஆள்காட்டிப் பறவை என்றால், அந்தப் பறவையைக் காட்டிக் கொடுக்கப் பெரும்பான்மையோர் முன்வரக்கூடும். ஏனென்றால், இந்தப் பறவைகளின் குரல், ஆளைக் காட்டிக்கொடுக்கும் இயல்புடையது. இவை சிவப்பு ஆள்காட்டி, மஞ்சள்ஆள்காட்டி என இரு நிறங்களில் காணப்படுகின்றன. ஆள்காட்டிப் பறவைகள், இனப்பெருக்கக் காலத்தில், எதிரிகள் தொலைவில் வரும்போதே இனம் கண்டுகொண்டு, கூட்டையும் குஞ்சுகளையும் காக்கக் கடுங்குரல் எழுப்புகின்றன. இவற்றின் அபயக்குரலைக் கேட்டு அருகிலிருக்கும் பிற பறவைகளும் விலங்குகளும் அந்த இடத்திலிருந்து விலகிவிடுகின்றன.


கணந்துள் பறவைதான், ஆள்காட்டிப்பறவை என்று பி.எல். சாமி எழுதியுள்ள சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் (பக்-147-157) என்ற நூலில், பறவையியலின் அடிப்படையில் மிகத்தெளிவாக விளக்குகிறார்.


நற்றிணை 212-ஆவது பாடலிலும், குறுந்தொகை 350-ஆவது பாடலிலும் இரு செய்திகள் கணந்துளைப் பற்றி ஒரேமுறையாகக் கூறப்பட்டுள்ளன. கணந்துள் பறவைக்கு கால் நீளம் என்பது "நெடுங்கால்" என்று இரு பாடல்களிலும் கூறுவதிலிருந்து தெரிகின்றது. இரு பாடல்களிலும் கணந்துள் பறவை ஓசையிடுவது குறிப்பாகக் கூறப்பட்டுள்ளது. நற்றிணை "புலம்புகொள் தெள்விளி" என்று கூறியுள்ளது. குறுந்தொகையில் கணந்துளின் ஆளை அறிவித்துக் காட்டும் குரல் குறிப்பிடப்பட்டுள்ளது.


குஞ்சு பொரித்துள்ள காலகட்டத்தில் இவை வாழுமிடத்தில் விலங்குகளோ, மனிதரோ சென்றால் திரும்பத் திரும்ப கடுங்குரலிட்டு, சுற்றச்சுற்றிப் பறந்து பாய்ந்து, ஆரவாரம் செய்யுமாம். சிவப்பு ஆள்காட்டிக் குருவி குரலிடுவது ஈண்க்-ட்ங்-க்ர்-ண்ற், ஈண்க்-ட்ங்-க்ர்-ண்ற் என்று திருப்பித் திருப்பி ஆங்கிலத்தில் கத்துவது போல் இருக்குமென்று கூறுவர். அதனால் ஆள்காட்டிக் குருவியை ஈண்க்-ட்ங்-க்ர்-ண்ற் குருவி என்றும் கூறுகின்றனர்.