24/06/2020

வெள்ளாட்டி சொன்ன வெண்பா! - முருகசரணன்

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் புலமையில் பொறாமை கொண்ட "அம்பல சோமாசி' என்ற புலவர், கம்பரை எப்படியாவது வெல்ல வேண்டும் என்று கருதி, அவர் இல்லத்தை அடைந்தார்.


இல்லத்தின் வாசலில் பெருக்கிக்கொண்டிருந்த வெள்ளாட்டி ஒருத்தி, புலவரைப் பார்த்து "நீர் யார்? எதற்கு வந்தீர்கள்?" என்று கேட்டாள். அம்பல சோமாசி தான் வந்ததன் நோக்கத்தைத் தெரிவித்தார்.


வெள்ளாட்டி புன்னகை புரிந்தபடி, "நான் ஒரு பாட்டு சொல்கிறேன், தாங்கள் அதற்குப் பொருள் சொன்னால், தங்கள் வருகையைக் கவிச்சக்கரவர்த்திக்குத் தெரிவிக்கிறேன்" என்று கூறினாள்.


"சரி... நீ பாட்டைச் சொல்; நான் பொருள் சொல்கிறேன்" என்றார் அந்தப் புலவர். அந்த வெள்ளாட்டி விளையாட்டாக வெண்பா ஒன்று பாடினாள்.


"வட்டமதி போலிருக்கும்; வன்னிக்கொடி தாவும்


கொட்டுவார் கையினின்றும் கூத்தாடும் - சுட்டால்


அரகரா என்னுமே அம்பல சோமாசி


ஒருநாள் விட்டேன் ஈது உரை"


அம்பல சோமாசிக்கு அந்தப் பாட்டுக்குப் பொருள் தெரியவில்லை. அதனால் வெட்கப்பட்டு, தலைகுனிந்து வந்த வழியே திரும்பிச் சென்றார்.


அதிகம் படிக்காதவர்கள் கூட இப்பாட்டுக்குப் பொருள் சொல்லிவிடுவார்கள் "வரட்டி" என்று! ஆனால், அம்பல சோமாசிக்குத் தெரியவில்லை; ஆணவம் அவரது அறிவை மறைந்துவிட்டது. ஆணவம் இருக்கும் இடத்தில் அறிவு மழுங்கிப்போவது இயல்புதானே?


கம்பரின் வீட்டைப் பெருக்கி, சாணி கூட்டி வரட்டி தட்டிப் பணிசெய்யும் கம்பருடைய வீட்டு வேலைக்காரியின் ஞான வெண்பாவுக்கே பொருள் சொல்ல முடியாத அந்தப் புலவர், கவிச்சக்கரவர்த்தி கம்பரையா வென்றுவிட முடியும்!


நன்றி - தமிழ்மணி 2012

கருத்துகள் இல்லை: