ஹரித்வாருக்கு செல்லும்போது தன்னுடன் ஒரு விலைமாதுவையும் அழைத்துச் செல்லவேண்டு மென்று அவன் முடிவுசெய்தான்.
அவனுடைய வீட்டிற்கு எப்போதும் விலைமகளிர் வருவதுண்டு. அலுவலகத் திலோ எப்போது பார்த்தா லும் விலைமகளிர் தொலை பேசியில் தொடர்புகொண்ட வண்ணம் இருப்பார்கள். ரெஸ்ட்டாரென்டில் விலை மகளிருடன் ஒன்றாக அமர்ந்துதான் அவன் காபி குடிப்பதே. காலரிகளில் ஓவியக் கண்காட்சிகளைப் பார்ப்பதற்குப் போகும்போது கூட அவனுடன் விலை மகளிர் இருப்பார்கள். எல்லா செவ்வாய்க்கிழமைகளிலும் அனுமன் கோவிலுக்கு வழிபடச் செல்வதும் விலைமகளிர் புடைசூழத் தான்.
சிதைக்குச் செல்வதுகூட விலைமகளிருடன்தான் இருக்கும்.
அவன் வாழ்க்கையே விலைமாதர்களின் தெருக்கோவிலாகிவிட்டது.
ஒரு விலைமகளின் வயிற்றில் பிறக்காமல் போய்விட்டோமே என்பதுதான் அவன் வாழ்க்கையிலேயே இருக்கும் மிகப்பெரிய கவலை. ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த- பொன் போன்ற குணத்தைக்கொண்ட தாயின் கர்ப்பப்பையில்தான் அவன் உருவானான். தந்தைக்கு சொந்தமானதைத் தவிர, வேறு யாருடைய உயிரணுக்களும் உள்ளே நுழைந்திராத அந்த கர்ப்பப்பையில்தான் அவன் ரத்தத்திலும், சதையிலும் எலும்பிலும் உருவானான். அதுதான் துயரமே.
நெப்போலியன், சே குவேரா, பாப் டைலன் ஆகியோரின் துயரங்களும் அதேதான். எர்வின் ஸ்ட்ரீட் மேட்டரும், விற்றோல்ட் காம்போவிக்கும் அதே துயரம் நிறைந்த சிலுவைகளில் கிடக்கிறார் கள். புத்தன், ஏசு ஆகியோரின் துயரமும் அவனுடைய துயரம்தான்.
நெப்போலியனும் சே குவேராவும் பாப் டைலனும் ஏன் ஒரு விலைமகளின் கர்ப்பப்பையில் பிறக்க வில்லை?
ஸ்ட்ரீட் மேட்டரும், காம்போவிக்கும் ஏன் விலைமாதுக்களின் பிள்ளைகளாக இருக்கவில்லை?
புத்தனும் இயேசுவும் ஏன் விலைமாதுக்களின் வயிற்றில் பிறவி எடுக்கவில்லை?
அவன் விலைமாதின் கர்ப்பப்பையில் பிறக்க வில்லை; உண்மைதான். ஆனால் அவன் விலைமகள் களுடன் வாழ்வான். அவர்களை இறுக அணைத்துக் கொண்டுதான் இறப்பான். ஒரு விலைமகளுடன் சேர்ந்து மட்டுமே அவன் இறப்பான்.
ஹரித்வாருக்கு செல்வதுகூட ஒரு விலைமகளுடன் சேர்ந்துதான் என்பதும் உண்மைதான்.
"கரால்பாக்'கில் இருக்கும் சாந்தா என்ற விலைமாது சொன்னாள்:
""ஹரித்வாருக்கு நானும் வருகிறேன்.''
சாந்தா திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவள்.
அவள் கருத்து, மெலிந்துபோய் காணப்படுவாள்.
அவளுக்கு காலில் ஊனம்.
"தரியாகஞ்ச்'சை சேர்ந்த காந்தா என்ற விலைமாது கேட்டாள்:
""நானும் வரட்டுமா?''
காந்தா திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவள்
அல்ல. கருத்து மெலிந்திருப்பவள் அல்ல. கால் ஊனம் உள்ளவளும் அல்ல.
காந்தா சாந்தா அல்ல.
காந்தா பஞ்சாபைச் சேர்ந்தவள். அவளுக்கு கோதுமையின் நிறம். தலைமுடியில் கடுகெண் ணெய்யைத் தேய்த்து, எப்போதும் சீவி விட்டிருப் பாள்.
காந்தா காந்தாதான்.
சாந்தா சாந்தாதான்.
காந்தா காந்தாவாகவும், சாந்தா சாந்தாவாகவும் இருக்கிறார்கள்.
"டிஃபன்ஸ் காலனி'யில் இருக்கும் லதாவிற்கு பதினெட்டு வயது. "யாங்கி' பாணியில் ஆங்கிலம் பேசுவாள். பீட்டில்ஸை வழிபடக் கூடியவள். பெல் பாட்டம் பேன்ட்டையும், கோகோ குர்தாவையும் அணிந்திருப்பாள். மூக்கின்மீது மூக்குத்தி இருக்கிறது.
லதா என்ற விலைமாது சொன்னாள்.
""நானும் வருகிறேன்.''
அவள் வெறுமனே வரமாட்டாள். பணம் தரவேண்டும். ஒவ்வொரு நிமிடமும் அவளுக்கு விலைமதிப்பு கொண்டது. ஒரு மணி நேரத்திற்கு எழுபத்தைந்து ரூபாய் அவளுடைய விலை. ஹரித்வாரில் மூன்று நாட்களை செலவழிக்க திட்டமிட்டிருக்கிறான்.
""உனக்கு எவ்வளவு ரூபாய் வேண்டும்?''
""ஐந்நூறு ரூபாய் தர முடியுமா?''
""தருகிறேன்.''
லதா போதும். அவளுடைய மூக்குத்தி போதும். அவளுடைய பெரிய பின்பாகம் போதும். ஐந்நூறு ரூபாய் புல்லுக்கு இணை. பத்து நாட்களுக்கான சம்பளம். பத்து நாட்களுக்கான சம்பளத்தை மட்டுமல்ல... ஒரு மாதத்திற்கான சம்பளம் முழு வதையும்கூட கொடுக்கலாம். ஒரு வருடம் வாங்கக் கூடிய சம்பளத்தைத் தரலாம். வாழ்நாள் முழுவதும் பெறக்கூடிய சம்பளத்தையும் கொடுக்கலாம்.
நீ போதும்... உன்னுடைய மூக்குத்தி போதும்...
""ஐந்நூறு அதிகமா?''
""இல்லை. குறைவு...''
""அப்படின்னா ஆயிரம் ரூபாய் தர முடியுமா?''
""பத்தாயிரம் தரலாம்.''
பத்தாயிரம் என்பது யானையின் விலை. யானையைவிட மதிப்பு உள்ளவளாயிற்றே விலைமாது!
""கையில் இருந்தால் தருவீர்கள் என்பது எனக்குத் தெரியும்.''
தொலைபேசியில் மணி ஒலிப்பதைப்போல
அவள் சிரித்தாள். அவளுக்கு அவன்மீது காதல்.
அவனுடைய சதைப் பிடிப்பான கைகள், கால்கள், நீளமான கழுத்து, விரிந்த நெஞ்சு, பைப்பின் கறை படிந்த சிரிப்பு.. அனைத்துமே அவளுக்கு பிடித்த விஷயங்கள்தாம்.
அவளுக்கு மட்டுமல்ல அவன் மீது காதல்.
"கரால்பாக்'கின் சாந்தாவிற்கும் காதல்...
சாந்தாவிற்கு மட்டுமல்ல காதல்-
"தரியாகஞ்ச்'சின் காந்தாவிற்கும் அவன்மீது காதல்...
லதாவிற்கும் சாந்தாவிற்கும் காந்தாவிற்கும் மட்டுமல்ல; நகரத்தின் எல்லா விலைமாதர்களும் அவனைக் காதலிக்கிறார்கள்.
அவன் விலைமகன்களின் ஆலயம்.
இராவணன் என்ற அரக்கனுக்காக மனிதன் ஆலயங்களை உருவாக்கினான். அனுமன் என்ற குரங்கிற்காகவும் நாடு முழுவதும் அவன் ஆலயங்கள் கட்டினான். சிவனுடைய சிறுநீர் கழிக்கும் உறுப்பை அவன் பிரதிஷ்டை செய்து வழிபட்டான்.
விலைமகள்களுக்காக யாரும் ஆலயங்கள் உருவாக்கவில்லை.
அவன் உருவாக்குவான். நாடு முழுவதும், வாழ்க்கை முழுவதும் அவர்களுக்காக அவன் ஆலயங்களைக் கட்டுவான்.
திரிவேணி கட்டத்தில் இருக்கும் துறவிகளே, விலைமகள்களுக்காக காயத்ரி மந்திரங்களைக் கூறுங்கள்.
அர்ச்சகர்களே, விலைமகள்களுக்காக பூஜை செய்யுங்கள்.
மணிகளே, விலைமகள்களுக்காக ஒலியுங்கள்.
தீபங்களே, விலைமகள்களுக்காக பிரகாசமாக எரியுங்கள்.
மனிதனுக்கு சுகத்தைக் கொடுத்துக் கொடுத்து, சமுதாயம் என்ற நாறிக் கொண்டிருக்கும் ஓடையில் பால்வினை நோய் வந்து இறந்து அழிந்துபோகும் விலைமாதுக்களுக்காக உலகமே, நீ கண்ணீரைச் சிந்து... விலைமகள்கள் கடவுளின் தூதுவர்கள்... தவம் செய்யும் துறவிகள்... தேவதைகள்.. விலைமகள்களே, உங்களுக்காக நான் கண்ணீர் சிந்துகிறேன்.
""நான் எங்கு வரணும்?''
லதாவின் குரல் மீண்டும் தொலைபேசியில் கேட்டது.
""வீட்டில் தயாராக இரு. காலையில் ஆறு மணிக்கு...''
சூட்கேஸில் சட்டைûயும் பேன்ட்டையும் எடுத்து வைத்தான். தேவைப்படக்கூடிய வேறுசில சிறுசிறு பொருட்களையும்... அந்தப் பட்டியலில் ஆஃப்டர் ஷேவ் லோஷனும் ஓடிகொலானும் இருந்தன. ஒரு பெரிய டின் புகையிலையும், மூன்று பைப்புகளும்...
சூட்கேஸை பூட்டிவிட்டு, டாக்ஸிக்காக தொலைபேசியில் பேசினான். டாக்ஸி கூறியது:
""இரண்டு நிமிடங்கள் சார்.''
அறையைப் பூட்டிவிட்டு வெளியே வந்தபோது, டாக்ஸி வந்து சேர்ந்திருந்தது.
""எங்கே?''
டாக்ஸி கேட்டது.
""டிஃபன்ஸ் காலனி...''
""எந்த ப்ளாக்?''
டாக்ஸி ஓடுவதற்கிடையில் கேட்டது.
""லதா என்ற விலைமகள் வசிக்கக்கூடிய ப்ளாக்கிற்கு...''
டாக்ஸி பான் தின்று சிவக்க வைத்த சிரிப்புகளில் வெறுப்பு கலந்திருக்க, டிஃபன்ஸ் காலனியை நோக்கி வேகமாக விரைந்தது. லதாவின் வீடு அவனுக்குத் தெரியும். அவனுக்கு மட்டுமல்ல; எல்லா டாக்ஸி களுக்கும் தெரியும். டாக்ஸிகளுக்கு மட்டுமல்ல- காடிலாக்குகளுக்கும் ஷெப்ரோலாக்களுக்கும் தெரியும். அவளுடைய வீடு ஒரு புனிதத் தலம்...
புனிதப் பயணிகளே, நீங்கள் ஏன் ரிஷிகேஷுக்குச் செல்கிறீர்கள்? புனிதப் பயணிகளே, நீங்கள் ஏன் அலஹாபாத் சங்கமத்தில் மூழ்குகிறீர்கள்? புனிதப் பயணிகளே, நீங்கள் எதற்கு மலைமீது ஏறி அமர்நாத்துக்கும் பத்ரிநாத்துக்கும் செல்கிறீர்கள்?
சாந்தா வசித்துக்கொண்டிருக்கும் கரோல் பாக்தான் ரிஷிகேஷ். காந்தா வசித்துக்கொண்டிருக்கும் தரியாகஞ்ச்தான் பத்ரிநாத். லதா வசித்துக் கொண்டி ருக்கும் டிஃபன்ஸ் காலனிதான் அமர்நாத்.
லதா வாசலில் எதிர்பார்த்துக் காத்திருந்தாள். கண்களில் தூக்க சாயல் இருந்தது. பச்சை நிறப் புடவையை உடலில் சுற்றியிருந்தாள். கன்னத்தில் பற்களின் சிவந்த அடையாளங்கள்...
""உன்னைப் பார்க்கும்போது விலைமகள் என்றே தோன்றுவதில்லை.''
""பிறகு... என்ன தோன்றுகிறது?''
""தேவதை என்று...''
""நான் விலைமகள்தான்... என்னுடைய உடலுக்கு பாவத்தின் நாற்றம் இருக்கிறது.''
""உன்னுடைய உடலுக்கு அமிர்தத்தின் நறுமணம் இருக்கிறது.''
அவள் இருக்கையில் அவனுடன் நெருங்கி உட்கார்ந்தாள்.
""நேற்று தூங்கவில்லையா? எத்தனை வாடிக்கை யாளர்கள் வந்தார்கள்?''
""இரண்டு...''
அவர்கள் யார் என்று அவள் விளக்கிக் கூறினாள். ஒரு மனிதன் ஒரு தூதரகத்தின் இரண்டாவது செகரட்டரி. அவனுக்கு பொன் நிறத்தில் கிருதாக்கள் இருந்தன. இன்னொரு ஆள் நகரத்தின் பெயர்பெற்ற ஒரு ஓவியன். அவனுக்கு நீளமான தலைமுடி இருந்தது.
""பல் யாருடையது?''
""ஓவியனின்...''
ஓவியன் அவளுடைய கன்னத்தில் தன்னுடைய பற்களால் ஓவியங்கள் வரைந்திருப்பானோ?
டாக்ஸி புதுடெல்லி புகைவண்டி நிலையத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.
""நான் உன்னைத் தேடி ஏன் வருகிறேன்?''
"காமவெறியைப்போக்கிக் கொள்வதற்கு...''
""இல்லை.... என்னிடம் இருக்கும் பாவங்களைக் கழுவிக்கொள்வதற்கு...''
சாந்தாவின் கருத்து காய்ந்துபோன ஊனமுற்ற காலைக் கட்டிப் பிடித்துக்கொண்டு இவன் அழுதான்.
"என்னை என்னுடைய பாவங்களிலிருந்து காப்பாற்று!'
அவள் அழுதாள்.
"நீ தேவதை!'
பால்வினை நோயால் பாதிக்கப்பட்டிருந்த தேவதையின் கண்களிலிருந்து கண்ணீர் தொடர்ந்து வழிந்துகொண்டிருந்தது.
மஸ்ஸுரி எக்ஸ்பிரஸ்ஸின் முதல் வகுப்பு அறையில் விலைமாதுவின் தோளில் தலை சாய்த்துக் கொண்டு அவன் உறங்கினான்.
விலைமகளின் கையைப் பிடித்துக்கொண்டு
அவன் ஹரித்வாரில் வண்டியைவிட்டு இறங்கினான்.
""உனக்கு பால்வினை நோய் இருக்கிறதா?''
""இல்லை... சீக்கிரம் வரும்...''
அவள் புன்னகைத்தாள்.
கஜுராஹோவில் இருக்கும் புண்ணிய ஆலயங்களே, என்னை உங்களுடைய சுவர்களில் பதித்துக் கொள்ளுங்கள்.
தேவதாசிகளே, சிதைகளிலிருந்து விழித்தெழுங்கள்... கலியுகத்தின் தலைவிதியைத் திருத்தி எழுதுவதற்காக வாருங்கள்.. வாருங்கள்...
நான் காத்திருந்தேன்.
முதல் உடலுறவின் களைப்பிலிருந்து விழித்தெழு...
அவன் சொன்னான்.
""நாம் மானஸாதேவியைப் பார்ப்பதற்காகச் செல்வோம்.''
ஆடைகளை மாற்றிக்கொண்டு அவர்கள் சுற்றுலா மாளிகையைவிட்டு வெளியே வந்தார்கள். அப்பர் சாலையின் வழியாக நடந்தார்கள். மானஸாதேவியின் சந்நிதிக்குப் போய்ச் சேரவேண்டுமென்றால் மலையில் ஏற வேண்டும். கணக்கற்ற படிகளின் வழியாக அவர்கள் மேலே ஏறினார்கள். படிகள் முடிவுக்கு வந்தன.
மலர்களுடனும் வாசனைப் பொருட்களுடனும் ஏராளமான பக்தர்கள் மலையின்மீது ஏறி வந்து கொண்டிருந்தார்கள்.
மானஸாதேவிக்கு முன்னால் நின்று வணங்கினார்கள்.
தேவி, உனக்காக நான் மலர்கள் கொண்டுவரவில்லை. என்னிடம் வாசனைப் பொருட்களும் இல்லை. மலர்களுக்கும் வாசனைப் பொருட்களுக்கும் பதிலாக நான் அவை எல்லாவற்றையும்விட மிகவும் புனிதமான விலைமகளை அழைத்து வந்திருக்கிறேன். ஏற்றுக் கொண்டாலும்...
மக்கள் ஏராளமாகக் குழுமியிருந்த படித்துறைகளின் வழியாக விலைமகளின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான்.
அவள் சொன்னாள்:
""நான் குளிக்க வேண்டும்.''
படித்துறையில் ஏராளமான புனிதப் பயணிகள் மூழ்கிக் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர் களுடைய பாவங்களின் மூலம் நதி கலங்கிப் போயிருந் தது. அவர்களுடைய பாவத்தை உண்டு நாறிப்போன மீன்கள் நதியில் இப்படியும் அப்படியுமாக நெளிந்து விளையாடிக் கொண்டிருந்தன.
""நான் என்னுடைய பாவத்தை இங்கு கழுவட்டுமா?''
அவள் மீண்டும் கேட்டாள்.
அவள் எதற்காக கங்கையில் குளிக்கிறாள்? அவள் தானே கங்காதேவி?
ஆமாம்... நீ குளி... நீ தொடுவதால், கங்கைக்கு பாவத்திலிருந்து விடுதலை கிடைக்கட்டும். கங்கை புனிதமாகட்டும்...
"சப்த தாரை' பகுதியைக் கடந்து நதி மிகுந்த ஓசையுடன் ஓடிக்கொண்டிருந்தது.
""நாம் நிர்வாணமாகக் குளிப்போம்.''
""யாராவது பார்த்துவிட்டால்...?''
""உன்னுடைய நிர்வாணம் யாரும் பார்க்காததா என்ன?''
சப்தரிஷிகளே, லதா என்ற விலைமகளின் பாதம் பட்டு உங்களுடைய சப்ததீவுகள் புனிதமாகி விட்டி ருக்கிறது.
ரிஷிகளே, லதாவிற்காக தியானம் செய்யுங்கள்.
ப்ரம்மகுண்டமே, லதாவிற்காக விளக்குகளை எரியச் செய்யுங்கள்.
"வா...'
நதி அழைத்தது.
விலைமகளின் கையைப் பிடித்துக்கொண்டுஅவன் நதிக்குள் இறங்கினான். நதியில் அவர்கள் பயணித் தார்கள். சப்த தரையைக் கடந்து, ப்ரம்ம குண்டத்தை கடந்து, ஏராளமான பாலங்களுக்குக் கீழே, வங்காள விரிகுடா கடலை நோக்கி அவர்கள் மிதந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
நன்றி - இனிய உதயம் 01 09 2013