'மணியார்டரா ' எனக்கா ' '
'ஆமா ஸ்வாமி ' உங்களுக்கேதான் ' '
'உத்ராபதி, உனக்கு வயசு நாப்பதாயிருக்கும், சாளேசரம் போட்டுக்கற வயசு ' நல்லா பாத்துச் சொல்லு. நான் வாணா கண்ணாடி தரட்டுமா ? ' என்று துருப்பிடித்த வினோலியா ரோஸ் சோப் பெட்டியைத் திறந்து, வெற்றிலைக்கும் வெட்டுப் பாக்குக்கும் மேல் படுத்துக் கொண்டிருந்த மூக்குக் கண்ணாடியைத் தொட்டார் முத்து.
'கண்ணாடியும் வாணாம், சீப்பும் வாணாம். உங்களுக்குத்தான் வந்திருக்கு. நீங்களே அந்தக் கண்ணாடியை மாட்டிக்கிட்டுப் பாருங்க...எம். சாம்பமூர்த்தி யாரு ? '
'அக்கணாக்குட்டியா ? நம்ம புள்ளையா ? இப்ப மெட்ராஸிலேயா இருக்கு அது ? '
முத்து அவசர அவசரமாக மூக்குக் கண்ணாடியை எடுத்து மாட்டி, இடது காதில் நூலைச் சுற்றிக் கொண்டார்.
'ஆமா, வேலைக்குப் போயிட்டானே அக்கணாக்குட்டி ஒரு மாசத்துக்கு முன்னால, உனக்குத் தெரியாது ? '
'தெரியாதே. எங்க வேலையோ ? ' என்று மணியார்டர் பாரத்தில் இரண்டு இடத்தில் இண்ட்டு போட்டுக் கொடுத்தார் உத்ராபதி. கையெழுத்தானதும் அடிக் கடிதத்தைக் கிழித்து முப்பதொன்பது ரூபாய்க்கு நோட்டும் ஒரு ரூபாய்க்கு சில்லறையுமாகப் பையிலிருந்து எடுத்து நீட்டினார்.
'சில்லறையும் மாத்திப்ட்டு நாற்பது ரூபாயைக் கொடுப்பானேன் ? அரை ருபாயைக் குறைச்சுண்டு கொடுக்கப் படாதோ ? ' என்று அரை ரூபாயை நீட்டினார் முத்து.
'நாலணாப் போதும் சாமி. உங்ககிட்ட அதுக்கு மேலே வாங்கறது பாவம் ' என்று பாதியைத் திரும்பிக் கொடுத்து விட்டார் உத்ராபதி.
'முதல் சம்பளம் வாங்கி அனுப்பிச்சிருக்கான் அக்கணாக்குட்டி. எட்டணாவாத்தான் இருக்கட்டுமேன்னு நினைச்சேன் ' என்று நாலணாவைத் திரும்பி வாங்கிக் கொண்டார் முத்து.
'பிறத்தியார் பணம் அனுப்பிச்சா, ரண்டுகையாலும் வீசி வீசி தருமம் பண்ணுவாங்க சாமி ' என்று சொல்லிக் கொண்டே குறட்டில் இறங்கி வந்தாள் அவர் மனைவி.
'ஏழைக்குதாம்மா தெரியும் ஏழை கஷ்டம். நீங்க சொல்றீங்களே, மாசம் நானூறு ரூபா அனுப்பறாரு ரட்டைத் தெரு மகாலிங்கய்யரு மகன், மிலிட்டரியிலே கர்னலா இருக்குறாராமே. மகாலிங்கய்யரு அப்படியே வாங்கிட்டு குந்தினாப்பல உள்ளே போயிடுவாரு. ஒரு பத்துகாசு டாத்தண்ணிக்கு ? மூச்சுப் பிரியப்படாது... முகத்தைப் பார்த்தாத்தானே ?... அக்கணாக்குட்டி என்ன வேலையாயிருக்கு ? '
'என்ன வேலையோ ? நம்ம எம். கே. ஆர். கிட்ட போய் புலம்பினேன் ஒரு நாளைக்கு, நம்ம பையனுக்கு ஒரு வழி பண்ணப்படாதா செட்டியார்வாள் ' இப்படி உதவாக்கரையாத் திரியறானேன்னு நின்னேன். ஒரு மாசம் கழிச்சு சொல்லியனுப்பிச்சார். போனேன். உம்ம பையனை அனுப்புரீராய்யா மெட்ராஸஉக்கு ? ஒரு பெரியமனுஷன் வீட்டிலே கூடமாட ஒத்தாசையா இருக்கணுமாம். ஒரு பையன் இருந்தாத் தேவலைன்னு சொல்றாங்க. பெரிய இடம், புள்ளீங்க பள்ளிக்கூடத்துக்குப் போகும். கொண்டு விடணும், கடை கண்ணிக்குப் போகணும். இப்படி சில்லரை வேலையா இருக்கும் போலிருக்கு. நல்லா கவனிச்சிப்பாங்க. வீட்டோடு சாப்பாடு போட்டு வைச்சிப்பாங்கன்னார் எம். கே. ஆர்.
'அனுப்புறீமான்னு கேக்கணுமா ? நான்தான் கஞ்சிவரதப்பான்னு தவிச்சுண்டு கிடக்கேன். இன்னிக்கே அனுப்பிக்கறேன்னேன். நாலு நாக்கழிச்சு அவர் காரியஸ்தர் மெட்ராஸ் போனார். அக்கணாக்குட்டியை அழச்சிண்டு போயிட்டார். சரியா ஒண்ணரை மாசம் ஆச்சு. பணம் வந்திருக்கு. '
'என்னமோ சாமி கண்ணைத் திறந்தாரு. நீங்க முன்னாலே, இந்த மூக்கு கண்ணாடிக்கு அந்த நூலை எடுத்திட்டு ஒரு காது வாங்கிப் போடுங்க. அப்புறம் ஒரு உறையிலே போட்டு வச்சுக்குங்க. இப்படியே சீவல் மேலேயும் பாங்கு மேலேயும் வச்சிட்டிருந்தா பழங்கோலி மாதிரி கீறல் விளாம என்ன பண்ணுமாம் ' ' என்று சொல்லிக்கொண்டே உத்திராபதி நகர்ந்தார்.
சம்சாரம் முத்துவைப் பார்த்தாள்.
'இப்படிக் கொடுத்திட்டு நேரே உள்ள வரட்டும். பற மோளம் மாதிரி ஊரெல்லாம் போய் தம்பட்டம் கொட்டிண்டு நிக்கவேண்டாம் ' என்று பல்லோடு பல்லாகச் சொல்லி வெற்றிலைப் பெட்டி மேலிருந்த நோட்டுகளை பெட்டிக்குள் போட்டு மூடி, பெட்டியையும் எடுத்துக் கொண்டு உள்ளே போனாள்.
வெற்றிலைப் பெட்டி கையை விட்டுப் போனதும் கூடவே விரைந்தார் முத்து. அவர் உள்ளே வந்ததும் கதவைத் தாழிட்டாள் சம்சாரம்.
முத்து தோளிலிருந்த மூன்று முழம் ஈரிழையை இடுப்பில் கட்டி, அவள் கையிலிருந்த பெட்டியை வாங்கித் திறந்து நோட்டுகளை எடுத்து, பறையிலிருந்த பரமேச்வரனின் படத்தின் அடியில் வைத்து, நெடுங்கிடையாக விழுந்து மூன்று தடவை நமஸ்காரம் செய்தார்.
'ஏன் நிக்கறே ' நீயும் பண்ணேன் ' '
'எல்லாம் பண்றேன் ' என்றுதான் அவள் வழக்கமாகச் சொல்லிவிட்டு நின்றிருப்பாள். ஆனால் மனசு பாகாகிக் கிடந்ததால் அவரே சம்பாதித்து விட்டாற்போல, பதில் பேசாமல் கீழே குனிந்து மூன்று முறை வணங்கி எழுந்தாள். அவளுக்கு, அந்தக் காலத்து முத்துவின் ஞாபகம் வந்தது. ஏழு வருடங்களுக்கு முன்னால் முத்து இப்படிக் கிழம் சென்று போகவில்லை. மயிர் கருகருவென்றிருக்கும், அள்ளிக்கட்ட வேண்டிய கூந்தலாக இருக்கும். மூக்கிலிருந்து இரண்டு கோடுகள் இந்த மாதிரி விழவில்லை. மார்பும் இரு பிளவாக அடித்தென்னை மட்டை மாதிரி வைரமாக இருக்கும். இப்படிச் சரியவில்லை. தோள்பட்டை இப்படிச் சூம்பவும் இல்லை. ஆடு சதை, துடைச் சதை எல்லாம் இப்படி கழளவுமில்லை. அப்போது வெற்றிலைப் பெட்டி பித்தளைப் பெட்டி. இப்பொழுது குப்பைத் தொட்டிபோல ஒரு வயதானத் தகரப் பெட்டி. அப்பொழுது வெள்ளிச் சுண்ணாம்புக் கரண்டான். இப்பொழுது பிரம்மோத்சவத்தில் தெருவோரக் கடைப்பரப்பில் வாங்கின தகரக் குழாய். அதுவும் துரு. கழுத்துக் குழியை தங்க ருத்ராட்சக் கொட்டை மறைத்ததுபோய், இப்பொழுது குழிதான் தெரிகிறது. மேனிபோய், தெம்பு போய் கங்காளி மாதிரி நிற்கறதைப் பார்த்துதான் 'ரண்டாம் தாரமாம்மா ' ' என்று போன வருஷம் அமர்த்தின புதுத் தயிர்க்காரி கேட்டாள் போலிருக்கிறது. இப்படியா விசுக்கென்று இந்த பிராமணன் கிழண்டு போகும் ' மருந்துக்குக்கூட மயிரில் கறுப்பில்லாமல், கூந்தல் கொட்டைப் பாக்காகி....பல் விழவில்லை, ஆனால் கோணவும் பழுப்பேறவும் ஆரம்பித்து விட்டது.
ஆனால் இது ஒன்றும் அவள் கண்ணை இந்தக் கணம் உறுத்தவில்லை. 'என்ன இருந்தாலும் இதுக்கு இருக்கிற சாமர்த்தியம் சாமர்த்தியம்தான் ' என்று உவந்தாள்.
அவளுக்குச் சற்று சிரிப்பாகக்கூட இருந்தது. நம் பிள்ளையைப் பார்த்து நாற்பது ரூபாய் சம்பளம் போட்டு சாப்பாடும் போடத் தோன்றிற்றே ஒருவனுக்கு ' இந்த உலகத்தில் எத்தனை அசடுகள் இருக்கமுடியும் '
இல்லை....அண்ணாக்குட்டி நிஜமாகவே சமர்த்துதானோ ' நமக்கு ஒரு பிள்ளை. செல்லப்பிள்ளை. அசட்டுத்தனமேதான் கண்ணில்பட்டது. வெளியே போனதும் மறைந்திருந்த சமர்த்து வெளி வந்துவிட்டதோ என்னவோ.
....இல்லை....பணத்தையே தின்று, பணத்தையே உடுத்தி, பணத்திலேயே படுத்துப் புரளுகிற கொழுப்பு ஜன்மங்களால் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் சாப்பாடு போட்டு, துணிமணி வாங்கிக் கொடுத்து நாற்பது ரூபாய் கொடுக்கவாவது '...கொழுப்போ டம்பமோ, மனது நல்ல மனது. இந்தப் பாச்சைக்கு, பேச்சைக்காலும் பேச்சைக்கையும் கொன்னல் பேச்சுமாக இது கிடக்கிற லட்சணத்துக்கு இப்படி ஆதரிக்க வேண்டும் என்று தோன்றிற்றே.
'தட்சிணாமூர்த்தே, வைதீச்வரா, லோகமாதா ' நீங்கள்ளாம்தான் காப்பாத்தணும் ' என்று பயந்துபோய் நின்றாள் அவள்.
'சரி, காவேரியிலே போய் ஸானம் பண்ணிட்டு வந்துடறேன்...சில்லறை ஏதாவது கொடேன். கீரைத்தண்டு பாற்காய்னு ஏதாவது வாய்ண்டுவரேன் ' என்று முடுக்கினார் முத்து. 'இன்னிக்கு கூடவா வத்தக் குழம்பும் சுட்ட அப்பளமும் ? ', என்று சொல்லாமல் பிணங்குகிற முறுக்கு அது. நாலணாவை எடுத்துக் கொடுத்தாள். கன்னத்தில் அவளை செல்லமாக நிமிண்டிவிட்டு அவர் வெளியே போகிறார். பணம் வந்தால் இந்த நிமிண்டல், குழையல் எல்லாம் இரண்டு பேருக்கும் சகஜம்.
அவர் குளிக்கப் போனது நடந்து போகிற மாதிரி இல்லை. குதி போடுகிறது போலிருந்தது. அவனை --- அதை, ரூபாய் அனுப்பும்படி யாரும் சொல்லவில்லை. அது அது வேலை என்று போனால் போதும் என்றிருந்தது. அது போய் நாற்பது ரூபாய் அனுப்பவாவது ' 'நீ உருப்படமாட்டே, நீ உருப்படவே மாட்டே ' என்று அவனைச் சபித்ததெல்லாம் நினைவுக்கு வந்தது, வயிற்றில் பிறந்த பிள்ளையை இப்படியா சபிப்பார்கள் ' நம்ம புத்தி இவ்வளவு கட்டையாக ஏன் போயிற்று ? இப்பொழுது பணத்தை அனுப்பி நம்ம புத்தியில் கரியை பூசிவிட்டதே ' இந்தப் பிள்ளை ' அக்கணாக்குட்டி, இனி மேல் உன்னை அதட்டக் கூடமாட்டேண்டா என்று தன்னைத் திட்டிக்கொண்டு நடந்தார் முத்து ஒரு பிள்ளை '
பிள்ளைகளெல்லாம் தாயையும் தகப்பனையும் கொள்ளாமல் பாட்டனையும் பாட்டியையும் கொள்ளுமாமே, --அதுபோல் அக்கணாக்குட்டியைப் பற்றிய வரையில் மெய்தான். அவன் முத்துவின் மாமாவைக் கொண்டு விட்டான். முத்துவைக் கொண்டிருந்தால் அண்டா, தவலைகளை அலட்சியமாக உருட்டுகிற வலுவு வந்திருக்கும். ஆயிரம் பேருக்கானாலும் ஒரு கல் உப்போ, புளியோ ஏறாமல் குறையாமல் சமைத்துப் போடுகிற நளபாகம் கை வந்திருக்கும். முத்துவின் சம்சாரத்தைக் கொண்டிருந்தால் பார்க்கவாவது லட்சணமாக வளர்ந்திருக்கலாம்.
மீனாட்சி லட்சணம் தான். சமையற்கார முத்து பெண்டாட்டி என்று யார் சொல்ல முடியும் ? நூத்தம்பது வேலி பண்ணைவீட்டு எஜமானி எண்ணெய் ஸ்நானத்துக்காக நகைநட்டுகளைக் கழற்றி வைத்தாற் போலிருக்கும் .....ஸ்நானம் செய்துவிட்டுத் திரும்பி உள்ளே நுழைந்த கையோடு ஈர வேட்டியோடேயே அவளை அப்படியே அம்மென்று திணறத் திணறக் கட்டிக் கொள்ள வேண்டும். ம்க்கும்...ம்க்கும் இதுவேறயாக்கும் என்று சொன்னாலும் சொல்லுவாள். கட்டிண்டு தொலை என்று சொல்வது போல மரம் மாதிரி நின்றாலும் நிற்பாள். அவளுக்குப் பிறந்த பிள்ளை அந்த மாதிரி மூக்கும் முழியுமா இருக்கக் கூடாதோ ? மூக்கில் வற்றாத ஜலதோஷம். ஹ் ஹ் என்று நிமிஷத்துக்கு ஒரு உறிஞ்சல். முட்டிக்கால், முட்டிக் கை. குதிகால் கீழே படாமல் இரண்டு குதியிலும் முள்குத்தினாற் போன்ற விந்து நடை, வாயைச் சற்று திறந்தாலே ஓட்டுக் கூரை மாதிரி பல் வரிசை --- வரிசை இல்லை கோணல் --- ஓடு மாற்றி நாலு வருடமானாற் போல. அந்த பல்லுக்கு ஏற்ற சொல், எச்சிலில் குளித்துக் குளித்து வரும் ஒவ்வொரு பேச்சும். எப்ப வந்தேல் மாமா சேக்யமா ? நாலானன் சேக்யமார்க்கானா, (நாலானன் என்றால் நாராயணன்) செலுப்பு பிஞ்சு போச்சுப்பா இன்னிக்கி காவேரி ரண்டால் ஆலம்.... வயசு பதினைந்து முடிந்தும் இதே பேச்சுதான். படிப்பு வரவில்லை. எலிமெண்டரிக்கு மேல் ஏறவில்லை. ஐந்து வருஷம் வீட்டோடு கிடந்ததும் போன வருஷம் ஒரு மளிகைக் கடையில் இழுத்துவிட்டார். அங்கே ஒரு நாள் எண்ணெயைக் கொட்டி ரகளை. வேலை போய்விட்டது. சைக்கிள் பழுது பார்க்கிற கடையில் கொண்டுவிட்டார். நாலு நாளைக்குப் போய்விட்டு வந்து ஜஉரமாகப் படுத்துக் கொண்டு விட்டது. நான் மாட்டேன்; சைக்கிலுக்குப் பம்பு அடிக்கச் சொல்றான். கண்டு கண்டா மார் வலிக்குது. நான் மாட்டேன் போ என்று திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டது. முத்து அலையாத இடமில்லை. பையனை அழைத்துக் கொண்டு வர்ச் சொல்லுவார்கள். போவார், பையனைப் பார்த்ததும் சொல்லியனுப்புகிறேன் என்று அனுப்பி விடுவார்கள். விறகு கடையில்கூட வேலைக்கு வைத்துப் பார்த்தாயிற்று. ஒரு கட்டையைத் தூக்க நூறு முக்கல். தினமும் நகத்திலும் விரல் இடுக்கிலும் சிலாம்பு. வீட்டுக்கு வந்து போகமாட்டேன் என்று அடம். நீ உருப்படவே மாட்டே என்று அப்பா அம்மா பாட்டு ' ஒன்றையும் காதில் போட்டுக் கொள்ளவே மாட்டான் அவன். பேசாமல் போய் திண்ணையில் உட்கார்ந்து வாசலில் போகிற வெள்ளாட்டையும் குட்டியையும் முக்கை உறிஞ்சி உறிஞ்சிப் பார்த்துக் கொண்டிருப்பான். இல்லாவிட்டால் வீட்டுக்கார வாத்தியார் பெண்ணோடு 'நேத்திக்கி ரிசவாகனம் பாக்கலியே நீ தூங்கிப் போயிட்டியே ' என்று திருநாள் சேதிகளைப் பேசிக் கொண்டிருப்பான்.
ஸ்வாமி நினைத்தால் என்ன செய்யமாட்டார் ' ஊமைக்கும் அசடுகளுக்கும் அவர் தானே கண். என்னப்பா ' வைத்தீச்சுவரா ' இந்த மட்டுமாவது பாதை காட்டினியே '
முதல் தடவை பணம் வந்து ஆச்சரியத்தில் கழிந்தது. இரண்டாம் தடவைகூட அந்த ஆச்சரியம் குறையவில்லை. மூன்றாம் தடவை இரண்டு மூன்று நாள் தாமதமாயிற்று. வேதனையாயிருந்தது. பயமாக இருந்தது. ஐந்தாவது தடவை ஒரு வாரம் தாமதம். கோபம் வந்தது. கோபத்தை சமாளித்துக்கொண்டு என்ன கஷ்டமோ இடைஞ்சலோ என்று சமாதானம் செய்து கொண்டு சாந்தமான சமயத்தில் பணம் வந்து குதித்துவிட்டது. 'இது சம்பாதிச்சு நான் சாப்பிடணுங்கறது இல்லை ஸ்வாமி. என்னமோ முன்ன மாதிரி கண் சரியாகத் தெரியலை. கை நடுங்கறது. என்னமோ குழப்பம். மொளகாப் புளியெல்லாம் முன்ன மாதிரி திட்டமா விழமாட்டேங்கிறது. இல்லாட்டா என்ன விட்டுட்டு ஆனந்தம் பயலைக் கூப்பிடுவாளோ ஏலாவூர் பண்ணையிலே ' எத்தனை கலியாணத்துக்கு அங்கே டின்னரும் டிபனுமா பண்ணிப்போட்டிருக்கேன் ? இந்தப் பய இப்படி பிள்ளையா பிறந்து இப்படி நிக்கறதேங்கிற கவலையிலே எனக்கு கையி, தீர்மானம், தைரியம் எல்லாம் ஆடிப்போச்சு ஸ்வாமி. இப்ப அது நிமிர்ந்துட்டுது. என் குழப்பம் நிமிரலே, என்ன பண்றது ' இல்லாட்டா இது சம்பாரிச்சா நான் சாப்பிடணும் தலையெழுத்து ' என்று மணியார்டர் வாங்கும்போது வந்து, விசாரிக்கிற பார்வையாகப் பார்த்த வீட்டுக்கார வாத்தியாரிடம் உருகினார் முத்து.
அந்தச் சமயத்தில்தான் வண்டிக்காரத் தெருவிலிருந்து வக்கீல் குமாஸ்தாவின் காரியஸ்தன் வைத்தியநாதய்யன் வந்து செய்தி சொல்லிவிட்டுப் போனான். மத்தியானம் முடிந்தால் வீட்டுப்பக்கம் வந்துவிட்டுப் போகச் சொன்னாராம் அண்ணாவையர்.
வக்கீலுக்குக் குமாஸ்தா. அந்த குமாஸ்தாவுக்கு ஒரு காரியஸ்தனா ? இது உலகத்தில் இல்லாத ஆச்சரியம் இல்லையோ ? ஆனால் நடக்கிறதே. அண்ணாவையனுக்கு காரியஸ்தன் ஒருவன் இல்லை, இரண்டு மூன்று பேர் உண்டு. இந்தா என்றால் ஏன் எங்கேயென்று ஓடக் காத்திருக்கிற எடுபிடி ஆட்கள் மூன்று பேர் --அண்ணாவையன் முத்துவுக்குக்கீழ் சமையலாக இருந்தவன்தான். திடாரென்று ஒரு நாளைக்கு வக்கீல் ஜகதுவுக்கு குமாஸ்தாவாக ஆனான். மூன்று வருஷத்தில் ஜகதுவையே உட்கார்த்தி வைத்துவிட்டான். தானே வக்கீல் மாதிரி தொழில் நடத்தத் தொடங்கிவிட்டான். முதலிமார் கேஸ்கள், செட்டி நாட்டுக் கேஸஉகள் --பாகப் பிரிவினைகள் வியாஜ்யங்கள் என்று பிரளயமாடுகிறான். கோர்ட்டு ஏறாமலே எத்தனை மத்தியஸ்தங்கள் ' பல மத்தியஸ்தங்கள் வாசல் திண்ணையில் நீட்டின கால்களை முடக்காமலே நடக்கும். மலையாளத்து இரட்டைத் தாழம் பாயில் திண்டுமீது சாய்ந்து....ஏ அப்பா ' என்ன கார்வார் ' என்ன மோக்ளா '
முத்து கீரைத்தண்டு சாம்பார் சாதத்தைச் சாப்பிட்டு வினோலியா டப்பாவுடன் வண்டிக்காரத் தெருவுக்குப் போனார். போகாமல் எப்படி இருக்க முடியும் ' விறகு கடையிலும் சைக்கிள் கடையிலும் அக்கணாக் குட்டியை வேலைக்கு வைத்தது அண்ணாவையன் தானே. இது வேலையை விட்டால் அவன் என்ன செய்வான் ?
வழக்கம் போல நீட்டின காலை மடக்காமலே 'வா முத்து, உட்காரு ' என்று அண்ணாவையன் திண்ணையில் தாழம் பாயில் சாய்ந்தவாறே அழைத்தான்.
'வைத்தா வந்து சொன்னான், அய்யர்வாள் கூப்பிட்டார்னு '
'ஆமா. முத்து ' என்று எழுந்து புகையிலையை உமிழ்ந்துவிட்டு வந்து, 'ராத்திரி மெட்ராஸ் போறேன். இந்த தடவை யாராவது கூட இருந்தா தேவலை போலிருக்கு. ஒரு வாரமா ஜஉரம். முந்தாநாத்தான் ஜலம் விட்டுண்டேன். நாளைக்கு அர்ஜண்டா கேஸஉ ஹைக்கோர்ட்டிலே. பத்தியச் சாப்பாடு. ஹோட்டல்ல தங்கப்போறதில்லெ. தம்முடு கலியாண மண்டபத்திலே தங்கப் போறேன். நீகூட வந்து ஒரு ரசம் சாதமோ தொகையலோ பண்ணிப் போட்டா தேவலைன்னு தோணறது. அதான் கூப்பிட்டனுப்பிச்சேன் '
'அதுக்கென்ன செஞ்சுபிடறது. '
'நீ தீர்க்காயுசா இருக்கணும், நாலாநாள் திரும்பி விடலாம். நீ போறதுக்கு ரெடி பண்ணிக்கோ. நாளை நாளன்னிக்கி ஒண்ணும் அச்சாரம் வாங்கலியே '
'இப்ப என்ன ஆடி மாசத்திலே அச்சாரம் ? '
'ரொம்ப நல்லது போ. அப்ப ரண்டு நாள் கூடத் தங்கினாலும் பாதமில்லேன்னு சொல்லு. '
'ஒரு மாசமாத்தான் இருக்கட்டுமே. நீங்க கூப்பிடறச்சே நான் வெட்டி முறிக்கப் போறேனோன்னேன். என்ன பேச்சு இது ? '
'சரி, இந்தா--இதோ இருவது ரூவா இருக்கு. மீனாட்சி கிட்ட கொடு. செலவுக்கு வேணுமே அவளுக்கு... ' ராத்திரி ஏழு மணிக்கு வந்துடு. இங்கேயே சாப்பிட்டுப் புறப்படலாம்.
'சாப்பிடறேன். இது என்னத்துக்கு ? ' என்று உபசாரமாக பணத்தை மறுத்தார் முத்து.
'எது என்னத்துக்கு ? --கொடுத்தா பேசாம வாங்கிவச்சுக்கோயேன். நீதான் மகாப் பிரபுன்னு தெரியுமே எனக்கு. '
'சரி ' என்று புன்சிரிப்புடன் இரண்டு நோட்டையும் வினோலியாப் பெட்டிக்குள் வைத்து மூடி 'நானே போகணும் போகணும்னு நெனச்சிண்டிருந்தேன். நீங்க கூப்பிட்டுது பால்லெ பழம் விழுந்தாப்பல ஆயிட்டுது ' என்றார் முத்து.
'என்ன ? '
'நம்ம அண்ணாக்குட்டி அங்கதானே இருக்கான்... போறபோது அவனையும் ஒரு நடை பார்த்துட்டு வந்துடலாமே '
'ஒஹோஹொ. ரண்டு மாசம் முன்னாலேயே சொன்னியே-- யாராத்திலெயோ இருக்கான்னு. எனக்கு மறந்தே போயிடுத்து பாரேன். பலசரக்குக் கடைக்காரனுக்கு பைத்தியம் புடிச்சாப்பல ஆயிடுத்து என் புத்தி... பேஷ்-- '
பட்டணத்துக்கு வந்த நாலாம் நாள்தான் முத்துவுக்கு ஒழிந்தது. அண்ணாவையருக்கு சமைத்துப்போட்டு விட்டு அவரோடும் சுற்ற வேண்டியிருந்தது. மூன்று நாளுக்குப் பிறகுதான் அண்ணாவையருக்குத் தைரியம் வந்தது. தனியாக நடமாடலாம் என்று. அன்று சனிக்கிழமை. வேங்கடாசலபதி பெயரைச் சொல்லி ஒரு சர்க்கரைப் பொங்கல் பண்ணச் சொன்னார் அண்ணாவையர். அவருக்குச் சாப்பாடு போடுவதற்கு முன்னமே சொல்லி விட்டார் அவர். 'முத்து, நான் சாப்பிட்டுக் கோர்ட்டுக்குப் போறேன். நீ அக்கணாக் குட்டியைப் பார்த்துட்டு சாயங்காலத்துக்குள்ள வந்துரு. ராத்திரி வண்டிக்கே கிளம்பும்படியா இருக்கும். முடிஞ்சா அந்தப் பயலையும் அழச்சிண்டு வா. நானும் பார்க்கறேன் ' என்ரு அவர் சொன்னதும் அவிழ்த்துவிட்ட கழுதை மாதிரி ஓட வேண்டும் போலிருந்தது முத்துவுக்கு. நெஞ்சுக்குள் குதியாகக் குதித்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு அவருக்குச் சாதத்தைப் போட்டார். டாக்சி பிடித்துக் கொண்டு அவரை ஏற்றி வழியனுப்பி விட்டு, ஒரு எவர்சில்வர் டப்பாவில் சர்க்கரைப் பொங்கலைப் போட்டுக்கொண்டு மாம்பலம் பஸ்ஸில் ஏறினார்.
வீடு கண்டு பிடிப்பது சிரமமாக இல்லை. வீடா அது பங்களா. பங்களாகூட இல்லை. சின்ன அரண்மனை. ஒரு மாஞ்சோலைக்கு நடுவில் இருந்தது. கேட்டைக் கடந்து நுழைந்ததும் நடுவில் ஒரு நாகலிங்க மரம். இப்பாலும் அப்பாலும் இரண்டிரண்டு மாமரங்கள். ஒரே நிழலாக இருந்தது. தள்ளிப்போனால் கார் நிற்கும் முகப்பு. காரும் இருந்தது. நாகலிங்க மரத்துக்குப் பக்கத்தில் சிமண்டு சோபா இரண்டு திண்ணைபோல கட்டியிருந்தன, அங்கே நான்கு பையன்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
'அம்பி ' ' என்று இரண்டு தடவை கூப்பிட்டார் முத்து. அவர்கள் கவனித்ததாகத் தெரியவில்லை. மாமரத்தில் ஒரு குயில் கத்திற்று. கீழே நாகணவாய் இரண்டு மஞ்சள் மூக்கும் குழைந்த கூவலுமாக ஆடி ஆடி நடந்து கொண்டிருந்தன.
'நான் டபிள்ஸ் எத்தனையோ தடவை போயிருக்கேண்டா இதே சைக்கிள்ளே என்ன செஞ்சிடுவாங்க ? எங்க தாத்தா ஹைகோர்ட் ஜட்ஜஉ கான்ஸ்டபிள் என்னைப் பிடிச்சிடுவானா ? '
'ம்க்ம்...நீ யார் க்ராண்ட்ஸன்னாயிருந்தா போலீஸ்காரனுக்கு என்னடா ? அவன் டூட்டி செய்யத்தான் செய்வான். '
'பெட்டு ? --நான் டபுள்ஸ் போறேன், மணியோட..... பிடிக்கிறானா பார்ப்பமா ? அஞ்சு ரூபா பெட்டு ' இந்தா ' என்று சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்து வைத்தான் அந்தப் பையன்.
பன்னிரண்டு வயதுக் குழந்தையின் பையிலிருந்து 'பெட்டு 'க் கட்ட ஐந்து ரூபாய் பணம் வருவதைப் பார்த்து முத்து பயந்து போய்விட்டார். இந்தப் பையன்களைத்தான் அக்கணாக்குட்டி பள்ளிக்கூடத்திற்குக் கொண்டு விடுகிறானா ' அவருக்குப் பயமாகவும் இருந்தது. பெருமையாகவும் இருந்தது.
'அம்பி ' ' என்று மறுபடியும் கூப்பிட்டார். பதிலில்லை. அன்று சனிக்கிழமை, பள்ளிக்கூடம் இல்லை போலிருக்கிறது.
மறுபடியும் கூப்பிட்டார்.
'யாரு ? '
'சாம்பமூர்த்தின்னு ஒரு பையன் கும்மாணத்திலிருந்து வந்திருக்கானே அவன் இஞ்சதானே இருக்கான். '
'தெரியாது '
'இதுதானே குப்புசாமி அய்யர் பங்களா ' '
'யார்றா குப்புசாமி அய்யர் ? '
'போடா ' நம்ம மோகன் தாத்தா தாண்டா. அவர் வீடுதான் '
'நீங்க இந்த வீடு இல்லையா ? '
'இல்லை. நாங்க எங்க ப்ரண்டு மோகனைப் பார்க்க வந்திருக்கோம். மோகன் உள்ளே சாப்பிடப் போயிருக்கான். '
முத்து மெதுவாக நகர்ந்து வீட்டின் முகப்புக்குப் போனார். அங்கு யாருமில்லை. உள்ளே ஹாலுக்குப் போனார். பாதி இருட்டு. அங்கே பெரிய மைசூர் மகாராஜா ராணியோடு நிற்கிறபடம், கொம்பு, மான்தலைகள், யாரோ தலைப்பாகை நீளக்கோட்டு கால்சட்டை போட்ட மனிதரின் படம் எல்லாம் மாட்டியிருந்தன. அங்கும் யாருமில்லை. அதையும் தாண்டினார். ஒரு கிழவன் அந்தண்டை நடையில் ஒரு ஸ்டூல்மீது உட்கார்ந்திருந்தான்.
'யாரு ? '
'ஏம்பா சாம்பமூர்த்தின்னு ஒரு பையன் இங்க இருக்கானே தெரியுமோ ? '
'பையன்னா ? எந்தப் பையன் ? '
'இங்கே வேலைக்கிருக்கான்பா ஒரு பையன் --- கும்மாணத்திலிருந்து வந்திருக்கான். '
'அப்படிச் சொன்னால் தெரியும் ? சாம்புவைத்தானே கேக்கறீங்க ---பெரிய அய்யரோட இருக்கே அந்தப் பையன்தானே ? '
'அது என்னமோ, இங்க வேலையா யிருக்கான் அந்தப் பையன் ? '
'கும்பகோணத்துப் பையன்தானே ? '
'ஆமாம். '
'அப்ப இப்படி இறங்கி அதோ அங்கே போங்க --- காட்டேஜஉக்கு, அங்கதான் இருப்பான் பையன், இப்பதான் அய்யரோட வெளியே போய் வந்தான். '
'இங்கே ? ' என்று நடை முடிவில் இருந்த வாசற் படியைக் காட்டினார் முத்து.
'இங்க சின்ன ஐயா ரண்டுபேரும் இருக்குறாங்க... பெரியய்யா இருக்கிற இடம் அதுதான். அங்கதான் அந்தப் பையன் இருக்கான்... நீங்க யாரு ? '
'நான் அந்தப் பையனோட தோப்பனார். '
'அப்படியா ' சரி சரி, போங்க. '
முத்து நடையிலிருந்து இறங்கி தோட்டத்தோடு போனார். ஏ அப்பா எத்தனை பெரிய வீடு ' எத்தனை மரங்கள் ஒரு ஆளைக் காணவில்லை. வாசலை இப்படி ஹோவென்று போட்டுவிட்டு உள்ளே எங்கேயோ இருக்கிறார்களாம். ஒரு ஈ காக்கையைக் காணோம் ' முந்நெற்றி மயிரைப் பிடித்தாலும் தெரியாது போலிருக்கிறது.
ஒரே நிசப்தமாக இருந்தது. தோட்டப் பாதையில் நடந்து அங்கே காட்டேஜின்படி ஏறினார் முத்து.
தாழ்வாரத்தில் வந்து 'சார் ' என்றார்.
'யாரு ? '
'நான்தான் ' என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார்.
அங்கே ஒரு பெரிய மேஜை, அதன்மேல் தடிதடியாகக் கணக்குப் புத்தகங்கள். அதன் பின்னால் நாற்காலியில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். அவர் முகத்தில் கறுப்பாக மூக்குக் கண்ணாடி, மேஜையில் ஒரு நீலக்கடுதாசி. அதன் மேல் வரைபடம். அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு பையன் பக்கத்தில் நின்று அவருடைய தலையை, கிராப்புத் தலையை வரக்கு வரக்கு என்று சொரிந்து கொண்டிருக்கிறான்.
கறுப்பு கண்ணாடியின் உடலும் லேசாகக் கறுப்புத்தான். முத்து உள்ளே நுழைந்ததும் அவர் கறுப்புக் கண்ணாடியைக் கழற்றாமலே நிமிர்ந்து பார்க்கிறார்.
'யப்பா ' என்று ஒரு குரல்.
அக்கணாக்குட்டியின் குரல்தான், மேஜை மீதிருந்த மங்கிய விளக்கின் கறுப்பு மறைவுக்குப் பின்னால் அக்கணாக்குட்டியின் முகம் தெரிந்தது.
'எப்பப்பா வந்தே ? ' என்று ஹ் என்று உறிஞ்சிக் கொண்டே சிரிக்கிறான் அவன்.
'யார்றா சாம்பு ? '
'எங்கப்பா மாமா ' என்று அவர் தலையைச் சொறிந்து கொண்டே அக்கணாக்குட்டி 'எப்பப்பா வந்தே ? ' என்று சிரித்தான்.
'நமஸ்காரம் ' என்றார் முத்து.
'நமஸ்காரம். சாம்பு அப்பாவா -- வாங்கோ ' '
'வந்தேன் '
'உட்காருங்கோ '
ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார் முத்து. வெய்யிலிருந்து உள்ளே வந்ததும் கண்ணை மறைத்த இருள் மெதுவாக விலகிற்று. கண் நன்றாகத் தெரியத் தொடங்கிற்று.
'செளக்கியமா ? ' என்றார் கறுப்புக் கண்ணாடி.
'செளக்யம் '
முகத்தை நன்றாகப் பார்த்தார் முத்து. உதடு அறுந்தது மாதிரி அதைத்துத் தொங்கிற்று. கன்ன எலும்பில் இரண்டு அதைப்பு. காது வளையமெல்லாம் அதைப்பு. மேஜை மீது படிந்திருந்த கைகளை பார்த்தார். கைகள் படியவில்லை. கட்டைவிரல் மற்ற விரல்களெல்லாம் மடங்கியிருந்தன. நீட்ட முடியாத விரல்கள் என்று பார்த்தாலே தெரிந்தது.
'எப்பப்பா வந்தே...ஹ் ? ' என்று பல் வரிசையைக் காட்டிக் கொண்டே கேட்டான். அக்கணாக்குட்டி. அவருடைய தலையைச் சொறிவதை மட்டும் நிறுத்தவில்லை.
'இப்ப தாண்டா வரேன் '
'இப்ப ஏதுப்பா வண்டி....ஹ் ? '
'வண்டி முன்னூறு நிமிஷம் லேட்டு. தெரிஞ்சவா வீட்டிலே வந்து இறங்கினேன். சாப்பிட்டேன், உடனே புறப்பட்டு வரேன் ' என்று தன்னறியாமல் பொய் சொன்னார் முத்து.
அப்பொழுது கறுப்புக் கண்ணாடிப் பெரியவர் கன்னத்தை சொரிந்து கொண்டார். எல்லாரும் விரல் நுனியால் நகத்தால் சொறிந்துகொள்வார்கள். அவர் மடக்கின விரலின் பின்பக்கத்தால் சொறிந்து கொண்டார். முத்துவுக்கு பகீர் என்றது. இரண்டு மூன்று விரலில் நகமே இல்லை.
முத்துவுக்கு உட்கார முடியவில்லை. மேலெல்லாம் அரிப்பது போலிருந்தது. அந்த அறையில் காலைப்பாவவிட்டாலே உள்ளங்கால் அரிக்கும்போலிருந்தது. முள்மேல் உட்கார்வது போல குறுகிக்கொண்டார்.
பெரியவர் என்னென்னமோ வெல்லாம் கேட்டார். தப்பும் தவறுமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார் முத்து. காதில் ஒன்றையும் சரியாக வாங்கிக் கொள்ளவில்லை. அவருக்கு உள்ளே பூஞ்சதை நரம்பெல்லாம் அழுவதுபோல் ஒரு கசிவு.
'போரும்டா சாம்பு ' என்றார் பெரியவர்.
அக்கணாக்குட்டி சொறிவதை நிறுத்தினான்.
'பையன் ரொம்ப சமர்த்தாயிருக்கான். அவன் இருக்கிறது எனக்கு ஆயிரம் பேர்கூட நிற்கிறாப்போல இருக்கு ' என்றார் பெரியவர். சொல்லிவிட்டு 'சித்தே இருங்கோ, இதோ வந்துடறேன் ---சாம்பு இப்படி வாயேன் ' என்றார்.
அக்கணாக்குட்டி அருகில் வந்து நின்றான். பெரியவர் எழுந்து அவன் தோளில் கையைப் போட்டுக்கொண்டார். அக்கணா நடந்தான். அவரும் விந்தி விந்தி துணி பூட்ஸ் காலால் நடந்தார். அவரை ஹாலின் ஒரு கோடியில் உள்ள கதவைத் திறந்து உள்ளே விட்டு வெளியே காத்து நின்றான்.
'உங்க மாதிரி யார் இருப்பா ? விளக்கேத்தி வச்சேளே என் குடும்பத்துக்கு. நிஜமாகச் சொல்றேன். அக்கணாக்குட்டி அனுப்பிக்கிறானே மாசாமாசம் அதிலே தான் வயிறு ரொம்பறது. யார் செய்வா இந்த மாதிரி இந்தக் காலத்திலே ? அவனையும் ஒரு ஆளாக்கி....அவன் ஒரு கால் காசைக் கண்ணாலே காணப்போறானோன்னு ஒடிஞ்சு போய்விட்டேன். ஸ்வாமிதான் உங்க ரூபத்திலே வந்து அவன் கண்ணைத் திறந்துவிட்டார்.... ' அக்கணாக்குட்டியைப் பார்க்கபோகும் போது அவனுடைய எஜமானரைப் பார்த்தால் இப்படி என்னென்னவெல்லாமோ சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வந்திருந்தார் முத்து.
இப்போது வாயைத் திறக்கவில்லை. முடியவில்லை அந்த நினைவெல்லாம் தோன்றிய சுவடே இல்லை. மனதில் ஒரு பீதி. ஒரு குமைச்சல். குமட்டல். ஒரு கோபம். 'பாவி ' நீ நன்னாயிருப்பியா ? ' என்று அடிவயிற்றிலிருந்து கதற வேண்டும் போலிருந்தது. அக்கணாக்குட்டி ஹால் ஓரத்தில் பெரியவர் வருவதற்காகக் காத்து நின்றவன் அப்பாவைப் பார்த்துப் புன்சிரிப்பு சிரித்தான். ஹ் என்று உறிஞ்சினான்.
முத்துவுக்கு நெஞ்சில் கட்டி புறப்பட்டாற்போல் வலித்தது. இவனையும் தாண்டி கதவைப் பார்த்தது அவர் கண். வெளியே நெளியப் போகும் நல்ல பாம்பைப் பார்ப்பது போல் ஒரு கிலி வேறு சூழ்ந்துகொண்டது.
'இந்தண்ட வாடா ' என்று வாயால் தலையை அசைத்தார் --- அவசரமாக, சுளிப்பாக.
அவன் புரிந்து கொள்ளவில்லை. புன்சிரிப்புடனேயே சாத்தியிருந்த கதவைக் கையால் காண்பித்து சைகை காட்டினான்.
பெரியவர் காவி பூட்ஸஉம் காலுமாக வந்தார். சுவரில் பதிந்த ஒரு பளபள கம்பியிலிருந்த ஒரு துண்டை எடுத்து அவரிடம் நீட்டினான் அக்கணா. அவர் கையைத் துடைத்துக் கொண்டதும், தோளைக் கொடுத்தான். பிடித்துக் கொண்டு வாத்து நடை நடந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.
முத்து ஆரம்பித்தார். 'சம்சாரத்துக்கு ஊரிலே உடம்பு ரொம்ப மோசமாயிருக்கு. பதினஞ்சு நாளா படுத்த படுக்கையாயிருக்கா. பிள்ளையைப் பார்க்கணும் பார்க்கணும்னு புலம்பறா, ஜஉரம் இறங்கவே இல்லை.... '
'அடடா....நீங்க ஒரு வார்த்தை எழுதப்படாதோ ? '
என்னமோ சாதாரண ஜஉரம்னு நெனச்சிண்டிருந்தேன். அது என்னடான்னா இறங்கற வழியாயில்லெ. அப்புறம் அவ தங்கைக்கு லெட்டர் போட்டு வரவழச்சேன், கிராமத்திலேர்ந்து. இவளானா புலம்பறா. உங்ககிட்ட விஷயத்தைச் சொல்லி பயலை அழச்சிண்டு போகலாம்னு வந்திருக்கேன் ' என்று அடுக்கிக் கொண்டே போனார் முத்து.
பெரியவர் நிமிர்ந்து அவரைப் பார்த்தார். கறுப்புத்தான் கண்ணை மறைத்திருக்கிறதே என்ன தெரியும் ? அந்த முகத்தில்தான் என்ன தெரியும் ? தடிப்புத்தான் தெரிந்தது.
முத்துவுக்கு மட்டும் தான் சொன்னதை அவர் நம்பவில்லையோ என்று வயிற்றில் கனத்தது.
பெரியவர் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தார்.
'ஊர்லெ சிநேகிதர் ஒருத்தர் காரிலே வந்திருக்கார். சேர்ந்து போயிடுவமேன்னார். ரயில்காரனுக்கு கொடுக்கறதையாவது மிச்சம் பண்ணலாம்னு நினைச்சேன். '
பெரியவர் வாய்தடிப்பு ஒரு புன்னகையாக மலர்ந்தது. சிரித்தால் அழகாகத்தான் இருக்கிறது. யார் சிரித்தால் என்ன என்று தோன்றிற்று முத்துவுக்கு.
'பெரிய மனசு பண்ணி மன்னிக்கணும் ' என்றார் முத்து.
'பாதகமில்லை ' என்று ஒரு புத்தானை அழுத்தினார் பெரியவர்.
'சாம்பு, அப்பா கூப்பிடறாரேடா போறியா ? ' என்று கேட்டார்.
'அம்மா ரொம்ப ஜஉரமாக கிடக்காடா. உன்னைப் பார்க்கணும்னு பேத்திண்டேயிருக்கா-- ராவில்லே பகலில்லே ' என்றார் முத்து.
'சரிடா சாம்பு. வேட்டி சட்டையெல்லாம் எடுத்து வச்சுக்கோ ' என்றார் பெரியவர். 'பையன் ரொம்ப ஒத்தாசையாயிருந்தான் ஸ்வாமி. சுருக்கக் கொண்டு விட்டு விடுங்கோ. '
'ம் ' உடம்பு சரியாயிருந்தா, அங்கே என்ன வேலை ? ' என்றார் முத்து.
அக்கணா பின்னாலிருந்த இன்னொரு அறைக்குப் போனான்.
வாசலிலிருந்து ஒரு தட்டில் டிபன் காபி எல்லாம் பரிசாகரன் கொண்டு வந்தான். அதற்குத்தான் புத்தானை அழுத்தினார் போலிருக்கிறது பெரியவர்.
'சாபிடுங்கோ. '
'நான் இப்பத்தானே சாப்பிட்டேன். '
'இங்கே வந்து வெறும் வயத்தோட போகலாமா ? '
முத்துவுக்குச் சொல்ல மெல்ல முடியவில்லை. 'பாலாம்பிகேச வைத்யேச ' என்று மனத்துக்குள் சுலோகம் சொல்லிக் கொண்டே காபியை மட்டும் எடுத்து கண்ணை மூடி மளமளவென்று விழுங்கினார். பரிசாரகன் பாத்திரங்களை எடுத்துப் போனான்.
அக்கணாக்குட்டி பையும் கையுமாக வந்தான். வெளிச்சத்தில் நன்றாகப் பார்க்கும்போது அவன் எவ்வளவு மாறிவிட்டிருக்கிறான் என்று தெரிந்தது. தலையை வழவழவென்று சீவி விட்டிருந்தான், வெள்ளை வெளெரென்ற சட்டை, வெள்ளை வேட்டி, முகத்தில் ஊட்டத்தின் பொலிவு, சட்டைக்கு வெளியே தெரிந்த முன்னங்கைகூட பளபளவென்று நிறம் ஏறியிருந்தது.
'என்னை ரொம்ப மன்னிச்சிக்கணும் ' என்று எழுந்து கும்பிட்டார் முத்து.
'எதுக்காக ? ரொம்ப நன்னாருக்கே. '
'நமஸ்காரம் பண்ணிட்டு போய்ட்டு வரேன்னு சொல்லிக்கோடா ' என்றார் முத்து.
அக்கணா விழுந்து வணங்கி எழுந்து 'போய்ட்ரேன் மாமா ' என்றான்.
'போய்ட்டுவா. போய் லெட்டர் போடு, அம்மாவுக்கு உடம்பு எப்படியிருக்குன்னு. எப்ப வரேன்னும் எழுதணும். '
'சரி மாமா. '
இருவரும் வெளியே நடந்தார்கள்.
இவ்வளவு சீக்கிரம் காரியம் நடக்கும் என்று நினைக்கவில்லை, சிங்கத்தின் குகையிலிருந்து வருவது போல, திரும்பிப் பார்க்காமல் வேகமாக வெளியே வந்து தோட்டத்தை தாண்டி தெருவுக்கு வந்து சாலைக்கு வந்தார் முத்து. 'மெதுவாப் போப்பா ' என்று கூடவே விரலால் நடந்து சிறு ஓட்டமாக ஓடிவந்தான்.
சாலைக்கு வந்து பஸ் ஏறினதும்தான் வாயைத் திறந்தார் முத்து.
'ஏண்டா மக்கு ' இந்த மாதிரி உடம்பு அந்த மாமாவுக்குன்னு நீ சொல்லவே இல்லியே ' என்றார்.
'என்ன உடம்பு ? '
'உனக்குத் தெரியலியா ? ரொம்ப கரிசனமா தலையைச் சொறிஞ்சு விட்டியே, புத்திதான் இல்லை, கண்ணுகூடவா அவிஞ்சு போச்சு ? '
'அது ஒட்டிக்காதாம்பா ? '
'ஒட்டிக்காதா ' யார் சொன்னா ? '
'அவாத்து மாமி, மாமா, மோகன் எல்லோரும் சொல்வாலே. '
'பின்னே அந்த மோகன், மாமி, மாமா எல்லோரும் வந்து அவர் தலையைச் சொறியப்படாதோ ? '
'அவாலுக்கெல்லாம் வேலையில்லியாக்கும் ? மோகன் பல்லிக்கூடம் போறான். மாமா என்ஜீனியர், மாமி பூ நூல்லே பை பனியன்லாம் போடறா. அவாலுக்கு டயம் ஏது ? அவா சொறியப்படாதோங்கிறீயே. '
'உன்னை ஏமாத்தியிருக்காடா எல்லாரும், அசட்டுப் பொணமே '
'ஒண்ணும் இல்லே. இத பாரு பேப்பர்லேயே போட்டிருக்கு ' என்று பையின் பிடியை அகட்டி உள்ளேயிருந்து நாலு சினிமாப் பாட்டு புத்தகங்களை எடுத்தான் அக்கணா. ஒரு புத்தகத்தைப் பிரித்து அதிலிருந்துஒரு தினசரிதாள் பக்கம் ஒன்றை எடுத்தான். அதிலெ ஒரு வெள்ளைக்காரப் பெண் யாரோ ஒரு ஆணின் கையைப் பிடித்துத் தடவிக் கொண்டு நிற்கிறாள். கருப்புக் கண்ணாடிகாரருக்கு இருந்த மாதிரியே கை, மூக்கு எல்லாம்.... 'இது யாரு தெரியுமா ? வெல்லைக்கார தேசத்திலே ரானி. போன மாசம் மெட்ராசுக்கு வந்தா --- ராஜாவோட. இந்த ஊருக்கு வந்து சினிமா, டிராமால்லாம் பார்க்கலியாம், காரை எடுத்துண்டு ஒரு கிராமத்துக்குப் போனாலாம். மாமா மாதிரி அங்கே முப்பது நாப்பதுபேர் இருக்கலாம். மருந்து சாப்பிடறாலாம். அவால்லாரையும் பார்த்து, கையெல்லாம் தடவிக் கொடுத்தா வெல்லைக்கார ரானி, போட்டோ போட்டிருக்கா பாரு தடவிக் கொடுக்கறாப்பல, ஒட்டிக்கும்னா ரானி தடவிக்கொடுப்பாலா, பேத்தியம் மாதிரி பேசறியே ? '
'பேத்யம் மாதிரியா ? நானா பைத்தியம் ? ' என்று படத்தைப் பார்க்க ஆரம்பித்தார் முத்து.
'படத்தை மட்டும் பாக்கறியே. கீலே எலுதியிருக்கு பாரு. ' என்று விரலை அந்த வரிகள் மீது ஒட்டிக் காண்பித்தான் அக்கணா.
'பாலாம்பிகேச வைத்யேச ' என்று சுலோகம் சொல்லிக் கொண்டே வினோலியா பெட்டியைத் திறந்து கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு படிக்க ஆரம்பித்தார் முத்து.
25/11/2010
16/11/2010
ஹாரிசன் பெர்ஜரான் - கர்ட் வானகட் - தமிழில்: விஸ்வநாத் சங்கர்
அமெரிக்காவின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான கர்ட் வானகட் (Kurt Vonnegut) (1922-2007) எழுதிய சிறந்த சிறுகதைகளில் ஒன்றுஹாரிசன் பெர்ஜரான் (Harrison Bergeron). உலக மக்கள் அனைவரும் எல்லா விதங்களிலும் ஒரே அச்சில் வார்த்தவர்களாக இருக்க வேண்டுமென்ற கருத்தின் அபத்தத்தைத் தனக்கேயுரிய குரூர நகைச்சுவை கலந்து இக்கதையில் சொல்லியிருக்கிறார் வானகட். உலகெங்கும் மிகவும் பிரபலமாக விளங்கும் இந்த சிறுகதை பல அமெரிக்கப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களால் நாடகமாக வழங்கப்படுகிறது. இது ஒரு தொலைக்காட்சிப் படமாகவும் வெளியாகி பெரு வெற்றி பெற்றது. இந்த சிறுகதை ‘2081’ என்ற ஹாலிவுட் திரைப்படமாகவும் வெளிவந்து சியாட்டில் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. திரு.விஷ்வநாத் சங்கரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கும் இக்கதையின் ஆங்கில மூலத்தை இங்கேபடிக்கலாம்.
2081-ஆம் ஆண்டு. எல்லோரும் ஒருவழியாக முழுமுற்றான சமத்துவத்தை அடைந்து இருந்தனர். கடவுளின் முன்போ, சட்டத்தின் முன்போ மட்டுமே கட்டுப்பட்ட சமத்துவம் இல்லை அது. எல்லா நிலைகளிலும் அனைவரையும் முழுமையாக ஒருமைப்படுத்திய அதிசயம் அது. யாரும் யாரை விடவும் புத்திசாலியாக இல்லை, அழகாகவும் இல்லை. அவ்வளவு ஏன், எந்த ஒருவரும் மற்றவரை விட அதிக வலிமையும், சுறுசுறுப்பும் கூட கொண்டு இருக்கவில்லை. 211, 212, மற்றும் 213-ஆம் அரசியல் சட்ட மாற்றங்களும், அமெரிக்க சமத்துவத்துறை முகவர்களின் தொய்வில்லாத கண்காணிப்புமே இந்த பாரபட்சமற்ற நிலைக்குக் காரணங்கள் ஆகும்.
ஆனாலும் வாழ்க்கையின் சில விஷயங்கள் சரியாக இல்லாமல் இருந்தன… உதாரணமாக, வசந்தத்தை இன்னமும் தொடங்காமல் மக்களைக் குழப்பும் ஏப்ரல் மாதத்தைப் போல! அந்த வாட்டியெடுக்கும் குளிரான ஏப்ரல் மாதத்தில்தான் சமத்துவத்துறையின் ஆட்கள் ஹாரிசனைக் கொண்டு சென்றனர். ஹாரிசன் பெர்ஜரான் - ஜோர்ஜ் மற்றும் ஹேசல் பெர்ஜரானின் பதினான்கு வயது மகன்.
அது ஒரு துயரச் சம்பவம்தான். இருப்பினும் ஜோர்ஜ் மற்றும் ஹேசலால் அதைப் பற்றி அதிகமாக சிந்திக்க முடியவில்லை…கவலைப்பட முடியவில்லை. ஹேசல் சராசரியான மதிநுட்பம் கொண்டவள். அதனால் அவளால் எதைக் குறித்தும் ஆழமாகச் சிந்திக்க முடியாது. சிந்தித்தாலும் கனப் பொழுதில் மறந்து விடுவாள். ஜோர்ஜ் சராசரியை விட அறிவாளியாக இருந்த போதிலும், அவன் காதுகளில் மன ஊனத்திற்கான ஒரு சிறிய வானொலி பொறுத்தப் பட்டிருந்தது. சட்டப்படி அதை அவன் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். அந்த வானொலி அரசாங்க டிரான்ஸ்மிட்டருடன் இணைக்கப்பட்டிருந்தது. ஜோர்ஜைப் போன்ற புத்திசாலிகள் தங்கள் மூளையை நியாயமற்ற முறையில் உபயோகிக்க அனுமதிக்காத வண்ணம் அந்த டிரான்ஸ்மிட்டர் இருபது நொடிகளுக்கு ஒரு முறை சில கூர்மையான சத்தங்களை அனுப்பிக் கொண்டிருந்தது.
ஜோர்ஜும், ஹேசலும் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த வேளை. ஹேசலின் கன்னங்களில் கண்ணீர்த் துளிகள். அதன் காரணத்தை அவள் மறந்திருந்த தருணத்தில்…திரையில் சில பெண்கள் பாலே நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
ஜோர்ஜின் தலையில் ஒரு ஓசை கேட்க, அபாய ஒலியைக் கேட்ட திருடனைப் போல அவன் எண்ணங்கள் சிதறிக் கொண்டு ஓடின.
“ரொம்ப நன்றாக இருக்கிறது இல்லையா இவர்கள் நடனம்?” என்றாள் ஹேசல்.
“என்ன?”
“இந்த பாலே ஆட்டம். அழகாக ஆடுகிறார்கள்”
“ஆமாம்” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டான் ஜோர்ஜ். அவன் அந்த பாலே பெண்களை பற்றி சிந்திக்க தொடங்கினான். அவர்கள் ஒன்றும் அவ்வளவு சிறப்பாக ஆடவில்லையே? சுமார்தான். இது மாதிரி யாராலும் ஆடிவிட முடியும். அவர்கள் முதுகிலும், கழுத்திலும் சுமைகள் கட்டப்பட்டிருந்தன. முகங்கள் முகமூடிகளால் மறைக்கப்பட்டிருந்தன. அப்பப்பா! இப்படி அழகான முகங்களையும், இயல்பான அசைவுகளையும் மூட்டை கட்டி, பின் அபிநயம் பிடிக்கிறேன் என்றால் யாரால் ரசிக்க முடியும்? ஒருவேளை நடனப் பெண்கள் ஊனமாக்கப்பட்டிருக்கக் கூடாதோ என்று வினோதமாக யோசிக்க ஆரம்பித்தான். நீண்ட நேரமில்லை. அதற்குள் அடுத்த சத்தம் வந்து அவன் எண்ணங்களை அழித்து விட்டுப் போனது.
ஜோர்ஜ் நடுங்கினான். பாலே ஆடிய எட்டு பெண்களில் இருவர் நடுங்கினர். அவன் நடுக்கத்தைப் பார்த்த ஹேசல், “இப்போது என்ன சத்தம்?” என்றாள். அவளுக்கு இது போன்ற ஓசைகள் கேட்காது.
“யாரோ சுத்தியலால் கண்ணாடிப் பால் புட்டியை உடைப்பது மாதிரி ஒரு சத்தம்.”
“இது மாதிரி வித விதமான சத்தங்களைக் கேட்பது வேடிக்கையாக இருக்குமில்லையா? ” என்றாள். அவளுக்குக் கொஞ்சம் பொறாமை தான். “எப்படி எல்லாம் யோசித்து சத்தங்களை உருவாக்குகிறார்கள்?” -ஆச்சரியப்பட்டாள்.
“ம்ம்…”
2081 திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி
“நான் மட்டும் சமத்துவத்துறை தலைமை அதிகாரியாக இருந்தால் என்ன செய்வேன் தெரியுமா?” என்று மீண்டும் தொடங்கினாள். சொல்லப் போனால், ஹேசல் தோற்றத்தில் சமத்துவத்துறை தலைமை அதிகாரி டயானா மூன் கலம்பெர்ஸின் அச்சு அசலாகவே இருப்பாள்.
“நான் மட்டும் டயானா மூன் கலம்பெர்ஸாக இருந்தால் ஒவ்வொரு ஞாயிறும் மணியோசையை வைப்பேன். நம் மதத்தை கௌரவித்த மாதிரி இருக்கும் அல்லவா?” என்று தொடர்ந்தாள்.
“வெறும் மணியோசை மட்டும் என்றால் என்னால் யோசிக்க முடியும்” என்றான்.
“நான் அதை ரொம்ப சத்தமாக வைப்பேன். என்னால் ஒரு நல்ல சமத்துவத்துறை தலைவியாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது”
“யாரால் தான் அப்படி இருக்க முடியாது?”
“சாதாரணத்தைப் பற்றி என்னை விட யாருக்கு அதிகம் தெரிந்திருக்க முடியும்?” என்றாள்.
“அது சரி” என்றான் ஜோர்ஜ். அவன் சிறையில் இருக்கும் தன் மகன் ஹாரிசனை பற்றி மெல்ல நினைக்கத் தொடங்கிய பொழுது, இருபத்தியொரு முறை துப்பாக்கி அவன் தலையில் சுட்டு அதை நிறுத்தியது.
“ஐயோ! அது ரொம்ப பயங்கரமாக இருந்ததா?” என்று அலறினாள் ஹேசல்.
ஆமாம். அது பயங்கரமான சத்தம் தான். ஜோர்ஜ் வெளிறிப் போய் நடுங்க, அவன் கண்களில் நீர் தளும்பிக் கொண்டிருந்தது. அந்த இரண்டு பாலே பெண்களும் தலையை பிடித்துக் கொண்டு மேடையில் சுருண்டு விழுந்தனர்.
“திடீரென்று நீ மிகவும் சோர்வாகத் தெரிகிறாய். நீ ஏன் கொஞ்ச நேரம் சோபாவில் சாய்ந்து கொண்டு, உன் ஊனப் பைகளைத் தலையணை மேல் வைத்து ஒய்வு எடுக்கக் கூடாது?” என்றாள் ஹேசல். ஜோர்ஜின் கழுத்தில் பூட்டப்பட்ட துணிப்பையை அவள் குறிப்பிட்டாள். அதில் நாற்பத்தியேழு பவுண்ட் எடையுள்ள ஈயப் பந்துகள் அடைக்கப்பட்டிருந்தன. “போய் ஓய்வெடு. கொஞ்ச நேரம் நீ எனக்கு சமமாக இல்லை என்றால் நான் வருத்தப்பட மாட்டேன்”.
“பரவாயில்லை…” ஜோர்ஜ் பையை தூக்கிய படியே சொன்னான். “இதை நான் இப்போதெல்லாம் கவனிப்பதேயில்லை. கிட்டத்தட்ட இது என் உடலின் ஒரு அங்கமாகி விட்டது”.
“நீ சில நாட்களாகவே ஓய்ந்து போய் களைப்பாக இருக்கிறாய்” என்றாள். “இந்த பையின் அடியில் சின்னதாய் ஒரு ஓட்டை போட்டு சில பந்துகளை எடுக்க எதாவது ஒரு வழி இருக்குமானால்…”
“என்ன விளையாடுகிறாயா? ஒவ்வொரு பந்துக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை, மற்றும் இரண்டாயிரம் வெள்ளி அபராதம். அது புத்திசாலித்தனம் இல்லை.” என்று மறுத்தான் ஜோர்ஜ்.
“நீ வேலை முடித்து வீட்டுக்குத் திரும்பும்போது மட்டும் சிலவற்றை எடுத்தால் போதும். நீ இங்கே யாரோடும் போட்டியிடவில்லையே? தனியாக தானே இருக்கிறாய்”.
“நான் எடுக்க ஆரம்பித்தால், பின் அனைவரும் எடுத்து விடுவார்கள். பிறகு நாம் எல்லோரும் பழைய நாட்களுக்குப் போக வேண்டியது தான். எல்லோரும் எல்லோருடனும் போட்டி போட்டுக்கொண்டு, பொறாமைப் பட்டுக்கொண்டு… உனக்கு அதில் விருப்பமா?”
“இல்லவே இல்லை. அதை நான் வெறுக்கிறேன்”.
“அப்படி வா. சட்டத்தை மக்கள் ஏமாற்றத் தொடங்கும் போது சமுதாயம் என்ன ஆகும் என்று நினைக்கிறாய்?” என்று கேட்டான் ஜோர்ஜ்.
ஹேசல் பதிலை யோசிக்கையில், அவன் தலையில் சைரன் சத்தம் ஓடிக்கொண்டிருந்தது.
“சிதறிச் சின்னாபின்னமாகும்”
“எது?” - ஜார்ஜ் குழப்பத்துடன் கேட்டான்.
“சமுதாயம்”- ஹேசல் சந்தேகத்துடன் சொன்னாள். “அதைப் பற்றிதானே கேட்டாய்?”
“இருக்கலாம். யாருக்குத் தெரியும்?”
தொலைக்காட்சி நிகழ்ச்சி செய்தி அறிவிப்புக்காக திடீரென்று நிறுத்தப்பட்டது. எதற்காக இந்த செய்தி அறிக்கை என்று முதலில் புரியவில்லை. செய்தி வாசிப்பவனும், மற்றெல்லா செய்தி வாசிப்பாளர்களைப் போல திக்கித்தான் பேசினான். அரை நிமிட கடும் முயற்சிக்கு பின் ஆரம்பித்தான் - “வணக்கம்…”
தொடர இயலாமல், அருகில் இருந்த நடனப் பெண்ணிடம் அறிக்கையைப் படிக்கத் தந்தான்.
“பரவாயில்லை. அவன் முயற்சி செய்தான். அதுவே பெரிய விஷயம். கடவுள் அவனுக்கு தந்திருப்பதை வைத்து அவனால் முடிந்த அளவுக்கு முயன்றான். இதற்கே அவனுக்கு சம்பள உயர்வு கிடைக்க வேண்டும்” என்றாள் ஹேசல்.
“வணக்கம்” என்று செய்தியை வாசிக்க தொடங்கினாள் நடனப் பெண். அவள் பேரழகியாக இருக்க வேண்டும். அவளுடைய முகமூடி மிகவும் அகோரமாய் இருந்தது. இருநூறு பவுண்ட் எடையுள்ள ஆண்கள் அணியும் ஊனப் பைகளை அவள் அணிந்திருந்ததை வைத்தே, அந்த பாலே பெண்களில் அவள்தான் அதிக வலிமையும், நளினமும் கொண்டவள் என்பதைச் சொல்லிவிட முடிந்தது.
ஒரு பெண்ணுக்கான மோசமான குரலைப் போலில்லாமல் நல்ல குரலில் பேசத் தொடங்கியதற்காக அவள் உடனே மன்னிப்புக் கேட்க வேண்டியிருந்தது. அவள் குரல் இதமாக, இனிமையாக, ஒரு மெல்லிய சங்கீதத்தை போன்று இருந்தது. “மன்னிக்கவும்”- தன் குரலை மிகச் சாதாரணமானதாய், விசேஷமோ, பொறாமையோ ஏற்படுத்தாத குரலாக மாற்றிக் கொண்டு மீண்டும் தொடர்ந்தாள்.
“ஹாரிசன் பெர்ஜரான். வயது பதினான்கு.” என்று அவள் படிக்கும் போது, அவள் குரல் காக்கை கரைவது போல இருந்தது. “இவன் சற்று முன் சிறையிலிருந்து தப்பி விட்டான். அரசாங்கத்தை வீழ்த்த சதி செய்தான் என்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவன். இவன் ஒரு மேதாவி, வீரன், மற்றும் ஊனமற்றவன். மேலும் இவன் ஒரு பயங்கரவாதி என்று கருதப்படுகிறது.”
காவல்துறையிடமிருந்த ஹாரிசனின் புகைப்படம் ஒன்று திரையில் காட்டப்பட்டது… நேராக, தலைகீழாக, பக்கவாட்டில், மீண்டும் தலைகீழாக, மீண்டும் நேராக என்று மாறி மாறி காட்டப்பட்டது. அந்த முழு நீளப் படத்தில் ஹாரிசன் ஒரு அளவுகோலின் முன் நின்றிருந்தான். சரியாக ஏழடி உயரம் இருந்தான்.
மற்றபடி அவனுடைய தோற்றம் அகோரமாகவும், ஒரு உலோகக் கடையைப் போலவும் இருந்தது. யாரும் இந்த அளவிற்கு கனமான ஊனக் கருவிகளை அணிந்ததில்லை. சமத்துவத்துறை அதிகாரிகள் எண்ணியதை விட படு வேகமாக அவன் தடைகளைத் தளர்த்திவிட்டான். அவன் அணிந்திருந்த மன ஊன வானொலி மற்றவர்களுடையதைப் போல சிறியதாய் இல்லை. பூதாகாரமாக இருந்தது. அவனுடைய மூக்குக் கண்ணாடியோ ஒரு சோடா புட்டியளவுக்கு தடித்திருந்தது. அந்த தடித்த வில்லைகள் அவனை அரைக் குருடாக ஆக்குவது மட்டுமில்லாமல், அவனுக்கு மண்டையைப் பிளக்கும் தலைவலியை தருவதற்காகவும் தயாரிக்கப்பட்டவை ஆகும்.
அவன் உடம்பெல்லாம் உலோகம். வழக்கமாக பலசாலிகளுக்கு அளிக்கப்படும் ஊனக்கருவிகளில் ஒரு ஒழுக்கமும், இணக்கமும் இருக்கும். ஆனால் இவனோ ஒரு நடமாடும் காயலான் கடையாக இருந்தான்! கிட்டத்தட்ட, ஹாரிசன் எப்போதும் ஒரு முன்னூறு பவுண்ட்களை சுமந்திருந்தான்.
மேலும் அவனை அசிங்கமாக்க, சமத்துவத்துறை அதிகாரிகள் அவன் மூக்கில் எப்போதும் ஒரு சிவப்பு ரப்பர் பந்தைச் செருகி வைத்திருந்தனர். அவன் புருவங்கள் மழிக்கப்பட்டிருந்தன. அவன் வெண்ணிற பற்களுக்குக் கூட கருப்புத்தொப்பி மாட்டி வைத்திருந்தனர்… தாறுமாறாக!
“இவனைச் சந்திப்பவர்கள் இவனுடன் உரையாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பப்டுகிறார்கள்.” என்று இருமுறை அறிவித்தாள்.
ஒரு கதவு அதன் நிலைப்படியிலிருந்து கிழித்து எடுக்கப்படும் நாராசமான சத்தம் கேட்க, தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து அலறல்களும், அழுகைகளும், குழப்பமான குரல்களும் பீறிட்டுக் கொண்டு வந்தன. ஹாரிசனின் புகைப்படம் பூகம்பத்தில் ஆடுவதைப் போல திரையில் மேலும் கீழுமாக ஆடிக் கொண்டிருந்தது.
ஜோர்ஜ் அது நிலநடுக்கம் என்று சுலபமாக அறிந்து கொண்டான்.சரிதான். அவன் வீடு இது போன்ற இரைச்சலான சத்தத்துடன் பல முறை ஆடியிருக்கிறதே! “கடவுளே! அது ஹாரிசன் தான்” என்றான் ஜார்ஜ்.
அந்தத் தெளிவு பிறந்த நொடியிலேயே ஒரு வாகனம் மோதி உடையும் சத்தம் அவன் தலையில் வந்து அதை அள்ளிக் கொண்டு சென்றது.
கண்களைத் திறந்து பார்த்த போது ஜோர்ஜின் முன் ஹாரிசனின் புகைப்படம் இல்லை. மாறாக உயிருள்ள உருவமாக ஹாரிசன் திரையில் தோன்றினான்.
ஆரவாரமான சத்தத்துடன், ஆஜானுபாகுவான கோமாளியைப் போன்று அரங்கத்தின் நடுவே ஹாரிசன் நின்றிருந்தான். உடைக்கப்பட்ட அரங்கக் கதவின் குமிழ் அவன் கையில் இருந்தது. நடனப் பெண்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள், அறிவிப்பாளர்கள் எல்லாம் மரண பயத்துடன் அவன் முன்னே மண்டியிட்டுருந்தனர்.
“நான் மன்னாதி மன்னன்! சக்கரவர்த்தி!” - கூவினான் ஹாரிசன். “கேட்கிறதா? நான் ஒரு சக்கரவர்த்தி! நீங்கள் எல்லோரும் என் ஆணைக்கு உடனே அடிபணிய வேண்டும்!” அவன் தரையை உதைத்த போது அரங்கமே அதிர்ந்தது.
“ஒரு நொண்டியாக, ஊனமாக, நோயாளியாக நான் இங்கே நின்றாலும், நானே ராஜா! இந்த உலகத்தில் இதுவரை இருந்த மன்னர்களை விட நானே சிறந்த அரசன்! நான் யார் என்று காட்டுகிறேன் பாருங்கள்!” என்று உரக்கக் கத்தினான்.
தன் ஊனக் கருவிகளை தாங்கிக் கொண்டிருந்த பட்டைகளை நனைந்த காகிதத்தை கிழிப்பதை போல கிழித்து எறிந்தான் ஹாரிசன். ஒவ்வொரு பட்டையும் ஐயாயிரம் பவுண்ட் எடையை தாங்கும் வலிமை உடையது.
அவனுடைய இரும்பு ஊனக் கருவிகள் தரையில் விழுந்து உடைந்தன.
தன் தலைப்பட்டையை அழுத்திப் பூட்டியிருந்த பூட்டை, ஹாரிசன் தன் கட்டை விரலால் அழுத்தி, கொத்தமல்லியை கிள்ளுவதைப் போல கிள்ளி எறிந்தான். தன் வானொலியையும், கண்ணாடியையும் சுவற்றில் முட்டி உடைத்தான்.
மூக்கின் மேலே இருந்த சிவப்பு ரப்பர் பந்தைக் கழற்றி வீசி எறிந்த போது, இடிகளின் கடவுளே பயந்து போகும் படியான ஒரு மாவீரனாக அவன் மாறி இருந்தான்.
கீழே மண்டியிட்ட மக்களைப் பார்த்து சொன்னான் - “நான் இப்போது என் அரசியைத் தேர்ந்தெடுக்க போகிறேன்! எந்த பெண்ணுக்கு முதலில் எழ துணிவு இருக்கிறதோ அவளே என் மனைவி! இந்த நாட்டின் அரசி!”
ஒரு நொடிக்குப் பின் காற்றில் ஆடும் மூங்கிலைப் போல ஒரு பாலே நடன பெண் எழுந்து நின்றாள்.
ஹாரிசன் அவள் காதிலும், உடலிலும் பூட்டப் பட்டிருந்த மன, உடல் ஊனக் கருவிகளை சட்டென அகற்றினான். இறுதியாக, அவளுடைய முகத்திரையைக் கிழித்தான்.
அவளோ கண்களை பறிக்கும் கொள்ளை அழகு!
அவள் கைகளை பிடித்து கொண்டு ஹாரிசன், “இப்போது நாம் மக்களுக்கு நடனம் என்றால் என்னவென்று காட்டுவோம்! எங்கே இசை?” என்று கட்டளை இட்டான்.
இசைக்கலைஞர்கள் தங்கள் இருக்கைகளுக்கு விழுந்தடித்துக் கொண்டு ஓடினர். ஹாரிசன் அவர்களுடைய ஊனக் கருவிகளையும் அகற்றினான். “ம்ம்…சிறப்பாக வாசியுங்கள். நான் உங்களைக் கோமானாகவும், சீமானாகவும், மந்திரியாகவும் ஆக்குகிறேன்!” என்றான்.
இசை தொடங்கியது. மிகச் சாதரணமான இசை…அற்பமாக, கீழ்த்தரமாக, போலியாக இருந்தது. ஹாரிசன் இரண்டு இசைக்கலைஞர்களை பிடித்து இழுத்து அடித்துக் கொண்டே பாடினான். பிறகு அவர்களை நாற்காலியில் தள்ளி விட்டான்.
மீண்டும் இசை ஆரம்பமானது. இப்போது அது மேம்பட்டு இருந்தது.
ஹாரிசனும் அவன் அரசியும் அமைதியாக கேட்டனர்… மிக அமைதியாக. தங்கள் இதயத்துடிப்பை இசையின் தாளத்தோடு ஒருங்கிணைக்கும் அமைதி அது!
இப்போது அவர்களின் கணம் முழுவதும் கால் விரல்களில் இருந்தது.
ஹாரிசன் தன் பெரிய கைகளை அந்த பெண்ணின் சிற்றிடையில் வைத்த போது, அவள் மிதப்பதாக உணர்ந்தாள்.
நொடிப் பொழுதில் உற்சாகமும், நளினமும் வெடித்துக் கிளம்ப, அவர்கள் காற்றில் தாவினர்.
அங்கு நாட்டின் சட்டம் மட்டுமல்ல, புவியீர்ப்பு விசையின் விதிகளும் தகர்க்கப்பட்டன.
அவர்கள் சுற்றினர், சுழன்றனர், துள்ளினர், தாவினர், குதித்தனர், மிதந்தனர்.
நிலவின் புள்ளிமானைப் போல துள்ளித் துள்ளி ஆடினர்.
முப்பதடி உயரமுள்ள அரங்கத்தின் கூரையைத் தாவித் தாவித் தொடத் துடித்தனர். அதை முத்தமிட முயன்றனர்.
முத்தமிட்டனர்!
புவியீர்ப்பு விசையைத் தங்கள் காதலாலும், மன உறுதியாலும் ஈடு செய்து காற்றில் மிதந்தபடியே இருவரும் நீண்ட நேரம், மிக நீண்ட நேரம் முத்தமிட்டுக் களித்தனர்.
அப்போது சமத்துவத்துறைத் தலைவி டயானா மூன் க்லம்பெர்ஸ் ஒரு பெரிய இரட்டைக் குழல் துப்பாக்கியுடன் அங்கே வந்தாள். இருமுறை சுட்டாள். மன்னனும், மகாராணியும் தரையைத் தொடுவதற்கு முன்பே இறந்துவிட்டனர்.
பின் இசைக்கலைஞர்களை நோக்கிக் குறி பார்த்தாள். பத்து வினாடிகளுக்குள் அவர்கள் தங்கள் ஊனக் கருவிகளை மீண்டும் மாட்டிக்கொள்ளும்படி உத்தரவிட்டாள்.
அந்த சமயத்தில் தான் ஜோர்ஜின் தொலைக்காட்சிப் பெட்டி எரிந்து போனது.
ஹேசல் இந்த இருட்டடிப்பை பற்றி ஜோர்ஜிடம் சொல்வதற்காகத் திரும்ப, அங்கு அவன் இல்லை. ஜோர்ஜ் பியர் பாட்டிலை எடுக்க சமையல் அறைக்குச் சென்றிருந்தான்.
பியருடன் திரும்பி வந்த ஜோர்ஜ், தலைக்குள் வந்த சத்தத்தால் ஒரு நொடி தயங்கி நின்றான். பின் உட்கார்ந்த படியே, ஹேசலை பார்த்து, “அழுதாயா?” என்றான்.
“ஆமாம்”
“எதற்காக?”
“ஞாபகமில்லை. தொலைக்காட்சியில் மிகவும் சோகமாக ஏதோ ஒன்று…”
“என்ன விஷயம்?”
“தெரியவில்லை. எல்லாம் குழப்பமாக இருக்கிறது.”
“துக்கம் தருவதை எல்லாம் மறந்து விடு”
“ஆமாம். நான் எப்போதும் துக்கமான எதையும் மறந்து விடுவேன்”
“சமர்த்து!” என்றான் ஜோர்ஜ்.
மறுபடியும் துப்பாக்கியின் சத்தம் அவன் தலையில் இறங்க அவன் நடுங்கினான்.
“ஐயோ! எனக்குத் தெரியும்…அது ரொம்ப பயங்கரமான சத்தம்தானே?” என்றாள் ஹேசல்.
“எங்கே? இன்னொருமுறை சொல்…” என்றான் ஜோர்ஜ்.
“ஐயோ! எனக்குத் தெரியும்…அது ரொம்ப பயங்கரமான சத்தம்தானே?” என்றாள் மீண்டும்.
07/11/2010
ஞானப்பால் - ந.பிச்சமூர்த்தி
லிங்கங் கட்டி சத்திரத்துக்கு வந்து ஒரு வருஷமாகி விட்டது.
அவன் வந்தது தனக்கடித்த அதிர்ஷ்டம் என்றுதான் தவசிப்பிள்ளை
நினைத்துக்கொண்டான். எப்பொழுதுமே தனக்கு அதிருஷ்டம்தான் என்ற நினைப்பு
அவன் நெஞ்சில் தடித்தே இருந்தது. ‘அ’னா ‘ஆ’வன்னா தெரியாத கரிக்கட்டைக்குப்
பதினைந்து ரூபாய் சம்பளமும், சாப்பாடும், தினம் ஆறுபேருக்குச் சாப்பாடு
போட்டுச் சமாளிக்கும் அதிகாரமும் எல்லாருக்கும் இலேசில் கிடைத்துவிடுமா
என்ன? பிள்ளை குட்டி இருந்திருந்தாலாவது துரதிர்ஷ்டத்தைப் பற்றி நினைக்க
வேண்டி இருக்கும்; சத்திரத்து முதலியாரை வையவேண்டி இருக்கும்.
தவசிப்பிள்ளையின் அதிருஷ்டம், அவன் ஒண்டிக்கட்டை முதலெடுப்பிலேயே முதலியாரை வாழ்த்திடும் வாய்ப்பாகவே அந்த வேலை அமைந்துவிட்டது. அதைத்
தவிர, வாழ்த்துவதற்கு அதில் இன்னும் பல வாய்ப்புகள் இருந்தன. போகப்போகத்தான் தெரிந்தது. சத்திரத்துக்கு வேண்டிய கறிகாய் சாமான்கள் வாங்குகிற பொறுப்பு அவனைச் சேர்ந்ததுதானே? அவன் முதலில்
யோக்கியனாகத்தான் இருந்தான். இருந்தாலும் கைக்கு உறையைப் போட்டுக் கொண்டு தேன் எடுக்க முடியுமா? கையில் ஒட்டிக்கொள்வதை நக்காமல்தான் இருக்க
முடியுமா? அவனுக்குத் தெரியாவிட்டாலும் சொல்லிக் கொடுக்க வதங்கிய கத்திரிக்காயும் , தேசல் படிக்கல்லும், தக்கைப் போட்ட எண்ணெய்ச் செம்பும், கறிகாய் கடைக்காரியும், மளிகை மாணிக்கம் செட்டியாரும் இருக்கும்பொழுது அவனால் என்ன செய்துவிட முடியும்? முதலாளியை வாழ்த்துவதற்கான ஆதாரங்கள் இதில் எல்லாம் ஏராளமாக இருந்தன.
சத்திரத்துக்குத் தவசிப்பிள்ளைதான் சர்வாதிகாரி. ஆகையால் சட்டமும் இல்லை,
நெறிகளும் இலலை. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்து பார்ப்பார்களா?
அங்கே வேலை செய்துக் கொண்டிருந்த ஆளுக்குத் தவசிப்பிள்ளை ஒருநாள் சீட்டைக்
கிழித்துவிட்டான். ஆனால் பாவம்! தவசிப்பிள்ளை பேரில் மட்டும் குற்றம்
சொல்லக்கூடாது. அதிருஷ்டம் வந்து பிடரியில் குந்திக்கொண்டு
கட்டளையிட்டால் நிறைவேற்ற வேண்டியதுதானே!.
ஒரு நாள் எங்கிருந்தோ ஒரு லிங்கங் கட்டி அங்கு வந்து சேர்ந்தான்.
வந்தவனைத் தவசிப் பிள்ளை ஒன்றும் கேட்கவில்லை. சத்திரத்துக்கு வந்த பிறகு
பெற்ற அனுபவத்தால் தவசிப்பிள்ளைக்கு ‘எக்ஸ்ரே” பார்வை அந்துவிட்டது. ஆனால்
அதன் உதவி இல்லாமலேயே தவசிப் பிள்ளையால் லிங்கங்கட்டியை எடை போட்டுவிட முடிந்துவிட்டது.
மழுக்கிய தலை, கழுத்திலே வெள்ளிப்பெட்டி மூடிய லிங்கம், இடுப்பில்
பழுப்பேறீய வேஷ்டி- நாலுமுழ நீளம், இருபத்தி நாளு அங்குல அகலம்.
லிங்கங்கட்டி தலையைத் தடவிக்கொண்டு நின்றானேயொழிய எதுவும் பேசவில்லை.
ஆனால் தவசிப்பிள்ளை பதில் சொல்லிவிட்டான்.
“சமையல் ஆன பிறகு சாப்பிடலாம். இப்போது எங்கே இருந்து எங்கே போறீங்க?”
”பண்டாரத்துக்கு ஊரேது, பேரேது, போக்கிடமேது? சோறு கண்டால் சொர்க்கம்.
ஒரு கவளம் சோறு இங்கே நெதம் கிடைச்சா இது தான் போக்கிடம். அதை இதைச்
செஞ்சிக்கிட்டுக் கிடந்துடுவேன்”
தவசிப் பிள்ளைக்கு ஒரே யோசனை. ஆளைப்பார்த்தால் சுமை தாங்கி மாதிரி
இருக்கிறான். எந்த வேலை வைத்தாலும் தாங்குவான்! சமையல் பாத்திரம்
விளக்குகிற காத்தானோடு தினம் போராட முடிகிறதா? அஞ்சு ரூபாய் சம்பளமும்,
மிச்சம் மீதம் தினம் சோறு கிடைக்கிறதே - அது போதாதாம்! தினம்
அடித்துக்கொள்கிறான்! சோறு கொடுத்தால் குழம்பில்லையா என்கிறான்: குழம்பு
கொடுத்தால் கறியில்லையா என்கிறான்: சோறு குழம்பு கறி கொடுத்தால்,
இவ்வள்வு தானோ என்கிறான்! இவன் வம்பே இல்லாமல் ஒழித்துவிட்டால்?
சுமைதாங்கிதான் வந்திருக்கிறான்! ஒரு கவளம் சோறு செலவு! ஐந்து ரூபாய்
மிச்சம்!
மறுநாள் காத்தான் சீட்டு முன்னறிவிப்பின்றிக் கிழிக்கப்பட்டது. லிங்கங்
கட்டிக்கு அந்தப் பதவி அளிக்கப்பட்டதென்ற விசயம் தெரியவே தெரியாது.
சோற்றுக்காக தினம் ஊர் ஊராய் அலையவேண்டாம்! ஒரு மணி நேரம் பாத்திரம்
தேய்த்துப் பண்டம் கழுவிக் கொடுத்தால் புண்ணியம்! நாவுக்கரசர் உழவாரப்படை
வைத்திருக்கவில்லையா? பெரிய அதிருஷ்டம் அடித்துவிட்டதாக
லிங்கங்கட்டிக்கு அதிக மகிழ்ச்சி. தவசிப்பிள்ளையும் தனக்கு அதிருஷ்டம்
அடித்ததென்று நினைத்துக்கொண்டான்.
வந்த புதிதில் எல்லாமே நன்றாக இருந்தன. ஒரு கவளம் கேட்ட ஆளுக்கு இரண்டு
வேளையும் மூன்று கவளமும் கிடைத்துவிட்டால் மனம் துள்ளாதா? பாத்திரங்கள்
கரி போகத்தேய்க்கப்பெற்றுப் பளபளப்பாக இருந்தன. முனகாத நல்ல ஆள் கிடைப்பது
ஒரு வாய்ப்புத்தான். “சத்திரத்து வேலைக்குத்தான் புணையாம்! காத்தான் சாமான் தூக்க்கும் கூலிக்காரனல்லவாம்!” என்ன லூட்டி அடித்துக் கொண்டிருந்தான்! அப்பாடா என்றிருந்த தவசிப்பிள்ளைக்கு தினம் சாப்பிட்டுவிட்டுச் சத்திரத்துத் திண்ணையில் லிங்கங்கட்டி படுத்துக் கொண்டபோது , ஆயாடீ என்று சொல்லிக் கொண்டே ஆறுதலாகப் படுத்துக்கொண்டான் தவசிப்பிள்ளை.
அதோடு விசயம் போய்விடவில்லை சத்திரத்தில் வந்து போகிறவர்கள் லிங்கங்
கட்டியைப் பாராட்டாமல் போவதில்லை.
”நல்ல ஆளு! பக்திமான்! நாள் தவறாமல், மணி பிசகாமல் திருக்குளத்தில்
பல்லைத் தேய்த்துத் துணி துவைத்துக் குளித்துவிட்டு பட்டையாய்த்
திருநீறிட்டுக் கொண்டு கிழக்கே சூரியனைப் பார்த்துத் தவறாமல் செய்கிறாரே, அது ஒண்ணே போதும்! இந்த மாதிரி ஆளைப் பார்க்கறதே அபூர்வமாயிடுத்தே!” என்று வியப்படைவார்கள்.
ஆமாம்! இந்தக் கிரியைகளை லிங்கங் கட்டி அலட்சியப்படுத்துவதில்லை. அதற்கு
மேல் படிப்பு கிடிப்பு என்று லிங்கங்க் கட்டி தொந்தரவெதுவும் பட்டுக்கொள்வதில்லை “ஒருகால் சிவசிதம்பரம் என்று சொன்னால் இருக்காது
ஊழ்வினையே” என்று மட்டும், பேச்சு நடுவில் புகுத்துவான. அதை நம்பினானா
இல்லையா என்று கேட்டால் அவனுக்கே சொல்லத்தெரியாது. லிங்கங் கட்டி வெள்ளை
வேட்டிப் பண்டாரமானபோது சமய அறிவு ஒன்றையும் சம்பாதித்துக் கொள்ளவில்லை.
லிங்கத்தைக் கயிற்றில் கட்டிக் கழுத்தில் மாட்டிக்கொண்டு செய்யவேண்டிய
காரியங்களை எல்லாம் சொல்லிக்கொடுத்துவிட்டு, பசுபதியும் பரந்த உலகமும்
இருக்குமட்டும் கவலையில்லை, கிழக்கே போ என்றார்கள்.அன்று முதல் சொன்னபடி
செய்து கொண்டு வந்தானே ஒழிய, தன் கிரியைகளையும் மனத்தையும்
பிணைக்கவேண்டுமென்று அவனுக்கு தோன்றியதில்லை இரண்டும் ஒன்றிய செயல்நெறி காணவேண்டும் என்று துடித்ததில்லை.
எனவே சத்திரத்துக்கு வந்து போகிறவர்களில் யாராவது இரண்டணா நாலணா
கொடுத்தால், அதை மறுப்பதில்லை. மறுக்க வேண்டும் என்று தோன்றியதில்லை.
அதற்கு மாறாகக் காசு தேவையாக இருந்தால் கொஞ்சம் புதுக் காசாகக் கொடுங்கள்
என்று வாங்கிக்கொண்டு கெட்டியாக் இடுப்பில் சொருகிக்கொள்வான்.
வந்த எட்டு ஒன்பது மாதங்களுக்குள் புது விளக்குமாறு தேய ஆரம்பித்துவிட்டது. லிங்கங்கட்டியின் பேரில் எவ்வித வஞ்சனையுமில்லை. தவசிப்பிள்ளையோ பெரிய பேர்வழி! நாளாக ஆக லிங்கங்கட்டியின் உணவில் ஒரு கவளம் இரண்டு கவளம் குறைய ஆரம்பித்தது. சிலநாள், கறியோ குழம்போ கூட இருக்காது. சத்திரத்துக்கு வந்தவர்கள் அதிகமாகச் சாப்பிட்டுவிட்டார்கள் போல் இருக்கிறது என்று நினைத்துக்கொண்டான்.
அவனுக்கு ஆட்சேபனை இல்லை என்றாலும் அவன் வயிறு புகார் செய்தது. இரண்டொரு நாள் பல்லைக் கடித்துக்கொண்டிருந்தான். புண்யவான் தருமம்
பண்ணியிருக்கிறான்! ஒரு கவளம் குறைந்து போனால் என்ன பிரமாதம் என்று ஒரு
நாள் இரண்டு நாள் நினைத்துக் கொண்டான் முடியவில்லை. மூன்றாவது தினம்
முதல் சத்திரத்துச் சாப்பாட்டுக்கு பிறகு கருமாதி, கல்யாணம், மகேசுவர
பூஜை என்று கேள்விப்பட்டால், தவறாமல் அங்கும் போய்ச் சாப்பிடுவதென்று
வழக்கப்படுத்திக்கொண்டான். கொள்ளுத் தண்ணி ஊத்துவதாகக் கேள்விப்பட்டால்
கூட அங்கு போய் வாசனையாவது பார்த்துவிட்டு வந்தான்! அங்கெல்லாம் கூட
இரண்டணா ஓரணா கிடைத்தது.
லிங்கங் கட்டிக்குக் காசு கிடைக்கிறது என்று தெரிந்தவுடன்தான்
தவசிப்பிள்ளை தேய்பிறை மரபை உணவில் புகுத்த ஆரம்பித்தான். சத்திரத்தில்
பண்டாரத்துக்கு விருந்தா வைப்பார்கள்? எதோ புண்ணிய காரியத்தில் அப்படி
இப்படித்தான் இருக்கும் என்று சொல்லும்பொழுது லிங்கங் கட்டிக்கூட சகஜம்
தான் என்று ஒத்து ஊதிவிடுவான். ”வேண்டுமானால் ஏதாவது ஓட்டலில் வாங்கிச்
சாப்பிடு சாமியாரே!” என்று உபதேசம் செய்வான் தவசிப்பிள்ளை.
லிங்கங் கட்டிக்குக் காசு சேர்ந்துபோய்விட்ட்தென்று எப்படியோ தவசிப்பிள்ளை கணக்குப் பண்ணிவிட்டான். அதை எப்படியாவது கரைத்துவிட வேண்டுமென்ற விஷம எண்ணம் அவனுக்கு வந்து விட்டது.
தவசிப்பிள்ளையிடனிடத்தில் பணத்தை வைத்திரு என்று லிங்கங் கட்டி
கொடுத்திருந்தால் இந்த் விசம எண்ணம் தோன்றியிருக்குமா என்பது ரசமான
கேள்வி. ஆனால் விடை எளிது. நிச்சயமாக தோன்றியே இருக்காது. இதில் வந்த
கஷ்டமென்னவென்றால் பாலுக்குப் பூனையைக் காவல் வைக்கமுடியாது என்பதுதான்.
லிங்கங் கட்டி எதோ குருட்டுச் சாமர்த்தியத்துடன் சில்லறை அடகு பிடித்து
வந்த கிழவியிடம் இந்த பணத்தைக் கொடுத்து வைத்திருந்தான். கடவுள்
பொய்யாகப் போனால் கூட அந்தக் கிழவி பொய்யாக போகமாட்டாள் என்று அந்த
வட்டாரத்திலே அவளூக்கு நல்ல பேர்!.
ஆனால் இந்த இரகசியம் தவசிபிள்ளைக்குத் தெரியாது. திருட்டுப் பயல் என்று
கறுவிக்கொண்டே எப்போதும் போல் அரை வயிற்றுச் சோறு போட்டு முழு வேலையையும் வாங்கிக் கொண்டிருந்தான்.
தவசிப்பிள்ளைக்கு ஒரு யோசனை தோன்றிற்று.
“என்ன லிங்கங் கட்டி! உனக்குத்தான் பெண்டாட்டி இல்லியே!”
”பண்டாரமாச்சே!”
”அப்படின்னா, தொடுப்புக்கூட?”
“அதென்னங்க, நாக்கு அழுகிப்போயிடாது”
“கோவிச்சுக்காதே. ஒம் பணத்தைப் பின்னே என்ன செய்யறே?”
“பத்திரமா இருக்குங்க”
“நீ நின்னா நெடுஞ்சுவரு, விழுந்தா குட்டிச்சுவர். பெண்ணா பிள்ளையா பெண்டாட்டியா ? ஒண்ணும்தான் இல்லை. காலணாவுக்கு காராபூந்தி கூட வாங்கிச்
சாப்பிடமாட்டே. பணத்தைப் பத்திரமா வைச்சுட்டு என்ன பண்ணுவே?”
உள்ளபடியே லிங்கங்க் கட்டிக்குத் திகைப்பாய் போய்விட்டது. ஆமாம், பணத்தை
வைத்துக்கொண்டு என்ன பண்ணுகிறது?
“பின்னே எறிஞ்சிடலாமா?’
”அதுக்குச் சொல்லவில்லை. ஒரு நல்ல காரியம் சொல்றேன், யோசிச்சுப்பாரு”.
”ஓ!”
“கழுத்து லிங்கம் இருக்கில்லே?”
“ஆமாம்”
“இதைக் கவுத்தாலே கட்டிப் போட்டுக்கிட்டுக் கிடக்கிறியே! இருக்கிற பணத்துக்குப் பவுனைக் கிவுனை வாங்கிச் செயின் பண்ணி லிங்கத்தை அதில் கோத்துப்பிடேன். கழுத்துக்கும் அழகாயிருக்கும். லிங்கமும் பார்வையாயிருக்கும். திருக்குளத்திலே திருநீறும் தங்கச் செயின் லிங்கமுமாகக் கிழக்கே சூரியனைப் பார்த்துக்கொண்டு நிக்கறதைப் பார்த்தால் அசல் சிவப்பழம்பாங்க . நல்லா இருக்குமே?”
”என் கழுத்துக்கு என்னாத்துக்குங்க?”
“ஒன் கழுத்துக்கா செயின்? இல்லை இல்லை லிங்கத்துக்குச் செயின் செய்யச்
சொல்றேன். செயின் போட்ட லிங்கத்தை மடியிலே கட்டிக்கிறியா?
”இல்லை , இல்லே”.
”அப்படின்னா கழுத்திலேதானே போட்டுக்கணும்?”
”செஞ்சால் பாத்துக்குவாம்”என்று லிங்கங் கட்டி சொல்லிப் பேச்சை வெட்டி
விட்டுவிட்டான். தவசிப்பிள்ளையும் அதோடு போய்விட்டான்.
தென்னம் நெற்று சீக்கிரமாக முளைத்துவிடாது. கொஞ்சம் காலம் பிடிக்கும்.
அதுமாதிரி லிங்கங் கட்டி மனத்திலே போட்ட தென்னம் நெற்றும் மெதுவாக
முளைக்க ஆரம்பித்தது. கிழவி நல்லவள்தான் . ஆனால் வயசாயிடுச்சே! ஒரு
சமயத்தைப் போல ஒரு சமயம் இருக்குமா? ஆள் யாரும் தெரியவில்லையே!
தவசிப்பிள்ளை சொல்றது நல்ல யோசனைதான். லிங்கத்துக்கு செயின் பண்ணினால்
நல்லாத்தான் இருக்கும் என்றெல்லாம் யோசனை செய்துகொண்டே இருந்தான்.
இதற்குள் வயது ஒரு வருஷம் கூடிவிட்டது. புகையிலையைப் போலக் காய்ந்து வந்த
லிங்கங் கட்டி வெள்ளரிப்பழம் மாதிரி ஆகிவிட்டான்.
ஒருநாள் திடீரென்று ஆசாரியிடம் போய்த் தனக்குச் செயின் செய்ய எவ்வ்ளவு
பவுன் வேண்டுமென்று கேட்டான். ஆசாரிக்குச் சிரிப்புத் தாங்கவில்லை. “இந்த
வயதிலா கலியாணம் செய்துகொள்ளப்போகிறா?” என்று கிண்டலாகக் கேட்டான்.
“இல்லை ,இந்த லிங்கத்துக்கு” என்று காட்டினதும் வியாபார ரீதியில் ஆசாரி
பேசத் தொடங்கிவிட்டான்.
“முக்கால்பவுனிலேருந்து செய்யலாம்.”
“அதுக்குக் குறைஞ்சி?”
“கூலி?”
”உனக்காகப் பதினைஞ்சு ரூபாய்.”
“என்னய்யா, முக்கால் பவுனுக்கு...”
“அதானய்யா - சின்னச் செயினுக்குப் பெரிய கூலி, பெரிய செயினுக்கு சின்னக்கூலி.
பெரிய செயினாவே லிங்கத்துக்குப் பண்ணிக் கட்டிக்கியேன்?”
”ஏதோப் பாத்துக் கூலி வாங்கிக்கோ அய்யா, பவுன் வாங்கியாறேன்” என்று
திரும்பி விட்டான்.
பதினைந்து நாள் கழித்துத் திருக்குளத்தில் நீராடிவிட்டுத் திறுநீரணிந்து
தங்க்ச் செயினும் லிங்கமும் துலங்க, லிங்கக்கட்டி சத்திரத்துக்குத்
திரும்பி வந்தான்.
தவசிப்பில்ளை திண்ணையில் ஏதோ சில்லறை வியாபாரம் பண்ணிக் கொண்டிருந்தான். லிங்கங் கட்டியைப் பார்த்ததும் புதுமையாக இருந்தது. இன்னதென்று ஒரு நிமிசம் விளங்கவில்லை. பிறகுதான் தெரிந்தது. “சபாஷ்! சபாஷ்! ரகசியமா
செஞ்சிட்டியே!” என்றான் சந்தோஷம் பொங்க .
“என்ன பிரமாத காரியம்! ஏதோ ஆண்டவனுக்கு உவப்பாயிருக்கேன்னு ..”
“நல்ல காரியம், நல்ல காரியம்” என்றான் தவசிப்பிள்ளை. கண்ணிலே படாத காசாக
வைத்துக்கொள்வதை விட்டுத் திருட்டுப் பயலை வருத்தி அழைப்பது போன்ற
காரியத்தைச் செய்துவிட்டானே இந்த ஆள் என்று நினைத்துக்கொண்டான். ஏன் இந்த
யோசனை சொன்னோமென்ற கழிவிரக்கத்தின் சாயல் கூடப் படர்ந்துவிடது.
செயின் போட்ட லிங்கங்கட்டி ஆகிவிட்டதற்காக அவன் ஒன்றும் மாறிவிடவில்லை.
வழக்கம் போல சத்திரத்துக் காரியங்களைப் பார்த்துக் கொண்டான். கழிவிரக்கம்
காட்டிய தவசிப் பிள்ளையும் மாறவில்லை. பண்டாரத்துக்குக் கொடுக்கிற
கவளத்தில் ஏற்றம் ஒன்றும் ஏற்படவில்லை.
இதற்குப் பிறகு நான்கு மாதம் இருக்கலாம். லிங்கங்கட்டிக்குத் திடீரென்று
ஒரு நினைப்பு வந்தது. “தம்பி! திருமுலைப்பால் உத்சவத்துக்குப்
போகனுமின்னு தோணுது. போயிட்டு ஒரு வாரத்திலே வந்திடறேன்” என்றான்
தவசிப்பிள்ளையிடம்.
“குடுத்து வச்சிருக்கணும். போயிட்டுவா “.
“பாத்திரம் எல்லாம் விளக்கணுமே?”
“யாரையாவது வச்சுப் பார்த்துக்கிடறேன்.”
மறுநாள் சீர்காழிக்கு லிங்கங்கட்டி புறப்பட்டு விட்டான். ஒரு வாரம் லிங்கங் கட்டியில்லாமல் பொழுதை ஓட்ட வேண்டுமே என்ற கவலைகொண்ட தவசிப்
பிள்ளை படுக்க போகுமுன் ஒரு நாளாச்சு என்ற கணக்கிட்டுக் கொண்டு
படுத்தான். ஒவ்வொரு தினமும் ரப்பர் மிட்டாய் மாதிரி நீண்டது.
நான்காம் நாள் காலை தவசிப் பிள்ளை காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தான்.
முற்றிலும் எதிர்பாராமல் லிங்கங் கட்டி எதிரே வந்து நின்றான்.
தவசிப்பிள்ளைக்குக் கனவா என்று கூடத்தோன்றி விட்டது.
“என்ன, லிங்கங் கட்டியா?”
“பின்னே?”
”அதுக்குள்ளார வந்துட்டியே?” என்று கேட்டுக் கொண்டே லிங்கங் கட்டியை
மேலும் கீழும் பார்த்தான். கைம்பெண் கழுத்துப் போலிருந்தது.
“என்ன பண்டாரம் , லிங்கம் சங்கிலி ஒண்ணையும் காணோமே?”
”ஆமாம்”
“எங்கே?”
“ஏமாந்து போயிட்டேன்”
”எப்படிப் போச்சு?”
”அதாங்க ஞானப்பால்”
“விளக்கமாகச் சொன்னா அல்ல தெரியும்?”
“திருவிழா பாத்தூட்டு முந்தா நாள் ராத்திரி சத்திரத்து வாசல்லே குந்திக்கிட்டு இருந்தேன். வேறு யாராரோ திண்ணையிலே வாழைத் தோலைச் சீவிப்போட்டாமாதிரி தலைமாடு கால்மாடா விழுந்து கிடந்தாங்க. “திண்ணையிலே யாரோ ரெண்டு ஆள் என்னவோ பதி பசு பாசம் இன்னு சத்தம் போட்டுப் பேசிக்கிட்டு இருந்தாங்க. நடுவிலே அதிலே ஒரு ஆள் பாடினாரு. கொஞ்சநேரத்துக்கெலாம் பேச்சு அடங்கிப்போய், பாட்டாப் பாட ஆரம்பிச்சுட்டாரு. ரொம்ப நல்லாக் குயில் கணக்காப் பாடினாரு. அப்படியே
சாஞ்சுக்கிட்டிருந்தவன் அதிலே சொக்கிப் போயிட்டேன்..
“ மாங்காய்ப் பாலுண்டு
மலைமேலிருப்போர்க்குத்
தேங்காய்ப்ப்பால் ஏதுக்கடீ- குதம்பாய்”
இன்னு ஒரு பாட்டு பாடினாரு . அப்படியே மெய்மறந்தே போயிட்டேன். பொறவு,
பாட்டே காதில் விழல்லை.
“அப்புறம் நெனைப்பு வந்தப்பொ கண்ணைத் துறந்து பார்த்தேன். கிழக்கு வெளுத்துக் கிட்டிருந்தது. திருவிழா அலுப்பும் அந்தப்பாட்டும் என்னை அப்படி அமட்டிவிட்டது. நல்ல தூக்கம்ன்னு நினைத்துக் கிட்டபோது ஒரு திகில் பிறந்தது. கழுத்தென்னவோ லேசாக இருந்தது. தொட்டுத் தடவிப் பார்த்தேன். லிங்கமா செயினா ஒண்ணையும் காணோம். யாரோ தூங்கிக்கொண்டிருந்தபொழுது அடிச்சிக்கிட்டுப் பொயிட்டார்கள்!
சத்திரத்துத் திண்ணையில் இருந்தவர்களை ஒவ்வொருவராகப் பார்த்தேன். திருடி
இருப்பார்கள் என்று அவர்களைப் பார்த்தால் தோணவில்லை.
“என்ன பாக்குறீங்க பண்டாரம்” என்று திண்ணையில் இருந்தவர்கள் விசாரித்தார்கள்.
நான் நடந்ததைச் சொன்னேன். அவர்கள் சிரித்தார்கள்”
“சாமி எடுத்துக்கிட்டுப் போயிருக்கும் ஞானப்பால் குடுக்க வேணாம்?” என்றார்கள்.
“எனக்குச் சுருக்கென்று பட்டது. ‘லிங்கத்துக்குப் போய் மட்டி மாதிரி தங்கச் சங்கிலி செஞ்சேனே? பைத்தியக்காரத்தனம்! என்று நினைத்துக்கொண்டே ஊருக்குத் திரும்பி வந்துவிட்டேன்.”
“ஞானப்பால் கிடைச்சுப் போச்சு”
”அப்புறம்?”
“நான் போறேன்”
“எங்கே?”
“இப்படியே நீளமா”
“பின்னே ஏன் வந்தே?”
“சம்பளங் கொடுத்து வேறு ஆள் பாத்து வச்சுக்குங்கன்னு சொல்ல வந்தேன்”:
“அடப்பாவி! நெசமாகவே ஞானப்பால் கிடைச்சிட்டுதா?”
லிங்கங் கட்டி பதில் சொல்லவில்லை. மழுங்கிய தலையைத் தடவி கொண்டே தெருவில் இறங்கிவிட்டான்.

ஸ்வர்ண குமாரி - மகாகவி பாரதியார்
பெங்காளம் என்று கூறப்படும் வங்க தேசத்திலே சாந்த்பூர் (சந்திரபுரம்) என்ற கிராமத்தில் மனோரஞ்ஜன் பானர்ஜி என்ற ஒரு பிராமண வாலிபன் உண்டு. இவன் கல்கத்தாவிலே போய் பி.ஏ. பரீக்ஷைக்குப் படித்துக் கொண்டிருக்கையில் 1904ம் வருஷம் டிஸம்பர் மாதம் ரஜாவின் பொருட்டாகத் தனது சொந்த ஊராகிய சாந்த்பூருக்கு வந்திருந்தான்.
மனோரஞ்ஜனன் வெகு சுந்தரமான ரூபமுடையவன். பார்ப்பதற்கு மன்மதனைப் போலிருப்பான். மேலும் குழந்தைப் பிராய முதலாகவே பள்ளிக்கூடத்துப் பந்தாட்டம் முதலிய விளையாட்டுகளிலேயும், மற்றும் சிலம்பம், கர்லா முதலிய சுதேசீய பாலாப்பியாசங்களிலேயும் இவன் மிகுந்த தேர்ச்சியுடையவனாகித் தன்னோடு ஒத்த வயதுள்ள வாலிபர்களெல்லாராலும் 'அர்ஜுனன்' என்றழைக்கப்பட்டு வந்தான்.
வயது இருபத்து மூன்று ஆயிருந்த போதிலும் இவனுக்கு என்ன காரணத்தினாலோ இன்னும் விவாகம் நடக்காமல் இருந்தது.
பெங்காளத்தார் மிகுந்த சொற்ப வயதிலேயே விவாகாதிகள் நடத்திவிடுவது முறைமை. இவன் விஷயத்தில் மட்டும் இவ்வாறு நடக்கவில்லை. இதற்கு வேறொரு உள் முகாந்திரமுண்டு.
மனோரஞ்ஜனனுடைய தந்தை உயிரோடிருந்திருக்கும் பக்ஷத்தில் இவனை இதற்கு முன் விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியிருக்கிறார். ஆனால் இவனுக்கு ஏழு வயதாயிருக்கும்போதே தந்தை இறந்துபோய் விட்டார். தாய்க்கு இவன் ஒரே பிள்ளையாதலால் அவள் இவன் மீது மிகுந்த அருமை கொண்டவளாகி, வீட்டில் இவன் சொன்னதற்கு மறு சொல் இல்லாமல் காரியங்கள் நடந்து வந்தன.
இந்தக் குடும்பத்திற்கு அதிக ஆஸ்தி இல்லாவிட்டாலும், உள்ள நிலத்தை விற்றுப் பணம் எடுத்துக் கொண்டு தான் கல்கத்தாவுக்குப் போய் பரிக்ஷைகள் தேறி வரவேண்டுமென்று இவன் சொன்னவுடனே தாய் யாதொரு ஆக்ஷேபமும் சொல்லாமல் சரியென்று விட்டாள். இதுபோலவேதான் எல்லா விஷயங்களிலும்.
அடிக்கடி இவனுடைய தாய் இவனைக் கூப்பிட்டு "குழந்தை ரஞ்ஜன்! உனக்கு வயதாய் விட்டதே. விவாகம் எப்போதடா செய்து கொள்வாய்?'' என்று கேட்டால், இவன் முரட்டுத்தனமாக ''அம்மா! அந்தப் பேச்சை மட்டிலும் என்னிடம் பேசாதே'' என்று சொல்லிவிட்டு வெளியே போய்விடுவான்.
அந்தரங்கத்திலே இவன் வடக்கு வீதி ஸூர்யகாந்த பாபு என்ற பெருஞ்செல்வரின் குமாரத்தியான ஸ்வர்ணகுமாரியின் மீது மோஹம் வைத்திருக்கிறானென்ற விஷயத்தைத் தாயார் நன்றாக அறிவாள். ஆனால் இவனுக்கும் ஸ்வர்ணகுமாரிக்கும் ஒருபோதும் விவாஹம் நடப்பது சாத்தியமில்லையென்பது அவளுக்கு நிச்சயந்தான். அப்படி ஒருவேளை அந்த விவாகம் நடப்பது ஸாத்தியமாகக் கூடுமானால் அதை இவன் கேட்ட மாத்திரத்திலே இவளுக்கும் பிராணன் போய்விடும். தனது மகன் ஸூர்யகாந்த பாபுவின் பெண்ணை விவாகம் செய்து கொள்வதைக் காட்டிலும் அப்பிள்ளை இறந்து போவது விசேஷமென்று அவளுக்குத் தோன்றும்.
தனது குலதெய்வமான ஸ்ரீ கிருஷ்ண பகவானைத் தியானித்து இவள், ''ஸர்வஜீவ தயாபரா! எனது பிள்ளைக்கு அந்த மிலேச்சனுடைய பெண்மீது இருக்கும் மோஹத்தை நீக்கி அவனுக்கு நல்ல புத்தி கொடுக்கலாகாதா?'' என்று அடிக்கடி கண்ணீர் சொரிந்து பிரார்த்தனை புரிவாள்.
அத்தியாயம் - 2
ஸ்வர்ண குமாரியை மனோரஞ்ஜனன் மணம் புரிந்து கொள்வதிலே மனோரஞ்ஜனுடைய தாயாருக்கு இத்தனை விரோதம் ஏன் இருக்க வேண்டுமென்பதை நமது கதாப்ரியர்கள் அறிய ஆவலுறலாம். அதன் காரணம் பின்வருமாறு: ஸ்வர்ணகுமாரியின் தந்தையாகிய ஸூரியகாந்த பாபு பிராமண குலத்திலே பிறந்த போதிலும், பிராமண ஆசாரங்களையும், அனுஷ்டானங்களையும், மார்க்க முறைகளையும், நம்பிக்கைகளையும் தினதர்ப்பணம் செய்துவிட்டு, 'பிரம்ம ஸமாஜம்' என்ற புதிய மார்க்கத்தைச் சேர்ந்து கொண்டு விட்டார்.
இந்த ஸமாஜத்தார் ''ஜாதி பேதம் இல்லை. விக்கிரஹாராதனை கூடாது. பெண்களும் ஆண்களும் சமானமாக ஒத்துப் பழகலாம்'' என்பது போன்ற நவீனக் கோட்பாடுகள் கொண்டிருப்போர்.
ஸ்வர்ணகுமாரியின் தகப்பனார் எந்த ஜாதிக்காரனுடனும் கலந்து சாப்பிடுவார். அவர்கள் வீட்டு ஸ்த்ரீகள் பகிரங்கமாக வெளியே உலாவுவதும், கண்ட புருஷர்களுடன் சம்பாஷிப்பதும் பிழையில்லை யென்று நடப்பவர்கள். ஸ்வர்ணகுமாரிக்கு வயது பதினெட்டாகியும் இன்னும் விவாகமில்லை. இதுவெல்லாம் மிகுந்த புராதன இயற்கை கொண்ட மனோரஞ்ஜனன் தாயாருக்குக் காதால் கேட்கக்கூட வெறுப்பாக இருந்தது.
இங்ஙனமிருக்க ஸ்வர்ணகுமாரியின் மீது தனது மகன் அடங்காத மையல் கொண்டிருக்கிறானன்பதையும், அதன்பொருட்டாகவே வேறு விவாகத்தில் விருப்பமில்லாதிருக்கிறா னென்பதையும் இந்த அம்மை பல முகாந்தரங்கள் மூலமாக ஊஹித்தறிந்து கொண்ட நாள்முதலாக இவள் மனதிலே தோன்றிய வருத்தங்களுக்கு அளவு கிடையாது. நிற்க.
இங்கே ஸ்வர்ணகுமாரியின் நிலை, எப்படியிருக்கிற தென்பதைக் கவனிப்போம். இவள் மனதிலே மனோரஞ்ஜனனுடைய வடிவம் என்றும் அகலாத சுந்தர விக்கிரஹமாகப் பதிந்து போய்விட்டது. வரம்பில்லாத செல்வமுடைய குடும்பத்திலே பிறந்து, ஸங்கீதம், ஸாஹித்யம் முதலிய கலைகளிலெல்லாம் சிறந்த பழக்கம் கொண்டவளாகித் தனக்கு இசைவான கணவனைத் தவிர மற்றப்படி சாதாரண மனிதன் எவனையும் மணம் செய்து கொள்ளக்கூடாதென்று இவள் ஒரே பிடிவாதமாக இருந்தாள்.
இவளது ரூபலாவண்யமோ சொல்லுந் தரமன்று. கருமை நிறங்கொண்ட அம்ருதத்தின் கடல்களென்று சொல்லத்தக்க இவளுடைய நேத்திரங்களும், முல்லை போன்ற புன்சிரிப்பும், மூக்கும், கன்னமும், நெற்றியும், ஸ்வர்ணமயமான சரீரமும், இவளை என்னென்று சொல்வோம்! சுகப்பிரம ரிஷி பார்த்தபோதிலும் மயங்கிப் போய்விடுவார்.
இவளுக்கு மனோரஞ்ஜனன் பாலிய சினேகர். பள்ளித் தோழன். தேவரூபனாகிய இவனையே கடைசிவரை பள்ளித் தோழனாகவும் கொள்ள வேண்டுமென்று இவள் ஆசை கொண்டு விட்டாள். இதற்கு முன் எத்தனையோ முறை இவர்கள் அடிக்கடி சந்திப்பதும்,
காதற்கலையிற் கனிந்து நிற்பதுவும்
உயிரென நோக்கி உள்ளம் வாடுவதும்
பொருளிலாத் தெய்விக மொழி பல புகல்வதும்
என இவ்வாறு தமது மோஹ நெருப்புக்கு நெய் ஊற்றிக் கொண்டே வந்திருக்கிறார்கள்.
இப்போது மனோரஞ்ஜனன் மறுபடியும் சாந்த்பூருக்கு வந்தவுடனே வழக்கம் போலவே இவர்களது சந்திப்புகள் தொடங்கிவிட்டன.
இதை நமது ஸ்வர்ணத்தின் தந்தையாகிய ஸூரியகாந்த பாபு அறிந்து ஒருநாள் இவளை அழைத்து, 'மகளே, நீ நான் சொன்னபடி ஹேமசந்திர பாபுவை விவாகம் செய்து கொள்ளச் சம்மதிக்காமலிருப்பாயானால் இனி என் வீட்டைவிட்டு வெளியேறி விட வேண்டும். கையிலே காசற்றவனும், விக்கிரகாராதனை செய்யும் மூட பக்திக் கூட்டத்தாரைச் சேர்ந்தவனுமாகிய அந்த மனோரஞ்ஜனப் பயலை நீ அடிக்கடி பார்த்து பேசுகிறாயென்ற வார்த்தை என் காதிலே படக்கூடாது. அடுத்த தை மாதம் உனக்கும் ஹேமசந்திர பாபுவுக்கும் விவாகம். நீ இப்போதே எனக்கு ஆகட்டுமென்ற வார்த்தை கொடுத்துத் தீரவேண்டும். நான் எத்தனையோ வருஷம் உன்னுடைய மூடத்தன்மையான பிடிவாதத்தை சகித்தாய் விட்டது. இனி ஒரு க்ஷணம் பொறுக்க மாட்டேன். இன்று மாலை இங்கே ஹேமசந்திரர் வருவார். நீ தோட்டத்திலேயுள்ள பூஞ்சோலையில் 6 மணிக்குப் போயிரு; அங்கே அவரை வரச்சொல்கிறேன். நீ அப்போது அவரிடம் உன்னுடைய சம்மதம் தெரிவித்தே தீர வேண்டும். இல்லாவிட்டால் உன்னைக் கையும் கப்பரையுமாக நாளைக் காலையில் வெளியே ஓட்டி விடுவேன்' என்று மஹா கோபத்துடன் படபடவென்று சொல்லிவிட்டு ஸூரியகாந்த பாபு எழுந்து போய்விட்டார். தனது மகள் கண்ணீர் மாரிக்கிடையே தரைமீது சோர்ந்து விழுந்து விட்டதைக்கூட அவர் கவனிக்கவில்லை.
அத்தியாயம் - 3
பகல் முழுவதும் ஸ்வர்ணகுமாரி தனது தந்தையின் கொடூரத்தை நினைத்து நினைத்து மனம் தயங்கிக் கொண்டிருந்தாள். இவளுக்கு ஒன்றுந் தோன்றவில்லை. இதுபோன்ற சமயங்களிலே தாய் இருக்கும் பக்ஷத்திலே எவ்வளவோ தைரியம் சொல்லு வாள். ஆனால், நமது ஸ்வர்ணத்திற்கோ தாயார் அதிபாலியத்திலே இறந்து போய் விட்டாள். வீட்டிலுள்ள ஸ்த்ரீகளெல்லாம் தூர பந்துக்களேயல்லாமல் இவள் தன் மனதையெல்லாம் சொல்லி முறையிடக் கூடியவாறு அத்தனை நெருங்கிய நட்புடையோர் யாரும் கிடையாது.
தனியே நெடுநேரம் யோசித்து யோசித்து இவள் பின்வருமாறு நிச்சயம் செய்து கொண்டாள்: 'தந்தையோ இரும்பு நெஞ்சுடையவர். மனோரஞ்ஜனனோ தனது தாயிருக்கும்வரை பிரம்ம சமாஜத்திலே சேரப்போவது கிடையாது. நமக்கு இந்த ஹேமசந்திரனை விவாகம் செய்துகொள்ள வேண்டுமென்றே விதியிருக்கின்றது போலும். மனோரஞ்ஜனனுடனேதான் வாழ்வேனென்று நான் தெய்வ சாக்ஷியாக விரதம் கொண்டாய் விட்டது. மனோரஞ்ஜனன் என்னை விவாகம் செய்து கொள்வதும் சாத்தியமில்லை. இனி தந்தை வீட்டிலிருந்து பிச்சைக்காரி போல வெளியே துரத்துண்டு ஏன் அவமானமடைய வேண்டும் ஹேமசந்திரனையே விவாகம் செய்து கொள்வதாக இன்று மாலை சம்மதமளித்துவிட்டு, விவாகத்திற்கென்று குறிப்பிடப்பட்டிருக்கும் நாளில் விஷத்தைத் தின்று உயிரை மடித்துக் கொள்கிறேன். இதற்கிடையே ஏதேனும் அகஸ்மாத்தாக அனுகூலம் ஏற்பட்டால் பார்த்துக் கொள் வோம். இல்லாவிட்டால் மரணமே கதி' என இவ்வாறு மனவுறுதி செய்துகொண்டு விட்டாள்.
இந்த ஹேமசந்திரன் யார்? இவன் ஒரு பணக்கார ஜமீந்தார். பிரம்ம ஸமாஜத்தைச் சேர்ந்தவன். ஆனால் புராதன ஆசாரங்களைக் கைவிட்ட இவன் மற்ற பிரம்ம ஸமாஜங்களைப் போல அத்துடன் நிறுத்தி விடாமல் மதுபானம், கோமாமிச போஜனம் முதலிய புது ஆசாரங்களும் படித்துக் கொண்டு விட்டான். பார்ப்பதற்கு எருமை போலவே கொழுத்து வெகு குரூபியாக இருப்பவன். மஹாமூடன். குரூர சிந்தை யுடையவன்.
இவனிடம் ஸ்வர்ணகுமாரியின் தந்தை செல்வம்பற்றி விருப்புக் கொண்ட போதிலும் நமது ஸ்வர்ணத்தின் கோமள நெஞ்சு காதலுறுதல் எங்ஙனம் இயலும்? நிற்க.
அத்தியாயம் - 4
மாலை 6 மணி ஆயிற்று. பெரிய வனம்போல் விஸ்தாரமுடைய சோலையினிடையிலே ஓர் அழகிய கொடிவீட்டின்கண் ஸ்வர்ணகுமாரி தனியே உட்கார்ந்திருக்கின்றாள். ஹேம சந்திரன் வந்து சேர்ந்தான்.
'பெண்ணே! இப்பொழுது உன் மனது எப்படியிருக்கிறது?'
'சரிதான்! சிறிது நாற்காலியைச் சற்றே விலகிப் போட்டுக்கொண்டு பேசவேண்டும்.'
'அடடா! இந்தக் குணம் இன்னும் மாறவில்லைபோல் இருக்கிறதே! ஸூரிய பாபு நீ சரிப்பட்டு வந்துவிட்டாயென்று சொன்னாரே.'
'ஆமாம்! அவருடைய கட்டாயத்தின் பேரில் சரிப்பட்டு விட்டேன்.'
'ஆனால், என்னை விவாகம் செய்து கொள்வதில் உன் மனதிற்குத் திருப்தி கிடையாதோ?'
'கிடையாது.'
'அது எப்படியேனும் போகட்டும். உன் தகப்பனார் பலவந்தத்தின் பேரிலாவது நீ என்னை விவாகம் செய்து கொள்ளப் போவது நிச்சயந்தானே?'
'ஆமாம்.'
'சபாஷ்! ஸ்வர்ணா, மெத்த சந்தோஷம். நீ இனி என் மனைவிதானே! அடடா என்ன சௌந்தரியம்! என்ன செளந்தரியம்! உன்னைப் பெறுவதற்குப் பட்ட பாடெல்லாம் தகும்! தகும்! கண்ணே ஒரு முத்தம் தரமாட்டாயா?'
'நாற்காலியை விலகிப் போட்டுக் கொள்ளும்.'
'நீ எனக்கு மனைவியென்பதோ நிச்சயமாய் விட்டது. மூடபக்தியுள்ள ஹிந்துக்களைப் போல் நாம் விவாகச் சடங்குகளுக்குக் காத்திருப்பது அவசியமில்லையல்லவா? விவாஹ பலனை இப்போதே ஏன் அனுபவித்துக் கொள்ளக் கூடாது? இனி உனது திவ்விய சரீரம் என்னுடையதுதானே!'
'விவாக தினத்திலேயே நான் இறந்து போய் விட்டால் எனது சரீரம் உமதாகமாட்டா தல்லவா?'
'அப்படியா யோசிக்கிறாய்? ஆனால் விவாகப் பயனை இப்பொழுதே நுகர்ந்தறிகின்றேன்' என்று சொல்லி ஹேமசந்திரன் பலவந்தமாகத் தழுவக் கையெடுக்கின்றான்.
ஸ்வர்ணகுமாரி 'கோ கோ' என்றலறத் தொடங்கிவிட்டாள்.
திடீரென்று கொடிமாடத்திற்குப் பின்னே புதரில் பதுங்கி நின்ற மனோரஞ்ஜனன் கையும் தடியுமாக வந்து ஹேமசந்திர பாபுவைப் பிடித்து வெளியே தள்ளி நையப் புடைத்தான். இந்தக் கலவரையிலே தந்தையாகிய ஸூரியகாந்த பாபுவும் வந்துவிட்டார். மகள் கீழே மூர்ச்சையுண்டு கிடக்கிறாள். வரும்போது குடித்து வந்த கள்ளின் வெறியாலும், அடிபட்ட கோபத் தாலும் ஹேமச்சந்திரன் ஏதோ வாய்க்கு வந்தபடியுளறினான்.
உடனே ஸூரியகாந்தர் மனோரஞ்ஜனைப் பார்த்து, ''ஏதடா! பையலே நீ இங்கே ஏன் வந்தாய்? இதெல்லாம் என்ன குழப்பம்'' என்று கேட்டார்.
மனோரஞ்ஜனன், ''ஐயா, உமது குமாரத்தி மூர்ச்சையுண்டு விழுந்து கிடக்கிறாள். இன்னும் சிறிது நேரம் கவனியாமலிருந்தால் மிகவும் அபாயம் நேர்ந்துவிடும். அதற்கு வேண்டிய ஏற்பாடு செய்யும். மற்ற விஷயங்கள் பிறகு பேசிக்கொள்ளலாம்'' என்றான்.
அதன்படியே ஸூரியாகாந்தர் மகளை வீட்டிற்கெடுத்துச் சென்று வேண்டிய சிகிச்சைகள் செய்ததின் பேரில் ஸ்வர்ணகுமாரிக்கு மூர்ச்சை தெளிந்தது. இரண்டு மணிநேரத்திற்கப்பால் ஸூரிய பாபு வந்த மகளிடம் விசாரணை செய்ததில், அவள் உண்மையாக நடந்த விஷயங்களையெல்லாம் தெரிவித்தாள்.
அவள் சொல்வதெல்லாம் மெய்யென்று அவருக்குப் புலப்பட்டு விட்டது. ''அடடடா! நமது குடும்பத்திற்குப் பெரிய அவமானமிழைக்கத் தெரிந்த பாதகனுக்கா பெண் கொடுக்க எண்ணியிருந்தேன்?" என்று தம்மைத் தாமே நொந்து கொண்டு ஸூரியகாந்தர் சென்று விட்டார்.
மறுநாட் காலை மகளிடம் வந்து, ''பெண்ணே உனது மனோரஞ்ஜனனை நான் நேற்றுதான் நன்றாக உற்றுப் பார்த்தேன். அவன் செல்வமில்லாது வறியனாயிருந்த போதிலும் ரூபத்தினாலும் அறிவினாலும் நமக்கு மருமகனாயிருப்பதற்கு யோக்கியதையுடையவனாகவே காணப்படுகின்றான். அவன் ஹிந்து மார்க்கத்தினின்றும் நீங்கிப் பிரம்ம சமாஜத்தில் சேர்ந்து கொள்ளும் பக்ஷத்தில் உங்களிருவருக்கும் விவாஹம் முடித்து வைப்பதில் எனக்கு யாதொரு ஆக்ஷேபமும் கிடையாதென்று அவனிடம் தெரிவித்துவிடு.''
இது முறையே மனோரஞ்ஜனுக்குக் தெரிவிக்கப்பட்டது. ஆயினுமென்ன பயன்? மனோரஞ்ஜனன் தான் பிரம்ம ஸமாஜத்தில் சேர்ந்து கொள்வானாயின் தனது தாய் மனமுடைந்து இறந்து போவாளென்பதை நன்றாக அறிவான்.
எனவே, தாயினிடத்து அன்பு ஒருபுறமும் ஸ்வர்ண குமாரியின் மீது மையல் மற்றொரு புறமும் அவனது மனதை இழுக்க இன்ன செய்வதெனத் தெரியாமல் திகைப்பனாயினான். இவ்வாறே ஒன்றரை வருஷகாலம் கழிந்துவிட்டது. இவன் கடைசிவரை பிரம்ம சமாஜத்தில் சேராமலேயிருந்துவிடும் பக்ஷத்தில் தான் விவாகம் செய்து கொள்ளாமலே யிருந்துவிட வேண்டுமென ஸ்வர்ணகுமாரி நிச்சயித்துக் கொண்டிருந்தாள்.
அத்தியாயம் - 5
இப்படி யிருக்க 1906ம் வருஷம் கல்கத்தாவிலே காளிபூஜை திருவிழா நடந்து கொண்டிருந்த (நவராத்திரி) காலத்திலே ஸ்வர்ணகுமாரி தனது வீட்டு அடியிலே ஒரு பஞ்சணை மீது சாய்ந்து காண்டு 'ஸந்தியா' என்னும் தினசரிப் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தாள். அதில் திடீரென அவளது கண்களுக்குப் பின்வரும் குறிப்புத் தென் பட்டது.
''சாந்தபூர்வாசியாகிய ஸ்ரீயுத மனோரஞ்ஜன பானர்ஜி நேற்று மாலை பிரம்ம ஸமாஜத்திலே சேர்ந்து விட்டார். இவர் மிகுந்த திறமையும் புகழுமுள்ள அதி வாலிபராதலால் இவர் ஹிந்து மார்க்கத்தினின்றும் பிரிந்துவிட்ட விஷயம் எங்கே பார்த்தாலும் பேச்சாய் கிடக்கிறது.''
மேற்கண்ட வரிகளைப் படித்தவுடனே ஸ்வர்ணகுமாரிக்குப் புளகமுண்டாய்விட்டது. ஆனந்த பரவசத்திலே அமிழ்ந்துவிட்டாள். உடனே மற்றோரிடத்தில் மனோரஞ்ஜனனுடைய பெயர் காணப்பட்டது. அதென்ன வென்று பார்த்தாள். அதிலே,
'சென்ற சில தினங்களாக லோகமான்ய பாலகங்காதர திலகர் புனாவிலிருந்து நமது நகரத்திற்கு வந்து சுதேசீயம், ஸ்வராஜ்யம் என்ற பெருவிஷயங்களைப் பற்றிப் பதினாயிரக் கணக்கான ஜனங்களின் முன்பு உபந்நியாசங்கள் புரிந்து வருகின்றார். இவருக்கு நடக்கும் உபசாரங்களும், சிறப்புகளும் முடியரசர்களுக்குக்கூட நடக்கமாட்டா. அப்படியிருக்க இவருடைய கோட்பாடுகளுக்கு விரோதமாகச் சில வாலிபர்கள் சாந்த்பூர் ஸ்ரீ மனோரஞ்ஜன் பானர்ஜியின் அககிராசனத்தின் கீழ் ஒரு எதிர்க் கூட்டங் கூடி இந்நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் சில நிந்தனைத் தீர்மானங்கள் செய்து கொண்டார்களென அறிந்து விசனமடைகிறோம்' என்று எழுதப்பட்டிருந்தது.
இதைக் கண்டவுடனே ஸ்வர்ணகுமாரிக்கு மனம் பதைத்து விட்டது. இவள் குழந்தை முதலாகவே ஸ்ரீ பாலகங்காதர திலகரைத் தெய்வம்போலக் கருதிவந்தவள். இவளுக்கு மனோரஞ்ஜனனிடமிருந்த அன்பைக் காட்டிலும் சுதேசத்தின் மீதுள்ள அன்பு பதினாயிர மடங்கு வன்மையுடையது. 'சுதேச பக்தர்களின் திலகமாகிய பாலகங்காதரத் திலகருக்கு விரோதமாக உழைக்கின்ற ஸ்வஜன விரோதியினிடமா நாம் இத்தனை நாள் காதல் கொண்டிருந்தோம்? இவனையா மாசற்ற குமரனென்றெண்ணி மதி மயங்கினோம்' என்று பலவாறு யோசித்து மிகவும் வருந்துவளாயினாள்.
இவள் நிலைமை இங்ஙனமாக, தன் கண்போல் வளர்த்த ஒரே ஆசைக் குமாரன் ஹிந்து மார்க்கத்தை விட்டு நீங்கிவிட்டானென்று கேள்வியுற்றவுடனே மனோரஞ்சஜனனுடைய தாய் மூர்ச்சித்து விழுந்து இறந்து போய்விட்டாள்.
இந்தச் செய்தி கேட்டவுடனே அலறிக் கொண்டு சாந்த்பூருக்கு வந்த மனோரஞ்ஜனன் தனது தாயின் கிரியைகளையெல்லாம் ஹிந்து ஆசாரங்களின்படி ஒரு பந்துவின் மூலமாக நடப்பித்துவிட்டு ஸ்வர்ணகுமாரியைப் பார்க்கச் சென்றான்.
அங்கே வீட்டில் ஸ்வர்ணகுமாரியில்லை. அவளுடைய தந்தை பின்வரும் கடிதத்தை மனோரஞ்ஜனனிடம் கொடுத்தார்.
''எனது காதலனாயிருந்த மனோரஞ்ஜனனுக்கு,
நெடுங்காலமாக உறங்கி நின்ற நமது சுதேச மாதா இப்போது கண்விழித்திருக்கிறாள். நமது நாடு மறுபடியும் பூர்வாகல மஹிமைக்கு வருவதற்குரிய அரிய முயற்சிகள் செய்து வருகின்றது. இந்த முயற்சிகளுக்கு விரோதமிழைக்கும் ஸ்வஜனத் துரோகிகளின் கூட்டத்திலே நீயும் சேர்ந்து விட்டாயென்று கேள்வியுற்றவுடனே எனது நெஞ்சம் உடைந்து போய்விட்டது. இனி உன்னைப் பற்றி வேறு விதமான பிரஸ்தாபம் கேட்கும் வரை உன் முகத்திலே விழிக்கமாட்டேன். பெற்ற தாய்க்குச் சமானமான தாய்நாட்டின் மீது அன்பு செலுத்தாத நீ என்மீது என்ன அன்பு செலுத்தப் போகிறாய்? நமது வாலிப எண்ணங்களைப் பற்றி நீ திருந்திய பிறகு யோசனை செய்துகொள்ளலாம். நான் காசியிலே எங்கள் அத்தை வீட்டிற்குச் சென்று ஒரு வருஷம் தங்கியிருக்கப் போகிறேன். அங்கே நீ என்னை வந்து பாராதிருக்கும்படி பிரார்த்தனை செய்துகொள்ளுகிறேன்.''
இங்ஙனம் இக்கடிதத்தைப் பார்த்தவுடனே மனோரஞ்ஜனன் மனம் தீயிலகப்பட்ட புழுவைப் போலத் துடிக்கலாயிற்று.
இப்போது மனோரஞ்ஜனன் புனாவிலே திலகரிடம் தேசபக்திப் பாடல்கள் படித்து வருகிறானென்று கேள்வியுறுகின்றோம்.

திரை - கு.ப.ராஜகோபாலன்
தான் வந்து இரண்டு நாட்களாகியும் ராஜம் தன்னிடம் பேசக்கூட மாடிக்கு வராதது அவனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தான் ஒரு விதமாகவும் பிசகு செய்ததாக அவனுக்குத் தெரியவில்லை. ஆகையால் அவள் கோபித்துக் கொண்டிருப்பாள் என்பதற்கும் இடமில்லை. அதுவுமின்றித் திருமண மான பிறகு, முதல் முதலாக அப்பொழுதுதான் அவளைப் பார்க்க வந்திருந்தான். அதற்கு முன் நேரில் கண்டு பேசினதே இல்லை. ஆகையால் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவள் அதற்குள் கோபித்துக் கொள்ள முடியாது.
ஒருவருக்கொருவர் இடைவிடாமல் கடிதங்கள் எழுதிக்கொண்டார்கள். அவற்றில் அவ்வளவு ஆர்வத்துடனும் உணர்வுடனும் எழுதிவிட்டு, நேரில் வந்தபோது ஏன் அவள் அப்படி இருந்தாள் என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை. தின்பண்டம், பலகாரம், காப்பி எல்லாம் மாமியார் கொண்டுவந்து வைத்தாள். தாம்பூலம் மடித்து வந்தது, அதை யார் மடித்தார்கள்?
மாடி அறையில் அவன் தனியாக எவ்வளவு நேரந்தான் அவளை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பது? பகலெல்லாம் எதிர்பார்த்தான்; இரகசியமாக வருவாளோ என்று இரவில்கூட வெகுநேரம் விழித்துக் கொண்டு படுக்கையில் கிடந்தான்.
கடிதத்தில் வெகு துணிச்சலாக எழுதிவிட்டாள். நேரில் கண்டவுடனே வெட்கம் மேலிட்டு விட்டது போல் இருக்கிறது! ஒருவேளை அப்படி அசடுபோல் கடிதத்தில் எழுதி விட்டோமே என்று பயந்தே தன்னிடம் வராமல் இருந்தாளோ என்று எண்ணினான்.
என்ன சமாதானம் செய்து கொண்டாலும் அவள், அவ்வளவு அருகில், தன்னிடம் வராமல் இருந்ததன் காரணம் அவனுக்கு விளங்கவே இல்லை.
இரண்டாவது நாள் இரவு எட்டு மணி. தொலைவில் கோவிலிருந்து திருவிழாக் கொட்டு முழக்குச் சத்தம் கேட்டது. தெருவில் பெண்கள் கும்பல் கும்பலாகக் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். சாளரம் வழியாக உள்ளே விழுந்த வெண் நிலவு அவனது இருதயத்தை வலைபோட்டு வெளியே இழுப்பதுபோல இருந்தது. வெளியுலகத்து இன்பம் அவனை 'வா, வா' என்று அழைத்தது. ஆனால் அப்பொழுது அவனுக்கு அதெல்லாம் காதில் ஏறவில்லை. அந்த அழகு அவன் கண்களில் படவில்லை. அவன் உள்ளம் முழுவதும் ராஜத்தின் மேல் இருந்தது. அவள் எழுதின கடிதங்களின் வாக்கியங்களும் அவளுடைய முகமும் கண்களுமே அவன் முன் நின்றன.
அன்றிராவாவது கட்டாயம் ராஜம் தன்னிடம் வருவாள் என்று எண்ணினான். நடுப்பகல் வேடிக்கையாக மைத்துனனைப் பார்த்து, "உன் அக்கா இந்த ஊரில்தானே இருக்கிறாள்?" என்று கேட்டான். அதைக் கேட்டுக் கொண்டிருந்த மாமியார்கூடக் கொஞ்சம் பதறிப் போய் ஏதோ குசுகுசுவென்று யாருடனோ பேசினாள். யாருடனோ என்ன, 'அவளுடன்' தான். ஆகையால் தன்னுடைய மனநிலையை ஒருவாறு அவர்கள் அறிந்திருந்ததால் அன்றிரவு கட்டாயம் வருவாள் என்றே எதிர் பார்த்தான். முதல் நாளிரவு பாவம், வெகுநேரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிரமத்தால் தன்னை அறியாமல் தூங்கிப் போய்விட்டான். மறுநாள் காலையில் அவனுக்குக் கோபமும் துக்கமும் வந்து, காப்பி வேண்டாம் என்று சொல்லி விடலாமா என்றுகூட எண்ணினான்.
கீழே வீணை மீட்டும் சத்தம் கேட்டதும் சற்று நேரத்திற்கெல்லாம் சங்கராபரணத்தில் "தாரி சூசுசுன்னதி நீது ப்ரியா" என்ற ஜாவளியை யாரோ பாடிக்கொண்டே வாசித்தார்கள். வேறு யார்? அவள்தான்!
"உன் காதலி உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள், உன் வழி நோக்கிக் கொண்டிருக்கிறாள்" என்று பொருள்படத் தொடங்கிய அந்தப்பாட்டு, படுக்கையறையின் அலங்காரத்தைக் கவர்ச்சி கரமாகச் சித்தரித்தது. இசையும் பாட்டுமாகக் கலந்து அவனது உள்ளத்தை உருக்கின.
"ஆகா! நல்ல ரசிகையாக அல்லவா இருக்கிறாள் ராஜம்! ஏன் இருக்க மாட்டாள் அவளுடைய கடிதங்களே அவ்வளவு கதையாக இருந்தனவே! என்ன வாசிப்பு, என்ன சாரீரம். இதற்கு மேற்பட்ட இன்பம் கிடையா... ஆனால் இதோடு அவளுடைய வாய் வார்த்தை ஒன்றை, என் முன்பு, என் பக்கத்தில், நான் கேட்டால்... இன்பத்தின் மின்னொளியைப் பாய்ச்சும் அவளுடைய கைபட்டதும் எழும்பும் இனிமை என்னுள் பாய்ந்தால் என்ன பேறு பெறுவேன்! ராஜம் வேண்டுமென்றுதான் இப்படி ஏக்கத் தீயிட்டு என் உள்ளத்தை வாட்டுகிறாளோ? எதற்காக இந்தச் சோதனை? என் கடிதங்களில் காணவில்லையா அவள், என் உள்ளத்தின் வேட்கையை? பெண்ணின் கொடுமை உன்னிடங்கூடத்தான் இருக்கிறது. உன் இங்கிதமும், புத்தியும், தேர்ச்சியும், ஈரமும் எங்கே? உன் கடிதங்களிலேயே நின்றுவிட்டனவே அவை! இல்லை, இது சரியன்று. ராஜம் உடனே வீணையைக் கீழே வைத்துவிட்டு என்னிடம் வா! அந்த வீணை எதற்கு உனக்கு? என் இருதய வீணையை மீட்டி வாசி, சுருதி கலைந்து கிடக்கிறேன் நான். குழைவற்றிருக்கிறேன். உன் இழைக்கும் விரல்களால், என்னைச் சுருதி கூட்டிச் சரி செய்து, உன் விரல் விந்தையால், விண்ணொலி கொள்ளச் செய்" என்று உணர்ச்சி மேலிட்டவனாய்த் தனக்குள்ளேயே பிதற்றிக் கொண்டிருந்தான் அவன்.
"உன் காதலி வழி நோக்கிக் கொண்டு கத்திருக்கிறாள்" என்ற பல்லவி திரும்பத் திரும்ப ஓர் ஏக்கக் குரலாக வந்து அவன் காதில் தாக்கிற்று. அவனுக்கு அங்கே இருக்க முடியவில்லை. எழுந்து கீழே இறங்கிப் போனான்.
முற்றத்திலிருந்த மாடிப்படியின் உச்சியில் நின்று கொண்டு கூடத்தைப் பார்த்தான். அங்கே கையில் வீணையுடன் உட்கார்ந்திந்தாள்! ராஜம் அல்ல! அவளுடைய தமக்கையாகத்தான் இருக்க வேண்டும். ஆமாம் அவள் பிறந்த வீட்டில் இருப்பதாகத்தான் சொன்னார்கள். அவள் ஒரு வருஷத்திற்கு முன்பு கணவனை இழந்தவள், பாவம்! அவள் கதை ஒரு சோக நாடகம். எல்லோரும் கதை கதையாகச் சொன்னார்கள். நிரம்பக் கெட்டிக்காரி: அழகு என்றால் அப்படி; கணவன் ஒரு குடிகாரன்; ஈரல் வீங்கி இறந்தான். குடும்பம் என்று அவள் நடத்தி அறியாள்.
அவளா வீணை வாசித்தது! ஏன் அப்படி வாசித்தாள்? வீட்டில் மற்ற எல்லோரும் எங்கே? கோவிலுக்குத்தான் போயிருக்க வேண்டும் - ராஜம் கூட! ஒருவரும் வீட்டில் இல்லாதபொழுது, ஏன் இவள், அவன் கேட்கும்படி வீணையை எடுத்து வைத்துக் கொண்டு இப்படி உருக வேண்டும்?
திடீரென்று அவன் உலுக்கி விழுந்தான். ஒரு வேளை கடிதங்களெல்லாம் இவள் எழுதினவைதாமோ? ராஜத்தின் பெயரை வைத்து இவள்தான் அப்படி உள்ளத்தைக் கொள்ளை கொண்ட முறையில் எழுதினாளோ? ஆமாம், அப்படித்தான் இருக்க வேண்டும்! இல்லாவிட்டால் அவ்வளவு எழுதினவள் இப்போது அருகில்கூட வராமல் இருப்பாளா?
மடமடவென்று அவன் மாடிப்படி இறங்கினான். வீணையும் கையுமாக உட்கார்ந்திருந்த சரசுவதி சட்டென்று வீணையைக் கீழே வைத்துவிட்டு எழுந்திருந்தாள், உள்ளே போய் மறைந்து கொள்ள. அதற்குள் அவன் அவள் அருகில் வந்துவிட்டான். ஒன்றும் செய்யாமல் அப்படியே திகைத்து நின்றாள் சரசுவதி.
கூடத்து மின்சார விளக்கின் வெளிச்சத்தில் அவளது உருவம் நன்றாகத் தெரிந்தது. அவளது உடம்பும் உடையும் ஒரே வெள்ளையாக இருந்தன. தலைமயிரை அசிரத்தையாக முடிந்திருந்தாள். நெற்றியில் குங்குமம் இல்லாததால் அவளது முகம் காலை நேரத்துச் சந்திரன் போல வெளுத்த சோபையற்று இருந்தது. ஆனால் சிறிது நேரத்துக்கு முன்பு வாசித்த பாட்டால் ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கில் அதில் இருந்த சோகம் கொஞ்சம் மறைந்து சற்றே ஒளிர்ந்தது.
"நீதானா கடிதங்கள் எழுதினது?" என்று அவன் உடனே கேட்டான்.
"இல்லை, - அவள்தான் எழுதினாள் - அதாவது" என்று ஒன்றும் மேலே சொல்ல முடியாமல் திகைத்தாள் சரசுவதி.
"உண்மையைச் சொல்லிவிடு!"
"அதாவது அவள் சொன்னாள் - நான் எழுதினேன்" என்று அவள் இழுத்தாள்.
"நிஜமாக!"
"அவள் உள்ளம் சொல்லிற்று, நான் பார்த்து எழுதினேன்."
"எப்படித் தெரியும்?"
"எப்படியா -" என்று கேட்டுச் சற்றுத் தயங்கினாள் சரசுவதி.
பிறகு திடீரென்று அவள், "எப்படியா? நான் நினைத்தது போலத்தானே அவள் நினைத்திருக்க வேண்டும்? ஆகையால் அப்படியே எழுதிவிட்டேன்" எனச்சொல்லிவிட்டு, சொல்லக்கூடாததைச் சொல்லிவிட்டது போலவும் கதிகலங்கினவள் போலவும் நாலு புறமும் பார்த்தாள்.
"மாப்பிள்ளை! நீங்கள் இங்கே நிற்கக்கூடாது. மாடிக்குப் போய்விடுங்கள். அவர்கள் வந்து விடுவார்கள். குடி முழுகிப்போகும்" என்று கெஞ்சினாள் பிறகு.
அவன் தீர்மானமாக அங்கே நின்றான். "என்னை ஏன் கூப்பிட்டாய்?" என்று ஏக்கப் பார்வையுடன் கேட்டான்.
"கூப்பிட்டேனா! ஐயோ! இல்லையே! தெரியாமல் செய்திருந்தால் மன்னியுங்கள் - இல்லை - கூப்பிடவில்லை. பிசகு!" என்று சரசுவதி நிலை தவறினவள் போல் பதற்றத்துடன் பேசினாள்.
"ராஜத்தின் மூலமாக -" என்று அவன் ஆரம்பித்தான்.
"இல்லை - வேண்டாம் - எல்லாம் மறந்துவிடுங்கள் தவறு"
"எப்படி மறப்பது சரசுவதி? மறக்கும்படியாகவா எழுதியிருந்தாய் நீ?"
"மன்னியுங்கள்; பிசகு செய்துவிட்டேன் இப்படி ஆகுமென்று தெரியாது!"
"நான் கட்டை என்று எண்ணினாயா?"
"தப்பிதம், தப்பிதம்!" என்று வெறி பிடித்தவளைப் போல சொன்னாள்.
"தப்பிதம் இல்லை; சரசுவதி, உண்மையை எழுதினாய், அல்லவா?"
அவள் குற்றவாளியைப்போல் நடுநடுங்கினாள், உணர்ச்சி மேலிட்டு அழலானாள்.
"சரசுவதி! பயப்படாதே, அம்மா! நீ ஒன்றும் குற்றம் செய்யவில்லை. உண்மையாகவே கட்டைபோல இருந்த என்னைச் செப்பனிட்டு வாத்தியமாக்கி விட்டாய்!"
"இல்லை, இல்லை. அப்படிச் சொல்லாதேயுங்கள்! ராஜந்தான்! நீங்கள் அவள் சொத்து. அவள்தான் உங்களை உருக்க உரிமை பெற்றவள். அவள் எழுதியதாகவே எண்ணுங்கள்."
"இந்தப்பாட்டு -"
"அவள் பாடியதுதான். தேர்ச்சி இருந்தால், அறிந்திருந்தால், அவளே இப்படிப் பாடியிருப்பாள்."
"பாடியிருப்பாள்! - தேர்ச்சியிருந்தால்தானே? சரசுவதி, தைரியமாக நீதான் அவற்றை எழுதினது சொல்லேன், என்ன பிசகு?"
"ஐயோ, கூடாது."
"ஏன்?"
"நான் - நான் - எனக்குக் கை ஏது எழுத? எனக்கு வாய் ஏது - பாட? அவள்தான் என் கை, அவள் தான் என் வாய். அவள் மூலந்தான் எனக்கு வாழ்க்கை. அவள் மூலந்தான் என் உயிர்."
"இன்னும் வேறொன்றும் இல்லையா?" என்று அவன் இளகிக் கொண்டான்.
"உண்டு - அதையும் சொல்ல வேண்டுமா என் வாய் திறந்து?" என்று சரசுவதி ஒருவிதமான அமைதியுடனும் ஏக்கத்துடனும் தன்னையே மறந்து கேட்டுவிட்டாள்.
கோவிலுக்குப் போயிருந்தவர்கள் திரும்பி வந்து வாசற் கதவைத் தட்டினார்கள்.
அவன் மாடிக்குப் போனான். அவள் உள்ளே போனாள்.
இருவருக்கும் நடுவில் மறுபடியும் திரை வந்து கூடிற்று.
ஆனால் திரை என்ன அறியும்?
"ராஜம்! மாடிக்குப் போ!" என்றாள் சரசுவதி, சற்று நேரம் கழித்து.

வெறும் செருப்பு - ந.பிச்சமூர்த்தி
அதுவரையில் தீர்மானத்துடன் வராதிருந்த மனது அன்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. முதலையின் பிளந்த வாயைப்போன்ற செருப்புடன் எத்தனை மணிகள்தான், எத்தனை நாட்கள்தான் ஓட்டமுடியும்? நடக்கும் போதெல்லாம் செருப்பின் கீழ் அட்டை மடித்துக் கொள்ளும். அப்பொழுது ஒட்டகையின் முதுகின்மேல் நடப்பது போன்ற வேதனையும் கஷ்டத்தையும் அடைந்தேன். நல்லவேளை அன்று மனதே உத்தரவு கொடுத்துவிட்டது.
விர்ரென்று கடைத்தெருவுக்குச் சென்று நவீன செருப்புக் கடைக்குள் நுழைந்தேன். கடைக்காரப் பையன் விதவிதமான செருப்பு, பூட்ஸ¤ தினுசுகளை என் முன் கொணர்ந்து பரப்பினான். அதையும் இதையும் புரட்டிப் பார்த்து தோல் வந்த கப்பல், கப்பல் கிளம்பிய நாடு, நாட்டின் கால்நடை வளம் இவ்வளவையும்பற்றி ஆராய்ச்சி செய்துவிட்டு முடிவாக ஒரு ஜோடி ஸ்லிப்பர் ஆறரை ரூபாய்க்கு வாங்கினேன்.
சிவப்பு ஸ்லிப்பர், மஞ்சள்நூல் தையல், மேல்புறத்தில் தாமரைப்பூ - இவ்வளவு லட்சணங்களுமுள்ள ஸ்லிப்பர் என் சொத்தான உடனே அதை அனுபவிக்காமல் இருக்க முடியுமா?
காலில் மாட்டிக் கொண்டே வீட்டை நோக்கி திரும்பினேன். பட்டென்று ஸ்லிப்பர் கால் அடிபாகத்தில் படுவதினால் பின் பராக் யாரோ சொல்லிக் கொண்டு வருவது போலிருந்தது. அரசர்களுக்கு முன்னால் பராக் சொல்லிக் கொண்டு வருவார்களாமே, எனக்குப் பின்னால் சொன்னால் போதாதா? ஒவ்வொரு ஒசையைக் கேட்டதும் என் மனது கம்பீரமாய் விரிந்தது. புதுச்செருப்பு வாங்கினால் புது மனிதனல்லவா? வானத்தைத் தொட்டுவிடக்கூடிய உன்னதமும் தெம்பும் நெஞ்சில் குமிழியிட்டன. முன்புறம் மார்பைத் தள்ளி தெருவெல்லாம் நடந்து வந்தேன்.
வீட்டை அடைந்ததும் ஸ்லிப்பரைத் துடைத்து சுவரில் மாட்டினேனோ இல்லையோ? ஒரு நினைப்பு வந்தது. பழைய செருப்பு இருந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தேன். இனி அதை எடுத்து எறிந்து விடலாமா என்று யோசித்தேன்.
இவ்வளவையும் என் மனைவி கவனித்து வந்தாள் என்பது அவள் கேட்ட கேள்வியிலிருந்து தான் விளங்கிற்று.
''நான் கிழவியாகி விட்டால் என்னையும் தள்ளித்தான் விடுவார்கள், இல்லையா? கேள்வி சுருக்கென்று மனதில் தைத்தது. காலுடன் காலாய் எவ்வளவு கஷ்ட சுகங்களில் அது என்னை தாங்கி வந்திருக்கிறது. அவ்வளவு ஈரமில்லாமல் எடுத்தெறியப் போகலாமா? என் மனதில் இரக்கமில்லை என்று நினைக்க நான் விரும்பவில்லை. ஆகையால் என் யோசனையை கைவிட்டுவிட்டு, என் ஜோலியைப் பார்க்கப் போனேன். புலனெல்லாம் ஒடுங்கித் திண்ணை மூலையில் குந்தியிருக்கும் கிழவியைப் போல் செருப்பு மூலையிலே கிடந்தது. இளைய தாரத்துடன் உலாவப்போகும் எழுச்சியுடன் புது ஸ்லிப்பர் மாட்டிக்கொண்டு ஆபீசுக்குப் போய் திரும்பினேன்.
வீட்டிற்கு வந்து உட்கார்ந்த ஐந்து நிமிஷத்திற்குள்ளாகவே, ஒரு தந்திக் கிடைத்தது. உயிருக்குயிரான நண்பன் காலமாகி விட்டதாக அதில் கண்டிருந்தது. என்னால் செய்தியை நம்ப முடியவில்லை. நானும் தந்தியில் குறிப்பிட்டிருந்த நண்பனும் ஒரு வாரத்திற்கு முந்தி தான் ஒரு கல்யாணத்திற்கு சேர்ந்து போயிருந்தோம். சேர்ந்து சாப்பிட்டோம். பகலொளியும் இரவு நிலாவும் படுக்கப் போகும் வரையில் பேசித் தீர்த்தோம். சேர்ந்தே தூங்கினோம். நண்பன் உடம்பிலோ மனத்திலோ எவ்விதமான நோயும் தென்படவில்லை. பின் செய்தியை எப்படி நம்பமுடியும்? ஆனால் பொய்த் தந்தி கொடுக்கக்கூடிய விஷமிகள் யாரும் எனக்கோ என் நண்பனுக்கோ இல்லை. பின் செய்தியை எப்படி நம்பாமலிருப்பது? குழப்பம். மனது தெளியவில்லை. மறுநாள் மற்றொரு கடிதம் வந்தது. வேறொரு நண்பன் எழுதியிருந்தான். அந்தக் கடிதத்தைப் படித்த பிறகு சந்தேகத்திற்கே இடத்தைக் காணோம்.
கிராமபோன் தட்டு ஓடிக்கொண்டிருக்கும் பொழுதே சாவி குறைவினால் பிறக்கும் அவ ஒலியைப்போல் என் நெஞ்சின் துயர் எழுந்தது. தாங்கமாட்டாமல் விம்மி விம்மி அழுதேன். எவ்வளவு நேரம் அழுதேன் என்று யார் கண்டது?
எதிர்வீட்டுப் பையனொருவன் கோவில் மணி கணீரென்று அடிப்பதுபோல்,
''ஆண்டாண்டுதோறும் அழுதுபுரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தில்''
என்று பாடினான்.
என் அழுகை தானே நின்றுவிட்டது. இனிச் செய்ய வேண்டியதைப் பற்றிய நினைப்பு எழுந்தது. சாயங்கால ரயிலில் நண்பன் ஊருக்குப் போய், அவன் வீட்டிலுள்ளவர்களுக்காவது தேறுதல் சொல்லிவர வேண்டியது என் கடமை என உணர்ந்தேன்.
மாலை ஐந்து மணி ரயிலுக்கு ஒரு பாடியையும் ஜிப்பாவையும் மாட்டிக் கொண்டு கிளம்பி வீட்டு ரேழிக்கு வந்தேன். சுவரில் புது ஸ்லிப்பர் அசட்டுப் பெண்ணைப் போல் இளித்துக் கொண்டிருந்தது. ஸ்லிப்பரை எடுத்துக் காலில் மாட்டப் போனேன்.
''கல்யாணத்துக்குப் போகிறாயா குஷாலாக?'' என்று மூலையில் இந்த பழஞ் செருப்பு முனகுவது போல் தோன்றிற்று. கொஞ்சம் தயங்கினேன். காலையில் புது ஸ்லிப்பர் வந்தது. மாலையில் செய்தி வந்தது. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லை என்று அறிவு சொன்ன போதிலும் நெஞ்சு கேட்கவில்லை.
அதற்குள் என் ஆபீஸ் நண்பன் ஒருவன் வந்தான். ''என்ன யோசித்துக் கொண்டு ரேழியில் நிற்கிறாய்?''
''ஒன்றுமில்லை''
''நான் இதோ ரயிலுக்குப் போகிறேன். மத்தியான்னம் இடி போன்ற அந்தச் செய்தி வந்தது. கடவுள் என்கிறார்களே அது எனக்கு விளங்கவில்லை. சரகு உதிர்வதில் வண்டு வருந்துவதில்லை. தளிரும் பூவும் உதிர்ந்து தரையில் கிடக்கும்பொழுது எவ்வளவு வண்டுகளும் தேனீக்களும் அவைகளை மொய்த்துக் கொண்டு புலம்புகின்றன!''
''எனக்கும் செய்தி வந்தது. என் நெஞ்சே சூன்யமாகி விட்டது. இதோ நானும் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.''
''பின்னே கிளம்பு''
கிளம்பு என்று சொன்னபிறகு கூட நான் கொஞ்சம் தயங்கினேன்.
''என்ன யோசனை?''
மனதை வேரோடு பிடுங்கினது போல் நிலைகுலையச் செய்யும் துயரம் மூண்டிருக்கும் வேளையில் ஸ்லிப்பர் போட்டுக் கொள்ளலாமா கூடாதா என்று யோசிக்கலாமா என்ற நினைப்பு வரவும் மூலையில் கிடந்த பழஞ்செருப்பு அடக்கத்துடன் கண் காட்டிற்று. அதைப் போட்டுக் கொண்டு கிளம்பினேன்.
ரயில்வே ஸ்டேஷன் போகும் வரையில் ஒரே யோசனை. புது ஸ்லிப்பர் வந்தது நன்மைக்கன்று. ஒருநாளைக்குள் ஒரு உயிரைக் கொண்டு போய்விட்டதே; அதை மாதக்கணக்கில் வைத்துக் கொண்டால் என்னவெல்லாம் நேரிடும் அல்லது என்னதான் செய்யக்கூடாது? இதே யோசனையில் மெளனமாக இருந்தேன்.
ரயில்வே ஸ்டேஷன் மாடிப்படி ஏறும்பொழுது ஒருதரம் செருப்பின் அடி அட்டை பின்புறமாக மடித்துக் கொண்டது.
''என்ன தடுமாறுகிறாயே?'' என்றான் நண்பன். ''ஒன்றுமில்லை. செருப்பு அடி அட்டை கிழிந்துபோய் ஒன்றுக்கொன்று சம்பந்தமற்றும் போயின. அட்டை மடித்துக் கொண்டு இடறிவிட்டது. நல்லவேளை விழாமல் தப்பித்தேன்.''
பிறகு நாங்கள் பேசவில்லை. என் மனது மறுபடியும் ஓடத் துவங்கி விட்டது - கிழிந்த செருப்புகளைப் பற்றிய ஞாபகங்கள்.
ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் வந்து உட்கார்ந்தோம். ரயில் கிளம்புவதற்கு இரண்டு மணி நேரம் இருந்தது. நண்பன் பிளாட்பாரத்தில் நிலவின் கீழ் வேஷ்டியை விரித்துப் படுத்துக் கொண்டான். எனக்குப் படுக்கத் தோன்றவில்லை. உம்மென்று... உட்கார்ந்திருந்தேன்.. சிறிது நேரத்திற்கெல்லாம் திடீரென்று யோசனை ஒன்று முளைத்தது.
''உன்னிடத்தில் ஒரு ஹூக் இருக்கிறதா?'' என்றேன்.
''எதற்கு?''
''இந்த இரண்டு அட்டைகளையும் சேர்த்து ஹூக் போட்டுவிட்டால் இந்த மாதிரி அட்டை மடியாது.''
''இதென்ன, செருப்பையே கடவுளாக்கித் தியானம் செய்கிறாயே - தூக்கி எறிந்தாலும் போச்சு, தைக்கச் சொன்னாலும் போச்சு.''
பேச்சு நியாயமாகத்தான் பட்டது சரிதான் என்றேன். ஆனால் மனதில் பல மட்டங்கள் இருக்கின்றன என்பதும், மேல் மட்டம் பேசினால் அடிமட்டம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பது இல்லை என்றும் பின்னர்தான் தெரிந்து கொண்டேன்.
கால் மணிநேரத்திற்குப் பிறகு என் கை என்னை அறியாமலேயே ஒரு செருப்பை எடுத்துவிட்டது. என் கண்கள் இருள் குகை ஒன்றைக் காணும் ஆச்சரியத்துடன் அச்செருப்பின் பிளந்த அட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்தன. மன உலகத்தில் ஒரு பெரிய சர்ச்சை நடந்து கொண்டிருந்தது. மனத்தின் நடுமட்டம்...'' அதெல்லாம் சரிதான்.. நீ போகும் காரியமென்ன? நாளைப்போய் மெனக்கட்டு செருப்பைத் தைத்துவிடுவாயா? முடியுமா?'' மனத்தின் மேல் மட்டம்; ''அதற்கென்ன, வேண்டாமே. செருப்பையே எறிந்துவிட்டால் போகிறது. சொத்தே போய்விடுமா? நஷ்டம் தாங்காதா?''
நடுமட்டம் ''அதுவா போச்சு! வீணடிக்கவே கூடாது அப்படியாவது பணம் பெருத்த ஆளா? சாதாரணமாக தோட்டத்திற்குப் போவதற்கும் இந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்கும் உபயோகப்படுமே, மூத்தாளும் முட்டுக்கு உதவுவாள் என்று பாட்டி சொல்லவில்லையா?''
படுத்திருந்த நண்பன் எழுந்து கண்கொட்டாமல் என்னைப் பார்த்துக் கொண்டே, ''நீ என்ன யோகியா, கருமியா, தெரியவில்லையே! யோகியைப் போல ஒரே எண்ணத்தில் லயித்திருக்கிறாயே... ஆனால் லயித்திருக்கும் விஷயமோ சிறியது. கருமியைப் போல் கிழிந்த செருப்பைக்கூட தடவிப் பார்க்கிறாயே'' என்றான்.
புண்ணில் நெருஞ்சி முள் குத்தியது போலிருந்தது. சிவனே என்று மன ஓட்டத்தை அடக்கி, மல்லாந்து படுத்துக் கொண்டேன்.
சிறிது நேரத்திற்கெல்லாம் ரயில் வந்தது. நானும் நண்பனும் ஏறிக் கண்ணயர்ந்தோம்.
காலைக் கரிச்சான் குரல் துயிலைக் கலைத்தது. கண் விழித்து வெளியே தலை நீட்டிப் பார்த்தேன். வானத்தின் கிழக்கு மைதானத்தில் செம்மறி ஆட்டு மந்தைப்போல் மேகத் துணுக்குகள் விரைந்து கொண்டிருந்தன. இருளில் வினோதமான தேத்தாங் கொட்டையைப் போட்டது போல் ஒளி தெளிந்து மேலே தோன்றிற்று. அடுத்த ஸ்டேஷன் நாங்கள் இறங்க வேண்டிய இடம். நண்பன் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தான்.
மனதில் இரண்டு நிலைகள்தான் இருப்பதாக நினைத்த நான் மூன்றாவது நிலை ஒன்றிருப்பதை அப்பொழுது உணர்ந்தேன். பரந்தவெளி உலகின் காலை அமைதியில் உள்ளுலகினின்று ஒரு மெல்லிய குரல் கேட்டது.
''நீ வரும் வேலை நினைவிருக்கிறதா? உடம்பு உயிர் என்றெல்லாம் சொத்துரிமை கொண் டாடுகிறாயே அது சரியா? யோசித்துப் பார், நேற்றிருந்தான், இன்றிறந்தான். பழுத்தும் உதிரலாம். பழுக்காதும் விழலாம். பழுக்காது விழுந்த வேதனை - உயிரின் விசித்திர விபரீதப் போக்கல்லவா உன்னை இங்கே இழுத்து வந்திருக்கிறது. வெறும் செருப்பு ஒரு பொருளா? அதைப்பற்றி யோசிக்க அவ்வளவு பிராணனை செலவழிப்பது நியாயமா?''
இக்குரல் பேசியபொழுது உள்ளத்திலே பெரிய அமைதி நிலவியிருந்தது. மாறுபட்ட மன அலைகளே காணோம். ஏறிவரும் ஒளியையே நோக்கிக் கொண்டிருந்தேன். மனத்தில் அசைவே இல்லை. அதற்கு ஏற்றாற்போல, அசைந்து கொண்டிருந்த ரயிலும் ஸ்டேஷனை அடைந்து நின்றுவிட்டது.
நண்பனை எழுப்பி வண்டியை விட்டு இறங்கி மாட்டுவண்டியில் ஏறி நண்பன் வீடு சென்றோம். பச்சைக் குழந்தைகள் - சூதுவாதற்ற மனைவி - இவர்களை கொழுக் கொம்பற்றுத் துடிக்கும் கொடி போல பரிதவிக்கவிட்டுச் சென்ற ஒரு குடும்பத் தலைவன் - வயது அதிகம் ஆகாதவன் - எதிர்பாராமல் திடீரென்று காலகதி அடைந்தவன் - அவன் மறைந்துவிட்ட பிறகு எவ்விதமான ஆறுதல்தான் சொல்ல முடியும்? வாய் திறந்து வார்த்தைகளைக் கொட்டாமல் பகல் முழுதும் கழித்தோம்.
மத்தியானம் மணி மூன்றிருக்கும். ஊருக்குத் திரும்புவதற்காக வண்டி நிற்கும் இடத்திற்குக் கிளம்பினோம்.
சரியான வெயில். மூன்று என்றாலும் தலைவெடிக்கிறது. பொடி ஒட்டுகிறது. நான் காலை மாற்றி மாற்றி நொண்டி போல் தத்தித்தத்தி நடந்தேன்.
அப்பொழுதுதான் என்னுடன் கூடவந்த நண்பன் என் காலைக் கவனித்தான்.
''செருப்பெங்கே? இந்த வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்தாயா?'' என்றான்.
''அதெல்லாம் மறக்கவில்லை.''
''அப்படி என்றால் வேண்டுமென்றே வைத்துவிட்டு வந்தாயா?''
''அதுவுமில்லை''
''பின்?''
'' ஒரு நிமிஷம் தயங்கினேன்.
''பின் செருப்பெங்கே?''
''ரயிலிலேயே வைத்துவிட்டேன்.''
''மறந்துவிட்டாயா?''
''இல்லை. நினைப்புடனேயே விட்டுவிட்டேன்.''
இரவில் நான் செருப்பு மயமாய் இருந்ததையும் இப்பொழுது செருப்பையே விட்டு விட்டதையும் பற்றியோ என்னமோ நினைத்துக்கொண்டு ஆச்சரியத்தால் வாய் திறந்து ஒருவினாடி நின்றான். பிறகு என்னவென்று கேட்டான்.
“கிழியாத செருப்பைக்கூட அவன் திடீரென்று விட்டுச் சென்றுவிடவில்லையா? ஒரு ஒட்டைச் செருப்பைப்பற்றி பெரிய துயரத்தின் முன்னிலையிலே என் மனது அவ்வளவு குழப்பலாமா என்ற எண்ணம் உதித்தது.”
''எப்பொழுது?''
''இந்த ஊர் ரயில்வே ஸ்டேஷனை அடைந்ததும்!''
''பிறகு?''
''ரயிலை விட்டு இறங்கியபொழுது செருப்பை மாட்டிக் கொள்ளாமல் இறங்கிவிட்டேன்.
அவ்வளவுதான்.''
நண்பன் பேசவில்லை. ஒரு வினாடி கழிந்தது.
''ஆமாம். இந்த உடம்பும் செருப்புத்தான். உயிரென்னும் வழிப்போக்கன் எப்பொழுதும் எந்த நிலையிலும் இதைக் கழட்டி எரியலாம். யாரால் தடுக்க முடியும்?'' என்றான்.

மதினிமார்கள் கதை - கோணங்கி
உடனே அடையாளம் கண்டு விட்டான். சந்தேகமில்லாமல்; இவன் கேட்ட அதே குரல்; அதே சிரிப்பு. வியாபாரம் ஆனாலும் ஆகாவிட்டாலும் சலிப்பில்லாத அதே பேச்சு. ஆவுடத்தங்க மதினியா.
சாத்தூர் ரயிலடியில் வெள்ளரிக்காய் விக்கிறவனை சேர்த்துக் கொண்டு ஓடி வந்தவளென்று கேள்விப்பட்டிருந்த நம்மூர் மதினியா இப்படி மாறிப் போனாள். என்ன வந்தது இவளுக்கு. இத்து நரம்பாகிப் போனாளே இப்படி.
இவளைக் காணவும்தான் பழசெல்லாம் அலைபாய்ந்து வருகிறது. பிரிந்து போனவர்களெல்லாம் என்ன ஆனார்கள். அவர்களெல்லாம் எங்கே போய் விட்டார்கள். பிரியத்துக்குரியவர்களையெல்லாம் திரும்பவும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது. எங்கே அவர்களை?
அவன் வந்த ரயில் இன்னும் புகை விட்டபடி புறப்படத் தயாராய் - ஜன்னலோரம் போய் நின்று பூக்கொடுக்கிற, நஞ்சி நறுங்கிப் போன ஆவுடத்தங்க மதினியைப் பார்த்தான். கூடை நிறையப் பூப்பந்தங்களோடு வந்திருந்தாள். பூ வாடாமலிருக்க ஈரத்துணியால் சுற்றியிருந்தாள் அதை.
நம்மூரிலிருந்து கொண்டுவந்த சிரிப்பு இன்னும் மாறாமலிருந்தது அவளிடம். ஒவ்வொரு தாய்மாரிடமும் முழம் போட்டு அளந்து கொடுக்கிறாள். கழுத்தில் தொங்கும் தாலிக்கயறும், நெற்றியில் வேர்வையோடு கரைந்து வடியும் கலங்கிய நிலா வட்டப் பொட்டுமாக அவளைப் பார்த்தான். தானே அசைகிற ஈர உதட்டில் இன்னும் உயிர் வாடாமல் நின்றது.
கண்ணுக்கடியில் விளிம்புகளில் தோல் கறுத்து இத்தனைக் காலம் பிரிவை உணர்த்தியது. வருத்தமுற்று ஏங்கிப் பெருமூச்சு விட்டான். அவளை எப்படியாவது கண்டு பேசி விட நினைத்தான். அதற்குள் இவனைத் தள்ளிக் கொண்டுபோன கூட்டத்தோடு வாசல்வரை வந்து; திரும்பவும் எதிர்நீச்சல் போட்டு முண்டித் தள்ளி உள்ளே வருமுன் விடைபெற்றுச் செல்லும் ரயிலுக்குள் இருந்தாள். பெரிய ஊதலோடு போய்க் கொண்டிருந்தது ரயில்.
மூடிக் கிடந்த ஞாபகத்தின் ஒவ்வொரு கதவையும் தட்டித் திறந்து விட்ட ஆவுடத்தங்க மதினி மீண்டும் கண்ணெதிரில் நின்றாள். அதே உதடசையாச் சிரிப்புடன், பழையதெல்லாம் ஒவ்வொன்றாய்ப் புது ஒளியுடன் கண்ணெதிரே தோன்றியது. ஆச்சரியத்தால் தோள்பட்டைகளை உலுக்கிக் கொண்டு நடந்தான்.
பஸ் ஸ்டாண்டுக்குள் நின்றிருந்த தகர டப்பா பஸ்ஸைப் பார்த்தான். 'நென்மேனி மேட்டுப்பட்டி' க்கு என்று எழுதியிருந்த போர்டைத் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டு சந்தோஷப்பட்டான். இப்போது சொந்த ஊருக்கே பஸ் போகும்.
பஸ்ஸில் ஏறிக்கொண்டிருக்கும் எல்லாருக்கும் கையெடுத்து வணக்கம் சொல்லணும் போல இருந்தது. யாராவது ஊர்க்காரர்கள் ஏறியிருக்கிறார்களா என்று கழுத்தைச் சுற்றிப் பார்த்துக் கொண்டான். தெரிந்த முகமே இல்லாமல் எல்லாமே வேத்து முகங்கள். எல்லாரும் இடைவெளியில் இறங்கி விடக் கூடியவர்களாக இருக்கும்.
பஸ் புறப்பட்டது. ஒரே சீரானச் சத்தத்துடன் குலுங்கா நடையுடன் நகர்ந்து கொண்டிருந்தது பஸ். மதிப்பு மிகுந்தவற்றை எல்லாம் நினைவுப்படுத்திக் கொள்ளும் இசையென சத்தம் வரும். காற்று கூட சொந்தமானதாய் வீசும், சட்டையின் மேல் பட்டன்களை எல்லாம் கழட்டி விடவும் பனியனில்லாத உடம்புக்குள் புகுந்து அணைத்துக்கொண்ட காற்றோடு கிசுகிசுத்தான். ஜன்னலுக்கு வெளியில் பஜாரில் யாராவது தட்டுப்படுகிறார்களா என்று முழித்து முழித்துப் பார்த்துக் கொண்டே வந்தான். திரும்பவும் ரயில்பாதை வந்தது. வெறுமனே ஆளற்றுக் கிடந்த ஸ்டேஷனில் சிமெண்டு போட்ட ஆசனங்கள் பரிதாபத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தன. ரயில்வே கேட்டைக் கடந்து வண்டி மேற்காகத் திரும்பி சாத்தூரின் கடைசி எல்லையில் நின்றது. அங்கொரு வீட்டில் யாரோ செத்துப் போனதற்காகக் கூடி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். பஸ்ஸில் வந்த பெண்கள் இங்கிருந்து அழுது கொண்டே படியிறங்கிப் போகவும் பஸ் அரண்டு போய் நின்றது.
செத்த வீட்டு மேளக்காரர்கள் மாறி மாறித் தட்டும் ரண்டாங்கு மேளத்துடன் உள்ளடங்கி வரும் துக்கத்தை உணர்ந்தான். முதிர்ந்த வயதுடைய பெரியாள் உருமியைத் தேய்க்கிற தேய்ப்பில் வருகிற அமுத்தலான ஊமைக் குரல் அடிநெஞ்சுக்குள் இறங்கி விம்மியது. அந்த இசைஞர்கள் ஒட்டுமொத்த துக்கத்தின் சாரத்தைப் பிழிந்து கொண்டிருப்பதாய் உணர்ந்தான். யாராலும் தீர்க்க முடியாத கஷ்டங்களையெல்லாம் அடிவயிற்றிலிருந்து எடுத்து ஊதிக் கொண்டிருந்த நாயனக்காரரின் ஊதல், போகிற பஸ்ஸோடு வெளியில் வந்து கொண்டிருந்தது.
என்றோ செத்துப்போன பாட்டியின் கடைசி யாத்திரை நாள் நினைவுக்கு வந்தது. மயானக்கரையில் தன் மீசை கிருதாவை இழந்த தோற்றத்தில் மொட்டைத் தலையுடன் இவனது அய்யா வந்து நின்றார்.
இவனைப் பெத்த அம்மாவைப் பிரசவத்துடன் வந்த ஜன்னி கொண்டுபோய் விட்டதும் நாலாவதாகப் பிறந்த பிள்ளை நிலைக்க வேண்டும் என்பதற்காக இவன் மூக்கில் மந்திரித்துப் போடப்பட்டிருந்த செம்புக் கம்பிதான் மூக்கோரத்தில் இருந்துகொண்டு 'எம்மா.... எம்மா.......' என்றது. அம்மா இல்லாவிட்டாலும் தெக்குத் தெரு இருந்தது. மேலெழும்பும் புழுதி கிடந்தது அங்கு. புழுதி மடியில் புரண்டு விளையாட, ஓடிப் பிடிக்க, ஏசிப்பேசி மல்லுக்கு நிற்க, தெக்குத் தெரு இருக்கும். எல்லாத்துக்கும் மேலாக இவன் மேல் உசுரையும் பாசத்தையும் சுரந்து கொண்டிருக்க மதினிமார் இருந்தார்களே. வீட்டுக்கு வீடு வாசல்படியில் நின்றுகொண்டு இவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருக்கும் சமைஞ்ச குமரெல்லாம் 'செம்புகோம்.... செம்புகோம்....' என்று மூச்சுவிட்டுக் கொண்டார்களே!
பல ஜாதிக்காரர்களும் நிறைந்த தெக்குத் தெருவில் அன்னியோன்யமாக இருந்தவர்களை எல்லாம் நினைவு கூர்ந்தான்.
தனிக்கட்டையான தன் அய்யா கிட்ணத்தேவர் திரும்பவும் மீசை முளைத்துக் கிருதாவுடன் இவன் முன் தோன்றினார்.
'அடேய் .... செம்புகோம் ..... ஏலேய்.....' என்று ஊர் வாசலில் நின்று கூப்பிடும்போது இவன் 'ஓய் ... ஓய் ....' என்ற பதில் குரல் கொடுத்தபடி கம்மாய்க்கு அடியில் விளிம்போரம் உட்கார்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தான். தூண்டிலை எடுத்து அலையின் மேல் போடுவான். மீனிருக்கும் இடமறிந்து மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டே அத்தம்வரை போவான்.
பண்டார வீட்டு மதினிமார்களெல்லாம் மஞ்ச மசால் அரைத்து வைத்து ரெடியாகக் காத்திருப்பார்கள். 'கொழுந்தன் வருகிறாரா ....' என்று அடிக்கொருதரம் குட்டக்கத்திரிக்கா மதினியைத் தூதனுப்பித் தகவல் கேட்டுக் கொள்வார்கள். தண்ணிக்குள் நீந்தித் திரியும் மீனாக இவன் தெருவெல்லாம் சமைஞ்சு நிற்கும் மதினிமார் பிரியத்தில் நீந்திச் சென்றான். ஒரு மீனைக் கண்டதுபோல எல்லாரும் சந்தோஷப்பட்டார்கள்.
கீகாட்டுக்கறுப்பாய் 'கரேர் ....' ரென்ற கறுப்பு ஒட்டிக் கொள்ள 'அய்யோ ... மயினீ ..... கிட்ட வராதே...... வராதே .....' என்று சுப்பு மதினியை விட்டுத் தப்பி ஓடினான். பனையேறி நாடார் வீட்டு சுப்பு மதினிக்கும், பொஷ்பத்துக்கும் இவன் மேல் கொள்ளைப் பிரியம். 'நாங்க ரெண்டு பேருமே செம்புகத்தையே கட்டிக் கிடப் போறோம் ......' என்று ஒத்தைக் காலில் நின்று முரண்டு பண்ணுவதைப் பார்த்து இவன், நிசத்துக்கே அழுதபடி, 'மாட்டேம்.... மாட்டேம்..... மாட்டம் போ.' என்று தூக்கி எறிந்து பேசினான். உடனே அவர்கள் ஜோடிக் குரலில் 'கலகலகல ....' வெனச் சிரித்து விடவும் ஓட்டமாய் ஓடி மறைவான் செம்பகம்.
குச்சியாய் வளர்ந்திருக்கும் சுப்பு மதினியும், ரெட்டச் சடைப் பொஷ்பமும் ஒவ்வோர் அந்தியிலும் பனங்கிழங்கு, நொங்கு, தவுண், பனம்பழம் என்று பனையிலிருந்து பிறக்கிற பண்டங்களோடு காத்திருப்பார்கள். இவனுக்காக, இவனைக் காணாவிட்டால் கொட்டானில் எடுத்துக் கொண்டு தேட ஆரம்பித்து விடுவாள் ரெட்டச்சடை புஷ்பம்.
பனையேறிச் சேருமுக நாடார் வீட்டுக்குக் கள்ளுக் குடிக்கப் போகும் அய்யாவுக்கும் ரெட்டச்சடைக்கும் ஏழாம்பொருத்தமாய் என்னேரமும் சண்டதான். அவளை மண்டையில் கொட்டவும், சடையைப் பிடித்து இழுக்கவும் "இந்த வயசிலும் கிட்ணத்தேவருக்க நட்டனை போகலே...." என்று சேருமுக நாடார் சிரித்துக் கொள்வார். 'ஓய்.....மருமோனே' என்ற கீகாட்டுப் பேச்சில் 'தாப்பனும் மோனும் பனையேறிமோளை கொண்டு போயிருவீயளோ. சோத்துக்கு எங்க போட்டும் நா ... மடத்துக்கு போயிறவா' என்று கள்ளு நுரை மீசையில் தெறிக்கப் பேசுவார் நாடாரு. இதைக் கேட்ட அய்யாவுக்குக் 'கெக்கெக்கே ...' என்று சிரிப்பு வரும் வெகுளியாய்.
ஊர் ஊருக்குக் கிணறு வெட்டப்போகும் இவன் அய்யாவும், தெக்குத் தெரு எளவட்டங்களும் கோழி கூப்பிடவே மம்பட்டி, சம்பட்டி, கடப்பாறை, ஆப்புகளோடு போய்விடுவார்கள். சுத்துப்பட்டி சம்சாரிமார்கள், கிட்ணத்தேவன் தோண்டிக் கொடுத்த கிணத்துத் தண்ணீரில் பயிர் வளர்த்தார்கள்.
அய்யா கிணத்து வேலைக்குப் போகவும் தெருத் தெருவாய் சட்டிப் பானைகளை உருட்டித் தின்பதற்கு ஊரின் செல்லப் பிள்ளையாய் மதினிமார் இவனைத் தத்தெடுத்திருந்தார்கள். இவனுக்கு 'ஓசிக்கஞ்சீ ....' 'சட்டிப் பானை உருட்டீ....' 'புது மாப்ளே ...' என்ற பட்டங்களுண்டு. ராத்திரி நேரங்களில் எடுக்கிற நடுச்சாமப் பசிக்கு யார் வீட்டிலும் கூசாமல் நுழையும் அடுப்படிப் பூனையாகி விடுவான். இவன் டவுசர், சட்டை, மொளங்கால் முட்டில் அடுப்புக்கரி ஒட்டியிருக்கும்.
தெருமடத்தில் குடியிருக்கும் மாடசாமித் தேவரோடு சரிசமமாய் இருந்து வெத்தலை போட்டுக் கொண்டு தெருத் தெருவாய் 'புரிச்சு ... புரிச் ...' என்று துப்பிக் கொண்டே போய்ப் பண்டார வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொள்வான்.
'மாப்ளைச் சோறு போடுங்கத்தா .... தாய்மாருகளா.....' என்றதும் கம்மங் கஞ்சியைக் கரைத்து வைத்து 'சாப்பிட வாங்க மாப்பிளே ....' என்று சுட்ட கருவாட்டுடன் முன் வைப்பார்கள்.
நாளைக்குக் கல்யாணமாகிப் போற காளியம்மா மதினி கூட வளையல் குலுங்க இவன் கன்னத்தைக் கிள்ளி விட்டு ஏச்சங்காட்டுவாள். இந்தக் காளியம்மா மதினிக்குச் சிறுசில் இவனைத் தூக்கி வளர்த்த பெருமைக்காக இவன் குண்டிச் சிரங்கெல்லாம் அவள் இடுப்புக்குப் பரவி அவளும் சிரங்கு பத்தியாய் தண்ணிக்குடம் பிடிக்க முடியாமல் இடுப்பைக் கோணிக்கோணி நடந்து போனாள். இப்போதும் சிரங்குத் தடம் அவள் இடுப்பில் இருக்கும்.
'செம்புகோம்.... செம்புகோம்.. செம்புக மச்சானுக்கு வாக்கப்படப் போறேன் ... பாரேன்.....' என்று முகத்துக்கு நேராக 'பளீ' ரென்ற வெத்தலைக் காவிப் பல் சிரிக்கக் காளியம்மா மதினியின் சின்னையா மகள் குட்டக் கத்திரிக்கா திங்கு திங்கென்று குதித்துக்கொண்டே கூத்துக் காட்டுவாள்.
'அட போட்டீ... குட்டச்சீ' என்று முணுமுணுத்தபடி இவன் மூக்குக்கு மேலே கோபம் வரும். அவள் உடனே அழுது விடுவாள். 'மயினி ..... மயினி..... அழுவாத மயினீ ......' 'உம் ...' மென்று முகங்கோணி நிற்கும் குட்டக்கத்திரிக்காவைச் சமாதானப்படுத்த கடைசியில் இவன் கிச்சனங்காட்டவும்தான் அவள் உதட்டிலிருந்து முத்து உதிரும், சிரிப்பு வரும்.
வாணியச் செட்டியார் வீட்டு அமராவதி மதினி அரச்ச மஞ்சளாய்க் கண்ணுக்குக் குளிர்ச்சியான தோற்றத்துடன் பண்டார வீட்டுத் திண்ணைக்கு வருவாள். அவளைக் கண்டதுமே கூனிக் குறுகி வெட்கப்பட்டுப்போய் குருவு மதினி முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சிரிப்பான் செம்பகம். மேட்டுப்பட்டி நந்தவனத்தில் பூக்கிற ஒவ்வொரு பூவும் அமராவதி மதினி மாதிரி அழகானது.
தாவாரத்தில் இருந்து கொண்டே என்னேரமும் பூக்கட்டும் குருவு மதினி, அமராவதிக்கென்றே தனீப்பின்னல் போட்டு முடிந்து வைத்திருக்கும் பூப்பந்தை விலையில்லாமலே கொடுத்து விடுவாள். குருவு மதினிக்கும், அமராவதி மதினிக்கும் கொழுந்தப் புள்ளை மேல் தீராத அக்கறை.அவன் குளித்தானா சாப்பிட்டானா என்பதிலெல்லாம். ஊத்தைப் பல்லோடு தீவனம் தின்றால் காதைப் பிடித்துத் திருகி விடுவாள் அமராவதி மதினி. கண்டிப்பான இவளது அன்புக்குப் பணிந்த பிள்ளையாய் நடந்துகொண்டான் செம்பகம்.
இவனது எல்லாச் சேட்டைகளையும் மன்னித்து விட குருவு மதினியால்தான் முடியும். எளிய பண்டார மகளின் நேசத்தில் இவன் உயிரையே வைத்திருந்தான். சுத்துப்பட்டிக்கெல்லாம் அவளோடு பூ விக்கப் போனான். காடுகளெங்கும் செல்லங்கொஞ்சிப் பேசிக் கொண்டார்கள் இருவரும். இவன் வெறும் வீட்டு செல்லப் பிள்ளையானான்.
குருவு மதினியின் அய்யாவுக்குக் காசம் வந்து வீட்டுக்குள்ளேயே இருமிக்கொண்டு கிடந்தார். அவரைக் கூட்டிக்கொண்டு போய் ஆசாரிப் பள்ளத்தில் சேர்ப்பதற்காக ராப்பகலாய்ப் பூக்கட்டினாள். அவளுக்கு நார் கிழித்துக் கொடுத்து ஒவ்வொரு பூவாய் எடுத்துக் கொடுக்க; அவள் சேர்ப்பதை, விரல்கள் மந்திரமாய்ப் பின்னுவதைப் பார்த்துக் கொண்டே பசிக்கும்வரை காத்திருப்பான். பசித்ததும் மூஞ்சியைக் குராவிக் கொண்டு கொறச்சாலம் போடுவான்.
'இந்தா வந்துட்டன் இந்தா வந்துட்டன்' என்று எழுந்து வந்து பரிமாறுவாள் குருவு மதினி.
சீக்காளி அய்யாவைக் கூட்டிக் கொண்டு போகவேண்டிய நாள் வந்ததும் இவனையும் ஆசாரிப் பள்ளத்துக்குக் கூட்டிக்கொண்டு போனாள். 'வரும்போது ரெண்டு பேரும் பொண்ணு மாப்ளையா வாங்க....! ' என்று எல்லாரும் கேலி பண்ணிச் சிரித்து அனுப்பினார்கள். மலையாளத்துக்குக் கிட்டெயே இருக்கும் அந்த ஊரில் நாலு மாசம் மதினியோடு இருந்தான். அப்பவெல்லாம் இவள் காட்டிய நம்பவே முடியாத பாசத்தால் இவன் ஒருச்சாண் வளர்ந்து கூட விட்டான். சுகமாகி வரும்போது அய்யாவுக்கு வேட்டியும் இவனுக்குக் கட்டம் போட்ட சட்டையும், ஊதா டவுசரும் எடுத்துக் கொடுத்துக் கூட்டி வந்தாள். குருவு மதினிக்கு எத்தனையோ வயசான பின்னும் கல்யாணம் நடக்கவில்லை. குருவு மதினிக்குக் கல்யாணமானால் ஊரைவிட்டுப் போய்விடுவாளோ என்று பயமாக இருக்கும். 'மயினி .... மயினி .....நீ வாக்கப்பட்டுப் போயிருவியா ..... மயினீ ....' என்பான் .' என் ராசா செம்புகத்தைக் கெட்டிக்கிடத்தான் ஆண்டவன் எழுதியிருக்கான் புள்ளே ....! ' என்றாள்.மெய்யாகவே அவள் சொல்லை மனசில் இருத்தி வைத்துக் கொண்டான் செம்பகம்.
கீ காட்டிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த ராசாத்தி அத்தையும் அவளது ஆறு பொட்டப் பிள்ளைகளும் எப்போது பார்த்தாலும் பூந்தோட்டத்தில் அக்கறையாய்ப் பூவெடுத்துக் கொண்டு வந்து கொட்டானுக்கு ஆழாக்கு தானியத்தைக் கூலியாக வாங்கிக் கொண்டு போனார்கள். ராசாத்தி அத்தைக்கும், நாடார் வீட்டு மதினிமார்களுக்கும் குருவு மதினியோடு பேசுவதற்கு எவ்வளவோ இருந்தது. தங்கள் கீகாட்டு ஊரைப் பற்றியும் அங்கு விட்டு வந்த பனைகளைப் பற்றியும் ஆந்திராவுக்குக் கரண்டு வேலைக்குப் போய்விட்ட ராசாத்தி அத்தைவீட்டு மாமாவைப் பற்றியும் சொல்லச் சொல்ல இவனும் சேர்ந்து 'ஊம்....' கொட்டினான்.
இவன் அய்யாவுக்குக் கலயத்தில் கஞ்சி கொண்டு போன மாணிக்க மதினியின் அழுகுரல் கேட்டு எல்லாரும் ஓடினார்கள்.
கிணத்து வெட்டில் கல் விழுந்து அரைகுறை உயிரோடு கொண்டு வரப்பட்ட அய்யா அலறியது நினைவில் எழவும் திடுக்கிட வைத்தது இவனை.
வெளியில் கிடக்கும் ஆளற்ற வெறுங்கிணறுகள் தூர நகர்ந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு கிணத்து மேட்டிலும் இவன் அய்யா நிற்பதைக் கண்டான். திரும்பவும் எழுந்து நடமாட முடியாமல் நாட்டு வைத்தியத்துக்கும் பச்சிலைக்கும் ஆறாத இடி, இவன் நெஞ்சில் விழ, கடைசி நேரத்தில் சாத்தூர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போன நாளில் அனாதையாகச் செத்துப் போனார் அய்யா. பஸ்ஸில் நீண்டிருந்த ஜன்னல் கம்பியில் கன்னத்தைச் சாய்த்துத் தேய்த்துக் கொண்டு கலங்கினான்.
அன்று சாத்தூரில் ரயிலேறியதுதான். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ரயில் நின்று புறப்படும்போது மதினிமார்கள் கூப்பிடுகிற சத்தம் போடும் ரயில்.
அய்யாவின் நினைவு பின்தொடர சாத்தூர் எல்லையில் கேட்ட உருமியின் ஊமைக்குரல் திரும்பவும் நெஞ்சிலிறங்கி விம்மியது.
சூழ்ந்திருந்த காடுகளும், பனைமரங்களும் உருண்டு செல்ல பஸ்ஸிற்கு முன்னால் கிடக்கும் தார் ரோடு வேகமாய்ப் பின்வாங்கி ஓடியது. ஜன்னல் வழியாக மேகத்தைப் பார்த்தான். ஒரு சொட்டு மேகங்கூட இல்லாத வானம் நீலமாய்ப் பரந்து கிடந்தது. ரோட்டோர மரங்களில் நம்பர் மாறி மாறிச் சுற்றியது. ஆத்துப் பாலத்தின் தூண்கள் வெள்ளையடிக்கப்பட்டு மாட்டுக்காரர்களால் கரிக்கோடுகளும், சித்திரங்களும் வரையப்பட்டிருந்தன. தண்ணீரில்லாத ஆத்தில் தாகமெடுத்தவர்கள் ஊத்துத் தோண்டிக் கொண்டிருந்தார்கள்.
பாலம் கடந்து மேட்டில் ஏறியதும் ஊர், தெரிந்துவிட்டது. உள்ளே நெஞ்சு 'திக்கு... திக்....' கென்று அடித்துக்கொள்ள ஊரை நெருங்கிக் கொண்டிருந்தான் செம்பகம். தூரத்தில் தெரியும் காளியங்கோயிலும் பள்ளிக்கூடத்துக் கோட்டச்சுவரும் இவனை அழைப்பது போலிருந்தது.
எல்லா மதினிமார்களுக்கும் கண்டதை எல்லாம் வாங்கிக்கொண்டு போகிறான். மதினிமாரெல்லாம் இருக்கும் தெக்குத் தெருவை நெருங்க இருந்தான் செம்பகம். மனசு பறந்து கொண்டிருந்தது. எல்லாரையும் ஒரே சமயத்தில் பார்த்து ஆச்சரியப்பட இருந்தான். சீக்கிரமே ஊர் வந்து விடப்போகிறது. எல்லா மதினிமார்களையும் தானே கட்டிக்கொண்டு வாழவேண்டும். 'காளியாத்தா அப்படி வரங்குடுதாயே....' என்று முன்பு கேட்ட வரத்தை நினைத்துக்கொண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். பஸ்ஸிற்கும் சந்தோஷம் வந்து துள்ளிக் குதித்தது. மனசு விட்டுப் பாடினான். 'ம்... ம்... ம்.... ம் ம் ம்வும்.....' மென்ற ஊமைச்சங்கீதமாய் முனங்கிக் கொண்டு வந்தான் செம்பகம். பருத்திக் காட்டில் சுளை வெடிக்காமல் நிலம் வெடித்துப் பாளம் பாளமாய் விரிசலாகிக் கிடக்கும். வாதலக்கரை சித்தையாத் தேவனுக்கு வாழ்க்கைப் பட்டுப்போன மாணிக்க மதினி இருந்தால் காடே வெடித்திருக்காது. இப்படி ஈயத்தைக் காய்ச்சும் வெயிலும் அடிக்காது. மாணிக்க மதினியோடு எல்லா மதினிமார்களும் பருத்திக் காட்டில் மடிப்பருத்தியுடன் நின்ற கோலமாய் கண்முன் தோன்றும். இருக்கிற ஒரு குறுக்கத்திலும் எத்தனை வகை தானியங்களுக்கு இடம் வைத்திருந்தாள். அவள் மனசே காடாகும் போது தட்டா நெத்துக்கும் பாசிப்பிதம் பயறுக்கும் நாலு கடலைச் செடிக்கும் பத்துச்செடி எள்ளுக்கும் இடமிருந்தது. காடே கிடையாகக் கிடக்க விதித்திருந்தது அவளுக்கு. காட்டு வெள்ளாமையும் அவளோடு போயிற்று.
கண்ணெட்டும் தூரம்வரை நிலம் வறண்டு ஈரமற்றுக் கிடக்கும் தரிசு நிலங்களில் வேலிக்கருவை தோண்டிக் கொண்டிருந்தார்கள். மஞ்சள் மூக்குடன் கூடிய விறகு லாரிகளில் அடையாளம் தெரியாதவர்கள் பாரம் ஏற்றிக்கொண்டிருந்தார்கள். மந்தைத் தோட்டத்தில் கிணத்தை எட்டிப் பார்த்துக்கொண்டு படுத்திருக்கும் கமலைக்கல்லும், தோட்ட நிலமும் நீண்டகால உறக்கத்திலிருந்து மீளாமல் இன்னும் இறுகிக்கொண்டிருந்தது. தோட்டத்தை ஒட்டி நின்ற பஸ் இவனை இறக்கிவிட்டுச் சென்றது.
தெக்குத்தெரு வாசலில் படம்போட்ட தோல்பையுடன் நின்றான். குப்புற விழுந்து கிடக்கும் தெக்குமடத்தில் ஒருகல்தூண் மட்டும் தனியாய் நிற்க அதன்மேல் உட்கார்ந்திருந்த காக்கா இவனைப் பார்த்துக் கரைந்துகொண்டு ஊருக்கு மேல் பறந்து சென்றது.
தெருவை வெறிக்கப் பார்த்துக்கொண்டே நடந்தான். தெருப் புழுதியே மாறிப் போய் குண்டும் குழியுமாய் சீரற்று நீண்டு கிடந்தது தெரு. இவன் பண்டார வீடுகளிருந்த இடத்துக்கு வந்து நின்றான். இருண்ட பாகமான வீடுகளாய் இற்று உதிர்ந்து கொண்டு வரும் கூரை முகட்டிலிருந்து மனதை வதைத்தெடுக்கும் ஓலம் கேட்டது. மனதைப் புரட்டிப் புரட்டிக் கொண்டுபோய் படுகுழியைப் பார்த்துத் தள்ளிவிட்டுச் சிரிக்கிற ஓலமாய்க் கூரைகளில் சத்தம் வரும். தெருவே மாறிப்போய் - குறுனையளவுகூட இவன் பார்த்த தெருவாயில்லை. தெருவே காலியாகிவிட்டது. தெருத் தெருவாகத் தேடினான். முன்பு கண்ட அடையாளம் ஏதாவது தட்டுப்படுமா? - என்று பார்த்தான். எவ்வளவோ மூடிவிட்டது. புதிய தராதரங்கள் ஏற்பட்டு, இவனைச் சுற்றி வேடிக்கை பார்க்கவந்த கூட்டத்துக்குள் இவன் இருந்தான். சிறுவர்களும் பெரியவர்களும் இவனைப் பார்த்து சலசலத்துக் கொண்டார்கள். 'என்ன வேணும்' மென்ற சைகையால் இவனை அந்நியமாக்கினார்கள்.
இவன் ஒவ்வொன்றாய்ச் சொல்லச் சொல்ல எல்லாரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டார்கள். இன்னும் கூட்டம் இவனைச் சுற்றி வட்டமாக நின்றது.
வந்தவர்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும். கூட்டங்கூடி நேரத்தை வீணாக்காமல் பெண்களெல்லாம் தீப்பெட்டி ஒட்டப் போய்விட்டார்கள். குழந்தைகள் 'ஹைய்ய்ய்....' என்ற இரைச்சல் போட்டுக்கொண்டு தீப்பெட்டி ஆபிஸ் பஸ் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து ஓடிவிட்டார்கள். கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த பெரியவர்களுக்கு வெட்டிப் பேச்சே பிடிக்காது. காட்டில் வெட்டிப் போட்டிருந்த வேலிக்கருவையைக் கட்டித் தூக்கி வர கயறு தேடப்போனார்கள். கொஞ்சநேரத்தில் ஒரு சுடுகுஞ்சி கூட இல்லாமல் இவன் தனித்து விடப்பட்டான்.
எல்லாம் தலைக்குமேல் ஏறி சுமையாய் அழுத்த குறுக்கொடிந்துபோய், ரொம்ப காலமாய் ஆட்டுப்படாமல் கிடந்த மதினி வீட்டு ஆட்டுரலில் உட்கார்ந்தான். தலையில் கைவைத்தபடி மூஞ்சியில் வேர்த்து வடியத் தரையை வெறிக்கப் பார்த்தான். மூஞ்சியில் வழியும் அசடைப் புறங்கையில் துடைத்துக் கொண்டான்.
'கொழுந்தனாரே.... எய்யா.... கப்பலைக் கவித்திட்டீரா.....கன்னத்தில் கை வைக்காதிரும்.... செல்லக் கொழுந்தனாரே....எய்யா....' என்று எல்லா மதினிமார்களும் கூடிவந்து எக்கண்டம் பேச, அவர்கள் மத்தியில் இருக்க வேண்டியவன், இப்படி மூச்சுத் திணறிப் போய் ஆட்டுரலில் உட்கார்ந்திருக்கும்படி ஆனது.
நாளைக்கு மீண்டும் ஓடிப்போன செம்பகமாய் நகரப் பெருஞ்சுவர்களுக்குள் மறைந்து போவான். இருண்ட தார்விரிப்பின் ஓரங்களில் உருவமே மாறிப்போய் - பேரிரைச்சலுக்குள் அடையாளந்தெரியாத நபராகி - அவசர அவசரமாய்ப் போய்க்கொண்டிருப்பான் செம்பகம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)