20-ஆம் நூற்றாண்டின் தமிழ்க் கவிஞர்கள் பலர், தெய்வப்பெயர், அறிஞர் பெயருடன் "தாசன்' என்ற சொல்லை இணைத்து அதைப் புனைபெயராகக்கொண்டு எழுதினர். அவர்களைப் போலவே, இலங்கையில் புகழ்பெற்ற தமிழ்க் கவிஞராக விளங்கியவர் பரமஹம்சதாசன் ஆவார்.
இவர், பிறப்பால் தமிழ்நாட்டினர்; கவிதையால் இலங்கையில் புகழ்பெற்றவர். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், "அதிகரம்' என்ற சிற்றூரில் முத்துப்பழனியப்பர் - அழகம்மை இணையருக்கு, 16.12.1916-இல் முதல் பிள்ளையாகப் பிறந்தவர். இயற்பெயர் சுப்பராமன்.
இளம் வயதிலேயே பணியின் காரணமாக சுப்பராமன் இலங்கைக்குச் சென்றார். அங்கே மட்டக்களப்பு நகரில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்தார். இயல்பாகவே உணர்ச்சியும், தமிழார்வமும் நிறைந்த இவரை, மட்டக்களப்பு மண் கவிஞராக்கியது. அந்த நகரத்தின் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தொடர்பு இவரை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் தாசனாக்கியது. கி.பி. 1945 முதல் இவருடைய கவிதைகள் இலங்கைத் தமிழ் இதழ்களில் வெளிவரத் தொடங்கின.
இவருடைய கவிதைகள் உணர்ச்சி நிறைந்தவை; இனிமையும் எளிமையும் உடையவை. பக்திச்சுவைததும்பும் இவருடைய கவிதைகள் அன்பர் பலரைத் தன்பால் ஈர்ப்பவை. எனவே, இக்கவிஞர் "பக்திக்கவிஞர்' பரமஹம்சதாசன் என்றே அழைக்கப்பெற்றார்.
பக்திக் கவிதைகள் மட்டுமன்றி, நாடு, மொழி, சமூகம் எனப் பல துறைகளிலும் இவர் பாடிய கவிதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. மகாகவி தாகூர் பாடிய "கனிகொய்தல்' என்ற கவிதை நூலையும், கீதாஞ்சலியையும் மரபுக்கவிதை வடிவில் தமிழுக்குத் தந்த பெருங்கவிஞர் இவர். இவற்றுள் "கனிகொய்தல்' நூலைத் "தீங்கனிச்சோலை' என்ற பெயரில் இலங்கை நாவலப்பிட்டி ஆத்மஜோதி நிலையம், 1963-இல் பதிப்பித்தது.
மகாகவி தாகூரின் பல பாடல்களைத் தமிழில் உரைக் கவிதையாக வடித்துள்ள ஆங்கில இலக்கியப் பேரறிஞர் வி.ஆர்.எம்.செட்டியார், "தாகூரின் இதயக்கமலத்திலே சுடர்கின்ற உலக ரகசியங்களை எல்லாம் மூலமொழியின் வனப்புடன் நமது கவிஞர் (பரமஹம்சதாசன்) அருமையாகச் சித்திரித்துக் காட்டும்போது நாம் அளவுக்கு மிஞ்சி இன்பமடைகிறோம்' என்று இந்நூல் பற்றிக் கருத்துரைப்பது பரமஹம்சதாசனின் கவித்துவ மேன்மைக்கு எடுத்துக்காட்டாகும்.
இக்கவிஞர் பல காரணங்களால் 1962-இன் இடைக்காலத்தில் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குத் திரும்பினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் அங்கீகரிக்கப்பட்ட "தமிழர் தேசிய கீதத்தை' உருவாக்கிய பெருமை கவிஞர் பரமஹம்சதாசனுக்கு உரியது. "இந்த நாட்டின் அநீதியானதொரு அரசியல் சட்டத்திற்குப் பலியாகி அவர் தமது தாய்நாடு திரும்ப நேரிட்டிருப்பினும் கூட, அவர் கவியுலகில் தமது தேன்சொட்டும் பாக்களால் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சிக்கு இலக்கிய அன்பர்கள் என்றும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள்' என்று இலங்கையின் அந்நாளைய மட்டக்களப்பு முதல் பாராளுமன்ற உறுப்பினர் செ.இராசதுரை பாராட்டியுள்ளது (வீரகேசரி நாளிதழ், 29.05.1962) எண்ணத்தக்கது. இதனால், இலங்கைத் தமிழர் தேசிய கீதத்தை உருவாக்கிய பெருமையுடையவர் இவர் என்பதை அறிகிறோம்.
கவியோகி சுத்தானந்த பாரதியார் மீது பக்தியும் மதிப்பும் கொண்டிருந்தார் பரமஹம்சதாசன். தன் மீது இவர் பாடியுள்ள பாடல்களைக் கவியோகி, தாம் இயற்றிய பாரதசக்தி மகா காவியத்தின் பிற்காலப் பதிப்புகளின் முகப்புப் பகுதியில் பெருமையோடு இணைத்து வெளியிட்டுக் கொண்டார். இது அவர்கள் இருவருக்கிடையே இருந்த அன்புக்கும் மதிப்புக்கும் எடுத்துக்காட்டாகும்.
பொதுவுடைமைக் கட்சித் தலைவர் ஜீவா இலங்கைக்குச் சென்றிருந்த காலத்தில், அவரோடு உடனுறைந்து பழகியவர் பரமஹம்சதாசன். சுவாமி சித்பவானந்தா, சுவாமி சச்சிதானந்தா, தவத்திரு குன்றக்குடி அடிகளார், திருலோகசீதாராம், துறைவன் முதலியவர்களுடன் நெருங்கிப் பழகியவர். இறுதிக்காலம் வரை இவர் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார் என்பது கூடுதலான செய்தி.
1962-இல் தமிழகம் வந்த கவிஞர் பரமஹம்சதாசன் உடல் நலக்குறைவால், 49-ஆவது வயதின் தொடக்கத்திலேயே அதாவது, 1965-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தன் சொந்த ஊரான "அதிகரத்தில்' காலமானார்.
கவிஞர் பரமஹம்சதாசன் மறைந்தாலும், அவர் பாடிய கவிதைகள் என்றும் மறையாத தமிழ்க் கருவூலமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. இவர் எழுதிய கவிதைகள், ஆயிரக்கணக்கானவை. மகாகவி தாகூரின் "தீங்கனிச்சோலை', "கவிதை மணிமாலை' என்னும் இவ்விரு நூல்களும் அளவால் சிறியவை என்றாலும், அக்கால இதழ்களில் வெளிவந்தவையும், கையெழுத்துப் பிரதிகளாக உள்ளவையுமான பிற கவிதைகள் நூல் வடிவம் பெற்றால், தமிழ்த்தாயின் சிறந்த அணிகலன்களாக அவை விளங்கும் என்பது உறுதி.
நன்றி - தமிழ்மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக