24/02/2012

இல்லறம் - வாழ்வியல் வெற்றிக்கு வள்ளுவம் - வ.வேம்பையன், அ.கோவலன்

நூல்கள் இருவகை. அந்தந்தக் காலத்திற்குள் ஏற்றவை; எக்காலத்திற்கும் ஏற்றவை (Book for the hour; Book for ever). நூல்களைக் கற்பதும் இருவகை. நூல் எழுதிய காலத்திற்குச் சென்று கற்பது; வாழும் காலத்திற்கு வந்து கற்பது. திருக்குறள் இரண்டாம் வகையைச் சார்ந்தது. அதனால்தான் 2000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூலாய் வையகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அமைப்பு முறை

திருக்குறள் நூலின் அமைப்பு முறையே நேற்றைய வாழ்வுக்கும் இன்றைய வாழ்வுக்கும் எதிர்கால வாழ்வுக்கும் வழிகாட்டும் நூல் என்பதை எடுத்துக் கூறுகிறது. பால்: அறம், பொருள், இன்பம். இயல் - அதிகாரம்: 1. அரசியல் 25, 2. இல்லறவியல் 20; 3. கற்பியல் 18; 4. நட்பியல் 17; 5 குடியியல் 13; 6. துறவறவியல் 13; 7. அமைச்சியல் 10; 8. களவியல் 7; பாயிரம் 4; 10. அரணியல் 2; 11. படையியல் 2; 12. பொருளியல் 1; 13 ஊழியல் 1 ஆக பால் 3; இயல் 13; அதிகாரம் 133; குறள் 1330.


இன்பத்துப்பால் 25 அதிகாரம்; அறத்துப்பால் 38 அதிகாரம்; பொருட்பால் 70 அதிகாரம்; பொருளை அறவழியில் மிகுதியாக ஈட்ட வேண்டும். அங்ஙனம் ஈட்டியவருக்கு அறமும் இன்பமும் எளிதில் வந்து சேரும். எளிதில் வந்தாலும் இன்பத்தைக் குறைவாகத்தான் துய்க்க வேண்டும். அறத்தை அடுத்த நிலையில் வைத்துப் போற்றிப் பேண வேண்டும் என்பது அதிகார எண்ணிக்கை முறையின் புதை பொருளாகும்.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டு சொன்னால் எளிதில் தெளிவு ஏற்படும். அறம் - வெற்றிலை; பொருள் - பாக்கு; இன்பம் - சுண்ணாம்பு என்று கொள்வோம். வெற்றிலை - பாக்கு - சுண்ணாம்பு அளவாக இருந்தால் வாய் சிவக்கும்; மணக்கும். அளவு மீறினால் வாய் வெந்து போகும். அதுபோல் வாழ்க்கையில் இன்பம் குறைவாகவும் அடுத்த நிலையில் அறமும் மிகுதி நிலையில் பொருளும் வைத்துப் போற்றப்பட்டால் வாழ்வு சிறக்கும்; புகழ் மணக்கும். இன்றேல் வறுமை வாட்டும்; நோய் தாக்கும்; வாழ்க்கை துன்பமயமாகிவிடும்.

மாந்தர் வாழ்க்கையில் முதல் ஆதாரம் அறம்; இரண்டாம் ஆதாரம் பொருள்; மூன்றாம் ஆதாரம் இன்பம். இந்த மூன்றுமே வாழ்வியலின் மூல ஆதாரங்கள் ஆகும். தனி வாழ்க்கை, இல்வாழ்க்கை இரண்டையும் எடுத்துக் கூறுகிறது, அறத்துப் பால். அரசியல், பொருளியல், சமுதாயவியல், நாட்டியல், பொதுவியல் பற்றி விளக்குகிறது. பொருட்பால்; காதலர் ஒருவர்க்காக ஒருவர் தியாகம் செய்து வாழும் வாழ்க்கையை வரையறுக்கிறது இன்பத்துப்பால்.

குடும்ப முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். நல்ல வாழ்க்கை துணை அமைந்தால் அறிவறிந்த நன்மக்கள் பெறும்பேறு கிடைக்கும்.

இல்லவாழ்க்கை, வாழ்க்கைத் துணைநலம், மக்கள் பேறு போன்ற அதிகாரங்கள் குடும்ப வாழ்வுக்கு வழிகாட்டுவன.

தெரிந்து செயல்வகை, வலி அறிதல், காலம் அறிதல், இடன் அறிதல், தெரிந்து தெளிதல், தெரிந்து விளையாடல், சுற்றம் தழால், பொச்சாவாமை, செங்கோன்மை, கொடுங்கோன்மை, வெருவந்த செய்யாமை, கண்ணோட்டம், ஊக்கம் உடைமை, மடிஇன்மை, ஆள்வினை உடைமை, இடுக்கண் அழியாமை, வினைத்தூய்மை, வினைத்திட்பம், வினைசெயல்வகை, மன்னரைச் சேர்ந்து ஒழுகல், குறிப்பறிதல், பொருள் செயல்வகை, நட்பு, நட்பு ஆராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு, பேதமை, புல்லறி வாண்மை, இகல் போன்ற அதிகாரங்கள் பணி புரிதலுக்கு வழி காட்டிகளாக அமைந்துள்ளன.

சமயச்சார்பின்மை

கடவுள் சொல்ல மனிதன் எழுதியது கீதை; மனிதன் சொல்ல, கடவுள் எழுதியது திருவாசகம்; மனிதன் மனிதனுக்காக எந்தச் சமயச் சார்பும் இல்லாமல் எழுதியது திருக்குறள். அதனால் தான் திருக்குறளுக்குத் திருவள்ளுவர் என்று வழங்கும் வழக்கம் காணப்படுகின்றது. கடவுள், தமிழ், தமிழர் என்னும் சொற்களோ சமயம் சார்ந்த சொற்களோ திருக்குறளில் இல்லை.

எல்லா மாந்தருக்கும் நாட்டிற்கும் எக்காலத்திற்கும் பொருந்தும் பொதுமைக் கருத்துக்கு ஒரு சான்று வருமாறு:

தனிமனித வாழ்க்கைக்கும் குடும்ப வாழ்க்கைக்கும் பொது வாழ்க்கைக்கும் எச்செயலுக்கும் தொழிலுக்கும் தேவை ஐந்து:
1) பொருள் முதலீடு (Capital), 2) கருவி (Machines & Tools), 3) காலத் திட்டம் (Time Management, 4) வினை-தொழில் நுட்பம் (Technology), 5) இடப்பொருத்தம் (Location). இவ்வளவும் எந்தக் குறளில் என்கிறீர்களா? இதோ!

பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல் - - - (குறள் 675)

சமயச் சார்பின்மைக்குச் சரியான சான்றுநூல் திருக்குறளே - வள்ளுவமே ஆகும்.

வாழ்வியல் வெற்றிக்கு வழிகாட்டி

ஒவ்வொரு குறளையும் நம் வாழ்க்கையுடன் பொருத்திப் பார்த்து நம்மை நாமே சரிசெய்து கொள்ள உதவுகிற ஒப்பற்ற நூல் திருக்குறள். திருக்குறளைப் போற்றிக் கற்கக் கற்கத் திருவள்ளுவர் என்னும் தமிழ்ச் சான்றோர் முன் வந்து வழிகாட்டக் காண்கின்றோம்.

பட்டினி இருந்தாவது படித்தல் வேண்டும் என்னும் உணர்வை ஊட்டுவது வள்ளுவம்; இளமைப் பருவத்தில் பாலியல் உறவு கொண்டு பால்பட்டுப் போகாமல் ஒழுக்கம் ஓம்பக் காரணமாக அமைந்தது வள்ளுவம்; முன்கோபத்தை முற்றிலும் அகற்றுவது வள்ளுவம்; நல்வாழ்வுக்கு அடித்தளம் அமைத்துத் தருவது வள்ளுவம்; சமயச் சார்பின்மை கொள்கைக்குச் சரியான சான்றாக இருப்பது வள்ளுவம்; வாழ்வியல் வெற்றிக்கு வழிகாட்டி வருவது வள்ளுவம்.

வள்ளுவம் என்பது பொருள் ஈட்டி அறம் செய்து இன்பம் துய்ப்பது ஆகும். அதற்குச் சிறந்த வழிகாட்டி நூல் திருக்குறள், வழிகாட்டி திருவள்ளுவர்.

குறள்வழி ஒன்று சேர்வோம் - உலகில்
குமுகாயத் தொண்டு செய்வோம்
தமிழால் ஒன்று படுவோம்;
குறளால் வென்று காட்டுவோம்
வாருங்கள் தமிழர்களே!

துணை நூல்கள்

1. முத்தமிழ்க் காவலர் கி..பெ. விசுவநாதம், வள்ளுவரும் குறளும், பாரிநிலையம், சென்னை, 1953.

2. முனைவர் மு. வரதராசன், திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், தாயக வெளியீடு, பாரிநிலையம், சென்னை 108, ஏழாம் பதிப்பு, 1967.

3. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், திருக்குறள் தமிழ் மரபுரை, நேசமணிப் பதிப்பகம், காட்டுப்பாடி விரிவு, திசம்பர் 1969.

4. கவிஞர் . குணசேகரன், மன்மதக் குறள்கள், இராமாதேவி பதிப்பகம், நங்கநல்லூர், சென்னை - 61, அக்டோபர் 1999.

5. அழகப்பா ராம்மோகன், தமிழ்மறை திருக்குறள், உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை, சிகாகோ, அமெரிக்கா, சனவரி 2000.

6. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், குடும்ப விளக்கு, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108, ஆகஸ்ட் 1998.
  
திரு . வேம்பையன்
தொல்காப்பியர் இல்லம்
3/25 வள்ளலார் தெரு
இணைவு - 2
மறைமலை நகர் - 603 209

திரு. . கோவலன்
ஆராய்ச்சி மாணவர்
அறைஎண். 63, ஆடவர் விடுதி
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயமுத்தூர் - 641 046

2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை.

கருத்துகள் இல்லை: