18/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 21 - ப.முருகன்


முடிவுரை

இலக்கியங்கள் வாழ்க்கையின் எதிரொலிகள். இவை சமுதாயத்தின் வளர்ச்சியைக் காட்டும் கருவிகளாகும். தமிழ் இலக்கியம் தொல்காப்பிய காலத்திற்கு முன்பே பெருநிலை பெற்றதாகும். பழந்தமிழ் இலக்கியங்களான சங்க இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவை உலக இலக்கியங்களில் சிறப்பிடம் பெறும் தகுதி மிக்கவையாகும்.

தொல்காப்பியச் செய்யுள் இயலில் தமிழ் இலக்கிய வகைகள், இலக்கிய மரபு, இலக்கியக் கொள்கை, இலக்கியத் திறனாய்வு ஆகிய அனைத்தையும் காண்கிறோம்.

காப்பியம் என்ற ஓர் இலக்கிய வகையைத் தவிர தமிழில் அமைந்த பிற இலக்கிய வகைகள் அனைத்தும் சிற்றிலக்கியங்கள் என்னும் பகுப்பில் கூறப்பெறுகின்றன. பொருண்மையாலும் அளவாலும் இவை சிற்றிலக்கியங்கள் என அழைக்கப்பட்டாலும், பெருமையிலும் சிறப்பிலும் இவை பேரிலக்கியங்களே ஆகும். பிரபந்தங்கள் தொண்ணூற்று ஆறு வகையின என்பதை பாட்டியல் நூல்கள் குறிப்பிடினும், இலக்கிய வரலாற்றில் முந்நூற்றிற்கும் மேற்பட்ட சிற்றிலக்கியங்களின் வகைகளை அறிகிறோம் என்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் சி.சுப்பிரமணியம் ‘தமிழில் சிற்றிலக்கிய வரலாறு’ எனும் நூலின் அணிந்துரையில் கூறியுள்ளார்.

பொதுவாக சிற்றிலக்கியங்கள் 96 வகை என்று கூறப்பட்டாலும் அதைவிட அதிகம் என்பது நன்றாகத் தெரிகிறது. அதன் எண்ணிக்கை வேண்டுமானால் வேறுபடலாம். இவற்றில் பரவலாக அறிந்திருக்கும் வகைகள் சிறிய அளவுதான். சிற்றிலக்கிய வகைகளின் இலக்கணத்தை பன்னிருபாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், பிரபந்த மரபியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், பிரபந்த தீபிகை, சுவாமிநாதம், சதுரகராதி, அபிதான சிந்தாமணி முதலியன இயம்புகின்றன என்று தமிழில் சிற்றிலக்கிய வரலாறு எனும் நூலை எழுதிய முனைவர் தா.ஈசுவரபிள்ளை குறிப்பிடுகிறார்.

பன்னிருபாட்டியல், வெண்பாப் பாட்டியல் ஆகிய இரு நூல்களையும் பார்க்கும் போது 12ஆம் நூற்றாண்டு வரையிலும் இலக்கிய வகைகள் 96 என வரையறுத்துக் கூறும் வழக்கு ஏற்படவில்லை என்றும், முதன்முதலாக கிபி. 16ம் நூற்றாண்டில் எழுந்த பிரபந்த மரபியல் எனும் நூலில்தான் காண முடிகிறது என்றும் அவர் கூறுகிறார்.

பிள்ளைக்கவி முதல் புராணம் ஈறாகத், தொண்ணூற்றாறு என்னும் தொகையதாம் என்று பிரபந்த மரபியலும் பதினாறை ஆறிற்பெருக்கிப் பிரபந்தாதி/பலவகை எடுத்துரைக்கின் என்று பிரபந்த தீபிகையும் 96 என வீரமாமுனிவரின் சதுரகராதியும் சுட்டிக்காட்டுகின்றன. இவை பல்கிப் பெருகி முந்நூற்று முப்பத்தொன்று ஆகிவிட்டன என்கிறார் ந.வீ.செயராமன், தனது சிற்றிலக்கியத் திறனாய்வு எனும் நூலில்.

பிள்ளைத்தமிழ், பரணி, கலம்பகம், கோவை, உலா, தூது, அந்தாதி, ஆற்றுப்படை, குறவஞ்சி, பள்ளு, மாலை, பதிகம், செவியறிவுறூஉ, கையறு நிலை, கைக்கிளை, எண்செய்யுள், தாண்டகம், சதகம், ஒருபா ஒரு பஃது போன்றவற்றை பற்றி பார்த்துள்ளோம். இவை அல்லாத நொண்டி நாடகம், கீர்த்தனைகள் ஆகியவற்றையும் தெரிந்துகொண்டோம்.

சங்க காலத்துக்குப் பிறகு மன்னன், வள்ளல், இறைவன் பற்றிய இலக்கியங்கள் அதிகரித்தன. அதன் விளைவாக பக்தி இலக்கியம் பல்கிப் பெருகியது. இந்தக் காலங்களில் மன்னனின் அங்கங்களாக உள்ள மலை, ஆறு, நாடு, ஊர், தார்(மாலை), குதிரை, களிறு (யானை), கொடி, முரசு, செங்கோல் ஆகியவற்றைப் புகழ்ந்துபாடுவது தசாங்கம், தசாங்கத்தயல், சின்னப்பூ என்ற பெயரில் அழைக்கப்பட்டன. இவை பாவினத்தின் அடிப்படையில் வேறுபடும். நேரிசை வெண்பா, வெண்பாவால் பாடப்படுவது தசாங்கம், சின்னப்பூ. ஆசிரியப்பா அல்லது ஆசிரிய விருத்தத்தால் பாடப்படுவது தசாங்கத்தயல். சின்னப்பூ என்பது அரசனின் சின்னத்தைப் பற்றி பாடப்படுவது. தசாங்கத்துக்கு எடுத்துக்காட்டு திருத்தசாங்கம். இது திருவாசகத்தின் ஒரு பகுதியாக உள்ளது. பாரதியாரும் பாடியுள்ளார். மாணிக்கவாசகர் இதன் முன்னோடி.

ஆடவர் அல்லது பெண்டிர், இறைவன் அல்லது இறைவி ஆகியோரின் உறுப்பு அல்லது உறுப்புகளைப் புகழ்ந்து பாடுவது நயனப்பத்து (கண்கள்), பயோதரப் பத்து (மார்பு) அங்கமாலை, பாதாதிகேசம், கேசாதிபாதம்.

பெண்களைப் புகழ்ந்துபாடும் இலக்கிய வகைகள் புகழ்ச்சி மாலை, பெருமகிழ்ச்சி மாலை, தாரகை மாலை ஆகியவை. யானையை எதிர்கொண்டு அடக்கிய செய்திகளை குறிப்புகளை கருவாக வைத்து பாடப்பட்ட புதிய இலக்கிய வகையே வாதோரண மஞ்சரி ஆகும்.

இவை யாவும் ஒரு சுருக்கமான அறிமுகமாகவே இருக்கும். ஒவ்வொரு வகையும் ஒரு புத்தகமாக எழுதக்கூடியவை. அவற்றை மிக விரிவாக எடுத்துரைத்தால் இந்தப் பகுதியை படிப்பதை சலிக்கச் செய்துவிடும். “கற்றது கையளவு கல்லாதது உலகளவு” என்பது போல நாம் தெரிந்தது ஓரளவு, தெரிய வேண்டியது பேரளவு. முயன்று கற்றால் அவற்றை அறிந்து ரசிக்கலாம். ஒவ்வொருவரும் ரசிகமணி ஆகலாம்.

நன்றி - தீக்கதிர்


கருத்துகள் இல்லை: