உரத்த சிந்தனை' சிற்றிதழுக்கு ஒரு கவிதை கேட்டார்கள், சில ஆண்டுகள் முன்பு. "தணியாத வேட்கை' எனும் தலைப்பில் நாம் கவிதை அனுப்பி வெளிவந்த பின், சில திங்கள் கழித்து கேரள (மலையாள) தமிழ் அமைப்பு வெளியிட்ட ஒரு மலரில் எமது அதே கவிதை, எழுதியவர் பெயர் குறிப்பிடாமல் சில மாற்றங்களுடன் வெளிவந்துள்ளது. தலைப்பைத் "தணியாத தமிழ் வேட்கை' என மாற்றிவிட்டார்கள்.
"மின்மினிகள் ஒருநாளும் வெயிலோன் ஆகா' என்ற முதல் வரியில் வெயிலோன் எனும் சொல்லை எடுத்துவிட்டு சூரியன் எனும் சொல்லைப் போட்டிருந்தார்கள். வெயிலோன் தூய தமிழ்ச் சொல். சூரியன் வடசொல். அன்றியும் மின்மினிகள் என்பதற்கேற்ப வெயிலோன் என்பதில் ஓசையின்பம் (மோனை) உள்ளது. அதையும் கெடுத்துவிட்டார்கள். தமிழ்ச்சொல், வடசொல் என்று நாம் பாகுபாடு செய்து, தீண்டாமை கடைப்பிடிப்பதில்லை. ஆயினும் பொருத்தமான சொல்லை மாற்றிட இவர்களுக்கு என்ன அதிகாரம்? இத்தகைய செயலும் பிழையே என்பதைச் சுட்டிக்காட்டவே இவற்றை எழுதினோம். இதுபற்றி விரிவாக இத்தொடரில் எழுத வேண்டாமே என்று விடுத்திடுவோம்.
முருகன் அவதாரமா?
வைகாசி விசாகம் வரும்போதெல்லாம் நமது செய்தி ஏடுகளில் முருகனைப் பற்றி கட்டுரைகள் வரும். வந்து கொண்டுள்ளன. விசாகம், முருகன் அவதாரம் செய்த நாள் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு காட்சி ஊடகத்தில் முருகப் பெருமான், கிழவனாக அவதாரம் செய்து வள்ளியிடம் சென்றான் என்றும் சொன்னார்கள். கிழவனாக உருமாறியதையும் அவதாரம் என்றார்கள்.
வைணவநெறியில் அவதாரம் உண்டு. பரம்பொருள் (பெருமாள்) பூமிக்கு இறங்கி வந்து மனிதனாகப் பிறப்பெடுப்பார். பிற உயிரினங்களாகப் பிறப்பெடுத்தலும் உண்டு. அவதாரம் எனில் "கீழே இறங்கி வருதல்' என்று பொருள். வானிலிருந்து தேவன் பூமிக்கு வருதலே அவதாரமாம்.
சைவசித்தாந்த நெறியில் அவதாரக் கொள்கையில்லை. பரம்பொருள் (சிவன்) மனித வடிவில் வந்து அற்புதங்களை நிகழ்த்துவார்; காட்சி தருவார்; மறைந்து போவார். சிவன் வேறு, முருகன் வேறல்லர்.
""ஆதலின் நமது சக்தி அறுமுகன் அவனும் யாமும்
பேதகம் அன்றால் நம்போல் பிறப்பிலன் யாண்டும் உள்ளான்'' என்பது சிவன் கூற்றாகக் கந்தபுராணம் சொல்லுவது.
"பிறவன் இறவான் பெம்மான் முருகன்' என்றார் அருணகிரியார். அதனால்தான்,"ஒருதிரு முருகன் வந்து உதித்தனன் உலகம் உய்ய' என்றார் கச்சியப்பர். கதிரவன் உதிப்பான்; மறைவான். மீண்டும் உதிப்பான். பிறப்பு வேறு, உதித்தல் வேறு. பிறப்பு உண்டு எனில் இறப்பும் உண்டு. பரம்பொருள் பிறப்பு, இறப்பு இல்லாததன்றோ?
இராமபிரானைப்போல், கண்ணபிரானைப் போல் முருகப் பெருமான் உயிர்நீத்தமை (சிறப்பு) சொல்லப்படவில்லை. ஆதலின் முருகன் அவதாரம் செய்தார் என்றும் அவதார நட்சத்திரம் விசாகம் என்றும் ஆன்மிகப் பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் பேசாமலும் எழுதாமலும் இருத்தல் நல்லது என்று பணிவோடு வேண்டுதல் விடுக்கிறோம்.
முறையாகுமா இந்த மொழிக்கலப்பு?
வேளாண்மையில் கலப்புமுறை விளைச்சல் என்பது வரவேற்கத் தக்கதாகலாம். கலப்புத் திருமணங்களும் பாராட்டத்தக்கவையே. ஆனால் மொழிக் கலப்பு அத்தகையதாகாது. தமிழில் பிறமொழிக் கலப்பு காலம் காலமாக நடந்து வருவதுதான். ஆனால் இப்போது தமிழில் ஆங்கிலம் கலப்பதுபோல் இவ்வளவு கேவலமாக முன் எப்போதும் நடந்ததில்லை.
ஆங்கிலத்தில் பேசுவது நாகரிகம். படித்தவர்க்கு அடையாளம் என்றே இப்போதும் பலர் கருதுகிறார்கள். பள்ளிப் பிள்ளைகள், வீட்டிலிருந்து புறப்படும்போது, "அம்மா போயிட்டு வர்றேன்' என்று சொல்லுவதைப் பெற்றோரே இழிவாகக் கருதுகிறார்கள். "மம்மி பை பை, டாடி பை பை' என்று சொல்லப் பழக்கிவிடுகிறார்கள். மதிய உணவு என்பதைக் கூட "லஞ்ச்' என்று சொல் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.
யாரும் இப்போது வீட்டிலிருந்து எழுந்து விடை பெறும்போது "போய் வருகிறேன்', அல்லது "வரட்டுமா?' என்று சொல்லுவதில்லை. எல்லாரும் "பை பை' தான். ஆங்கிலத்தில் படித்தால் மட்டுமே அறிவு வளரும் என்ற புதிய மூடநம்பிக்கை நாட்டில் பரவிக் கிடக்கிறது. வாழ்ந்து மறைந்த - வாழ்ந்து கொண்டுள்ள சாதனையாளர்கள் - டாக்டர் அப்துல்கலாம் போன்றவர்கள் யாவரும் தமிழில் படித்தவர்கள் என்பதை மறந்து விடுகிறோம்.
(தமிழ் வளரும்)
நன்றி – தினமணி கதிர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக