பன்னெடுங்காலமாக பழங்குடி மக்கள் தமிழகத்தில் வாழ்ந்து வருகின்றனர். நமது சங்க இலக்கியங்கள் தமிழகத்தில் வாழ்ந்த பழங்குடியினர் அவர் தம் பண்பு சமூக பொருளாதார நிலை ஆகியவற்றை வெளிப்படுத்திக் காட்டுகின்றன.
பழங்குடி மக்கள் தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்தனர். தமிழகத்துப்பாலை நிலங்களிலும் பழங்குடி மக்கள் வாழ்ந்ததாக இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாலை நிலம் இல்லை. ஆயினும் முல்லைபுரம், குறிஞ்சியும் மழையின்றி கடும் பாதிப்பிற்குள்ளாகி, இயல்பு நிலை கெட்டு பாலை வடிவம் கொண்டதாக இலக்கியங்கள் கூறுகின்றன.
''முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் கருத்து
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்''
- என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறுகின்றன. இத்தகைய பாலை நிலத்திலும், பழங்குடி மக்கள் வாழ்ந்துள்ளனர்.
மலையும் மலைசார்ந்த நிலமும் கொண்ட குறிஞ்சிப் பகுதியிலும் வனமும் வனத்தைச் சார்ந்த நிலமும் கொண்ட முல்லைப் பகுதியிலும், பாலை நிலத்திலும் பழங்குடி மக்கள் வாழ்ந்துள்ளனர். அவர்தம் வாழ்க்கை நிலை, பண்பாடு குறித்து பல இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.
தொல்காப்பியத்தில் ஆயர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. திருவள்ளுவர் வேட்டுவர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். குறிஞ்சி நிலக்கிழவன், முல்லை நிலக் கோவலர், கானக்குறவர், எயினர், எபினி, எயிற்றியர், கோவினத்து ஆயர், புல்லினத்து ஆயர், ஆயர், ஆவியர், ஆய்மகன், ஆய்மகள், புலையர், இடையர், இடைமகன், இடைமகள், கானக்குறவர், சிறுகுடிகுறவன், கோவலர், கோவலர்குடி, கோசர், கோயன், கோயமான், வேட்டுவர், வேடர், காணிக்காரர், மழவர் என பல்வேறு பெயர்களில் சங்க இலக்கியங்கள் பழங்குடி மக்கள் பற்றி கூறுகின்றன.
தொல்காப்பியம், திருக்குறள், நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித் தொகை, அகநானூறு, புறநானூறு, பெரும் பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருணராற்றுப்படை, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, முல்லைப்பாட்டு போன்ற பல இலக்கியங்களிலும் பழங்குடியினர் போன்ற பல இலக்கியங்களிலும் பழங்குடியினர் பற்றிய வாழ்வும் அவர்தம் பண்பாடும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பழங்குடி மக்கள் என்றால் ஏதோ வனத்தில் வாழும் விலங்குகளை ஒத்தவர்; நாகரிக வளர்ச்சியடையாமல் விலங்கின் வாழ்க்கையை வாழ்பவர் என்ற தவறான கருத்தும், கண்ணோட்டமும் பலரிடமும் இருக்கிறது. பழங்குடி மக்களுக்கென தனி வாழ்க்கை முறை, மொழி, பண்பட்டதன்மை, மனிதநேயம், குடும்ப வாழ்க்கை முறை போன்றவை உண்டு. அறியாதவர்களாகப் பேசுபவர்களும் உண்டு. பழங்குடி மக்களின் வாழ்வானது ஒரு கட்டுக்கோப்பான ஸ்தாபனமாக அமைந்துள்ளது. அவர்களுக்குக் குடும்ப முறையும் சிறந்த வாழ்க்கையும் உள்ளது.
மனிதனின் தொல் வடிவத்திலிருந்து வளர்ந்து மாற்றங்கள் கண்டு வாழ்வை நெறிப்படுத்திக் கொண்டவர்கள் பழங்குடிகள். வாழும் இடங்களை மையப்படுத்தி, வாழும் சூழ்நிலைக்குத் தக்கவாறே இவர்களின் பண்பாடு காணப்படுகிறது.
ஆதி மனிதன் காட்டு மிராண்டியாக, நாகரிக வளர்ச்சி அடையாத நிலையில், ஆடையற்று, மொழியற்று, விலங்கினத்தைப் போன்றே கூட்டமாக வாழும் நிலையிலிருந்து பல்லாயிரம் ஆண்டு வளர்ச்சி பெற்று, அனுபவத்தில் ஊறி வளர்ந்து, பண்பட்டு, தலைமுறை தலைமுறையாய் மரபு வழியாக வளர்த்து வந்த நல்ல பழக்க வழக்கங்களின் குணங்கள், நெறிமுறைகள், தலைமுறைதோறும் வளர்ந்து அவர்கள் வாழும் இயற்கை சூழலுக்குத் தக்கவாறு பண்பட்டு, பல்வேறு சூழலுக்கு தங்களை தகவமைத்துக் கொண்டு மனிதகுலம் முன்னேறியுள்ளது.
அதே நேரத்தில் பழங்குடியினர் பண்பாடு பிற மனித சமூகங்களின் தலையீட்டாலும், புதிய புதிய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியாலும், வனம் அழிப்பு போன்ற பல்வேறு சூழ்நிலைகளாலும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது.
ஒவ்வொரு மனித சமுதாயம் சில உயர் பண்புகளைப் போற்றிப் பாதுகாத்து வளர்ந்து வருகிறது. ஆனால், வெறும், இலாப நோக்கோடு மட்டும் செயல்படும் பெரும் பொருள் படைத்தோரிடம் உயர்ந்த மரபுகளை, பண்புகளைக் கடைபிடிக்கும் போக்கு காணப்படுவதில்லை. குறிப்பாக உலக மயமாக்கலினால் உலகெங்கும் சந்தை விரித்து பரந்து வரும் நிலையில் பன்னாட்டு முதலாளிகளின் வர்த்தகப்படைஎடுப்பு நடக்கும் நிலையில் இலாபம் ஒன்றை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு கொள்ளை அடிக்கிறது. மனித குலம் போற்றி பாதுகாத்துவரும் உயர்ந்த வாழ்க்கை முறை, நெறிமுறைகளெல்லாம் உடைத்து நொறுக்கப்பட்டு விடுகின்றன.
தமிழகத்தில் பழங்குடி மக்கள் இன்றைக்கும் மலைத் தொடர்களில் வனங்களில் நிறைந்து வாழ்கின்றார்கள். இயற்கை எழில் மிக்க மேற்கு மலைச்சாரலில், கிழக்குமலைத் தொடரிலும் வாழ்ந்து வருகிறார்கள்.
காடும் மலையும், மலைச்சாரல் அருவியும் இயற்கை எழில் கொஞ்சும், சூழலிலும் பழங்குடி மக்கள் ஒன்றி வாழும் வாழ்வு உன்னதமானது. இவர்களின் அமைதிப்பூர்வமான வாழ்க்கை அன்பு கொண்டு சமூக ஒருங்கிணைப்பு, போட்டிபொறாமை இல்லா பண்பட்ட நெறி, உயர்ந்தவன்-தாழ்ந்தவன், பணம் படைத்தவன் இல்லாதவன் என்ற வேற்றுமையோ தீண்டாமைக் கொடுமையோ, சாதி மதச் சண்டையோ இல்லாமல் ஒரு அமைதிப்பூர்வமான பண்பட்ட வாழ்க்கை பழங்குடி மக்களிடம் காணமுடிகிறது.
மேற்கு மலைத் தொடரில் ஏராளமான சமூகப் பிரிவு பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இருளர், சோளகர், காடர், கசவர், முதுவர், மலசர், ஊராளி, எரவாளர்(ஏரவள்ளான்) தோடர், கோத்தர், காட்டுநாயக்கர் குரும்பர், பணியர், பளியர், புலையர், காணிக்காரர், மலையாளி என பழங்குடி மக்கள் குளிர் நிறைந்த, உயரமான நீலகிரி முதல் குமரிவரை, கோவை முதல் திருவள்ளூர் மாவட்டம் வரை விரிந்து பரந்து நிற்கும் மலைகளின் மக்களாக வாழ்ந்து வருகிறார்கள். தமிழக மலைத் தொடர்களுடன் சேர்ந்தாற் போல் உள்ள கேரள, கர்நாடக, ஆந்திர மாநில மலைகளிலும் பழங்குடி மக்கள் நிறைந்து வாழ்கின்றார்கள்.
கிழக்கு மலைத்தொடரில மலையாளி பழங்குடி மக்களே நிறைந்து காணப்படுகின்றனர். மலைமீது பழங்குடி மக்கள் வாழும் ஊர்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவர்களை ஒட்டி வனங்களில் மலை அடிவாரங்களில் இருளர் மக்கள் வாழ்கிறார்கள்.
புலம்பெயர்ந்து நாடோடிப் பழங்குடிகளாக தமிழகத்தில் குடியேறிய நரிக்குறவர்களுக்கும் (வாகிரி-சிக்காரி) நாடோடிப் பழங்குடிகளாக வந்து பின்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடியமர்ந்துள்ள லம்பாடி மக்களுக்கும் சுகாளி-பஞ்சாரா) பழங்குடி மக்களுக்கான அங்கீகாரத்தை அரசு இன்னும் வழங்கவில்லை.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பழங்குடி மக்கள் தொகை 2001 ஆண்டு கணக்குப்படி தமிழகத்தில் 6,51,321 என அரசு கணக்கு கூறுகிறது. ஆனால் இந்தியக் குடிமக்கள் (மக்கள் தொகை) பட்டியலில் இடம்பெறாத பழங்குடியினர் ஏராளமானோர் இருக்கின்றார்கள்.
மலைவாழ் பழங்குடி மக்களில் ஒருபகுதியினர் இன்றும் வேளாண் தொழில் முறையறியாத தொல் பழங்குடியினராக உள்ளனர். இவர்கள் உடலுழைப்பைச் செலுத்தி உற்பத்தியில் ஈடுபட வழக்கப்படுத்திக் கொள்ளாமல், இயற்கை தந்த காய்கனி கிழங்குகளை உணவாக உண்டு வாழும் தொல் பழங்குடியினராக இருக்கின்றார்கள். சில பகுதிகளில் கற்குகைகளில் வாழும் பழங்குடிகளும் இருக்கின்றனர். குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் வனப்பகுதியிலும், கிருட்டிணகிரி மாவட்டத்தில் மல்லல்லி வனப்பகுதியிலும் இருளர் பழங்குடிமக்கள் குகைகளில் வாழ்கிறார்கள். நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே கோட்டலை பகுதியில் பளியர் பழங்குடிமக்கள் குகைகளில் வாழ்கிறார்கள்.
பெரும்பாலான மலைவாழ் பழங்குடி மக்கள் மலைப்பகுதிகளில் சொற்ப நிலங்களில் சாகுபடி செய்கிறார்கள். முன்பெல்லாம் கொத்துக்காடுகள், புனல்காடுகள் என இருந்தன. புனல்காட்டு சாகுபடி முறையில் வனம் அழிந்து விடுவதாக கூறி அரசு தடை விதித்துவிட்டது. இருக்கும் மலை நிலங்களில் மிகப்பெரும் பகுதிகளில் புஞ்சைப் பயிர்களே பயிரிடப்படுகின்றன. மலைநெல், மலைவாழை, பலா போன்றவைகளைச் சாகுபடி செய்கிறார்கள்.
ஆரியம் (கேழ்வரகு-ராகி), திணை, சோளம், அவரை போன்ற புஞ்சைத் தானியங்களே அதிகம். இவைகளை விளைவிக்க இரவு பகலாக காவல் புரிய வேண்டும். பகலில் கால்நடையிலிருந்தும் பறவையிலிருந்தும் பாதுகாக்க வேண்டும். இரவில் வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும். இரவெல்லாம் கண்விழித்து சப்தமிட்டும், குரல்கொடுத்தும், பாடியும் இருப்பார்கள். இவ்வளவு சிரமப்பட்டு விளைந்தாலும் வன விலங்குகள் அழித்தது போக கிடைக்கும் தானியம் காலாண்டிற்குக் கூடி போதுமானதாக இல்லை.
மற்ற நாட்களில் வனவிளைப்பொருட்களை நம்பியே காலத்தை ஓட்டுகிறார்கள். பெரும்பகுதியான காலங்களில் மூன்று வேளை உணவு என்ற சூழ்நிலையே இல்லை.
இயற்கை வனங்களில் வாழும் பழங்குடி மக்கள் தேனெடுத்தல், நிலத்தினை அகழ்ந்து கிழங்கெடுத்தல், காடுகளில் கிடைக்கும் காய்கனிகளை உணவாக்கிக் கொள்ளுதல் போன்றவை மூலம் வாழ்க்கை நடத்துகின்றனர்.
ஊர்கள்
மலைவாழ் பழங்குடிகள் தங்கள் குடியிருப்பு உள் பகுதிகளை-ஊர்களை பவிதமாக அழைக்கின்றனர். ஒவ்வொரு பழங்குடி சமூகப் பிரிவும் வேறு வேறு பெயர்களில் தங்கள் ஊர்களை அழைக்கின்றார்கள்.
இருளர் பழங்குடி மக்கள் தங்கள் ஊர்களை ''பதி'' என்று அழைக்கிறார்கள். பல்வேறு பெயர்களை இணைத்து கூறினாலும் இறுதிச் சொல் ''பதி'' என்றே வருகிறது. (புஞ்சைப்பதி, பூலப்பதி, நீலம்பதி, திருப்பதி). பல இடங்களில் முத்தூர், குனியன்முத்தூர், கோயன்முத்தூர் (கோயமுத்தூரின் பழைய பெயர்) என்று அழைக்கும் வழக்கம் உள்ளது.
தோடர்களின் இடம் மந்து எனவும், மலசர் பாடி என்றும் காடர் பட்டி என்றும் கோத்தர் கோக்கல் என்றும், லம்பாடி தண்டா என்றும், மலையாளிகள் இடம், ஊர் என்றும் சில ஊர்களைச் சேர்த்து நாடு என்றும் ஊர்ப்பெயர்களை கூறும் வழக்கம் உள்ளது.
மொழி
பழங்குடி மக்களின் பல்வேறு சமூகப்பிரிவினர் தனித்தனி மொழி பேசுகின்றனர். மலையில் வாழும் பழங்குடியினர் பேசும் மொழிகளில் மூக்கொலி அதிகம் காணப்படுகின்றது. இம்மொழிகள் திராவிட மொழி குடும்பத்தைச் சேர்ந்தவையாகவே உள்ளன. மலையாளி பழங்குடியினர் தமிழையே பேசுகின்றனர். மற்ற பழங்குடியினர் பேசும் மொழிகள் அனைத்துக்கும் வேர்ச்சொற்கள் தமிழாகவே உள்ளன. பழம் தமிழ் சொற்கள் பல சிதையாமல் பழங்குடியினரிடையே காணப்படுகின்றன. ஆனால் வரிவடிவம் இல்லாத இப்பழங்குடி மொழிகள் அழிவின் விளிம்பில் நிற்கின்றன. பழங்குடியினர் மொழி, மொழியியல் ஆய்வாளர்களுக்குப் புதிய வெளிச்சத்தைத் தரும்.
வழிபாடும் நம்பிக்கையும்
பழங்குடியினர் இயற்கையை வழிபடும் பழக்கமுள்ளவர்கள், தங்களை வாழவைக்கும் மலையையும், வனத்தையும் தெய்வங்களாகப் போற்றுகின்ற பண்பாடு இவர்களிடம் காணப்படுகிறது. காற்றையும், மழையையும், இடியையும் இவர்கள் வழிபடுகின்றனர். அச்சமும், அறியாமையும் பழமை நம்பிக்கையும் இவர்களிடம் காணப்படுகிறது. பலம் பொருந்திய சக்திவாய்ந்த யானை மற்றும் விலங்குகள் வந்தால் அச்சத்தினால் வழிபட்டும் பழகிப்போன பழங்குடி மக்களுக்கு இந்த விலங்குகளும் தெய்வங்களே.
இறந்து போன இவர்களின் முன்னோர்கள் ஆவிவடிவில் வனத்தில் வாழ்வதாக இவர்கள் நம்புகிறார்கள். தலைமுறை தலைமுறையாக வனங்களில் வாழ்ந்த தங்களது முன்னோர்கள் வனத்திலே தெய்வங்களாக இருந்து தங்களைக் காத்து வருகின்றார்கள் என்ற நம்பிக்கை இவர்களிடம் வலுவாக இருக்கின்றது. காடு, மலையை விட்டு வெளியேற ஒரு போதும் விரும்பாதவர்களாக, இயற்கையின் அங்கமாக உள்ளனர்.
இவர்கள் வனங்களில் சிறு தெய்வங்களை வழிபடுகிறார்கள். இவர்களின் கடவுள்களுக்கு கட்டப்பட்ட கோயில்கள் இல்லை. காடுகளில் இருக்கும் சில மரங்கள், கல், ஆறு, அருவி, நெருப்பு இவைகளையும் வணங்குகின்றனர்.
தமிழகத்தின் தொன்மையான கடவுள் சிவன். சிவன்-சிவனி என்னும் பெயர்கள் இருளர் பழங்குடியினரிடையே காணப்படுகிறது. ஈசன், ஈசாயினி என்பதே வடமொழியில் ஈஸ்வரன் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். மாதையன், மாரியம்மா, முனீஸ்வரன், பசேஸ்வரன், கோணியம்மன், மாசானியம்மன், மாகாளியம்மன் மற்றும் இது போன்ற தெய்வங்கள் பழங்குடியினரால் வழிபடப்படுகின்றன. ஆயின் இறை நம்பிக்கை உண்டே தவிர மத வடிவம் இவர்களிடம் இல்லை.
பறிபோகும் பழங்குடித் தெய்வங்கள்
இவர்களின் மலை நிலங்களை ஆதிக்க சக்திகள் பறித்துக் கொள்வது போலவே இவர்களது தெய்வங்களையும் பறித்துக் கொள்கிறார்கள். தற்காலத்தில் சிறு சிறு அரசியல் அமைப்புகளை பெரிய அரசியல் கட்சிகள் விழுங்கி தங்களது பாரம்பரியமாக காட்டிக் கொள்வது போல நமது நாட்டில் உள்ள சமயங்கள் (மதங்கள்) பழங்குடியினரின் தெய்வங்களைத் தமதாக்கி ஜ“ரணித்துவிடுகின்றன. சிறுதெய்வங்களை சக்தியாக, சிவனாக, விஷ்ணுவாக மாற்று ஐக்கியப்படுத்திக் கொள்கின்றன.
உதாரணமாக, கோணியம்மள், மாசானியம்மன், மாகாளியம்மன், ஈசாயினி அனைத்தும் சக்தியின் வடிவமாகவும், ஆண் தெய்வங்கள் சிவனாகவும், விஷ்ணுவாகவும் அவதாரமாக்கிக் கொள்ளப்பட்டன. கரிராயன் (கல்ராயன்) கரிராமனாக்கப்பட்டதும் இத்தகைய முறையிலேயே ஆகும். சைவ-வைணவ மதப்போட்டியில் சிறு தெய்வங்கள் பெருந்தெய்வங்களால் தன்னுடன் ஐக்கியப்படுத்தப்படுகின்றன.
இத்தகைய நிகழ்வுகள் நடந்து, அந்த சிறு தெய்வங்களுக்கு சக்தி அதிகமாக இருப்பதாக நம்பி மற்ற சமூக மக்கள் வழிபாட்டிற்கு படை எடுத்து வரும் போது பழங்குடியினர் விரட்டப்பட்டு வருகின்றனர். பழங்குடியினரின் தெய்வங்களைக் கூட அவர்களிடமிருந்து பறிந்ததுத் தனதாக்கிக் கொள்கின்றனர்.
நம்பிக்கைகள்
இவர்கள் பேய், பில்லி, சூனியத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். கெட்ட காற்று(பேய்) மற்றும் தீயசக்திகளால் கேடு வந்துவிடக்கூடாதென தனது முன்னோர்களையும், கடவுளையும் வேண்டிக் கொள்கின்றனர்.
பழங்குடியினர் தொழில் வேட்டையாடுதல்
உணவுக்காக வேட்டையாடுதல் தொல்பழங்குடியினரின் அன்றாடப் பழக்கமாக இருந்தது. ஆனால், வேட்டை அரசால் தடை செய்யப்பட்டுவிட்டது. வேட்டையில் ஒரு விலங்கு கிடைத்து விட்டால் அது அம்மக்கள் அனைவருக்குமே பொது. வேட்டையாடியவர் மட்டும் அனுபவிப்பதில்லை. அது பழங்குடி மக்கள் கடைபிடித்து வரும் வாழ்க்கை முறை. யாருக்கு வேட்டை கிடைப்பினும் அங்கு வாழும் பழங்குடி மக்கள் அனைவருமே பகிர்ந்துண்ணும் பண்பினர். ஒருவர் பட்டினி கிடக்க மற்றொருவர் வயிறு நிரப்பி மகிழும் சிறுமைக் குணம் பழங்குடியினரிடம் காண முடியாது. இத்தகைய பண்பு மலையென இம்மக்களிடம் உயர்ந்து காணப்படுகிறது. பழங்குடிமக்கள் பிச்சை எடுக்கமாட்டார்கள்.
இத்தகைய பண்பு வனத்தை ஒட்டிவாழும் பழங்குடியினர் அல்லாத சமூக மக்களிடமும் தாக்கமாக இன்றளவும் நிலவி வருகிறது. வனத்தை ஒட்டி வாழும் பகுதியில் மானோ, பன்றியோ மற்ற விலங்குகளோ வந்து, வேட்டை கிடைத்துவிட்டால் வேட்டையாடியவரே எடுத்துக் கொள்ளும் பழக்கமில்லை. வேட்டையாடிவருக்கு ஒரு பங்கோ அல்லது அதன் ஒரு உறுப்போ கூடுதலாகக் கொடுப்பர். மற்ற மாமிசத்தை எத்தனை குடும்பங்கள் உள்ளனவோ அவ்வளவு பேரும் பகிரிந்து கொள்கிறார்கள். மாமிசத்தை வெயிலில் உலர்த்தி உப்புக்கண்டம் (வத்தல்) போடும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.
கிழங்கே உணவு
நிலத்தில் ஆழமாகத் தோண்டி கிழங்கு எடுக்கும் போது ஒருவருக்கொருவர் ஒத்துழைப்போடு கூட்டமாக செயல்படுகின்றனர். கிடைத்த உணவை அனைவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். தை மாதத்திலிருந்து ஆடி மாதம் வரை இவர்களின் பிரதான உணவாக இருளங்கிழங்கே இருக்கிறது. நிலத்தில் ஆழமாகத் தோண்டி எடுக்கும் இருளக்கிழங்கே நெருப்பில் சுட்டு பின் மேல் தோலை எடுத்து விட்டு உண்ணுகிறார்கள். வேகவைத்துச் சாப்பிட விரும்புவோர் மண்பானையில் நீர்விடாமல் கிழங்கை மட்டும் போட்டு அடுப்பில் வைத்து வேக விடுகிறார்கள். கிழங்கில் உள் நீரிலேயே வெந்து விடுகிறது. பிறகு கிழங்கைச் சாப்பிடுகிறார்கள்.
பெரும் பகுதி வெறும் கிழங்கையே உண்ணுகிறார்கள். தயிர் கிடைத்தால் தயிரிட்டு கிழங்கைப் பிசைந்து சாப்பிடுகிறார்கள். தேன் கலந்தோ, வெல்லம் சேர்த்தோ உண்ணும் பழக்கமும் உள்ளது. மழைக்காலம் தொடங்கும் ஆடிமாதத்தில் தை வரை கிழங்கு வளரும் காலம். மழைக்காலங்களில் கிழங்கு வளர்ந்தாலும் உண்ணுவதற்கு ஏற்றதாக இல்லாமல் வழவழப்பாக உள்ளதால் பயன்படுத்தப்படுவதில்லை.
தேனெடுத்தல்
தேனெடுத்தல் இவர்களின் முக்கியத் தொழிலாக இருக்கிறது. தேனெடுப்பதை தேனழித்தல் என்று கூறுகிறார்கள். மரப்பொந்துகள், மரக்கிளைகள், செடிகள், கொடிகள், சாதாரண பாறை இடுக்குகளில் உள்ள தேனை பகல் பொழுதில் அறுத்தெடுக்கின்றார்கள். ஆனால் பெரும் மலைத்தேனை இரவு நேரங்களிலேயே எடுக்கின்றனர்.
மரம், செடி, கொடிகளில் புதிய தேனைக்கண்டால் கண்டவர் அடையாளத்திற்காக தழையை ஒரு கொத்தாக ஒடித்து வழியில் போட்டுவிடுவார். அதை மற்றவர்கள் கண்டால் தேன் இருப்பதை அறிந்து கொள்வர். ஆனால் தேனை முதலில் பார்த்தவரே தேனை எடுப்பர். மற்றவர்கள் அதை எடுக்கும் பழக்கம் இல்லை.
அதே போல் மலைப்பகுதியில் தேனெடுக்கும் குடும்பம் தொடர்ந்து அப்பகுதியில் தேனை எடுப்பர். வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் அதைத் தொடமாட்டார்கள். எந்தெந்த குடும்பம் எங்கு தேனெடுக்கிதோ அங்கு அதை தொடர்ந்து எடுக்கும் பழக்கம் உள்ளது.
தேனெடுக்கச் செல்லும் போது ஆண்களும், பெண்களும் சேர்ந்தே செல்கின்றனர். தேனெடுக்கத் தொடங்கும் முன் கடவுளை வழிபடுகிறார்கள். நல்ல குறியாக விடைகொடுத்தால் மட்டுமே தேனெடுப்பர். கெட்ட சகுண அறிகுறி தெரிந்தால் தேனெடுப்பதைத் தவிர்த்து விடுகிறார்கள்.
மலைச்சாரல்களில் உள்ள பெரிய பாறைகளில் மலைத்தேன் இருக்கும். அங்கே நடந்து போய் யாரும் தேனெடுக்க இயலாது. எனவே கொடிகளால் (தாவரக்கொடி) ஏணிபோன்று பின்னல் செய்து (இதை மால் என்று சொல்லுகிறார்கள்) பாறை இடுக்குகளில் கட்டி அதில் இறங்கி தொங்கிய நிலையில் ஆடியபடியே தேன் அறுப்பார்கள். (தேனடைகளை அறுப்பது). இதனை மால் கட்டுதல் என்று சொல்லுகிறார்கள். தீப்பந்தம், சுரைக்குடுக்கை, கத்தி, மழு(மழுவு) சாக்குப்பை போன்றவற்றை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுரைக்குடுக்கைகளில் தேனை சேகரிக்கின்றார்கள். தேனெடுத்து முடிந்த பின்னால் கடவுளுக்குத் தேன், கிழங்கு போன்றவைகளை வைத்துப் படைக்கிறார்கள்.
மால் கட்டும் போது இவர்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்கின்றார்கள். தனது முன்னோர்களையும், கடவுளையும் நெஞ்சில் நினைத்து வணங்கிய பின் மாலில் இறங்குகிறார்கள். எலி போன்ற பிராணிகள் அந்த கயிற்றை (கொடி) கடித்துவிடலாம். அல்லது பொறாமை, பகைவர்கள் உள்ளவர்கள் அறுத்துவிடலாம். தேனெடுக்கும் போது அறுத்துவிட்டால் அதல பாதாளத்தில் விழுந்து உடல் சிதறி இறக்க நேரிடும்.
இவர்கள் தேனெடுக்கும் போது தம் உடன் பிறந்த சகோதரர்களை காவலுக்கு வைத்துக் கொள்வதில்லை. மனைவியின் உடன் பிறந்த சகோதர்களான மாமன் மைத்துனர்களே பாதுகாப்பாக காவல் காக்கின்றனர்.
இதற்கான காரணத்தை விளக்கும் கதை ஒன்று பாடல் வடிவில் பாடப்படுகின்றது. நீண்ட நெடிய பாடலாக இராகத்துடன் இரவெல்லாம் கூடப்பாடுகிறார்கள். சில இடங்களில் உடுக்கை அடித்துப் பாடுபவர்களும் உண்டு.
ஏழுபேர் அண்ணன், தம்பிகள் இருந்தனர். பெரியவன் பெயர் பெரியண்ணன். கடைசியாகப் பிறந்தவன் சின்னண்ணன். இவர்கள் ஏழு பேரில் சின்னண்ணன் விவேகமாக வீரனாக இருந்தான். வேட்டையாடுவதில் வல்லவன். அந்தக் கூட்டத்தில் உள்ள அனைவரின் நலனிலும் அக்கறை கொண்டவனாக இருந்தான். இவனது சிறந்த பண்பால் எல்லோராலும் உயர்வாக மதிக்கப்பட்டான். இவனுடைய அண்ணிமார்களும் சின்னண்ணனிடம் அன்பும் பாசமும் பொழிந்தார்கள்.
அந்த சமூகத்தினர் அனைவரம சின்னண்ணனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைக் கண்ட அவனது உடன் பிறந்த ஆறு அண்ணன்மார்களும் பொறுத்துக் கொள்ள முடியாமல் பொறாமை கொண்டார்கள். எனவே பெரியண்ணன் சின்னண்ணனைக் கொன்றுவிட எண்ணினான். இதற்கு அவனது சகோதரர்கள் அனைவரும் உடன்பட்டனர்.
ஒருநாள் தேனெடுக்க மால்கட்டும் படி சின்னண்ணனிடம் கூறினான் பெரியண்ணன். அண்ணன் பேச்சுக்கு மறுப்பு கூறாத பண்புடைய சின்னண்ணன் மாலுடன் தேனறுத்தான். தேனெடுத்து முடியும் தருவாயில் அண்ணன்மார்கள் மாலை (மால்) அறுத்துவிட்டார்கள். பெரும் பாதாளமான பள்ளத்தில் மாலுடன் தம்பி சின்னண்ணன் வீழ்ந்து உடல் சிதறி இறந்தான்.
அன்றிலிருந்து இருளர் பழங்குடி மக்கள் உடன் பிறந்த சகோதரர்களை காவலுக்கு வைத்துக் கொள்ளும் பழக்கத்தை கைவிட்டு மனைவியின் உடன்பிறந்த மாமன் மைத்துனர்களைக் காவலுக்கு வைத்து கொள்ளும் முறையை கடைப்பிடிப்பதாக கூறுகிறார்கள்... இன்றைக்கும் இதே பழக்கம் நடைமுறையில் உள்ளது. தன் சகோதரி விதவை ஆவதை எந்த சகோதரனும் விரும்பமாட்டான். அதனாலேயே மனைவியின் சகோதரர்களைக் காவலுக்கு வைத்துக் கொள்கிறார்கள்.
தேன், கிழங்கு, சீங்கப்பூ, சுண்டைக்காய் மற்றும் காய்கனி இவர்களது உணவாகும். கள்ளிமுள்ளியான் என்ற (சிறிய கற்றாழை போன்ற) ஒருவகைத் தாவரத்தை பச்சையாகவோ வேகவைத்தோ சாப்பிடுகிறார்கள். மூங்கில், குருத்துகளையும் உண்ணுகிறார்கள். மலைநெல் கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
காட்டில் கிடைக்கும் காய்கனி, தேன் மற்றும் பொருட்களை வனத்தை ஒட்டி வாழும் ஊர்களுக்குச் சென்று விற்றுவிட்டு அதற்குப் பதிலாக உணவு தானியங்களைப் பெற்று வருகிறார்கள். கிராமங்களில உள்ளவர்களிடம் பழைய துணிகளைப் பெற்று பழந்துணிகளை அணியும் பழக்கமே பெரும்பாலானவர்களிடம் உள்ளது. ஆடைக்கும் பற்றாக்குறை உள்ள மக்கள்.
இவர்களின் குழந்தைகள் போர்வை கூட இல்லாமல் இருக்கின்றார்கள். பிறந்த மேனியாய் இருக்கும் குழந்தைகள் குளிரத்தாங்கிக் கொள்ள தரையில் மண்ணைக்கிளறி அதில் படுத்துறங்குகிறார்கள். மண்ணைப் பறித்து அல்லது கிளறி படுத்து அந்த மண்ணின் சூட்டில், கதகதப்பில் குளிரைத் தாங்கி பழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த பரிதாபகரமான நிலை தொல் பழங்குடியினரிடையே இன்றும் நிலவுகிறது.
வியாபரிகள், கல்பாசை, குங்குலியம், மாவுலிக்கிழங்கு போன்றவற்றைப் பழங்குடியினர் மூலம் சேகரிக்கச் செய்து அவர்களுக்கு சொற்ப பணம் கொடுத்துப் பெற்று வருகின்றனர்.
பழங்குடியினர் காடுகளில் உள்ள காய், கனிகளை எடுக்கும் போது மரம், செடி, கொடிகளை வெட்டி எடுப்பதில்லை. பலனை மட்டும் எடுப்பதால் அதன் வளம் மேலும் வளர்ச்சி பெறுகிறது. இவை அழிக்கப்பட்டால் பழங்குடியினர் வாழ்வும் சூனியமாகிவிடும்.
அதே போல் வேட்டையாடும் போது சிறிய இளம் குட்டிகளையோ, கருவுற்ற நிலையில் உள்ள விலங்குகளையோ இவர்கள் வேட்டையாடும் பழக்கமில்லை.
மீன்பிடித்தல்
ஆறுகளிலும், ஓடைகளிலும் மீன்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக பழங்குடியினர் உள்ளனர். ஆறுகளில் மிதந்து நீந்திச் செல்லும் பெரிய மீன்களை தடியால் அடித்துப் பிடிக்கின்றார்கள். துணிகளை ஏந்தியும் சிறிய வலைகளைக் கொண்டும் மீன் பிடிக்கிறார்கள்.
ஆழமாகத் தேங்கி நிற்கும் இடங்களை மடுவு என்று அழைக்கின்றார்கள். இத்தகைய மடுக்களில் பழங்குடியினரல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தோட்டா போன்ற வெடி மருந்துகளைப் பயன்படுத்தி வெடிப்பதன் மூலம் மீன்கள் செத்து மிதக்கும். இந்த வகையில் மீன் வேட்டையாடுவதால் மீனினம் பாதிப்படைகிறது.
ஆனால், பழங்குடியினர் இம்முறையைக் கடைப்பிடிப்பதில்லை. சொக்கு மரப்பட்டையை (சொக்குப்படை) நசுக்கி மடுக்களில் போடுகிறார்கள். இது ஆற்று நீரில் கரையும் போது சொக்குப்பட்டை சாறினால் மீன்கள் மயக்கமுற்று மிதக்கின்றன. அதை எடுத்துப் பழங்குடியினர் சமைப்பர். சொக்கு என்றாலே மயக்கம் என்று பொருள். ''சொக்குப் பொடி போட்டு மயக்கினான்'' என்ற சொற்றொடர் இதனால் தான் வந்துள்ளது. இந்த முறையால் மீனினம் அழிவதில்லை. பெரிய மீன்கள் மயங்கி மிதக்கும் போது பிடித்துக் கொள்வார்கள். நீரில் கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிந்துவிடும்.
தொழிலில் சாதி இல்லை
சாதியத் தொழில் முறை இவர்களிடமில்லை. முகமழித்தல்(சவரம்) முடிவெட்டுதலுக்கு வேறு சாதியினர் இல்லை. ஒருவர் மற்றவருக்கு செய்து விடுகிறார்கள். அதுபோலவே பறையடிக்க வேறு சாதியினர் அமர்த்திக் கொள்ளும் பழக்கமில்லை. இவர்களே பறையடித்துக் கொள்கிறார்கள். சாதி வடிவத்தில் இவர்கள் இல்லை. சாதி வடிவத்திற்குள் சென்றாலே பழங்குடியினர் என்ற நிலையில்லாதவர்கள் என்ற வரையறைக்குள் அடக்கப்பட்டுவிடுவர்.
திருமண முறை
பழங்குடியினரின் திருமணம் என்பது ஒருவனும், ஒருத்தியும் சேர்ந்து வாழ்வது தான். தாலிகட்டும் பழக்கம் பெரும்பாலான பழங்குடியினரிடம் இல்லை. மற்ற சமூகத்தினரைப் பார்த்து தாலி கட்டும் பழக்கம் அண்மைக்காலமாக சிலர் மேற்கொண்டுள்ளனர்.
பழங்குடியினர் திருமணத்தில் சில முறைகளைக் கடைபிடித்து வருகின்றார்கள். பொதுவாக ஆணோ, பெண்ணோ மணந்து கொள்ள விரும்பினால் அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பழகவிடும் பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது. இருவரையும் காட்டிற்குள் அனுப்பிவிடுகிறார்கள். தங்களுக்குள் மனம் விட்டுப் பேசி தனியே தங்கி சில நாட்கள் பழகுகின்றனர். பின்னர் திரும்புகின்ற போது பெரியோர்களின் முன் நிறுத்தப்படுகின்றனர். இருவரும் மனம் ஒத்து மணந்து கொண்டால் மட்டுமே கணவன் மனைவியாகலாம். விரும்பாவிடில் இருவரும் பிரிந்து வேறு ஒருவரை (இருபாலரும்) மணக்கலாம்.
ஒரு பெண்ணை மணக்க விரும்பும் ஆடவனைப் பெண் வீட்டிற்கு அனுப்பி அங்கேயே இருந்து உழைத்து வர வேண்டும். சரியான தகுதியுள்ள மாப்பிள்ளை என்று பெண்ணும், பெண் வீட்டாரும் கருதினால் மட்டுமே பெண் கொடுக்கப்படும் இல்லையேல் பெண் கொடுக்க மறுத்து விடுவார்கள். ஆண்டுக்கணக்கில் உழைப்பவரும் உண்டு.
இன்னும் சில பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெண்ணை மணக்க விரும்பும் ஆடவன் வீட்டிற்கே பெண்ணை அனுப்பி விடுவார்கள். பெண்ணும் ஆணும் பழகி பிறகு மனம் ஒத்து திருமணம் செய்கிறார்கள்.
சிலர் குழந்தைகள் பிறந்த பிறகு திருமணம் செய்து கொள்வதும் உண்டு.
ஒரு பெண்ணுக்கு ஆடை கொடுத்துவிட்டால் அவளை மணப்பெண்ணாக உறுதிப்படுத்திக் கொண்டதாகப் பொருள்.
இருளர் பழங்குடியினரிடையே நடக்கும் திருமணம் மிக எளிமையானது. திருமணமாகும் மணமகன் மணமகள் இருவரிடமும் கிழங்கு தோண்டும் குத்தூசி (பாறைக்கோல்) ஒரு கோடாரி, ஒரு மழு (மழுவு), சொரபுருடை, ஒருவயிற்றுக் கட்டுத்துணி ஆகியவற்றைக் கொடுத்து ஒரு பாறைக்கோலை (பாறை கூசம் என்றும் கூறுவர்) வழியில் கிடத்தி மணமக்களை அதைத் தாண்டும்படி கூறுவார்கள். அதைத் தாண்டினால் திருமணம் நிறைவு பெற்றதாக ஆகிவிடும். அவர்கள் இருவரையும் மலையில் உள்ள ஒரு குகைக்கு அனுப்பி விடுவார்கள். அன்று முதல் அவர்கள் தனிக்குடும்பமாக அந்த இடத்தில் வாழலாம்.
வயிற்றுக்கட்டு துணி என்பது சிறியகயிறு போன்ற (இடையில் கட்டும் பெல்ட்டு போல்) கயிறாகும். உணவு கிடைக்காத காலங்களில் பட்டினியால் கிடப்பது வழக்கமாகிவிடுகிறது. அந்தக் காலங்களில் உணவு கிடைக்கும் வரை பட்டினியை தாங்கிக் கொள்ள வயிற்றை இறுகக் கட்டிக் கொள்வார்கள். மணமக்களாக நிற்கும் போதே இவர்களுக்கு கொடுத்துவிடுவது இவர்களது பழக்கம்.
பொதுவாக மணமாகி விட்டால் கணவன் மனைவி எங்கு சென்றாலும் இணை பிரியாமல் இருப்பர். வயதான நிலையிலும் கூட எந்தச் சூழ்நிலையிலும் இணைபிரியாமல் இருப்பது இவர்களின் குணமாகும்.
ஒருவன் ஒருத்திதைய மணந்துவிட்டால் வேறு நபர்களை நாடாமல் இருப்போரும் உண்டு. இருவரிடையே மாறுபாடு எழுந்தால் மணமுறிவும் செய்து கொள்ளலாம். மறுமணமும், விதவைகள் மறுமணமும் பழங்குடி மக்களிடையே காணப்படுகிறது.
ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணோ அல்லது ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணோ வெற்றிலைப்பாக்கு கொடுத்து பெற்றுக் கொண்டால் ஒருவரை ஒருவர் விரும்புன்றனர் என்று பொருள். வெற்றிலை பாக்கு பெற்றுக் கொண்டவர் காதலர்களாக சேரும் பழக்கம் இவர்களிடம் உள்ளது.
பழங்குடியினர் குழந்தைகளை அதுவும் பெண் குழந்தைகளைக் கொன்று விடுவதாக சிலர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் பல சமூகப் பிரிவு பழங்குடியினரிடையேயும் பழகி அறிந்த நிலையில், குழந்தைகளைக் கொல்லும் பழக்கத்தை நான் பார்த்ததில்லை. வனங்களில் வாழும் இம்மக்களது கூட்டம் பெருக வேண்டிய தேவை உள்ள நிலையில் தங்களுக்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு குழந்தைகளை நிறைவுடன் பெற்றுக் கொள்கிறார்கள். பல குடும்பங்களில் பத்து, பதினைந்து குழந்தைகளை வளமாக பெற்றுக் கொண்டுள்ள பெண்களையும் காண முடிகிறது. இதற்கு அவர்கள் வெட்கமோ, தயக்கமோ கொள்வதில்லை. அதிகமான குழந்தைகளின் தாயாக, அந்த கூட்டத்தின் தலைவியாக பெருமையுடன் விளங்குகிறார்கள். குழந்தை பெற்றுக் கொள்ளும் உடல் பக்குவம் நீடிக்கும் வரை சளைக்காமல் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.
வனத்தில் வாழ்வோர் மிக இளம் வயதிலேயே குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் நிலை உள்ளது.
குழந்தை வேண்டாம் என்று கருதினால் ஒருவகை மூலிகையை உண்டு விடுகிறார்கள். உடலுக்கு எந்தப் பக்கவிளைவும் விளைவிக்காத அந்த மருந்து உண்டவர்களுக்கு குழந்தை பிறப்பதில்லை. அதை கொட்டுமருந்து (பு) என்றே அழைக்கிறார்கள்.
பழங்குடி மக்கள் சில சமூகப் பிரிவினர் குழந்தை பிறந்தவுடன் தாயையும் குழந்தையையும் சேர்த்து ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். தீட்டாகையால் குழந்தை பெற்றபெண் தீட்டுக் கழியும் காலம் வரை சமையல் செய்யக்கூட அனுமதிப்பதில்லை. சில பழங்குடி சமூகப்பரிவினர் பதினைந்து நாட்களில் அழைத்துக் கொள்கிறார்கள். ஒரு சிலர் ஒரு மாதம், மூன்றுமாதகாலம்கூட தீட்டுக்காலமாக ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். அந்த தீட்டுகாலம் முடிந்த பிறகே வீட்டிற்குள் அனுமதிக்கபடுவர் அல்லது குடும்பத்தாருடன் இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.
பூப்பெய்தல்
பூப்பெய்தல் வாழ்க்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக பழங்குடியினர் கருதுகின்றார்கள். பருவமடைந்த பெண்ணை சில நாட்களுக்குத் தனி இடத்தில் ஒதுக்கி வைக்கின்றனர். பூப்பெய்திய பெண்ணை ஓடைகளில் குளிக்க வைக்கிறார்கள். வேறு ஆடைகளை உடுத்தச்செய்கிறார்கள். முடிந்தால் புத்தாடை அணிவிக்கின்றார்கள்.
சில பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பூப்பெய்திய பெண்ணை கிழக்குத் திசையில் கதிரவனப் பார்க்கும் வகையில் அமரச்செய்து நீருற்றி குளிக்கச் செய்கின்றனர். நல்லெண்ணெயில் கோழிமுட்டையை பச்சையாகக் கலந்து பருவமெய்தியப் பெண்ணுக்கு கொடுக்கின்றார்கள். பதின்மூன்று நாட்கள் கழித்து பச்சரிசி மாவில் வெல்லம் கலந்து (பச்சமாவு என்று அழைப்பர்) பருவமடைந்த பெண்ணுக்கும் மற்றும் அனைவருக்கும் கொடுப்பார்கள். அன்று முதல் தங்கள் கூட்டத்தோடு அழைத்துக் கொள்வார்கள்.
இறப்பு
பழங்குடி மக்கள் இறந்துவிட்டால் சில இடங்களில் புதைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் பெரும்பாலான வனவாழ்பழங்குடிகள் இறந்தவர்களை பாறைச்சந்துகள், அல்லது குகை போன்ற பகுதிகளில் சடலத்தை வைத்து மூடிவிடும் பழக்கமே உள்ளது. அதை அடையாளம் வைத்து வணங்குகிறார்கள். பெரும்பாலான பழங்குடிகளுக்கு சுடுகாடு வைத்துக்கொள்ளும் பழக்கமில்லை.
வனவிலங்குகளால் ஒருவர் கொல்லப்பட்டால் உடல் சிதறிய இடத்தில் அதை சேர்த்து கற்களை போட்டு மூடி விடுகிறார்கள். அந்த வழியாகப் போகும் போதெல்லாம் சிறுகற்களை எடுத்து (ஒருகையில் எடுக்குமளவுள்ள சிறிய கற்கள்) இறந்தவரின் கற்குவியல் மீது போட்டு வணங்கிவிட்டு செல்கிறார்கள். அந்த இடத்தில் தொடர்ந்து சிறுசிறு கற்கள் சேர்ந்து நாளடைவில் அது பெரும் கற்குவியலாக மாறிவிடுகிறது. இத்தகைய கற்குவியல்களை வனங்களில் பல இடங்களில் இன்றும் காணலாம்.
இசை
தமிழகத்தில் உள்ள பல சமூகப்பிரிவு பழங்குடி மக்களிடையே பலவிதமான இசை, நாட்டிய முறைகள் இருக்கின்றன. இசை ஆய்வாளர்களுக்கும், நாட்டிய நடனக் கலையின் தொடக்கத்தை ஆய்வோருக்கும் பெரும் பயனுள்ள களமாக இப்பகுதி திகழும்.
பண்டைய இலக்கியங்களில் வரும் குறவைக் கூத்து இன்றும் மலைப்பகுதிகளில் காணப்படுகின்றன. ஆண்களும், பெண்களும், கூட்டமாகப் பாடி ஆடுகிறார்கள். தோல் கருவியை அடித்து பிக்கியை (முகவீணை போன்று சிறிய இசைக்கருவி) ஊதி கூட்டத்தினர் ஆரவாரம் செய்து எழுப்பும் ஒலி உண்மையிலேயே பரவசப்படுத்திவிடுகிறது. கர்நாடக மலையை ஒட்டிய பகுதிகளில் வாழும் பழங்குடியினர் பழங்கால சிறிய யாழ் போன்ற இசைக்கருவிகளை வைத்துப் பாடி ஆடுகின்றனர்.
மருத்துவம்
பழங்குடியினர் மருத்துவத்தைத் தொகுத்த ஆய்வறிக்கை நமது நாட்டில் 3500 வகையான மூலிகைகளை மருத்துவத்திற்குப் பயன்படுத்துவதாகக் கூறுகிறது. ஏராளமாக ஆய்வு செய்ய வேண்டிய தேவை இதில் உள்ளது. தமிழகத்தில் மிகக்குறைவான ஆய்வினையே அரசு மேற்கொண்டுள்ளது. அதுவும் குறிப்பாக நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட பழங்குடி மக்களின் மருத்துவ முறை மட்டுமே அறியப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட பழங்குடிகள் மருத்துவத்திற்கு 70 வகையான மூலிகைகளையும், கொடைக்கானல் மலை பழங்குடிகள் 69 வகையான மருத்துவ மூலிகைகளையும் பயன்படுத்துவதாக ஆய்வு அறிக்கை கூறுகின்றது. தமிழகம் முழுவதிலும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
பண்டிகை
தங்களின் தெய்வங்களை வழிபடுவதோடு பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதில்லை. மாரியம்மன், சிவன் வழிபாடு பரவலாக உள்ளது.
நம்பிக்கை
கடவுள் நம்பிக்கையில் ஊறியுள்ள மக்களாக இருக்கின்றார்கள். அது போலவே பேய், சூனியம், மாந்திரீகம் போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். காடுகளில் பறவை எழுப்பும் ஒலி, மிருகங்களின் குரல் ஆகியவற்றைக் கொண்டு சகுனம் பார்த்து நடக்கின்றார்கள்.
இயற்கைச் சீற்றங்கள் பேய்காற்று, பெருமழை, கோடைக்கொடுமை, கடுங்குளிர் போன்றவற்றிற்குப் பரம்பரையாகப் பழக்கப்பட்டுவிட்ட பழங்குடியினர் இவைகளைத் தாங்கி உடற்கூறு பக்குவப்பட்டு விட்டனர். ஆனால், மாறிவரும் சூழ்நிலையில் பழங்குடியினரல்லாத சமூகத்தினரால் ஏற்படும் இன்னல் இவர்களின் வாழ்க்கை முறையை சீரழித்து விடும்.
ஏற்கெனவே பட்டினி என்பது இவர்களின் உடன் பிறந்ததாக உள்ளது. எனவே தான் திருமணத்தின் போதே வயிற்றுத்துணியை கொடுக்கும் பழக்கம் தொல் பழங்குடி மக்களிடம் காணப்படுகிறது. புதிய புதிய வளர்ச்சி, காடு அழிப்பு, வியாபார நோக்குடைய அரசின் வனக்கொள்கை, மலைநில அரசுத்திட்டங்கள், ஆதிக்கக்காரர்களின் ஆக்கிரமிப்பு, வனத்துறையினரின் தவறான அணுகுமுறை போன்றவை பழங்குடி மக்களை வெகுவாக பாதிப்பிற்குள்ளாக்கி வருகின்றன. எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குறியாக்குகிறது. கல்வி இல்லால், வேறு வேலைகள் செய்தறியாப் பழங்குடி மக்களின் எதிர்கால வாழ்க்கை அழிவை நோக்கித் தள்ளப்படுகிறது.
இயற்கைச்சூழல் பாதுகாப்பு, குன்றாவளம் காத்தல், பழங்குடி மக்களின் பாரம்பரிய அறிவு-தொழில்நுட்பம் இவைகளை அழிவிலிருந்து பாதுகாத்து வளர்க்கக் கவனம் செலுத்தவில்லையாயின் ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்கே கேடு விளைவிக்கும்.
பழங்குடி மக்களின் பாரம்பரிய அனுபவ அறிவு, மனிதநேயமிக்க பண்பு, மருத்துவம், இசை, மரபு வழியாக காணப்படும் மானுடத்தன்மை, சமூக, கலை, கலாச்சார தன்மைகளை ஆய்வோருக்கும், வேளாண்முறை, தாவரவியல் ஆய்வாளர்களுக்கும் ஆய்வுச் சுரங்கமாகவே பழங்குடிமக்கள் விளங்குகின்றனர். இம்மக்களை அழியவிடாமல் காப்பது அனைவரின் கடமையாகும்.
வளர்ச்சியின் போக்கில் மேலும் அரசு கடைபிடிக்க வேண்டிய ஒற்றை மட்டும் சுட்டிக் காட்டலாம் என்று எண்ணுகின்றேன். காடுமலைகளில், குகைவாழ் பழங்குடி மக்களிடம் பழகி, அவர்களிடம் ஒன்றி, அச்சம், போக்கி, காட்டை விட்டு வெளியே அழைத்துச் சென்று பழகினோம். வேறு விதமான மனிதர்களைக் கண்டும், எழுந்து நிற்கும் கட்டிடங்களைக் கண்டும் மிரண்டு மிரளமிரளப் பார்த்தார்கள். அவர்களின் கண்கள் பயத்தையும், பீதியையும் வெளிப்படுத்தின. பேருந்து இரைச்சலைக் கேட்டு நடுங்கி ஒதுங்கினார்கள். திக்குத் தெரியாமல் திண்டாடினார்கள். அவர்களுள் ஒருவராக நாங்களும் பழகுவதால், அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானதால் எங்களுடன் நெருங்கி வந்தார்கள். அரசுக்கு கோரிக்கை மனு எழுதிய போது விரல்ரேகை வைக்கவும் பயந்து மைபெட்டியை விரலால் தொடவும் நடுங்கினார்கள்.
மெல்ல மெல்ல பழக்கினோம். வங்கிக்கு அழைத்துச் சென்றோம். ஆடு வாங்கி கொடுப்பதை அறிந்து மகிழ்ந்து போனார்கள். ஆடுவாங்கிக் கொடுக்கப்பட்டது. ஆனால், சில நாட்களிலேயே அதிர்ச்சி அடைந்தார்கள். அதிகாரிகளின் தவறான அணுகுமுறையும், அவர்களே ஆடுகளை வாங்கிக் கொடுப்பதில் (கமிசனுக்காக) கையாண்ட முறையும் தவறு ஏற்பட வழி வகுத்துவிட்டது.
வனத்தில் நிலவும் தட்பவெப்ப நிலை அறிந்து அச்சூழலில் வளர்க்கப்பட்ட ஆடுகளை வாங்காமல் எங்கோ தரகு வேலை செய்து வாங்கியதால் வனத்தின் குளிர்ந்த நீரைக் குடித்து உடல் நலம் கெட்டு அனைத்தும் மாண்டுபோயின. பழங்குடியினர் மிரண்டு போனார்கள். அதற்குப் பின்னால் அவர்களின் மனநிலையை சீர்படுத்தவே பெரும்பாடானது - நீண்ட காலமானது.
காடுகளில் சுதந்திரமான மக்களாக இருந்த இவர்களுக்கு வீடு கட்டித்தர முயற்சித்தோம். ஆனால், வனத்திற்குள் கட்ட அனுமதி இல்லை. காட்டிற்கு வெளியே கட்டிக் கொடுக்கின்றறோம். என்கிறார்கள். அப்படி கட்டிக் கொடுத்தாலும் பிழைப்பதற்கு வனத்திற்குள் தான் செல்ல வேண்டும். ஆனால், வீடே சொந்தமாக இல்லாத பழங்குடிகள் ஆசையோடு ஒத்துக் கொண்டனர். வீடு கட்டித் தரப்பட்டது.
உணவுப் பொருட்கள் வாங்கக் குடும்ப அட்டை வாங்கிக் கொடுத்தோம். அரசு அங்காடிகளில் அரிசி வாங்கி உண்ணும் பழக்கத்திற்கு வந்தார்கள்.
நாட்கள் கடந்தன. ஒரு நாள் பழங்குடியினர் சிலர் வந்தனர். ஒரு பெண் என்னிடம் கூறினார்.
''நீங்க எங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்காதீங்க. அரிசிவாங்க ஏற்பாடு செஞ்சீங்க. முன்பெல்லாம் காட்டுல கிழங்கு காய்கசுரு சாப்பிட்டு நிம்மதியாய் இருந்தோம். இப்ப அரிசி வாங்கி சாப்பிட்டு பழகிக் கொண்டோம். இப்போது அரிசிவாங்க காசு இல்ல. சோறு தின்னு பழகிட்ட எங்க பிள்ளைங்க காட்டுக்கு போய் கிழங்கு தோண்ட வரமாட்டேன்னு சொல்றாங்க. நாங்க என்ன பண்ணுறதுனு தெரியல. ரெண்டும் கெட்டான் நிலைக்கு வந்துட்டோம்'' என்றார்.
இன்னொருத்தர் சொன்னார், ''சில குடும்பங்க வீட்டை விட்டு காட்டுக்கே போயிட்டாங்க. தொழில் தெரியாது காசு சிடைக்க வழியில்லே. அரிசி வாங்க முடியாம போயிட்டாங்க'' என்றார்.
ஆக எந்தத் தொழிலிலும் பழக்கப்படாமல் வேலை வாய்ப்புக்கு, வாழ்க்கைக்கு உத்தரவாதப் படுத்தாமல் பழங்குடியினருக்கு வனத்துக்கு வெளியே வீடு கட்டிக் கொடுப்பதால் மட்டுமே சமூகப் பொருளாதார நிலையில் வளர்ச்சி கண்டிட முடியாது. திட்டமிடாத செயல்பாடுகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.
கூக்(கு) கொடுத்தல்
வனங்களில் இவர்கள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள சங்கேத மொழியாக குரல்கொடுத்தே (கூக்கு கொடுத்தல் என்கின்றனர்) தகவல்களைக் பரிமாற்றிக் கொள்கிறார்கள். மலையின் நீண்ட தொலைவுக்கும் குரல் எட்டி விடுகிறது. நல்ல செய்தி, கெட்ட செய்தி, அழைப்பது, தப்பித்துக் கொள்ள சொல்வது, எதிரிகளைப் பற்றி தகவல் சொல்வது, மகிழ்ச்சி, கவலை ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வது, வரச்சொல்வது அல்லது வராதே என்பது ஆகிய அனைத்தையும் கூவும் குரலிலேயே வேறுபாடு கண்டு உணர்ந்து கொள்கிறார்கள். கணிப்பொறி உலகில் இப்படியும் ஒரு சமூக வாழ்க்கைத் தொடருகின்றது.
பெரியோரிடம் வாழ்த்துப் பெறுதல்
பழங்குடியினர் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால், அந்தக் கூட்டத்தின் மூத்தோர்களின் பாதங்களில் கையைவைத்துத் தொழுது ஆசிபெற்றே செல்லுகின்றார்கள். மூத்தோர் வாழ்த்தி வழிஅனுப்பி வைக்கின்றார்கள்.
நிர்வாகமுறை
இவர்களுக்குள் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும், கூடிப்பேசித் தீர்க்கிறார்கள். இவர்களுக்கென சில மரபுகளை, கட்டுப்பாடுகளை, நியதிகளை வைத்துள்ளனர். இவைகள் எழுதப்படாத சட்டங்களாகும். இந்த எழுதப்படாத சட்டங்களின்படி வழங்கும் தீர்ப்புகளுக்கு அனைவரும் கட்டுப்பட்டு வாழ்கிறார்கள். அரசின் வேறு சட்டங்களையோ திட்டங்களையோ அறியாத மக்கள். அதோடு வேறு சமூகத்தாரின் கலாச்சாரத்தை எளிதில் ஏற்றுக் கொள்ளாமல் தனித்தன்மையுடன் வாழ்பவர்களாக உள்ளனர்.
பரபரப்பான இன்றைய உலகில் தங்களுக்குள் ஏற்றத்தாழ்வு இல்லாமல், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இன்றி, பெண்ணடிமைத்தனமோ வரதட்சணைக் கொடுமையோ இல்லாமல் சாதி சண்டைகளுக்கோ, மதமோதல்களுக்கோ வாய்ப்பு தராமல் அனைத்துப் பழங்குடி மக்களும் சமமாக வாழும் உயர்ந்த பண்புடன் பழங்குடிமக்கள் வாழ்ந்து வருகின்றனர். பசியால் பஞ்சத்தால் வாடினாலும் கிடைப்பதை அனைவரும் பகிர்ந்துண்ணும் பண்பும், அன்பால் பாசத்தால் பிணைந்த உயர்ந்தவாழ்வும், கள்ளங்கபடமற்று இயற்கையின் மடியில், மலை நிலங்களில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையும் உயர்ந்த பண்பும் போற்றத்தக்கவையாகும்.
நன்றி: தமிழர் கண்ணோட்டம்
2 கருத்துகள்:
இருளர்களின் வாழ்க்கை முறையினை தெரிந்து கொண்டேன் நன்றி
இருளர் இனமக்களின் சமூக வாழ்விலை வெளிச்சம் போட்டு காட்டிய திரு நஞ்சப்பன் அய்யா அவர்களுக்கு என் ஆழ் மனதின். வாழ்த்துகள
கருத்துரையிடுக