பேசத் தெரிந்த மனிதன்தான் நினைப்பவற்றை ஏதேனும் ஒரு வடிவில் வெளிப்படுத்திக் கொள்ள விரும்பினான். பகலெல்லாம் உழைக்கின்றவன் தன் களைப்பு வெளியில் தெரியாமல் இருக்க, களைப்பின்றி மேன்மேலும் வேலை செய்ய விரும்பினான். நகரத்தின் ஒதுக்குப்புறத்தில் நாட்டுப்புறத்தில், நகரத்து நாகரீக வெளிச்சம் படாமல் வாழ்கின்ற குடிமகன் இன்பத்தையும், துன்பத்தையும் தன்குரலால் வெளிப்படுத்தலானான். அவன் அறிவால் வளர வளரத் தான் கண்டவற்றையும், கேட்டவற்றையும் வார்த்தைகளாக்கி வெளிப்படுத்தினான். அவன் தனக்குத் தெரிந்த இசை சேர்த்துப் பாடலானான்.
காக்கை, குருவி, காட்டு விலங்குகள் இவற்றை அதன் குரலாலும் அடையாளங்கண்டு பாட்டாகப் பாடினான். இப்படிப் பிறவற்றின் செயல்களையும் குறிப்பிட்டுப் பேசத்தெரிந்து கொண்ட மனிதன் அதில் அழகுணர்ச்சியையும் சேர்த்துப் பாடினான்.
வாயால் பாடவேண்டியிருந்ததால் இசைக்கும், தாளத்துக்கும் ஏற்றாற்போல் சொற்களைச் சரிசெய்து கொண்டான்.
இப்படி உண்டான மனித இனத்தின் பழம்பாடல்கள் எங்கும் பரவியது. இவ்வாறு உண்டான நாட்டுப்புறப்பாடல் வகைகள் பலப்பல.
தெம்மாங்குப் பாடல்கள், தொழிலாளர் பாடல்கள், தொழில் பாடல்கள், குடும்பப்பாடல்கள், தெய்வப்பாடல்கள் என வகைப்படுத்தப்பட்டன. அவற்றுள் கள்ளன்பாட்டு என்பது ஒரு வகையாகும்.|
தெருக்கூத்து நாடகங்களில் கள்ளன் வேடமிட்டு நடிக்கின்ற ஒருவன் பாடுகின்ற பாட்டு கள்ளன் பாட்டு ஆகும். இதற்குத் ''திருடன் போட்டு'' எனவும் வேறுபெயர் உண்டு.
நாடகத்தில் திருடன் வேடமேற்று நடக்கின்றவன். காண்கின்ற மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்டிருப்பான்.
ஜம்புலிங்கம் என்ற கொள்ளைக்காரன் திருநெல்வேலிக்கு அருகில் வாழ்ந்தான். அவனைப் பற்றிக் கள்ளன் பாட்டு வெளிவந்துள்ளது. அவன் அந்தமான மலைப்பகுதியில் பிறந்தவன்.
காலையிலே எழுந்திரிச்சுக்
கைகாலைச் சுத்தம் பண்ணிக்
கால்படி கள்ளுக் குடிக்காமல் இருக்கிறவன்
கழுதைக்குச் சமானம்
என்பது அவன் எண்ணம், தான் கொள்ளையடித்த பொருட்களை ஏழைகளுக்கு வாரி வழங்கியவன்.
ஆளிலே ஆழகானவன் ஆசாரப் போசனவன்
தோள்கள் பருத்த மன்னன்
தொடை உருண்டு திரண்ட மன்னன்
.....
முறுக்கிவிட்ட மீசையோடே
முன்னம்பல் வரிசையோடே
மினுக்கி வைத்த கத்தியோடே
மின்னுங் கையில் வெடிகளோடே
வாரார் சொக்கத் தங்கம் - நம்ம
நாடார் ஜம்புலிங்கம்.
இருந்தார் என்கிறது மலையருவிப் பாடல். அவனைப் பிடிக்கக் காவல் துறையினர் முயன்றும் முடியவில்லை.
ஏட்டு இன்ஸ்பெக்டரெல்லாம்
எட்டி எட்டிப் பார்க்கையிலே
எட்டிச் சுவரேறிக் கட்டிடத்தைப் பூராத்தாண்டி
ஓடிவிடும் வல்லமை பெற்ற ஜம்புலிங்கத்திற்கு ஆசை நாயகியொருத்தியிருந்தாள். அவள்
மூளி சண்டாளி அந்த
முண்டைச்சி பெற்றமகள்
காக்கா நிறத்துக்காரி
என வடிவங் கொண்டிருந்தாள். அவள் வெற்றிலை மடித்துக் கொடுத்து வெறும் பேச்சு நிரம்பப் பேசிக் கூடச்சாகிறெனென்று கூந்தலை விரித்துப் போட்டு ஜம்புலிங்கத்தைக் காட்டிக் கொடுத்து விடுகிறார். அவனைப் பற்றிய பல செய்திகள் பாடல் வடிவிலே உள்ளன.
காவல் துறையினரை ஏமாற்றிச் சென்றுவிடுபவன். பணக்காரப் பெண்களிடம் அன்புடன் பேசி நகைகளைத் திருடுபவன், காப்பாற்றவரும் கணவனையும் மானத்தை வாங்கி விரட்டி விரட்டி அடிப்பான்.
ஆயிரம் ரூபாயையும் அரைக்காசாக எண்ணி ஏழைகளுக்கு அள்ளி இறைப்பவன்.
புல்லறுக்கும் பெண்களுக்கு நல்ல நகைகளையெல்லாம் கொடுப்பான். நெல்லறுக்கப் போகின்ற பெண்ணுக்கு தானே அருகிருந்து நகைகளைப் பூட்டி அழகு பார்ப்பான். சுருக்குப் பையை நிரப்பி அனுப்புவான்.
பட்டப்பகலில் சப் இன்ஸ்பெக்டர் சட்டையைப் போட்டுத் திரிகின்றவன், குதிரை மீதேறிப் போலீஸார் கும்பிட அவர்கள் ''பீட்நோட்'' டில் பென்சிலால் கையெழுத்துப் போடுபவன்.
கடைசியில் அவன் காவலர்களால் சுட்டுத் தள்ளப்பட்டான் எனக் கதை நிறைவடைகிறது.
ஆழமான ஆற்றையெல்லாம்
ஆனைபுலி கரடியெல்லாம்
அஞ்சாமல்தான் நம்பலாம்
ஆனால் பதினாறு முழச்
சீலைக்காரி பத்திரம் - அப்பா
சீலைக்காரி பத்திரம்
வெற்றிலை மடித்துக் கொடுப்பாள்
வெறும் பேச்செல்லாம் பேசுவாள்
கூடச் சாகின்றெனென்னுவாள்
கூந்தலை விரித்துப் போட்டு
ஏமாந்து போகாதே - தம்பி
ஏமாந்து மோசம் போகாதே.
என அறிவுரையோடு கள்ளன் பாட்டு முடிகிறது.
மற்றுமொரு கள்ளன் பாடல் அவனே பாடுவதாக வருகிறது. அவன் தன் திறமையைப் பற்றிக்
கோட்டைக் கொத்தளம் மேலேறிக்
கூசாம ஓடிடுவேன் - அப்பாடா
கூசாமே ஓடிடுவேன் - அப்பாடா
கூசாமே ஓடிடுவேன்
கொத்தவாசல் கண்டு பிடிக்க வந்தால்
காலை வெட்டிடுவேன் - கூட ஒரு
கையை வெட்டிடுவேன் - கூட ஒரு
கையை வெட்டிடுவேன்.
எனப் பெருமைபடப் பேசுகின்றான்.
மற்றுமொரு திருடன் பாட்டிலே
தண்டை சிலம்பு சலசலக்கத்
தாராபுரம் தங்கை - நடந்துவாடி மங்கை
மாமன்நான் கூடவாரேன்
மத்தியான வேளையிலே
மாமன் செய்த கூத்தையெல்லாம்
மரியாதையாக் கேட்கையிலே
தாடிப் பத்திரிச் சீலை - இழுத்துப் போத்தடி மேலே
என்கின்றான்.
பரங்கிமலை பல்லாவரம்
பன்றி மேய்ச்சவனே - லோட்டா
கூழ்குடிச்சவனே - துண்டு
பீடி அடிச்சவனே.
என்கிறான்.
நிறைவாகக் ''கள்ளன்பாட்டு'' என்பது வட்டார வழக்குச் சொற்களும், கொச்சைச் சொற்களும் வசவுச் சொற்களும் கலந்த நாட்டுப்புறப் பாடல் எனக் கூறலாம்.
நன்றி: வேர்களைத் தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக