நாட்டுப்புறப் பாடல்கள் என்பது மக்களின் பாடல்களாகும். அந்தந்தப் பகுதி மண்ணுடன் வளர்ந்து வளம் பெற்றவை. எழுத்தறிவில்லாத கிராமப்புறத்து மக்களிடையே தொன்றுதொட்டு வழங்கி வரும் அப்பாடல்களை இயற்றியவர் யார்? அவை தோன்றின காலம் எது என்று அறுதியிட்டுக் கூற முடியாது. எழுத்து வடிவத்தில் அவற்றை யாரும் எழுதி வைக்கவில்லை. எனவே அப்பாடல்களுக்கு எட்டிலே இடமில்லாமல் இருந்து வருகிறது.
ஏட்டிலே எழுதவில்லை!
எழுதி நான் படிக்கவில்லை!
வாயில் வந்தபடி
வகையுடனே நான் படிப்பேன்.
என்னும் நாட்டுப் பாடலே மேற்கூறிய இத்தன்மையை விளக்குவதாகும். கல்லாத பாமரர் பாடல்களென்று ஒரு காலத்தில் இவை புறக்கணிக்கப்பட்டன. ஆனால் காலப்போக்கில் கற்றோரும் மற்றோரும் நாட்டுப் பாடலின் சிறப்பினை நன்கு உணரத் தொடங்கினர்.
Folklore என்னும் ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கமாக இவ்வகைப் பாடல்களுக்கு நாட்டார்ப் பாடல்கள், நாட்டுப்பாடல்கள், நாடோடிப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், வாய்மொழிப் பாடல்கள் எனப்பல பெயர்கள் வழங்கி வந்தன. நாட்டுப் பாடல்களில் முக்கிய இடம் பெறுவது தாலாட்டு. அத்தகைய தாலாட்டின் உள்ளடக்கத்தை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தாலாட்டு ஒரு அறிமுகம்:-
தாயின் அன்பையும் சேயைச்சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங்கும் பட்டுருவம் தாலாட்டு என்பதாகும். எனவே தான், தாய்மை உலகிற்கு வழங்கிய முதல் இலக்கியப் பரிசு என்று தமிழண்ணல் தன் காதல் வாழ்வு என்னும் நூலில் விளக்கம் தருகிறார்.
தாலாட்டு என்ற சொல்லை தால் + ஆட்டு எனப் பிரிக்கலாம். தால் என்றால் நாக்கு. நாவை ஆட்டிப் பாடுவதால் தாலாட்டு என்னும் பெயர் பெற்றிருக்க வேண்டும். தாலாட்டு என்ற சொல் ராராட்டு, தாராட்டு, தாலேலோ, ஓராட்டு, ரோராட்டு, தொட்டில் பாட்டு எனப் பல்வேறு பெயர்களில் வழங்குகிறது.
தாலாட்டினை ஏழை எளியவரான மீனவர், உழவர், பண்டாரம், தட்டார், கருமார், தச்சர், கொத்தர் போன்றோர் தங்கள் இல்லங்களில் பிறந்த குழந்தைகளுக்குத் தமிழிசையால் அமுதூட்டி தாலாட்டுகிறார்கள். காட்டு வெள்ளம் போல் வரும் தாயின் மனவெழுச்சியைத் தாலாட்டில் கண்ட ஆழ்வார்கள், பிற்காலக் கவிஞர்கள் முதலியோர் இப்பாடல் வகைக்கு மெருகேற்றிப் பிள்ளைத் தமிழாகவும், தேவர் தேவியர் தாலாட்டுகளாகவும், யாப்பிலக்கணக் கட்டுக் கோப்பில் அடக்கிப் பாடல்கள் இயற்றியுள்ளனர்.
மாணிக்கம் கட்டி வைரம் இடைக்கட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில் (பெரியாழ்வார்)
சாலி வயிற்றமிழ் வேளு ரடிகேள்தாலோ தாலேலோ
சங்கத் தமிழின் தலைமைப் புலவர் தாலோ தாலேலோ
என்று குமரகுருபரர் பாடுகிறார்.
தாலாட்டின் உள்ளடக்கம்:-
குழந்தைக்காகத் தாய் பாடும் வண்ண வண்ணப் பாடல்களைக் கேட்கும்போது, அப்பாடல்களில் குழந்€யின் அழுகைக்குக் காரணம் வினவுதல், குழந்தையைப் பேசத் தூண்டல், தாய்மாமனின் சிறப்பு, சடங்கு முறைகளில் காதுகுத்தும் விழா பற்றிக் குறிப்பிடல், வருங்காலத்தில் தன் மகனை பற்றிய தாயின் கனவுகள், குலத்தொழிலின் பெருமைகள் போன்றவை பெரும்பாலும் தாலாட்டின் உள்ளடக்கமாக இருப்பது தெரிகிறது.
அழுகையை அமர்த்தும் தாலாட்டு:-
பச்சைக் குழந்தையை யாரும் கைநீட்டி அடித்திருக்க மாட்டார்கள். இதைத் தாயும் நன்கு அறிவாள். எனினும் தன் குழந்தையை யாரோ அடித்தது போல,
ஆரடிச்சா நீயழுத?
அடிச்சாரச் சொல்லியழு
பேரனடிச் சாரோ
பிச்சிப்பூ கைனால?
மாமன் அடிச்சாரோ
மல்லிகைப் பூ கைனால?
என வினவுகிறாள். இவ்வாறு அழுகின்ற குழந்தை மானாமதுரை பிரம்பு கேட்டு அழுவதாகவும், தாய் தன் கணவன் பெருமையைக் கூறி, பிரம்பு மட்டுமா? உன் தந்தை ஊரையே வாங்கித் தருவார் கேள் என்று அழுகின்ற குழந்தையின் அழுகையை அமர்த்தும் விதமாகப் பேசவும் தூண்டுகிறாள்.
மானா மதுரையிலே
மணிப்பிரம்பு வித்ததிண்ணு
வாங்கித் தரலையிண்ணு - எங்கட்டி நீ
ஏங்கித் தவிப்பதேனோ
தாய்மாமன் சிறப்பு:-
தாய் மட்டுமின்றிச் சிற்றன்னை, பாட்டி முதலான உறவினர் பிறராலும் தாலாட்டு பாடப்படும். குழந்தைக்குப் பாடலின் பொருள் புரியாது. எனினும் இசையில் மயங்கித் தூங்குகிறது. இவ்வகைப் பாடல்களில் உறவினரின் பெருமைகள் எல்லாம் இடம்பெறும். சிறப்பாகத் தாய்மாமன் பற்றிய பெருமைகளே அதிகம் பேசப்படுகிறது.
மாமனைக் கேலி செய்து பாடும் நகைச்சுவைப் பாடல்களும் தனது அண்ணன் தம்பிமார்களை ஏற்றிப்போற்றுவதும், கேலி செய்து மகிழ்வதும் தமிழ்ப் பெண்களின் தாலாட்டு மரபாக விளங்குகிறது.
உசந்த தலைப்பாவோ
உல்லாச வல்லவாட்டு
நிறைந்த தலைவாசலிலே
வந்து நிற்பான் உன் மாமன் என்றும்,
ஏலக்காய் காய்க்கும்
இலை நாலு பிஞ்சு வரும்
ஜாதிக்காய் காய்க்கும்
உன் தாய்மாமன் வாசலிலே
என்றும் தாய்மாமன் பெருமையைப் பேசுகிறாள் தாய்.
காதணி விழா:-
குழந்தைக்கு எடுக்கும் விழாக்களில் காதணி விழா என்பது தொன்று தொட்டுப் பெரும் சடங்காக நிகழ்த்தப் பெறுகிறது. அதில் தன் குழந்தைக்குக் காதுகுத்தப் போகிறார்கள். அதற்கு தாய்மாமன் என்ன சீர் கொண்டு வருவானோ என்று எண்ணுகிறாள். பின்பு ஆசாரியை அழைத்துக் காதுக்குக் கடுக்கன் செய்யச் சொல்கிறாள்.
காது குத்துவதும் குழந்தை உடலில் ஏதாவது சிறுகாயம் ஒன்றை ஏற்படுத்துவதும் எமனை ஏமாற்றச் செய்யும் தந்திரங்கள். அழகான குழந்தைகள் இறந்து போகும். ஆதலால் எமனை ஏமாற்ற உடலில் சிறுகாயம் ஏற்படுத்திவிட்டால் போதும் என்ற நம்பிக்கை. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் நிலவி வருகிறது. குழந்தையின் ஆயுளைப் பாதுகாக்கும் சடங்கு ஆகையால் இதனை பெண்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவர். என்பதை,
என் அரசன் காதுகுத்த
என்ன சொல்லும் ஆசாரி
.......
கைவிளக்கு கொண்டு நீ
கலிதீர்க்க வந்தவனோ
.......
உனக்கு கண்ணேறு தையாமல்
சுண்ணாம்பு மஞ்சளம்
சுத்தி பொறி சூரியர்க்கு என்ற பாடல் வரிகள் விளக்குகின்றன.
தாய்மை போற்றுதல்:-
பெண் திருமணமாகியும் குழந்தை பெறாமல் மலடியாக இருந்தால் அவள் தொட்டதெல்லாம் துலங்காது என்ற நம்பிக்கை பெண்ணுள்ளத்தில் வேரூன்றி நிற்கிறது. அதே கணத்தில் இவளுக்கு மகன் பிறந்துவிட்டால் செத்த மரமும் தளிர்த்துவிடும். கல்யாண பாகற்காய் இனிப்பாகிவிடும். உளுந்த மரமும் தழைத்து விடும் என்பதை,
பட்டமரம் பாலூறும்
பாவல்காய் தேனூறும்
உளித்த மரம் தான் தழையும்
உத்தமியாள் வாசலிலே என்ற அடிகள் உணர்த்தும்.
மனிதனின் நரம்பில்லா நாவானது நல்லது கெட்டது என்ற இரண்டையும் உரைக்கும் வல்லன்மையுடையது. ஆதலால் பிறர்மனம் துன்பப்படா வண்ணம் ஆராய்ந்து உரைக்க வேண்டும். இதனைத்தான் வள்ளுவர் நாவடக்கத்தின் இன்றியமையாமைப் பற்றித் தம் குறளில் உரைத்துள்ளார்.
மலடியாக இருந்த தாயின் மனத்தையும், தந்தையையும் குழந்தை, குளிரவைத்து வளருகின்றான். ஆதலால் மகிழ்ச்சி தாங்காமல் தன் மகனிடம் கோவிலுக்கு என்னென்ன செய்ய விரும்புகிறார்களோ? அதைத் தாலாட்டாகப் பாடி மகிழ்கிறாள் என்பதை,
கட்டைக் களஞ் செதுக்கி
கருமலையைச் சூடேத்தி
பொன்னைப் பொலி போடும்
புண்ணியனார் பேரரசா?
சாலை பதிப்பமோ,
சத்திரங்கள் கட்டுவோமா
மதுரைக்கும், திருப்பதிக்கும்
வகுப்போமே பூஞ்சோலை
கடலுக்கு சம்பாரி,
கப்பலுக்கு வியாபாரி
இனி வார கப்பலுக்கு
உங்க தாத்தா தீர்த்த கணக்காளி
என்னும் வரிகள் குறிப்பிடுகின்றன.
தாயின் கனவுகள்:-
தாய் தன் மகன் வருங்காலத்தில் துரைமகனாகவோ? விவசாயியாகவோ கை நிறைந்த புத்தகத்தைக் கையில் எடுத்து போதிக்கும் ஆசிரியனாகவோ? இதில் எதனைப் பெற்றுப் புகழ் விளங்கப் போகிறானோ என்று தாயின் கனவுகள்,
கண்ணே கண்மணியே
கண்ணுறங் காயோ
கார வீடோ கச்சேரியோ
கை நிறைந்த புத்தகமோ
ஸ்ரீ வில்லிபுத்தூர் கச்சேரியோ
செல்லத் துரை மகனோ
இங்குத் தாலாட்டாக வெளிப்படுகின்றன.
குலத்தொழிலின் பெருமை:-
தாய் குழந்தைக்குத் தாலாட்டாக தன் குலத்தின் பெருமையையும் தொழிலின் பெருமையையும் பாடுகிறாள். வாழ்வில் நிகழும் இன்ப துன்ப நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாகத் தாலாட்டு அமைகிறது. இங்கு பெண்கள் குடும்பத்தில் எத்தொழிலைச் செய்து வாழ்கிறார்களோ அத்தொழிலின் பெருமை பற்றிப் பேசப்படுகிறது.
ஐரமீனும் ஆரமீனும் - கண்ணே
அம்புட்டுதாம் அப்பனுக்கு
வாளை மீனும், வழலை மீனும் - கண்ணாட்டி
விதம் விதமா அம்புட்டிச் சாம்
மேலும், சர்க்கார் உத்தியோகம் மிக சிறப்பானது என்ற நம்பிக்கையும் தாலாட்டில் வெளிப்படுவதைக் காணலாம்.
அத்திமரம் குத்தகை யாம்
ஐந்து லட்சம் சம்பளமாம்
சாமத்தலை முழுக்காம் - உங்கப்பாவுக்குச்
சர்க்கார் உத்தியோக மாம்.
செட்டியார் குலத்தில் பிறந்த குழந்தையைத் தாலாட்டும் போது அரண்மனையில் பிறந்த குழந்தைக்கு சமமாக உயர்த்திப் பாடும் நிலையைக் கீழ்க்கண்ட பாடலடிகள் விளக்கும்.
ஆராரோ ஆரிராரோ
ஆறு ரண்டும் காவேரி
காவேரி கரையிலேயும்
காசிபதம் பெற்றவனே
கண்ணே நீ கண்ணுறங்கு
கண்மணியே நீ உறங்கு
.....
வம்மிசமாம் செட்டி கொலம்
செட்டி கொலம் பெத்தெடுத்த
சீரளா நீ தூங்கு
சித்திரப் பூ தொட்டிலே
சீரளா நீ தூங்கு
இவ்வாறாக, தாலாட்டு என்பது தாயின் அன்பையும் குழந்தைப் பாசத்தையும் முதன்மைப்படுத்திப் பாடப்படுகிறது. அழுகையை அமர்த்துவதற்காகப் பாடும் பாடலில், குழந்தைக்கு எடுக்கும் சடங்குகள், குலத் தொழிலின் பெருமைகள், தாய் மாமனின் பெருமைகள், தாயின் கனவுகள், தாய்மையைப் போற்றுதல் மற்றும் தாய் மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கக்கூடிய அனைத்தும் தாலாட்டின் பொருளாக அமைகின்றன என்பது தெளிவு.
நன்றி: வேர்களைத்தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக