14/03/2011

வரலாற்றுத் துறை ஆய்வுக்குப் புராணம் மற்றும் சமூக கதைப்பாடல்களின் பங்களிப்பு - முனைவர் ச. இரவி

நாட்டுப்புற இலக்கியத்தை ஐந்து வகையாக வகைப்படுத்தலாம் அவை. 1. நாட்டுப்புறக்கதை 2. நாட்டுப்புறப்பாடல் 3. நாட்டுப்புறக்கதைப்பாடல் 4. பழமொழி 5. விடுகதை ஆகியவைகளாகும். இவற்றுள் புராணக்கதைப்பாடலும், சமூகக்கதைப்பாடலும் நாட்டுப்புறக் கதைப் பாடல் இலக்கிய வகையைச் சேர்ந்ததாகும். இவ்விரு வகைக் கதைப் பாடல்களும் வரலாற்றுத் துறைக்கு எவ்வகையில் உதவுகின்றன என்பதைக் காண்பதுவே ஆய்வின் நோக்கமாகும்.

வரலாற்றுத் துறைக்கு இலக்கியப் பயன்பாடு:-

இலக்கியங்கள் முழுமையாக வரலாற்றைப் பிரதிபலிக்கின்றன என்று சொல்லிவிட முடியாது. பொதுவாக இலக்கியங்கள் கலைத்தன்மையுடையனவாகவும், வரலாற்று நூல்கள் உண்மைத் தன்மையுடையனவாகவும் காணப்படும் கலை உருவில் இலக்கியங்கள் இருப்பதால் உண்மைத் தன்மைகளே இல்லை என்றும் சொல்லி விட முடியாது. உண்மைத்தன்மைகளைக் கலை உருவில் தருவதுதான் இலக்கியம்.

ஏட்டிலக்கியங்களும் நாட்டுப்புற இலக்கியங்களும்:-

இந்த வகையில் ஏட்டிலக்கியங்கள் சான்றோர் இலக்கியங்களாகவும் நாட்டுப்புற இலக்கியங்கள் மக்கள் இலக்கியங்களாகவும் விளங்குகின்றன.

ஏட்டிலக்கியங்கள் எழுதியவர்கள் மன்னர்களது நேரடியான ஆதரவிலோ அல்லது அவர்களது கொடையைப் பெற்றுக் கொண்டோ வாழ்ந்தவர்கள் ஆவர். இவர்களது படைப்புகளில் மன்னர்களது ஆதரவு கருத்துக்கள் இடம் பெற்றிருப்பதில் வியப்பில்லை.

பொதுமக்கள் இலக்கியம்:-

பாமர மக்கள் அவ்வாறு இல்லை. இவர்கள் யாருடைய தயவிலும் படைக்க வேண்டிய தேவையோ, கட்டாயமோ இருக்கவில்லை. தங்கள் மனதில் பட்டதைத் தாங்கள் சுதந்திரமாகப் பாடினர் அல்லது பாடியதைக் கேட்டனர். தாங்கள் பட்ட துன்பதுயரங்களாகிய மன எழுச்சிகளை, தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவ எண்ணங்களின் முத்திரைகளை எழுத்தறிவு பெறாத இம்மக்கள் தங்களது இயற்கையான அறிவுத் திறனால் நாட்டுப்புற இலக்கியங்களைப் படைத்தனர். மக்களால் இயற்றப்பட்ட இவ்விலக்கியங்களைப் பொதுமக்கள் இலக்கியம் என்று கூறலாம்.

பொதுமக்கள் இலக்கியங்களில் வரலாற்றாதாரம்:-

இந்தப் பொதுமக்கள் இலக்கியங்களில் பொய்யில்லை, புனை சுருட்டில்லை. உண்மைகள் மறைக்கப்படவுமில்லை. எனவேதான் பொதுமக்கள் இலக்கியங்களை, வரலாற்று இலக்கியமாகவும் கருதவேண்டிய நிலை ஏற்பட்டு விடுகின்றது.

ஏட்டிலக்கியங்கள் சுட்டிக் காட்டப்படாத அல்லது சுட்டிக்காட்ட மறுத்த வரலாற்று உண்மைகளை இவ்வகை இலக்கியங்கள் எந்தவித ஐயப்பாடுகளுமின்றித் தெளிவுற துணிச்சலுடன் எடுத்தியம்புகின்றனர். இதனால் இம்மக்கள் இலக்கியங்கள் வரலாற்றுச் சான்றாதாரங்களாக இன்று நம்மிடையே விளங்குகின்றன. அவற்றுள் புராண மற்றும் சமூகக் கதைப் பாடல்களும் அடங்கும்.

புராணக்கதைப் பாடல்களில் வரலாற்றுண்மைகள்:-

புராணக் கதைப் பாடல்கள் பெரும்பகுதியும் பழைய புராண இதிகாசங்களில் காணப்படும் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டன. இதில் கற்பனைகள் அதிகமாக இருக்கும். எனவே, உண்மைகளே இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. இதற்குக் கோ.கேவனது கருத்து அரண் செய்வதாக அமைகின்றது. அது பின் வருமாறு அமைகின்றது.

..கருத்துகளின் தோற்றங்களைப் பற்றிப் பார்த்தோமானால் எந்தக் கருத்தும் வெறுமையினின்று உதிப்பதில்லை. கலைஞன் பார்க்காத, கேட்காத அனுபவிக்காத எதையும் கலையாக ஆக்க முடியாது. எனவே, இல்லாத ஒன்றை இருந்ததாகச் சொல்லும் பொய்மை என்பது கூட ஏதோ ஒரு விதத்தில் மங்கலான உண்மை நிலையைச் சிறிதளவேனும் கொண்டிருக்கக்கூடும்.. என்கிறார்.

எனவே புராணச் செய்திகளுக்குப் பின்னால் ஓரளவு வரலாற்றை ஊகித்துக் கொள்ளும் அளவிற்கு வரலாற்றுச் செய்திகள் இடம் பெறுவதைப் புராணக் கதைப் பாடல்களில் காணலாம்.

அல்லியரசாணி மாலைக்கதைப்பாடல்:-

சான்றாக... அல்லியரசாணி மாலை என்ற புராணக் கதைப்பாடலின் மையக் கருத்தின் மூலம், இக்கதைப் பாடல் தோன்றிய கால கட்டத்துப் பாண்டிய நாட்டு மக்களிடத்துக் காணப்பட்ட போராட்டங்களைப் பற்றியும், பிரச்சனைகளைப் பற்றியுமான சமுதாய வரலாற்றை அறிந்து கொள்ள முடிகின்றது.

மையக்கரு:-

...அல்லியரசாணி மாலை..யின் மையக்கரு ..பாரதக் கதை மாந்தரான அருச்சுணன், பாண்டியனின் மகள் என்று சொல்லப்படுகின்ற அல்லியை மணம் செய்த செய்தியை உள்ளடக்கியதாகும்...

வரலாற்று நிகழ்வு:-

இந்நிகழ்வானது சைவ, வைணவ என்ற சமய ஒற்றுமையையும் தமிழர், தெலுங்கர் என்ற சமுதாய ஒற்றுமையையும் நிலைநிறுத்துவதற்கேயாகும்.

ஏனென்றால் கி.பி. 1311-ல் மாலிக்காபூர் என்ற படைத் தளபதியின் தென்னகத்தின் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து கி.பி. 1368 வரை முஸ்லீம் ஆட்சி மதுரையில் பரவியிருந்தது. இக்கால கட்டத்தில் நூற்றுக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டனர். பின்னால் நாயக்கர் ஆட்சியில் கிறித்துவ சமய நிறுவனங்கள் தமிழகத்தில் நுழைந்து ஏராளமான இந்து சமயத்தவரைச் சமய மாற்றம் செய்து கொண்டிருந்தன. இந்த சூழலில் சைவர்களும், வைணவர்களும் கருத்து வேற்றுமைகளை மறந்து இணைய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சைவ வைஷ்ணவ ஒருங்கிணைப்பு:-

திருமலை நாயக்கர் மதுரை மன்னனாகத் தன்னை உரிமையாக்கிக் கொண்டபோது, மரபு ரீதியான அரசு பரம்பரையினர் மற்றும் நிலக்கிழார்களின் எதிர்ப்பையும் வெறுப்புணர்வையும் சந்திக்க வேண்டியிருந்தது. ஏனென்றால் நாயக்க மன்னர்கள் வைஷ்ணவர்கள் அதுவரை ஆட்சியாண்ட பாண்டிய மன்னர்கள் சைவர்கள் இந்நிலையில் அப்பகுதியில் செல்வாக்கு பெற்றவர்களாக நிலக்கிழார்கள் விளங்கினர். இவர்கள் சைவர்களாகையால் வைஷ்ணவ சமயத்தைச் சேர்ந்த நாயக்கர்களுக்குப் பல்வேறு தொல்லைகளைக் கொடுக்க ஆரம்பித்தனர். இவர்களுடன் சமரசம் செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத் தெரிந்து கொண்ட நாயக்க மன்னர் சைவ - வைஷ்ணவ முரண்பாட்டைக் களைந்து ஒற்றுமைப்படுத்த வேண்டிய நிலைக்கு ஆளானார்.

இதனால் வடகலை - தென்கலை வேறு வேறானது அல்ல, இரண்டும் ஒன்றே என்ற கருத்து கொண்ட கலை இலக்கியங்கள் மன்னர் ஆதரவில் உருவாகத் தொடங்கியது.

மன்னன் வைஷ்ணவ சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்தபோதிலும் சைவக் கோவில்களுக்கும் அவனது பணி குறிப்பிடத்தக்கதாக விளங்கியது. எடுத்துக் காட்டாக மீனாட்சியம்மன் கோவிலைப் புதுப்பித்தல், தெப்பக்குளம் கட்டி வைத்தல் போன்ற நாயக்க மன்னனது சைவத் திருப்பணிகள் முக்கியமானதாகும்.

அழகர் கோவிலில் கோவில் கொண்டிருக்கும் அழகர் பெருமானுக்கும் மதுரையில் எழுந்தருளியிருக்கின்ற மீனாட்சிக்கும் இடையே உறவுநிலையில் தொடர்பை ஏற்படுத்தி சைவ - வைஷ்ணவ ஒற்றுமையைத் திருமலைநாயக்கர் வளர்த்தார்.

இச்சூழலில்தான் வடகலை - தென்கலை வேறுவேறானது அல்ல இரண்டும் ஒன்றே என்ற வலிமை வாய்ந்த கருத்தை உருவாக்குகின்ற கதைப் பாடலாக அல்லியரசாணி கதைப்பாடல் உருவாக்கப்பட்டது.

இக்கதைப்பாடலில் வரும் ...அல்லி... தென்னகப் பாண்டிய மன்னனின் மகள். அவளுக்கும் வடநாட்டு மன்னனாகிய அருச்சுணனுக்கும் இடையே நடைபெற்ற போராட்டத்தை எடுத்துக் காட்டி இறுதியில் திருமண உறவில் ஒற்றுமைப்படுத்துகிறது என்பதைத் தெளிவாக இக்கதைப் பாடல் அறிவுணர்த்துகிறது.

தமிழர் தெலுங்கர் ஒற்றமை:-

மேலும் நாயக்கர் காலத்தில வேளாளர்கள் தலைமையில் இருந்ததை மாற்றி பல பாளையப்பட்டுக்களாகப் பிரித்து நாயக்கர்கள் ஆட்சி புரிந்தனர். தெலுங்கு நாட்டில் இருந்து வந்தவர்கள் மதுரையில் ஆட்சி செய்வதை தமிழ்நாட்டு வேளாளர்கள் விரும்பவில்லை. எனவே தமிழர், தெலுங்கர் என்ற முரண்பாடு முற்றிவிடக்கூடாது என்ற நிலையிலும் இக்கதைப்பாடல் எழுந்திருக்க வேண்டும்.

இவ்வாறாக இக்கதைப்பாடல் தோற்றத்தைக் காண அக்கால கட்டத்துச் சமூக வரலாற்றை அறிய முடிகிறது.

சமூகக் கதைப்பாடல்கள்:-

சமூகப் கதைப்பாடல்கள் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு விளங்குகின்றன. இக்கதைப் பாடல்களில் வரும் நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவை உண்மை நிகழ்ச்சிகள்.

பொதுமக்கள் வரலாற்றை உணர்தல்:-

இக்கதைப் பாடல்கள் பல தனி மனிதர்கள் பற்றிய வரலாற்றைக் கூறுவதாக இருந்தாலும் மாமன்னர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எந்த ஒரு கதைப் பாடலும் பாடியிருப்பதாக தெரியவில்லை. இராசராசன், இராசேந்திரன் போன்ற மன்னர்கள் வரலாற்று நூல்களில் இடம் பெற்றிருக்கலாம். ஆனால் பாமர மக்கள் மனதில் அவர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரண உழைக்கும் மக்களே பெரும்பாலும் சமூகக் கதைப் பாடல்களில் கதைத் தலைவர்களாக விளங்குகின்றனர். இவர்களைப் பற்றிய வரலாற்றை அறிவதன் மூலம் அக்காலகட்டத்துச் சமுதாய வரலாற்றை அறிய முடியும்.

.... மதுரை வீரன்... என்ற சமூகக் கதைப் பாடல் திருமலை நாயக்க மன்னனைக் கூறுகின்ற அதே வேளையில் திருச்சிராப்பள்ளியை ஆண்ட விஜயரங்க சொக்கலிங்கம் என்ற குறுநில மன்னனைப் பற்றியும் கூறத் தவறவில்லை.

மதுரைவீரன், காத்தவராயன், முத்துப்பட்டன் போன்றவர்கள் நாட்டை ஆளும் மன்னர்களாக இல்லாவிட்டாலும் சமுதாயம் மதிக்கத்தக்க வீரத் தலைவர்களாக இன்றும் பாமர மக்கள் மத்தியிலே பாராட்டுப் பெற்று வருகின்றனர்.

சாதீய சமுதாயத்தைக் காணல்:-

இவர்களைப் பற்றி ஆராய்ந்தால் அவர்கள் காலகட்டத்து சமுதாய வரலாற்றை அறிய முடியும். இம்மூவரும் சாதி வெறி பிடித்த சமுதாயத்தில் கலப்பு மணம் புரிந்து சாதனை புரிந்தவர்கள். இவர்கள் உயர் வர்க்கத்தினரால் பழிவாங்கப்பட்டாலும் வரலாற்றில் இடம் பெற்றவர்கள். இவர்களைப் பற்றிய கதைப்பாடல்களைக் கொண்டு இவர்கள் காலத்தில் எந்த அளவிற்கு சாதி வெறி தலைவிரித்தாடியது என்பது பற்றிய வர்க்க முரண்பாடுகளைக் கண்டறிய முடியும். இவ்வகையில் வரலாற்றுத் துறை ஆய்விற்கு இக்கதைப்பாடல்கள் பெரிதும் பயனாகின்றன.

இவ்வாய்வுக் கட்டுரையின் வாயிலாகப் பின்வரும் முடிவுகளைப் பெறலாம். அவை வருமாறு.

1. ஏட்டிலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் கூறாத பல்வேறு வரலாற்றுத் தரவுகளைப் புராணக் கதைப் பாடல்களும் மற்றும் சமூகக் கதைப் பாடல்களும் கூறியிருக்கின்றன.

2. இக்கதைப் பாடல்கள் வழி பின் இடைக்காலச் சமூகத்தை இனங்கண்டு கொள்ள முடிகிறது.

3. சைவ - வைஷ்ணவ, தமிழர் - தெலுங்கர் முரண்பாட்டையும் அதற்கான சமரசத் தீர்வுகளையும் அல்லியரசாணி மாலை கதைப்பாடல் வழி உணர முடிகிறது.

4. சாதீய முரண்பாடுகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் சமூகக் கதைப் பாடல்கள் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன.

5. பேரரசர்களுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளைப் பெருமைப்படுத்திப் பேசுவதை தவிர்த்து கிராமப்புறங்களில் சமுதாயப் போராட்டத்தில் உயிர்நீத்த சாதாரண நிலையிலுள்ள சாதனை வீரர்களைச் சமூகக் கதைப் பாடல்கள் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றன.

இவ்வாறாகப் பல்வேறு வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கின்ற புராண, சமூகக் கதைப் பாடல்கள் வரலாற்றுத்துறை ஆய்வுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன என்பதை அறிய முடிகின்றன.

நன்றி: வேர்களைத் தேடி

 

கருத்துகள் இல்லை: