28/03/2011

தமிழில் குறுநூல்கள் - ஆ.சிவசுப்பரமணியன்

துண்டுப்பிரசுரம், துண்டு வெளியீடு, சிறுபிரசுரம் என்ற பெயர்களில் சிறுநூல்கள் வெளிவருவதை நாம் அனைவரும் அறிவோம். ஆங்கிலத்தில் pamphlet என்று இந்நூல்களை அழைப்பர். இச்சொல்லுக்கு இணையாக, குறுநூல் என்ற சொல் இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. pamphlet என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதிகள் பின்வரும் விளக்கத்தை அளிக்கின்றன.

1. புத்தகத்திற்கு நேர்மாறானது. நன்கு பைண்டு செய்யப்படாதது, தளர்ச்சியாகக் கட்டப்பட்டது. அரசியல், மதம் சார்ந்தது.

2. தைக்கப்பட்டு பைண்டு செய்யப்படாதது. அது வெளியாகும் காலத்தைச் சார்ந்த பிரச்னைகளை மையமாகக் கொண்டது.

தமிழக நூலக ஆணைக்குழு அறுபத்து நான்கு பக்கங்களுக்குக் குறைந்த நூல்களைக் குறுநூல்களைக் கருதி அதை வாங்குவதைத் தவிர்த்துவிடுகிறது.

மேற்கூறிய வரையரைகளின் அடிப்படையில் பார்த்தால் குறைந்த பக்கங்களுடன் வலுவான அட்டையின்றி சமகாலப் பிரச்னையை மையமாகக் கொண்டு வெளியாகும் நூல்கள் குறுநூல்கள் ஆகின்றன. ஆங்கிலத்தில் tract என்ற சொல்லும் குறுநூலைக் குறிக்கும். ஆயினும் சமயம் சார்ந்த குறுநூல்களைக் குறிக்கவே அச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

எப்பொழுதெல்லாம் ஓர் அரசியல் சமூகப் பிரச்சனை மேலோங்குகிறதோ, அப்பொழுதெல்லாம் குறுநூல்கள் குறிப்பிடத் தகுந்த அளவில் வெளியாகி உள்ளன. பதினாறாவது நூற்றாண்டின் முற்பகுதியில் குடியானவர் எழுச்சி ஜெர்மனியில் நிகழ்ந்தபோது, போப்புக்கும் கத்தோலிக்கத் திருச்சபைக்கும் எதிரான குறுநூல்களை மார்ட்டின் லூதர் எழுதி வெளியிட்டார்.

பதினேழாவது நூற்றாண்டு இங்கிலாந்தில் அரசியல் சமய வேறுபாடுகள் அதிகரித்த போது கிறித்தவத் திருச்சபைக்கு எதிரான குறுநூல்கள் வெளியாயின. லெவர்களின் தலைவரான ஜான் பிட்பர்ன் என்பவர் குறுநூல் ஒன்றை எழுதி வெளியிட்டமைக்காகச் சிறையில் அடைக்கப்பட்டார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தை மையமாகக் கொண்டு உருவான ஆக்ஸ்போர்டு இயக்கம் Tract for the times என்ற தலைப்பில் குறுநூல்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டது. 18 வது நூற்றாண்டு அமெரிக்காவில் 1763 லிருந்து 1788 வரையிலான காலத்தில் 2000 குறுநூல்கள் வெளியானதாக மதிப்பிடப்படுகிறது. இச்செய்திகள் பல்வேறு நாடுகளிலும் குறுநூல்களுக்கு இருந்த தேவையையும் அவற்றின் செல்வாக்கையும் உணர்த்துகின்றன.

பதினெட்டாம் நூற்றாண்டு தமிழகத்தில் கத்தோலிக்கர்களுக்கும், சீர்திருத்த கிறிஸ்தவர்களுக்கும் இடையே முரண்பாடு முற்றியபோது தமிழ்க் குறுநூல்களின் தோற்றம் நிகழ்ந்தது. இரு பிரிவினரும் குறுநூல்களின் வாயிலாகச் சமயச் சண்டையை நிகழ்த்தினர். சமயம் சார்ந்த குறுநூல்களை வெளியிடுவதற்கென்றே 1878ம் ஆண்டில் Madras Tracts Society என்ற அமைப்பைச் சீர்த்திருத்தக் கிறிஸ்தவர் சென்னையில் நிறுவினர். Catholic Truth Society என்ற அமைப்பைத் திருச்சியில் உருவாக்கி அதன் வாயிலாகக் கத்தோலிக்கர்கள் குறுநூல்களை வெளியிட்டனர். தமது இளமைக் காலத்தில் சீர்திருத்தக் கிறிஸ்தவச் சபையுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த ஆறுமுக நாவலர் அதன் தாக்கத்தினால் சைவ சமயம் சார்ந்த குறுநூல்களை எழுதி, தாமே அச்சிட்டு வெளியிட்டார்.

இந்திய விடுதலை இயக்கம் பல குறுநூல்களின் தோற்றத்திற்குக் காரணமாக இருந்தது. ஜி. சுப்பரமணிய அய்யர், பாரதி, எம்.எஸ். சுப்பிரமணிய அய்யர், சடங்கு கணேசன் ஆகியோர் இம்முயற்சியில் ஈடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

1907ம் ஆண்டு சூரத் நகரில் நிகழ்ந்த சூரத் காங்கிரசுக்குச் சென்று திரும்பிய பாரதி ''எங்கள் காங்கிரஸ் யாத்திரை'' என்ற தலைப்பில் குறுநூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் மிதவாதிகளும் ஆங்கில அரசின் காவல்துறையும் இணைந்து கொண்டு திலகரின் ஆதரவாளர்கள் மீது நடத்திய வன்முறையையும் திலகரின் தலையைக் குறிவைத்து நாற்காலி வீசப்பட்டதையும் பாரதி இக்குறுநூலில் பதிவு செய்துள்ளார். மேலும் அவரது கவிதைகள் இன்று நமக்குக் கிடைப்பது போல் ஒரே நூலாக அவரது காலத்தில் வெளிவரவில்லை. குறுநூல்களாக வெளிவந்தே மக்களை அடைந்தன.

திராவிட இயக்கம், பொதுவுடமை இயக்கம் ஆகியனவும் தம் கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்லும் வழிமுறைகளுள் ஒன்றாகக் குறுநூல்களை வெளியிட்டன. தாம் நடத்திய ''குடியரசு'' இதழின் பெயரில் உருவாக்கிய குடியரசுப் பதிப்பகத்தின் வாயிலாக சுயமரியாதை மற்றும் சமதர்மச் சிந்தனைகள் அடங்கிய குறுநூல்களைப் பெரியார் வெளியிட்டு வந்தார். சாத்தான்குளம் அ. இராகவன் துணையுடன் நிறுவிய பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாகப் புரட்சியாளர் பகவத்சிங் தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தை தமிழில் மொழி பெயர்த்து, 1935 இல் ''நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்'' என்ற பெயரில் குறுநூலாக வெளியிட்டார்.

ஆங்கில அரசாங்கம் இந்நூலைப் பறிமுதல் செய்ததுடன் நூலை மொழிபெயர்த்த ப. ஜ“வானந்தத்தையும் நூலை அச்சிட்ட பெரியாரின் அண்ணன் ஈ.வே. கிருஷ்ணசாமியையும் கைது செய்தது. பொதுகூட்டங்களில் உரையாற்றும் முன்னர் தாம் வெளியிட்ட குறுநூல்களின் பெயர், அது நுவலும் பொருள், விலை, அக்கூட்டத்தில் விற்கப்படும் குறைந்த விலை ஆகியனவற்றைக் குறிப்பிட்டு அறிமுகம் செய்த பின்னரே தமது உரையைத் தொடங்குவதைப் பெரியார் வழக்கமாகக் கொண்டிருந்தார். புதுச்சேரி சுயமரியாதை இயக்கத்தினர் பாரதிதாசனின், ''சஞ்சீவி பர்வதத்தின் சாரல்'' என்ற கவிதையை ஓரணா (ஆறுகாசு) விலையிலும், ''தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு'' என்ற கவிதையை ஒன்றரையணா (ஒன்பது காசு) விலையிலும் குறுநூலாக 1930 ல் வெளியிட்டனர்.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கான சங்கங்களை உருவாக்கிப் போராடிய பொதுவுடைமை இயக்கத்தினர் இவ்விருதரப்பினரின் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு குறுநூல்கள் பலவற்றை தொடர்சியாக வெளியிட்டனர். மாநில அளவில் மட்டுமின்றி மாவட்ட அளவிலான பிரச்சினைகளை மையமாகக் கொண்டும் குறுநூல்களை இவர்கள் வெளியிட்டனர். இந்த வகையில் எம்.ஆர். வெங்கட்ராமன் எழுதிய ''நெல்லை ஜில்லாவில் பஞ்சமோ பஞ்சம்'' என்ற குறுநூல் காங்கிரஸ் இயக்கத்தின் பாதுகாவலர்களாக விளங்கிய பெருநிலக்கிழார்களை பெயர் சொல்லி நேரடியாகச் சுட்டிக்காட்டி அவர்களின் உணவு தானியப் பதுக்கலை வெளிக்காட்டியது. ஆனால் இன்று இரு பொதுவுடைமை கட்சியினரும் கடந்தகால அளவுக்குக் குறுநூல்கள் வெளியீட்டில் ஆர்வம் காட்டவில்லை.

பயிற்சி மொழியாகவும், ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும், தமிழே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பொதுவுடைமை இயக்கத்தினர் வெளியிட்ட குறுநூல்கள் இன்றையத் தமிழகச் சூழலுக்கும் பொருந்துவன. குறுநூல்களை விற்பனை செய்வதைத் தமது கட்சிக் கடமைகளுள் ஒன்றாக அன்றையப் பொதுவுடைமை இயக்க உறுப்பினர்கள் கொண்டிருந்தனர்.

சமயம் மற்றும் இயக்கம் சார்ந்த குறுநூல்கள் தவிர சமூகத்தில் நிகழும் பல்வேறு நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்டும் குறுநூல்கள் பல உருவாகியுள்ளன. புயல், வெள்ளம், கொடிய தொத்து நோய்கள் ஏற்படுத்திய மோசமான பாதிப்புகளும், விபத்துக்களும், கொள்ளை, கொலை, பாலியல் வன்முறை போன்ற குற்றச் செயல்களும் குறுநூல்களின் தோற்றத்திற்குக் காரணமாக அமைந்தன. பரபரப்பான உரிமையியல் (சிவில்) வழக்குகளும் கூட குறுநூல்களின் பாடுபொருளாக அமைந்தன. கல்கியின் தியாகபூமி (1999-353) நாவலில் சம்பு சாஸ்திரி என்ற கதாபாத்திரத்திற்கு மணவிலக்குத் தொடர்பான வழக்கில் சாட்சியம் கூற வரும்படி நீதிமன்ற அழைப்பானை வருகிறது.

அதைக் கொண்டு வந்த அமீனா ''இந்தக் கேஸ“ இப்போ ரொம்ப அடிபடுதுங்களே! காலாணாப் பாட்டு புத்தகங்கூட வந்துடுத்தே?'' - என்று கூறுகிறார். 1938 இல் இந்நாவல் வெளியான காலத்தில் இருந்த நடப்பியலை அமீனாவின் இக்கூற்று வெளிப்படுத்துகிறது.

புதிய கண்டுபிடிப்புகள் குறித்தும் தம் செயல்களால் புகழ்பெற்ற அல்லது குற்றச் செயல்களால் பரவலாக அறிமுகமான தனி மனிதர்களை மையமாகக் கொண்டு குறுநூல்கள் வெளியாயின. இவற்றுள் பெரும்பாலானவை கும்மி, சிந்து, தெம்மாங்கு வடிவில் அமைந்தன. கூறும் செய்தியின் அடிப்படையில் இவை பெயர் பெற்றன. கொலை நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவான சிந்து நூல்கள் ''கொலைச் சிந்துகள்'' என்று அழைக்கப்பட்டன. சைவ, வைணவ, இசுலாமிய,

கிருஸ்துவ சமயங்களின் புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வழியில் உள்ள ஊர்களை வரிசையாக கூறி, குறிப்பிட்ட புண்ணியத் தலத்தின் சிறப்பையும் எடுத்துரைக்கும் நூல்கள் ''வழிநடைச் சிந்து'' எனப்பட்டன.

''திருச்சந்தூர் முருகன் வழிநடைச் சிந்து'', ''நாகூர் ஆண்டவர் வழிநடைச் சிந்து'', ''வேளாங்கண்ணி வழிநடைச் சிந்து'' என்ற பெயரில் வழிநடைச் சிந்துகள் வழக்கில் இருந்துள்ளன. பிளேக் நோய் பரவியதையும் அது ஏற்படுத்திய பாதிப்பையும் மையமாக கொண்டு எழுதப்பட்ட சிந்து நூல் ''பிளேக் சிந்து'' என்ற தலைப்பில் வெளியாகி உள்ளது. செம்புலிங்கம் என்ற சமூகம் சார் கொள்ளையரைக் குறித்து சிந்து நூல் ''செம்புலிங்க நாடார் துர் விளையாட்டில் சிந்து'' என்ற தலைப்பைக் கொண்டுள்ளது. இது போன்றே கும்மி நூல்களும், உள்ளடக்கத்தை மையமாகக் கொண்டு பெயர் பெற்றன. குறுநூல்கள் மக்களிடையே பரவலாகச் சென்றதால் குறுநூல்களின் இறுதியில் விளம்பரங்களும் இடம்பெற்றன.

ஆர்பத்நாட் அன்கோ என்ற வெள்ளையர் நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து வைப்புத் தொகை வாங்கி வட்டி கொடுத்து வந்தது. 1906 அக்டோபர் மாதம் இந்நிறுவனம் மூடப்பட்டு விட்டது. இதில் முதலீடு செய்தவர்களுக்குப் பணம் திரும்பக் கிடைக்கவில்லை. இது தொடர்பாக தமது இந்தியா பத்திரிக்கையில் தொடர்ந்து செய்திகளும் கட்டுரைகளும் பாரதி வெளியிட்டுள்ளார். (இளசை மணியன் 975:318322). இந் நிகழ்ச்சி குறித்து வரதராசபிள்ளை என்ற தஞ்சை மாவட்ட நிலக்கிழார் ''ஆர்பத்நாட்டின் விழுகையும் இந்தியர் அழுகையும்'' என்ற தலைப்பில் கும்மிப்பாட்டு நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இக்குறுநூலுக்கு ''ஆர்பத்நாட் கம்பெனியாரைப் பற்றிய ஓர் தமிழ்க் கும்மி (கொம்மி)ப்பாட்டு'' என்ற தலைப்பில் 17-11-1906 இந்திய இதழில் பாரதி எழுதியுள்ளான். (பத்மநாபன் ரா.அ 1982:465). அதில் ''ஆர்பத்நாட் கம்பெனியின் ஸமாசாரங்களை எல்லா ஜனங்களும் அறிந்து கொள்ளுமாறு எளிய தமிழ் நடையில் நல்ல கருத்துக்கள் அமைத்து இவர் பாடியிருப்பது நல்ல உபகாரமான செய்கையென்றே நாம் கருதுகிறேம்'' என்று குறிப்பிட்டுவிட்ட அந்நூலில் இருந்து மூன்று கண்ணிகளை மேற்கோளாகக் காட்டியுள்ளான். அவற்றுள் ஒன்று வருமாறு:

கொக்கை நம்பி நின்ற மீன் போலும்

பூனைக் குட்டியை நம்பும் எலிபோலும்

தக்க மதிப்புறு மிந்தியர், வெள்ளையர்

தம்மை நம்மி ஐயமற்றிருந்தார்.

நாட்டார் பாடல் வடிவில் அமைந்த குறுநூல்கள் அடித்தள மக்களிடம் எளிதில் சென்றடைந்ததால் வெள்ளையர்கள் குறுநூல்களை தங்கள் சுரண்டலுக்குப் பயன்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் குறிப்பாகத் தென்தமிழ்நாட்டின் வறண்ட கிராமப் பகுதிகளிலிருந்து விவசாயத் தொழிலாளர்களையும், நொடிந்துப் போன சிறு நில உடைமையாளர்களையும் ''ஒப்பந்தக் கூலிகள்'' என்ற பெயரில் இலங்கையின் மலையகப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர். தங்களுக்கு முற்றிலும் அந்நியமான காப்பி, தேயிலை போன்றவற்றைப் பயிர் செய்யும பணியில் அவர்கள் ஈடுபட வேண்டி இருந்தது. இவற்றைப் பயிரிடும் முறையை விளக்கி ''கோப்பிக் கிருஷ’க் கும்மி'', ''தேயிலைக் கிருஷ’க் கும்மி'' என்ற குறுநூல்களை வெளியிட்டனர். ஜாபர் என்பவர் ''தேயிலைக் கொய்யும் தெம்மாங்கு'' என்ற தலைப்பில் இருபத்தெட்டுப் பக்கங்கள் கொண்ட குறுநூல் ஒன்றை 1906ல் வெளியிட்டுள்ளார் (சாரல் நாடன் 2000-1112). மலையகத் தொழிலாளர்களிடம் தொழிற்சங்கம் உருவாக்கும் பணியில் ஈடுபட்டவர்களும் குறுநூல்களை உருவாக்கினர். மீனாட்சி அம்மை என்பவர் 1931இல் ''தொழிலாளர் சட்டக் கும்மி'' என்ற பெயரில் குறுநூல் ஒன்றை வெளியிட்டுள்ளார்(மேலது:23)

சமூகத்தில் அறிமுகமான நவீனக் கண்டுபிடிப்புகள் குறித்தும் குறுநுல்கள் உருவாகியுள்ளன. புராணக் கதையின் வாயிலாக மட்டுமே புஷ்பக விமானத்தை அறிந்திருந்த மக்களுக்கு உண்மையான விமானத்தைப் பார்ப்பது வினோதமான ஒன்றுதான்.

பாரடி ஏரோப்பிளேன்!

பறக்குதடி அந்தரத்தில்

காலுமில்லை, தலையுமில்லை

காற்றாய்ப் பறக்குதடி!

ஏவிளா, பேத்தியா,

ஏரோப்பிளேன் பார்த்தியா!

பாட்டன் பூட்டன் நாளையிலே

பறவைக் கப்பல் பார்த்தியா!

என்று நாட்டார் பாடல்கள் (வானமாமலை 1960:154) விமானம் ஏற்படுத்திய வியப்பை வெளிப்படுத்தி நிற்கின்றன. 1932ல் கூட இத்தகைய நிலைதான் இருந்துள்ளது என்பதை வல்லிக் கண்ணன்(2001:34) எழுதியுள்ள பின்வரும் செய்தி உணர்த்துகிறது. ''1932ல் பாளையங்கோட்டைக்கு ஆகாய விமானம் ஒன்று வந்தது. பழங்கால மாடல் விமானம், நகரத்துக்குக் கிழக்கே இருந்த ஹைகிரவுண்ட் எனப் பெயர் பெற்ற திறந்த வெளி மேட்டு நிலத்தில் வந்த நின்றது அது. அதைக் கண்டு களிப்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்றார்கள். தேர்த் திருவிழா பார்க்கப்போவது போல் அண்டை அயல் கிராமங்களில் இருந்தெல்லாம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் திரண்டு வந்து வேடிக்கை பார்த்தார்கள். கூடுகின்ற கூட்டத்தைப் பார்த்து சம்பந்தப்பட்டவர்கள் காசு வசூலிப்பதில் கருத்தாகி விட்டார்கள். விமானம் நின்ற இடத்தில் சதுரத்துக்குள் கம்பி வேலி அமைத்தார்கள். கூட்டம் வெளியே நின்று பார்க்கலாம். உள்ளே போய், விமானத்தை மிக அருகில் நின்றும், தொட்டும் பார்ப்பதற்கு ஒரு ரூபாய் கட்டணம் தர வேண்டும் என்று வசூலித்தார்கள். ஐந்து ரூபாய் கொடுத்தால், விமானத்தில் உள்ளே ஏறிப் பார்த்து, உட்கார்ந்து ரசிக்கலாம். பத்து ரூபாய் கட்டணம் செலுத்துகிறவர்கள் விமான சவாரி செய்யலாம். பாளையங்கோட்டை ஹைகிரவுண்டிலிருந்து மேற்கே பேட்டை வரை வானில் பறந்து திரும்பலாம்''.

இவ்வாறு வியப்புக்குரிய ஒரு பொருளாக விமானம் இருந்த நிலையில் சாதாரண மனிதர்களுக்கு விமானம் குறித்த செய்திகளைக் குறுநூல்கள் கொண்டு சென்றன. 1911ம் ஆண்டில் காலணா விலையில் ''மேல்பறக்கும் மோட்டார்கார் சிந்து'' என்ற தலைப்பில் வெளியான குறுநூல் ''மேல் பறக்கும் மோட்டார் கார்'' என்று விமானத்துக்குப் பெயரிட்டு, விமானத்தில் பயணம் செய்பவர்களைக் கந்தர்வர்களாகக் குறிப்பிடுகிறது.

கந்தர்வர் நின்று கிளம்பினதாகச் சொல்வார்

பின்னால் சித்தர் பறந்தார் என்பார்

எண்ணியே நாமும் யோசித்துப் பார்த்தாலே

இவன்தானே கந்தர்வனென்றெண்ணிடலாம்.

1951ம் ஆண்டில் ''ஆகாயக்கப்பல்'' என்ற பெயரில் காலணா விலையில் வெளியான குறுநூல் ஒன்று கூறும் செய்தி வருமாறு (செட்டியார் ஏ.கே. 1968:89):

ஆகாயக் கப்பலையா - பெரும்

வாகன யந்திரத்தால் பறக்குதையா

நேராக வெகு உயரம் - அதில்

சீராகவே யதிக மனிதருடன்

சுலபமாய்ச் சென்றிடுமே - அதில்

சுக்கான்களும் தள்ளும் யந்திரங்களும்

திக்குகளில் தீவிரமாய் செல்ல

அதிசயமிது பேரதிசயமே

கவனித்துக் கேளுமைய்யா - இந்த

அவனியி லிதற்கிணை யேது முண்டோ

ஆனாலும் பயமுண்டு - ஏனெனில்

காற்றுகளும் பெரும் புயல்களுமே

மாற்றிடும் தலைகீழாய் - சிலவேளை

மரங்களிற் போயது மோதிக் கொள்ளும்

தீப்பற்றி எரிந்திடுமே - அக்கப்பல்

லட்சாதி லட்ச ரூபாய் விலையாகும்.

விமானம் மட்டுமின்றி ரயிலும் கூட மக்கள் கவிஞர்களை ஈர்த்துள்ளது. ராயபுரம் ரயில் நிலையம் அமைக்கப்பட்டதை ''ராயபுரம் ரெயில்வே ஸ்டேசன் கடைக்கால் கும்மி'' என்ற குறுநூல் குறிப்பிடுகிறது. இந்நூல் அச்சான காலம் தெரியவில்லை. ஏ.கே.செட்டியார் (1968:41.42) தமது நூல் ஒன்றில் இக் கும்மியை வெளியிட்டுள்ளார். பெரும்பாலும் ராயபுரம் ரெயில் நிலையம் உருவாகி ரெயில் போக்குவரத்தைத் தொடங்கியபொழுது இது வெளிவந்திருக்கலாம்.

''பொட்டி வண்டி சாமான் வண்டி பின்னாலே பூட்டி

புகைபோட்டு சாவி கொண்டு ஆள் முடுக்க

திகைத் திடும் படி சத்தம் கீச்சென்றெடுமுக்க

போகுது பார் ரயில் போகுது பார்

வேகமாய்ப் புகைந்து சீறியே போகுது பார்

அங்கங்கே ஸ்டேஷன் தோறும் வண்டி நிறுத்தி

தங்கிய கன சாமானை வண்டியிலேற்றி

ராயபுரத்தில் ரயில் புறப்பட்டது''

என்ற வரிகள் இக்கருத்திற்கு சான்றாகின்றன.

1910ம் ஆண்டில் ''தென்னிந்தியா ரெயில்வே என்னும் கர்னாடகப் புகைவண்டிச் சிந்து'' என்ற குறுநூல் வெளியாகியுள்ளது.

தென்னிந்தியா ரெயில் பாரடி - பெண்ணேயிது

தெற்கே போகும் தேரடி

என்று தொடங்கும் இக்குறுநூல்,

டிக்கட்டுகள் வாங்கி இக்கட்டில்லாமலே

பக்குவமாகவே தக்கபடி போவோம்

என்று அறிவுரை கூறி, சைதாப்பேட்டை தொடங்கி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி வரையிலான ரெயில் நிலையங்களின் பெயர்களைப் பட்டியலிடுகிறது. சில ஊர்களின் சிறப்பையும் குறிப்பிடுகிறது. வழிநடைச் சிந்தின் தாக்கமாக இதைக் குறிப்பிடலாம்.

ரெயிலைக் குறித்து மட்டுமின்றி அதில் பணிபுரியும் ஊழியர்களின் வேலை நிறுத்தம் குறித்தும் குறுநூல்கள் உருவாகியுள்ளன. 1909 ம் ஆண்டில் வெள்ளையர்களுக்கு உரிமையான சதர்ன் மராட்டா ரயில்வேயில் வேலை நிறுத்தம் நிகழ்ந்தது. இவ்வேலை நிறுத்தம் குறித்து ''மட்ராஸ் சதர்ன் மராட்டா ரயில்வே கலகச் சிந்து'' என்ற பெயரில் சூளை முனிசாமி முதலியார் என்பவர் இரண்டு பாகங்களாக 1909ம் ஆண்டில் குறுநூல் வெளியிட்டுள்ளார். அதில் முதல் பாகம் மட்டுமே பார்வைக்குக் கிட்டியது. அதிகார வர்க்கத்தின் மொழியில், வேலை நிறுத்தத்தைக் கலகம் என்று அழைத்தாலும் வேலை நிறுத்தத்தின் விளைவுகள் நன்றாக இந்நூலில் பதிவாகியுள்ளன.

உலகமதில் பேறுபெற்ற உற்றதொரு மட்ராஸ்ரயில் கலகம் செய்த சேதி சொல்வேன். கண்மணியே கேளும் பெண்ணே

என்று தொடங்குகிறது இந்நூல். வேலை நிறுத்தம் குறித்தும் அதன் பாதிப்புகள் குறித்தும் கூறும் செய்திகளின் ஒரு பகுதி வருமாறு:

அரக்கோணம் ஜோலார்பேட்டை அர்த்தமுள்ள ராயபுரம்

பொற்கொடியே வேலைக்காரர் அற்புதமாய்

நின்றார் தினம்

பாசெஞ்சரின் வண்டியும் போச்சு

படுத்து வண்டிகள் உறங்கலாச்சு

ஊரும் போக வந்த செனங்கள் உத்தமர் டேசனில்

நிற்கவுமாச்சு

அரக்கோணம் தனில் வசிக்கும்

அன்புடைய பயர்மென் டிரைவர்

முப்பத்தேழு வேலைக்காரர்

மொய்குழலே நின்றுவிட்டார்

வண்டிக்காரர் பிழைப்புந்தான் போச்சு

சால்ட் கொட்டாய் கடைகளும் பாழாச்சு

உண்டைப் பயிரெல்லாம் ஊகிக்

கடைகளில் தூசி அடைந்ததைப் பாருங்கடி

1913ம் ஆண்டில் மீண்டும் ஒரு வேலைநிறுத்தம் நடந்தது. இது குறித்தும் ''மட்ராஸ் ரெயில் கலகம்'' என்ற பெயரில் சூளை முனிசாமி முதலியார் குறுநூல் ஒன்றை 1913ல் வெளியிட்டுள்ளார். இந்நூலிலும் வேலை நிறுத்தத்தின் விளைவுகள் விரிவாக இடம் பெற்றுள்ளன.

இந்நூலிலிருந்து சில பகுதிகள் வருமாறு,

டிக்கட் கலெக்டர்கள் சேனபேர் நின்றிட்டார்

செழிப்பான கார்டுகள் முடுக்காகப் போய்விட்டார்.

டேசன் தோரும் நாய் நரியோடுது

சென்று பார்த்தால் சாமான் அங்கங்கே கிடக்குது

மோஷன் செய்யாமலே ரெயில்யிஞ்சின் தூங்குது

மேலான சாமான்கள் தூசிபடியுது.

0 0 0

சென்றலில் டேஷன் பாருங்கடி யிங்கே

சேரும் ஜெனக் கூட்டம் காணோமடி

தங்கி நின்றுப் பார்த்தால் நாய்களு மோடியே

தாவித் திரியுது பாருங்கடி

ஒர்க்ஷாப் பென்னும் ரெயிலின் ஸ்டோரது

உள்ளதோர் வேலைக்காரரத்தனை பேர்

அத்தனை பேரும் நின்றுவிட்டு ஸ்டோர்

நத்தியே மூடிடுகுறார் பாருங்கடி

0 0 0

உருளைக் கிழங்கு கருப்பாச்சி யிங்கே

உற்றதோர் வெங்காயம் வேம்பாச்சி

விபத்துக்களும் குறுநூல்களில் இடம் பெற்றன. 1909 ஜூன் 19ம் நாள் அத்திப்பேட்டை என்னும் இடத்தில் கல்கத்தா மெயில் விபத்துக்குள்ளாகியது. இந்நிகழ்ச்சி குறித்து ''மதராஸ் சதர்ன் மராட்டா கல்கத்தா மெயில் அத்திப்பேட்டில் விழுந்த ரெணகளச் சிந்து'' என்ற பெயரில் கோவிந்தசாமி நாயகர் என்பவர் எழுதிய நூல் 1909ம் ஆண்டில் வெளியாகியுள்ளது.

1898ல் வெளியான ''பத்மாவதி சரித்திரம்'' நாவலில் திருநெல்வேலி நகர் நாடகக் கொட்டகை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு பலர் மடிந்த நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது இந்நிகழ்ச்சி குறித்து ''திருநெல்வேலி கொட்டாய் சிந்து'' என்ற தலைப்பில் குறுநூல் ஒன்று வெளியாகியுள்ளது. தீ விபத்திற்கு ஆளான அரங்கின் பெயர் ''சாதுசங்க நடன சபை'' என்று இந்நூல் குறிப்பிடுகிறது. தாரண வருடத்தில் தமிழ்நாட்டில் வெள்ளத்தினால் பெரும்பாதிப்பு நகிழ்ந்தது இவ்விரு நிகழ்வுகள் குறித்து சிறுமணவூர் முனிசாமி முதலியார் எழுதிய சிந்து ஒரே நூலாக 1906ம் ஆண்டில் வெளியாகியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் எட்வார்டு துரை என்பவரின் பங்களா 1907 செப்டம்பர் 19ம்நாள் வியாழக்கிழமையன்று மூணேகால் மணிக்கு இடிந்து விழுந்தது. கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். ''நுங்கம்பாக்கம் மாஸ்டர் எட்வார்ட் துரை பங்களா இடிந்திறந்த சிந்து'' என்ற பெயரில் சூளை முனிசாமி முதலியார் 1907ம் ஆண்டில் வெளியிட்டுள்ள குறுநூல் இத்துயரச் செய்தியைக் கூறுகிறது. இடிபாட்டில் சிக்கிக் காயமடைந்த தொழிலாளர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதையும் அவ்வாறு போனவர்களில் பலர் இறந்து போனதையும் இச்சிந்து பின்வருமாறு குறிப்பிடுகிறது.

மாலை நாலுக்கெல்லாம்

மாட்டுவண்டியில் ஏத்தி

மட்ராஸ் யெழும்பூரின்

டிஸ்பென்சரி தனிலோட்டி

மோவி டாக்டர் அவர்

நாடிப் பரீட்சை காட்டி

அடிப்பட்ட நாயக்காரர்

ஆஸ்பத்திரி யவர் சேர

அழுது குடிகளெல்லாம்

பின்னாலே போக

பொழுது விடியுமட்டும்

கூட்டம் மிக சேர

மறுநாள டிஸ்பென்சரி

பிணமாய் நிறைந்து போக

விட்டிலிறந்தாலும் பார்த்தழுவார் - இவர்

பேண சடங்குகள் தான் புரிவார்

நாட்டமில்லாமலே ஆஸ்பத்திரி கொண்டு போய்

போட்டழுகிறார் பாருங்கடி

இத்துயர நிகழ்ச்சிகளைக் கூறுவதுடன் மட்டுமின்றி கட்டிடம் கட்டுவோர்க்கு அறிவுரையும் கூறுகிறது.

மெத்தையிடிந்ததைப் பாருங்கடி - மணல்

சுண்ணாம்பு கல்லுடன் சேர்ந்தடி

பத்தியே தூசி பறக்குதடி - புது

கட்டடமா கூறுங்கடி

கட்டிட வேலையில் யோசிக்க வேணும் - அடி

கடகால் பலமாகப் போடவேணும்

முற்றிலும் நாமுமே பார்க்கவேணும்

வீட்டில் மோசமில்லாமலே வாழ வேணும்

காண்ட்டிராக்டர் மூலமாய் கட்டவும் கூடாது

காசு பணத்தையும் பார்க் கொண்ணாது

நின்று சிலநாளாய் தான் முடித்தால்

நேர்த்தி யென்றே சொல்லிப் பாடுங்கடி

இனி இக்குறுநூல்கள் மக்களை எவ்வாறு சென்றடைந்தன என்று காண்போம். ஒரு காடா விளக்கைக் கொளுத்தி, அதன் ஒளியில் விற்பனை நிகழும் இரவுக் கடைகளை, ''குஜிலிக் கடை'' என்று, அன்றைய சென்னை நகரில் அழைத்தனர். குறுநூல்களை விற்பதற்கென்று பாதையோர, குஜிலிக்கடைகள் இருந்தன. இதன் காரணமாகவே இங்கு விற்பனையாகும் நூல்களை, ''குஜிலிக் கடைப்பதிப்பு'' என்று குறிப்பிட்டனர். குஜிலி கடைகளில் மட்டுமின்றி மக்கள் கூடும் சந்தைகளிலும் திருவிழாக்களிலும் குறுநூல்களை விற்றனர். இவற்றை விற்பவர்கள் தாம் விற்கும் நூலை உரக்கப்பாடிக் கொண்டே விற்கும் பழக்கமும் இருந்தது.

உ.வே.சாமிநாதய்யர் (1991:23,24)

''புதுக்கோட்டையில் சில வீதிகள் கூடுகிற சந்தியில், முன்பு ஐந்து லாந்தற் கம்பமொன்றும் அதைச் சார்ந்த மேடையொன்றும் இருந்தன. அவ்வூரில் ஒரு முகம்மதியார் காலணா, அரையணா விலையுள்ள பாட்டுப் புத்தகங்களைப் பாடிக்கொண்டே விற்பனை செய்து வந்தார். அவரைச் சுற்றிப் பலர் கூடிப் பாட்டுக் கேட்பார்கள், அவர்களிற் சிலர் புத்தகத்தையும் விலைக்கு வாங்கிக் கொள்வார்கள்''.

என்று எழுதி உள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கது. நெல்லை மாவட்டம் திருவைகுண்டம் நகரில் 1996ம் ஆண்டுவரை இஸ்லாமிய சமயம் சார்ந்த முதியவர் ஒருவர் தாலாட்டு, ஒப்பாரிப் பாடல்களைக் குறுநூல்களாக அச்சிட்டு, அந்நூல்களில் உள்ள பாடல்களை உரக்கப் பாடி விற்பனை செய்வதைத் தொழிலாகக் கொண்டிருந்தார். அவ்வட்டாரத்திலுள்ள முக்கிய சைவ வைணவக் கோயில் திருவிழாக்களுக்கும், நாட்டார் தெய்வங்களுக்கு நடைபெறும் கொடை விழாக்களுக்கும் சென்று, மேற்கூறிய நூல்களை விற்பனை செய்வதும் உண்டு. மேலும் கிராமங்களுக்குச் சென்று இப்பாடல்களை ஒரு வீட்டின் தொழு அல்லது வீட்டின் திண்ணையிலிருந்து பாடுவார். பெண்களும், குழந்தைகளும் அவரைச் சுற்றி நின்று அதைக் கேட்டு மகிழ்வார்கள். பணத்திற்குப் பதிலாக அரிசி, உளுந்து, மிளகாய் வற்றல், வெங்காயம் ஆகியனவற்றைக் கொடுப்பதும் உண்டு. இவ்வாறு பாடல்களை உரக்கப்பாடி விற்பனை செய்யும் தொழில் முறைக் கலைஞர்களை மனதில் கொண்டு பின்வரும் வரிகள் உருவாக்கப்பட்டன.

ஆச்சரியமான பாட்டு அண்ணமாரே நீங்க கேட்டு

சோப்புல கையப் போட்டு சொகுசா காச எடுத்து நீட்டு

வயித்தெரிச்சப் பாட்டு காச வலது கையால் நீட்டு

(இரவிச்சந்திரன் 2001:98)

திருநெல்வேலி ஜில்லாவாம் தெற்கே வெகுதூரமாம்

அருமையான தாமிரபரணி ஆறு ஓடும் ஊரைச் சொன்னேன்

கன்னிக்குலைக்கேசு விலை சொன்னேன் ஆறுகாசு

(மருததுரை 1991:64)

விற்பனைப் பொருளாகக் குறுநூல்கள் விளங்கியதால் ஒருவர் எழுதிய குறுநூலை, எழுதியவரின் பெயரிலோ, பெயரை மாற்றித் தன்பெயரிலோ திருட்டுத் தனமாக அச்சிடும் வழக்கம் உருவாகியது. அச்சகத்தார் சிலரும், தொழில் முறைக் கலைஞர்கள், புத்தக விற்பனையார்கள் சிலரும் இத்திருட்டு வேலையில் ஈடுபட்டனர். இதைத் தவிர்க்கும் வழிமுறையாக, நூல்களின் தொடக்கத்திலோ இறுதியிலோ இவ்வாறு செய்ய வேண்டாம் என்ற வேண்டுகோளை அச்சிட்டார்கள் எடுத்துக்காட்டாகச் சில வேண்டுகோள்களைக் காண்போம்.

''இதனால் சகலமான கனதனவான்களுக்கும் அச்சாபீஸ் தலைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இச்சிறிய புத்தகத்தைத் தயவுசெய்து யாரும் அச்சிடாமல் இருக்கும்படி மிகவும் வந்தனத்துடன் கேட்டுக் கொள்கிறேன்'' (மதராஸ் சதர்ன் மராட்டா கல்கத்தா மெயில் அத்திப் பேட்டில் விழுந்த ரெணகளச் சிந்து 1909).

''இச்சிறிய புத்தகத்தை அச்சாபீஸ் தலைவரும் புத்தக வியாபாரிகளும் அச்சிடக் கவனிக்க வேண்டாம். அனைவருக்கும் யான் ஒரு சிறு குழந்தை எனக் கவனிக்கவும். இப்படிக்கு சூளை முனிசாமி முதலியார்'' (மட்ராஸ் ரயில் கலகம். 1913).

இத்தகைய பணிவான வேண்டுகோள்கள் மட்டுமின்றிக் கடுமையான பழிச் சொற்களுடன் கூடிய பாடல்களும் உரைகளும் சில நூல்களில் இடம் பெற்றுள்ளதை மருததுரை (1991:51) எடுத்துக்காட்டியுள்ளது வருமாறு.

''சித்தையன் கொலைதனையே திருமலை சாமிதாசன்

இத்தலத்தோர் காண எழுதினேன் சிந்தாக

உத்திரவின்றியிதை பேத்தெழுதி அச்சிட்டோன்

கூத்திமகனெனவே கூறலாம் அன்னவனை'' (சிந்தையன் கொலைச் சிந்து 1934)

''இப்புஸ்தகத்தை வேறு அச்சிடுவோரும்

அச்சிடக் கொடுப்போரும் மாற்றி எழுதி அச்சிடு

வோரும் எனது புதல்வனென மதிப்பதோடு

போத்திரி(பன்றி) உண்ணும் ஈனராகவும் கருதப்பட்டு

கையாலாகதவே / ஜி (அலி) என்றும் எண்ணப்படும்'' (ஆங்காரப்படு கொலை அலங்காரச் சிந்து 1925)

இவையெல்லாம் கல்வெட்டுக் காப்புரைகளை நமக்கு நினைவூட்டுகின்றன.

நாட்டு விடுதலைக்கு முந்திய காலத்து இலக்கியவாதிகள், ஒரு நூல் மோசமானது என்று குறிப்பிட ''குஜிலிக்கடைப் பதிப்பு'' என்ற சொல்லைப் பயன்படுத்தினர். இலக்கண வழுக்களும் எழுத்துப் பிழைகளும் மலிந்து பெரும்பாலும் தரங்குறைந்த தாளில் மிகச் சிறிய அளவில் (14செமீ-11செமீ) குறைந்த பக்கங்களுடன் அச்சிடப்பட்டதை மட்டுமே நோக்கி இவ்வாறு கூறினார்கள் போலும்! தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர்களும் குறுநூல்கள் குறித்து எதுவும் கூறாது விட்டுவிட்டார்கள். முறையாக இலக்கியக் கல்வி கற்கும் கற்ற, மக்கட் பிரிவினர்களுக்காக குஜிலிக் கடைப் பதிப்புகள் உருவாகவில்லை. எழுத்தறிவு பெறாத, அரைகுறையாக எழுத்தறிவு பெற்ற அடித்தள மக்களை மனதில் கொண்டே இவை உருவாயின.

இந்நூல்களை உருவாக்கியவர்களில் பெரும்பாலோர் நாட்டார் இலக்கிய மரபையே பின்பற்றி உள்ளனர். தாம் வாழும் சமுதாயத்தில் நிகழும் மாறுதல்களையும், நிகழ்வுகளையும் அறிய விழையும் அடித்தள மக்களின் பண்பாட்டு வேட்கையை செவ்வியல் இலக்கியவாதிகளும், நவீன இலக்கியவாதிகளும் பொருட்படுத்தவில்லை. இத்தகைய சூழலில் குறுநூல்களை எழுதியோரும், அவற்றை அச்சிட்டோரும், விற்பனை செய்தோரும் அடித்தள மக்களின் மொழியில் சமூக நிகழ்வுகளை அவர்களிடமே கொண்டு சென்றனர்.

இந்த வகையில் செய்தித்தாள்களின் பணியைக் குறுநூல்கள் செய்துள்ளன. ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நடந்த இடம், நாள், நேரம் எனத் துல்லியமாகக் கூறும் முறை குறுநூல்களில் இடம் பெற்றுள்ளது, ஆராயந்து பார்த்தால் தமிழ் மக்களிடையே பரவலாக செல்வாக்குப் பெற்றுள்ள தினத்தந்தி நாளேட்டில் குறுநூல்களின் தாக்கம் இருப்பதைக் காணலாம். கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை போன்ற குற்றச் செயல்களும் விபத்துக்களும், இயற்கைச் சீற்றங்களும் குறுநுல்களின் கருப்பொருளாக இருந்தமையால் இந்நூல்களுக்குச் செய்தி மதிப்புக் கிட்டியது. புராண இதிகாசச் செய்திகளை மையமாகக் கொண்டு பெரியெழுத்து நூல்கள் உருவாகின. இதனால் சமூக, வரலாற்று வணம் என்ற தகுது குறுநூல்களுக்குக் கிட்டியுள்ளது.

செய்தி ஊடகங்களின் வளர்ச்சி, இன்று பெரிய அளவில் இருந்தாலும் குறுநூல்களின் தேவை முற்றிலும் மறைந்து விடவில்லை. இவ்வுண்மையை உணர்ந்து கொண்டதால் தமிழ்நாட்டில் செயல்பட்ட அறிவொளி இயக்கத்தினர் குறுநூல்கள் தயாரிப்பில் புதுமை படைத்துள்ளனர். வரலாறு, புவியியல், அறிவியல், மனித உரிமை போன்ற துறை சார்ந்த நூல்களை மட்டுமின்றி, எர்னெட்ஸ் ஹெமிங்வே, மாப்பசான், விக்டர் ஹ’யூகோ, ஆண்டன் செஹாவ், டால்ஸ்டாய் போன்ற உலக இலக்கிய மேதைகளின் படைப்புக்களையும் மிக எளிய உரைநடையில் குறுநூல்களாக வெளியிட்டுள்ளனர். புதிதாக வாசிக்கக் கற்றுக் கொண்டோருக்கான இக்குறுநூல் வரிசை பாராட்டுதலுக்குரிய முயற்சி. இது தொடர முடியாமல் போனது தமிழுக்கு இழப்புதான்.

இம்முயற்சியில் ஆர்வமுடன் ஈடுபட்ட பேராசிரியர் மாடசாமி, எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரின் பணியும் பாராட்டுதலுக்குரியது. உலகமயமாக்கல், மத அடிப்படைவாதம், சுற்றுப்புறச் சூழல் சீர்குழைவு, தலித்துகள், மதச் சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோருக்கு எதிரான வன்முறைகள் அகியன நாம் வாழும் காலத்தின் முக்கியப் பிரச்சினைகள். இக்கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தில் எளிய நடையிலான குறுநூல்களுக்கும் பங்குண்டு. மனிதநேயம் கொண்டோரும், சிறுமை கண்டு பொங்குவோறும் இப்பணியில் ஈடுபடுவது அவசியம். இது நம் காலத்திய வரலாற்றுக் கடமை.

(இக்கட்டுரை அடித்தள மக்கள் வரலாறு என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளது)

 

கருத்துகள் இல்லை: