13/03/2011

ஹைக்கூ கவிதைகளில் சமுதாயம் - த. ராஜ்குமார்

உலகில் நாம் காணுகின்ற காட்சிகளைக் கவிஞனின் கவிதை உள்ளமானது புதிய கோணங்களில், புதிய முறைகளில் காண்கிறது. அத்தகைய வேறுபட்ட பார்வையினால் தான் கவிஞனின் உள்ளத்தில் கவிதை வெளிப்படுகின்றது. அந்த அனுபவத்தினைப் பகிர்ந்து கொள்ள அந்த அனுபவத்திற்கு உருவங்கொடுப்பதே கவிதையாகின்றது. தமிழில் இன்று மிகுதியாகப் பேசப்படும் புதுக்கவிதை வடிவம் ஹைக்கூ எனலாம்.

ஹைக்கூ:-

ஹைக்கூ என்பது ஜப்பானியக் கவிதை வகையினுள் ஒன்றாகும். ஹைக்கூ என்பதை ஐக்கூ என்று தமிழில் மாற்றி அதற்குச் ''சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்'' என்ற பொருளைத் தருகிறார் கவிஞர் அமுதபாரதி. மேலும் ஐக்கூ என்பதற்கு ஐ-கடுகு, கூ-பூமி, ஐ+கூ=ஐக்கூ என்று விளக்கம் தருகிறார். அதாவது கடுகளவுள்ள பாடல் நிலமளவுள்ள பொருளைத் தருகிறது என்பதால் ஐக்கூ எனலாம் என்னும் இவரது கருத்து பொருத்தமுடையதே. அவ்வகையில் சமுதாய நிகழ்வுகள் ஹைக்கூ கவிதைகளில் வெளிப்படும் பாங்கினைக் காண்போம்.

வரதட்சனை:-

பெண்ணுக்கு, பெற்றோர் கொடுக்கும் பொருட்களை இன்று கட்டாயமாகக் கேட்டுப் பெறுகின்ற நிலை வந்துள்ளது. அது மட்டுமல்லாது மாப்பிள்ளையின் படிப்பு, வேலை, சொத்து போன்றவற்றிற்கு ஏற்றவாறு விலைபேசும் நிலை வருந்தத்தக்கதாகும்.

''அம்மி மிதித்தவளை / திரும்பி மிதித்தார்கள்

கிரைண்டர் வராததால்'' (ந.முத்து, எடை குறைவாய்)

''துளித்துளியாய்ச் சேமிப்பு / சேர்ந்தது பெருந்தொகை

சீச்சீ.... வரதட்சணைக் கொள்கை'' (அமுதபாரதி, ஐக்கூ அந்தாதி)

மேற்கண்ட கவிதை வரிகள் வரதட்சணைக் கொடுமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. இதனால் பல பெண்களின் வாழ்க்கை சிக்கலுக்குள்ளாவதை இன்றும் காணமுடிகிறது.

விதவை நிலை:-

சமுதாயத்தில் இன்றளவும் விதவைப் பெண்கள் ஒதுக்கி வைக்கப்படுகின்ற நிலையைக் காணமுடிகின்றது. அவர்களை வேதனைப்படுத்தி வேடிக்கை பார்க்கின்ற கூட்டம் இன்னும் இருந்து கொண்டுதான் உள்ளது.

''பூக்களால் / அலங்கரிக்கப்பட்டது

விதவையின் பிணம்'' (ந. முத்து எடை குறைவாய்)

வாழ்கின்ற காலத்தில் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் வாட்டி வதைக்கும் சமூகம், இறந்த பின்பு செய்கின்ற இத்தகைய செயல்களால் எவ்விதப் பயனும் இல்லை என்பதை அறியமுடிகின்றது.

உறவுநிலை:-

இன்றைய நாகரிக உலகத்தில் மனித உறவுகள் சிதைந்து சீரழிந்து வருகின்றன. ஒரு காலத்தில் தகவல் தொடர்பு சாதனங்களால் மிகுந்த பயன் இருந்து வந்தது. ஆனால் இன்று அவை மனிதர்களின் பண்புகளைப் பாழடையச் செய்து வருகின்றன.

''டிவி பார்க்கும் நேரம் / விருந்தினர் வருகை விசாரிக்க

வராமலா போகும் விளம்பரம்'' / (ந. முத்து, எடை குறைவாய்)

விருந்தினரை வரவேற்று உபசரிக்கும் விருந்தோம்பலில் சிறந்தவர்கள் என்ற சிறப்பு சீரழிந்து வருகின்ற நிலையைச் சுட்டுகின்றது. அன்டை அயலாருடன் நல்லதொரு உறவு வைத்து இன்ப துன்பங்களில் கலந்து கொள்ளும் பொழுது உறவுகள் மேம்படும். அதை விடுத்து அவர்களுக்கு ஏற்படும் துன்பங்களை எண்ணி மகிழ்வது சிறப்பன்று.

''இரட்டிப்பு மகிழ்ச்சி / இப்படியே இருக்கட்டும்

பக்கத்து வீட்டுக்காரன் துக்கம்''/ (சென்னிமலை தண்டபாணி, கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சம் சென்ரியு)

மேற்கண்ட வரிகளின் மூலம் மக்களின் மனநிலை மாறுபட்டு வருகின்றதையும் உறவுகள் சிதையும் நிலையும் அறியமுடிகின்றது.

கல்வி நிலை:-

சந்தையில் தரம் பிரித்து விற்கும் பொருட்களைப் போன்று இன்றைய கல்வி மாறிவிட்டது. மேற்படிப்புக்களைப் படிக்க பணம் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. இன்று தரமான கல்வி என்ற பெயரில் பிஞ்சுகளின் நெஞ்சைப் பதம் பார்த்து, வருமானத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கும் கல்வி முறையைச் சாடும் விதமாக

''புல்லாங் குழலுக்குள்/

புழுதிக் காற்றுநர்சரி பாடம்'' (ந.முத்து, எடை குறைவாய்)

''அறிவின் துளிர் / சுமக்க முடியவில்லை

புத்தகச் சுமை'' / (சென்னிமலை தண்டபாணி, கொஞ்சம் ஹைக்கூ கொஞ்சம் சென்ரியு)

''வலிக்கிறது நெஞ்சம் / எத்தனை புத்தகங்கள்

சுமக்கும் குழந்தை முதுகு'' (அமுத பாரதி, ஐக்கூ அந்தாதி)

மேற்கண்ட கவிதை வரிகள் குழந்தைகளின் நிலையைக் கூறுவதோடு, இன்றைய கல்வி முறையையும் சாடுவதாக அமைந்துள்ளது.

அரசியல்:-

அன்றைய ஆட்சி முறைகள் மக்களை நல்வழிப்படுத்தி நல்வாழ்வு வாழ வழி செய்தது. ஆனால் இன்றோ அது தலை கீழாகி விட்டது. கட்சி என்ற பெயரில் மக்களுக்குள் சாதிப்பிரிவினைகளை ஏற்படுத்தி சமுதாயமும் அரசியலும் சாக்கடையாக மாறியுள்ளன.

''சன்னலைத் திறந்தேன் / செய்தித்தாள்

சட்டசபை அசிங்கம்'' / (அமுத பாரதி, ஐக்கூ அந்தாதி)

மக்களின் குறைகளைப் போக்க நல்ல திட்டங்களை நிறைவேற்றி நாட்டு வளத்தைப் பெருக்க வேண்டிய அரசியல் வாதிகள் தங்களின் போட்டி பொறாமைகளை சட்டசபையில் அரங்கேற்றி வருவது பற்றி இக்கவிதை குறிப்பிடுகின்றது.

''புதுக் கட்சி தொடக்கம் / ஜாக்கிரதை

கோவணம்'' (ந.முத்து, எடைகுறைவாய்)

கட்சித் தலைவர்கள் தங்களின் ஆக்கப்பூர்வச் செயல்களால் மக்களின் தேவையை நிறைவேற்றி அவர்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டுமே தவிர கட்சி, சேவை என்ற பெயரில் அவர்களை வேதனைக்குள்ளாக்குவது சுட்டப்படுகின்றது.

ஊழல்:-

நியாய விலைக் கடை என்ற பெயரில் மக்களின் நலனைச் சுரண்டிக் கொண்டிருக்கும் சிலரைப் பற்றிக் கீழ்க்காணும் கவிதை குறிப்பிடுகின்றது.

''ரேசன் கடைக்காரருக்கு / குழந்தை பிறந்தது / எடை குறைவாய்'' (ந. முத்து, எடை குறைவாய்)

விலைவாசி:-

நாள்தோறும் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கிறதே தவிர குறைந்த பாடில்லை. இன்றைய நடைமுறை எதார்த்தத்தை கீழ்க்காணும் கவிதை மிகவும் கடுமையாக வெளிப்படுத்தப்படுகின்றது.

''விலை வாசி குறைந்து விட்டதாம்/சிரித்தது/மலவாய்'' (ந.முத்து, எடை குறைவாய்)

அறிவியல்:-

அறிவியல் வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே உள்ளது. புதிய புதிய கண்டுபிடிப்புகள் புதுமையான ஆய்வுகள் என்று அறிவியல் உலகம் விரிந்து கொண்டே செல்கின்றது. ஆனால் இவையெல்லாம் ஆக்கப்பூர்வமாக இல்லாமல் அழிவைத் தருகின்றன என்பது வேதனைக்குரியது.

''ஜெட்டுக்குள் பறந்தான் / சுட்டு சுட்டு வீழ்த்தினான்

சீச்சீ ..... அமைதிக்காம்'' (அமுதபாரதி, ஐக்கூ அந்தாதி)

அமைதிக்கான முயற்சி என்று மனிதர்களை கொன்று குவிப்பதால் என்ன பயன். எனவே அறிவியல் வளர்ச்சி ஒரு பக்கம் ஆக்கத்தை ஏற்படுத்தினாலும் மறுபக்கம் அழிவைத் தேடிக் கொடுக்கிறது எனலாம்.

சுற்றுச்சூழல்:-

உலகம் முழுவதும் இன்றைய மிக முக்கியத் தேவையாக இருப்பது சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சீர்கேட்டினால் ஏற்படும் விளைவுகளை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். இருந்த போதிலும் எதிர்கால வாழ்வை எண்ணிப் பார்க்காமல் செயல்படுவது அழிவிற்கான பாதையை அமைப்பது போல் ஆகின்றது.

''அலறியது காற்று / ஒளிய இடமில்லை

வாகனப்புகை'' (சென்னிமலை தண்டபாணி, கொஞ்சம் ஹைக்கூ கொஞ்சம் சென்ரியு)

வாகனங்களின் பெருக்கத்தாலும், எரிபொருட்களின் கலப்படத்தாலும் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை காற்றை மாசுபடுத்துகிறது. இதனால் சுகாதாரக் கேடு உண்டாகிறது. மேற்கண்ட கவிதை வரிகள் இனி தூய்மையான காற்றை விலை கொடுத்தும் வாங்க முடியாது என்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

சோளக் கொல்லை பொம்மை / காணக்கிடைக்கவில்லை

கான்கிரீட் கட்டிடங்கள்'' (சென்னிமலை தண்டபாணி, கொஞ்சம் ஹைக்கூ கொஞ்சம் சென்ரியு)

இயற்கையின் மாறுபாட்டால் விவசாயம் தோற்றுப் போனதால் விளை நிலங்களெல்லாம் வீட்டு மனைகளாக மாறி நிற்கின்றன. அடுக்கு மாடிக் கட்டிடங்களைக் கட்டி நிலத்தைப் பாதிப்புக்குள்ளாக்குகின்றனர். மழையின் பாற்றாக்குறை, வறட்சி, நீர் நிலத்தில் புகமுடியாத படி கட்டிடங்கள் ஆகியவற்றால் அழிவுகள் ஏற்படலாம். இதனைத் தடுக்க முயற்சி மேற்கொள்ளாவிடில் சுற்றுச்சூழல் முற்றிலும் பாதிப்படையும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறாக நீண்ட நெடிய கவிதை வரிகள் விளக்க வேண்டிய கருத்துக்களை சில வரிகளில் விளங்க வைக்கும் தன்மை கொண்ட ஹைக்கூ கவிதைகளின் மூலம் சமுதாய நிகழ்வுகள் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதை அறிய முடிகின்றது.

நன்றி: தற்காலத் தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள்

 

கருத்துகள் இல்லை: