28/03/2011

கூத்து வழியாகக் கண்ணகி குறியீடு - பண்பாட்டுப் பரவலாக்கம் - கு.சிவப்பிரகாசம்

மக்களிடையே நிகழ்த்தப்பெறும், நிகழ்ந்து வரும் கலை, நம்பிக்கை, விளையாட்டு, கதை, பாடல், வழிபாடு என்று பல்வேறுபட்ட தளங்களைத் தன்னகத்துள் கொண்டு விரிந்த பரப்பைக் கொண்டு நாட்டுப்புறவியல் இயங்கி வருகின்றது. இதற்கு அடிப்படை மக்கள், மக்களால் நிகழ்த்தப்பெறும் பண்பாட்டுக் கூறுகளே நாட்டார் வழக்காற்றின் பாடுபொருளாகின்றன. வழங்கியும், வழக்கில் உள்ள கருதுபொருள்களை வெவ்வேறு வடிவங்களையும் கருத்தாக்கங்களையும் கொண்டமைவது நாட்டார் வழக்காற்றியலின் மைய நோக்கமாகும்.

நாட்டுப்புறவியல் என்பது உயிரோடுள்ள புதை வடிவம். அது மரணமடைய மறுப்பது, மனித சமுதாயத்தின் லட்சக்கணக்கான ஆண்டு வாழ்வியல் அனுபவங்களின் பயன்பாட்டின் அறிவியலின் படிவங்கள் என்று கூறலாம். (சு.சண்முகசுந்தரம், நாட்டுப்புறவியல் பக்.5-6)

நாட்டார் வழக்காறுகள் இடம்விட்டு இடம் செல்லும் இயல்பின. அதனால் பல்வேறு வடிவங்களாகத் திரிபடைகின்றன. இவ்வாறு இவை திரிபடையக் காரணம் அவை வாய்மொழி வழியாக வெளிப்படுத்துவதேயாகும். நாட்டுப்புறப் பாடலின் பொதுத்தன்மை அதன் சிருட்டியில் உள்ளது. பரவுதலில்தான் இருக்கின்றது என்பார் நா. வானமாமலை. (தே. லூர்து, நாட்டார் வழக்காற்றியல் ஓர் அறிமுகம் பக் - 18). இந்த மக்கள் மத்தியில் இன்னமும் பயன்பாட்டில் இருந்து பண்பாட்டைப் பரவலாக்கி கூத்து என்னும் கலை வகையாகும்,

வாய்மொழி மரபாக இருந்து பின்பு எழுத்திலக்கியமாக உருப்பெற்றிருப்பது, இலக்கியங்களாக இருப்பவை மக்களிடையே வேறுவேறு கருத்துருவாக்கத்திற்கு சென்று மக்கள் இலக்கியமாக மாற்றம் பெறுவது, மக்களிடம் வழக்கிலிருந்து இன்னமும் செயல்பட்டுக் கொண்டு வெறுமனே எழுதப்படாத விதியான மரபாக மட்டுமே காணப்படுவது என்று மூன்று நிலையில் முன்னைய இரண்டு நிலைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. கூத்தின் வழியாக கண்ணகி என்னும் குறியீடு.

வாய்மொழி இலக்கியமாக இருந்துதான் எழுத்திலக்கியமாக மாறியிருக்க வேண்டும் என்பதில் சிலப்பதிகாரத்தைக் கொண்டோமானால், நாட்டார் வழக்காற்றில் முக்கிய இடம் வகிக்கும் கலையான கூத்தின் பிறப்பிடமும், அடிப்படையும் சிலம்புதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. கண்ணகி என்னும் குறியீட்டைக் கொண்டு பாரம்பரியத்தையும், இழக்கும் ஒழுக்கங்களையும் சமண் செய்வதில் பெரும் பங்காற்றுவது கண்ணகி என்னும் குறியீடாகும். மக்கள் காவியத்தை மக்கள் மத்தியில் மக்களே நிகழ்த்தப்பெறும் மாபெரும் கலையாகவே கண்ணகி என்னும் குறியீட்டுப் பாத்திரம் தோற்றமளிக்கின்றது.

கூத்தின் மையம்:-

பாண்டியனின் மகளே கண்ணகி. இந்தக் கண்ணகி பெண் எனும் நிலைதாண்டி தெய்வத்தன்மைக் கொண்டவள். பத்தினி, கற்புக்கரசி என்னும் உயர்ந்த பண்பாட்டுக் குறியீட்டைத் தன்னகத்துள் கொண்டவள் என்பதாகவே நாடகத்தில் அறிமுகப்படுத்துகின்றனர். தவம் கிடந்து பாண்டியனின் மகளாகப் பிறந்த பெண்ணுக்கு ஜோதிடம் பார்க்கின்றனர். சோதிடம் பார்க்கும் போது சில சடங்கு முறைகளைப் பின்பற்றினர். நல்மாடடு சாணம் எடுத்து நாலுபுறமும் வழித்து நடுவில் ஜோதிடரை வைத்துக் கேட்டல் என்ற நம்பிக்கை மக்கள் பயன்பாட்டில் உள்ளதாகக் கருத முடிகின்றது. தனக்கு உகந்த செயல்களையும், நம்பிக்கைகளையும், தான் உயர்வாகக் கருதும் கலைப்படைப்பில் புகுத்திப் பார்ப்பது நாட்டார் வழக்காற்றியலின் அடிப்படைக்கூறு.

கண்ணகி பிறக்க வேணும் கட மதுரை அழிய வேண்டும்

பத்தினி பிறக்க வேணும் பட்டணம் அழிய வேண்டும்

என்று சோதிடர் சொன்னதால் பாண்டியனின் கட்டளைப்படி தாதிப்பெண்கள் நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தும் பெண் தேவையில்லையென்று தங்கத்தால் பேழை செய்து உள்ளே வைத்துப் பூட்டி வையை ஆற்றில் விட்டுவிடுகின்றனர். மக்கள் மத்தியில் கண்ணகி எனும் பாத்திரம் பத்தினியாகவும், மதுரையை அழிக்கக் கூடியவளாகவும் அறிமுகப்படுத்துவது பாண்டியனின் தவறான ஆட்சிமுறையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. எனவேதான் ஒரு பத்தினிப்பெண் நீதி வேண்டி மதுரையை அழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் முன்னதாகவே அறிவிக்கப்படுகிறது.

பெட்டி மிதந்து வந்ததைக் கண்ட ஆச்சாரி, தங்கப் பெட்டி என்பதால் பெட்டியை வைத்துக் கொண்டு உடனிருந்த மாசோட்டாஞ்செட்டிக்கு குழந்தையைக் கொடுத்து விடுகின்றார். மாநாய்க்கன் எனும் பெயரே மாசோட்டாஞ்செட்டி என்று வடிவம் திரிந்துள்ளது. பின்னர் நிகழும் தன்மையைக் கொண்டே மக்கள் கண்ணகி என்னும் கதாபாத்திரத்தை அணுகுகின்றனர். கோலஞ்செட்டி, கண்ணகி பத்தினி என்றே அடையாளப்படுத்துகின்றனர். இருவர்களுக்கும் பெரியோர்களால் மணம் செய்து வைக்கப்படுகிறது. கோவலன் பந்து விளையாடிக் கொண்டு இருக்கும்போது பந்து மாதவி என்கின்ற கணிகை இனத்தைச் சார்ந்த பெண்ணிடம் சென்றுவிடுகின்றது. மாதவி பந்தில் மை தடவிக் கொடுத்து விடுகின்றாள். மையால் மயங்கி மனைவியை மறந்து மாதவியுடன் சென்று விடுகின்றான் கோவலன்.

பணத்தையெல்லாம் இழந்து கடன்பட்டு வீடு திரும்புகின்றான் கோவலன், கடனைக் கட்ட தன்னுடைய மனைவியின் தண்டைச் சிலம்பை ஒன்றை எடுத்துக் கொண்டு மதுரையில் விலை பேசச் செல்கின்றான்.

வெள்ளி சிலம்பை விரலில் ஏந்தி அங்கு வீசிநடந்தானாம் கோவலச் செட்டி, அடிதாசி பெண்ணே வேசி தட்டுவாணி அடி தங்கச் சிலம்பு தலையில் ஏந்தி அங்க தாவி நடந்தானாம் கோவலச் செட்டி என்றுகூறி விற்று அலைந்து திரிந்து அருகில் உள்ள காளியம்மன் கோவிலில் இளைப்பாறுகின்றான். இந்த நேரத்தில் ஏற்கனவே பாண்டிய மன்னன் செய்யக் கொடுத்திருந்த சிலம்பை ஆழ்வார்பட்சி(கருடன்) எடுத்துச்சென்று விட்டதால் அதற்கு ஈடுகட்டவே ஆச்சாரி கோவலனின் சிலம்பை கவர நேர்கின்றது. (மரத்தடியில் வைத்திருந்த சிலம்பின்மீது பட்சி எச்சமிட்டதால் கோபப்பட்ட ஆச்சாரி கருடன் கூட்டையும் குஞ்சுகளையும் சிதைத்து விடுகின்றான். பழிதீர்க்க நினைத்த கருடன் சிலம்பை எடுத்துச் செல்வதாக கதை உண்டு).

கண்ணகியின் கனவு:-

கோவலன் மதுரையை நோக்கி வந்துவிட்ட நேரத்தில் தான் தங்கி இருந்த பாட்டியிடம் தான் கண்ட கனவை தெரிவிக்கின்றாள் கண்ணகி.

சோராப்பூ சோடக் கண்டேன் - அம்மா சொம்பு சலம் வத்தக் கண்டேன் வாடாப்பூ வாடக்கண்டேன் - அம்மா வர்ணப்பொட்டு அழியக்கண்டேன் பொல்லாத மூலையிலே - அந்த பொங்கெவுளி அடிக்குதையா ஆகாத மூலையிலே அந்த ஆண் கெவுளி அடிக்கக்கண்டேன் என்று கூறுகின்றாள். பல்லி கத்துதல், பூ வாடுதல், சொம்பில் நீர் காணாமல் போதல், பொட்டு அழிதல் போன்றவை கனவாக வந்தால் தீய நிமித்தமாக கருதப்படுகின்றது. இந்த வழக்கம் நாட்டார் வழக்காறுகளில் நம்பிக்கைத் தன்மையுடையது.

சத்தியம் செய்தல்:-

சத்தியம் செய்தல் என்பது உண்மையை உறுதிப்படுத்துதலாகும். மனித நம்பிக்கையின் உச்சபட்சமாகக் கருதுகின்றனர். அதுவும் தான் உண்வாகக் கருதும், மதிக்கத்தக்க உயிரின் மீதோ, பொருளின் மீதோ உண்மையை உறுதிப்படுத்துதல் என்பதே உண்மையில் இறுதி நிலையாகும். கோயிலில் அமர்ந்திருந்த கோவலனை ஆச்சாரி அழைத்து விசாரிக்கச் செய்தியை அறிந்தவன் இந்த சிலம்பு மன்னனுடையது நீ பொய் சொல்கின்றாய், சிலம்பு உன்னுடையதாக இருந்தால் சத்தியம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை செய்கின்றான். பாம்பு, யானை, நெருப்பு இவற்றின்மீது சத்தியம் செய்தலே ஆச்சாரியின் நிபந்தனை. ஆச்சாரியின் கட்டளைப்படி யானைச்சத்தியம், பாம்பு சத்தியம், நெருப்புச் சத்தியம் செய்தான் கோவலன். தன்னைத் துன்புறுத்தும், தனக்கு பயன்படும், எதிர்கொள்ள முடியாத சில பொருட்களையே தெய்வமாக மனிதன் நம்பினான். இதன் எச்சமே யானை, பாம்பு, நெருப்புச் சத்தியம், சத்தியம் செய்த கோவலனை பார்த்து, யானை வாயக் கட்டனவன் யாருவாயக் கட்டுவான்டா என்று அவன் மந்திரக்காரன், வித்தை தெரிந்தவன் என்று சொல்லி கொல்ல முடிவு செய்கின்றனர் ஆச்சாரி மற்றும் படையினர். தான் திருடன் என்று சொல்லியும் நம்பவில்லையென்றால் என்னை கொன்றுவிடுங்கள் என்று தன்னுடைய சாவிற்கு தானே வழிமொழிகின்றான் கோவலன்.

இந்நேரத்தில் அகடுகல்லு பெண்ணே சிகுடுபாற பெண்ணே அனைவரையும் வெட்டும்பாற - அங்க பத்தாவும் பத்தினியே, பாண்டியனின் தன்மகளே - அம்மா பத்தாவும் மாளப்போறேன் - எனக்கு பக்கமிருந்து காருமடி என்ற பாடலின் வழியாக கொடுமையைச் சொல்லி அழுதுகொண்டு தன் மனைவியை மனதில் தேடுகின்றான் கோவலன்.

கண்ணகி கோவலனைத் தேடுதல்:-

தீய நிமித்தங்களோடு கனவுகண்ட கண்ணகி கணவனைத் தேடி காட்டுவழியில் சென்று தான் பார்க்கும் சிட்டுக்குருவி, நரி, கருடன் எல்லாவற்றிடமும் கேட்டபிறகு ஆடு, மாடு மேய்க்கும் இடையரிடம் கேட்கின்றாள். இடையர்கள் தாங்கள் கோவலனைக் கண்டதாகவும் தங்களின் பசிபோக்கினால் காட்டுவதாகவும் தெரிவிக்கின்றார்கள். (தான் சார்ந்து வாழும் இயற்கை இயைந்த வாழ்வை படைப்பில் காண்பது இயல்பு) அருகில் இருந்த வாழைத் தண்டை எடுத்து,

பத்தாவும் பத்தினியாம் நான் பாண்டியரும் தன்மகளும் எம்மா நான் பத்தினிதான் மெய்யானால் - இந்த பச்சை வாழ எரியணுமே - அவங்க அன்னப்பசி தீருணுமே என்றுபாடி அழுதவுடன் இடையர்களுக்கான உணவு கிடைக்கின்றது. கற்பு, பத்தினி என்ற குறியீட்டின் அழுத்தம், உண்மைப் பொருளை உறுதிப்படுத்துவதாகவே பச்சை வாழை எரிவதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வள்ளுவரும்,

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை (குறள் - 55)

என்ற குறளும் நினைவுக்கூரத்தக்கது. கணவனைக் கண்டவள் அழுது புலம்புகின்றாள், பின்பு தன்னுடைய சக்தியால் கணவனை உயிர்ப்பிக்கின்றாள். நாட்டுக்கு வருமாறு கண்ணகி அழைக்கக் கோவலன் மாண்டவர்கள் வந்தா மண்ணு பொறுக்காது செத்தவர்கள் வந்தா சீம பொறுக்காது என்று சொல்லி தான் வர மறுத்துவிடுகின்றான்.

மேற்கண்ட பழமொழி கிராமத்தில் விரவி இருப்பதை இன்றும் காண முடிகின்றது. கணவனின் சாவுக்கு பாண்டியனாகிய தன்னுடைய அப்பாதான் காரணம் என்று புரிந்த கண்ணகி அப்பாவிடம் தருக்கம் செய்யச் செல்கின்றாள்.

கட்டார கட்டவேணும் அட பாண்டியனே கைவிலங்கு பூட்ட வேண்டும் அடி பாண்டியனே என் பத்தாவ கொண்ட பழி - உன்னபழிக்குபழி வாங்குவண்டா ஆட்ட மாட்ட திருடியிருந்தால் - என்பத்தாவ அதுக்குச் சிற போடவேணும் என்று தன் கணவனின் குற்றத்திற்கேற்ப தண்டனை வழங்காமல் கொன்று விட்டதற்கு பழிதீர்ப்பதாக சபதம் செய்து தெய்வத்தின் தன்மை அடைந்து பாண்டியனை அழித்து விடுவதுடன் நாடகம் நிறைவு பெறுகின்றது.

சில கருத்துரைகள்:-

தமிழகப் பண்பாட்டை உட்புகுத்திக் கொண்டு ஒரு பேசாத பெண் பாத்திரத்தை அறிமுகப்படுத்தி, கடவுள் தன்மை அடையும் இலக்கியக் கோட்பாடு, மக்கள் இலக்கியமாக மாறும்போது அறிமுகத்திலேயே தெய்வத்தன்மையும், பண்பாட்டின் உச்சமான பத்தினிக் கொள்கையும் அநீதியைக் கண்டு கோபம் கொள்ளும் பாத்திரமாகவும் நாட்டுப்புறவியல் வடிவமான கூத்து எனும் கலை வடிவில் கண்ணகி என்னும் குறியீடு மையமிட்டுள்ளது.

வெவ்வேறு கருத்தாக்கங்களையும் வெவ்வேறு கட்டுமானங்களையும், உடனடியாக கட்டுடைப்புகளையும் கொண்டதுமான நாட்டார் வழக்காறான கூத்து என்ற கலை வகையில் தன்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது. கண்ணகி எனும் கதாபாத்திரம் உயர்ந்த ஒழுக்கங்களையும், நாகரீகப் பண்பாட்டையும் சமூகப் பொறுப்புகளையும், சிறந்த தியாகத்தினாலும், கடவுள் கோட்பாட்டை உடைய வழிபாட்டுடன் தன்னை இருத்திக்கொண்டது கண்ணகி என்ற குறியீட்டுப் பாத்திரம் (மாரியம்மன் என்ற தெய்வமாக) கலாச்சார பண்பாடுகளை தன்னுள் பொதித்துள்ள கண்ணகி என்ற குறியீடு உயர்ந்த விழுமியங்களை மீட்டெடுப்பதற்கான, மீள் பார்வைக்கு கொண்டு செல்வதற்கான முழுமையான சொல். ஒரே சமயத்தில் வாய்மொழி மரபாகவும் எழுத்திலக்கியமாகவும் இரண்டு பொருண்மைகளையும், வடிவ வீச்சுகளையும் கொண்டு இயங்குவது கூத்து வகைகள்தான். ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு கருத்துருவாக்கங்களைப் பெற்றும், ஏட்டிலக்கியத்தில் ஒரே தன்மையை, வடிவத்தைப் பெற்றுத் திகழும் இரட்டைச் சமூகக் குறியீடு கண்ணகி என்பது திண்ணம்.

நன்றி: வேர்களைத்தேடி

 

கருத்துகள் இல்லை: