புலம்பெயர்தல் வாழ்க்கை நியதியாயிற்று இன்று. ஆனால் அன்று வேரையும், வோடி மண்ணையும் இழந்து, வேரற்ற தனி மனிதர்கள் புதிய இடங்களைத் தேடிப் புலம் பெயர்ந்ததைக் கதைகள் காட்சிப்படுத்துகின்றன. தொலைக்காட்சியும், திரையரங்குகளும், வானொலியும், வளர்ந்துவிட்ட நிலையில், தமிழ்மொழி இலக்கியங்களை (வாய்மொழி இலக்கியம்) அன்றாடம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்து விட்டதை கள ஆய்வின் மூலம் அறிய முடிகிறது. தகவலாளரிடமிருந்து கதைகளைப் பெறுவதும், மறுவாசிப்பிற்கு உட்படுத்தி அவற்றில் கடந்த கால வாழ்வின் அவலங்களைப் பட்டியலிடுதலே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
கதை வகைப்பாடு:-
நாட்டுப்புறவியல் அறிஞர்கள் கதைகள் (1) தொன்மக்கதை (2) பழமரபுக்கதை (3) வாய்மொழிக் கதை என வகைப்படுத்துகின்றனர். புலம் பெயர்ந்த மக்கள் கூறும் கதைகள் கடந்த கால வாழ்க்கையை, பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வரலாறாகிறது. மக்கள் புலம் பெயர்ந்த செய்தி, கடந்து வந்த ஊர்கள், ஆறுகள், சந்தித்த மக்கள், ஆதரவளித்த மன்னர், வள்ளல் ஆகியோரைப் பற்றிய செய்திகள் சமூக, பொருளாதார மற்றும் அரசியலை அறியமுடிகிறது. மனிதர்களை மையப்படுத்தும் கதைகள் என்பதால் இதனைப் பழமரபுக் கதைகளுக்குள் அடக்கலாம்.
கதை பெறும்வழி:-
நாட்டுப்புற கதைகளும், கதை சொல்லும் தகவலாளர்களும் குறைந்து வருகின்றனர். ஆய்வாளர்கள் சென்று தகவல் திரட்ட முழுமையான ஒத்துழைப்பு நல்குவதில்லை. கிராமத் தலைவர், நாட்டாமை போன்றோரைச் சந்தித்து, கதை சேகரிப்பதின் நோக்கத்தைக் கூறி அனுமதி பெற வேண்டியுள்ளது. வயது முதிர்ந்த தகவலாளர்கள் கூட, தங்களின் முன்னோர்களைப் பற்றி, அறிந்திராமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. புலம் பெயர்ந்த காரணத்தைத் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்கள் இல்லை. எனவே குலத்தெய்வத்தின் பெயரும், அத்தெய்வம் தொடர்பான கதைகளைக் கூறும் தகவலாளர் அனிச்சையாகப் புலம்பெயர்ந்த தரவுகளை இணைத்துக் கூறுகின்றனர்.
வாழ்வின் ஆதாரம்:-
தகவலாளர் கதை நிகழ்ந்த காலத்தை 5 அல்லது 7 தலைமுறைக்கு முன் என்கின்றனர். சுமார் 300 ஆண்டுகளைப் பின்னோக்கிச் செல்கின்றனர். தேனி மாவட்டத்தில் வாழும் மக்கள் அனைவரும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் / பிற மாநிலங்களில் இருந்தும் குடியேறியதை அறிய முடிகிறது.
பஞ்சம், தொற்றுநோய், மகண்மறுத்தல், போர், பங்காளிச் சண்டை, தொழில் போன்ற முக்கிய காரணங்களால் புலம் பெயர்ந்துள்ளனர். தேனி மாவட்டத்தைச் தஞ்சமடைந்தோர் நிலைத்த குடிகளாகிவிட்டனர். தாங்கள் வழிபட்ட தெய்வத்தின் பிடி மண்ணையும் எடுத்து வந்து, கோவில் அமைத்து வழிபடுகின்றனர். நிலைத்த குடிகளாய் வாழ்ந்த மக்கள் அரசியல் குழப்பம், இசுலாமியப் படைகளின் வருகை, அதிகார வர்க்கத்தினரின் மனிதாபிமானம் அற்ற தன்மையால், அமைதியான வாழ்வை விரும்பி வளமான பகுதியில் குடியேறினர்.
இடத்தேர்வு முறை:-
புலம் பெயர்ந்தோர் பூர்வீக இடத்தில் வழிபட்ட தெய்வத்தினைச் சுமந்து வந்தனர். நீர்நிலைகளுக்கு அருகில் ஓய்வெடுத்தனர். மீண்டும் புறப்பட்டபொழுது தெய்வம் வரமறுத்தது என்று கதைகளில் குறிப்பிடுகின்றனர். நாட்டுப்புறவியல் அறிஞர்கள் இதனை, ''வேரூன்றல்'' என்பர். வளமான நிலத்தில் வேளாண்மை செய்யக் கூடியவன் நீர்நிலைக்கு அருகில் வாழ எண்ணியதைத் தெய்வத்தின் விருப்பச் செயலாகக் கூறுகின்றனர்.
தேனி மாவட்டத்தில் தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை அதிகம். நாயக்கர்தம் ஆட்சிப்பகுதியை 72 பாளையங்களாகப் பிரித்தனர். அதில் (1) பெரியகுளம் (வடகரைப்பாளையம்) (2) போடி நாயக்கனூர் (3) கண்டமனூர் (4) கோம்பை - என்ற நான்கு ஊர்களும் பாளையங்களாக இருந்தன. மூன்று பாளையங்களை தெலுங்கர்களும், ஒன்றைக் கவுண்டர்களும் நிர்வாகம் செய்தனர் இவர்கள் ''திசைக்காவலர்கள்'' என்று குறிப்பிட்டனர். எனவே இவர்களின் ஆதரவை நாடி தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் குடியேறினர்.
நாயக்கர் ஆட்சி விரிவடைந்தபோது நாயக்கர்களின் ஒரு பிரிவினர் போர் வீரர்களாகவும், வாசனைத் திரவியம், பட்டாடை நெய்தல் போன்ற பணிகளுக்கு சௌராட்டிரர்களும், காலணிகள் உற்பத்திக்கும், பிணம் எரிப்பதற்கும், கழிவுகளை அகற்றவும் சக்கிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தமிழர், தமிழர் அல்லாதோர் என்ற பாகுபாடு தோன்றியபோது ஆட்சியாளர்கள் தம்மொழி பேசும் மக்களுக்கு முன்னுரிமை அளித்து ஊரின் ஒதுக்குப்புறமாக உள்ள இடங்களையும், உணவுப் பொருட்களையும் தானமாக வழங்கியதைக் கதைத் தரவின் மூலம் அறிய முடிகிறது.
புலம்பெயர்ந்தோர் வழிபடும் தெய்வம்:-
ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கத்தினரும் பெண்ணை அபகரிக்கும் நோக்குடன் இருந்ததால் தங்களின் குல மானம் காக்க தீப்பாய்ந்து இறந்தோர், கணவனை இழந்து உடன்கட்டை ஏறியோர், இன நலன் காக்க போரில் வீரமரணம் அடைந்தோர், நோயில் இறந்தோர், அகால மரணம் அடைந்தோர், நீர் நிலையில் கண்டெடுக்கப்பட்ட தெய்வம் ஆகியவற்றை வழிபடுகின்றனர். கற்பு நலம் காக்க உயிர் நீத்தோரே வழிபடு கடவுளராக உள்ளனர்.
புலம் பெயர்ந்தோர் இலக்கியம்:-
தமிழ் மொழியில் வெளியான கி. ராஜநாராயணனின் ''கோபல்ல கிராமம்'' சு. வேணுகோபாலின் ''நுண்வெளிக்கிரணம்'' நீல பத்மநாபனின் ''தலைமுறைகள்'' ஆகியன புலம்பெயர்ந்தோர் தகவலை முன் வைக்கின்றன. ஈழத்துக் கவிஞர் சேரன், திருமாவளவன் போன்றோர் புலம்பெயர்ந்து அயல்நாடுகளில் வாழும் மக்களின் மனவேதனையைச் சித்தரிக்கின்றனர்.
பஞ்ச காலங்களில் நீர் நிலை நோக்கிப் பயணிக்கும் பாடல் கூட நமக்கு ஆதாரம்.
''மானத்திலே மழையுமில்லை
மழைபொழியக் கானமில்லை
மூட்டிகளைத் தூக்குங்கடி
முல்லையாறு போயிச்சேர''
பல தலைமுறைகளுக்கு முன் நிகழ்ந்ததாக இருப்பின், தம் நிகழ்கால வாழ்வில் நிகழ்ந்த வேதனையைப் போல் உணர்கின்றனர். ஒவ்வொரு தகவலாளரும் இழந்த இடத்தை, பண்பாட்டை, நாகரீகத்தை, திசைமாறிப் போன உறவுகளை, உடமைகளை மீண்டும் பெற முடியாத வேதனையைக் கதைகளாகத் தருகின்றனர்.
விருட்சமாக வேண்டிய விதைகள், விளைநிலமற்று, புதிய களத்தின் தன்மைக்கு ஏற்ப முளைக்கத் துடிக்கும் மக்களின் துயரம், ஆற்றாமை, அவலம் ஆகியவற்றை ''நிகழ்ந்தது நினைத்தல்'' என்ற உத்தியின் மூலம் கதை, பாடல்களாய் வெளியிடுகின்றனர். கள ஆய்வில் தொகுப்பதும், பகுப்பதும் கதைகளை அல்ல. வேர்களை இழந்த மக்களின் மனங்களே!
நன்றி: வேர்களைத் தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக