28/03/2011

ஹைக்கூ கவிதைகளில் நாட்டுப்புறத் தெய்வங்கள் - முனைவர் வீ.உண்ணாமலை

''கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்'' என்னும் பழமொழிக்கேற்ப பாமர மக்களின் அச்ச உணர்வால் கடவுளர்கள் உண்டாக்கப்பட்டு, அவர்களாலேயே பேணப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டு வருவதைக் காணலாம். இதற்கான காரணத்தை,

"நாட்டுப்புற மக்களின் வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களுக்கும் நோய் நொடிக்கும் நாட்டுப்புறத் தெய்வங்களையே தஞ்சமடைகின்றனர். படையல்களும் பலியும் இட்டுத் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். விழா எடுப்பதன் மூலம் உள்ளத்திற்கு மகிழ்வும் உறவுக்குத் தொடர்பும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்பது உண்மையேயாகும்."

நாட்டுப்புறத் தெய்வங்களைப் பெருந்தெய்வங்கள், சிறுதெய்வங்கள் என இருவகையாகப் பகுக்கலாம். பெருந்தெய்வங்களில் சிவன், திருமால், முருகன், பிள்ளையார் ஆகியவை மக்களிடம் செல்வாக்குப் பெற்றவை. ஆதி அந்தம் இல்லாதவை. நாட்டுப்புற மக்களும் நகர்ப்புற மக்களும் வணங்கும் தெய்வம் பிள்ளையார், நாட்டுப்புறச் சிறுதெய்வங்களையும், ஆண் சிறுதெய்வங்கள், பெண் சிறு தெய்வங்கள் என இருவகையாகப் பகுக்கலாம். இச்சிறு தெய்வங்கள், வட, தென் மாவட்டங்களில் நூற்றுக்கு மேற்பட்டுள்ளன எனலாம். இச்சிறு தெய்வங்கள் ஹைக்கூ கவிதைகளில் இடம் பெற்றுள்ள விதம் பற்றிக் கட்டுரை ஆயமுற்படுகின்றது.

பெருந்தெய்வம்:-

விநாயகர்

1. ஆண் (விநாயகர்) 2. பெண் (வினாசனி)

சிறுதெய்வங்கள்

ஆண் தெய்வங்கள்

1.அய்யனார், 2. கருப்பசாமி, 3. வீரன், 4. வயல்காத்தான், 5. நடுகல் - வீரவணக்கம்

பெண் தெய்வம்

மாரியம்மன்

ஹைக்கூ கவிதைகளில் இடம்பெற்றுள்ள நாட்டுப்புறத் தெய்வங்களை மேலே உள்ள வரைபடம் வாயிலாக ஆய்கின்றது. பெருந்தெய்வங்களில் ஒன்றாகக் கருதப்படும் விநாயகர் வழிபாடு சங்கம் மருவிய காலத்தில் நடைபெற்றது. கணபதி சிற்பம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் காணப்பட்டது என்பர் ஆய்வாளர். ஆனால் பிள்ளையார்பட்டி விநாயகர் கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பர் அறிஞர் ந.ரா. முருகவேள். கி.பி பதினான்காம் நூற்றாண்டில் மங்கோலியர்களின் தெய்வங்களுள் நிருத்த கணபதியும் வணங்கப்பட்டதாக கூறுவர். சக்திகள் ஐம்பத்தொரு வகை என்றும் அதனால் கணபதியும் ஐம்பத்தொரு வகை என்று கலைக்களஞ்சியம் குறிப்பிட்டுள்ளது. விநாயகர் வழிபாட்டை இந்துக்கள் மட்டுமல்லாமல் பௌத்தர்களும், சமணர்களும் நிகழ்த்தி வருகிறார்கள். குறிப்பாக மராட்டிய மாநிலம், விநாயகர் வழிபாட்டை மிகச் சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது. இவை மட்டுமேயல்லாமல் கடல்கடந்த நாடுகளான இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஜாவா, இந்தோ, சீனா, ஜப்பான் முதலிய நாடுகளும் விநாயகரை வழிபடுகின்றன.

மக்கள் தத்தம் தேவைக்கேற்பக் களிமண், பசுஞ்சாணம், பசு வெண்ணெய், பனைவெல்லம், மஞ்சள், கருங்கல், உலோகம், வெள்ளைச் சலவைக்கல், அத்திமரம், வெள்ளெருக்கம் வேர் ஆகியவற்றால் உருவாக்கி வழிபாடு புரிந்து வருவதைக் காணலாம்.

இவற்றின் வெள்ளெருக்கு வேரில் ஆன பிள்ளையார்தான் விசேஷமானது என்பர் அறிஞர். நாட்டுப்புற மக்களுக்குக் கிடைக்கும் எளியப் பொருள் சாணம், களிமண், சந்தனம் ஆகியவையாகும். இவற்றுள் சாணத்தால் பிள்ளையார் பிடிக்கப்பட்டு அருகம்புல் சொருகப்படும். இதற்கு காரணம் சாணத்தில் புழு, பூச்சிகள், புகுந்து சிதைத்துவிடக்கூடியது என்பதற்காக கிருமி நாசினியாகவும் ஒரு அலைகளை உண்டாக்கக்கூடியதுமானத் தன்மை வாய்ந்தது அருகம்புல் என்பதாகும். இன்று மக்கள் தேவைகளுக்கேற்ப ஆலமரம், அரசமரம், வேப்பமரம், வன்னிமரம், ஆற்றங்கரை, குளத்தங்கரை, முச்சந்தி, நாற்சந்தி, மூலை, முடுக்கு, வீட்டு மாடங்கள், ஊர்க்கோடி, மலை இங்கெல்லாம் விநாயகர் வடிவங்களை வழிபடுகின்றனர் இச்செய்திகளை,

''இங்கு

சாணிகூட சாமிதான்

பிடிச்ச பிள்ளையார்'' (காற்று சொன்ன ஹைக்கூ. பா.இ)

''முச்சந்திக்கு முச்சந்தி

வழிமறிக்கும்

வழிவிடு விநாயகர்'' (முனைகெட்ட. தீ.ப. 11)

என வரும் ஹைக்கூக்களால் அறியலாம்.

ஆவணி மாதம் வளர்பிறையில் சதுர்த்தி நாளன்று விநாயகருக்கு கொழுக்கட்டை, கடலை, சுண்டல், அவல், பொரி, பால், பழம், வெற்றிலைப்பாக்கு வைத்து வழிபடுவர். விநாயகருக்குச் சில சமயம் பாலாபிஷேகமும் நடைபெறுவது உண்டு. ஞான விநாயகரை வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை எல்லாம் தருவான். ஞானமும், கல்வியும் நலம் தரும் பலவும் தருவான் என்பதனால் மக்கள் தத்தமது தேவைகளுக்கு ஏற்ப முறையீடுகளையும் முன் வைப்பார்கள். மக்கள் கொண்ட நம்பிக்கையால் வரம் கொடுக்கும் விநாயகரே மவுனமாகப் போனதை கூறும் ஹைக்கூக்கள்,

''பால் குடித்த பிள்ளையாரை

ஏக்கமாய் பார்க்கும்

பசித்த சிறுமி'' (வேரில் பூத்த ஹைக்கூ. ப. 21)

''எல்லோரும் முறையிடுகிறார்கள்

யாருக்கும் பரிந்து பேச

மௌனமாய் மரத்தடி பிள்ளையார்'' (வானம் தொட்ட தூரிகை, ப. 18)

என்பனவாகும்.

விநாயகர் சதுர்த்தியன்று களிமண்ணால் செய்த பிள்ளையார் வீட்டு வழிபாட்டில் இடம்பெறும். களிமண்ணால் செய்த இறை உருவினைச் சிதைத்தல் கூடாது என்பதற்காக மக்கள் ஆற்றிலோ, கடலிலோ அதனைக் கரைத்து விடுவது இயல்பு. ஆனால் இன்று மதப் பிரச்சாரத்துக்கு இச்செயல் அமைந்துவிட்டது. இந்நிகழ்வுகளை ஹைக்கூவிற்கே உரிய இரக்க உணர்வு தோன்ற கவிஞர்கள் ஹைக்கு ஆக்கியுள்ளதை,

''அமைதியான பிள்ளையார்

விரும்பாத விளையாட்டு

கரைக்கிறார்கள் கரையாதவர்கள்'' (குளத்தில் மிதக்கும் தீபங்கள், ப. 30)

''மத ஊர்வலத்தில் கலவரம்

பசியோடு பக்தர்கள்

சுக்கு நூறாய் பிள்ளையார்'' (வேரில் பூத்த ஹைக்கூ. ப.எ.இ)

என்னும் ஹைக்கூக்கள் கூறும். நாட்டுப்புறமக்களின் பத்தி இன்று மதவாதிகள் கையில் அகப்பட்டு மதப்பிரச்சாரமாக்கிய பரிதாப நிலையை இங்கு காணலாம்.

அய்யனார் கிராமப்புற ஆண் சிறு தெய்வங்களில் அய்யனார் முதலிடம் பெறுகிறார். புத்தர் வழிபாடே சமய வளர்ச்சிக் கருத்துக்களால் ஐயனார் வழிபாடாக மாறியது என்பர் அறிஞர். பண்டைக்காலத்தில் வழக்கங்கலிருந்த சாத்தன் வழிபாடே பின்னர் ஐயனார் வழிபாடாயிற்று என்றும் சிலப்பதிகாரம் கூறும் புறம்பணையான், பாசண்டச் சாத்தன் ஆகிய சாத்தன் தெய்வங்களில் புறம்பணையான் என்ற தெய்வமே கிராம ஐயனார் தெய்வமாக மாறி இருப்பதாகக் கொள்ள வேண்டும் என்பர் சிந்தனையாளர்.

அய்யனார் ஊர்க்காவல் தெய்வமாக மக்களால் கருதப்படுகின்றது. சிற்றூரின் தொடக்கத்தில் கோயில் அமைப்பு ஏதுமின்றி உயரமான வடிவமுடைய பீடத்தில் அமர்ந்திருக்கும். எல்லா ஊர்களிலும் இருக்கும் இத்தெய்வம் மேல்சாதியினர் வழிபடும் தெய்வமாகும் இதனை,

''உட்கார்ந்த படியே

ஊரைக் காக்கிறார்

அய்யனார் சாமி'' (விழிவழிய கனவுகள். ப.எ.இ)

''ஒரு வழிப்பாதை முடிவில்

தொடங்கும் என் சிற்றூர்

காவலுக்கு ஐயனாரப்பன்'' (கட்டை விரல் ப. 31)

என்னும் ஹைக்கூக்கள் பேசும்.

அய்யனார் கோவில்களில் தவழும் பிள்ளை சிலைகள்; பிள்ளைகளுக்கு தீங்கு ஏற்படாதிருக்க நேர்த்திக்கடன் விடப்படும். சில ஊர்களில் கோயில் காளைகளும், ஆடுகளும், கோழிகளும் நேர்த்திக் கடனாக விடப்பட்டிருக்கும். அய்யனார் தவிர பிற தெய்வங்கட்கு பலி கொடுக்கப்படும். அய்யனார் சைவமானதால் பலி கொடுக்கும் சமயம் சீலை துணியால் மறைக்கப்படுவார். மக்கள் தோஷம், பில்லி சூனியம் முதலியவை கழிய அய்யனார் சாமிக்கு காணிக்கைச் செலுத்துவதாக வேண்டிக் கொள்வர். வேண்டுதல் நிறைவேற்றியப் பின் மக்கள் காணிக்கை செலுத்துவர். பல்வேறு குறிப்புத் தாள்களையும் குழந்தை வரம் வேண்டி மரத்தால் செய்யப்பட்ட சிறு தொட்டில்களை மரத்தில் கட்டியும் கத்தியில் சொருகியும் வைப்பர். இச்செயல்களை,

''மகளின் தோஷம் கழிய

தந்தையின் உயிர்த் தியாகம்

அய்யனாருக்கு ஐம்பது ஆடுகள்'' (சின்ன உளிகள். ப. 36)

''அய்யனார் திருவிழா

திரும்பிய புறமெல்லாம்

பலி ஆடுகள் இரத்தம்'' (விழிவழியே கனவுகள். ப.எ.இ)

''அய்யனார் கத்தியில் குறிப்புத் தாள்கள்

மரத்தில் தொட்டில்கள்

அறியாமையே குற்றங்களின் தாய்'' (பரிதிப் புன்னகை, ப. 52)

என வரும் ஹைக்கூக்களால் அறியலாம். ஐயனார் சிலை பயம் காட்டுவதாகவும் ஹைக்கூ கூறும்.

கருப்புசாமி:-

இது அய்யனாருக்கு துணை தெய்வமாய் அய்யனாருக்கு அடுத்த ஊர்தெய்வம், பீடம், குத்துக்கால் சிலைகள் அனைத்தும் கருப்புசாமியே. அரிஜனங்களுக்கு குலதெய்வக்கோயில் இருப்பதோடு அனைத்து மக்களும் வழிபடும் கோயில் கருப்புசாமி கோவில். எல்லை காக்கும் சாமியும் இதுவே.

''கருப்புசாமி கையில்

வீச் சருவாள்

சுற்றிப் புதர்கள்'' (வேரில் பூத்த ஹைக்கூ, ப.எ.இ)

இங்கு கருப்புசாமி ஊர்க்காவல் தெய்வமாகவும், ஊர் தெய்வமாகவும் வேட்டைக்குச் செல்லும் வேட்டைக்கார தெய்வமாகவும் உள்ளதை அறியலாம்.

வீரன்சாமி:-

இது கொடூர உருவமுடைய ஊர்க்காவல் தெய்வமானது எல்லா மாவட்டத்திலும் இவ் ஆண் தெய்வ வழிபாடும் உண்டு. இதற்குப் பலி கொடுக்கும் பழக்கம் உள்ளதை,

''வீரன் சாமி அருவா கழியோட

விடிய விடிய ஊர்க்காவல்

நன்றிக்கடன் ஆடு கோழி'' (சுண்டு விரல். ப. 20)

என வருவதால் அறியலாம்.

வயல் காத்தான்:-

வயலில் விதை விதைக்கும்போது சைவ உணவு செய்து படைப்பர். தீய சக்திகள் அண்டாதிருக்க படையலில் காதோடு கருகமணி ஆகியவற்றை வைப்பர். அறுவடையின் போது இரத்தக்காவு கொடுக்க ஆடு, கோழிகளைப் பலியிடுவர். வயல் காத்தான் சாமிக்கு வெள்ளி, சனியில் விளக்கேற்றுவர். நல்ல விளைச்சல் இல்லாத போது ஏழ்மையாக இருக்கும்போதும் வயல் காத்தானுக்கு பொங்கலிடும் மக்கள் இயல்பை,

''வயல் காத்தானுக்கு

பொங்கல் வைத்தோம்

அத்தனை பேரும் பட்டினியாய்'' (இர்த, ப. 13) என்பதனால் அறியலாம்.

நடுகல் வீரவணக்கம்:-

போரில் இறந்த வீரனுக்கு நடுகல் செய்தல் மரபு. ஊர்த்தலைவன், குழுத்தலைவன் இறந்தால் நடுகல் செய்து தெய்வமாகக் கும்பிடுவது மக்கள் இயல்பு. இதனை,

''காற்றுக்குத் தெரிவதில்லை

தெரியும் கீற்று அசைத்து

நடுகல் - வீரவணக்கம்'' (கட்டை விரல், ப. 22)

மாரியம்மன்:-

மாரியம்மன் வழிபாடு தமிழகத்தில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே இருந்துள்ளது. பெண் தெய்வங்கட்கு முதன்மையானது. ஊர்க்காவல் தெய்வமும் இதுவே. மாரியம்மன் பேர் நினைத்தாலேயே பில்லி, சூனியம், பிசாசு, வைப்பு நிங்கும். நாட்டில் மழை பெய்து நாடு செழிக்க மாரியின் அருள் வேண்டும் என்று நம்பினர். நாட்டில் உண்டாகும் அம்மை முதலிய நோய்களுக்கும் மாரிதான் காரணம் என்று மக்கள் நம்பினர். பலி கொடுக்கப்படும் ஆட்டிற்கு மஞ்சள் பூசி மாலையிடுவர். பலி கொடுக்கப்படுதற்காக மாந்தர் அலங்கரிப்பதை அறியாத ஆடுகள் மகிழ்வதை,

''மஞ்சள் பூசி மாலையிட்டனர்

மகிழ்ந்து நின்றது ஆடு

..............மாரியம்மன் திருவிழா'' (தீவன் தாகம், ப.16)

என்னும் ஹைக்கூ. இங்கு மாரியம்மன் திருவிழாவில் நேர்த்திக் கடனுக்காகப் பலி கொடுக்கப்படும் செய்தியினை அறியலாம்.

நன்றி: வேர்களைத் தேடி

 

கருத்துகள் இல்லை: