நாட்டுப்புற நிகழ்கலைகள் பலவற்றையும் பயன்பாட்டு நோக்கில் சிந்திக்கின்ற போக்கு இன்றைய நாட்டுப்புற ஆய்வில் முதன்மை பெற்று வருகின்றது. கலைகள் பலவும் பல நிலைகளில் தோற்றம் பெற்று வளர்ந்து மக்களிடையே கால்கொண்டு வாழ்ந்து வருகின்றன. பல கலைகள் இன்றைய அறிவியல் யுகத்தில் மக்களால் பயன்படுத்தப் பெறாமலும் அழிந்து கொண்டும் வருகின்றன. அவற்றை இனங்கண்டு வெளிப்படுத்துவதோடு அக்கலைகளின் தனித்தன்மைகளையும் ஆய்ந்து பயன்பாட்டு நோக்கில் பயன்கொள்ள வேண்டியது நமது கடமை. அவ்வகையில் இக்கட்டுரை டேப்பிசைக் கலையினைப் பயன்பாட்டு நோக்கில் சிந்திக்கின்றது.
டேப்பிசைக் கலை:-
டேப்பு, தப்பு, பறை, கிணை எனும் ஒரு முகப் பறையினைக் காலம் காலமாகத் தமிழகத்தில் இசைத்துப் பாடும் மரபு உள்ளது. பழங்காலத்தில் பொருநன் என்பவன் கிணை எனும் ஒருமுகப் பறையினை முழக்கிக்கொண்டு அரசன் வாயிலின் முன்பு காலை மாலைப் பொழுதுகளில் பாடினான். அரசனைத் துயில் எழுப்புதற்காகப் பொருநன் வைகறைப் பண்ணிசைத்துப் போற்றிப் பாடியதாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் வயற்புறங்களில் களங்களில் நின்று விளை பொருள் செழிக்கப் பாடினார்கள். இவர்களுக்கு அறுவடைக் காலங்களில் விளை பொருட்களை மக்கள் பரிசாகக் கொடுத்து மதிப்பளிப்பார். அமைதிக் காலங்களில் இத்தகைய அருந் தொண்டாற்றிய இக்கலைஞர்கள் போர்க் காலத்தே படைகளுடன் சென்று பறைகளை முழுக்கி வீரர்களுக்கு ஊக்கமளிப்பர்.
ஏர்க்களம் பாடியும் போர்க்களம் பாடியும் மக்களுக்குத் துணை நின்றவர்கள் பொருநர்கள். இப்பொருநர்களின் கலையானது கலை ஓட்டத்தில் தப்பிசைக்கலை அல்லது டேப்பிசைக் கலையாக மாற்றம் பெற்றுவிட்டது. டேப்பு அல்லது தப்பு என்னும் ஒருமுகப் பறையினை இசைத்துக் கொண்டு பாடல்களைப் பாடும் கலைகளாக நமது தமிழகத்தில் அறியப் பெறும் கலைகளாக இலாவணி, கொலைச் சிந்து பாடுதல், கதைப் பாடல் பாடுதல், பக்கிரிகள் இசுலாமியப் பாடல்கள் பாடுதல், அரசியல் கொள்கை பரப்பும் பாடல்களைப் பாடுதல் முதலான கலைகள் தமிழகத்தில் இன்றுவரை நிலைபெற்றுள்ளன. இலாவணி என்பது இரதி மன்மதன் விழாச் சடங்குக் கலையாகத் தமிழகத்தில் உள்ளது. மற்றவை மக்களிடையே பொழுதுபோக்குத் தொழில்களாக நிலை கொண்டுள்ளன.
டேப்பிசைக் கலையின் தனித்தன்மை:-
ஒருவரே பறையினை இசைத்துக் கொண்டு பாடலாம். பாடுபவர் தன் கற்பனைக்கேற்ப இசையினை ஒழுங்கு செய்து கொள்ளலாம். பாடு பொருளுக்கேற்பவும் சூழலுக்கேற்பவும் இசையின் தாள ஒழுங்குகள் பாடுபவரின் பாடலுடன் கலந்து கேட்பவருக்கு இனிமையை வழங்க வல்லன.
கற்றுக் கொள்வதற்கு எளியது. இசைக் கருவியினை எடுத்துச் செல்வதற்கும் கையாள்வதற்கும் மிகவும் எளிது. பாடல்கள் பாடுவதற்குரிய பயிற்சி இருந்தால் போதுமானது. கேட்பவரைத் தன்வயப்படுத்தும் இசை கூறுகளை உடையது. பாடல்களுக்கும் கட்டுப்பாடுகள் இல்லை. எப்பொருள் பற்றியும் பாடல்கள் அமையலாம். மக்களிடையே காலம் காலமாகப் பயன்படுத்தப் பெற்று வரும் கலை. விழாச் சடங்குகளுடன் இணையாமல் தனித்ததொரு கலையாகத் தொடர்ந்து வருவது. எச்சாதியினருடனும் தற்காலத்தே தொடர்புடையதாகவும் இக்கலை இன்று இல்லை. எவர் வேண்டுமானாலும் இசைத்துப் பாடும் கலையாக வழக்கில் இருந்து வந்துள்ளது. இன்று வரையில் ஆங்காங்கே இக்கலை அழியாமல் மக்களிடையே பயில்வில் உள்ளது.
டேப்பிசைக் கலையின் வரலாறு:-
நமது தமிழகத்தில் டேப்பிசைத்துப் பாடும் கலையினைக் கலைஞர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஒரு கூறாக மக்களிடையே காந்தியச் சிந்தனைகளையும், விடுதலைப் பாடல்களையும் பாடி மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினர். இவர்களின் முயச்சியும் ஆர்வமும் விடுதலை வேட்கையுணர்வும் ஆங்கிலேயர்களுக்கு அடங்காத கோபக் கனலை மூட்டின. எனினும் பல டேப்பிசைப் பாடல்கள் இக்கலையிணைப் பல்வேறு இன்னல்கட்கிடையிலும் தொடர்ந்து செய்து விடுதலைக்கு அருந்தொண்டாற்றினர்.
எனினும் விடுதலைக்குப் பிறகு இக்கலைஞர்களை அரசும், ஆட்சியாளரும் கவனிக்கத் தவறி விட்டனர். பல கலைஞர்கள் மக்கள் கூடுமிடங்களில் நின்று திரைப்படப் பாடல்கள், தனிப்பாடல்கள் அரசியல் பாடல்கள் எனப் பாடிப் பொருள் தேடிப் பிழைப்பு நடத்தினர்.
விடுதலை இந்தியாவில் சமூக விடுதலைக்கு வித்திட்டு வளர்த்த இயக்கங்களில் முதன்மையான மக்கள் இயக்கமாக விளங்கியது திராவிட இயக்கம். இவ்வியக்கத்தினைத் தோற்றுவித்து நடத்திச் சென்ற ஈ.வே. இராமசாமிப் பெரியாரின் சிந்தனைகளும் பேச்சுகளும் மக்களிடையே பெருமெடுப்பில் வரவேற்பை பெற்றன. சிற்றூர்களிலும் பேரூர்களிலுமென மக்கள் இவரது கருத்துக்களைக் கேட்கத் திரண்டனர். இந்நிலையில் டேப்பிசைக் கலைஞர்கள் மக்களிடையே பெரியாரின் சிந்தனைகளையும் சமூக விடுதலையினையும் பாடு பொருளாக்கிப் பாடல்களை மக்கள் முன் டேப்பிசைத்து பாடி மகிழ்ந்ததோடு பொருள் வருவாயினையும் பெற்றனர். தொடர்ந்து டேப்பிசைக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கழக மேடைகளில் தொடர்ந்தன. மதிப்பும் கூடியது. இக்கலையும் மறுமலர்ச்சியுடன் நிகழ்ந்தது.
திராவிடக் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய நிலையில் நாட்டுப்புற டேப்பிசைக் கலைஞர்கள் அக்கழகத்தில் இணைந்து கொள்கைப் பிரச்சாரம் செய்தனர். இதனால் மக்களிடையே இக்கலைக்கு மேலும் மதிப்புடனான வரவேற்புக் கிடைத்தது. திராவிடர் கழகம் தி.மு.கழகம் மற்றும் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கென்று டேப்பிசைக் கலைஞர்கள் பலர் நாள்தோறும் மக்கள் முன்பு பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். இக் கலைஞர்கள் அரசியலில் முழுநேரம் தங்கள் பணிகளைச் செய்யத் தொடங்கிய நிலையில் பல டேப்பிசைக் கலைஞர்கள் தொடர்ந்து நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியும் நிகழ்ச்சிகளை நடத்தியும் வந்தனர். அரசியல் டேப்பிசைப் பாடகர்களும் இன்றைய நிலையில் அருகி விட்டனர். கடைசியில் எஞ்சிய சிலரும் மீண்டும் நாட்டுப்புற நிகழ்ச்சிகளுக்குத் திரும்பிவிட்டனர்.
இன்றைய டேப்பிசைக் கலைஞர்கள்:-
இன்றைய டேப்பிசைக் கலைஞர்கள் பெரும்பாலும் நாட்டுப்புறங்களில் குறிப்பாக ஈரோடு, சேலம், கோவை, தஞ்சை மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகின்றனர். அதிலும் கொங்கு மண்டலத்தில் இக்கலைஞர்களை இறப்பு வீடுகளுக்கு அழைத்துப் பாடச் செய்தல் பெருமரபாக உள்ளது. தொழில் முறைக் கலைஞர்களான இவர்கள் சூழலுக்கேற்ப பாடல்களைப் பாடி வருகின்றனர்.
இறப்பு நிகழ்ந்த வீடுகளில் இரவு கண் விழிக்க வேண்டியிருப்பதால் இவர்களை அழைத்துப் பாடச் செய்கின்றனர். அதே போன்று நீத்தார் நினைவுச் சடங்கு நாள்களின் இரவுப் போழ்தினைக் கழிப்பதற்கும் இவர்களின் பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வது சேலம், ஈரோடு மாவட்ட ஊர்ப் புறங்களில் பெருவழக்காக உள்ளது.
பாடுபொருள்:-
இன்றைய டேப்பிசைக் கலைஞர்கள் நாட்டுப்புறங்களில் சூழல்களுக்கேற்பப் பாடு பொருள்களைத் தேர்ந்து கொள்கின்றனர். இறப்பு நிகழ்ந்த வீட்டில் இறந்தவரின் வயதிற்கேற்பப் பாடல்களை அமைத்துக் கொள்கின்றனர். வயது முதிர்ந்தவர் என்றால் அதனைக் கல்யாணச் சாவு என்று கூறுவது நாட்டுப்புற மக்கள் மரபு. வாழ்ந்து பெருகி இறப்பவர் என்பதனால் பிரிவுத் துயரம் பெரிதில்லை. ஆகவே குழந்தைகள் மற்றமுள்ள உறவினர்களின் துயரினை மாற்றுவதற்காகக் கலைஞர்கள் கேளிக்கைப் பாடல்கள், கதைப்பாடல்கள், கொலைச்சிந்துப் பாடல்கள் ஆகியவற்றைத் தேர்ந்து பாடுகின்றனர்.
இறந்தவர் இளவயது என்றாலோ துயர மிகுந்த இறப்பு என்றாலோ பெரும் பகுதியும் இழப்பின் துயரத்தினை மாற்றிட ஒத்த இழப்புகளையும் பேரழிவுகளையும் நிலையாமையினை உணர்த்துவதுமாகிய பாடல்களையும் கதைப் பாடல்களையும் தேர்வு செய்து பாடுகின்றனர். மேலும் இறந்தவர்களைப் பற்றியும் இடத்திற்கேற்றாற்போன்று பாடல்களைக் கட்டிப் பாடி மக்களின் மதிப்பினைப் பெறுவர்.
இக்கலைஞர்கள் வாய்ப்பற்ற நாள்களில் பொது மக்கள் கூடுமிடங்களில், விழாக்கள் நிகழும் கோயில்களின் முன்பு பாடல்களை டேப்பில் இசைத்துப் பாடி மக்களிடம் பொருள் பெற்று வருகின்றனர். இந்நிலைகளில் இவர்கள் மக்களின் மன இயல்புகள், சூழல் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு பல்சுவைப் பாடல்களைப் பாடிவருகின்றனர். கோயில் விழாக்களில் தெய்வப் பாடல்கள் கேளிக்கைப் பாடல்கள் இடம் பெறுகின்றன. மேற்கண்டவாறு இவர்களின் பாடுபொருள் சூழலால் தீர்மானிக்கப்படுகின்றது. பக்கிரிகள் எனப்படும் இசுலாமிய டேப்பிசைக் கலைஞர்கள் குறித்து இக்கட்டுரையில் பேசப்படவில்லை. ஏனெனில் முழுக்கவும் சமயம் சார்ந்து அவர்களது பாடல்கலை அமைந்துள்ளமையால் இப்பொதுக் கலையில் இக்கலை இணைத்து நோக்கப் பெறவில்லை.
டேப்பிசையின் இன்றைய நிலை:-
ஜெகமெங்கும் புகழ்பெற்ற டேப்பிசை மன்னர் என்றும் தங்கமெடல், தங்கத்தோடா பரிசு பெற்ற டேப்பிசைப் புயல் என்றெல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிற்பகுதியினும் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரையில் சிறப்புடன் திகழ்ந்த டேப்பிசைக் கலைவாணர்கள் வழிமுறை இன்று மறைந்து வருகின்றது. ஆங்காங்கே ஒரு சிலரே இக்கலையினைத் தொழில் முறையாகக் கொண்டுள்ளனர். பலர் பகுதி நேரத் தொழிலாக மாற்றிக் கொண்டுவிட்டனர். இன்னும் சில ஆண்டுகளில் இக்கலை மறைந்து போய்விட வாய்ப்புகள் மிகுதியாக உள்ளன. இலாவணி பாடும் கலையும் மறைந்து வருகின்ற நிலையில் இக்கலையினைக் கற்று கொடுப்பவர்களும் அருகில் போய்விடுவர். நமது கண்முன்பே பல நாட்டுப்புறக் கலைகளும் மரபுகளும் அழிந்தும் அழிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வரக் காண்கிறோம். அந்த வரிசையில் முதலிடம் பெற்றுள்ள டேப்பிசைக் கலையினைக் காக்க வேண்டிய நாட்டுப்புறத் தேவை இன்றுள்ளது.
டேப்பிசை பேணப்பட வேண்டுவதற்கான காரணங்கள்:-
மக்கள் முன் எந்த இடத்திலும் எச் சூழலிலும் நிகழ்த்தக் கூடிய கலையான டேப்பிசை மரபு வழிபட்டது. மரபு வழிப் பண்பாட்டின் கூறுகளை உள்ளடக்கியது. எளிதில் செய்திகளை உள் வாங்கிக் கொண்டு இக்கலை வாயிலாக மக்களிடம் நலம் நினைக்கும் செய்திகளை நூற்றுக்கு நூறு சதவிகிதம் கொண்டு சேர்க்கவியலும். மக்கள் ஈர்க்கும் ஆற்றல் பறை எனும் கருவிக்கு உண்டு.
''ஓர்த்தது இசைக்கும் பறைபோல'' என்று சங்கப் பாடல் குறிக்கும். கேட்பவர்கள் எண்ணியதைக் கருவியை வாசிக்கின்றவன் எண்ணியதை இப்பறை இசை வழங்கவல்லது. பறையிசைக்குப் பாடுபவரின் உணர்ச்சியைப் புலப்படுத்தும் ஆற்றலுடன் அந்த உணர்ச்சியைக் கேட்பவனுக்கும் கொண்டு சேர்த்துவிடும் ஆற்றலும் உள்ளது. எனவே அத்தகைய மரபு வழிப்பட்ட இசைக் கருவியினை மக்கள் பயன் கொண்டு பல்வேறு பொது நலப் பயன்களைப் பெறலாம். ஆகவே இவ்விசைக் கலையை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது நமது கடமை. அத்துடன் பண்பாட்டிற்கு ஆற்றும் தொண்டாகவும் நாம் கொள்ள வேண்டும்.
இந்த இசைக் கருவியையும் கலை வடிவத்தையும் நாம் பயன்கொண்டு இன்றைய மக்களிடையே சமூக நல்லிணக்கத்தை வளர்த்திட வகையுண்டு. சமூகக் கேடுகள், சாதி, மத, இனச் சண்டைகள், பூசல்களால் நிகழும் அவலங்களைப் பாடுபொருளாக்கி டேப்பிசைக் கலைஞர்கள் மக்கள் மன்றத்தில் பாடுவதற்கு உதவி செய்தால் மக்களிடையே சமூக நல்லிணக்கம் பெருகும்.
அதற்கு எளியதும் நேரியதுமான வழிமுறைகளை இக்கலை கொண்டு திகழ்கின்றது. இலாவணிக் கலைஞர்கள் டேப்பிசைக் கலைஞர்களைப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றுமுள்ள கல்வி நிலையங்களுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு உரிய மதிப்பளித்து அரசு நிதியுதவி வழங்கி இன்றைய இளம் தலைமுறையினர்க்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
டேப்பிசை வளர்வதற்குரிய வழிமுறைகள்:-
டேப்பிசைக் கலைஞர்களை அரசு மதிப்பளித்து அவர்களைச் சுதந்திரமாகப் பாட அனுமதிக்க வேண்டும். அவர்கள் நாட்டுப்புறக் கலைஞர்கள். அவர்கள் பாடல்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளையும் அரசும், காவல்துறையும் விதிக்கக் கூடாது. எந்த நிலையிலும் அவர்களைச் சந்தேகக் கண்கொண்டு காவல்துறை நோக்கக்கூடாது. மக்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் ஓர் கலையாக டேப்பிசைக் கலையினைக் கொண்டு அவர்களின் பாடுபொருளை நோக்க வேண்டும்.
ஆண்டு தோறும் டேப்பிசைக் கலைஞர்களில் குறைந்தது ஓரிருவருக்காவது கலைமாமனி விருது போன்ற விருதுகளை வழங்கி அரசு மதிப்பளிக்க வேண்டும். பிற கலைஞர்களைப் போன்று அவர்களுக்கும் நிதியுதவி மற்றும் அரசு விழாக்களில் மதிப்பும் வாய்ப்பும் வழங்க அரசு முன்வர வேண்டும்.
டேப்பிசைக் கல்வியை ஆர்வமுள்ள அனைவரும் கற்றுக் கொள்வதற்கு வழிவகைகள் செய்தல் வேண்டும். திரைப்படங்களில் கலைவாணர், எம்.ஜி.ஆர்., சிவாஜி எனத் தொடங்கி இன்று வரையில் டேப்பிசையினைத் திரைப்படங்களில் ஓரிரு பாடல் காட்சிகளில் அமைத்துப் பெருமை தேடித் தந்தனர். ஆனால் இன்று இக்கலை வடிவமும் கலைஞர்களும் பேணப்படாமல் இருப்பது நாட்டுப்புறவியலுக்குப் பேரிழப்பேயாகும்.
பயன்பாட்டு நோக்கில் மரபுவழி இசைக் கருவியான பறையும் டேப்பிசையும் மக்களிடையே சமூக நல்லிணக்கத்தையும் அரசு நலத்திட்டங்களையும் சமூக நலத்திட்டங்களையும் கொண்டு சேர்ப்பதற்குரிய கூறுகளைக் கொண்டுள்ளன. ஆகவே மக்களும் அரசும் கலையினைப் பாதுகாத்து மதிப்பளித்து வரும் தலைமுறையினர்க்கு வழங்க வேண்டும். அதற்குரிய வழிமுறைகளை உடனடியாகச் செயல்படுத்த வேண்டிய நேரம் இதுவேயாகும்.
நன்றி: வேர்களைத் தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக