15/03/2011

குழந்தை இலக்கியத்தில் விடுகதைப் பாடல்கள் - சி. அங்கையற்கண்ணி

விடுகதை என்பது விடுவிக்கப்பட வேண்டிய கதை எனப்பொருள்படும் ஒருவகை இலக்கியமாகும். நாட்டுப்புறப்பாடல்களில் கிராமப்புற மக்களின் சிந்தனைக்கு ஒரு பயிற்சியாகவும், அறிவுக்கு உரைகல்லாகவும், சிந்தனைகளின் தூண்டுகோலாகவும் விடுகதைகள் நிலவி வருகின்றன. தற்கால இலக்கிய வகையில் குழந்தைப்பாடல்கள் பல்வேறு அறிஞர்கள் பார்வையில் ஆய்வுக்கு உட்பட்டு வருகின்ற நிலையில் அத்தகைய பாடல்களில் ''விடுகதை தாக்கம்'' எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம் எனலாம்.

விடுகதையானது நாட்டுப்புற இலக்கியங்களில் தனக்கெனத் தனியிடம் பெற்றுத் திகழ்வதால் இது கிராம மக்களின் செல்வாக்குப் பெற்ற இலக்கியவகை எனலாம். இலக்கியத்தில் இதனைப் புதிர் என்று அழைப்பர். இதனைத் தொல்காப்பியர் பிசி என்று குறிப்பிடுகின்றார்.

''ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும்

தோன்றுவது கிளந்த துணிவினானும்

என்றிரு வகைத்தே பிசி நிலை வகையே''

என்பர் தொல்காப்பியர். உவமைப் போல வருவது என்றும் வெளிப்படையாக விடைதெரிவது என்றும் விடுகதையை இருவகைப்படுத்துவார்.

விடுகதைகளின் இயல்பு:-

குழந்தைகளுக்கு அறிவு புகட்டும் வாயிலாகச் செயல்பட்டு வருவதாலும், பெரும்பாலும் பயின்று பாதுகாக்கப்பட்டு வருவதாலும் விடுகதைகளைக் குழந்தை இலக்கியத்தின் ஒரு பகுதியாகக் எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார் ச.வே. சுப்ரமணியன். எனவே விடுகதைகளில் குழந்தைகளுக்கு ஈடுபாட்டை ஏற்படுத்தவும் குழந்தைகளின் அறிவு வளத்தை அதிகரிக்கவும் குழந்தைக் கவிஞர்கள் அவர்களின் பாடல்களில் ஒன்றாக விடுகதையும் போற்றியுள்ளனர்.

எல்லை காண முடியாத

இடங்கள் பரந்து கிடந்திடுவேன்

நல்ல நீல நிறத்தாலே

நாளும் காட்சி தந்திடுவேன்

இரவும் பகலும் உறங்காதே

எனது குரலை முழக்கிடுவேன்

தெரியாத ஒன்றைக் குழந்தையின் சிற்றறிவுக்கு ஏற்ற வகையில் எடுத்துக் கூறிக் கடலின் நிறத்தையும், அதன் தன்மையையும், அமைப்பையும் எடுத்துக்காட்டும் பாங்கு இங்குப் போற்றற்குரியது.

கவிஞன் கூற வந்த கருப்பொருளை மறைத்து அதனின் தோற்றம், இயல்பு ஆகியவற்றை விளக்கிக் காட்டுவதாகவும் உள்ளது.

கோடைக்காலம் கிடைக்கும் - ஆனால்

கோவாப்பழம் இல்ல

ஓடைக்குளிர்நீர் உள்ளே உண்டு

உண்மை இளநீர் அல்ல

எனத் தொடங்கும் விடுகதை குழந்தைகள் சிறிது நேரம் தங்கள் சிந்தனையைப் பயன்படுத்தி ''நுங்கு'' என்று உரைப்பது போல அமைந்துள்ளது. நாட்டுப்புறங்களில் வாய்மொழியாக வழங்கி வருகின்ற இலக்கிய வகையாக விடுகதைகள் விளங்கி வந்தாலும் அதிலும் சில அறிவியல் உண்மைகள் இருப்பதை நன்கு உணர முடிகிறது.

உள்ளே இருந்தால் ஓடித்திரிவான்

வெளியில் வந்தால் விரைவில் மடிவான்

உடலுக்குள் ஓடுகிறவரை இரத்தம் கெடுவதில்லை. உடலைவிட்டு வெளிவந்தவுடன் ஆக்ஸ’ஜன் வாயு பட்டவுடன் அறிவியல் மாற்றம் ஏற்பட்டு உறைந்துவிடும் என்ற உண்மையைக் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.

விடுகதையின் வகைகள்:-

விடுகதைப் பாடல்களில் சில சொல் விளையாட்டு முறையில் அமைந்துள்ளது. குழந்தைகளுக்குப் பொழுது போக்காகவும் அமைந்து மேலும் சிந்தனைத் திறன்களை வளர்க்கும் முறையில் உள்ளது.

மீன் பிடிக்க உதவிடுமரம்

இரண்டு ஈறும்

மேலோர்கள் விரும்பிடுவார்

முதலும் ஈறும்

முதனொத்த களிப்போடும்

மூன்றெழுத்தால்

தெரிந்திருந்தால் சொல்லிடுவாய்

பதிலைத் தம்பி

இந்த விடுகதையில் இரண்டாவது எழுத்தும் இறுதி எழுத்தும் இணைகின்ற போது உருவாகும் ''வலை'' மீன்பிடிக்க உதவும். முதல் எழுத்தாகிய ''க'' ஈற்றெழுத்தாகிய ''லை'' இணைந்தால் உருவாகும். ''கலை'' என்பது சான்றோர்களால் விரும்பப்படுவது என்று கூறும் விடுகதையில் கவலை என்ற விடையைக் பகருவது குழந்தைகளுக்கும் இன்பம் பயக்கும்.

விடுகதையின் வடிவங்கள் பல. பெரும்பாலான விடுகதைகளின் தன்மைகளை நோக்கின் அவை ஓசை நயம் உள்ள கவிதைகள் போலக் காணப்படுகின்றன. குழந்தைக் கவிஞர்கள் அழ. வள்ளியப்பா, பூவண்ணன், தண்டாயுதம், வாணிதாசன் போன்றோர் பல்வேறு படைப்புகளில் விடுகதைப் பாடல்கள் புனைந்துள்ளனர்.

சின்னப் பையனைப் பிடித்தேன்

மஞ்சள் சட்டையைக் கிழித்தேன்

வாய்க்குள் போட்டு அடைத்தேன்

வயிற்றுக்குள்ளே சேர்த்தேன்

எனற அழ. வள்ளியப்பாவின் விடுகதைப் பாடலில் இயைபு என்பது தலைமையாக இடம் பெற்று உள்ளது.

எனவே குழந்தைகளின் அறிவை வளர்ப்பதும், சிந்தனைகளை ஊக்குவிப்பதும், ஒரு கருத்தை மற்றொரு கருத்தோடு ஒப்பு நோக்குவதையும், கற்பனை ஆற்றலை வளர்ப்பதும், குழந்தைகளைச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பேசும் ஆற்றலை உருவாக்குவதும் விடுகதைகளின் தலையாய பணியாக அமைந்துள்ளது எனலாம், குழந்தைகளுக்கு மட்டுமின்றிப் பெரியவர்களுக்கும் கூட பொழுதை இனிதாக மாற்றும் திறன் கொண்டவை விடுகதைப் பாடல்களாகும்.

நன்றி: வேர்களைத் தேடி

 

கருத்துகள் இல்லை: