28/03/2011

அப்பர் தேவாரத்தில் நாட்டார் வழக்குகள் - கோ.ப.நல்லசிவம்

பக்தி இயக்கம் கண்ட திருமுறைச் சான்றோர் மக்களோடு மக்களாக, அவர்களின் பண்பாடு, கலாச்சாரங்களோடு பழகிய பான்மையராதலின் அவர்தம் பாடல்களில் இந்நாட்டுப்புறத் தன்மைகளும், வழக்காறுகளும் மிக்குள. குறிப்பாக பாரதநாடு முழுவதும் பயணம் மேற்கொண்ட அப்பர் சுவாமிகள் பல்வேறு மொழி பெயர் தேயங்களைக் கண்டவர். ஆங்காங்குள்ள பல்வேறு இன, மொழி, தொழில், பழக்க, வழக்க மக்களைச் சந்தித்தவர். இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் நாட்டு மக்களை கிராமப்புற மக்களை நன்குணர்ந்தவர். மக்களோடு ஒன்றிய எளிமையான சரியைநெறி பக்தியை மேற்கொண்டவர். எனவே அம்மக்களின் மொழியும், வழக்கும் அவர்க்குக் கைவந்த கலையாக, பாடல்களில் கோலோச்சுகின்றன. இலக்கியம் காலத்தை, வாழ்க்கையைக் காட்டும் கண்ணாடி என்பர். இதற்கேற்ப அப்பர் சுவாமிகள் இலக்கியங்களில் நாட்டு மொழியும், நாட்டு வழக்கும் இயல்பாகப் பதிந்துள்ளமை காணலாம்.

பக்தி என்பதும், வழிபாடு என்பதும் எல்லார்க்கும் பொதுவானவை என்பதையும் எளியதாக மேற்கொள்ளத்தக்கவை என்றும் வலியுறுத்திப் பாடியவர் அப்பர் சுவாமிகள். மாபெரும் சைவ சித்தாந்தங்களையும், தத்துவங்களையும் எளிய நடையில் உவமைகள், பழமொழிகள், நாட்டுப்புற வழக்காறுகளின் வழியாக விளக்கியுள்ளமை, அவர்தம் பக்தியியக்கக் கொள்கை பரப்பல் உத்தியின் தலையாய செயற்பாடாக அமைந்தது எனில் அது மிகையன்று.

சொல்லாட்சிகள்:-

சொல்லாட்சியில் இரண்டு நிலைகளுண்டு. ஒன்று இலக்கிய, இலக்கண, வல்லுநரால் ஆளப்படுவன. மற்றொன்று நாட்டுப்புற மக்களால் பேச்சு வழக்கில் வழங்கப்படுவன. முன்னையது ''Classical'' வகையைச் சுட்டும், பின்னையது ''Folk-Lore'' எனும் பிரிவில் அடங்கும். இலக்கிய, இலக்கணங்களில் பொதுவாக மேற்சொன்ன செவ்வியல் சொல்லாட்சியே பெரிதும் இடம்பெறும். ஆயின் அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் பல்வேறு இடங்களில் நாட்டுப்புறச் சொல்லாட்சிகளும் இடம்பெறுகின்றன.

ஜ-ச மாற்றம்:-

பொதுவாக நாட்டுப்புற வழக்குகளில் ''ஜ'' எனும் எழுத்து ''ச'' வாக வழங்கப்படுதல் காணலாம். சான்றாக ''ராஜா'' என்பதனை ''ராசா'' என்னப் பெத்த ராசா, மவராசா எனவும் ''பூஜை'' என்பதனை ''பூசை'' எனவும் வழங்குவர்.

''ஏ கும்பம் மேல கும்பம் வச்சி...;

ஏ குரு பூசை செய்யயிலே...

"ஏ செம்பு மேல செம்பு வச்சி...;

ஏ செவ பூசை செய்யயிலே......

"ராச குலம் பெத்தெடுத்த

என் பூசைமணி ரெத்தினமே'' - நாட்டுப்புறப் பாடல்கள் (பக்.65,25)

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் இதுபோன்ற வழக்காறுகளை மிகுதியாகக் காணலாம்.

''பூசனைப் பூசனைகள் உகப்பானை'' 4:7:6

''வெள்விடைக் கருள்செய் விசயமங்கை'' 5:71:3

''வேடனாய் விசயன்தன் வியப்பைக் காண்பான்'' 6:83:5

த-ச மாற்றம்:-

மேற்காட்டியவாறே நாட்டுப்புற வழக்குகளில் பெரும்பாலும் ''த'' - ''ச'' வாக ஒலிக்கப்பெறுதலும் இயல்பான ஒன்று. ''வைத்த'' என்பதை ''வைச்ச'' என்றும் ''நித்தம்'' - ''நிச்சம்'' என்றும் வழங்கப்பெறுதல் கண்கூடு. இவ்வழக்குகளும் அப்பர் தேவாரத்தில் இடம் பெறுகின்றன.

''வைச்ச பொருள் நமக்காகுமென்றெண்ணி'' நமச்சிவாய 4:80:4

''வைச்ச மாநிதி யாவர் மாற்பேறரே'' 5:60:2

''நிச்சல் நீறணி வாரை நினைப்பதே'' 5:92:8

''நமச்சிவாயவே நானறி விச்சையும்'' 5:90:2

இவை போலவே ''ஐந்து - அஞ்சு'' எனவும் வானம் - மானம் எனவும் வழங்கப்பெறுதலை அப்பர் சுவாமிகளும் கையாள்கிறார்.

''அஞ்சு சடை கொஞ்சி வரும்...

அழகு சடை மேல வரும்...."

''அஞ்சு சிறு நாகம்

அடைஞ்சிருக்கு அடையிலே..." நாட்டுப்புறப்பாடல்கள் (பக்.26)

''ஓதி அஞ்செழுத் தும்முணர் வார்கட்கு'' 5:60:1

"அஞ்சு கொ லாமவர் ஆடர வின்படம்

அஞ்சுகொ லாமவர் வெல்புல னாவன

அஞ்சுகொ லாமவர் காயப்பட் டான் கணை

அஞ்சுகொ லாமவர் ஆடின தாமே'' 4:18:5

''செம்மானத் தொளியன் மேனியான் காண்'' 6:24:1

''செம்மான ஒளிகொள் மேனி'' 4:79:1

இவ்வாறு நாட்டுப்புறச் சொல்லாட்சிகள் அப்பர் தேவாரத்தில் மிகுந்து காணப்படுவதன் காரணம் பக்தியும் வழிபாடும் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும் எனும் அப்பர் சுவாமிகளின் அவாவேயாகும். பக்தியை ஒரு குடத்திலிட்ட விளக்காக இல்லாமல் குன்றின் மேலிட்ட விளக்கமாக மாற்றும் தகைமையை இச் சொல்லாட்சிகள் நன்குணர்த்துகின்றன.

பழமொழிகளும் - உவமைகளும்:-

பழமொழிகள் - அனுபவமொழிகள்.

பல்லாண்டு காலமாக மக்களின் வழக்கிலிருந்து தோன்றியனவே இப்பழமொழிகள்; மக்கள் தாம் வாழ்வில் கண்ட அனுபவப் பிழிவுகளை இப்பழமொழிகளாக வரும் தலைமுறைக்கு உணர்த்தினர். சூடுபட்டவன்தான் மற்றவனுக்கு வெப்பத்தின் வெம்மையைப்பற்றிக் கூறமுடியும். அதுபோல மக்கள் தாம் அனுபவித்துக் கண்ட வாழ்வியல் உண்மைகளை, நிகழ்வுகளை, அறங்களை இப்பழமொழிகள் உவமைகளாகப் பதிவு செய்தனர். இவை பல பக்கங்களில் கூற வேண்டிய பொருளை ஒரு சில சொற்களில் உணர்த்திவிடும் தன்மையன. இவை நாட்டுப்புற மக்களின் இரத்தத்தோடு இரத்தமாக நீக்கமற நிறைந்திருக்கும். இதனைக் கூர்ந்து நோக்கிய அப்பர் சுவாமிகள் தம் தேவாரத்தில் பல பழமொழிகளைப் பதிவு செய்துள்ளார். பழைய நாடகங்களில் காவலர், சேவகர், தோட்டக்காரர் போன்றோர் பேச்சுகளில் பழமொழிகளைப் புகுத்திக் காட்டுவதைச் சங்கரதாஸ் சுவாமிகள், பாஸ்கரதாஸ் நாடகங்களில் நாம் காணலாம். அண்மையில் வெளிவந்த திரைப்படங்களில் கூட இவ்வழக்குகள் இடம் பெறுகின்றன. சான்றாக, "ஒரு பேச்சுக்குச் சொன்னேன், குத்து மதிப்பு, இடக்கு முடக்கா'' போன்றவைகளைக் காணலாம்.

அப்பர் தேவாரத்தில்,

''இருட்டறையில் மலடுகறந் தெய்த்தவாறே'' 4:5:6

''கரும்பிருக்க இரும்பு கடித தெய்த்தவாறே'' 4:5:10

''கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே'' 4:5:1

''கொத்தைக்கு மூங்கர் வழிகாட்டுவித் தென்னை'' 4:99:2

''முயல்விட்டுக் காக்கைப்பின் போனவாரே'' 4:5:2

''விளக்கிருக்க மின்மினித்தீ காய்ந்த வாறே'' 4:5:7

''வெங்கதிர் கண்ட அப்புற்பனி கெடுமாறது போலுமே'' எனபழமொழிகளும்,

''ஓடும் நீரினை ஓட்டைக் குடத்தட்டி

மூடி வைத்திட்ட மூர்க்க னொ டொக்குமே''

''காம்பில்ல மூழை போல''

''பாப்பின்வாய்த் தே€‘ போல''

என உவமைகளும்,

''புளியம் வளாரால் மோதுவிப்பாய்''

''முருட்டு மெத்தையில் முன் கிடத்தாமுனம்''

என வழக்காறுகள் பலவும் இடம் பெறுகின்றன. இந்நாட்டார் வழக்காறுகள் அப்பர்தம் பாடல்களில் மிகுந்திருப்பதைக் காணும்பொழுது இலக்கியம் வந்த தன்மையையும் கொண்டிலங்க வேண்டும் என்பது புலனாகும். இவையெல்லாம் உற்று நோக்குங்கால் அப்பர் பெருமான் பக்தியின் ஆழத்தை. தத்துவத்தை விளக்க முயலும்போது ஒலிப்பில் எளிதாக வழங்கும் சொற்களையே இயல்பாகப் பயன்படுத்துகிறார் என்பதும், பக்தியின் பொதுமையை உலகோர் உணர வேண்டும் எனும் பொதுநல நோக்கையும் நமக்குக் காட்டுகின்றன.

நன்றி: வேர்களைத்தேடி

 

கருத்துகள் இல்லை: