28/03/2011

ஏசல் பாடல்கள் - ஆ.கணேசன்

நாட்டுப்புறப் பாடல்கள் காலத்தை வென்றவை. அரசியல் புவியியல் காரணங்களுக்காக நாம் வகுத்துக் கொண்டுள்ள எல்லைக் கோடுகளைக் கடந்தவை. தொல்காப்பியத்திலேயே ''பண்ணத்தி'' என்று இடம் பெறும் பெருமை வாய்ந்தவை. இயந்திர நாகரிகம் முற்றிவிட்ட நிகழ் காலத்திலும் பாமர மக்களின் வாய்மொழியாகப் புதிது புதிதாகத் தோன்றும் ஆற்றல் கொண்டவை. அவ்வகையில் நாட்டுப்புறங்களில் காணப்படும் ஏசல் பாடல்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

ஏசல்பாடல்களின் தோற்றமும் வளர்ச்சியும்:-

ஏசல்பாடல்கள் எப்பொழுது தோன்றியவை, எக்காலத்திலிருந்து பாடப்படுகின்றவை என்பது ஆய்வுக்குரிய செய்தியாகும். ஏசல் நாட்டுப்புற மக்கள் தங்களது உணர்வுகளை ஜாடையாகப் பேசுவதாகும். இதனை, "ஏசல் என்றால், இகழ்ந்துரைத்தல், திட்டுதலையும் ஏசுதல் என்றே நடைமுறையில் கொள்வார்கள். பெண்கள் ஒருவருக்கொருவர் திட்டிச் சண்டையிட்டுக் கொள்ளும் போது நேரடியாகத் திட்டுவதைவிட ஜாடையாக ஏசுவதே இரசிக்கும்படியாய் இருக்கும்". இன்று ஏசல் பாடல்கள் இலங்கையில் ஆண்களே பாடி வருகின்றனர். ஏசல் பாடல்களின் நோக்கம் மண மக்களையும் அவர் சுற்றத்தாரையும் இகழ்ந்து எள்ளி நகையாடுவதாக அமையும். திருமணம் நிகழும் போது இவ்வேசல் பாடல்கள் இருந்திருக்கலாம் என எண்ண இடமுண்டு. இதனை "அடக்கப்பட்ட உணர்ச்சிகளைத் திருமண விழாக்காலங்களில் வெளிக்காட்டுகிறார்கள். அவை திருமணத்தைச் செழிப்பாக்கப் பயன்படுகின்றது" என்பர் அறிஞர்.

திருமண விழாவில் பாடப்படும் இவ்வேசல் பாடல்கள் "அசாமில் சொரணம்" (Joranam) என்றழைக்கப்படுகின்றன. மைக்கல் குன்றுப் (Maikal Hills) பகுதி மக்களின் மத்தியில் இவ்வேசல் பாடல்கள் இரு சாராருக்கிடையே பாடப்படும் ஆபாசமான பாடல்களாய் உள்ளன என்பர்.

பஞ்சாப், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆபாசமான ஏசல் பாடல்களாகவும், திருமண நிகழ்ச்சிக்குச் சுவையூட்டுவதாகவும் இவ் ஏசல் பாடப்படுகின்றது. ஏசல் பாடல்களில் மணமகளின் நாணம், பெருந்தன்மை, மென்மை ஆகிய தன்மைகளைக் குறிப்பதோடு மணமகன் இதற்கு மாறான பண்புகளை உடையவர் என்றும் விவரிக்கப்படுகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை இப்பாடல்களைத் திருமண விழாவில் பெண்கள் மட்டுமே பாடுகின்றனர் எனலாம். இதனை உறுதி செய்வதுபோல் பொதுவாகப் பெண்களின் பாடல்களே என்று அறிஞர் ஹேம் பருவா கூறுவார்.

பொதுவாக இப்பாடல்கள் மணமக்களிடையே நெருக்கத்தையும் பால் உணர்வுகளையும் ஏற்படுத்திவிடுகின்றன எனலாம்.

ஏசல் பற்றிய சொல் வழக்கு:-

''கல்யாண ஏசலுக்குக் கணக்குண்டோ அத்தானே''

''ஏசத் தெரியலையோ எங்களைத்தான் அத்தானே''

''இன்னமும் சொல்லவென்றால்

இருக்குது வெகு ஏச்சு''

என பேச்சு வழக்கில் ஏராளமாக ஏசல் என்று சொல்லானது உள்ளதை பாடலால் அறியலாம்.

திருமண வீட்டில் இப்பாடல்கள் முதலில் ஏசி வாழ்த்துவதாகவும் முடிவில் வாழ்த்தி முடிவதாகவும் உள்ளது எனலாம். மேலும் ஏசல் பாடல்கள் திருமணத்திற்குப் பின் இரவு வரும் வரையில் மகிழ்ச்சியோடு இருக்கப் பாடும் பாடல்களாகும்.

ஏசல் பாடல்களில் பாடப்பெறுவோர்:-

கிராமப்புறங்களில் திருமணம் முடிந்த பின்பு மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் மணமகளைப் பற்றியும் பெண் வீட்டார் மாப்பிள்ளையைப் பற்றியும், இரு சம்பந்திகளைப் பற்றியும் இகழ்ச்சி தோன்றப் பாடி மகிழ்வதை இன்னும் காண்கிறோம்.

மாப்பிள்ளை ஏசல்:-

மாப்பிள்ளையின் நிறத்தை மணப்பெண் சகோதரிகள் கற்பனை ததும்ப ஏசிப் பாடுவதை,

''கூடம் இருட்டுதடா

கொற்றவனே உன்கருப்பு

மணிவிளக்கு இருட்டுதடா

மன்னவனே உன்கருப்பு''

என்னும் பாடலால் அறியலாம்.

மேலும் மாப்பிள்ளையின் பற்கள் அவற்றில் உள்ள அழுக்கு ஆகியவற்றை சமையல் பொருட்களுக்கு உவமையாக்கி மகிழ்வர். இதனால் பாடுபவர்கள் பெண்கள் என்பதை அறியலாம். இதனை,

''அரிசி அரிச்சாப்போல

அஞ்சாறு பல்லுகளாம்

பருப்பு கடைச்சாப்பல

பல்நிறைய பாசைகளாம்''

என்பதில் அறியலாம்.

மாப்பிள்ளையின் தலை, முடி இவற்றை நாட்டுப்புறங்களில் அதிகமாக காணக்கிடைக்கக் கூடிய பொருள்களோடு ஒப்பிட்டுப் பாடுவர். இதனை,

''பனங்காய்த் தலையழகன்

பன்னாடை மயிரழகன்''

என்பதால் தெரிந்து கொள்ளலாம்.

மாமனார் தயவால் மாப்பிள்ளை வாழ்விதை

''ஒட்டையான ஈயத்தட்டில் ஒழுக ஒழுக சாப்பிட்டவர்- இப்போ

தங்கத் தட்டெடுத்து தத்தித் தத்திச் சாப்பிடுறார்'' என்பதால் அறியலாம்.

மாப்பிள்ளை திருமணத்திற்குப் பின்பு மனைவி மீது பாசம் கொண்டு தாய் தந்தை பேச்சைக் கேட்காமல் புறக்கணிப்பதை எள்ளி நகையாடும் பாடல்களும் உண்டு. இதனை,

''பெண்டாட்டி புடவை என்றால் பிரியமாய்த் துவைப்பார்

தாயார் சொன்னால் தடியால் அடிப்பார்

தகப்பனார் சொன்னால் தார்மாராய்ப் பேசுவார்

பெண்டாட்டி சொல்லுக்குப் பெட்டிப்பாம்பாய் அடங்குவார்'' என வருவதால் அறியலாம்.

பாண்டிய நாட்டில் ஏசல் பாடல்:-

அப்பகுதியில் மணமகனை ஏசிப்பாடும் பாடல் உள்ளதை,

''கம்பந் தவிட்டுக்குக் கையேந்தி நின்றவர்தான்

ஆடுகள் மேய்த்து அவமானப்பட்டவர் தான்...

மாடுகள் மேய்த்து மதிகேடாய்த் திரிந்தவர்தான்

இத்தனை நாளும் இரந்துண்டு வாழ்ந்தவர் தான்'' என்னும் பாட்டு கூறுகிறது.

தொண்டை நாட்டில் ஏசல் பாடல்:-

அங்கு மணமகன் வீட்டுப் பெண்கள் மணமகளை ஏசிப்பாடி எள்ளி நகையாடுவது மிகவும் சிறப்பாக இருக்கும். இதனை,

''ஆத்தூரு வீதியிலே ஆடுமேய்ச்ச பெண்ணடி - நீ

ஆடுமேய்ச்ச பெண்ணடி

ஆடு மேய்ச்ச பெண்ணை இன்று

தேடி வந்தோமே - நாங்கள் தேடி வந்தோமே'' என்ற பாடல் வரிகள் கூறும்.

தஞ்சை மாவட்டத்தில் ஏசல் பாடல்:-

தஞ்சை மாவட்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள,

தேங்காய்க் குலைவெட்டி எங்கள் அண்ணா

தெருவழியே போவையிலே

தேங்காய்க்கு ஆசைவச்சு

வந்தவ நீதானோ?

மாங்காய்க் குலைவெட்டி எங்கள் அண்ணா

மந்தையிலே போவையிலே

மாங்காய்க்கு ஆசைவச்சு

வந்தவ நீதானோ?

என்ற ஏசல் பாடல் மணமகனின் தங்கை தன் அண்ணன் பக்கம் நின்று மணமகளை நோக்கிப் பாடுவதாக உள்ளது.

மேல்மலைப் பகுதிகளில் ஏசல்பாடல்கள்:-

மேல்மலை மக்களான குன்னுவர்கள் அல்லது மன்னாடிகள் மத்தியிலும் ஏசல்பாடல்கள் பாடப்படுகின்றன. தாலி கட்டியபின் பெண்ணையும் மாப்பிள்ளையையும் உட்கார வைத்து அவர்கள் ஏசல் பாடல்கள் பாடுவர். பெண்ணை ஏசிப்பாடும் பாடலில்,

''தங்கமலை மேலே

தருமருமே கொலுவிருக்க

தயிருச்சட்டி நக்கினவ

எங்கிருந்து கிடைச்சாளோ? என்று மணப்பெண்ணை மிகவும் கேலியாக ஏசிப்பாடுவதைக் காணலாம்.

''கொக்குக் கழுத்துபோலக்

குறுங்கொடிந்த மங்கையர்க்கு - எங்கள்

கோவேந்தன் தம்பியரும்

எங்கிருந்து வாய்ச்சார்காண்'' என்று மேலும் மணமகளை கேலி செய்து ஏசிப்பாடுவதைக் காணலாம்.

சம்மந்தி ஏசல்:-

மணப் பெண்ணையும் புது மாப்பிள்ளையும் மட்டுமல்லாமல் சம்பந்திகளையும் கூடச் சில பாடல்கள் கேலி செய்து பாடப்படுவதை

''தஞ்சாவூரு தாசில்காரன்

தாகமாய் இருக்கிறாண்டி

தாகந் தீர்க்கப் போனாயானால்

தாலி பண்ணிக் கட்டுவாண்டி'' என வரும் பாடல் கூறும்.

புராணங்களில் ஏசல்:-

ஏசல்களுள் மிகவும் பெயர் பெற்றது. வள்ளி தெய்வானை ஏசல். எப்போதுமே சக்களத்திப் போராட்டத்தை பாமர மக்கள் விரும்பி வீதியில் நின்று வேடிக்கை பார்ப்பார்கள். அதன் அடிப்படையில் தெய்வானை வள்ளியை ஏசிப்பாடுவதை,

''ஆரடி சிறுக்கி எந்தன் நாயகன் பின்னால் வந்தவள்?

அப்புறத்தில் விலகி நில்லடி - வெகு

மெய்ப்புடன் வீடேற வந்தாய் சொல்லடி'' என்ற பாடல் வரிகளால் அறியலாம்.

பதிலுக்கு வள்ளி ஏசிப் பாடுவதனை,

''தண்முகத்தொடு வந்த எந்தனை

உண்மை சொல்லிப் புணர்ந்த கந்தனை

தள்ளிவிட்டு நானழைத்துப் போகிறேன் - எந்தன்

தந்தைதாயார் வீட்டில் இன்றே சேர்க்கிறேன்'' என்னும் பாடல் பகுதி கூறுகிறது.

கால வெள்ளத்தால் அழிக்க முடியாத கற்கோபுரமாய் நின்று நிலைக்கக்கூடிய நாட்டுப்புறப் பாடல்களில் ஏசல் பாடல்களும் ஒன்று. ஆரம்ப காலத்தில் ஆடவரும் பெண்டிரும் ஒருவரை ஒருவர் கேலி செய்து பாடும் போக்கில் இந்த ஏசல் பாடல்கள் தோன்றி காலப்போக்கில் அது திருமணத்தில் ஒரு சடங்காகவே நிலைப்பெற்று வந்தது. காலப்போக்கில் சடங்கு, சம்பிரதாயங்களும் குறையக்குறைய இப்பாடல்கள் வழக்கில் குறைந்து போய்விட்டன. இருந்தாலும் கிராமத்து மண்வாசனை மாறாத மனிதர்களிடையே இன்னும் இந்த ஏசல் பாடல்கள் ஏற்றம் பெறவே செய்கின்றன.

நன்றி: வேர்களைத் தேடி

 

கருத்துகள் இல்லை: