இசைப்பாடல்களால் ஆன நாடகங்கள் இசை நாடகங்கள் எனப்படும். ஆங்கில மொழியில் இதனை (Opera) என்றழைப்பர் நாடகப் பாத்திரங்களால் பாடியே நடிக்கப்படுகின்ற இவ்வகை நாடகங்கள் தமிழகத்தில் நூற்றுக்கணக்கில் உள்ளன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வெளிவந்த இந்நாடகங்களில் மக்களிடையே வாய் மொழியாக வழங்கி வருகின்ற நாட்டுப்புறக் கதைகளும் புராணக் கதைகளும் இடம் பெற்றன. இவ்வகையில் நாட்டுப்புறத் தெய்வமாக வணங்கப்பட்டு வருகின்ற கெங்கையம்மன் இசை நாடகத்தைத் தொன்மவியல் பார்வையில் ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம். இந்நாடகத்தை வளவனூரைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை என்பவர் இயற்றியுள்ளார். கெங்கையம்மன் வழிபாடு தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. பல இடங்களில் கெங்கையம்மனுக்குக் கோவில்கள் உள்ளன. பெரும்பாலும் இக்கோவில்கள் ஆற்றோரங்களில் அமைந்துள்ளன.
''தொன்மம்'' விளக்கம்:-
''தொன்மம்'' என்பது புராணம் என்பதைக் குறிக்கும் சொல் ஆங்கிலத்திலுள்ள ''myth'' எனும் சொல் தமிழில் ''தொன்மம்'' என்றும் வழங்கப்படுகின்றது. புராணம் பழமையானது. ''தொன்மை தானே உரையொடு புணர்ந்த யாப்பின் மேற்றே'' என்று தொல்காப்பியச் சூத்திரம் கூறுகின்றது. எனவே பழமை என்பதே தொன்மம் ஆகும். நாட்டுப்புறவியலின் அமைப்பில் கோட்பாட்டாளரான விளாடிமிர் பிராப் (Vladimir Propp) என்ற உருசிய நாட்டு அறிஞர் ''தெய்வத்தன்மை வாய்ந்தோரையும் தெய்வங்களையும் பற்றிய கதைகள் புராணங்களாகும். அவர்களையும் அவர்களைப் பற்றிய இக்கதைகளையும் உண்மை என்று மக்கள் நம்புகின்றனர்'' எனக் குறிப்பிடுகின்றார் (நாட்டார் வழக்காறுகள், ப.136). புராணக்கதைகள் நினைவிற்கெட்டாத காலகட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும். உண்மையென்று இவற்றை நம்புகின்ற மக்கள் புனிதமானது என்றும் இதைக் கொள்கின்றனர். அதனால் இக்கதைகளின் மீது ஈடுபாடும் இத்தெய்வங்களின் மீது பக்தியும் ஏற்படுகின்றது. கற்பனைக்கெட்டாத பல்வேறு நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. இப்புராணக்கதைகள் அன்று முதல் இன்று வரை விழுமியத்தோடு வாழ்ந்து வருகின்றன என்பதும் உண்மையாகும். ஏனெனில் மக்கள் பண்பாட்டோடு இணைந்தது தொன்மம். கொங்கையம்மன் நாடகம் கூறுகின்ற அத்தெய்வத்தைப் பற்றிய கதை பழமையானது.
கெங்கைமயம்மன் பிறப்பு:-
நாட்டுப்புறத் தெய்வங்களுக்குப் பிறப்பு உண்டு என்று நம்பப்படுவது நாட்டுப்புற மரபாகும். கெங்கையம்மன் நாடகத்தில் கெங்கையம்மன் பிறப்பு முதலாக அத்தெய்வம் முதன்மைத் தெய்வமாக ஆக்கப்பட்ட நிலைவரை பல தொன்ம நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. பூலோகத்தில் தீய செய்கைகளும், குற்றங்களும், அக்கிரமங்களும் நிறைந்துவிட்டன. இதனால் உயிர்களைத் தண்டிக்கும் பொருட்டாய் எமனுக்கு ஓய்வில்லாமல் தொழில் பெருகிவிட்டது. இதனை,
''பூமியிலே குலப்பழுது நேரா மலும்
பொய் சாட்சி சொல்லி கடன் கழிப்பதாலும்
காமிகளால் அக்கிரமங்கள் மிகுதலாலுங்
கடன் கொடுத்தோர் நாணமுற்றோ இருப்பதாலும்
நேமமுடன் நீதிநெறி பிசகலாலும்
ஆமிதுவே பரகதிக்கு வழியில்லாமல்
அந்தகணும் நொந்து வந்தான்''
என்ற நாடகம் கூறுகின்றது. எமன் தன் குறையை இவ்வாறு பிரம்மனிடத்திலும், பரமசிவனிடத்திலும் பணிந்துரைக்கின்றான். சிவனும் தன் சடாமுடியில் வீற்றிருக்கின்ற கங்கையால்தான் இக்குறைகளை நீக்கமுடியும் என்று கருதி,
''மங்களஞ்சேர் மறைகுலத்திற் செல்வியாகி
மானிடர்க்கு வினைமூட்டி மகிமை காட்டி
பொங்கமுடன் தெண்டித்தால் துதிப்பார் நம்மை
புகழு முண்டு புவனத்திற்கு ஏகுவாயே'' (செங். நாடகம்)
என்று பூலோகத்தில் சென்று பிறக்குமாறு பணிக்கிறார். சிவனது ஏவலுக்கு இணங்கியவாறு கெங்கையம்மனும் பூலோகத்தில், குழந்தைப் பேறின்றி வருந்தும் வேதநாயகி என்ற பிராமணப் பெண்ணின் கையில் கிடைக்குமாறு ஆற்றில் மிதந்து வருகின்றாள். சில காலம் வேதநாயகியிடம் இருந்துவிட்டுத் தவமிருந்து வடவேங்கடத்தில் வீற்றிருக்கின்ற வெங்கடாசலபதியிடம் ஆயுதங்களையும் வரங்களையும் பெற்றுப் பூலோகத்தில் தன் ஆட்சியைச் செலுத்துகின்றாள்.
பொதுவாக நாட்டுப்புற பெண் தெய்வம் சிவன் மனைவியாகவோ சிவனோடு தொடர்புடையவராகவோ படைக்கப்படுவது மரபு. இதனை நாட்டுப்புறத் தொன்மக் கதைகளில் காணலாம். முத்துமாரியம்மன் பார்வதியின் சக்தியாகவும் அம்மை நோய் தீர்க்கும் அருந்தெய்வமாகவும் வணங்கப்பட்டு வருகின்றது. காளி பராசக்தியின் அவதாரம். இவள் மகிஷாசுரனை வென்று நாட்டுப்புற முதன்மைத் தெய்வமாகக் கோவில்கொள்கிறாள் (நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம், ப.196). கெங்கையம்மனும் சிவன் சடாமுடியில் வீற்றிருக்கும் பெண்ணாவாள். வெங்கடாசலபதிக்குத் தங்கையாதலால் அவரிடமிருந்தும் பூலோகத்திலுள்ள பகை நீக்க ஆயுதங்களைப் பெற்று வருகிறாள்.
கெங்கையம்மனின் ஆற்றல்:-
நாட்டுப்புறத் தெய்வங்கள் மிகுந்த ஆற்றல் வாய்ந்த தெய்வங்கள் என்று மக்களால் நம்பப்படுகின்றது. நாட்டுப்புறத் தெய்வ வரலாறு கூறும் தொன்மக் கதைகளில் இதைக் காணலாம். கெங்கையம்மனை முதன்மைப்படுத்துகின்ற இந்நாடகத்தில் அத்தெய்வத்தின் ஆற்றலை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன. மக்களை வருத்தும் நோய் நொடிகளை நீக்குவதும் கொடுமைக்காரர்களைத் தண்டிப்பதும் ஆகிய பண்புகளை நாட்டுப்புறத் தெய்வங்கள் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை நாட்டுப்புற மக்களிடையே உண்டு. கெங்கையம்மன் சிவனது ஏவலால் இவ்வுலகத்தில் ஏற்பட்ட சைவசுரம் என்ற நோயையும், விஷ்ணுவின் ஏவலால் ஏற்பட்ட வைணவசுரம் என்ற நோயையும் எதிர்த்துப் போராடுகின்றாள்.
''அன்பாகுமென் தாயே யாரறிவாருன் மகிமை
தெம்பாயுன் சொற்படிக்கே சேவகமும் செய்திருப்பேன்'' (கெங்கையம்மன் நாடகம், ப.48)
என்று கூறி இரு நோய்களும் அம்மனுக்குப் பணிகின்றன. சைவ, வைணவக் கடவுளர்கள் கொடுத்த இச்சோதனைகளையும் வென்று கெங்கையம்மன் முதன்மை பெறுகின்றாள் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு இயற்கையாக ஏற்படும் நோய்களுக்குத் தெய்வப் பண்பை ஏற்றிச் ''சைவசுரம்'', ''வைணவசுரம்'' என்று பெயரிட்டழைப்பது தொன்மக் கதையின் மரபு.
கெங்கையம்மன் ஆற்றலை வெளிப்படுத்த இந்நாடகத்தில் தொடர்ந்து பல தெய்வங்களோடு போரிட்டு வெல்வதான நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து இடம் பெறுகின்றன. தொன்மக்கதைகளில் ஒரே போக்கினையும் அடிக்கருத்துக்களையும் உடைய நிகழ்ச்சிகள் அடுக்கடுக்காக இடம்பெறுவது மரபாகும்.
இவ்வகையில் நாட்டுப்புறத் தெய்வம் ஒன்றை முதன்மைப்படுத்துகின்ற போது அம்மக்களாலேயே வணங்கப்படுகின்ற பிற தெய்வங்கள் முதன்மைத் தெய்வத்தின் ஆற்றலுக்கு அடங்கியனவாகக் காட்டப்படும் போக்கும் புராணக்கதை மரபில் இடம்பெறும்.
கெங்கையம்மன் நாடகத்தில் 1. கெங்கையம்மன் பத்ரகாளிப் போர், 2. கெங்கையம்மன் வீரப்பதேவன் போர், 3. கெங்கையம்மன் ஐயனார் போர், 4. கெங்கையம்மன் காத்தவராயன் போர், 5. கெங்கையம்மன் மாரியம்மன் போர் என ஐந்து வகைகளில் கெங்கையம்மன் நிகழ்த்தியப் போர்க் காட்சிகளை விரிவாக இசைப்பாடல்களில் காணமுடிகின்றது.
''நெடிய கடல் சூழ்ந்த இப்புவனம் முழுவதும் நம் மானிடரால் செய்யப்பட்ட பூசைகளை ஏற்று அன்னவர்க்கு யாதுங் குறைவின்றிப் பாதுகாத்து வருகிறோம். இப்போது கங்கை என்னும் பெயரை வகித்த ஓர் கன்னியானவள் தன் மகிமையை செலுத்தி வருகின்றாளாம். நீ போய் கங்கையை ஜெயித்து வாராய்'' (கெங்கையம்மன் நாடகம், ப.65). என்று கூறி ஐயனாரப்பன் தனது படை வீரனாகிய வீரப்பத் தேவனை அனுப்புகிறான்.
மாரியம்மன் புதல்வனாகிய காத்தவராயன்,
''பாணம் பூட்டினேன் பிறைமுக பாணம் பூட்டினேன்
விண்ணவராதி மண்ணோடுங் கண்டேக
கத்தளிக்கச் செய்வேன் உக்ரவில் வளைத்தே'' (கெங்கையம்மன் நாடகம், ப.82)
என்று ஆரவாரிக்க,
''வீரமேதடா வுனக்கு இந்த வீமேதடா
ஏது காலமோ வுனக்கிது ஏதகாலமோ
நாதன் சடையிருப்ப தறியாயோ'' (கெங்கையம்மன் நாடகம், ப.82)
என்று கெங்கையம்மன் எதிர்ப்பதும், இதுகண்டு பொறுக்கமாட்டாத காத்தவராயனின் தாயாகிய மாரியம்மன் கெங்கையம்மனைப் பார்த்து,
''ஆட்டியே பம்பரம் போலே வாட்டியே நிமைப்பொழுதில்
பாரில் விழுந்திட வுன்னைக் கூறுகூறாகச் செய்வேன்'' (கெங்கையம்மன் நாடகம், ப.90)
என்று கூறி போரிட இறுதியில் இருவரின் போரும் உச்சநிலையை அடைகிறது. இப்போரினால் இனி பூலோகத்தில் தீங்கு விளையும் என்று கருதி திருமால் தோன்றிக் கெங்கையம்மன் பிறப்பு நோக்கத்தைத் தெளிவுபடுத்துவதாகக் கதை முடிவடைகின்றது. நாட்டுப்புறத் தெய்வங்கள் ஒருவரோடு ஒருவர் பகைமை கொண்டு போரிடும் போக்கினைப் பல்வேறு தொன்மக் கதைகளில் காண்கிறோம்.
பூலோகத்தில் நிலவுகின்ற அக்கிரமங்களை நீக்கும் பொருட்டுக் கெங்கையம்மன் சிவன் வரத்தால் வந்து பிறந்தாள் என்று கூறும்போது பூலோகத்தில் ஏற்கனவே மக்களால் வணங்கப்பட்டு வருகின்ற காளியம்மன், மாரியம்மன், ஐயனார், காத்தவராயன் போன்ற எல்லாத் தெய்வங்களின் ஆட்சியையும் தன்வசமாக்குகிறாள் என்ற கதைப்போக்கு குறிப்பிடத்தக்கது. இக்கெங்கையே முதன்மை தெய்வமாகிறது. மேலும் பில்லி, சூன்யம், வாதம், சுரம் போன்ற நோவுகள் யாவும் தெய்வத்தால் ஏற்படுகின்றது என்று நாட்டுப்புற மக்கள் நம்புகின்றனர். இந்த நோய்களும் நோவுகளும் தெய்வத்தாலேயே நீங்கும் என்பது அவர்களது நம்பிக்கை, இதனால்தான் எல்லா நோய்களையும் கெங்கையம்மன் அழிப்பதாகக் கதைப்போக்கு அமைந்துள்ளது.
கெங்கையம்மன் அந்தனர் குலத்தைச் சேர்ந்தவள் என்பதும் பெருந்தெய்வங்களாகிய சிவனோடும் திருமாலோடும் தொடர்புடையவள் என்று கொண்டு பிற தெய்வங்களெல்லாம் இத்தெய்வத்திற்குள் அடக்கம் என்று கருதியும் கெங்கையம்மனை முதன்மைப்படுத்தும் நிகழ்ச்சிகள் நாட்டுப்புறச் சமயம் பற்றிய கருத்தாக்கத்தில் ஏற்பட்ட மாற்றமாகக் கருதலாம். ''நாட்டுப்புற மதமும் உயர்ந்த மதமும் இணையும்போது நாட்டுப்புறத் தெய்வத்தின் தொன்மம் மாற்றப்பட்ட (அல்லது ஒரு புதிய தொன்மம் படைக்கப்பட்டு) அத்தெய்வம் உயர்ந்ததாகக் கொள்ளப்படும். அத்தெய்வம் பூமியில் இருப்பதற்கான காரணமும் கூறப்படும்'' (நாட்டுப்புறவியல் ஆய்வு முறைகள், ப.234).
நாட்டுப்புறப் பெண் தெய்வத்தின் ஆதி இருப்பிடம் மேலுலகமாகும். இத்தெய்வம் சிவன் அருளால் பூலோகத்தில் பிறப்பெடுத்துப் பூலோகத்தையே தன் உறைவிடமாக்கிக் கொள்ளும். பிணிகள் அனைத்தையும் இத்தெய்வம் நீக்குவாள் என்று நம்பி நாட்டுப்புற மக்கள் வணங்குவார்கள். இந்நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் தொன்மக் கதைகளும் தோற்றம் பெறுகின்றன. ஒரு தெய்வத்தை முதன்மைப்படுத்துகின்றபோது பிற தெய்வங்கள் காவல் தெய்வங்களாகவும், பரிவாரத் தெய்வங்களாகவும் விளங்கும் என்பதும் இந்நாடகக்கதையில் புலனாகிறது.
நன்றி: வேர்களைத் தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக