29/03/2011

கதைப்பாடல் காட்டும் குற்றமும் தண்டனையும் - முனைவர் வே.சீதாலட்சுமி பாஞ்சாலன்

மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கங்கள், வரலாறு, நாட்டு நடப்பு முதலியனவற்றை உண்மையான முறையில் படம்பிடித்துக் கட்டுவனவே நாட்டுப்புற இலக்கியங்கள். மக்களைப் பற்றி மக்களே பாடுவதால் சமுதாயத்தை முழுமையாக அறிய நாட்டுப்புற இலக்கியம் பெரிதும் உதவுகிறது. நாட்டுப்புற வகைகளுள் ஒன்று கதைப்பாடல். கதைப்பாடல் அக்கால சமூகச்சூழலை அறிய உதவுகிறது. கதைப்பாடல்களில் காணப்படும் குற்றமும், அவற்றிற்கு வழங்கப்படும் தண்டனை பற்றியும் ஆராய முற்படுவதே கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

கதைப்பாடல் நீதி வழங்குவது பற்றியும் நீதி வழுவா ஆட்சிபற்றியும் கூறுகின்றன. தந்தை, மகன் என்ற உறவு நிலையில் கூட நீதி தவறா நிலையாகக் காணமுடிகின்றது. அரசன் அநீதிக்குத் துணை நில்லாது அறவழியில் ஆட்சி செய்தான் என்பதைக் கதைப்பாடல்களில் காணமுடிகிறது. சான்று வருமாறு,

''மங்காத உலகத்தை மனுநீதி தப்பாமல் பெற்ற

பிள்ளையானாலும் இன்னொருவன் ஆனாலும்

குற்றமதைக் கண்டளவில் கொன்று விட

வேண்டாமோ, பிள்ளை எனக் கருதி தண்டனைகள்

கொடுக்காதிருந்தால் உனக்கு நீதியல்ல''

என்பதைக் காத்தவராயன் கதைப்பாடல் உணர்த்துகிறது. நீதிக்கு முன் தந்தை, மகன் என்னும் வேறுபாடின்றி நீதி வழுவா முறையுடன் நல்லாட்சி செய்தனர் என்பதை அறிய முடிகிறது.

அந்தணப் பெண்ணைக் கீழ்ச்சாதியைச் சேர்ந்தவன் மணந்து கொள்கிறான். இதனை ஏற்றுக் கொள்ளாத அந்தணர்கள் அரசனிடம் சென்று நீதி வேண்டுகின்றனர். இதனை,

''................... வேதியர்கள் அரசனிடம் முறையிடவே'' எனக் காத்தவராயன் கதைப்பாடல் கூறுகிறது.

''முதலியார் சாதியைச் சேர்ந்த தூண்டிமுத்து அந்தணர் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் அவனைத் தூண்டிலில் போடவேண்டும் என வழக்குரைத்தார். இதனைக் குறுக்களாஞ்சி கதை கூறுகிறது.

இப்பாடல் கருத்துகள் நீதி கேட்டு அரசனிடம் முறையிட்டதை உணர்த்துகின்றன. அரசன் அவற்றை கேட்டு நீதி வழங்கினான். அரசன் கூறும் தீர்ப்பே முடிவானது எனத் தெரிகிறது. நீதி கூறும் அவையம் இருந்ததற்குச் சான்று கிடைக்கப் பெறவில்லை. மக்கள் குறைகளைக் கேட்டு தீர்வு காண்பதில் அரசனே தலைவனாக விளங்கினான் எனத் தெரிகிறது. நீதி வழங்குவதில் அரசன் மாறாமல் இருக்கவேண்டும் என மக்கள் நினைத்தனர். இதனைக் குறுக்களாஞ்சி கதை உணர்த்துகிறது. சான்று வருமாறு:

''குறுக்களாஞ்சி கதையில் தூண்டிமுத்து பூரணவல்லி என்னும் அந்தணப் பெண்ணை மணந்து கொள்கிறான். தூண்டிமுத்து முதலியார் சாதியைச் சேர்ந்தவன். இதனை விரும்பாத பூரணவல்லியின் அண்ணன்மார்கள் அரசனிடம் முறையிடுகின்றனர். தூண்டுமுத்துவைத் தூண்டிலிட வேண்டும் எனக் கூறுகின்றனர். அரசன் வீணாகத் தூண்டிமுத்துவைக் கொல்ல வேண்டாம் எனக் கூறுகிறான். இதனைக் கேட்ட அந்தணர்கள் ஏழு பேரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வதாகக் கூறினார்கள். சூத்திரனுக்காக அந்தணர்கள் இறந்து போனால், அதனால் பழி ஏற்படக் கூடாது என்று கூறித் தூண்டிமுத்துவைக் கொன்று விடுமாறு மன்னன் ஆணையிட்டான்.''

இச்சான்று நீதி வழங்கும் முறையில் அரசன் நீதி வழுவாமல் இருக்கிறான் எனத் தெரிகிறது. அந்தணர்கள் இறப்பினால் தனக்கு பழி ஏற்படக்கூடாது என அரசன் அஞ்சுகிறான். சூத்திரன் ஒருவனுக்காக அந்தணர்கள் அழியக்கூடாது என்ற கருத்து சமூகத்தில் இருந்திருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

திருமணமான பெண் பிற ஆண்களுடன் தவறாகத் தொடர்பு கொண்டு இருந்தால், அப்பெண்ணுக்குத் தண்டனை வழங்குவது உண்டு. வண்ணான் சாதியில் வழங்கப்படும் தண்டனை பற்றிக் கூறும் சான்று வருமாறு:

''நம்முடைய சாதியில்

நாம் தவறி நடந்தால்

சாதியிலிருந்து விலக்கி வைப்பார்

தரக்குறைவாய் பேசிடுவார்

நல்லது கெட்டதிற்கு நம்மை

சேர்க்கமாட்டார் நம்மிடத்தில்

சம்பந்தம் கொள்ள மாட்டார்''

என மெச்சும் பெருமாள் கதை கூறுகிறது. மேற்சுட்டிய குற்றத்திற்குத் தண்டனை கூறப்பட்ட போதிலும்,

அரசியல் செல்வாக்குள்ள ஆணுடன் திருமணமான பெண் தொடர்பு வைத்துக் கொள்வது தவறாகப் பேசவில்லை என்பதை மெச்சும் பெருமாள் கதை உணர்த்துகிறது. மேற்சுட்டிய சான்று செல்வாக்கு, பதவி இவை காரணமாகத் தவறுக்கான தண்டனை இல்லை எனத் தெரிகிறது. குற்றம் செய்தவர்களைக் கண்டுபிடிக்கச் சில முறைகள் பின்பற்றப்பட்டன. அவற்றள் ஒன்று கொதிக்கிற நெய்யில் கைவிடுவது. இத்தண்டனை பற்றி அல்லி அரசாணி மாலை கதையில் காணமுடிகிறது.

சாதிவிட்டு மணம் புரிந்து கொள்வது குற்றமாகக் கருதப்பட்ட போதிலும் அந்தணர் பொண்னைத் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன் மணந்தால் அவனுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டது. சான்று,

''தாழ்ந்த சாதியைச் சேர்ந்த காத்தவராயன்

அந்தணப் பெண் ஆரியமாலையை மணந்து

கொள்கிறான். இதனை அறிந்த அந்தணர்கள்

காத்தவராயனைக் கழுவேற்ற வேண்டும் என

முறையிடுகின்றனர்'' (காத்தவராயன் கதை)

''இராம சாஸ்திரி வீட்டில் வேலை பார்த்து வந்த தூண்டிமுத்து அவரது பெண்ணை மணந்து கொள்கிறான்.

இருவரும் ஊரைவிட்டு செல்கின்றனர். இதனை அறிந்த அவளது அண்ணன்மார்கள் தூண்டிமுத்துவைத் தூண்டிலிட வேண்டும் என முறையிடுகின்றனர்.'' (குறுக்களாஞ்சி கதை)

மேற்சுட்டிய சான்றுகள் தண்டனை பற்றி உணர்த்துவன. அந்தணர் சாதி சமுதாயத்தில் உயர்ந்த சாதியாகக் கருதப்பட்டது. அன்றைய சூழலில் அந்தணர் பெண்னை மணந்த வேறு சாதியினருக்குக் கடுமையாக தண்டனை வழங்கப்பட்டது.

அந்தணர் சாதியைச் சேர்ந்த முத்துப்பட்டன் தாழ்ந்த சாதியைச் சேர்த்த பெண்களை மணந்து கொள்கிறான். முத்துப்பட்டனுக்குத் தண்டனை கிடைத்தற்கு அகச்சான்று இல்லை. பெண் தொடர்பான குற்றங்களுக்குத் தண்டனை கடுமையாக இருந்தது.இதனை பின் வரும் சான்று தெளிவு செய்யும். சான்று வருமாறு.

மதுரை வீரன் வெள்ளம்மாள் உறங்கும் போது தூக்கிச் செல்கிறான். பிறகு வேவுகாரர்களால் பிடிபடுகிறான். மதுரை வீரன் வெள்ளம்மாளைத் தூக்கிய குற்றத்திற்காக அவனுடைய கையும் காலும் வெட்டப்பட வேண்டும் என அரசன் ஆணையிடுகிறான். (மதுரைவீரன் கதை)

மேற்சுட்டிய சான்று தண்டனை பற்றிக் கூறுகின்றது. நாயக்கர் காலத்தில் ஆடவர் ஒருவர் பல பெண்ணுக்கு நீதி வழங்குவதில் தயக்கம் காட்டப் பெறவில்லை எனத் தெரிகிறது.

மெச்சும் பெருமாள் கதை வரிப்பணம் கட்டாதவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை பற்றிக் கூறுகின்றது. சான்று,

அட்டைக் கிடங்கிற்குள் இறக்கி விடுவார் முதுகுமேல் கல்லேத்தி நிறுத்தி விடுவார் அட்டை பிடுங்கிடுமே ஆயுளுக்கு மோசம் வரும் எனக் கலங்குகின்றனர். பகுதிப்பணம் கட்டாதவர்களைப் பட்டினிப்போட்டுத் தண்டிப்பதும் உண்டு என்று கதைப்பாடல் குறிப்பிடுகிறது.

இவ்வாறு குற்றங்களுக்குத் தண்டனைகள் வழங்கப்பட்டது பற்றிக் கதைப்பாடல்கள் கூறுகின்றது. குற்றங்களைப் பற்றிய சான்றுகள் குறைவாகக் காணப்படுகின்றன. உயர்ந்த சாதிப் பெண்னை மணந்தால் அவர்களுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டது. அது தவிர மற்ற குற்றங்களுக்கு அதற்கு தண்டனை வழங்கப்படவில்லை. வரி செலுத்தாதவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது.

நன்றி: வேர்களைத்தேடி

 

கருத்துகள் இல்லை: