மக்களின் நாகரிக வளர்ச்சியின் அடையாளமாகும் நாட்டுப்புறப் பாடல்கள். மக்களின் உணர்வுகள் உள்ளக்குமுறல்கள், வாழ்வியல் கூறுகள் ஆகிய அனைத்தையும் படம் பிடித்துக் காட்டும் ஒரு காலக் கண்ணாடியாக விளங்குகின்றன. நாட்டுப்புறப்பாடல்கள் அவற்றின் நிலைக் களன்களை காண முற்படுவோம்.
நாட்டுப்புற இயல்:-
நாட்டுப்புற மக்களின் கலை இலக்கியங்களை ஆராய வேண்டும் என்ற எண்ணம் முதலில் மேனாட்டாருக்குத் தோன்றியது. பொதுமக்களைச் சார்ந்த மரபு முறைகள் (Popular Antiquities) என்ற பெயரில் ஆய்வைத் தொடங்கிய ஆய்வாளர்கள் பின்னர் நாட்டுப்புற இயல் (Folk Lore) என்ற சொல்லை உருவாக்கினர். நாட்டுப்புற இயலில் நாட்டுப்புற மக்களின் கலை, இலக்கியம் பண்பாடு எனும் மூவகை பிரிவுகள் அடங்கியுள்ளன.
''நாட்டுப்புற இயல் என்னும் சொல்லையும் பகுப்பையும் செய்த பெருமை வில்லியம் ஜான் தாமசு (william John thomas) அவர்களைச் சாரும். ஆங்கிலேயர் இச்சொல்லை உருவாக்கிய காலம் கி.பி. 1846 ஆகும். இதற்குப் பின்னரே இவ்வாய்வில் முறைமையும் முன்னேற்றமும் ஏற்படலாயிற்று.''
நாட்டுப்புற இயலின் பாடுபொருள்கள்:-
கிராமத்து மக்களின் தாலாட்டு முதற்கொண்டு தகணம் செய்கின்ற வரைக்கும் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிற நிலை அவை, வாழ்வின் பல பகுதிகளாக விளங்குகின்றன. இன்பம், துன்பம், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், எள்ளல், சிறுதெய்வ வழிபாடு, இளமை, முதுமை ஆகியவற்றைப் பாடுபொருளாகக் கொண்டு நாட்டுப்புற பாடல்கள் பாடப்படுகின்றன.
இனிமையும் இசை ஒலியும்:-
எதார்த்தமான எண்ணங்களை வார்த்தெருக்கும் வருணைகளாக, கிராமிய மக்களின் உணர்வுகளின் கிளர்ச்சியாக, நெஞ்சங்களை நெருடச் செய்யும் நிழல் ஓவியங்களாக, கற்பனைகளை வெளிப்படுத்தும் காவியங்களாக, இனிமையும், இசையும் இரண்டும் கலந்து வண்ணமாக, வெள்ளை உள்ளங்கள் வெளிக்காட்டும் வித்தியாசமான படைப்புக்களாக அவை அனைத்தும் பாட்டு உருவில் வெளிப்படும் விதமாக நாட்டுப்புறப் பாடல்கள் அமைந்துள்ளன.
நாட்டுப்புறப்பாடல்கள் எளியவை. பகட்டில்லாதவை, பரிசுத்தமானவை, பொய்க்கலப்பற்றவை, நேரானவை, செழுமைமிக்க மனோபாவமும் கற்பிக்கப்படாத கட்டுப்பாடற்ற கற்பனையும் கொண்டவை என்பார் திரு. அன்னகாமு.
''மொழி வளர்ச்சி ஏற்படுவதற்கு முன்பே தன் உணர்ச்சிப் பெருக்கை ஒலி வடிவங்களாக்கி ஒலமிட்டுக் காட்டியிருப்பான். அதுவே காலப்போக்கில் வாய்மொழிப் பாடலான நாட்டுப்புறக் கலையாக உருவாகியுள்ளது. மொழிச் சிந்தனை எதுவும் இன்றி உணர்ச்சிக் கோலமாக எழுந்த ஒலியமைப்பு பாடல்களே நாட்டுப்புறப்பாடல்களின் முதல் நிலை என்று அறியலாம் என்பார் டாக்டர் அ.நா. பெருமாள்.
நாட்டுப்புறப்பாடல் நல்லதொரு இலக்கியம்:-
''நாட்டுப்புறப் பாடல்கள் இலக்கியச் சுவையில் ஈடு இணையற்று விளங்குகின்றன என்பதில் கருத்து வேறுப்பாடுகளும் இல்லை. தாலாட்டு நடையழகில் செயங்கொண்டானையும், இனிமையில் இளங்கோவனையும், கற்பனையில் கம்பனையும், சொல்லாட்சியில் மணிவாசகரையும் நாகரிக விளக்கத்தில் சங்கப் புலவர்களையும் நிகர்த்தன என்பர் டாக்டர் தமிழண்ணல்.
தாலாட்டு:-
குழந்தை உறங்கும் நேரம் கூடக்கூடத் தாயின் கற்பனை விரிகின்றது. தாயின் மன ஓய்விலே குழந்தை தவழத் தொடங்குகிறது. கற்பனை அவள் அறிந்த உணர்ந்த பொருள்கள் வழியே நடைபோடுகிறது.
''ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
மலட்டாறு பெருகிவர
மாதுயையும் பூச்சொரிய
புரட்டாசி மாதம்
பிறந்த புனக்கினியே
காடெல்லாம் பிச்சி
கரையெல்லாம் செண்பகப்பூ
நாடெல்லாம் மணக்குதில்ல
நல்லமகன் போறபாதை''
நடவுப்பாடல்:-
நடவு நடும்போது பெண்கள் வயல்களில் பாடும் பாட்டு நயம் கலந்தவை.
''தீப்பாய்ந்த நாச்சியாரே
தேசம் போற்றும் ஆச்சியாரே
மங்கை குறை சொல்லிவாரேன் அம்மா என்
மனக்கவலை மாற்றவேவேணும் - அம்மா
ஊரை விட்டுப் போனவரை
காரிலேறி தேடப்போனேன்
காடுவோட்டும் நடவர்தாண்டி அம்மா
கண்ணடிச்சி பாக்குராண்டி அம்மா''
ஒப்பாரி:-
கணவன் இறந்த பிறகு அதன் சோகத்தில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் ஒரு பெண்ணின் மனக்குமுறல்கள் வெளிப்படுகின்றன.
''நான் கத்திப் போல் வாக்கெடுத்து என்ன
களைக்கவச்சு போன அய்யா - நீ இருந்தா நான்
கச்சிதமா பொட்டிடுவேன் - நீ
காசி மனையழிஞ்ச நான்
கருப்பழிஞ்ச ஆச்சியாரோநான்
சீரழிஞ்ச கன்னியாரோ
இந்த வயசிலே நான்''
கும்மிப்பாடல்கள்:-
ஏதாவதொரு இலக்கியப் படைப்பைக் குறிப்பிடத்தக்க ஒரு இலக்கிய இனமாகக் கருத வேண்டுமானால் அதற்கு உரிய அமைப்பு முறையும் பல தனித்துவக் கூறுகளும் இருக்க வேண்டும். கும்மிப்பாடல்களைச் சிறப்பான இலக்கியம் எனலாம்.
''கும்மியடி பெண்கள் கும்மியடி உங்கள்
கூந்தல் குலங்கிடக் கும்மியடி
நம்மையாளும் விக்கினேசுவரன் பாதத்தை
நாடிக் கும்மியடியடிங்கடி - நீங்கள்
கூடிக் கும்மியடிங்கடி''
எதிர்க்குரல்:-
கணவனின் அரவணைப்பும் அன்பும் தனக்கு உறுதியாக இருப்பதைக் கண்ட மருமகள் மாமியாரின் கட்டளைகளை மீறத் துணிந்து விடுகிறாள். மாமியார் கனல் கக்கும் உரைகளை வீசுவதைக் கண்டதும் மருமகள் அஞ்சாது எதிர்க்குரல் எழுப்புகிறாள்.
''எச்சி தெளிக்குதத்த
எட்டி நிண்ணு பேசுங்கத்த
துப்பி தெளிக்குதத்த
தூர நிண்ணு பேசுங்கத்த
முந்தி முன்னப் போல இல்ல
முறுக்க தீங்க மாமியத்த
அப்ப முன்னப் போல இல்ல
அதட்டாதீங்க மாமியத்த''
நாட்டுப்புறப் பாடல்களில் ஒப்பாரி, கும்மி, தாலாட்டு, மாமியாரின் சொல்லுக்கு எதிர்ப்புக்குரல் கொடுக்கும் மருமகளின் செயல்பாடு அவை அனைத்தும் நல்லதொரு பயன்பாட்டு இலக்கியமாகத் திகழ்கின்றன.
நன்றி: வேர்களைத் தேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக