''மக்கள் கவிஞர்'' என்ற உயர்பட்டத்தை மக்கள் மூலமே பெற்ற ஒரு மாபெருங்கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். புதுமை நெறி காட்டிய பாரதியைப் போல் மிகக் குறைந்த வயதில் நிறைந்த கருத்துக்களைத் தமிழ் உலகிற்குக் கொடுத்த பெருமையுடையவர். பணத்துக்கும் பகட்டுக்கும் வெறுந்திரைப் பாட்டெழுதிப் போனவர்களுக்கு மத்தியில் திரைப்பாடல்களின் தொகுப்பு ''பட்டுக் கோட்டை இலக்கியம்'' ஆகிறது. அவ்விலக்கியத்தில் காணப்படும் சமுதாயச் சிந்தனைகள் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
பணத்தொகை மிகுந்தவர்களின் கனவுத் தொழிற்சாலையான திரைத்துறைக்குள் முற்போக்குச் சிந்தனையாளர்கள் நுழைய முடியாது என்ற நிலையை மாற்றி, தன் திறமையால் நுழைந்து நிலைத்துநின்று அத்துறையைத் தான் இருந்தவரை தன் ஆளுகைக்குள் வைத்திருந்தவர் பட்டுக்கோட்டை. வெறுத்தொதுக்கியவர்கள் கூட வெற்றியின் உச்சத்துக்கு வந்தபின் அவரை விரும்பி வேண்டிச் சொந்தம் கொண்டாடினர். கதைச் சூழலும் இசைக்குரலும் கட்டுப்படுத்திய போதும் கூட, தன் கவித்திறத்தால் தன் இயக்கக்கருத்துக்களை கொள்கைகளை உரத்துப் பாடியவர் அவர். எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற பொதுவுடைமைச் சமுதாயக் கருத்தை வலியுறுத்தியவர். தன்கால மக்களின் நல்வாழ்விற்கும் எதிர்கால மக்களின் இன்ப வாழ்விற்கும் ஏற்ற கருத்துக்களை எடுத்துச் சொன்னவர்.
சராசரி மனிதனின் சாதாரண விருப்பு வெறுப்புக்களையும் மன அசைவுகளையும் உணர்ச்சிப் பெருக்குகளையும் எளிமையாகச் சொல்லும் நாடோடிப் பாங்கில் சொன்னார். சிந்து காவடிச் சிந்து, கும்மி குறவஞ்சி, ஆனந்தக் களிப்பு, தெம்மாங்கு கண்ணிகள் லாவணி போன்ற நாட்டுப்புற யாப்பு முறையைப் பயன்படுத்தி 55 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர். தமிழ் இனப் பெருமையிலும் பகுத்தறிவு அலைகளிலும் ஆரம்ப காலத்தில் ஈடுபட்டிருந்த அவர் மெல்ல மெல்ல பொதுவுடமைக் பாசறைக்கு வந்துவிட்டவர். அதனால் தான் தத்துவம் பாடும் போதும், காதல் கீதம் இசைக்கும் போதும், குழந்தைகளைப் பற்றிப்பாடும் போதும், இயற்கையழகில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட போதும், சமுதாய நலனை, மனித நேயத்தை மறக்காமல் பாடினார்.
சமுதாயம் தான் கலைகளின் தாயகம். சமுதாயத்திலிருந்து விலகிய - சமுதாயத்திற்குப் பயன்படாத எந்தக்கலையும் - எந்தக் கலைஞனும் மறந்தொதுக்கப்படுதல் ஒரு தலை. சாகாவரம் பெற்ற இலக்கியத்தைச் சமைப்பவனும் சமுதாயத்தில் நிகழும் அரசியல், பொருளாதாரச் சமூக உறவுகளுக்கும் இவற்றின் விளைவாக எழுகின்ற சிந்தனைகள், தத்துவங்கள், போராட்டங்கள் ஆகியவற்றிற்கும் கட்டுப்பட்டவனாகிறான். இந்தவகையில் மக்கள் கவிஞர் சமதாயப் பிரச்சனைகளைப் பாடிய வகையிலும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயன்ற வகையிலும் தனித்துக் காணப்படுகின்றார். பாட்டுக்குப் பாட்டு வரிக்கு வரி - சொல்லுக்குச் சொல் சமுதாய சிந்தனை மிக்க பாடல்களைத் திறமையோடு பாடினார்.
போராட்டம்:-
சர்வ தேசியத்தில் நாட்டங்கொண்ட மக்கள் கவிஞர் உலகச் சமாதானத்துக்கு வழியைச் சொல்ல வந்த போது
''உழைப்பை மதித்துப் பலனைக் கொடுத்து
உலகில் போரைத் தடுத்திடுவோம்''
என்று பாடினார். உழைப்பை மதிக்கவும், உழைப்பின் பலன் உழைப்பாளர்களுக்கு நேரடியாகச் சேரவும் போரில்லா நிலை ஏற்பட்டால்தான் சாத்தியம் ஆகும் என்று நம்பினார்.
''தேனாறு - பாயுது - வாயில் / செங்கதிரும் சாயுது - ஆனாலும் / மக்கள் வயிறு காயிது
அதிசயந்தான் இது''
இந்தச் சமுதாய நிலைகண்டு அதிசயித்து ஆளுந்தலைமுறையினரிடம் தூண்டிவிட்டு உரிமை கேட்க வைக்கிறார். சோகச் சூழலிலே ஏழைச் சருகுகள் கண்ர் சொட்டுகிற நிலையைக் கண்டு வருந்தி உழைப்போரின் உரிமைகள் மறுக்கப்படுவதைக் கண்டு
''ஏமாத்தும் போர்வையிலே / எக்காளம் போடுகிற கூட்டம் - மக்கள்
எதிர்த்துக்கிட்டா எடுக்கவேணும் ஓட்டம்''
என்று பொங்கி எழுந்து மக்களைப் போராட்டத்திற்குத் தயாராக்குகிறார். போராடும் போது இடையூறுகள் பலவரலாம் அப்போது உறுதியாக நிற்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார்.
''நெஞ்சினைப் பிளந்த போதும் / நீதி கேட்க அஞ்சிடோம் / நேர்மையற்ற பேர்களின்
கால்களை வணங்கிடோம்''
என ஏழைகளின் சார்பில் உறுதி மொழி நல்குகிறார்.
உழைப்பு:-
போராடினால் மட்டும் போதாது. உழைக்கவும் வேண்டும் என்று கூறுகிறார்.
''செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்
திறமைதான் நமது செல்வம்''
என்று தொழிலை வழிபடச் சொல்கிறார். உழைப்பின் மகத்துவத்தை மக்கள் கவிஞரைப் போல் வலியுறுத்திச் சொன்ன கவிஞர் வேறெவரும் இல்லை என்றே கூறலாம்.
ஒற்றுமை:-
உழைக்கத் தெரிந்த - உரிமை கேட்கிற ஒரு சமுதாயத்தை உருவாக்க நினைத்தார். ஆனால் உழைக்கும் வர்க்கம் சிதறிச் சின்னாபின்னமாகிக் கிடப்பதைக் கண்டார். அதற்கு ஒற்றுமை மிகத்தேவை என்று உணர்ந்து அதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
''பேதத்தைப் பேசி நேரத்தை விழுங்கும் / பித்தருண்டு - அவர்
பக்கதருமுண்டு''
அவர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார்.
கத்தும் பறவை
கனிமரத்தில் வந்து
ஒற்றுமை காட்டுதே
என்று பறவைகள் ஒற்றுமையாக இருப்பதைச் சுட்டிக் காட்டி உழைப்பாளர்கள் ஒற்றுமையின் அவசியத்தைப் புலப்படுத்துகிறார். அது மட்டுமல்ல
''பச்சைக் கொடிகள் வேலியிலே / பாகுபாடின்றித் தழைக்குது - அதைப்
பார்த்திருந்தும் சில பத்தாம் பசலிகள் / பக்கம் ஒன்றாய்ப் பறக்குது - அன்புப்
பாலம் பழுதாய்க் கிடக்குது''
என்று மானிட சமூகத்திற்கு ஒற்றுமையின் சிறப்பை இயற்கை மூலம் எளிய முறையில் சொல்லி விளக்குகிறார். ஓங்கி வளரும் மூங்கில் மரத்தின் வளர்ச்சிக்கும் ஒற்றுமை தேவை என்பதைக் காட்டி, மலையில் ஊறும் அருவிகள் கூட ஒன்றாய் ஒரே வழியில் கலப்பதைச் சுட்டி ஒற்றுமையில்லாத மனித குலத்திற்கு ஒற்றுமையின் மகத்தான தன்மையை விளக்குகிறார். ''உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்'' என்ற தாரக மந்திரத்தைப் பரப்பிடப் பாட்டெழுதியவர் பட்டுக்கோட்டை.
சாதி:-
சமுதாயத்தின் முன்னேற்றத் தடைக் கற்கள் ஒற்றுமையின்மையும் சாதி அமைப்பும் தாம் என்று கண்ட கவிஞர் அடுத்து சாதியில் ஏற்றத் தாழ்வு கூடாது என்பதை எடுத்துப் பாடுகிறார்.
''யாருமேல கீறினாலும்
ரத்தம் ஒன்னுதானே - ஆக
மொத்தம் பிறந்ததெல்லாம்
பத்தாம் மாதந்தானே
என்று சாதியின் ஆணிவேரையே பிடுங்கி எறியக் கூறுகிறார். அதுமட்டுமல்ல
''ஜாதிகள் யாவும் ஒன்றாகமாறும்
தேதியில் தோன்றும் பெருமை'' என்று நம்புகிறார்.
பெண்ணுரிமை:-
பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்த வள்ளுவர், பாரதி, திரு வி.க., பாரதிதாசன் ஆகியோர் வரிசையில் பட்டுக்கோட்டையும் சேருகிறார். கற்பு நிலையை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக்க வேண்டும் என்றார் பாரதி, ஆனால் மக்கள் கவிஞரோ ஆவேசம் பொங்க இதுவரை யாரும் கூறாத புதுக்கருத்தை
''தாலி போட்டுக்கிட்டா ரெண்டு பேரும்
சேர்ந்து போட்டுக்கணும் - உலகம்
புதுசா மாறும்போது பழைய முறைய மாத்திக்கணும்''
என்று ஆணையிட்டுக் கூறுகிறார்.
குழந்தைப் பாடல்கள்:-
பிஞ்சு மனதில் ஆழப்பதியும் படி சமுதாயக்கருத்துக்களைப் புதுமையாகச் சொல்லுகிறார். ஆசிரியர் நிலையிலிருந்து அறிவுறுத்துகிறார். மனதில் வலிமையை ஏற்றி வாட்டத்தை உழைப்பால் மாற்றச் சொல்கிறார். சின்னச்சின்னக் கருத்துக்களைக் கூறிச் சிந்தித்துப் பார்த்து ஏற்றுக் கொள்ள வேண்டுகிறார். ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது உண்மையான வளர்ச்சி என்கிறார். நல்ல மனிதனாக, வளர்ந்த நாட்டுக்கே வலது கையாக மாற வேண்டும். சமுதாயத்திற்குத் தீங்கு செய்யும்
''தனியுடமைத் கொடுமைகள் தீரத்
தொண்டு செய்யடா''
என்று எளிய பதங்களில் புரியும் வகையில் நெருக்க நிலையில் இருந்து புத்திமதி கூறுகிறார். வறுமையைப் போக்கத் திருடக் கூடாது. தெரிஞ்சும் தெரியமல் திருடியிருந்தா திரும்பவும் செய்யாமல் பார்த்துக் கொள்ளச் சொல்கிறார். வேப்ப மரத்துப் பேய்களை வேடிக்கையாகக் கூட நம்பிவிடக் கூடாது அது வீணர்கள் கட்டிவிட்ட கதை என்று எச்சரிக்கை செய்கிறார். படிப்பு தேவை, அதோடு உழைப்பும் தேவை என்பதை நயமாக வலியுறுத்துகிறார். இவ்வாறு சின்னப்பயலுக்கும், தூங்கிய தம்பிக்கும், திருடிய பாப்பாவுக்கும் அறிவுரை கூறுகையில் சமுதாயக் கருத்துக்களை மறக்காமல் இணைத்தே பாடுகிறார்.
இவ்வாறு மக்கள் கவிஞர் சமுதாயக் கருத்துக்களை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்திப்பாடுகிறார். ஒப்பிலாத சமுதாயத்தைப் படைக்க ஆசைப்பட்டார். ''தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா'' என்று அடித்துக் கூறி ''நியே மாற்று'' என்று கட்டளை இடுகிறார். அவ்வாறு புதியதோர் உலகம் உருவாக்கிவிட்டால், அங்கு,
''வறுமையில்லே வாட்டமில்லை
வயிற்றிலடிக்கும் கூட்டமில்லே''
என்று குழந்தைகளுக்கும், சமுதாயத்திற்கும் நல்ல கருத்துக்களையும், கடைபிடிக்கவேண்டிய செயல்களையும் அழகாக தனது கவிதைகள் மூலம் கூறியிருக்கிறார்.
நன்றி: தற்காலத் தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக