13/03/2011

கதைப்பாடல் - வரையறை - சி.மா. இரவிச்சந்திரன்

தமிழகத்தில் அண்ணன்மார் கதை, முத்துப்பட்டன் கதை, நல்லதங்காள் கதை, காத்தவராயன் கதை போன்ற பல கதைகள் வில்லுப்பாட்டு, உடுக்கை, டேப், கஞ்சிரா போன்ற கருவி இசையுடன் எடுத்துரைக்கும் நிகழ்கலை வடிவங்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றன. இவைகளைக் கதைப்பாடல் என்ற வகையாகத் தொகுத்து வரையறைகள் வகுத்துள்ளனர். இவ்வரையறைகளை மறுபரிசீலனை செய்யவேண்டிய தேவையை உணர்த்தும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

ஓரிடத்தில் அல்லது ஒரு மாவட்டத்தில் வழங்கப் பெறும் ஒரு புகழ்மிக்க கதை, பாடல் வடிவில் ஆக்கப் பெறுகிறது. கதையை உள்ளடக்கி விளக்குதலால் கதைப்பாடல் என்று பெயர் பெற்றுள்ளது என்று சரஸ்வதி வேணுகோபால் கதைப் பாடலை விளக்குகிறார்.

''கதையை பாடலாகக் கூறுவது அல்லது பாடலில் கதை பொதிந்து வருவது கதைப்பாடல் என்று அழைக்கப்படுகிறது'' என்பார் சு. சண்முகசுந்தரம்.

கதையொன்றை உள்ளடக்கமாகக் கொண்டு, மக்கள் முன்னர் எடுத்துரைக்கப்பட்டுப் பரம்பரை பரம்பரையாக வாய்மொழியாகப் பாடப்பட்டு வருவது கதைப்பாடலாகும். இசைக் கருவிகளின் துணையுடன் ஒருவர் பாடுவதாகவோ அல்லது பலர் கூட்டமாகச் சேர்ந்து பாடி எடுத்துரைப்பதாகவோ கதைப் பாடல் அமையும் என்று பேராசிரியர் லூர்து கூறுகிறார்.

''குறிப்பிட்டதொரு பண்பாட்டில் குறிப்பிட்டதொரு சூழல்களில் வாய்மொழியாக ஒரு பாடகனோ, அல்லது குழுவினரோ சேர்ந்து நாட்டார் முன் எடுத்துரைத்து இசையுடன் நிகழ்த்தும் அல்லது நிகழ்த்திய ஒரு கதை தழுவிய பாடல் கதைப்பாடல் ஆகும்'' என்று நா. இராமச்சந்திரன் கூறுகிறார்.

இந்த வரையறைகளைத் தொகுத்துப் பார்க்கும்போது ''கதையைப் பாடலாகப் பாடுவது கதைப்பாடல்'' என்ற இயல்பை ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர் என்பது புலனாகிறது. மேலைநாட்டு ஆய்வாளர்களும் கதையைப் பாடலாகப் பாடுகின்ற பண்பையே கதைப்பாடலின் இயல்பாக வலியுறுத்துகின்றனர். மேலைநாட்டு ஆய்வாளர்களின் வழியில் தமிழ்நாட்டுப்புறவியல் அறிஞர்களும் ''கதையைப் பாடலாகப் பாடுவது கதைப்பாடல்'' என்று வரையறை செய்கின்றனர். இந்த இயல்பு தமிழகத்தில் வழக்கில் உள்ள கதைப்பாடல்களுக்கு எந்த அளவு பொருந்துகிறது என்பதைத் தமிழ்நாட்டுப்புற ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

தமிழகத்தில் வில்லுப்பாட்டில் முத்துப்பட்டன்கதை, காத்தவராயன் கதை போன்ற பல கதைகளைக் கூறுகின்றனர். கொங்குநாட்டில் உடுக்கை அடித்துக் கொண்டு அண்ணன்மார்கதை, கோவலன் கதை போன்ற கதைகளைக் கூறுகின்றனர். டேப், கஞ்சிரா போன்ற தாளக்கருவிகளைக் இசைத்துக் கொண்டு கொலைச் சிந்து போன்ற கதைகளைக் கூறுகின்றனர். இத்தகைய பல்வேறு வகைப்பட்ட நிகழ்கலை வடிவங்களைக் கதைப்பாடல் என்ற ஒருவகையாக அனுமானித்துக் கொண்டு ''கதையைப் பாடலாகப்பாடுவது கதைப்பாடல்'' என்ற இயல்பை மட்டும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். அல்லி அரசாணிமாலை, பூலித்தேவன் சிந்து, கான்சாகிபு சண்டை, துரோமதை குறம், பொன்னுரிவி மசக்கை, ஐவர் ராசாக்கள் கதை என்றுதான் பெயர்கள் உள்ளதே தவிர கதைப்பாடல் என்ற பெயரில் ஏதேனும் ஒரு வகைமை தமிழக நாட்டுப்புற மரபில் உள்ளதா என்பது ஆய்விற்குரியது.

ஆய்வியல் வகைமை பண்பாட்டு இனவகைமை (Analytical catagory, Ethic catagory) என்ற இரு கருத்தாக்கங்கள் கதைப்பாடல் வரையறைகளில் உள்ள சிக்கலைப் புரிந்துகொள்ள உதவும். இலாவணி, கணியான் கூத்து, வில்லுப்பாட்டு போன்ற வழக்காறுகளை ஆய்வு வசதிக்காகக் கதைப்பாடல் என்ற ஒரு வகைமைக்குள் அடக்கி ஆய்வு செய்கிறோம். ஆய்வுவசதிக்காக உருவாக்கப்பட்ட அமைப்பை ஆய்வியல் வகைமை என்றும் கூத்து, வில்லுப்பாட்டு, கொலைச் சிந்து போன்ற வழக்காறுகளைப் பண்பாட்டு இன வகைமை என்றும் பாகுபாடு செய்து கொள்ளலாம்.

ஆய்வியல் வகைமை ஆராய்ச்சிச் சூழலில் உருவாக்கப்பட்டவை. அவை பல்வேறு ஆய்வு நோக்கங்களுக்கு உறுதுணையாக அமைபவை. தமிழ் இலக்கியங்களையே போற்றி வளர்த்து நாட்டுப்புற இலக்கியங்களைக் கவனத்தில் கொள்ளாது ஒதுக்கிய நிலையில் ஒரு சில ஆய்வாளர்கள் தமக்குக் கிடைத்த, வாய்மொழியாகப் பாடப்படும் கதை தழுவிய பாடல்கள் எல்லாவற்றையும் குறிப்பிடுவதற்குப் பொதுவாக கதைப்பாடல் என்ற சொல்லைப் பயன்படுத்தினர். ''Ballad'' என்ற ஆங்கிலச் சொல்லைக் கதைப்பாடல் என்று தமிழில் எழுதினர். பிறகு இதற்கான வரையறையை உருவாக்கும் போது கதையைப் பாடலாகப் பாடுவது கதைப்பாடல் என்று வலியுறுத்தினார்.

கொங்கு நாட்டில் அண்ணன்மார் கதையை உடுக்கை அடித்துக் கொண்டு பாடும் நிகழ்ச்சியின்போது பலர் நகைச்சுவைக் குறுங்கதைப் பாடல்களையும் கூறுகின்றனர். இந்த நகைச்சுவைக் கதைக்கும், அண்ணன்மார்கதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இரவு நேரங்களில் அண்ணன்மார் கதைபடிக்கும் போது பார்வையாளர்களின் கூட்டத்தில் சலிப்பு ஏற்படும் போதோ அல்லது கூட்டம் கலையும் போதோ நகைச்சுவைக் கதைகளைக் கூறிக் கூட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றனர். சுண்டெலி ராஜன்கதை, கோழிக்குஞ்சுப்பாட்டு, நவகோடி நாராயணசாமி கதை, மாவிளக்குக்கதை, மாமியார்கதை, எருமைக்கன்னுகதை, அம்மாவாசை பிடித்த கதை, ஏழைப்பாப்பான் கதை போன்ற பல நகைச்சுவைக் கதைகளை உடுக்கை அடித்துக் கொண்டு, நாடகபாணியில் எடுத்துரைக்கின்றனர். இந்த நகைச்சுவைக் கதைகளை எடுத்துரைக்கும்போது ஓரிரு பாடல்களையும் பாடுவதுண்டு.

ஆனால், நீண்ட வசனங்கள் மூலமாகவே நகைச்சுவைக்கதைகள் முன்னெடுத்துச் சொல்லப்படுகின்றன. முதன்மைப் பாடகரும், பின்பாட்டுக்காரரும் கதைமாந்தர்களாகவே மாறி நாடக பாணியில் நகைச்சுவைக் கதைகளை நிகழ்த்துகின்றனர். இந்நிகழ்வுகளில் கதைப்பாடலுக்கு வலியுறுத்தப்பட்ட கதையைப் பாடலாகப் பாடுவது என்ற இயல்பு தூக்கலாக இல்லை. நகைச்சுவைக் கதையை ஒருசில பாடல்களுடன் நாடகபாணியில் வசனங்கள் மூலமாக நிகழ்த்துவதாகவே உள்ளன. ஆனால், இதை ஒரு நிகழ்கலை வடிவம் என்று தனியே பிரித்துப்பார்க்கவும் இயலவில்லை. காரணம் இந்த நகைச்சுவைக் கதைகள் தனியொரு நிகழ்கலையாக நிகழ்த்தப்பெறுவதில்லை. அண்ணன்மார் கதையை உடுக்கை அடித்துக் கொண்டு பாடும் நிகழ்ச்சிகளில் மட்டுமே கொங்கு நாட்டளவில் மேற்கண்ட நகைச்சுவைக் கதைகள் எடுத்துரைக்கப்படுகின்றன. எனவே, இச் சந்தர்ப்பங்களில் கதையைப் பாடலாகப்பாடுவது கதைப்பாடல் என்ற வரையறையை இந்நகைச்சுவை கதைப்பாடல்களுடன் எந்த வகையில் சேர்ப்பது என்ற நெருடலை ஏற்படுத்துகிறது. இலக்கியத்திற்குத்தான் இலக்கணமே தவிர, இலக்கணத்திற்காக இலக்கியத்தை மாற்றும் மரபு இல்லை. எனவே தமிழகத்தில் வழக்கில் உள்ள தரவுகளின் அடிப்படையில் கதைப்பாடலின் வரையறையை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது.

நன்றி: வேர்களைத் தேடி.

 

கருத்துகள் இல்லை: