28/03/2011

நாட்டுப்புற இலக்கியமும் உளவியல் தாக்கமும் - இரா.சாந்தி

இலக்கியங்களை ஏட்டு இலக்கியங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள் என இருவகைப்படுத்தலாம். நாட்டுப்புற இலக்கியங்கள் கற்றறிந்தச் சான்றோர்களால் படைக்கப்படவில்லை. எனினும், பல இலக்கியக்கூறுகள் இவற்றில் புதைந்து கிடக்கின்றன.

நகருக்குப் புறம்பாகவுள்ள நாட்டுப்புற மக்கள் பாடிய நாட்டுப்புறப் பாடல்கள், இன்றும் ஏட்டு இலக்கியங்களில் இடம் பெறும் அளவிற்குப் பெருமை பெற்று விளங்குகின்றன.

நாட்டுப்புற இலக்கியம்:-

இலக்கியத்தை இலக்கு + இயம் எனப் பிரிக்கின்றபோது, வாழ்க்கையின் குறிக்கோள், நோக்கத்தை இயம்புவது, கூறுவது, ஆராய்வது எனப் பொருள்படும். எனவே, ''நாட்டுப்புற இலக்கியம்'' என்பது நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையை ஆராய்வது எனக் கொள்ளலாம்.

நாட்டுப்புற இலக்கியத்தை நாட்டுப்புறப் பாடல், நாட்டுப்புறக்கதைகள், நாட்டுப்புறக் கதைப்பாடல், விடுகதை, பழமொழி என வகைப்படுத்துவர். நாட்டுப்புற இலக்கியத்தின் ஒரு கூறாக நாட்டுப்புறப் பாடல்கள் விளங்குகின்றன. நாட்டுப்புறப் பாடல்கள் சமூகத்தின் கொடுமைகளை, ஏற்றத்தாழ்வுகளை, உள்ளதை உள்ளவாறே படம்பிடித்துக் காட்டும் கருவியாகும். நாட்டுப்புறப் பாடல்கள் இலக்கண வரம்பிற்குள் பெரிதும் கட்டுப்படாமல் காட்டாற்று வெள்ளம் போல் தங்குதடையின்றி பாய்ந்து செல்லும் தன்மைப் படைத்தவை.

உளவியல்:-

இன்றைய அறிவியல் உலகில் உளவியல்துறை தனித்து இயங்கும் உன்னதத்துறையாக வளர்ந்து வருகின்றது. உளவியல் முதலில் தத்துவக் கொள்கையாக இருந்தது. பின்னர் உள்மனத்தில் ஏற்படும் நிகழ்வுகள், செயல்கள், நடத்தையைப்பற்றி ஆராயும் போக்கு அதில் வளர்ந்து வருகின்றது.

உளவியல் எனப்படுவது உள்ளத்தின் இயல்புகளைக் கூறுவது. உளம்+இயல் எனப் பிரித்தால், உள்ளத்தின் இயல்புகளைக் கூறுவது (அல்லது) ஆராய்வது எனப் பொருள்படும்.

''உளவியல் என்பது மனித உள்ளத்தின் தன்மைகளை

எடுத்து விளக்குவது'' என்றும்

''Psychology is concerned with understanding the mind and the behaviour of man''

என்ற கூற்றினை நோக்கும்போது உளவியல் மனித உள்ளத்தையும், நடத்தையையும் ஆராயும் துறை ஆகும்.

உளவியல் பிரிவுகள்:-

பொது உளவியல், குழந்தை உளவியல், சமூக உளவியல், உடற்கூற்று உளவியல், பிறழ்ந்த உளவியல், கல்வி உளவியல், விலங்கு உளவியல் எனப் பல பிரிவுகள் உள்ளன.

நாட்டுப்புற இலக்கியமும் உளவியல் தாக்கமும்:-

உளவியல் துறை இன்றும் அறிவியல் உலகில் தனித்துறையாக வளர்ந்து வருகின்றது. உளவியல் துறை மற்ற ஆய்வுத்துறைகளோடு இணைந்து ஆய்வு செய்யும் போக்கும் காணப்படுகின்றது. அவ்வகையில் நாட்டுப்புற இலக்கியமும் ஒன்றாகும்.

பொது உளவியல்:-

''மனவாழ்க்கை'' என்பது மனத்தில் தோன்றும் உணர்ச்சிகள், கற்பனைத்திறன், எண்ணங்கள் முதலியவற்றின் செயற்பாடுகளை விரிப்பது ''பொது உளவியல்'' எனப்படும்.

குழந்தையில்லாத தாய் பல தவங்களை மேற்கொள்கின்றார். குழந்தைச் செல்வம் இல்லாததால் ஏற்பட்ட மனக்கவலை நீங்க இறைபக்தியுடன் தொடர்பு கொள்கின்ற நிலை ஏற்படுகின்றது. அதற்குத் தீர்வு ஏற்படும் எனவும் நம்புகின்றாள். இதனை

''வெள்ளித் தலமுழுகி வினாயகருக்கு

வெகுநாள் - தவமிருந்தேன்''

என்றும்

''பத்தெட்டுக்காலம் பகவானை சேவித்தோம்

ஈரெழுகாலம் ஈஸ்வரனை தியானித்தோம்''

என்பதன் மூலம், பல தெய்வங்களிடம் சென்று, தன் மனக்கவலை தீர்க்கும்படி நோன்பு நோற்கின்றாள். அதன் பயனாகக் குழந்தைப்பேறு கிட்டும் எனவும் நம்புகின்றாள்.

குழந்தை உளவியல்:-

குழந்தையின் ஒவ்வொரு பருவ வளர்ச்சிக்கு ஏற்ப அமையும் மன இயல்புகளை இக்குழந்தை உளவியல் விளக்குகின்றது.

தன் மகன் விருந்தளிக்கும் பண்புள்ளவனாகத் திகழவேண்டும் எனப் பிஞ்சு உள்ளத்திலேயே, அக்குழந்தைக்கு நற்பண்புகள் வளர வித்திடுகின்றாள் தாய்.

ஆடி அமாவாசையிலே - உங்களய்யர்

ஆயிரம் பேர்க்கு அன்னமிட்டு

ஆசையுடன் பெற்றெடுத்த

எனப்பாடுகின்றார்.

குழந்தைப் பருவத்தில் கற்றுத்தரப்படும்

பழக்கவழக்கங்களும், நற்பண்புகளும்

குழந்தையின் வாழ்க்கை முழுவதுமே

பெரிதும் உதவுவனவாக அமைந்துவிடுகின்றன

என பெசன்ட் கிரீப்பர் ராஜ் கூறுவதை நோக்கும் போது, தன் குழந்தையின் நடத்தையில் பழி வரக்கூடாது என்பதற்காக, இளம் பருவத்திலேயே நற்பண்புகளைத் தாலாட்டின் மூலம் கற்றுத்தருகின்றாள்.

சமூக உளவியள்:-

தனிமனிதனுக்கும், சமூகத்திற்கும் உள்ள தொடர்பு, சமூகத்தில் மனிதனின் செயற்பாடுகள், நடத்தைகள், சமூகக் கூட்டுணர்வால் இணையும் போது ஏற்படும் உளப்போக்கினை ஆராய்வது சமூக உளவியல் எனப்படும்.

நாட்டுப்புறக் கலைகள் ஏதேனும் நற்பண்புகளை, ஒழுக்கத்தை, நீதிகளை வெளிப்படுத்துவனவாக உள்ளன.

ஒருவனுக்கு மறுமணத்தை வலியுறுத்திய போதும், அவன் அதை மறுத்து, ஒருவனுக்கு ஒருத்தி என்ற எண்ணப்போக்குடன் வாழ்வதை வில்லுப்பாட்டில் காணலாம்.

நூறு பெண்கள் கட்டினாலும் - உன்

நோக்கம் போலக்கிட்டு மோடி

கோடி பெண்கள் கட்டினாலும் - உன்

குணம் போலக்கிட்டு மோடி

என்ற வில்லுப்பாட்டின் மூலம் வாழ்க்கைக்கு வழிகாட்டவும், சமூதாயச் சீர்கேடுகளைக் களையவும் உறுதுணையாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

வில்லுப்பாட்டுக் கதைகள், மக்கள்

உள்ளத்திலே கடவுட்பற்றையும்,

கலையுணர்வையும் சமூகச் சீர்திருத்தம்

பற்றிய எண்ணங்களையும் வளர்க்கப் பயன்பட்டன.

என்பதனை நோக்கும்போது கலைகள், சமூதாயச் சீர்கேடுகளை எடுத்துக் கூறுவதற்கும், ஒழுங்குப்படுத்துவதற்கும் பயன்படுகின்றன எனலாம்.

வளர்ச்சிசார் உளவியல்:-

மனிதன் பருவ வளர்ச்சி, மனவளர்ச்சி, இவற்றில் ஏற்படும் மாற்றங்களை ஆய்வது, வளர்ச்சி சார் உளவியல் எனப்படும்.

குழந்தைகளின் அறிவு வளர்ச்சியில் கல்வியறிவும் ஒன்றாகும். எண்களுடன் எளிய சொற்களைச் சேர்ந்துப் பாடுகின்றபோது, குழந்தைகளின் மனத்தில் எளிதில் பதிய வாய்ப்பு ஏற்படுகின்றது.

என்றும்

ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு

கையில் பிடிக்கிற செண்டு

ரெண்டு ரெண்டு நாலு

பசு கறக்கிற பாலு

நாலும் ஒண்ணும் அஞ்சு

மெத்தைக்குப் போடுவது பஞ்சு

அஞ்சும் ஒன்றும் ஆறு

ரோட்லே போறது காரு

என்ற குழந்தைப் பாடல்களில் ரெண்டு - செண்டு, நாலு - பாலு, அஞ்சு - பஞ்சு, ஆறு - காரு, போன்ற சொற்களில் ஏற்படும், இசையும் ஓசையும் தான் முக்கியம். இதனால் குழந்தைகளுக்கு அறிவும், மனவளர்ச்சியும் ஏற்படுகின்றன.

இதன் மூலம் நாட்டுப்புற இலக்கியத்தில் உளவியல் கூறுகள் பரிமளிக்கின்ற நிலையினை ஓரளவு காணமுடிகின்றது. சான்றாகக் குழந்தைப் பாடல்களில் தாய் குழந்தையின் மனவளர்ச்சி, அறிவுவளர்ச்சி, கல்வியில் மாற்றம், வாழ்க்கையில் அறிவுத்திறன் உடல்கூற்றுத்திறன் அனைத்தும் உளவியல் போக்கோடு அமைந்திருப்பது ஓரளவு அறியலாம்.

நன்றி: வேர்களைத்தேடி

 

கருத்துகள் இல்லை: