நாட்டுப்புற மக்களின் பாடல்கள்
1. தாலாட்டு
2. பழமொழிகள்
3. விடுகதைகள்
4. கதைப்பாடல்கள்
என்று மேல்நாட்டார் நாட்டுப்புற இலக்கியங்களை நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரித்து ஆராய்வார்கள். ''மலையருவி'' என்ற நூலில் புலவர். கி.வா. ஜகந்நாதன் அவர்கள் தெம்மாங்கு, தங்கரத்தினமே, ராசாத்தி, ஆண், பெண், தர்க்கம், தொழிலாளர் பாட்டு, கள்ளன்பாட்டு, குடும்பம், தாலாட்டு, சிறுவர் உலகம், புலம்பல், கும்மி, தெய்வம், பலகதம்பம் என 13 வகையாகப் பாகுபாடு செய்துள்ளார். ''வானமாமலை'', ''தமிழர் நாட்டுப்பாடல் என்ற நூலில் தெய்வங்கள், தாலாட்டு, விளையாட்டுகள், காதல் திருமணம், குடும்பம், சமூகம், உழைப்பும் தொழிலும், ஒப்பாரி என 9 வகைகளில் பாகுபாடு செய்துள்ளார்.
இவ்வகையான நாட்டுப் பாடல்களில் பொதிந்து கிடக்கும் சமுதாய, தத்துவக் கருத்துக்களை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
சுமார் 50 வருடங்களுக்குமுன் ஒரு ஊரில் தண்டவாளத்திற்கு அருகே அமைந்த ஒரு பள்ளிக்கூடம் நொறுங்கிவிழுந்த காட்சியைப் பின்வரும் நாட்டுப்புறப் பாடல் விளக்குகிறது.
குண்டு விழுந்ததுபோல குபுகுபுவென்ற
பள்ளிக் கூடம் விழுக - பெண்கள் எல்லாம்
குய்யோ முறை என்று அழுக - அன்று
கூண்டோடு மடிந்த உடம்பில் ரத்தந்தான்
குபு குபுவென்று ஒழுக - தரையில் ரத்தம்
குபு குபு வென்று ஒழுக.
மேற்கண்ட பாடல் விதியின் கொடுமை என்ன என்பதையும், எவ்வாறு இளம் சிறார்கள், உயிர் இழந்தார்கள் என்பதையும் விளக்குகிறது.
அந்தக் காலத்தில் ஒரு மில் ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள், சமுதாயத்தில் பணப்பற்றாக்குறையால் அவதிப்பட்டதைக் கீழ்கண்ட பாடல் விளக்குகிறது.
பஞ்சாபீசுக்காக வந்து
பஞ்சு போலப் பறக்குது - நாங்க
பறக்கப் பறக்கப் பாடுபட்டு
பாதி ஒடம்பாயிருக்கு.
கோயிலில் இறைவிக்கு கூழ்வார்த்தால், மனம் இரங்கி மழை பெய்வித்து ஊர் செழிக்க வைப்பாள் இறைவி என்ற நம்பிக்கையில் மக்கள் சித்திரை மாதம் பிறந்ததும் அந்த ஊரில் உள்ள கெங்கை அம்மனுக்குக் கூழ் ஊத்தும்போது பாடும் நாட்டுப்பாடல் பின்வருமாறு.
குன்னு சுத்தி மாடு மேயும் கெங்கை அம்மன் தாயே
குண்டா வைச்சு பால் கறந்தேன் ,, ,,
குண்டாந் நனையவில்லை ,, ,,
குழந்தை குறை தீரவில்லை ,, ,,
மலையைச் சுத்தி மாடு மேயும் ,, ,,
மரக்கா வைச்சு பால் கறந்தேன் ,, ,,
மரக்கா நனையவில்லை ,, ,,
மக்கள் குறை தீரவில்லை ,, ,,
அந்தக் காலத்தில் மட்டும் இன்றி மக்கள் இக்காலத்திலும் சமுதாய பழக்கங்களைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
சமுதாயத்தில் இன்றும் மாமியார், மருமகள் சண்டை பெரிதும் பேசப்படுகிறது. நாட்டுப்புறத்தில் மாமியார் இறந்தவுடன் மருமகள் பாடும் நாட்டுப்புறப் பாடலைப் பார்ப்போம்.
''உச்சிக்கு எண்ணெய் அறியேன்
உலுத்தம் வடை தின்னறியேன் - இன்று
ஊரார் சிரிப்பார் என்று - நான்
ஒப்புக்கு அழுவரண்டி
கடிச்சபாக்கு அறியேன்
கறிக்குழம்பு தின்னறியேன் - இன்று
கண்டார் சிரிப்பார் என்று
கட்டு அழுவரண்டி''
உண்மையிலிருந்து தவறக்கூடாது என்ற எண்ணத்தில் அரிச்சந்திரன் தன் மனைவியை அடகு வைத்தான். ஆனால், இந்தக் காலத்தில் குடிப்பதற்கு பணம் வேண்டும் என்பதற்காக மனைவியை அடகு வைக்கிறான் என்ற சமுதாய இழிநிலையை நாட்டுப்புறப் பெண்ணின் பின்வரும் நாட்டுப்பாடலால் அறியலாம்.
''கள்ளுக்கடை ஓரத்திலே - மச்சான்
எள்ளுக்களை வெட்டப் போனேன்
புள்ளாப் பல்லாக் கள்ளுக்குத்தான் - மாமா
பொண்டாட்டியை அடகு வைச்சான்''
அதேபோல் கள்ளின் கொடுமையை தெம்மாங்கில் ஒரு பெண் பாடுகிறார்.
கள்ளுக் குடியாதீங்க காரியந்தான் பேசாதீங்க
மெத்தக் குடியாதீங்க, பித்தம் சிரசி லேறும்''
நாட்டுப்புற பாடல்களில் சாதி, மதபேதம் கூடாது என்ற சமுதாய விழிப்புணர்வை ஒரு பாடல் மூலம் நாம் அறியலாம். ஒரு குழந்தை செருப்பு தைக்கிற செகந்நாதனையும் ''சந்தைக்குச் சேர்ந்து போகலாம் வா'' என்று அழைக்கிறது'' அந்தப் பாடல் பின்வருமாறு.
''கருப்புக் குதிரைக்குக் கடிவாளமாம்
கழுத்திலே இரண்டு வெண்டையமாம்.
செருப்பு தைக்கிற செகந்நாதா
சேர்ந்து வாடா சந்தைக்கு
சேர்ந்து வாடா சந்தைக்கு''
ஒரு பெண்ணின் மணவாழ்க்கை சரியில்லை என்றால் அந்தப் பெண் சமுதாயத்தில் படும் வேதனைகளை வடிக்கிறது பின்வரும் பாடல்
ஆளுவிழுதுடைய ஐவருக்கும் நேருடைய
அல்லிக்கு ஒத்த ஒரு அரசனாரைத் தேடாம
மலையில் இருக்கும் அந்த மலைப்பாம்பைத் தேடனீங்க
மலைப் பாம்பு சீறுறதும் - நீங்க பெத்த
மங்கை ஒடுங்குறதும் - உங்க
மனசுக்குச் சம்மதமா - மறுமனசு ஒப்புதமா?
மேற்கூறிய பாடல் சமுதாயத்தில் பெண்களின் நிலையை தத்ரூபாக எடுத்துக் காட்டுகிறது. இயற்கையையும் எதிர்த்த மனிதனின் பல்வேறு கண்டுபிடிப்புகளான இயந்திரக் கருவிகளால் போராடி உழைப்பின் மகத்துவம் அறியப்படும் சமூக அமைப்பில் இயற்கையை விட மனித சக்தியே போற்றி மதிக்கப்படும் என்ற கருத்தை பின்வரும் பாடல் விளக்குகிறது.
''எடையோர பழக்க முன்னு
எடுத்துனக்குச் சொன்னேன்
பாட்டன், பூட்டன், பேரன் எல்லாம்
பட்டிமாடு மேய்த்தார் - எல்லாரும்
பால்கறந்த காசை யெல்லாம்
பணமாகச் சேர்த்தார்
பூட்டி வைக்க பொட்டியில்லாம
போணதில்ல காசு - நாங்கப்
புத்தியில்லாமப் போனதனால்
பொழப்பு இப்படி ஆச்சு''
நாட்டுப்புற மக்கள் தங்கள் வாழ்வைச் சமுதாயத்தோடு இணைத்துக் கொண்டார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் சமுதாயத்தில் நடக்கும் நல்லவைகளையும், சீர்கேட்டையும், அப்போதைக்கப்போதே பாடல்கள், நாடகங்கள், கதைகள் மூலம் எல்லோரும் அறியும் வண்ணம் செய்து, நிலைமையைச் சரி செய்து கொண்டார்கள். நாகரிகம் வளர வளர, மக்கள் பட்டின வாழ்க்கையில் புக இச்சிந்தனைகள் குறையலாயிற்று. ''கிராம மக்கள் கள்ளங்கபடம் அற்றவர்கள்'' என்ற கூற்றுக்கு ஏற்ப இன்னும் பல மக்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் வழியில் நகரத்தாரும் சென்று நாடும், வீடும் நலம்பெற ஒற்றுமை மேலோங்கி வாழ்தல் வேண்டும் என்ற கருத்தை நாம் மனதில் கொண்டு பின்பற்றுவோமாக.
நன்றி: வேர்களைத் தேடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக