இன்றைய சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை சமூகச் சீர்கேட்டை எடுத்துரைக்கும் ஒரு காலக்கண்ணாடியாக விளங்குவதில் புதுக்கவிதை - மிகச் சிறப்பாகப் பங்காற்றி வருகின்றது. புதுக்கவிதை புனைவதில் பல்வேறு கவிஞர்கள் தம் பங்கை இனிதே ஆற்றியுள்ளனர். அவ்வரிசையில் கவிஞர் மு. மேத்தா அவர்கள் குறிப்பிடத்தக்கவராவார்.
கவிஞரின் கவின்மிகு படைப்புகள்
மு. மேத்தா அவர்களின் கவிதை நூல்களில் மிகவும் பிரசித்தி பெற்றது கண்ர் பூக்கள் என்ற கவிதை நூலாகும். கவிஞர் 2004ம் ஆண்டு படைத்தளித்துள்ள ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்னும் கவிதை நூலில் சமுதாயத்தின் பல்வேறு அவலங்களையும், பெண்கள் நிலைபற்றியும் இனிதே எடுத்துக்கூறியுள்ளார்.
இத்தோடு மட்டுமல்லாது கவிஞர் கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை, போட்டிகள், காவியம் போன்றவையும் படைத்தளித்துள்ளார். மேலும் திரைப்படங்களுக்கும் பாடல்கள் பலவும் படைத்துள்ளார்.
கவிஞரின் கவிதை நோக்கில் சமுதாயப் பார்வை:
ஊர்வலம் - 1977 ஆம் ஆண்டின் சிறந்த கவிதை நூல் என்று தமிழக அரசின் முதற்பரிசு பெற்ற இந்நூலில் அவர்களும் இவர்களும் என்ற தலைப்பில் அமைந்த கவிதையில்
''மயிலின் நடுக்கத்துக்குப்
போர்வை கொடுத்த பேகனே
எங்கே போய்த் தொலைந்தாய்?
வா
லட்சோப லட்சம் பச்சை மயில்கள்
வறுமை அடிமை வரதட்சணைக் கொடுமை
இவற்றில் நடுங்குகின்றன - என்றேன்
வேக வேகமாய்
எதிரே வந்த பேகன்
அவசர அவசரமாய்ப்
போர்வையை எடுத்துத்
தன்
முகத்தைப் போர்த்துக்கொண்டான்'' (மு.மேத்தா, ஊர்வலம் ப.39)
என்ற வரிகள் சலிப்போடு சிந்திக்கவும் வைக்கின்றன. வறுமை, அடிமை, வரதட்சணைக் கொடுமை என்று கவிஞர் கூறியதோடு இன்றைய காலகட்டத்தில் நடக்கும் கொலை, கொள்ளை போன்றவைகளையும் சுட்டிக்காட்டுகிறது. மு.மேத்தா அவர்கள் தேசப்பிதாவுக்கு ஒரு தெருப்பாடல்களின் அஞ்சலி எனும் தலைப்பில் நமக்குப் படைத்தளித்துள்ள கவிதையைப் படிக்கும் போது தேசத்தின் நிலை நமக்கு நன்கு புலானகிறது.
''ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்
இந்த நாட்டு மக்கள்
உன்னை
அப்படியே பின்பற்றுகிறார்கள்
அரைகுறையாகத்தான்
உடுத்துகிறார்கள்
தேசம் போகிற
போக்கைப் பார்த்தால்
பிறந்த நாள் உடையே
எங்கள்
தேசீய உடையாகி விடும்போல்
தெரிகிறது'' (மு.மேத்தா, கண்ர் பூக்கள் ப.34)
என்ற வரிகள், இன்றைய சமூகத்தின் ஆடை அலங்காரத்தின் அவல நிலையை நன்கு வெளிப்படுத்தியுள்ளது. இன்று நாம் கையில் வைத்திருக்கும் கைக்குட்டை நாளை நம் உடம்பிற்கு நவநாகரீக ஆடையாகிவிடுமோ என்று ஐயங்கொள்ளும் அளவிற்கு இன்றைய நவீன உலகம் நரக வாழ்கையைத் தேடிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை வேதனையோடு மேத்தாவின் கவிதை வெளிப்படுத்தியுள்ளது.
சாதி மத பேதங்களால் வேறுபட்டுக்கிடக்கும் மனிதர்களைப் பார்த்து இறைவனும், கர்த்தரும் கடவுளும் மூவருமாக இணைந்து கேட்கும் கேள்வியாக ஒரே குரல் எனும் தலைப்பில் குறிப்பிடுகையில்,
''இடிந்து கிடக்கின்றன மசூதிகள்...
இடிபாடுகளின் உள்ளிருந்து
எட்டிப் பார்க்கிறான்
இறைவன்...
எரிந்து கிடக்கின்றன தேவாலயங்கள்
சாம்பல் குவியலில்
மெல்ல அசைகிறது
கர்த்தரின் தலை
காயம்பட்டுக் கிடக்கின்றன கோவில்கள்
காதுகளைப் பொத்தியபடி
கடவுள்
வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கும்
கூட்டத்தை நோக்கி
மூவரும் நோக்கி
ஒரு கேள்வி
உங்களில் யாராவது
ஒரு மனிதன் இருந்தால்
வரச் சொல்லுங்கள்
ஒன்றாக நாங்கள்
உயிர்த்தெழுகிறோம்'' (மு.மேத்தா, ஆகாயத்துக்கு அடுத்த வீடு.ப.31)
என்று எடுத்துக்கூறி இதே கருத்தைக் கவிஞர் தொலைக்காட்சியை நோக்கித் தொழுகை நடத்துவோம்'' எனும் தலைப்பில் மிகச் சுருக்கமாகவும் சிறப்பாகவும் எடுத்துக் கூறுகின்றார்.
''அவ்வரிகள் வருமாறு
பெருமாள் கோவிலின் முன்
ஏராளமான
பிச்சைக்காரர்கள்
மசூதிகளின் முன்பு
முண்டியடித்தபடி
முஸாபர்கள்....
மாடி வீடுகளில்
மகிழ்ச்சி குறையாமல்
வாழ்பவர் தமக்குள்
வாதமிடுகிறார்
''இராமர் கோவிலா?'' (பாபர் மசூதியா?) (மு. மேத்தா, கனவுக் குதிரைகள்.பக்.72,73)
மேற்கண்ட வரிகளில் ஜாதி மத வெறியைத் தூண்டிவிட்டு அதை வேடிக்கை பார்ப்பவர்கள் பற்றியும் அதன் மூலம் சுயலாபம் ஈட்டுபவர்கள் பற்றியும் கவிஞர் தம் கவிதையின் வாயிலாக எடுத்துக் காட்டுகின்றார்.
மு. மேத்தா கவிதைகளில் தாய்மை:
ஒரு பெண் இந்த உலகத்தில் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சி கொள்வது அவள் தாய் எனும் ஸ்தானத்தை அடையும் பொழுதுதான்
பெண்கள் உலகமே பெருமிதம் கொள்வது
தாய் எனும் பெயரைத் தாங்கும்போ தல்லவா?
அன்பே என்கிற அழைப்பை விடவும்
ஒரு பெண் அதிகம் எதிர்பார்ப்பது
அம்மா என்கிற அழைப்பை அல்லவா?
என்று கூறுவதன் மூலம் அம்மா என்கிற அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வார்த்தையின் அருமை நமக்கு நன்கு புலனாகிறது. இதே போல் கவிஞர் தம்முடைய ஆகாயத்துக்கும் அடுத்த வீடு எனும் நூலில் தாய்மையின் பெருஞ்சிறப்பைப் பறைசாற்றுகின்றார்.
''தாய்/பெட்டியை மேலே வைத்தான்/சிறிய பெட்டியைப்
புகை வண்டியின்/இருக்கைக்குக் கீழே
இழுத்துத் தள்ளினான்/தோள் பையைக் கம்பியில்
தொங்க விட்டான்/கனமாய் இருக்கிறதென்று
கைப்பையைக் கழற்றினான்../கையில் பிடித்திருந்த
பத்திரிக்கையைக் கூடப்/பக்கத்தில் வைத்தான்
நெட்டி முறித்து/நிமிர்ந்தான்...
எதிரே/இடதுதோளிலும்/வலது தோளிலும்
இடுப்பிலும்/மாற்றி மாற்றி
வைத்ததன்றி/தன் குழந்தையைக்/கீழே
இறக்கி வைக்காத/தாயைப் பார்த்துத்
தலை குனிந்தான்'' (மு.மேத்தா, ஆகாயத்துக்கு அடுத்த வீடு. ப.74)
இங்ஙனம் தாய்ப்பாசம் பற்றிக் கவிஞர் மிக அருமையாக உதாரணம்காட்டிச் சுட்டுகின்றார்.
இவ்வாறாகக் கவிஞர் மு.மேத்தா அவர்கள் அரசியல் சமூகச் சீர்நிலைகளைத் தம் கவிதை நூல்களின் வாயிலாக இந்தச் சமுதாயத்திற்கு எடுத்துரைக்கின்றார். மேலும் புதுக்கவிதை புனையும் அனைத்துக் கவிஞர்களும் தாய்மை பற்றிப் பல கவிதைகள் படைத்துள்ளனர். அவ்வகையில் மு.மேத்தா அவர்களும் தம் நூல்களில் தாய்மை பற்றிச் சிறப்பாகக் கவிதை படைத்தளித்துள்ளது இச்சமூகத்திற்கு மிகவும் பெருமை சேர்க்கத்தக்கதாகும்.
நன்றி: தற்காலத் தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள்.
1 கருத்து:
அருமை சிறப்பான பார்வை.
புலவர் ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சஙம் தேனி
கருத்துரையிடுக