13/03/2011

பழமொழிகளில் வெள்ளியைப் பற்றிய குறிப்புகள் - முனைவர் அ. சிவபெருமான்

நாட்டு மக்களின் வாழ்க்கை அனுபவங்களை எடுத்துரைக்கப் பயன்படுவன பழமொழிகளாகும். இவை வாயிலாக வேளாண், மருத்துவம், தத்துவம், வரலாறு, பொருளியல், கணிதவியல் முதலான பல்வேறு துறைகளை அறிந்து கொள்ளலாம். இக்கட்டுரை மழைநிலையை அறிந்து கொள்ளப் பயன்படும் வெள்ளி என்னும் கோள்பற்றிய பழமொழிகளை மட்டும் சிந்திக்கின்றது.

மழைக்கோளும் வெள்ளியும்:-

சூரியக் குடும்பத்தில் புதனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள கோள் வெள்ளியாகும். சூரிய மண்டலத்தில் அதிக ஒளியுடன் உள்ளதாக இக்கோள் காணப்படுகின்றது. விடியற்காலையில் கீழ்வானில் அதிக ஒளியுடன் இக்கோள் தோன்றுவதால் இதனை விடிவெள்ளி என்பர். இன்றைய அறிவியல் வானத்தின் தன்மையையும் அங்கு இயங்கும் கோள்களின் தன்மையையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு ஆராய்ந்து மழைநிலையைக் கூறுகின்றது. அவ்வாறு கூறும் போது வெள்ளி என்னும் சுக்கிரன் நிலை முதன்மைப் பெறுகின்றது.

தமிழிலக்கண இலக்கியங்களில், வெள்ளி மழையை அறிவிக்கும் முக்கிய கோளாகக் கருதப்படுகின்றது. புறப்பொருள் வெண்பாமாலையில் வெள்ளிநிலை என்றொரு துறை குறிக்கப்பட்டுள்ளது. உலகினருடைய துயர் தீரும்படி மேகம் மழையைப் பொழியும் என்றும் அவ்வாறு மழையைத் தருவதற்கு வெள்ளிக்கோளின் சிறந்த நிலையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் புறப்பொருள் வெண்பாமாலைக் குறித்துள்ளது. சேந்தன் திவாகரம், பிங்கலநிகண்டு, சூடாமணி நிகண்டு ஆகிய மூன்று நிகண்டுகளில் வெள்ளிக்குரிய பல்வேறு பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. அப்பெயர்களுள் மழைக்கோள் என்ற பெயரும் ஒன்றாகும். வெள்ளியாகிய சுக்கிரன் மழையைத் தருவதற்குப் பெரிதும் துணையாக இருப்பதால் மழைக்கோள் என்ற பெயரைப்பெற்றது போலும்.

வெள்ளியைக் குறித்த பழமொழிகள்:-

1. துலாத்தில் வெள்ளி உலாத்திப் பெய்யும் மழை

2. தெற்கே போன வெள்ளி வடக்கே வந்தால் மழை

3. கும்பத்து வெள்ளி குடங்கொண்டு சாய்க்கும்

4. சுவாதி சுக்கிரன் ஓயாமழை

5. மூடத்திலே வெள்ளி சாதிக்குதே நாட்டை மூடந்தள்ளிப் பேய்ந்தால் நாடு செய்த நன்மை.

மேற்குறித்த பழமொழிகளுள் சிலவற்றை மட்டும் சிந்தித்து அறிவோம்.

1. துலாத்தில் வெள்ளி உலாத்திப் பெய்யும் மழை

பன்னிரண்டு இராசிகளில் ஒன்று துலாராசி, துலாராசியில் வெள்ளி நின்றால் மழைபெய்யும். இக்கருத்தினைச் சூடாமணி உள்ளமுடையான் என்னும் நூல் ''சுக்கிர சரிதை'' என்னும் தலைப்பின் கீழ், துலாம், விருச்சிகம் ஆகிய இரண்டு இராசிகளில் வெள்ளி நின்றால் வெள்ளம் உண்டாகும் அளவிற்கு மழை பெய்யும் என்று குறித்துள்ளது. இக் கருத்தைத்தான், துலாத்தில் வெள்ளி உலாத்திப் பெய்யும் மழை என்று மக்கள் பழமொழியாகக் கூறிவருகின்றனர். ''உலாத்தி'' என்பதற்கு ''எங்கும் பரவலாக'' எனப்பொருள் கொள்க.

2. தெற்கேபோன வெள்ளி வடக்கே வந்தால் மழை

வெள்ளி தென்திசைக்குச் சென்றால் மழை பெய்யாது என்றும், வடதிசைக்குப் போனால் மழை பெய்யும் என்றும் நாட்டுப்புற மக்கள் கருதுகின்றனர். இக்கருத்தைத்தான் மேற்கூறிய பழமொழியாகக் கூறிவருகின்றனர்.

வெள்ளி சிறிது வடக்குத் திசைக்குச் சென்றால் மழை பெய்யும் என்ற கருத்தைப் பதிற்றுப்பத்து உணர்த்தியுள்ளது. வெள்ளி தென்திசைக்குச் சென்றால் மழை பெய்யாது என்ற கருத்தைப் புறநானூறும் சிலப்பதிகாரமும் குறிப்பிட்டுள்ளன. வெள்ளி தென்புறம் செல்வது நாட்டிற்கு வரும் தீமையை உணர்த்தும் தீநிமித்தங்களில் ஒன்றாகும் என்பதைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன.

3. மூடத்திலே வெள்ளி சாதிக்குதே நாட்டை;

மூடந்தள்ளிப் பேய்ந்தால் நாடு செய்த நன்மை

சூரியன் மிகப்பெரிய ஒளியை உடையவனாக விளங்கி, செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய ஐங்கோள்களுக்கு ஒளியை வழங்கி வருகின்றான். செவ்வாய் முதலான ஐங்கோள்கள் சூரியனின் பத்துப் பாகைக்குள் நிற்கும்போது அத்தமனமும், பத்துப்பாகை நீங்கி நிற்கும்போது உதயமும் பெறுகின்றன. கோள்களின் அத்தமன நிலையை மூடன் என்றும் கூறுவர். கோள்கள் மூடத்தில் நிற்கும்போது நாட்டிற்கு மழை முதலான நன்மைகள் உண்டாகா. இக்கருத்தைத்தான் மேற்கூறிய பழமொழி உணர்த்துகின்றது.

வெள்ளிக்கு இரண்டு வகையான அத்தமன, உதயநிலைகள் உண்டாகும். அவற்றிலொன்று வெள்ளி கிழக்கே அத்தமனமாகி மேற்கே உதிக்கும். மற்றொன்று மேற்கே அத்தமனமாகிக் கிழக்கே உதிக்கும். வெள்ளி அத்தமன நிலையில் நிற்கும் போது மழை பெய்யாதென்றும், உதயநிலையில் நிற்கும்போது மழை பெய்யுமென்று கொள்ளலாம்.

தமிழக நாட்டுப்புற மக்கள் வெள்ளி பாட்ல இருக்கும்போது எப்படி மழை பெய்யும் என்றும், வெள்ளி பாட்ல இருக்கு எப்போது முளைக்கும் என்றும் தங்களுக்குள் வினாவுவது உண்டு. பாடு என்ற சொல் வெள்ளியின் அத்தமனநிலையைக் குறிக்கும் இச்சொல்லே பாட்ல என்று திரிந்துள்ளது.

சுக்கிரவனின் இயக்கத்தால் மழை நிலையை அறிந்து கொள்ள இயலும் என்பதை நாட்டுப்புற மக்கள் பழமொழிகளாக வைத்து வழங்கி வருகின்றனர் என்பதை அறிந்தோம்.

நன்றி: வேர்களைத் தேடி

 

கருத்துகள் இல்லை: