27/03/2011

ஓவியர்கள்தான் முதல் சிருஷ்டி கர்த்தாக்கள் - இராம. பழனியப்பன்

இராம. பழனியப்பன், உலக அளவில் மிகவும் மதிக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த ஓவியர். பல முக்கியமான சர்வதேச ஓவியக் கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. டெல்லியிலுள்ள லலித்கலா அகாதமி, லண்டனிலுள்ள பிரிட்டீஷ் மற்றும் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகம், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட உலகின் பல முக்கிய அருங்காட்சியகங்களில் இவரது படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. பல சர்வதேச விருதுகளையும் பெல்லோஷ’ப்களையும் பெற்றுள்ளார். ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு இந்தியாவின் கலாச்சார பிரதிநிதியாக பயணம் செய்துள்ளார். ஆனால் நமக்கே உரிய மரபுப்படி, நம்முடைய பெருமையாக உலகம் முழுக்க வலம்வரும் இவரைத் தமிழகத்திற்குள் பரவலாகத் தெரியாது. 1957 ஜூன் 3-ஆம் தேதி தேவகோட்டையில் பிறந்த பழனியப்பன் சென்னை ஓவியக் கல்லூரியில் படித்தவர். தற்போது சென்னை லலித்கலா அகாதமி செகரட்டரியாக உள்ளார். சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

தீராநதி: முதலில் உங்களது இளமைப் பிராயத்திலிருந்து தொடங்கலாம். குறிப்பாக எது ஓவியத்தை நோக்கி உங்களை ஈர்த்தது. ஒரு ஓவியராக நீங்கள் உருவாகக் காரணமாக இருந்த சூழல்கள் என்ன என்பது பற்றி சொல்லுங்கள்.

இராம. பழனியப்பன்: எங்கள் தாத்தா, வைரம் ராமநாதன் செட்டியார், செட்டிநாட்டுப் பகுதியில், பரவலாக தெரிந்தவர். அவர், கலை மற்றும் கலாசார நடவடிக்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். எங்களுக்கு வியட்நாமில் கடைகள் இருந்தன. வியட்நாமில் அப்போது இரண்டு கோவில்களை நகரத்தார்கள் கட்டினார்கள். ஒன்று மாரியம்மன் கோவில், மற்றொன்று சுப்பிரமணியசாமி கோவில், அந்த கோவில்களில் திருபணிக்கும் கலை மற்றும் வளர்ச்சிக்கும் தாத்தா நிறைய உதவிகள் செய்தார். கோவிலில் அலங்காரப் பொருட்கள், மணி மற்றும் தேர் உட்பட பல பொருட்கள் எங்கள் வீட்டில்தான் தாயாராகி அங்கே சென்றன. சில்வர் தேர், தாத்தா மேற்பார்வையில் செய்யப்பட்டு வியட்நாம் போனது. இந்த வேலைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போது, சிறுவனாக எல்லாவற்றையும் நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஐயா ஈடுபட்டிருந்த கோவில்களின் திருப்பணி காரணமாக பல கோவில்களையும் அதன் அமைப்புகளையும் சுற்றிப்பார்க்கும் சந்தர்ப்பமும் வெகுவாக அமைந்திருந்தது.

ஐயா (தாத்தா) வைரம் பார்ப்பதில் நிபுணர். இரண்டு தரப்பினரும் நடுநிலைமையாக அவரை நியமித்து, வைரத்தைச் சோதித்துப் பார்ப்பார்கள். தாத்தா வைரம் பார்ப்பதை, நாங்களும் பார்த்துக் கொண்டிருப்போம். இதே காலகட்டத்தில் எங்கள் தந்தையார் ராமநாதன் செட்டியார், காலண்டர் ஏஜென்ஸ’ நடத்தி வந்தார். இதனால் வீட்டில் எப்போதும் ஆல்பம், காலண்டர் போன்றவை கட்டுக்கட்டாக இருக்கும். பிற்காலத்தில் அப்பா டின் பிரிண்டிங் நிறுவனம் ஒன்றையும் மதுரையில் நடத்தி வந்தார். அவற்றைப் பார்த்துக்கொண்டேதான் நான் வளர்ந்தேன்.

இவை அனைத்தும், என்னையறியமால் கலையும், ஓவியமும் எனக்குள் செல்வதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஒன்பதாவது படிக்கும் போது, படம் வரையும் திறமை எனக்குள் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தேன். அதனைத் தொடர்ந்து நிறைய படம் வரையத் தொடங்கினேன். ஐயா, என்னிடம் இருந்த, இந்தத் திறமையைக் கண்டுபிடித்து வியட்நாமிலிருந்து கலர் வாங்கி வரச் செய்து தந்தார். என்னை மற்றவர்களிடம் அறிமுகம் செய்யும் போது, இவன் நன்றாக வரைவான் என்றுதான் அறிமுகம் செய்வார். அப்போது பலர், சென்னையில் இருக்கும் ஓவியக் கல்லூரி பற்றி சொல்வார்கள். இது ஒரு உந்துதல்.

ஆனால் அக்காலகட்டங்களில் ஓவியன் ஆகவேண்டும் என்ற ஆசை அவ்வளவாக எனக்கு இருந்ததில்லை. சிறுவயதில் கட்டடக் கலை படிக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. கொஞ்சம் வளர்ந்த பிறகு, விஞ்ஞானியாக வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. அப்போது மஞ்சரி பத்திரிகையைத் தொடர்ந்து படிப்பேன். அறிவியல், ஆகாயவெளி, அதற்குப் பிறகு என்ன என்ற கேள்வி இவற்றின் மீது ஒரு பெரிய ஈர்ப்பு இருந்தது. கட்டடக் கலை அல்லது ஓவியம் படிக்க சென்னை வந்தேன். ஓவியக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

தீராநதி: ஓவியக் கல்லூரியில் அப்போது யார், யார் இருந்தார்கள்?

இராம. பழனியப்பன்: முதல் இரண்டு வருடம் தனபால் சார் முதல்வராகவும் பின்னர் முனுசாமி வாத்தியார் கல்லூரியின் முதல்வராகவும் இருந்தார்கள். முனுசாமி ஓவியங்கள் அப்பொழுது அவ்வளவாக புரியாது. ஆனால் வசீகரிக்கக்கூடியதாக இருக்கும். அல்போன்ஸ் எனக்கு நேரடி ஆசிரியர். சந்ரு கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். அவரை எப்போதும் ஆசிரியர் என்று நினைத்ததே கிடையாது. ஒரு சக தோழனாகத்தான் அவருடன் பழகியிருக்கிறேன்.

தீராநதி: ஒரு ஓவியராக உங்களை உருவாக்கியதில் கல்லூரியின் பங்கு என்ன?

இராம. பழனியப்பன்: கல்லூரியின் பங்கு மிக முக்கியமானது. மறக்க முடியாதது. கல்லூரி எனக்கு பெடல்போன்று இருந்தாலும், உள் உணர்வுகளை தூண்டுகின்ற ஒன்றாகவும் இருந்தது. என்னுடைய தனிப்பட்ட ஆர்வமும் என்னை ஒரு ஆளாக்கியிருக்கிறது என்றே நினைக்கிறேன். முதல் இரண்டு வருடங்களில் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு, சைனிஷ் ஓவியங்களைப் பார்த்து அதனை மாதிரி வரைவேன். சில்பியின் ஓவியங்களைப் பார்த்து, மகாபலிபுரம் சென்று பத்து நாட்கள் தங்கி, நூற்றுக்கணக்கான ஓவியங்கள் வரைந்துள்ளேன். தன்னிச்சையாக மூன்றாம், நான்காம் வருடங்களில் வெளி, விமானம் பற்றியெல்லாம் நான் வரைவதைப் பார்த்து, அல்போன்ஸா மிகவும் ஊக்குவித்தார். நான் மகாபலிபுரம் சென்று வரைந்து வந்த ஓவியங்களை, மற்ற மாணவர்கள் அனைவருக்கும் காண்பித்துப் பாராட்டுவார் அவர். நான் கிராபிக்ஸ’ல் ஈடுபட்டபோது ஆர்.வி. பாஸ்கரன் ஊக்கப்படுத்தினார். ஆதிமூலமும் நான் படித்து கொண்டிருந்த போதே மிகவும் ஊக்குவித்தார். நான் உருவாவதற்கு இவர்கள் எல்லோருமே காரணமாக இருந்திருக்கிறார்கள்.

தீராநதி: அக்காலகட்டத்தில் உங்களுடைய சமகாலத்தவர்களில் உங்களை கவர்ந்த படைப்புகள் என்று யார், யாருடைய படைப்புகளைச் சொல்லமுடியும்.

இராம. பழனியப்பன்: முனுசாமி, சந்தானராஜ், ஆதிமூலம், ஆர்.பி. பாஸ்கரன், அல்போன்ஸ், விஜய்மோகன், மூக்கையா இவர்கள் அனைவரது ஓவியங்களும் அப்போது என்னைக் கவர்ந்தன.

தீராநதி: உங்கள் ஆரம்பகால படைப்புகளில் பரவலாக தெரிந்தது. ''FLYING STEPS ON MY BIRTHDAY''. அதனை வரைவதற்குப் பின்புலமாக இருந்த மனநிலை என்ன?

இராம. பழனியப்பன்: கல்லூரியில் மூன்றாம் வருடம் படிப்பது வரைக்கும், என்னுடைய சிந்தனை எல்லம் ''ஓல்ட் மாஸ்டர்கள்'' மாதிரி ஆகவேண்டும் என்பதாகத்தான் இருந்தது. ஆனால் அதன்பிறகு ஓவியம் என்பது காலத்தையும், இடம், பொருள், சூழ்நிலைகளையும் மற்றும் ஓவியனின் தனிப்பட்ட உணர்வுகளையும் பிரதிபலிக்க வேண்டும் என்று எனது உள்மனம் அவ்வப்பொழுது சொல்ல ஆரம்பித்தது. கலை என்பது கண்ணுக்குப் புலனாகாத ஒரு விஷயம். அது சொல்லிக் கொடுத்து வரமுடியாது. உனக்குள் நீனாகவே கற்பித்துக் கொள்ள வேண்டியது என்று தோன்றியது.

1978-இல் ஒரு நாள் பிக்னிக் ஹோட்டலில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திருப்பதியில் மொட்டை அடித்துவிட்டு, ஆந்திராவில் இருந்து வந்திருந்தவர்கள் படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்தார்கள். சுற்றிச் சுற்றி ஏறும் படிக்கட்டு அது. ''கொஞ்சம்கூட விவஸ்தையே இல்லாமல் இப்படி படபடவென்று ஏறுகிறார்களே'' என்று சொல்லிக்கொண்டே, ''இந்த படிக்கட்டுகளுக்கு இடையேயுள்ள தொடர்பு இல்லையென்றால்'' என்று யோசித்தேன். அப்போது என்னை அறியாமலேயே ஓவியம் வரைகிறேன். அனிச்சையாக நடக்கிற ஒரு விஷயம் மாதிரி அது நடக்கிறது. படிக்கட்டுகளையெல்லாம் மிதக்கிற மாதிரி போடுகிறேன். அடர்த்தி இல்லையென்றால், காற்றுவெளியில் அது எப்படி மிதக்கும்? என்னுடைய முதல் படைப்பு அது.

தீராநதி: அதன்பிறகு நீங்கள் வரைந்த விமானம் வரிசை ஓவியங்கள் தொடங்கி சமீபகால பெர்லின் ஓவியங்கள் வரை உங்கள் படைப்புகளில் காணப்படும் தொடர்ச்சியும், மாற்றமும், அதன் பின்னால் இருக்கும் மனநிலையும் பற்றி சுருக்கமாக சொல்லமுடியுமா? குறிப்பாக உங்கள் படைப்புகளில் அறிவியலும் கணிதமும் பிரதானமானதாக ஏன் இருக்கிறது என்பதையும்.

இராம. பழனியப்பன்: எனது எல்லா படைப்புகளையும் பற்றி சொன்னால், அது மிக பெரியதாகிவிடும். உங்களிடம் இடமிருக்காது. எனவே ஒரு சில போக்குகளைப் பற்றி மட்டும் சொல்கிறேன். எனக்கு பதிமூன்று வயது இருக்கும் போது, நான் ஒரு திரைப்படம் பார்க்கிறேன். ''திகிலிலி ளிதி ங’ணிஸ’லிமிழி'' என்பது அந்தப் படத்தின் பெயர். இரண்டாம் உலக யுத்தத்தைப் பற்றிய படங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற படம். கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ஓடும். படம் முழுக்க சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். இடைவேளைக்குப் பிறகு ஒரு கட்டடத்தைக் கைப்பற்றுவார்கள். அந்த படத்திற்கு பிறகு, ஏதே ஒரு ஆர்வத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட இரண்டாம் மற்றும் முதலாம் உலக யுத்தப் படங்களைப் பார்த்தேன்.

பறக்கும் பொருட்கள் எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். யுத்தப் படங்களில் பிரதானமானது விமானங்கள். ஒரு திறையில் பத்து விமானங்கள் சென்றால் இன்னொரு திசையில் இருபது விமானங்கள் செல்லும். திரையில் விமானங்கள் அங்கும் இங்குமாக செல்வது, எனக்கு ஓவியம் மாதிரிதான் பட்டது. விமானத்தைப் பின்பற்றும்போது, அதன் இயக்கம் ஒரு ஓவியத்தை திரையில் உருவாக்குவதை பார்த்தேன். என்னுடைய படத்தின் சாராம்சமே இதுதான். விமானம் அல்ல, விமானியின் மனதுக்குள் என்ன இருக்கிறது என்பதில்தான் என் ஆர்வம்.

1978-79 காலகட்டம் அது. விமானத்திற்குள் ஏகப்பட்ட இயந்திரங்கள் இருக்கின்றன. இயந்திரம் எப்படி இயங்குகிறது என்பதை படம்போட வேண்டும் என்று நான் விரும்பினேன். அது எப்படி முடியும்? எனக்கு அது ஒரு பிரச்னையாகவே இருந்தது. விமானத்தின் வரைபடம், ''ஸ்கெலிட்டன்ஸ்'' ஆகியவற்றைக் கொண்டு ஒரு வரிசை ஓவியங்கள் செய்தேன். இன்றைக்கு நான் செய்து கொண்டிருக்கும் ஓவியங்களுக்கான ஒரு நூலிலை தொடர்பு அங்கேயிருந்துதான் உருவாகிறது. இயந்திரங்கள் எப்படி வேலை செய்கின்றன. என்று காட்டுவதற்கு எண்களை கொண்டுவரத் தொடங்கினேன். அடுத்த கட்டத்தில் நான் என்ன நினைக்கிறேன் என்பதையும் ஓவியத்திற்குள் எழுதத் தொடங்கினேன். அப்போது எனக்கென்று ஒரு பாதையை நான் நிர்ணயித்துக் கொள்கிறேன். ''விமானங்களும் ஏவுகனைகளும் எனக்கு வேண்டும் இந்தப் பிரபஞ்சத்தில் வரைபடம் வரைய'' என்று அப்போது ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறேன்.

விமானத்தின் நகர்வுகளைச் சித்திரிக்க, எண்களையும் விமானத்தில் உள் மற்றும் வெளி அமைப்புகளையும் ஒன்று சேர்த்து, அதன் பல பரிமாணங்களைச் சொல்ல முயற்சித்தேன். பின்பு அதில் இயக்கமே இல்லாதது போல் தோன்றவே, எனது சிந்தனை வேறு பக்கம் திரும்பியது.

ஒரு அறைக்கு வெளியே வந்து நிற்கிறீர்கள். உள்ளே இருந்து ஒரு இயந்திரம் இயங்கும் சத்தம் வந்துகொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு என்ன அர்த்தம்? உள்ளே யாரோ இருக்கிறார்கள் என்பதுதானே. விமானத்தை ஒரு மனிதன் ஓட்டுகிறான். அவன் இல்லாத விமானம், ஒரு பொருள்தான். அவன் இயக்கும் போதுதான் ஒரு விமானமாகிறது. அப்போது அந்த விமானி, அந்த விமானத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறான். அவன்தான் விமானம். அப்படியானால் விமானம் என்பது மனிதனைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு பொருள் என்ற சிந்தனை எனக்கு ஏற்பட்டது. இன்னும் ஆழமாகப் பார்த்தால், அதுவும் ஒரு மனிதன்தான். இப்போது மனிதன் இல்லாமலேயே மனிதனைப் பிரதிநிதித்தவம் செய்யும் ஒன்றாக அது இருக்கிறது. இந்த சிந்தனையோட்டத்தின் பின்னணியில் உருவானவை என் ''பறக்கும் மனிதன் வரிசை'' ஓவியங்கள். விமானத்தின் தலையை மனித தலையாக மாற்றி, தலையை ஒட்டி இறக்கைகள் வரைந்தேன். மனிதனை பிரதிபலிக்க தலை, விமானத்தை பிரதிபலிக்க இறக்கை. அதன்பிறகு எனக்கே அவை ஆடம்பரமாகத் தெரிந்தன. அது நான் இல்லை என்பது மாதிரி இருந்தது. ஓவியம் மிகவும் அலங்காரமானதாக, ஆபரணங்களாக போய்விட்டது என்பதுமாதிரி இருந்தது. ஒரு மனிதனை பிரதிபலிக்க இயந்திரங்களைப் போடவேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.

அடுத்த காலகட்டம் பட்டறைகள் வரிசை. இதில் மனிதனின் இயக்கத்தை காண்பிக்க, அவனது இடுப்புப் பகுதியில் இருந்து ஒரு பறவை பறந்து வருவது மாதிரி வரைந்தேன். பறவையின் இறக்கைக்குப் பதிலாக மனிதன் உருவாக்கிய விமானத்தின் இறக்கையை வைத்தேன். பறவையின் இறக்கையைப் பார்த்துதான் மனிதன் விமானத்தின் இறக்கையை உருவாக்கினான். நான் விமானத்தின் இறக்கையை பறவையின் இறக்கையாக்கினேன். மனிதனின் இடுப்பின் இயக்கத்தை சொல்ல அப்பறவை இடுப்புப் பகுதியில் இருந்து வருவது மாதிரி செய்தேன். அதன் தொடர்ச்சியாக உருவான படைப்புகளில் மனிதனை தூங்கச்செய்து கனவில் விமானத்தில் பறக்கிற மாதிரி, கனவை பக்கத்தில் வரைந்தேன். எப்போதும் என்னுடைய படம் அடுத்து நான் வரையப்போகும் புதிய படத்துக்கான தூண்டுதலாகவும் எழுச்சியைத் தருவதாகவும் இருக்கிறது.

''பறக்கும் மனிதன்'' வரிசை ஓவியங்களை செய்துகொண்டு இருக்கும் போதே, திரைப்படங்களின் பாதிப்பு என்னிடம் வந்துவிட்டது என்று உணர்ந்து அதிலிருந்து விலகி வந்தேன். தலையையும் இறக்கையையும் போட்டு எதைச் சொல்கிறேன்? பறத்தலைதான் சொல்கிறேன். பறப்பது என்பது என்ன? அடிப்படையில் இயக்கம்தான். அதனை காண்பிக்க தலையும் இறக்கையும் வேண்டுமா? இயக்கம் என்றால் என்ன? ஒரு மனிதன் நடந்து வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவன் என்ன செய்கிறான்? அங்கே இங்கே என்று அலைந்து வரும்போது, தரையில் ஒரு கோட்டோவியத்தை உருவாக்கிக் கொண்டே வருகிறான். இதன் அடிப்படையில் நான் அந்த இயக்கத்தைக் கோடாக பிரதிபலிக்கிறேன். கோடுகளின் இயக்கத்தை பிரதிபலிக்க பின்னணியில் ஒரு நிலக் காட்சியை வைத்தேன். ஓவியக் கல்லூரியில் படித்தவனுக்கு நிலக்காட்சியை வரைவதா சிரமம்.

அந்த இயக்கத்தை விமானம்தான் என்று சொல்ல எதை வைப்பது? அப்போதும் எனக்கு எண்கள்தான் தீர்க்கமாக இருந்தது. விமானத்தின் வேகம், பரிமாணம், எல்லாவற்றையும் குறிப்பிட்டுக் கீழே ஒரு சார்ட் போட்டேன். அதனை கையால் எழுதினால் நம்ப மாட்டார்கள் என்று உண்மையான ஆவணம் எப்படி இருக்குமோ, அது மாதிரி டைப்போகிராப்பியில் பண்ணி, கம்யூட்டரில் டைப் செய்து அதனை சேர்த்து பிரிண்ட் எடுத்தேன். அதனை பார்க்கும் போது நிஜமான ஒரு ஆவணத்தைப் பார்ப்பது மாதிரி இருந்தது. அதில் நான்காவது பரிமாணம். ஐந்தாவது பரிமாணம் என்று எழுதினேன். ஒருவன் நினைவு நான்காவது பரிமாணம். அவன் என்ன நினைக்கிறான் என்பது எனக்கு தெரிவது ஐந்தாவது பரிமாணம். இந்த சிந்தனையின் தொடர்ச்சியாக வரைந்த ஓவியங்களில், எழுத்து உள்ள பகுதியை தலைகீழாக வைத்தேன். படங்களை அதற்கு கீழே வைத்தேன். தையல் இயந்திரத்தால் தைத்து அதன்மேல சீல்வைத்து ரப்பர் ஸ்டாம்பு குத்தினேன்.

நம்பகத்தன்மைக்காகத்தான் ரப்பர் ஸ்டாம்பை குத்தினேன் ''SPACE DRAWING RESEARCH CENTRE, CHENNAI'' என்று ரப்பர் ஸ்டாம்பு குத்தினேன். நான்தான் அதாரிட்டி என்று குத்தினேன். தேதி குறித்தேன். உண்மையான ஆவணம் மாதிரி இருக்கவேண்டும் என்பதற்காக அரக்கு சீல் வைத்தேன். இவை எல்லாமே அனிச்சையாக ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு நடந்த விஷயம்.

இதன் தொடர்ச்சியாக ''ஆவணம்'' தொடர் வரிசை ஓவியங்களை வரைந்தேன். இதே காலகட்டத்தில் ஸ்பைரல் பைண்ட் செய்து காலண்டர் மாதிரி சுவற்றில் தொங்கப் போட்டேன். அதன்மேல் செல்லோ டேப்பினால் பிலிமை ஒட்டினேன். இந்த பிலிம் அதில் என்னமோ இருக்கிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இந்த எதிர்பார்ப்புக்குள் ஒரு படம் இருக்கிறது. அந்த படம் உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கிறது, எனக்கு ஒரு மாதிரி இருக்கிறது. ஒவ்வொரு கால கட்டத்திலும் இது மாதிரியான விஷயத்தைதான் நான் அறிய முயற்சி பண்ணிக்கொண்டு வருகிறேன். ஒரு விஷயத்துக்கு இரண்டு விதமான பார்வைகள் இருக்கின்றன. ஒன்று பௌதீகமான அம்சம். மற்றொன்று சைக்கலாஜிக்கல் பரிமாணம். ஒரு பொருளையோ, விஷயத்தையோ இந்த இரண்டு பரிமாணத்தையும் நீக்கிவிட்டுப் பார்க்க முடியாது இவை இரண்டும் சேர்ந்தே வரும்.

அடுத்த காலகட்டம், ''கிரகங்கள்''. மைலாப்பூர் கோவிலுக்கு நான் அடிக்கடி போவேன். நவக்கிரகங்களைச் சுற்றி வந்து, அதற்கு எதிர்த்தாற் போல் உட்கார்ந்து கொள்வேன். அங்கிருந்து நவகிரங்களை சுற்றிவரும் மக்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருப்பேன். நவக்கிரகங்களைச் சுற்றி வந்தால் ஒன்பது கிரகங்களையும் சுற்றி வந்ததாக அர்த்தம். ஒன்பது கிரகங்களையும் ஒன்பது பக்கம் பார்த்து திருப்பி, ஒரே அளவில் செய்து ஒரே மேடையில் வைத்திருக்கிறார்கள். அவற்றிற்கு இடையேயான இடைவெளியும் ஒரே அளவில் இருக்கும். ''JOURNEY TO NINE PLANETS'' வரிசை ஓவியங்களை அந்த காலகட்டத்தில்தான் செய்தேன். இன்றைய விஞ்ஞான அறிவுடன் ஒன்பது கிரகத்துக்கும் நான் போவது மாதிரி சிந்தனை. அதனை படம் பண்ணுகிறேன். அந்த படம் இப்போது பிரிட்டீஷ் மியூசியத்தில் இருக்கிறது.

அடுத்தது ''DOCUMENT ALIEN PLANETS'' அறுபத்திமூன்று நாயன்மார்கள் இருக்கிறார்கள். எல்லா நாயன்மார்களும் ஒரே உயரத்தில் இருக்கிறார்கள். கோவிலுக்கு வருபவர்கள் எல்லா நாயன்மார்களையும் பார்த்துக் கொண்டு, போய்க் கொண்டே இருப்பார்கள். இந்த அனுபவத்தைப் படமாக செய்து பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். 63 படம் பண்ணவேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன். பதினாறு பண்ணுவதற்கே இரண்டு வருடம் ஆகிவிட்டது. முப்பையிலும் டில்லியிலும் 16 படத்தை வரிசையாகவும் அதிலிருந்து ஒன்றை மட்டும் தனியாகவும் வைத்தேன். மக்கள் என்னுடைய படத்தைப் பார்த்து நகர்ந்து கொண்டே இருந்தார்கள். எதையுமே உணராமல், நாயன்மார்களை சுற்றி வருவது மாதிரி வந்தார்கள். ஆனால் அதே கிரகங்களின் தனிப்படம் பக்கத்தில் வந்து நின்று உற்றுப் பார்த்தார்கள். அதே படம்தான் பதினாறில் ஒன்றாகவும் இருக்கிறது. ஆனால் அதனை அவர்கள் பார்க்கவில்லை. இந்த சைக்கலாஜிக்கல் அனுபவத்தைப் பார்க்கவேண்டும் என்றுதான் அப்படிச் செய்தேன். வரிசையான ஒரே அளவில் ஒரே இடைவெளியில் வைத்தால் மக்கள் பார்க்க மாட்டார்கள்.

மிக சமீபத்தில் வரைந்தவை ''BERLIN ON PROCESS'' 1999-இல் பெர்லின் சென்றிருந்த போது, வழியில் ஒரு கட்டடத்தைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டேன். அது, பார்த்து மிகவும் பழகின ஒரு இடம் மாதிரி இருந்தது. ''fall of berlin'' திரைப்படத்தில் நான் பார்த்த கட்டடம் அது. 200 வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து போன இடம். 50 வருடத்துக்குப் பிறகு அதனை புதுப்பித்து பாராளுமன்றம் ஆக்குவதற்கான வேலைகள் அப்போது நடந்து கொண்டிருக்கின்றன. கட்டடத்தைச் சுற்றியும் எராளமான இயந்திரங்கள். நான் அந்த கட்டடத்தை புகைப்படம் எடுக்கத் தொடங்கினேன். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் புகைப்படம் எடுத்தேன். இன்னும் நிறையப் பேர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் என்னை மாதிரி யாரும் எடுக்கவில்லை. நான் குரங்கு மாதிரி எடுத்துக் கொண்டிருக்கிறேன். மற்றவர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். எனக்கும் அந்த கட்டடத்துக்குமான தொடர்பு அவர்களுக்குத் தெரியாது. எப்படித் தெரியும்? அது என் மனதில் அல்லவா இருக்கிறது.

ஊருக்கு வந்த பிறகு பிரிண்ட் போட்டு பார்த்தபோது. நான் எப்படி புகைப்படம் எடுத்தேன் என்பதை நினைத்தேன். யுத்தத்தில் சிப்பாய்கள் கட்டடத்தை நோக்கி சுட்ட மாதிரிதான் நானும் என் கேமிராவில் சுட்டுத் தள்ளியிருக்கிறேன். அதன் பிறகு அந்தப் படங்களை வைத்து கிராஃபிக்ஸ் பண்ணினேன். கட்டடத்தைச் சுற்றி நிறைய பேர் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், அவர்களுக்கு இடையே புகுந்து அங்கே இங்கே நுழைந்து, நான் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதையும் ஆவணப்படுத்தினேன். ஓவியத்தில் சிவப்புக் கோடு என்னுடைய இயக்கம். கருப்புக் கோடு புகைப்படம் எடுத்துகொண்டிருந்த மற்றவர்களுடைய இயக்கம். இந்த படைப்பின் வழி அந்த கட்டடக் கலையையும், அந்த இடத்தில் என்னுடைய இருப்பையும், 50 வருடத்துக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு பாராளுமன்றமாகும் நிகழ்வையும் நான் கொண்டாடுகிறேன்.

அதனை வரைந்து கொண்டிருக்கும்போது, இவ்வளவு வருடமும் நாம் தேடிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த விஷயம் இதுதாண்டா என்று தோன்றியது. தெளிவாக முடிவு செய்துவிட்டேன். அதன்பிறகு கோடுகளை மட்டும் வரைந்தேன். அதற்கான தலைப்புகளை தத்துவார்த்தமானதாக வைத்தேன். எனக்கு ஓவியங்களைவிட ஓவியங்களுக்கு வைக்கும் தலைப்புகள் முக்கியமாக தோன்றியது.

தீராநதி: உங்கள் படைப்புகளுக்கான எதிர்வினைகள், விமரிசனங்கள் எப்படி இருந்தது. அதனை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொண்டீர்கள்?

இராம. பழனியப்பன்: தொடக்கத்தில் என்னையும், என் ஒவியங்களையும் யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் உள்ளூர எனக்கு அதில் ஒரு உயிர் இருக்கிறது என்று பட்டது. எனவே அதைத் தொடர்ந்து செய்தேன். அதன் பிறகு ஒரு சிலர் இவன் இதை விட்டுப் போகமாட்டான். நம்மை புரிந்துகொள்ளவும் மாட்டான் என்று எனது ஓவியங்களை புரிந்துகொள்ள முயற்சித்தார்கள்.

தான் யாருக்காக படைக்க வேண்டும் என்ற கேள்வி எப்போதும் கலைஞர்கள் முன்னால் இருக்கிறது. கலைஞன் செய்யும் அனைத்தும் அதிகபட்சமாகச் சமூகத்திற்குத்தான். ஆனால் அந்த சமூகத்தின் எந்த பகுதிக்காக செய்யவேண்டும் என்பதுதான் என் கேள்வி. நானே சமூகத்தின் ஒரு பகுதிதானே. சமூகத்தில் இருக்கிற எனக்காக, நான் நினைக்கும் காரியத்தை நான் செய்யும்போதுதான், அதனால் சமூகம் வளம் பெரும்.

நம்முள்ளே பல்லாயிரம் வருட மனிதன் இருக்கிறான். அவன் உலகம் உருவானது தொடங்கி இன்றைக்கு வரைக்கும் இருக்கும் மனிதனின் பிரதிநிதி. நம்மிடம் இருக்கும் இந்த மனிதனை வெளியே எடுத்துக்கொண்டு வரவேண்டும். சிருஷ்டி நடக்கும்நேரத்தில் கலைஞன் அவனாக இல்லாமல், அவனுக்குள்ளே இருக்கும் இந்த மனிதனைப் பிரதிநிதித்துவம் செய்தானானால் அவன் இந்த மொத்த உலகத்தையும் பிரதிநிதித்துவம் செய்பவனாவான்.

தீராநதி: நிறைவாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

இராம. பழனியப்பன்: விஞ்ஞானம் எனக்கு சந்தோஷமான ஒரு விஷயம். விஞ்ஞானிகள் மற்றவர்கள் விளையாடுவதற்காக கம்ப்யூட்டர் உட்பட பல்வேறு பொருட்களை விட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள். நாமும் இந்த உலகத்திலிருந்து செல்லும்போது நம் குழந்தைகள் விளையாடுவதற்கு ஒரு பொருளை விட்டுவிட்டு செல்லவேண்டும். ஒவியர்கள்தான் முதல் சிருஷ்டிகர்த்தாக்கள். எனவே அவனும் விஞ்ஞானிபோல் விட்டுவிட்டுப் போகவேண்டும். அப்படி விட்டுவிட்டுப் போகவில்லை என்றால் அவன் கலைஞனே கிடையாது. கலைஞனாக இருக்கவும் முடியாது.

நன்றி: தீராநதி 2005

 

கருத்துகள் இல்லை: