விலங்குநிலை வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சியாய் அடுத்தக் கட்டத்தில் தோன்றிய நாகரிக மனிதன் தன்னுடையச் சிந்தனை தளத்தினை அரசியல், பொருளாதாரம், மொழி, பண்பாடு என விரிவுபடுத்திய பொழுது அவனுடைய ஆய்வுக் காலங்களும் விரிந்து கொண்டன.
பொதுவாக யாவருக்கும் தங்கள் தாய்மொழியின் மீது அதிக ஆர்வமும், ஆய்வுநோக்கமும் இருக்கும் அது எண்ணத்தில், உணர்வில் பரவி இருப்பது இயல்பான ஒன்று ( தமிழர்களில் பலருக்கு இந்த எண்ணம் இல்லாததும், ''தமிழர்'' என்பது கூட நினைவு இல்லாததும் வியப்பான ஒன்று) ஒரு மொழியின் இயல்பு குறித்தும், அதன் கால எல்லை குறித்தும், அம் மொழியினோடு இணைக்கப்பட்டுள்ள சமூக வாழ்வியல் பண்பாடு குறித்தும் பேசுவோர் மற்றும் எழுதுவோராயினும் உணர்தல்வேண்டும். அப்படி உணரும் தளத்தில் நான் யார்? தன் சமூகம் எப்படிப் பட்டது? அதன் காலச்சாரம் என்ன? அதன் பண்பாடு எத்தகைய வழிப்பட்டது என்றும் பல வினாக்களுக்கு விடைதேடும் நெடிய பயணமாக அது அமைய வேண்டும் அதே சமயம் சிறந்த பயனளிக்கக் கூடியதாகவும் அமையும்.
குறிப்பாகத், தமிழ்ச் சமூகம் போன்ற தொல் உயர்வுடைய சமூகத்திற்குக் கட்டாயம் தேவை. மொழியின் உண்மையினை, ஆழத்தினை உணர்வோனுக்கு மட்டுமே, ''சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே, அதைத் தொழுது படித்திடடி பாப்பா'' போன்ற உயர்வான சிந்தனைகள் தோன்றும். ஒரு மொழியினை வெறும் பேசும் எழுதும் மொழியாகப் பார்க்காமல் அதன் உள்ளர்ந்த பொருண்மையான பொருளை ஆராயும் நிலையில் அது வாழும் மொழியாக பல்வேறு கலாச்சார பண்பாட்டு வடிவத்தினை கருத்தினை வாழ வைக்கும் மொழியாக இருப்பதைப் பார்க்கலாம். இந்த அடிப்படையில் ஆராய, அதன் ஆதி கருத்துரு எழுத்துச் சின்னங்களை (I conic letter and symbols or phonemic symbol) அறிதல் என்பது அவசியம்.
மனித சமுதாய ஆதிகாலத்தில் (சுமார் 2,00,000 ஆண்டுகளுக்கு முன்) தோன்றிய அல்லது உருவாகிய எழுத்துரு சின்னங்கள் பற்றிய தகவல் அனைத்தையும் பகுத்து ஆராய்ந்தால், அதன் ஆதிமொழி வடிவம் தமிழ் மொழிக்குரிய சொல் வடிவங்களையும் பொருண்மைகளையும் கொண்டுள்ளதை அறியமுடிகிறது. தமிழில் நமக்குக் கிடைக்கும் முதல் நூலான ''தொல்காப்பியம்'' கூறும் ஒரெழுத்தோர் மொழிகள், உயிர் ஈற்றில் தோன்றும் 11 மெய்கள், அவற்றுடன் சேர்ந்து உருவாகும் ஈரெழுத்தோர் மொழிகள், அவற்றுடன் மொழி முதலும், மெய் எழுத்துக்களும் சேர்ந்து உருவாகும் தொடர்மொழிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
சொல்லாக்கப் பண்பாட்டு நிலையில் ''தமிழ்'' எனும் சொல்குறித்து ஆராய வேண்டிய காலத்தில் நாம் உள்ளோம். அதனை ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கம்.
தமிழ் = த+ம்+இ+ழ்
(1) த = அந்த (THE)
(2) ம = பெருமை மிக்க (great)
(3) இ = கதிரவன் (Sun)
(4) ழ் = மோழில் உள்ள (in space)
= மோழில் உள்ள அந்த பெருமை மிக்க கதிரவன்.
= The great sun in space.
இப்பொருண்மையின் நோக்கம் தமிழ் எனும் சொல் உணர்த்தும் சூரியன்கள் நான்கு.
1) நேரிடையாக, கோள்களின் குடும்பத்திற்கு தந்தையான! தலைவனான சூரியன்.
2) அடுத்து மறைமுகமாக, மனித உடலில் உள்ள சூரியன்.
3) ஏறக்குறைய 100 மில்லியன் சூரியன்கள் ( விண்மீன்கள்) உள்ளடக்கிய GalaxY எனும் அண்டம் மாபெரும் "சூரியன்''
4) ஒரு மொழியின் தலைமையாய் இருந்து பிரிந்துள்ள உலகமொழிகள் அனைத்தும் பொருண்மையாய் விளக்குவது தமிழ் எனும் சூரியன்.
இதற்குச் சான்றாய்,
''ஒங்கல் இடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கு ஒலிநீர் ஞாலத்து இருள்கடியும் - அங்கு அவற்றுள்
மின்ஏர் தனிஅழி வெங்கதிர் ஒன்று ஏனையது
தன் நேர் இலா தமிழ்'' - என்று தண்டியலங்கார
உரையில் குறிப்பிடப்படும் இப்பாடல் ''Initiation Rituals'' எனப்படும், காலங்காலமாக வாய்மொழி மரபாக இருந்து வழங்கிவரும் ஒரு பாடல் ஆகும். இப்பாடல் மேற்கூறிய கருத்துப் பொருண்மைக்கு உறுதி சேர்ப்பதாய் அமைகிறது. மேலும் இது சமூகவியல் நோக்கில் ஆராயும் பொழுது ''Initation Rituals'' என்பது இன்றும் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களிடம் இருந்து வருவதாக மானிட, பண்பாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ் = அமிழ்தம்:-
1) த = திட உடலைக் குறிக்கும்.
2) அம் = நீரைக் குறிக்கும்.
3) இழ் = (உள்ளாக) இழுக்க.
உடல் உள்ளாக இழக்கப்படும் நீர் என்னும் பொருண்மையானதாக ''உமிழ்நீர்'' என்னும் கருத்தை உணர்த்துகின்றது. மாந்தர்க்கு தம் மொழியை பேசவும் உமிழ்நீர் துணை புரிகின்றது.
சான்றாக,
''ஏழிசையுமாய் இன் அமுதமுமாய்(தேவாரம்)
தமிழுக்கு அமுதென்று பேர் (பாரதிதாசன்)
தித்திக்கும் தெள் அமுதாய்(த்) தெள் அமுதின் மேலான முத்தக் கனியே (தமிழ்விடுதூது)
தமிழ் = இளமை
உமிழ்நீர் என்பது வாய்க்குள் அமைந்திருக்கும் மூன்று இணை நாளங்கள் (3 Pairs of stands) மூலம் ஒரு நாளைக்கு 1 முதல் 1.5 லிட்டர் வரை ஊறுகின்றது. உணவில் உள்ள ''Starch'' எனும் மாவு சத்துக்களை ''Sucrose'' என்னும் சீனி இனிப்பாக மாற்றி அச்சுவையை நாவுக்கு உணர்த்தி உணவை உட்கொள்ளச் செய்கின்றது. ஆதலால் ''தமிழ்'' என்னும் சொல் ''இனிமை'' என்னும் சுவையை உணர்த்துகின்றது.
''அம்'' எனும் வேர் சொல்லிற்கே ''இனிமை'' பொருள் உள்ளது.
''இனிமையும் நீர்மையும் தமிழ் எனவாகும்'' (பிங்கல நிகண்டு)
''தமிழ்(ப்) பாட்டிசைக்கும் தாமரையே (கம்பன்)
''தமிழ் நிகர் நறவம்'' (கம்பன்)
''தமிழ்மொழியில் இனிதாவது எங்கும் காணோம்'' (பாரதி)
''மதுரம் ஒழுகிய தமிழ்'' (மீனாட்சி பிள்ளைத் தமிழ்)
கன்னி, பாவை, அணங்கு, ஆரணங்கு தையல் அழகு
தம்+இழ் எனப் பிரிந்து
தம் - பெண்னைக் குறிக்கும்.
இழ் - கவர்ச்சியும், வனப்பும் உடைய ''அழகு'' என்னும் கருத்தை உடையது.
இரு மூலச் சொற்களின் தொகுப்பாகிய ''தமிழ்'' என்னும் சொல் செம்மை மிக கன்னிப்பருவ பெண்களைக் குறிக்கும் கன்னி, பாவை, ஆரணங்கு, தையல், அழகு என்னும் சொற்களை உணர்த்தி நிற்கின்றது.
''தமிழ் தழீஇய சாயலவர்'' (சீவக சிந்தாமணி)
''அகத்தியன் பயந்த செஞ்சொல் ஆரணங்கு'' (வில்லிபாரதம்)
''கானார் மலயத்து அருந்தவன் சொன்ன கன்னித்தமிழ் நூல்'' (காவியப் காரிகை)
''எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழ் அணங்கே'' (மனோன்மயம்) சுந்தரம் பிள்ளை.
தனிமை:-
"தனிமை'' என்னும் சொல் பொருண்மையோடு தமிழை ஒப்பிட்டு நோக்கும்பொழுது அதனை சமூதாய பழக்கவழக்கங்களோடு சேர்த்து ஆராய்ந்து நோக்க வேண்டும்.
"தனிமை'' என்னும் சொல் பெண்ணிற்குறிய குணநலன்களுடன் கூடி ஒப்பிட்டு நோக்கும்பொழுது ஒரு பெண் பருவம் எய்தியது முதல் திருமணம் ஆகும்வரை அவளை ''தனித்து'' சிறப்பாகக் காத்து வரும் பண்பாடு சமூகத்தில் இருந்து வருகிறது. அதுபோல முழுமையான வடிவம் அடைந்துவிட்ட தமிழை அதனோடு கூடிய பண்பாட்டு அடையாளத்துடன் காத்து வருவதும் தமிழ் சமூகத்தின் கடமையாகி வருகின்றது. 1) செம்மை மிகு கன்னிப் பருவத்தின் தன்மையாலும் 2) பல் நோக்கில் ''தமிழ்" எனும் மொழி தனித்த செம்மையை பெற்றிருப்பதாலும், அம்மொழி பல பாங்கில் இனிமைகளைத் தரும் தன்மைகளை ஏற்றுள்ளதாலும் ''தமிழ்'' எனும் சொல் ''தனிமை'' எனும் கருத்தை உணர்த்துகின்றது.
''தன் நேர் இலாத தமிழ்'' (தண்டியலங்காரம் உரை மேற்கோள்)
''மொழிகள் குலத்தனி விளக்கே (பாரதியார்)
நீர்மை:-
இச் சொல் குறிக்கும் பொருள்களாயின,
1) ஒப்புரவு (obsorance of proper rules or established customs)
2) பண்பு (Nature, property, inherent Quality)
3) நிலைமை ( State of condition)
ஆதலின் ''தமிழ்மொழி நீர்மை உடைத்து'' எனும் கூற்றிற்கு சிறப்பான ஒப்புரவு உடைய மொழி எனும் பொருண்மை உடையதாகின்றது.
''இனிமையும் நீர்மையும் தமிழ் எனவாகும்'' (பிங்கல நிகண்டு - பா.3610)
மேலும், செந்தமிழ், கோதுஇல் தமிழ், அரும்தமிழ், இன்தமிழ், இன்பத்தமிழ், பசும்தமிழ், பைந்தமிழ், தீந்தமிழ், முதுமொழி, தூயமொழி, ஆதிமொழி, ஞானத்தமிழ் போன்ற பல்வேறு அடைமொழிகள் தமிழுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
''தமிழ்'' எனும் சொல்லுக்குரிய பொருண்மையின் களமே பரந்து விரிந்துகொண்டு செல்கிறது.
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் தமிழர்கள் ''தமிழ்'' என்னும் சொல்லுக்கான பொருண்மையாவது அறிந்து கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் அகராதியை திருப்பியபொழுதும், பல்வேறு ஆசிரியர்கள் நெடும் காலமாக கூறிவரும் தமிழ் என்னும் சொல்லுக்கு உரிய பொருண்மையான, ''அமிழ்தம்'' கன்னி, பாவை, அணங்கு, ஆரணங்கு, தையல், அழகு, தனிமை இனிமை, இறைவன், நீர்மை போன்ற சொற்பொருளின் வன்மை மென்மைகள் குறித்து மீட்டுருவாக்கம் செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக