06/03/2011

விநாயக சதுர்த்தி - புதுமைப்பித்தன்

அன்று விநாயக சதுர்த்தி. நான், பலசரக்குக் கடையிலிருந்து சாமான்கள் கட்டி வந்த சணல் நூல்களையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து முடித்து, வீட்டின் கூடத்தில் நாற்கோணமாகக் கட்டினேன். அப்புறம் மாவிலைகளை அதில் தோரணமாகக் கோத்துக் கொண்டிருந்தேன். ஆமாம், பட்டணத்திலே மாவிலை கூடக் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும். "என்ன, மாவிலைக்குமா விலை?" என்று பிரமித்துப் போகாதீர்கள்! மாவிலைக்கு விலையில்லையென்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், மரத்தில் ஏறிப்பறித்து, வீடு தேடிக் கொணர்ந்து கொடுப்பதற்குக் கூலி கொடுக்க வேண்டுமா, இல்லையா? நாங்கள் படித்த பொருளாதார சாஸ்திரப்படி இந்த 'உழைப்பின் மதிப்பை' அந்த இலையின்மேல் ஏற்றி வைத்துப் பார்க்க வேண்டும். இதுதான் 'விலை' என்பது! நீங்கள் கிராமாந்தரங்களில் இருந்தால், எவனுடைய மாமரத்திலேனும் வழியிற் போகும் எவனையாவது ஏறச் சொல்லி, "டேய், இரண்டு மாங்குழை பறித்துப் போடுடா!" என்று சொல்லிவிடுவீர்கள். சில பிள்ளைகள் தாங்களே மரத்திலேறிப் பறிப்பார்கள்; சிலர் மரத்தோடு கட்டி வைக்கப் படுவதும் உண்டு. இந்த 'ரிஸ்க்' எல்லாம் நினைத்துத்தான் பட்டணவாசிகள், மண் முதல் மாங்குழை வரை எல்லாப் பொருள்களையும் விலை கொடுத்து வாங்க முயற்சிக்கிறார்கள். இதுதான் அழகு, நாகரிகம்! பட்டணத்திலே, ஆந்தைகள் வசிக்கும் பொந்துகள் மாதிரியுள்ள வீடுகளில், கும்பல் கும்பலாய் வசிக்கும் நாங்களும் இந்த நாகரிகத்தின் சிறு சிறு துணுக்குகள் தானே!... நிற்க... நான் தோரணத்தைக் கட்டிக் கொண்டிருந்தேன். அதாவது, காசு கொடுத்து வாங்கின மாவிலைகளில் 'வேஸ்டேஜ்' (கழிவு) இல்லாமலிருக்க எல்லாவற்றையும் சேர்த்து வைத்துத் தொடுத்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பல் முளைத்த மாதிரி அவை கோணல் மாணலாகத் தொங்கின.

நான் தோரணம் கோத்துக் கொண்டிருக்கிறேன்...

பக்கத்திலே பிள்ளையார், பச்சைக் களிமண் ஈரமும் எண்ணெய்ப் பசையும் பளபளக்க, சர்க்கரைப் பொட்டலம், காகிதக் குடை, நாவற் பழம், புளி வகையராக்களுடன் அரங்கத்தில் பிரவேசிக்கக் காத்திருக்கும் ராஜபார்ட் போல, ஏன், "சிம்மாசனம் காலியாகட்டுமே, ஏறி உட்காருவோம்!" என்று காத்திருக்கும் பட்டத்திளவரசன் போல பரிதாபகரமாகக் காத்துக் கொண்டிருக்கிறார்.

என் மனம் ஒரு ரசமான பேர்வழி. இந்த மாதிரியான சோம்பேறி வேலை எனக்குக் கிடைத்துவிட்டால், அது கண்டபடி ஓட ஆரம்பித்துவிடும்.

"உனக்கு ஒரு ரசமான கதை சொல்லட்டுமா?" என்றது.

"'பிரேக்' கழன்றுபோய்விட்டது. இனி வெறிதான்!" என்று திட்டப் படுத்திக் கொண்டேன்.

"ஆமாம்! வண்ணாரப் பேட்டையிலே சுப்பு வேளான் இருந்தானே, ஞாபகம் இருக்கிறதா?" என்றது.

ஒரு வரிசைத் தோரணத்துக்கு இலைகளை வைத்துச் சரிக்கட்டி விட்டேன்.

"அவன் தான் ஆக்கு! கடைசியிலே வெள்ளைக் களிமண்ணையே தின்று செத்தானே, அந்த மருத வேளான் மகன்!" என்றது மறுபடியும்.

அப்படியே நான் எங்கள் ஊருக்குச் சென்றுவிட்டேன். அந்தத் தாமிரவருணி ஆற்றின் கரை, தூரத்திலே மேற்குத் தொடர்ச்சி மலை, சமீபத்தில் சுலோசன முதலியார் பாலம், சின்ன மண்டபம், சுப்பிரமணியசாமி கோவில், சாலைத் தெரு, பேராச்சி கோவில், மாந்தோப்பு, பனை விடலிகள், எங்கள் வீடு - எல்லாம் அப்படி அப்படியே என் கண் முன்பு தோன்றலாயின.

"ஆமாம், எல்லாம் வாங்கிக் கொண்டு வந்தீர்களே! பிள்ளையாருக்கு விளாம்பழம் எங்கே?" என்று கேட்டுக் கொண்டே, சர்க்கரைப் பொட்டலத்தை எடுத்தாள் என் மனைவி.

"கூடைக்காரி வருவாளே! வாங்கினாப் போகிறது!" என்று சொல்லி, ஒரு முரட்டு மாவிலையை எடுத்து, பத்து அங்குல இடத்தையும் அதொன்றினால் மறைத்து 'அலங்காரம்' செய்ய முயற்சித்தேன்.

"கூடைக்காரி வந்தால்தானே! நீங்கள் போய் எட்டிப் பாருங்களேன்!" என்றாள் சகதர்மிணி.

"திட்டமாக வருவாள், நான் சொல்லுகிறேன் பார்!" என்றேன். என் வாழ்க்கையில் ஒரு நாளாவது தீர்க்கதரிசி அல்லது 'பலிக்காவிட்டால் பணம் வாபஸ்!' என்று விளம்பரம் செய்யும் ஜாமீன் ஜோஸியராக ஆகிவிடுவது என்று (சந்தர்ப்ப விசேஷத்தால்) என் சோம்பலை வியாக்கியானம் செய்தேன்.

பக்கத்திலே இருக்கும் பரிவாரங்களில் ஒன்றைப் பறிகொடுத்தார் விநாயகர்.

"சுப்பு வேளான் குடும்பத்துக்கே சாபம், தெரியுமா?" என்றது என் மனசு.

"அதென்ன?"

"கும்பினிக்காரன் வந்த புதுசு. அந்தக் காலத்திலே சுலோசன முதலியார் பாலம் கட்டலே. நம்ம சாலைத் தெருதான் செப்பரை வரைக்கும் செல்லும். அங்கேதான் ஆற்றைக் கடக்க வேண்டும். கொக்கிரகுளத்திலே இப்பொழுது கச்சேரிகள் இருக்கே, அங்கே தான்கும்பினியான் சரக்குகளைப் பிடித்துப்போடும் இடம். அந்த வட்டாரத்திலே நெசவும், பாய் முடைகிறதும் - இந்தப் பத்தமடைப் பாய் இருக்கே அது - ரொம்பப் பிரபலம். அப்பொழுது ஒரு இருநூறு முந்நூறு வண்ணான்களைக் குடியேற்றி வைத்தான் கும்பினிக்காரன். 'குஷ்டந் தீர்ந்த துறை, என்ற பேர் 'வண்ணாரப்பேட்டை' என்று ஆயிற்று!"

"இதோ, இதைப் பாருங்கள். இந்த உப்புப் போதுமோ என்று பாருங்கள்!" என்று கையில் கொஞ்சம் உப்பைக் கொணர்ந்தாள் பத்தினி.

"இதெல்லாம் உன் 'டிபார்ட்மெண்டு'. என்னைக் கேட்டால்...?" என்று சிரித்துக் கொண்டு அவளைப் பார்த்தேன்.

"என்னைக்குமா உங்களைக் கேக்கறேன்? ஏதோ கேட்டால்..."

அவள் காலையில் ஸ்நானம் செய்து தலையில் ஈரங்காயாமல் எடுத்துக் கட்டியிருந்தாள். அவ்வளவு அவசரம்! நெற்றியில் விபூதி, அதற்குமேல் குங்குமம்... பறந்து பறந்து வேலை செய்வதால் முகத்தில் ஒரு களை... வேகத்திலும் ஓர் அழகு இருக்கத்தான் செய்கிறது என்று நினைத்தேன்.

"ஏடி, கமலா! கொஞ்சம் அந்தச் செல்லத்தை எடுத்து வை!" என்று கேட்டேன்.

"ஆமாம், அடுப்பிலே பாகு என்னமோ காய்கிறதோ! இந்தச் சமயத்தில்தான் உங்களுக்கு..." என்று சொல்லிக்கொண்டு வெற்றிலைப் பெட்டியை எடுத்து வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.

அப்பொழுது எங்கிருந்தோ மெல்லிய தளிர்க் காற்று வீட்டிற்குள் பிரவேசித்து உலாவியது. மாவிலைக் கும்பலில் உட்கார்ந்து கொண்டு வெற்றிலையை மடிக்க ஆரம்பித்தேன். எனக்கு வெற்றிலை போடுகிறதென்றால் ஒரு தனிப் பிரயோக முறை. அந்தச் சடங்கில் ஒரு சிறிதும் வழுவிவிட்டால் இலட்சியம் நிறைவேறிய மாதிரியே இருக்காது.

வெளியே வெய்யில் ஏற ஏற, உள்ளே பிள்ளையார் காய ஆரம்பித்தார். எப்படியானாலும் சுய குணத்தைக் காண்பிக்காமல் இருக்க முடியுமா?

"அப்பொ பாளையங்கோட்டையிலே இருந்த கோட்டை கூட இடியலே. மதுரை வரைக்குந்தான் ரயில் வந்திருக்கும். இந்தப் பக்கத்திலே எல்லாம் வண்டிப்பாதைதான்.

"இப்பொ மாதிரியா? சாயங்காலம் நாலு மணிக்கப்புறம் அந்தப் பக்கத்திலே போகிறதென்றால் யாருக்கும் பயந்தான். இப்பொழுது கட்டடமும் பங்களாவும் இருக்கிற இடமெல்லாம் அப்பொழுது உடன்காடு...(உடை மரம் - கருவேல மரம்)

"அப்பா! அந்தக் காலத்திலே ஒரு மருத வேளார் இருந்தார். நல்ல மனுஷர். சோழியப் பிராமணன் மாதிரி உச்சிக் குடுமியும் பூணூலும் இருந்தாலும் முகத்திலே ஒரு களை இருக்கும். அவருக்கு ரொம்பக் காலமாக பிள்ளையில்லே. இப்போ சின்ன மண்டபத்துக்குப் போகிற பாதையில் இருக்கே ஒரு பிள்ளையார், அதை அந்தக் காலத்திலேதான் பேச்சியாபிள்ளை வைத்து ஒரு 'அரசுக் கல்யாணம்' நடத்தி வைத்தார். அந்தப் புதுப் பிள்ளையாரை இருபது வருஷம் சுற்றி வந்ததின் பயனாக ஒரு பிள்ளை பிறந்தது மருத வேளாருக்கு. ஆண் குழந்தைதான். அழகுன்னா, சொல்லி முடியாது! உன் மனைவிக்கு இருக்கே இப்படி அழகான கண்கள்! அவனுக்குச் சுப்பிரமணியன் என்று பெயரிட்டார். பிள்ளை வெகு துடி... ஆனால், நாலு காரியம் உருப்படியாகப் பண்ணத் தெரியாது... எப்பப் பார்த்தாலும் விளையாட்டுத்தான். என்ன செல்லம் கொடுத்தாலும் 'அடியாத மாடு படியாது' என்பது வேளாரின் கொள்கை. அதிலேயே அவர் நம்பிக்கை இழக்கும்படி நடந்து கொண்டான் என்றால் பயல் எவ்வளவு துடியாக இருந்திருக்க வேண்டும்!

"சாயங்காலமும் வேளார் குளித்துவிட்டுப் பிள்ளையாரைச் சுற்ற வருவார். அப்பொழுது படித்துறைப் பக்கம் உட்கார்ந்திருக்கும் பிள்ளையாருடனும், சாயங்கால பூஜைக்கென்று கோவிலுக்குத் தண்ணீர் எடுக்க வரும் விசுவநாத தீட்சதரிடமும் அவர் தம் குறைகளைச் சொல்லி அழுவார். அன்று பேச்சியா பிள்ளையும் அங்கு வந்திருந்தார். அவர் வேளாரைக் கண்டதும் ஆவேசமாய்ப் பேச ஆரம்பித்தார்.

"'என்ன வே! இண்ணக்கி அந்தப் பய சுப்பு நம்ப தோட்டத்திலே இறங்கி நாலு மாங்கா களவாடிக்கிட்டு ஓடிட்டானாமே...!' 'ஓய்' என்ற விளியிடைச் சொல், 'வேய்' ஆகி, பின் வெறும் 'வே' என்று குறுகிவிட்டது; 'வே' போட்டுப் பேசுகிறவர் காசியிலிருந்தாலும் சரி, அவர் தென்பாண்டி நாட்டு ஆசாமி என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

"என்ன எசமான் செய்ய! கண்டிச்சுப் பாத்தாச்சு. மண்ணெடுக்கப் போடான்னா போரதில்லே. சக்கரத்துக்கிட்டயே வரமாட்டான். படிக்கவாவது போட்டுப் பார்த்தேன்... வாத்யாரய்யா அவனுக்குக் குளிர் விட்டுப் போச்சு என்று சொல்லிக் கைவிட்டு விட்டார். என் விதி! பயலுக்குத் தொழில் தெரியாமலா இருக்கு?... வீடு முழுக்கவும் ஒரு நாளைக்குப் பார்த்தா, யானையும் குதிரையுமா பண்ணிப் போட்டுவிடுவான்... 'இதெல்லாம் சுட்டுக் கொண்டா. வர்ணம் பூசித்தாரேன். கொலுவுச் சாமானா விக்கலாண்டா!' இன்னா, 'அதெல்லாம் எனக்குத் தெரியாது!' என்று சொல்லி, மறுபடியும் வெறும் களிமண்ணாக்கிவிடுகிறான். 'அட! சும்மா வாவது வீட்டோ ட கெட!' என்றால் கேட்கிறானா?... எப்பப் பார்த்தாலும் சண்டை, சண்டை, சண்டை! எப்பப் பார்த்தாலும் போராட்டந்தான்! அதோ போகுது பாருங்க, அந்தக் களுதை! கூப்பிட்டு, எசமான் மின்ன வச்சுக் கேக்கரேன்... 'ஏலே அய்யா, சுப்பு!' என்று குரலெடுத்துக் கூப்பிட்டார் வேளார்.

"'பயல் கெடக்கிறான் வே! சவத்தெ தள்ளும்! நாலு காயிலே என்ன பெரமாதம்! இவன் எடுக்காட்டா அணில் கொத்தித் தள்ளுது... நான் சொல்றது என்னன்னா இந்த வயசிலேயே இது ஆகாது!' என்றார் பேச்சியாபிள்ளை.

"'பிள்ளைவாள்! நீங்க சொல்றது நூத்துக்கொரு வார்த்தை' என்றார் விசுவநாத தீட்சதர்.

"'ஆமாம் எசமான்!' என்று ஏங்கினார் மருத வேளார்..."

"நீங்கதான் ஏன் சும்மா இருக்கிறீர்கள்? பிள்ளையாரை எடுத்து வைத்தால் ஆகாதோ?" என்று சொல்லிக் கொண்டு வந்தாள் என் மனைவி.

"அதெல்லாம் முடியாது. நான் நாஸ்திகன். அதெல்லாம் குடும்பவிளக்கு குலவிளக்கு 'டிபார்ட்மெண்ட்'!" என்றேன். நான்.

"மஹா 'டிபார்ட்மெண்'டைக் கண்டுவிட்டீர்களாக்கும்! சோம்பல் என்றால் அப்படிச் சொல்றதுதானே! எல்லா நாளுமா... கை வேலையா இருக்கே!" என்று பெருங்காய டின்னை எடுத்துக்கொண்டே அவள் சொன்னாள்.

அதற்குள் என் மன ராணி என்னை மடியைப் பிடித்திழுத்தாள். இரண்டு பொண்டாட்டிக்காரன் பாடுதான்...

"சுப்பு வேளானுக்குப் பதினாறு வயது. அப்பொ மதத்திலே கிறுக்கு விழுந்தது. நாலு நாள் ஓயாது ஒழியாது அற்புதமாக விக்ரகங்கள் செய்வான்... அப்புறம் அது பழைய களிமண்தான்... வேளார் தள்ளாத வயசிலேயும் குடும்ப போஷணையைக் கவனிக்க வேண்டியதாச்சு.

"அப்பொப் பார்த்து அந்தக் கசமுத்து வேளார் மகளிடம் தடித்தனமா நடந்து கொண்டானாம் சுப்பு. சாயங்காலம் அந்தப் பெண் இசக்கி அம்மை, தண்ணீர் எடுக்க ஆற்றங்கரைக்கு வந்தாளாம்... இவன் போய் அவள் எதிரில் நின்று கொண்டு, 'ஏட்டி! என்னைக் கலியாணம் பண்ணிக்கிறியா?' என்று கேட்டானாம்.

"உள்ளுக்குள் பூரிப்போ என்னவோ! பானையைக் கீழே போட்டு உடைத்து, 'ஓ, ராமா!' என்று அழுதுகொண்டு, 'இவன் என்னை இப்படிக் கேக்க ஆச்சா?' என்ற நினைப்பில் வீட்டுக்குச் சென்றாளாம்.

"ஊர்க்காரர்கள் இவனை அடிக்கக் கூடிவிட்டார்கள். இவன் தோழர்கள் எல்லாம் இவனுக்குப் பரிந்து பொய் சொல்லியும், 'விளையாட்டுக்குச் சொன்னான்' என்று சொல்லியும் பார்த்தார்கள்.

"இந்தப் பயல் ஒரே பிடிவாதமாக, 'நெசத்துக்குத்தான் கேட்டேன்!' என்றானாம். அன்றைக்கு நல்ல உதை. இந்த சமாசாரம் மருத வேளாருக்கு எட்டிற்று. கோயிலுக்கு 'நூறு தேங்காய் அபராதம்' கொடுப்பதாகச் சொல்லி பையனை மீட்டு வந்தார்.

"ஆனால், மறுநாளைக்கு கசமுத்து வேளார் மண் எடுக்கப் போன சமயம், இவன் அவர் வீட்டுக்குள் போய்ப் பெண்ணுக்கு அடுக்களைத் தாலி கட்டிவிட்டான்.

"ஊரில் ரகளைதான். 'கலியாணம் என்னவோ ஆச்சு!' என்று இரண்டு சம்பந்திகளும் கூடிக்கொண்டால்... கொஞ்ச நாள் ஊர்க்காரருக்கு நன்றாகப் பேசிக்கொண்டிருக்க விஷயம் கிடைத்ததுதான் மிச்சம்...

"இரண்டு சிறுசுகளும் புதுக்குடித்தனம் செய்தன.

"கொஞ்சநாள் வரைக்கும் சுப்பு ஒழுங்காக வீட்டுக் காரியங்களைக் கவனித்து வந்தான். பானை வனைகிறது, சுடுகிறது - இதிலெல்லாம் ரொம்ப ஜோர்...

"அப்பத்தான் கும்பினியானும் கட்டபொம்முவும் முட்டிக்கிற சமயம் - கும்பினிக்காரன் 'துபாஷ்' யாரோ பட்டணத்து முதலியார். அந்த வட்டாரத்திலே அவருக்குக் கொஞ்சம் சொற் சக்தியுண்டு. அவரும் குட்டந்தீர்த்த துறையிலேதான் குடியிருந்தார்.

"ஒரு நாள் சுப்பு மண்வெட்டப் போனதிலிருந்து பிடித்தது வினை...

"ஏதோ ஒரு இடத்திலே வெள்ளைக் களிமண் அகப்பட்டது. பயல் வண்டி நிறைய வாரிக்கொண்டு வந்தான். ஆனால் பழைய பொம்மை செய்கிற வெறி வந்துவிட்டது. அதற்கப்புறம் சக்கரத்தைச் சீந்துவதில்லை... அந்தச் சமயத்தில்தான் அவன் மனைவிக்கு நாலு மாசம் கர்ப்பம். வீட்டில் கிடைத்ததைச் சாப்பிடுகிறது. பொம்மை செய்கிறது, அழிக்கிறது, மறுபடியும் செய்கிறது, அழிக்கிறது, மறுபடியும் செய்கிறது, அழிக்கிறது - இப்படியே நாட்கள் கழிந்தன. பெண் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். அதெல்லாம் நடக்கிற காரியமா? 'போ! போ! என்று சொல்லிவிட்டான் சுப்பு.

"அன்னிக்கி விநாயக சதுர்த்தி. சுப்பு விடியற்காலையிலே எழுந்து ஒரு விநாயகர் செய்து கொண்டிருந்தான். விநாயகர் என்றால் உம்முடன் பேசுவதுபோல் இருக்கும் - அவ்வளவு உயிருடன் இருந்தது அந்தக் களிமண் கண்கள்! மனைவியும் ரொம்ப ஜரூராகப் பூஜைக்கு வேண்டிய வேலைகளெல்லாம் செய்து கொண்டிருந்தாள்.

"'ஏட்டி, நான் குளிச்சிட்டு வாரேன்!' என்று வெளியே சென்றான் சுப்பு.

"அன்றைக்குப் பார்த்து துபாஷ் வீட்டுச் சேவகர்கள் நல்ல பிள்ளையார் வேண்டித் தேடியலைந்தார்கள். சுப்பு செய்த பிள்ளையார் எசமானுக்குப் பிடித்திருக்கும் என்று நம்பினார்கள். அதிலும் வெள்ளைப் பிள்ளையார்; கேட்கவா வேண்டும்!

"முதலில் இசக்கி அம்மைக்குக் கொடுக்க இஷ்டமில்லைதான். இருந்தாலும் நாலு பணம் அஞ்சு பணம் என்று ஆசை காட்டினால்! வில்லைச் சேவகன் (டவாலி போட்டவன்) சும்மா தூக்காமல், காசு கொடுப்பதாகச் சொன்னதிலேயே அவளுக்குப் பரம திருப்தி. அதைக் கொடுத்துவிட்டு மாமனார் செய்த குட்டிப் பிள்ளையார்களில் ஒன்றைக் கொண்டு வந்து அந்த இடத்தில் வைத்திருந்தாள்.

"சுப்பு குளித்துவிட்டு வந்தான். வீட்டில் நடந்த கதை தெரிந்தது...

"'இந்தத் தேவடியாத் தொழில் உனக்கு எதுக்கு?' என்று அவளை எட்டி உதைத்துவிட்டு, ஈரத் துணியைக் கூடக் களையாமல் அவன் நேரே வெளியே சென்றான்.

"அப்பொ துபாஷ் முதலியார் வீட்டில் பூஜை சமயம். இந்தப் பயல் தடதடவென்று உள்ளே போய், பூஜைக்கு வைத்திருந்த பிள்ளையாரைத் தூக்கிக் கொண்டு வெளியே ஓடினானாம். முதலில் துபாஷ் திடுக்கிட்டார். ஆனால், சேவகர்கள் தொடர்ந்து ஓடினார்கள். இவன், பிள்ளையாரை இறுக மார்பில் கட்டிக்கொண்டு, மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க, தெருவழியாக ஓடினான். சேவகர்கள் நாலு பக்கமும் மறிக்கவே, அவன் வசந்த மண்டபத் தோப்புக்குள் குதித்து ஓடினான். சேவகர்கள் நாலைந்து பகுதியாகப் பிரிந்து மடக்க ஓடினதினால் பேச்சிக் கசத்தின் பக்கம்தான் அவன் ஓட முடிந்தது. அதைத் தாண்டினால் கும்பினிக் காவல்காரன் கையில் அகப்பட வேண்டியதுதான். சுப்புவுக்கு என்ன தோன்றியதோ - சட்டென்று கசத்தில் குதித்துவிட்டான். அவன் அப்புறம் வெளிவரவே இல்லை.

"வலை கூடப் போட்டு அரித்துப் பார்த்தார்கள். உடம்புகூட அகப்படவில்லை!"

அப்பொழுது சாம்பிராணிப் புகையும் வெண்கல மணிச் சப்தமும் என்னை அவள் பக்கம் இழுத்தன.

என் மனைவி, நின்று, கண்ணை மூடிக்கொண்டு, கை கூப்பிய வண்ணம் அந்தக் களிமண்ணுக்கு அஞ்சலி செய்துகொண்டிருந்தாள். அவள் கண்களை எப்பொழுதும் 'மோட்டார் கார் ஹெட்லைட்' என்று கேலி செய்வேன். அவையும் மூடி ஒரு பரிதாபமான புன்சிரிப்புடன் ஒன்றுபட்டன. அவள் மனசில் என்ன கஷ்டம்! என்ன நம்பிக்கை!

அவளையே பார்த்துக் கொண்டு நின்றேன்.

"அப்புறம் என்ன தெரியுமா? அவன் குடும்பத்தில் பிறக்கிற பிள்ளைகளுக்கு எல்லாம் அவன் செத்த வயசில் இந்தப் பிரமை ஏற்படும்... கடைசியில் வெள்ளைக் களிமண்ணைத் தின்று உயிரைவிடும்!..." என்றது மனசு!

"இதையும் நம்ப வேண்டுமா?" என்றேன்.

"இது முழுப் பொய். கதை ரசமாக இருப்பதற்குச் சொன்னேன்...?"

"ஆக்கு..!"

"வெயிலாகிறதே. எழுந்திருங்கள்! சாப்பிடவாவது வேண்டாமா! என்ன பிரமாதமான யோஜனை?" என்றாள் மனைவி.

"ஒரு கதை!" என்றேன் நான்.

"உங்களுக்குச் சொல்ல இஷ்டமில்லாவிட்டால் ஒரு கதையாக்கும்!" என்று சொல்லிக்கொண்டு இலைகளைப் போட்டாள்.

"நிஜமாக!" என்றேன்.

"நாங்கள் நம்புகிறதிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கையில்லை. பின் நாங்கள் எப்படி உங்களை நம்புவது?"

"நம்ப வேண்டாமே!"

"இந்தப் புது மாதிரிப் பேச்சு எனக்குப் புரியலே! வாருங்கள், நேரமாகிறது!" என்றாள் அவள்.

யாரும் சாப்பிடப் பின்வாங்குவார்களா இந்தத் தேசத்தில்!

மணிக்கொடி, 30-09-1936

 

கருத்துகள் இல்லை: