மந்து - வெள் உவன்

அந்த முற்றிய காலைக்கும் துளிர்க்கும் மதியத்திற்கும் இடையேயான வேளை அழுத்தமான இருட்டை கொண்டிருந்ததால் கங்குல் வேளையின் தோற்றத்தைப் பெற்றிருந்தது. கத்தும் கடலின் மொத்த நீரையும் உறிஞ்சிக் குடித்தது போல், சூலிப் பெண்ணின் வயிறாய் பருத்து கருத்து நகர்ந்து கொண்டிருந்த கார்மேகங்களின் கைங்கரியம்தான் இந்த அகால இருட்டு. அழுத்தமான இறுக்கமான இந்த பொழுது மிக எளிமையாக மழையைக் கொண்டுவந்து கொண்டிருக்கிறது. பஞ்சுத் துகள்கள் போலல்லாமல் கல்மழை போல் நீர் மழை கனத்து பொழியத் தொடங்கியது.


சாலையில் சென்று கொண்டிருந்த மக்களை பதட்டமடைய வைத்த மழை பதுங்கு குழியைத் தேட வைத்தது. பேருந்து நிறுத்த நிழற்குடை, அடர்ந்த மரத்தடி, திறந்திருந்த கடைகளின் முன் சாய்வு என்று மக்கள் தஞ்சம் புகுந்தனர். பகட்டாக ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த உணவு விடுதியின் உள்ளேயும் மழையிலிருந்துத் தப்பிக்க சிலர் நுழைந்தனர்.


அந்த உணவு விடுதியில்தான் நாராயணன், தன் மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் மகள் வெண்மதியுடன், அந்த மேசையின் முன் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தார். ‘என்ன சாப்பிடுறீங்க’ என்று இரண்டு முறை கேட்ட சர்வர், ‘கொஞ்சம் இருப்பா நண்பர் வரணும் வரட்டும்’ என்ற நாராயணனின் பதிலில் நகர்ந்து சென்றார்.


நட்சத்திர ஓட்டலின் ஆடம்பரமும் நடைபாதை ஓரத்துத் தட்டுக்கடைப் பதார்த்தத்தின் இனிய மணமும் கலந்தது போன்றதொரு விசித்திரக் கலவையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த உணவு விடுதி. கல்லாவுக்குப் பின்னே ஆரஞ்சு வண்ண சுவற்றில் அஞ்சுக்கு மூன்று அளவில் திருப்பதி வெங்கடாசலபதி பூரண அலங்காரத்துடன் தொங்கிக் கொண்டிருந்தார். கூடவே வெங்கடாசலபதிக்கு அணியப்பட்டிருந்த மஞ்சளும் சிவப்புமான மலர்களை அடுத்து அடுத்து வசீகரமான அழகியலோடு தொடுத்து இருந்த கனத்த மாலையும்.


நாராயணன் அதிகாரமிக்க பதவியில் இருக்கும் அரசு ஊழியர். இளம் வயதிலேயே பகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்று கொள்கைப் பிடிப்புள்ள கறார் பேர்வழி. அவர் மனைவியும் அப்படியே வளர்த்த குடும்பத்தில் இருந்து வந்தவர்தான். இப்போது இந்த உணவு விடுதிக்கு அவர்கள் வந்து காத்திருப்பது தங்கள் மகளுக்கு மணமகன் தேடுவதன் ஒரு அங்கம்தான்.


இதிலும்கூட அவர்களின் பகுத்தறிவு மனமே வேலை செய்கிறது. மரபான பெண் பார்த்தல், வரன் தேடுதல் போன்றவற்றை மீற வேண்டும் என்ற உள்ளுணர்வின் விளைவுதான் இதுவும். முக்கியமாக சாதி மறுத்தல் அவர்களுக்கு முதன்மையாக இருந்தது. இதற்கு ஏற்றார்போல் அவர்களின் நண்பர் அறிவழகன் குடும்பமும் இதைப்போன்ற எண்ணத்துடன் இருப்பதை அறிந்து, அறிவழகன் மகன் செழியனை மாப்பிள்ளை ஆக்கிக்கொள்ள நாராயணனும் அவர் மனைவியும் முடிவு செய்தனர். இதற்கு வெண்மதியும் சம்மதம் தெரிவித்தாள். அதன் பின் நண்பர் அறிவழகனிடம் நாராயணன் தனது என எண்ணத்தை சொல்ல அறிவழகன் தன் மனைவி மகனுடன் இந்த உணவு விடுதியில் சந்திப்பதாக முடிவு செய்யப்பட்டதன் விளைவே நாராயணன் குடும்பத்தினரின் இந்த காத்திருப்பு.


கூடுதல் நேரக் காத்திருப்பில் கொஞ்சம் சலிப்பு ஏற்பட்ட நாராயணன் அந்த உணவு விடுதியை சுற்றி ஒரு கண்ணோட்டம் விட்டார். கல்லாவின் பின்னே அட்டகாசமாக தொங்கிக்கொண்டிருந்த வெங்கடாசலபதியின் படம் அவர் கண்ணை உறுத்தியது. ‘இந்தப் படத்திற்கு இவ்வளவு பெரிய மாலையை போட்டு பணத்தை வீணடிக்கும் இவர்களுக்கு பகுத்தறிவு என்பதும் கொஞ்சமும் கிடையாதா?’ என்பதான தனது விமர்சனத்தை மனைவியிடமும் பகிர்ந்துகொண்டார். அவர் சொல்லுவதை ஆமோதிப்பது போல் குறுஞ்சிரிப்புடன் தலையை மெதுவாக ஆட்டிக்கொண்டார் மனைவி.


கிணி கிணி என்று மணி சப்தம் கேட்க, என்னவென்று பார்க்க நாராயணனும் அவர் மனைவியும் மணி சத்தம் கேட்ட திக்கில் கவனத்தை திருப்ப, க்ஷ்நடுத்தர வயதுள்ள தட்டிகமான ஆள் ஒருவர் வெங்கடாசலபதி படத்திற்கு மணி அடித்தபடியே தீபாராதனை கட்டிக்கொண்டிருந்தார். நாராயணன் எதையோ முணுமுணுத்தபடி மனைவி பக்கம் திரும்பியவர், மனைவி அனிச்சையாய் தனது வலது கையால் கன்னத்தில் போட்டுக்கொண்டதை கண்டு திடுக்கிட்டார்.


“என்ன செய்கிறாய் நீ?”


அனிச்சையான தனது செயலால் கேள்வி கேட்ட கணவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினார் மனைவி. இப்போது அவர்களின் இந்தக் காத்திருப்பு ஒரு பெண் பார்க்கும் நிகழ்வுதான்.


செழியன் மத்திய அரசில் ஒரு பொறுப்பான அதிகாரியாய் பணிபுரிந்துவரும் முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞன்தான். மரபுகள் மீது வெறுப்போடு வளர்ந்தவன்தான். எனவே, உணவு விடுதி சந்திப்பிற்குப் பின் இரு குடும்பத்தாரும் கலந்து எடுத்த முடிவின்படி செழியன் – வெண்மதி திருமணம், அதாவது அவர்கள் மொழியில் சொன்னால், வாழ்க்கை ஒப்பந்த விழா அதற்கே உரிய தன்மையுடன் சிறப்பாக நடந்தேறியது.


வெண்மதி, நாராயணனின் ஒரே மகள் என்பதனால் மகளும் மருமகனும் அவர்களுடனே இருந்து வருவது என்று முடிவு செய்யப்பட்டது. வெண்மதியின் கணவன் செழியனும் அதே ஊரில் பணியாற்றி வந்ததால் இந்த முடிவை எந்த சிரமமுமின்றி நிறைவேற்ற முடிந்தது.


ஆனால், பத்து ஆண்டுகள் கழிந்தும் செழியன் – வெண்மதி தம்பதியருக்கு குழந்தை பேறு இல்லாமல் இருந்து வந்தது. அவர்கள் முற்போக்கு சிந்தனையால், அக்கம்பக்கத்தார் சொல்லுகிற பரிகாரங்களை எதையும் ஏற்றுக்கொள்ளாமல், பிள்ளை பேற்றுக்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தனர்.


பெண் மருத்துவரின் அறையின் முன்னே இருந்த இருக்கையில் அம்மாவுடன் அமர்ந்திருந்தாள் வெண்மதி. இந்தப் பத்து ஆண்டுகளில், மனதில் ஒரு இனம் புரியாத பதட்டத்துடன், இதுபோல் இந்த இருக்கையில் எத்தனை முறை அமர்ந்துருக்கிறாள். திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகியும் கைகூடாத ஆசைக்காய் எத்தனை முயற்சிகள், எத்தனை வகை பிரயத்தனங்கள். அதே அளவிற்குத் தோல்விகள். இவை கொடுத்த மன அழுத்தங்கள் மட்டுமல்லாமல் சுற்றியிருக்கும் சொந்தங்கள், நண்பர்கள் என்று அத்தனை பேருடைய கேள்விகள், விசாரிப்புகள் கொடுத்த அழுத்தங்கள் கணக்கிட முடியாதவை.


செழியன் சந்திக்கிற எல்லா பிரச்சினைகளையும் தெளிவான சிந்தனைகளுடனும் ஆழமான விவாதங்களுடன் அணுகி சமாளிக்கும் திறன் உடையவன்தான் என்றாலும், அவனையே இந்த குழந்தைப்பேறு இன்மை என்பது சற்று கலங்க அடிக்க செய்கிறதே என்ற வருத்தமும்கூட வெண்மதியின் மன அழுத்தத்தைக் கூட்டியது. ஏதேதோ எண்ணங்கள் மனதில் ஓட, பலமுறை கேட்ட எதிர்மறை சோதனை முடிவுகளின் காட்சிதான் கண்ணுக்குள் வந்துவந்து போய்க் கொண்டிருந்தது.


வெண்மதிக்கு. மற்றுமொரு முறை தள்ளிப் போயிருந்ததால் இன்றைய இந்த ரத்தப் பரிசோதனை. ஒவ்வொரு முறையும் மருத்துவர் அறையின் திரைச்சீலையை விலக்கி யாரையோ அழைக்கும் செவிலிப் பெண்ணின் தலையை காணும்போதும் மனம் கொஞ்சம் திடுக்கிட செய்தது. இந்த முறை செவிலிப்பெண் தலை நீட்டி உச்சரித்தப் பெயர் வெண்மதி. தன் பெய்ரை செவிலிப் பெண் உச்சரித்து முடிப்பதற்குள் எழுந்து தாயுடன் கொஞ்சம் படப்படப்புடனே மருத்துவர் அறைக்குள் நுழைந்தாள் வெண்மதி.


மருத்துவர் மேசையின் முன், இருக்கையின் நுனியில் இனம் புரியாதத் தவிப்புடன் அமர்ந்திருந்த வெண்மதியை நோக்கி, மருத்துவரின் பின் நின்றிருந்த செவிலிப் பெண், முக மலர்ச்சியுடன், மற்ற விரல்களை மடக்கி ஆட்காட்டி விரலை மட்டும் நிமிர்த்தி, இரண்டு முறை கையை மேலும் கீழும் அசைத்து சைகைக் காட்டினாள். அந்த நிமிட சந்தோசம் வெண்மதியின் கண்களைக் கலங்க வைத்தது. பெண் மருத்துவர் முறையாக அவளிடம் அந்த மகிழ்வான செய்தியைச் சொல்லி அவளுடன் கை குலுக்கிக் கொண்டார்.


குடும்பத்தாரின் மகிழ்ச்சி சொல்லில் அடங்காததாக இருந்தது. செய்தி கேட்ட குடும்பத்தாரும் மிகவும் சந்தோஷம் கொண்டனர். கருவுற்றவளை மிகவும் கவனத்துடன் பேணி வந்தனர். கணவரும் பெற்றோரும் அவளிடம் மாறிமாறி கேட்டு அவளுக்கு விருப்பமானவற்றை வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.


ஒருநாள் ஊரிலிருந்து நாராயணனின் சித்தி, கருவுற்றிருந்த பேத்தி பொண்ணை பார்க்க வந்திருந்தாள். ஊரிலிருந்து வந்திருந்த சித்தி பேத்திக்கு பால் கஞ்சி செய்துகொண்டிருந்தாள். அப்போது, வெளியிலிருந்து வந்த செழியன், “வெண்மதி நான் என்ன வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன் தெரியுமா உனக்கு?” என்று கேட்க, “தெரியவில்லையே” என்றாள் வெண்மதி.


“உனக்கு ரொம்ப பிடிக்குமே என்று சப்பாத்தி ஸ்டால் புரூட் சாலட் வாங்கி வந்திருக்கிறேன்; இந்தா சாப்பிடு” என்று கடையிலிருந்து வாங்கி வந்திருந்த ஃப்ரூட் சாலட் கிண்ணத்தை அவளிடம் தந்தான். அவளும் அதை ஆசையுடன் வாங்கி சாப்பிட தொடங்கினாள்.


பாட்டி பதட்டத்துடன், “அதை சாப்பிடாத வேண்டாம் அது” என்று சொன்னாள்.


இந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த தமிழ்ச்செல்வியும் வீட்டிற்குள் நுழைந்தாள். பாட்டியின் பதட்டத்தை கண்டு திகைத்துப் போன தமிழ்ச்செல்வி, “அத்தை ஏன் அதை சாப்பிட வேண்டாம்” என்று சொல்கிறீர்கள் என்று கேட்டாள்.


“ஐயையோ உங்களுக்குத் தெரியாதா? ஃப்ரூட் சாலட்டில் அன்னாசிப் பழம் சேர்த்திருப்பார்கள். கருவுற்ற பெண் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கரு கலைய வாய்ப்பு இருக்கிறது. எனவேதான் புரூட் சாலட் சாப்பிட வேண்டாம் என்று சொல்கிறேன்” என்றாள் பாட்டி.


பாட்டி சொல்லி முடிப்பதற்குள், பதறிப்போய் மகளின் கையில் இருந்த ஃப்ரூட் சாலட் கோப்பையை புடுங்கி, விடுவிடுவென்று மூலையிலிருந்த குப்பை கூடையில் கொட்டிவிட்டாள், தமிழ்ச்செல்வி.


இதை எதிர்பார்க்காத வெண்மதி, “அம்மா அம்மா என்ன செய்கிறாய்?” என்று புரியாமல் கேட்டாள்.


“கருகலையும் என்றால் அந்த வாடையே உனக்கு வேண்டாம். அதுதான் தூக்கித் தள்ளி எறிந்தேன். நீ அதை சாப்பிட வேண்டாம்” என்று பதட்டத்துடன் சொன்னாள் தமிழ்ச்செல்வி.


பாட்டியும், “அம்மா நீ அதை சாப்பிட வேண்டாம். நான் உனக்கு சுக்கு முருங்கைப்பூ பூண்டு எல்லாம் போட்டு பால் கஞ்சி வைத்திருக்கிறேன். அதை வயிறு நிறைய குடி. உன் உடம்புக்கு நல்லது. உன் குழந்தைக்கும் நல்லது. இதோ கொண்டுவருகிறேன்” என்று சொல்லியபடி அடுக்களைக்குள் நுழைந்தாள்.


கருவுற்ற பெண்ணிற்கு கவனமாக செய்யவேண்டிய அனைத்து காரியங்களும் சிறப்பாக நடந்தன. மருத்துவரை பார்ப்பது, மருந்துகளை உண்ணுவது குழந்தையின் வளர்ச்சியை ஸ்கேன் செய்து பார்ப்பது என்று எல்லாமும் நிறைவாக நிறைவேற்றப்பட்டன.


ஆறு மாதங்கள் முடிந்து போயின. ஒரு நாள் தமிழ்ச்செல்வியின் அண்டை வீட்டுப் பெண், “உங்கள் மகளுக்கு ஆறு மாதம் முடியப்போகிறதே சீமந்தம் செய்ய வேண்டாமா?” என்று கேட்டாள்.


பொதுவாக அவர்களின் முற்போக்கு சிந்தனையை கடைப்பிடிக்கும் தன்மையினால் இதுபோன்ற வாழ்க்கை வட்டச் சடங்குகளைப் பற்றி எதுவும் தெரியாத நிலைதான் தமிழ்ச்செல்வியினுடையது. எனவே, சீமந்தம் செய்வது என்றால் என்ன என்பதை அண்டை வீட்டுப் பெண்ணிடம் கேட்டு தெரிந்தபின் பத்து ஆண்டுகள் கழித்து கருவுற்றிருக்கும் தன் மகளுக்கு இதுபோன்ற மரபுரீதியான சடங்கை செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகியது.


பின் தனது கணவர் நாராயணனிடமும் மருமகனிடமும் பேசி சிறப்பான முறையில் வெண்மதிக்கு சீமந்தம் என்னும் வளைகாப்பு செய்வது என முடிவு செய்யப்பட்டது.


ஒரு நல்ல நாள் பார்த்து முறைப்படி சீமந்தம் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது.


“அம்மா வெண்மதி நாளை பரிசோதனைக்காக டாக்டரிடம் போக வேண்டிய நாள். அவரிடம் ஞாபகப்படுத்தி விடு. நாளை நாம் ஆஸ்பத்திரி போக வேண்டும்” என்று மகளிடம் நினைவூட்டினார் தமிழ்ச்செல்வி. மறுநாள் மூவரும் மருத்துவமனைக்குச் சென்றார்கள். அந்த ஊரிலேயே மிகவும் ராசியான மருத்துவமனை என்று பிரபலம் அடைந்து இருந்தது அந்த மருத்துவமனை. சாலையிலிருந்து சற்று உள்வாங்கி பிரமாண்ட தோற்றத்துடன் காட்சியளித்தது. பெரிய பெரிய மரங்கள் மருத்துவமனை வளாகத்தில் காணப்பட்டன. அரசும் வேம்பும் பின்னி வளர்ந்திருந்த மரத்து மூட்டை சுற்றிக் கட்டப்பட்டிருந்த மேடையில் ஒரு பிள்ளையார் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. அதற்கு வஸ்திரமும் புது மாலையும் அணியப்பட்டிருந்தன. தினமும் பிள்ளையாருக்கு பூஜை நடந்து வருவதை அந்த புது மாலை செய்தியாய் சொல்லிக் கொண்டிருந்தது.


பெண் மருத்துவரின் அறையின் முன்னே இருந்த இருக்கைகளில் மூவரும் காத்திருந்தனர். நிறைமாத வயிற்றுடன் வெண்மதி மூச்சு விடுவதற்குக் கொஞ்சம் சிரமப்பட்டு கொண்டுதான் இருந்தாள். தமிழ்ச் செல்வியும் மகளை ஆசுவாசப் படுத்துவது போல் அவளின் முதுகைத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.


இந்த வேளையில் அங்கு வந்த ஒரு 50 வயதைத் தாண்டிய பெண்மணி தமிழ் செல்வியிடம், “அம்மா இது உங்கள் மகளா? இது தலை பிரசவமா?” என்பதாக கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தாள்.


இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதிலாய், “ஆம், ஆம்” என்று இரண்டு தடவை சொன்னாள் தமிழ்ச்செல்வி.


“நல்லபடியாக பிரசவம் நடக்கும் கண்ணே நீ பயப்படாதே” என்று ஆறுதல் வார்த்தை சொல்லிய அந்தப் பாட்டி, தமிழ்செல்வியிடம், “பிள்ளையார் கோவிலில் இப்பொழுதுதான் சாமி கும்பிட்டுவிட்டு வந்தேன். எனது பேத்தியையும் இங்கேதான் பிரசவத்திற்கு சேர்த்து இருக்கிறோம். அவளுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இந்த விபூதியை கொண்டு வந்திருக்கிறேன் எடுத்துக் கொள்.” என்று உள்ளங்கையில் இருந்த விபூதி பொட்டலத்தை நீட்டினாள்.


“உன் மகளுக்கும் சுகப்பிரசவம்தான் ஆகும். இந்த விபூதியை நீயும் பூசிக்கொண்டு உன் மகளுக்கும் பூசி விடு” என்று கூறினாள்.


தமிழ்செல்வி ஒரு சில நொடி தயங்கி பின் ஏதோ தீர்மானத்திற்கு வந்ததுபோல் அந்தப் பாட்டி நீட்டிய விபூதி பொட்டலத்தில் இருந்த விபூதியை எடுத்து வெண்மதிக்கு பூசிவிட்டாள். பாட்டியும் தனது வலது உள்ளங்கையை வெண்மணியின் தலைமேல் வைத்து, “கவலைப்படாதே கண்ணு உனக்கு சுகப்பிரசவமாகி நல்லபடியாய் பிள்ளையை பெற்றெடுப்பாய்” என்று நல்வாக்கு சொல்லி, “நான் வரேன் கண்ணு” என்றபடி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.


மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்த நாளிலேயே வெண்மதி சுகப்பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். இரு குடும்பத்தினரும் மிகவும் சந்தோசம் அடைந்தனர். அந்தக் குழந்தை வெற்றிமாறன் என்ற பெயருடன் இரு குடும்பத்தாரின் செல்லத்துடன் வளர்ந்து வந்தான்.


இந்த சூழ்நிலையில் வெண்மதியின் கணவர் செழியனுக்கு வேறு ஊருக்கு மாற்றல் ஆனது. அதே நேரத்தில் அறிவழகன் பணி நிறைவடைந்து ஓய்வு பெற்றார். எனவே, எல்லோரும் செழியனுக்கு மாற்றலான ஊருக்கே குடிபெயர்ந்தனர். அங்கே செழியனுக்கு அடுக்ககத்தில் அரசு வீடு ஒதுக்கப்பட்டதால் அந்த வீட்டிலேயே குடியேறினர்.


வெற்றிமாறனுக்கு இப்பொழுது ஆறு வயது நிறைவடைந்து இருந்தது. இந்நிலையில், ஒரு நாள் திடீரென வெண்மதி வாந்தி எடுத்தாள். பதறிப்போன குடும்பத்தார் அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அவளை சோதித்த பெண் மருத்துவர் அவள் கருவுற்று இருப்பதாக குடும்பத்தாருக்கு செய்தி சொன்னார். இதைக் கேட்ட அனைவரும் மிகவும் மகிழ்ந்து போயினர்.


இந்தமுறையும் குழந்தை பேற்றை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வெண்மதியின் உடல் நலம் மிகவும் கவனத்துடன் பேணப்பட்டு வந்தது. ஆறுமாதம் முடிந்தவுடன் தமிழ்ச்செல்விக்கு ஒரு எண்ணம் உண்டானது. முதல் குழந்தைக்கு செய்ததைவிட இந்த முறை சிறப்பான விதத்தில் சீமந்தம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவுக்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.


தமிழ்செல்விக்கு அந்த அடுக்ககக் குடியிருப்பில் தங்கள் வீட்டை ஒட்டி குடியிருந்து வரும் சிவகாமி அம்மாள் குடும்பத்தினருடன் நெருக்கமான பழக்கம் உண்டு. அந்தப் பழக்கத்தின் காரணமாக சிவகாமி அம்மாளிடம், “அம்மா அடுத்த வாரம் எனது மகளுக்கு வளைகாப்பு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். நீங்கள் வந்து இருந்து அந்த விழாவை நல்லபடியாக நடத்தி தந்து எங்களுக்கு உதவ வேண்டும்” என்று கேட்டுக்கொண்டாள்.


“என்ன தமிழ் சொல்றீங்க, வெண்மதிக்கா வளைகாப்பு?” அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த குரலில் கேட்டார் சிவகாமி அம்மாள்.


“ஆமாம், வெண்மதிக்குதான் ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்?”


“அப்படியென்றால் மாறன் வெண்மதி பெற்றக் குழந்தை இல்லையா?” என்ற சிவகாமி அம்மாள் கேள்வி தமிழ் செல்வியை துணுக்குற வைத்தது.


“அம்மா ஏன் இப்படி சொல்கிறீர்கள்?” என்று பதற்றத்துடன் கேட்டபடியே, “மாறன் தமிழ் செல்வி பெற்ற குழந்தைதான்” என்று படபடவென்று சொல்லி முடித்தாள் தமிழ்செல்வி.


“அப்படி என்றால் இரண்டாவது குழந்தைக்கு ஏன் சீமந்தம் செய்கிறீர்கள்?” என்று சிவகாமி அம்மாள் கேட்ட கேள்வியை புரிந்துகொள்ள முடியவில்லை தமிழ்ச்செல்வியால்.


“நீங்கள் சொல்வது ஒன்றும் எனக்கு புரியவில்லை; தயவு செய்து விளக்கமாக சொல்லுங்கள்?”


“’சீமந்தம் என்பது முதல் கருதரிக்கும் பொழுதுதான் ஏழாவது மாதம் செய்யும் சடங்கு. அதற்குப் பின் உருவாகும் குழந்தைகளுக்கு இந்த சடங்கு செய்வது நமது வழக்கம் அல்ல’’ என்று விளக்கிச் சொன்னார் சிவகாமி அம்மாள்.


தமிழ்ச்செல்விக்கு குழப்பமும் வெட்கமும் உண்டானது. “அப்படி என்றால் இந்த சீமந்தம் நடத்தக்கூடாது என்று சொல்கிறீர்களா?”


“இப்படி இரண்டாவது குழந்தைக்கு சீமந்தம் நமது மரபில் பழக்கம் இல்லை என்றுதான் என்னால் சொல்ல முடியும்” என்று சொல்லி முடித்தார் சிவகாமி அம்மாள்.


சீமந்த ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டன. இப்பொழுது நாராயணனுக்கு சீமந்தம் என்பதைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதுதொடர்பாக வலைதளத்தில் தேடியபோது அந்த கட்டுரை அவர் கண்ணில்பட்டது.


“புராதன கால இந்தியாவில், ஆண்களும் பெண்களும் தாராளமான பாலியல் சுதந்திரம் அனுபவித்தார்கள். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இன்று வாழும் மேலை தேய மக்கள்கூட, அக்கால இந்தியர்கள் அளவுக்கு பாலியல் சுதந்திரம் அனுபவிக்கவில்லை. மேலைத்தேய நாட்டவர்கள், இருபதாம் நூற்றாண்டில்தான் பாலியல் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டனர். இந்திய கலாச்சாரத்தில், அது தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு வந்து இருக்கிறது.


இந்தியா வந்த மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும் இந்தியர்களின் பாலியல் சுதந்திரத்தை பறித்து, ‘நாகரீகமடைந்த ஒழுக்கசீலர்களாக’ மாற்றினார்கள் என்பதுதான் வரலாற்று சமூகவியலாளர்களின் கருத்து. குறிப்பாக பிரிட்டனில் விக்டோரியா மகாராணி விதித்த ஒழுக்கநெறிகளை நாம் இன்றைக்கும் ‘தமிழ் கலாச்சாரம்’ என்ற பெயரில் பின்பற்றி வருகின்றோம்.


இன்றைக்கும் இந்தியாவில் வாழும், பழங்குடி இனங்கள் மத்தியில் பாலியல் சுதந்திரம் நிலவுகின்றது என்பதாகத்தான் இந்திய வாழ்வு முறை பற்றி ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்தத் தகவலை பார்க்கையில் பலருக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகக்கூட இருக்கக்கூடும். ஆனாலும், இதில் அதிர்ச்சி அடைய ஏதும் இல்லை.


நமது வாழ்க்கை வட்டச் சடங்குகள் ஆழ்ந்து நோக்கினால் அவை நமக்கு புரியவரும். சீமந்தம் என்பது நமது பண்பாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு முக்கியமான சடங்காகும். இது ஒரு பெண் முதல் கர்ப்பமுற்ற ஏழாவது மாதம் கணவன் வீட்டில் வைத்து நடத்தப்படும் ஒரு சடங்காகும். சீமந்தத்தின் உண்மையான தாத்பரியம் நம்மில் பலருக்கும் இன்று தெரியாமல் இருக்கிறது.


பழங்குடி வாழ்வு முறையில் வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்னமேயே நெருங்கி பழகுவார்கள். ஊர் மன்றில் உள்ள மந்தை என்னும் மந்தில்தான் இரவுகளில் இருவரும் தங்குவர். மந்தை என்பது பொது நிகழ்வுகளுக்கு முடிவெடுக்க அனவரும் கூடும் பொது இல்லம். ஆணும் பெண்ணும் இந்த இல்லத்தில் தங்கி பழகி மூன்று மாதத்தில் கருவுற்றால்தான் இருவருக்கும் ஊர் பெரியவர்களால் திருமணம் நடத்தி வைக்கப்படும். அவ்வாறு பெண் கருவுறாவிட்டால் அவர்களுக்குத் திருமணம் நடக்காது. இப்படி அந்தப் பெண் கருவுற்றால் ஏழாவது மாதம் ஊர் கூடி சீமந்தம் என்ற சடங்கை சிறப்பாக செய்து இருவருக்கும் திருமணம் நடத்தி வைப்பர். மந்தையில், அதாவது மந்தில் இருவரும் கூடியதால் நிகழ்ந்த நிகழ்வு சீமந்தம் ஆனது. சீ என்பது சீர், மேன்மை, சிறப்பு என்ற பொருளில் முன்னொட்டானது.


இதன் எச்சம்தான் நமது பண்பாட்டில் சீமந்தம் அல்லது வளைகாப்பு என்கிற சடங்காக ஒட்டிக்கொண்டு இன்று வரை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. முதல் குழந்தையை சீமந்தபுத்திரன் அல்லது சீமந்தபுத்திரி என்று சொல்லும் வழக்கம் இன்றும் நம்மிடையே உண்டுதானே.


சீமந்தம் என்று இன்றைய சமூகத்தில் பரவலாக நடத்தப்பட்டு வரும் சடங்கின் ஆதிமூலம் இப்படித்தான் இருந்தது என்றபடியே புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது”.


இப்படியாக அந்த இணையதளக் கட்டுரை முடிந்தது.


இணையதளத்தில் படித்த கட்டுரை நாராயணனின் மனதில் எந்தவிதமான உணர்வை ஏற்படுத்தியது என்பதை புரிந்துகொள்ள முடியாத வகையில் அவர் முகத்தில் குழப்ப ரேகை படர்ந்து இருந்தது.


இப்போது அவரது மூளையின் நினைவுப் பெட்டகத்தில் ஒரு சிற்றறை திறந்துகொண்டது. நினைவகத்தின் திறப்பில் விரிந்த காட்சி அவர் கண் முன்னே ஓடியது.


அது ஒரு சித்திரை மாத நண்பகல். தார் சாலையின் ஜல்லிகளைப பிடிப்புடன் பிடித்து இருந்த தார்கூட அந்த கத்திரி வெயிலில் இளக்கம் கண்டிருந்தது. சாலையில் வந்து கொண்டிருந்த நாராயணன் தனக்கு எதிரே அந்த கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விரைவாக நடந்து வந்து கொண்டிருந்த தம்பி மகனின் மனைவியான அமுதவல்லியை எதிர்கொண்டார். அவர் தம்பியின் குடும்பம் நாராயணனின் பகுத்தறிவு கொள்கையிலிருந்து முரண்பட்ட கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு நடுத்தரக் குடும்பம்.


தொடக்க காலத்தில் தம்பியிடம் தனது பகுத்தறிவு சார்ந்த சிந்தனைகளைக் கடைப்பிடிக்க வற்புறுத்தி வந்த நாராயணன் ஒருகட்டத்தில் சலிப்படைந்து தம்பி அவன் இஷ்டம்போல் நடந்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்.


எதிர்ப்பட்ட தம்பியின் மருமகளிடம், “அமுதா இந்த வேனா வெயிலில் இவ்வளவு விரசலா எங்க போற” என்று கேட்டார்.


“மாமா இன்னைக்கு வெள்ளிக்கிழமை 12 மணிக்கு ராகு காலம் முடியுது. அதுக்குள்ள நாகராஜன் கோவில் பாம்பு புற்றுக்கு பால் ஊத்தனுமுன்னுதான் விரசலா போறேன் மாமா” என்று அவர் பதிலுக்கு காத்திராமல் அவரை கடந்து சென்று கொண்டிருந்தாள் அமுதவல்லி.


அவரைக் கொஞ்சமும் பொருட்படுத்தாத அமுதவல்லியின் அலட்சியமான பதிலில் நிறையவே கடுப்பாகிப் போன நாராயணன், “இந்த ஜனங்களுக்கு எத்தனை சொன்னாலும் புத்தியில் ஏறுவது இல்லையே. ஏன் எங்காவது பாம்பு பால் குடிக்குமா? முட்டையை குடிக்குமா? இந்த அறிவு இல்லாமல் மூட நம்பிக்கையோடு எப்படித்தான் இவர்கள் வாழ்கிறார்களோ தெரியவில்லை” என்று வாய்விட்டே புலம்பித் தீர்த்துவிட்டார்.


நாராயணன் தனக்கு பின்னே இருந்து கலகலவென்று யாரோ சிரிக்கும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். அங்கே இடுப்பில் காவி வேஷ்டியும் தலையில் காவி துண்டு தலைப்பாகையுமாக வெண் தாடியுடன் பரதேசி போல காணப்பட்டவர் சிரித்துக் கொண்டிருந்தார்.


ஏற்கனவே மருமகளின் அலட்சியத்தால் கடுப்பாகி போயிருந்த நாராயணன் அந்த சாமியாரின் சிரிப்பில் மேலும் கடுப்பாகிப் போனார். “ஏன்யா இப்போ இவ்வளவு சத்தமா சிரிக்கிறியே ஏன்?” என்று சற்று கோபமாகவே கேட்டார்.


சிரிப்பதை நிறுத்திக்கொண்ட அந்த சாமியாரின் தோற்றத்தில் இருந்தவர் நாராயணனை நோக்கி, “நீங்களெல்லாம் படித்துவிட்டால் பகுத்தறிவு பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனால், இங்கு மரபில் உள்ள பல விஷயங்களில் புதைந்திருக்கும் அறிவுபூர்வமான காரணங்களை புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள். உங்களை கடுப்பாக்குகிற பாம்புக்கு பால் ஊற்றும் செய்கை அறிவுப்பூர்வமான ஒன்று என்பதை நீங்கள் புரிந்துகொள்ள போவதே இல்லை.


மூடநம்பிக்கை என்று நீங்கள் விமர்சிக்கும் இந்த பழக்கம் பெரியவர்களால் ஒரு நோக்கத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. விளக்கமாகச் சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள்.


பாம்பு ஒரு நச்சுயிரி. பாம்புக்கடி பெரும்பாலும் மரணத்தைத் தரக் கூடியது. எனவே, மனிதர்களுக்கு பாம்பை கண்டாலே அச்சமும் அதை அடித்துக் கொல்ல வேண்டும் என்ற உணர்வும் உண்டாகும்.


ஆனால், நமது மரபில் எந்த ஒரு உயிரையும் கொல்லுவது என்பது பெரும் பாவம் என்று கருதப்படுவது உண்டு. எனவே, பாம்புகள் விஷயத்தில் அவற்றை கொல்லுவதைத் தவிர்த்து அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதத்தில்தான் பாம்பு புற்றில் பால் ஊற்றும் பழக்கம் உருவானது.


பெரும்பாலும் இயற்கையில் இனச்சேர்க்கைகான உணர்வு, பெண்பால் உயிரியிடம் இருந்து வெளிவரும் ஒரு வகையான மணத்தால், ஆண் இனம் தூண்டப்பட இனச்சேர்க்கை நடைபெறுகிறது. இந்த மணத்தைக் கட்டுப்படுத்தவே புற்றில் பாலும் முட்டையும் ஊற்றப்படுகிறது. இந்த இரண்டில் இருந்து வெளிப்படும் மணம் இயற்கையாய் பெண் உயிரியிடம் இருந்து வெளிப்படும் மணத்தை அமுக்கி விடுவதால், ஆணால் பாலுணர்வைத் தூண்டும் மணத்தை உணர முடியாது போய்விடுகிறது. இதன் மூலம் இனவிருத்தி கட்டுப்படுத்தப்படுகிறது.


இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் புற்றில் பால் ஊற்றப்படுகிறது. இதையெல்லாம் அறிவுபூர்வமாக என்றுதான் நீங்கள் புரிந்துகொள்ள போகிறீர்களோ?” என்று சொல்லிய சாமியார் மறுபடியும் கலகலவென்று சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.


சீமந்தம் பற்றி இணையத்தில் படித்தக் கட்டுரை இந்த நிகழ்வை ஏன் அவருக்கு நினைவு படுத்தியது என்பது புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார் நாராயணன்.


நன்றி - அம்ருதா 2021

0 கருத்துகள்

புதியது பழையவை