செவ்வியல் மொழிக்கான இலக்கணங்கள் இரண்டு கூறப்பட்டுள்ளன. ஒன்று, அம்மொழி ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும்; இரண்டு, அம்மொழி இதுகாறும் வழக்கத்தில் இருக்க வேண்டும். அவ்விரண்டு இலக்கணங்களையும் கொண்டது தமிழ்மொழி.
கற்றவர்களிடையே மட்டுமல்லாது, பாமர மக்களிடையேயும் பண்டை இலக்கியச் சொற்கள் சிறிய மாற்றத்துடன் இன்று வழங்கி வருகின்றன. படித்தவர்களால் எள்ளி நகையாடப்படுகின்ற - பாமர மக்களிடையே வழங்கிவரும் தூய தமிழ்ச் சொற்கள் சிலவற்றைக் காண்போம்.
கலாய்த்தல்: - சண்டையிடுதல்
"ஒரு பெண்டாட்டி தமரொடு "கலாய்த்து''
(இறையனார் அகப்பொருள் உரை சூ:1)
"நொண்டிக் கொண்டேயும் "கலாய்ப்பன்'''
(சுந்தரர் தேவாரம் - திருவாரூர்-8)
கம்மென்று: - அமைதியாக
"கானமும் கம்மென் றன்றே வானமும்''
(நற்றிணை-154)
தள்ளவாரி: - சோம்பேறி, உபயோகமில்லாதவன்
"வெள்ளவாரி விரிவோடு அவ்வீடணத்
தள்ளவாரி நிலையும்''
(கம்ப-ஒற்றுக் கேள்விப் படலம்-56)
கூவுதல்: - அழைத்தல்
"பண்டுதந் தாற்போல் பணித்துப்
பணிசெயக் கூவித்து என்னை''
(திருவாசகம்-137)
காவாலி: - முரடன், தீயவன்
காண்பவர்க்கு நகைதோன்றும் இடங்களாக இருபது "செயிற்றியம்' என்னும் இலக்கண நூலில் கூறப்பட்டுள்ளது.
"களியின் கண்ணும் காவாலி கண்ணும்''
(தொல்-பொருள். இளம்பூரணர் சூ.248)
வலித்தல்: - இழுத்தல்
"கலித்தான் சிலையைக் கையால் வாங்கிக்
கழுத்தின் இடை யிட்டு
வலித்தான் பகுவாய் மடித்து''
(கம்ப.சம்புமாலி-47)
மோறை - அழகற்ற முகம்
"மோறை வேடுவர் கூடிவாழ்
முருகன் பூண்டி மாநகர்''
(சுந்தரர் தேவாரம்-திருமுருகன் பூண்டி-4)
குண்டுக்கா மிண்டுக்கா
தடித்த சொற்களைப் பேசுதல் மற்றும் மிடுக்கான செயல்களைச் செய்தல்.
"குண்டாடியுஞ் சமணாடியும்''
(சுந்தரர் தேவாரம்-திருமறைக்காடு-9)
"மிண்டாடித் திரிந்து வெறுப்பனவே செய்து''
(சுந்தரர் தேவாரம்-திருநாகைக்காரேணம்-5)
நாக்குமுக்கா... நாக்குமுக்கா...
2010-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் இளம் வயதினர் நாவுகளில் நடனமாடிய சொற்றொடரான இது, ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் பல்லவி. இதற்கு என்ன பொருள் என்று யாரும் கூறவில்லை; சிந்திக்கவும் இல்லை. வெறும் கூச்சல் என்றே ஒதுக்கிவிட்டனர். ஆனால், இத்தொடருக்கு ஒரு சிறந்த பொருள் இருப்பது நம்மை வியப்படையச் செய்கிறது. இதன் பொருள் நாக்கு - தீ நாக்கு (வடிவில்) மு-மூன்று. கூ - கூப்பிடுதூரம் (உயர்ந்து தோன்றிய, இறைவன்).
"நாக்குமுக் கூப்பிடு வளர்ந்து''
"முக்கூப்பிடு வளர்ந்தநெடு
நாக்கடிது கொண்டாய்''
(சிதம்பரபுராணம் - 21,34)
இவ்வாறு, தமிழ் மொழியில் உள்ள அனைத்துச் சொற்களிலும் ஆழமான பொருள் பொதிந்திருப்பதால்தான் தமிழ் "செம்மொழி' என்ற தகுதி பெற்றுள்ளது.
Post a Comment (0)