பழங்காலத்தில் பாணர் ஒரு தனிக்குடியினராகக் கருதப்பட்டு வந்தனர். அவர்களுள் இசைக் கலையை வளர்த்துச் சிறப்போடு வாழ்ந்தவர் பலர். கலையுலகில் சிறப்புப் பெறாத சிலர் வேறு துறையில் காலத்தைப் போக்கி வாழ்ந்து வந்தனர். மருத நிலத்துப் பொய்கைகளில் மீன்களைப் பிடிப்பதில் காலத்தைப் போக்கியவர் சிலர். அதைத் தொழிலாகக் கொண்டவர் சிலர். அதைத் தொழிலாகக் கொண்டவர்கள் அதில் தேர்ச்சி பெறுதல் இயல்பே அல்லவா? அத்தகைய பாணன் ஒருவன் மீன் பிடித்த காட்சியை அக்காலத்துப் புலவர் ஒருவர் தம் பாட்டில் தீட்டியுள்ளார். மருதநில வளத்தைச் சிறப்பித்துப் பாடுமிடத்தில் இதைத் கூறியுள்ளார்.
இறைச்சி கொண்ட தோல் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு, நீண்ட மூங்கில் கோல் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டான் பாணன். ஒரு குளத்தின் கரையில் நின்று அந்த மூங்கிலின் முனையில் ஒரு கயிற்றை வலித்துக் கட்டினான். அந்தக் கயிற்றின் முனையில் வளைந்த தூண்டிலிரும்பைக் கட்டினான். அத்தூண்டிலில் இறைச்சித் துண்டு வைத்துக் கயிற்றினை நீரில் விட்டான். அவன் எதிர்பார்த்தபடியே ஒரு வாளை மீன் தூண்டிலில் இரையை நாடி வந்தது. வாயைத் திறந்து நெருங்கிய அந்த வாளை இரையைக் கெளவியது. தூண்டில் கயிறும் நடுங்கியது. ஆனால் இரை வாளையின் வாயில் அகப்பட்டதே தவிர, வாளை மீன் தூண்டிலில் அகப்படவில்லை. மீன் பிடிப்பதில் வல்லவனான பாணனுடைய முயற்சி தோற்றது. வாளை வென்றுவிட்டது.
பச்சூன் பெய்த சுவல் பிணி பைந் தோல்
கோள்வல் பாண்மகன் தலைவலித் தியாத்த
நெடுங் கழைத் தூண்டில் நடுங்க நாண் கொவீஇக்
கொடுவாய் இரும்பின் மடிதலை புலம்பப்
பொதி யிரை கதுவிய போழ் வாய் வாளை
(பெரும்பாணாற்றுப்படை 283-7)
புலவர் இவ்வாறு கூறுவதில் கற்பனைச் சிறப்பு ஒன்றும் இல்லை. தாம் கண்ட காட்சி ஒன்றை உள்ளபடி கூறுவதுபோல் உள்ளது. இது விரிவான வருணனையும் அல்ல. பாணன் மீன் பிடிப்பதைச் சுருக்கமாகக் கூறியுள்ளார். மீன் அகப்பட்டுக்கொண்டது என்று பாடியிருப்பாரானால், அது பாட்டில் அமைய வேண்டிய காரணமே இல்லை. சுவையற்ற எளிய நிகழ்ச்சியாகவே இருந்திருக்கும். ஆனால்,
கோள்வல் பாண்மகன் என்று அவனுடைய மீன் பிடிக்கும் திறமையைக் கூறிவிட்டு, தூண்டிலிரும்பு தனியே இருக்க, இரையை மட்டும் வாளை கௌவிக்கொண்டது என்று சொல்லுவதில் கற்பனைக்குரிய பகுதி அமைந்திருக்கின்றது. அதையும் இவ்வளவில் நிறுத்திவிட்டிருந்தால் "எத்தனையோ நாள் இவன் வெற்றி பெற்றான்; ஒரு நாள் தோற்றான். வாளை மீன் எப்படியோ தப்பியது' என்று எண்ணி அப்பால் செல்லவே தோன்றும்.
மருத நிலத்தைப் பாடும் புலவர் மேலும் அந்த வாளை மீனைப் பற்றிக் கூறுவதுதான் கற்பனை வளத்தைப் புலப்படுத்துவதாக உள்ளது.
அந்தப் பாணனும் அந்தக் குளத்தை விட்டு வேறு குளத்தை நாடிச் சென்றுவிட்டான். குளத்தில் வேறு யாரும் வந்து மீன் பிடிக்கவுமில்லை. தூண்டிலின் இரையை அங்காத்த வாயால் விழுங்கிவிட்டுத் தப்பித்துக்கொண்ட வாளை மீன் மட்டும் அந்தக் குளத்திலேயே இருந்தது. அதைப் பற்றிப் புலவர் மேலும் ஓரடியில் கூறுகின்றார். அந்தப் பகுதியில்தான் கற்பனை சிறப்புறுகின்றது.
முதலில் தூண்டிலின் இரையை விழுங்கிய மீன் எளிதில் தப்பித்துக்கொள்ளப் போராடியதா என்பதைப் புலவர் கூறவேயில்லை. ஆனால், வளைந்த இரும்பில் பொருந்தியிருந்த இறைச்சியை வாளை விழுங்கியபோது, ஒரு துன்பமும் அடையவில்லை என்று கூற முடியாது. இரையை விழுங்கியபோது, வளைந்த இரும்பின் முனை அதன் வாயில் உறுத்தியிருக்கும்; பொத்திப் புண்படுத்தியிருக்கும். ஆயினும், வாளைமீனின் வலிமையும் திறமையும் அந்தத் தூண்டிலின் முனையிலிருந்து தப்பி ஓடத் துணை செய்தன. ஓடிய பிறகும் அந்த இரும்பு முனை தன்னை வருத்திய துன்பத்தை வாளை மீன் மறந்துவிடுமோ? இன்னொரு முறை அந்தத் தூண்டில் தன் வாயைப் புண்படுத்துமோ? என்ற அச்சம் அந்த வாளை மீனின் உள்ளத்தில் குடிகொண்டதாம்.
வாளைமீனின் உள்ளத்தில் அச்சம் குடிகொண்டிருப்பதைக் கூறுவதன் வாயிலாகவே, அது பாணனுடைய தூண்டிலால் பட்ட துன்பத்தைப் புலவர் உணர்த்துகின்றார். அந்த அச்சத்தையும், வாளை மீன் பயந்து நீருள் ஒடுங்கியது' என்று வாளா கூறவில்லை. அதை உணர்த்தும் முறையில்தான் சிறந்த கற்பனை அமைந்திருக்கின்றது.
அந்தக் குளத்தின் கரையில் பிரம்புக் கொடி வளர்ந்திருக்கின்றதாம். விடியற்காலையில் பாணன் வந்து மீன் பிடித்த போது, நிழல் விழும் நிலைமை இல்லை. ஆனால், சூரியன் மேலெழுந்து வர வர, கரையில் வளர்ந்துள்ள பிரம்பின் நிழல் நீரில் விழுகின்றது. காற்றால் பிரம்பு அசையும் போது பிரம்பின் நிழலும் அசைகின்றது. நிழலின் அசைவுக்கு அதுமட்டும் காரணம் அல்ல; நீரின் இயல்பான அசைவே பெரிய காரணம். அலையலையாக நீர் அசையும்போது பிரம்பின் நிழலும் நீரில் அசைந்தசைந்து தோன்றும். இவ்வாறு அசையும் பிரம்பு நிழலை அந்த வாளைமீன் கண்டபோது, அதன் உள்ளத்தில் அடங்கியிருந்த அச்சம் வெளிப்பட்டது. விடியற்காலையில் ஏதோ ஓர் இறைச்சித் துணுக்கை விழுங்கியபோது தான் பட்ட பாட்டையும், அந்தத் துணுக்கு இருந்த தூண்டில் கயிற்றையும் வாளை நினைத்துக் கொண்டதாம். நீரில் விழுந்தசைந்த பிரம்பின் நிழலைத் தூண்டில் என்று எண்ணி அஞ்சியதாம். முன்பட்ட துன்பத்தை நினைந்து, வாளை மீன் மிக அஞ்சியதாம்.
பொதியிரை கதுவிய போழ்வாய் வாளை
நீர் தணிப் பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம்
நீத்துடை நெடுங் கயம்.
இதுவே கற்பனை சிறக்கும் பகுதி. வாளை மீனுக்கு நினைவாற்றல் உண்டா? முன்பட்ட துன்பத்திற்குக் காரணம் தூண்டில் என்று நினைத்து நடுங்கும் தன்மை உண்டா? பிரம்பின் நிழலைத் தூண்டில் என்று மயங்கி எண்ணியிருக்குமா? இவையெல்லாம் கற்பனையுலகத்திற்குள் அடங்காத ஆராய்ச்சிகள். புலவர் வாளை மீனாக இருந்து, தூண்டிலிரையை விழுங்கி வருந்தியது முற்பகுதி. பிரம்பின் நிழலைத் தூண்டிலென்று மயங்கி நினைத்து அஞ்சியது இரண்டாம் பகுதி. இவ்வாறு முன் நிகழ்ந்த துன்பம் பின் நிகழும் அச்சத்திற்குக் காரணமாவது மக்கள் வாழ்க்கையில் உண்டு.
அதனால் புலவர், மக்களின் மனப்பான்மையை வாளை மீனுக்குக் கற்பித்து, அதனை அஞ்சி ஓடுவதாகக் கூறுகின்றார். புலவரின் கற்பனையில் உயிருள்ளவற்றிற்கும் இல்லாதவற்றிற்கும் பெரிய வேறுபாடு இல்லை. உணர்வு உள்ளவற்றிற்கும் இல்லாதவற்றிற்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஆகையால், அழுகை, மகிழ்ச்சி, வெகுளி, அச்சம் முதலியவை மக்களுக்கே சிறப்பியல்புகளாக இருந்தாலும், புலவர்கள் மற்றவற்றிற்கும் அவை உள்ளன போல் கற்பனை செய்து பாடுவது உண்டு. இந்தப் பாட்டின் பகுதியில் வாளை மீன் அறிவு, நினைவு, அச்சம் எல்லாம் பெற்றிருப்பதாகக் கூறப்படுவதற்குக் காரணம் அதுவே.
(கடியலூர் உருத்திரங் கண்ணனார்) என்றோ ஒரு நாள் பாணனின் தூண்டிலை உற்று நோக்கியிருப்பார் புலவர். மற்றொரு நாள் பிரம்பின் நிழலை உற்றுப் பார்த்தபோது அவருடைய நெஞ்சம் மீனின் துன்பத்தையும் அச்சத்தையும் கற்பனை செய்து பார்த்தது. இந்தக் கற்பனைக்குக் காரணமான பிரம்பின் நிழலையே இந்தப் பாட்டின் பகுதியில் காண்கின்றோம்.
‘மு.வ.கட்டுரைக் களஞ்சியம்’ முதல் தொகுதி.
நன்றி - தமிழ்மணி 2016
Post a Comment (0)