தமிழ் இலக்கியங்கள் என்றதும் நம் நினைவுக்கு வருவது சங்கப்பாடல்கள் தான். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் சங்க இலக்கியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை அகம்,புறம் என்ற பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் தனிப்பாடல்கள். பத்துப்பாட்டு நூல்கள் தொடர்நிலை செய்யுள்கள்.
சங்கம் மருவிய காலம் என்றழைக்கப்படும் களப்பிரர் ஆட்சிக்காலத்தில் தான் காப்பியங்கள் தோன்றின. பொதுவாக இந்த காப்பியங்கள் அறம், பொருள், இன்பம், வீடு (வீடுபேறு) எனும் நான்கு பொருளையும் கொண்டதாக அமைந்திருக்கும். தமிழில் ஐம்பெருங்காப்பியங்களாக சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியவை அறியப்படுகின்றன.
உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய நூல்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஐஞ்சிறு காப்பியங்கள் என்னும் வழக்கு ஐம்பெருங் காப்பியம் எனும் வழக்கையொட்டி வந்திருக்கலாம். களப்பிரர்கள் காலம் இருண்ட காலம் என்று குறிப்பிடப்படுகிறது. அது யாருக்கு இருண்டகாலம். வைதீக வேத மதத்தைச் சார்ந்தவர்களுக்கு இருண்ட காலமாக இருந்திருக்கும். இந்தக் காலத்தில் தான் புத்த, சமண மதங்கள் பரவின. நமது இலக்கியங்களான ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் அந்தக் காலத்தில்தான் தோன்றின. திருக்குறள் உள்ளிட்ட நீதி நூல்களும் அப்போதுதான் மலர்ந்தன. பிறப்பிலே பேதம் சொல்லும் வைதீக மதத்துக்கு எதிரான சமத்துவம் போதித்தவை புத்த, சமண மதங்கள். அவை யாகங்களில் ஆடு, மாடுகளைப் பலியிடுவதை எதிர்த்தன. மணிமேகலையில் யாகத்தை தடுக்க முயற்சித்த ஆபுத்திரனை வைதீகர்கள் வதைத்தது பற்றி தெரிந்து கொள்ளலாம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறள் அந்தக்காலத்தில் உருவான இலக்கியம்தான். அதனால் தான் அவர்கள், கொல்லாமை, புலால் உண்ணாமை போன்றவற்றை வலியுறுத்தினர். அதற்காக இலக்கியம் படைத்தனர். எனவே அது இருண்டகாலமல்ல. புதிய வெளிச்சம் பாய்ச்சிய காலம் எனலாம்.
அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கில் ஒன்றிரண்டு கொண்டதாக அமைபவை சிற்றிலக்கியங்கள் எனப்படுகின்றன. சிற்றிலக்கியங்கள் 96 வகை பிரபந்தங்கள் என்றும் சொல்லப்படுகின்றன. ஆனால் 160 உண்டு என்கிறார் முனைவர் ச.வே.சுப்பிரமணியம் தனது இலக்கிய வகையும் வடிவும் நூலில். 96 வகை பிரபந்தங்கள் எவை எவை என்று வீரமாமுனிவர் தனது சதுரகராதியில் குறிப்பிட்டுள்ளார். அவையாவன:-
சாதகம், பிள்ளைத் தமிழ், பரணி, கலம்பகம், அகப்பொருள், கோவை, ஐந்திணைச் செய்யுள், வருக்கக் கோவை, மும்மணிக் கோவை, அங்கமாலை, அட்டமங்கலம், அநுராக மாலை, இரட்டை மணி மாலை, இணைமணி மாலை, நவமணி மாலை, நான்மணி மாலை, நாம மாலை, பலசந்த மாலை, கலம்பக மாலை, மணி மாலை, புகழ்ச்சி மாலை, பெருமகிழ்ச்சிமாலை, வருத்தமாலை, மெய்கீர்த்தி மாலை, காப்பு மாலை, வேணில் மாலை, வசந்த மாலை, தாரகை மாலை, உற்பவ மாலை, தானை மாலை, மும்மணி மாலை, தண்டக மாலை, வீரவெட்சி மாலை, வெற்றிக்கரந்தை மஞ்சரி, போர்க்கெழு வஞ்சி, வரலாற்று வஞ்சி, செருக்கள வஞ்சி, காஞ்சி மாலை, நொச்சி மாலை, உழிஞை மாலை, தும்பை மாலை வாகை மாலை, வதோரண மஞ்சரி, எண் செய்யுள், தொகை நிலைச் செய்யுள், ஒலியல் அந்தாதி, பதிற்று அந்தாதி, நூற்றந்தாதி, உலா, உலாமடல், வளமடல், ஒருபா ஒருபஃது, இருபா இருபஃது, ஆற்றுப்படை, கண்படை நிலை, துயிலெடை நிலை, பெயரின்னிசை, ஊரின்னிசை, பெயர் நேரிசை, ஊர் நேரிசை, ஊர் வெண்பா, விளக்க நிலை, புறநிலை, கடை நிலை, கையறு நிலை, தசாங்க பத்து, தசாங்கத் தயல், அரசன் விருத்தம், நயனப்பத்து, பயோதரப்பத்து, பாதாதி கேசம், கேசாதி பாதம், அலங்காரப் பஞ்சகம், கைக்கிளை, மங்கலவள்ளை, தூது, நாற்பது, குழமகன், தாண்டகம், பதிகம், சதகம், செவியறிவுறூஉ, வாயுறை வாழ்த்து, புறநிலை வாழ்த்து, பவனிக்காதல், குறத்திப் பாட்டு, உழத்திப்பாட்டு, ஊசல், எழுகூற்றிருக்கை, கடிகை வெண்பா, சின்னப்பூ, விருத்த விலக்கணம், முதுகாஞ்சி, இயன்மொழி வாழ்த்து, பெருமங்கலம், பெருங்காப்பியம், சிறுகாப்பியம்
சிற்றிலக்கியங்கள் பொதுவாக ஆண்டவன், அரசன், வள்ளல், குரு போன்ற மக்களில் சிறந்தோர் ஆகியோரின் சிறப்புக்களை எடுத்துரைப்பதையே நோக்கமாக கொண்டுள்ளன. சிற்றிலக்கியங்கள் பல்கிப் பெருகிய காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டு. நாயக்கர் காலத்தை சிற்றிலக்கிய காலம் என்று கூறலாம் என்கிறார் முனைவர் சா.சவரிமுத்து.
பிரபந்தங்கள் என்ற வட சொல்லுக்கு நன்கு கட்டப்பட்டது என்று பொருளாகும். பெருங்காப்பியங்களின் உறுப்பாக அமைந்திருந்த தூது, குறம் முதலான பலவும் பிற்காலத்தே தனித்தனி இலக்கிய வகைகளாக உருப் பெற்றன. பாட்டியல் நூல்கள் சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை விளக்கிக் கூறுகின்றன. பாட்டியல் நூல்களுள் வச்சணந்தி மாலை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய நூலாகும்.
96வகை சிற்றிலக்கியங்கள் என்று கூறப்பட்டாலும் பொதுவாக மாணவர்களாலும் அறிஞர்களாலும் படித்து மகிழத்தக் கவையாக உள்ளவை ஒரு சிலவே. கோவை, உலா, தூது, கலம்பகம், பிள்ளைத்தமிழ், குறவஞ்சி, பரணி, பள்ளு, சதகம், அந்தாதி போன்றவை பரவலாக அறியப்படுபவை. மூவர் உலா, கலிங்கத்துப்பரணி, நந்திக்கலம்பகம், மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் போன்றவை புகழ்பெற்றுத் திகழ்கின்றன.
ஒட்டக்கூத்தர், செயங் கொண்டார், குமரகுருபரர், திருகூடராசப்பகவிராயர் என பலர் சிற்றிலக்கியங்களை படைத்துப் புகழ் பெற்றவர்கள்.
நன்றி - தீக்கதிர்
கருத்துகள்