05/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 2 - ப.முருகன்


உலா

நூறு கார்கள் இரு நூறு கார்கள் அணிவகுக்க அமைச்சர்கள் பவனி வருதல் நாம் இப்போது காணும் காட்சி. அந்தக் காலத்தில் நாடாளுபவர் - அதாவது மன்னரின் நகர்வலம் என்பது மாறு வேடம் அணிந்து யாருக்கும் தெரியாமல் சுற்றி வருவதாகும். ஆனால் பகலிலோ இரவிலோ புடைசூழ அணிவகுத்துச் செல் வது பவனி வருதல் எனும் உலா ஆகும். உலா வருதல், தூது அனுப்புதல் போன்றவை எல்லாம் காப்பியத்தின் ஒரு சில கூறுகள். இது தனித்து வரும் போது சிற்றிலக்கியம் ஆகிறது.

உலாவுக்கு பன்னிருபாட்டியல் (132) கூறும் இலக்கணம்

பேதை முதலா எழுவகை மகளிர்கண்(டு)

ஓங்கிய வகைநிலைக் குரியான் ஒருவனைக்

காதல் செய்தலின் வரும் கலிவெண்பாட்டே என்பதாகும்.

இறைவனோ, அரசனோ, தலைவனோ வீதியில் உலா வரும்போது பேதை(5வயது முதல் 7வயது), பெதும்பை(8-11), மங்கை(12-13), மடந்தை(14-19), அரிவை(20-25), தெரிவை(26-31), பேரிளம்பெண் (32-40) எனும் ஏழுவகைப் பெண்களும் கண்டு காதல் கொள்வதாகப் பாடுவது உலா. இதற்கான பாடல்வகை கலிவெண்பா.

இது அகத்திணை சார்ந்ததாக உள்ளதோடு பாடப்படும் தலைவன் பற்றி புகழ்ந்துரைப்பதால் பாடாண் திணையாகவும் அமைகிறது. அத்துடன் திருமணமான மகளிர் தவிர்த்து ஏழு பருவத்துப் பெண்களும் ஒரு தலையாக காதல் கொள்வதாக அமைவதால் இது பெண்பால் கைக்கிளை என்றும் அழைக்கப்படும். உலா மாலை என்றும் கூறுவர்.

உலா நூல்களில் மிகப்பழமையானது ஆதி உலா எனப்படும் திருக்கைலாய ஞான உலா. இதைப் பாடியவர் சேரமான் பெருமாள் நாயனார். இவ்வுலாவின் தலைவன் சிவபெருமான். பாடியவரோ அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். இது பக்திநிலை முற்றியதால் விளைந்தது.

கி.பி.9ம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட இந்த உலா நூலின் அமைப்பை வைத்தே பல நூல்கள் தமிழில் இயற்றப்பட்டுள்ளன.

கி.பி.11ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தர் மேல் நம்பியாண்டார் நம்பி பாடியது ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை. கி.பி. 12ம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் இயற்றியது மூவர் உலா. சொக்கநாதர் உலாவை படைத்தவர் தத்துவராயர். இவர் திருக்காளத்திநாதர் உலாவையும் பாடியுள்ளார். திரிகூடராசப்ப கவிராயர் இயற்றிய திருக்குற்றால நாதர் உலா தமிழில் உள்ள சிறந்த உலா நூலாகக் கருதப்படுகிறது.

ஒட்டக்கூத்தர் - பந்தயம்(ஓட்டம்) வைத்து பாடிப்புகழ் பெற்றவர் என்பதால் பெயர் முன் சேர்ந்து கொண்டது. கூத்தர் என்பது சிவபெருமானின் பெயர் ஆகும். இவர் எழுதிய மூவர் உலா, விக்கிரமச் சோழன், குலோத்துங்க சோழன், ராசராச சோழன் ஆகிய மூவரையும் பற்றியதாகும்.

புலவர்கள் பாடத்துவங்கினால் புரவலர்களை இந்திரன், சந்திரன் என்றெல்லாம் புகழ்ந்துதானே ஆக வேண்டும். பல வகை அணிகளை அணிந்த பெண்களே! தன்னுடைய வில்லினது இருமுனைகளையும் கொண்டு கோடி அளவான கல்மழையைப் பெய்யச் செய்த இந்திரனின் நூறு முனைகளை உடைய வச்சிரப்படையை வென்ற இராசராசசோழனின் வில்லின் அழகினைப் பாருங்கள் என்கிறார். இதுபோல இன்னும் நிறைய அடுக்குகிறார் ஒட்டக் கூத்தர்.

இந்திரனுக்கும் இராசராசனுக்கும் என்ன தொடர்பு என்றுதானே யோசிக்கிறீர்கள். கற்பனைக் குதிரை கட்டவிழ்த்துப் பறந்துவிடுகிறது. அதை எப்படி கொண்டு வந்து ஒட்ட வைக்கிறார் ஒட்டக்கூத்தர்? கண்ணன் கதை தெரிந்தால்தான் இந்த கவிதையை நாம் ரசிக்க முடியும். இந்திரனுக்குப் படைக்க வேண்டிய படையலைக் கண்ணன் சொல்லைக்கேட்டு ஆயர்பாடி மக்கள் கோவர்த்தன மலைக்கு படைத்தனர். அதனால் இந்திரன் கோபமுற்று கல்மழையைப் பெய்ய வைத்தான். அந்த இந்திரனை, சோழர்களின் முன்னோர்களில் ஒருவனான ரகு என்பவன் தன் வில்லினால் போரிட்டு இந்திரனின் வச்சிராயுதத்தை அழித்தான் என்று ஒரு கதை உண்டாம். அந்தக் கதையை இராசராசன் மேல் ஏற்றிப் பாடினாராம் ஒட்டக்கூத்தர். இது எப்படி இருக்கிறது? அந்தப் பாடல் வரிகள்:

தயங்கிழையீர் தற்கோடி

ஓரிரண்டு கொண்டு

சதகோடி கற்கோடி

செற்றசிலை காணீர்

இப்படி ஒவ்வொரு கண்ணிக்கும் ஒவ்வொரு கதை உள்ளது. படித்துப்பார்த்து ரசிக்கலாம்.

நன்றி - தீக்கதிர்

கருத்துகள் இல்லை: