கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை ம...

“சங்கத் தமிழ் கற்போம்!”


பாட்டும் தொகையும் எனப் பன்னெடுங்காலமாக அழைக்கப்பட்டு வரும் சங்க இலக்கியம் இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. ஒன்று எட்டுத் தொகை; இன்னொன்று பத்துப்பாட்டு, பல நூறு பாடல்களால் ஆன எட்டுத் தொகுதிகளின் தொகுப்பாய் விளங்குவது எட்டுத்தொகை. நீண்ட பத்துப் பாடல்களின் தொகுப்பே பத்துப்பாட்டு.

கவிதை அமைப்பாலும் அடி எண்ணிக்கை முறையாலும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்று பிரிந்திருப்பது போல, உள்ளடக்க முறையிலும் இரண்டாகப் பிரிந்துள்ளது சங்க இலக்கியம். அதாவது, ஒட்டுமொத்தக் கவிதைகளையும் அகப்பாடல்கள், புறப்பாடல்கள் என இரண்டு வகையாகப் பிரித்து விடலாம். ‘அகம்’ என்பது இல்வாழ்க்கை சார்ந்தது; காதலில் தொடங்கித் திருமணத்தில் தொடரும் குடும்ப வாழ்க்கைக் கூறுகளை உள்ளடக்கியது; காதலன் பெயரோ காதலி பெயரோ இடம் பெறாதது; நாகரிகத்தின் அடையாளமாக விளங்குவது; அவரவர் உள்ளத்தால் உணரக்கூடியது; மற்றவர்க்கு உரைக்கக் கூடாதது.

‘புறம்’ என்பது மற்றவரிடம் பெருமையாக எடுத்துக் கூறத்தக்க வீரம், கல்வி, கொடை, புகழ், அரசியல் அனைய பல வாழ்க்கைக் கூறுகளைக் கொண்டது.

எட்டுத்தொகை நூல்களை நினைவிற் கொள்ள பயன்படுத்தப்படும் ஒரு பழைய வெண்பா:

நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறு நூறு

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று

இத்திறத்த எட்டுத் தொகை

பத்துப்பாட்டு நூல்களை நினைவிற் கொள்ளும் வெண்பா:

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய

கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து

பத்துப்பாட்டு நூல்கள் பத்தையும் - எட்டுப் புலவர்கள் எழுதியுள்ளனர். ஆனால், எட்டுத்தொகை நூல்கள், தொகுப்புகளின் தொகுப்பு. எடுத்துக்காட்டாக, ஐங்குறு நூறு 500 பாடல்களைக் கொண்டது. ஐந்து புலவர்களால் நூறு நூறு பாடல் என எழுதப்பட்டது. 401 பாடல்களை கொண்ட குறுந்தொகையை 205 புலவர்கள் எழுதியுள்ளனர்.

சங்க இலக்கியப் பாடல்களை எழுதியுள்ள புலவர்களின் எண்ணிக்கை 473 ஆகும். இதனுள் 40க்கும் மேற்பட்ட பெண் புலவர்களும் உண்டு. கிடைத்துள்ள மொத்தப்பாடல்கள் 2308. இவற்றுள் வரிகள் விடுப்பட்ட பாடல்களும் ஆசிரியர் பெயர் குறிப்பிடாத பாடல்களும் உள்ளன. பரிபாடல், பதிற்றுப் பத்து முதலான சில நூல்களில் 73 பாடல்கள் கிடைக்கவில்லை. இவ்வகையில் பார்த்தால் சங்க இலக்கியப் பாடல்கள் மொத்தம் 2381 ஆகும்.

பொதுவாக வாழ்வியல் எதார்த்தம் அதிகமுள்ள பாடல்கள் இவை. இனக் குழு மக்கள் கால வாழ்க்கையும் உண்டு. சமூக ஏற்றத்தாழ்வுகள், ஆணா திக்க வளர்ச்சி, அரசுகளின் உயரத்தில் உழைப்பாளிகள் ஓடப்பரான நிகழ்வுகளும் உண்டு. (இவற்றை எழுதிய புலவர்கள் எண்ணிக்கை 473. இவர்களின் மூவேந்தர்களைப் பற்றிப் பாடியவர்கள் 71 புலவர்கள் மட்டுமே. இதிலும் சேரர் பற்றி 25, சோழர் பற்றி 21, பாண்டியர் பற்றி 25 புலவர்கள் பாடியுள்ளனர்.)

இனக்குழு மக்களை, இனக்குழுத் தலைவர்களை இவர்களையடுத்து வந்த குறுநில மன்னர்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கைதான் சங்க இலக்கியத்தில் மிகுதி (402 புலவர்கள்). 40க்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இருந்திருக்கின்றனர். இவர்களில் மிகுதியான பாடல்களை எழுதியவர் ஒளவை (59 பாக்கள்). ஒளவை எழுதியவற்றில் அகப்பாடலை விடப் புறப்பாடலே மிகுதி என்பது அக்காலப் பெண்களின் அரசியல் பங்கேற்பைப் காட்டுகிறதல்லவா? இவ்வாறு சிந்தனையைக் கிளறிவிடும் செய்யுள்களின் தொகுப்பே சங்க இலக்கியம்.

‘புரியாது’ எனும் அச்சம் தேவையில்லை; ‘சொற்கள் புரியுமா?’ என்று தயங்க வேண்டியதில்லை. உள்ளே நுழைந்து பார்த்தால் அழகழகான வழக்குச் சொற்கள் நம்மை வசப்படுத்தி விடும். பூவுக்குள் புகுந்த வண்டாகப் படிப்போர் ஆவது உறுதி.

சங்க இலக்கியத்துக்குள் புகுந்து பார்த்தால் புதிய புதிய வரலாற்றுச் செய்திகள், தமிழ்க்கவிதையின் இனிய நுட்பங்களோடு நம்மை வரவேற்கும்.

குடும்பமே அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பது போல, குடும்பமே கூடி அமர்ந்து தினம் ஒரு சங்கப்பாடலை வாசித்து இலக்கியச்சுவை பருகலாமே!

- செம்மொழித் தமிழ் உயராய்வு மையமும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் இணைந்து வெளியிட்டிருக்கும் “சங்கத் தமிழ் கற்போம்! செம்மொழித் தமிழ் வளர்ப்போம்!” என்ற பிரசுரத்திலிருந்து.

நன்றி - தீக்கதிர்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ