நொண்டி நாடகம்
வீரமாமுனிவர் தனது சதுரகராதியில் கூறும் 96 வகை சிற்றிலக்கியங்கள் தவிர வேறு சிலவும் சிற்றிலக்கியங்கள் என்றே அறிஞர் பெரு மக்களால் அழைக்கப்படுகின்றன. அதில் ஒன்று `நொண்டி நாடகம்.’
பல நாடுகளில் நாட்டியக் கலையும் நாடகக் கலையும் இணைந்தே வளர்ந்து அமைந்தன. தமிழ்நாட்டிலும் அந்த நிலைமை இருந்து வந்ததைக் `கூத்து’ என்ற பழைய சொல் விளக்கும் என்கிறார் டாக்டர் மு.வரதராசனார். இலக்கிய மரபு எனும் நூலில் அவர் மேலும் கூறுகிறார். கூத்தர், பொருநர் என்ற பெயரில் கலைஞர்கள் வாழ்ந்து நடன, நாடகக் கலைகளை வளர்த்து வந்தனர் என்பது தொல்காப்பியம் முதலான பழைய நூல்களால் தெளிவாகின்றது; வசைக்கூத்து, புகழ்க்கூத்து, வேத்தியல் கூத்து, சாந்திக்கூத்து, ஆரியக் கூத்து, தமிழ்க் கூத்து, இயல்புக்கூத்து, தேசிக்கூத்து முதலான பலவற்றின் குறிப்புகள் அடியார்க்கு நல்லார் உரையில் காணப்படுகின்றன என்கிறார்.
பத்தாம் நூற்றாண்டில் இராஜராஜேசுவர நாடகம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வந்தது என்பதை தஞ்சாவூர் கோவில் கல்வெட்டினால் அறியலாம். பிற்காலத்தில் குறவஞ்சி எனும் நாடக வகை தோன்றி வளர்ந்தது. திரிகூடராசப்ப கவிராயரின் குற்றாலக் குறவஞ்சி இதற்கு எடுத்துக்காட்டு.
அழகர் குறவஞ்சி, ஞானக் குறவஞ்சி, மீனாட்சியம்மை குறம், கொடுமகளூர்க் குறவஞ்சி, சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் முதலியன இவ்வகையைச் சேர்ந்தவை.
இவ்வகை நாடகம் அகவல், வெண்பா, கலிப்பா, கலித்துறை, விருத்தம் முதலிய செய்யுட்களோடு சிந்து, கீர்த்தனம் முதலிய இசைப் பாட்டுக்களும் கொண்டிருப்பதால் ஓசை நயம் மிகுந்து கேட்பவர்க்கு இனிமை தரும்.
பள்ளு என்னும் நாடக வகையும் சில நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றியது. உழவர்களின் வாழ்க்கையை சுவைபட எடுத்துரைப்பது இந்நாடகம்.
இந்நாடகத்தில் பலவகை செய்யுள்களும் கலந்து ஓசை இனிமை தரும். நாட்டுப் பாடல்களின் இசையிலும் சில அமையும். முக்கூடற்பள்ளு, திருமலை முருகன் பள்ளு, திருவாரூர்ப் பள்ளு, பறாளைப்பள்ளு, கண்ணுடையம்மை பள்ளு, குருகூர்ப்பள்ளு, வடகரைப் பள்ளு, கதிரைமலைப்பள்ளு, வையாபுரிப் பள்ளு முதலிய நாடக நூல்கள் இவ்வகையைச் சேர்ந்தவை.
குறவஞ்சி, பள்ளு நாடக நூல்கள் கற்றோர் மட்டும் அல்லாமல் மற்றவரும் கேட்டு இன்புறும் வகையில் உள்ளவை. ஆதலால் மக்கள் பேசும் கொச்சைச் சொற்களும் இடையிடையே வருதல் உண்டு.
அருணாசலக் கவிராயர் இராமாயணத்தை (இராமநாடகம்) நாடகமாக்கித் தந்துள்ளார். அது போலவே மகா பாரதம் பாரத விலாசம் எனும் பெயரில் நாடகமாக்கப்பட்டது.
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்தில் தலையெடுத்தது. புராண நாடகங்கள் மட்டுமின்றி காத்தவராயன் போன்றவையும் உருவாயின.
நாடகங்களுக்கு மன்னர்களிடமும், கற்றவர்களிடமும் ஆதரவு குறைந்த பிற்காலத்தில் தெருக்கூத்து என்ற பெயரில் வாழ்வன ஆயின. ஆடல், பாடல்களில் கலை மெருகு இல்லாமல் அமைந்தன என்று குறைப்பட்டனர். ஆனால் அவற்றில் உணர்ச்சி இல்லாமல் போகவில்லை. கற்பனை இல்லாமல் போகவில்லை. அதனால் பாமர மக்கள் பாராட்டும் தன்மையுடையதாய் விளங்கின.
இந்த வகையில் 17-ம் நூற்றாண்டில் மக்களிடையே செல்வாக்குடையதாய் விளங்கியது தான் நொண்டி நாடகம். நாட்டுப்புறப் பாடல்களில் பாளையக்காரர்களைப் போற்றும் வகையில் பாடல்கள் உள்ளன. நாட்டுப்புறத்தில் இவர்களின் ஆதரவில் நாடகங்கள் படைக்கப்பட்டன.
நொண்டிச் சிந்து வகையில் அமைந்துள்ள நொண்டி நாடகம், 96 வகை பிரபந்தங்களில் ஒன்றாகக் கூறப்பட வில்லை என்றாலும் இந்த நாடகங்களையும், ஒரு சிற்றிலக்கிய வகையாகக் கொள்ளலாம் என்கிறார் முனைவர் சா.சவரிமுத்து.
18-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பழனிநொண்டி நாடகம், சீதக்காதி நொண்டி நாடகம் என்பவை ஏட்டுச்சுவடியாக உள்ளன. திருக்கச்சூர் நொண்டி நாடகம் அச்சிடப்பட்டது என்கிறார் டாக்டர் மு. வரதராசனார்.
இத்தகைய நொண்டி நாடகங்களில் வரும் தலைவன் நெறிதவறி நடக்கிறான். பரத்தையரோடு உறவு கொண்டு ஒழுக்கக் கேடன் ஆகிறான். உடல் நோயும் மனநோயும் பெறுகிறான்.
நோய் மிகுந்து நடக்கும் வலிமை இழந்து நொண்டியான பிறகு தவறை நினைத்து இரங்கி கடவுளை வேண்டுகிறான். கண்ணீர் விட்டு கசிந்து உருகுகிறான். பின்னர் உடல் நலம் தேறுகிறான். இது தான் நொண்டி நாடகத்தின் அமைப்பாகும்.
இன்றுள்ள நொண்டி நாடகங்களில் கந்தசாமிப் புலவர் எழுதிய திருச்செந்தூர் நொண்டி நாடகமே முதல் நாடகம் என்றும், இவரே சீதக்காதி நாடகத்தையும் எழுதினார் என்றும் டாக்டர் ந. இளங்கோ கூறுகிறார். திருமலை நொண்டி நாடகம், சாத்தூர் நொண்டி நாடகம் போன்ற நாடகங்கள் சிறந்தவை என்கிறார் முனைவர் சா.சவரிமுத்து. ஆயினும் இவற்றில் சில நாடகங்களே கிடைக்கின்றன என்றும் கூறுகிறார்.
நன்றி - தீக்கதிர்
கருத்துகள்