18/11/2012

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 20 - ப.முருகன்


கீர்த்தனை

“நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லாம் நன்றொலிக்கும் பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்” என்றார் மகாகவி பாரதி. தமிழில் வழங்கும் நாடோடிப் பாடல்கள் கணக்கில் அடங்காதவை. அவற்றின் பா வடிவங்களுக்கு வரைமுறை இல்லை. என்றாலும் நெஞ்சத்தை ஈர்ப்பவை அவை. வண்ணம், சிந்து, கண்ணி, கீர்த்தனை எனப் பல வடிவங்கள் உள்ளன.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் வரிப்பாடல்கள் பாடினார். மாணிக்கவாசகர், ஆண்டாள் போன்றோர் இலக்கிய வடிவம் தந்தனர். தாயுமானவர், இராமலிங்க வள்ளலார், பாரதியார் போன்றோரும் நாட்டுப்புறப் பாடல்களை பயன்படுத்தியுள்ளனர்.

ஓர் எதுகைபெற்ற இரண்டடிகள் அளவு ஒத்து வருதல் சிந்து எனப்படும். “பூவும் வேண்டாமே பழமும் பொரியும் வேண்டாமே! மேவும் உள்ளன்பே - தேவி விரும்பும் நல்லமுதாம்” நான்கு அடிகள் ஓர் எதுகையாய் வருவதும் உண்டு. காவடிச்சிந்து, நொண்டிச்சிந்து, வழிநடைச்சிந்து, தங்கச்சிந்து, வளையல் சிந்து, ஆனந்தக்களிப்பு, தெம்மாங்கு என சிந்து பலவகைப்படும். சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்து புகழ் பெற்றது.

இரண்டு இரண்டு அடிகளால் ஆவதே கண்ணி. இதற்கு தாயுமானவரின் பராபரக்கண்ணி, கிளிக்கண்ணி சிறந்த எடுத்துக்காட்டு.

கீர்த்தனை என்பது இசைப்பாட்டு வடிவத்தின் முதிர்ந்த நிலை. இது எடுப்பு, தொடுப்பு, படுப்பு என மூன்று நிலைகளில் அமைந்திடும். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்பதும் அவைதான். கீர்த்தனைக்கு உதாரணங்கள் காட்டுவது எனில் அருணாசலக் கவிராயரின் இராமநாடக கீர்த்தனை, கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை ஆகியவற்றைக் காட்டலாம். இதை நாடகமாகவும் கொள்ளலாம். சிற்றிலக்கியமாகவும் கொள்ளலாம்.

அருணாசலக் கவிராயர் (1712-1779) பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் சீர்காழி மூவர் என்றழைக்கப்படும் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர். இசைத்தமிழ் வளர்த்த சீர்காழி முத்துத்தாண்டவர் (1525-1600), மாரிமுத்துப் பிள்ளை (1712-1787) ஆகியோர் மற்றவர்கள். இவர்களுக்குப் பிந்தையவர்கள் தான் திருவையாறு மும்மூர்த்திகள் எனப்படும் தியாகய்யர், சியாமா சாஸ்திரிகள், முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோர்.

கீர்த்தனைகளில் மிகவும் கீர்த்தி வாய்ந்தது கோபால கிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரக் கீர்த்தனையாகும். மற்றெல்லா கீர்த்தனைகளுக்கும் இல்லாத சிறப்பு நிலவுடமை சாதிய ஆதிக்கத்தை எதிர்க்க நந்தன் என்ற தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த மகனை தன் கதாபாத்திரமாக்கிக் கொண்டது தான் என்கிறார் இலக்கிய ஆய்வாளர் கே.முத்தையா. அவர் தமது `தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம்’ எனும் நூலில் மேலும் கூறுவதாவது:-

வேதியர் என்பவர் ஒரு பெரு நிலச்சுவான்தார். அவருக்குக் கீழ் அடிமையாகப் பணியாற்றிய கூலி உழைப்பாளி நந்தன். நந்தனுக்கு மேல்சாதித் தெய்வமான நடராஜர் மீது பக்தி மேலிட்டுவிட்டது.

காத்தவராயன், கருப்பண்ணன், முனியன், மூக்கன், காட்டேரி போன்ற சாமிகள் தாம் நந்தன் கும்பிட வேண்டிய தெய்வங்கள். மேல்சாதி தெய்வமான தில்லை நடராஜர் மீது நந்தனுக்கு பக்தி பிறந்தது அவனுக்கு அடுக்காத செயல். எனவே வேதியருக்குக் கோபம் மூண்டது. அவர் கேட்கிறார்.

பறையா நீ சிதம்பரம் என்று சொல்லப்படுமோடா

போகப்படுமோடா-

அட பறையா!

அறியாத்தனம் இனி சொன்னால் இனிமே

அடிப்பேன் கூலியைப் பிடிப்பேன் - பாவிப்பறையா!

சிதம்பரம் என்பதை விடு

கொல்லைச் சேரியிலே வந்து படு - நாத்தை

பதத்திற் பிடுங்கினதை நடு - கருப்பண்ண சாமிக்கே பலி கொடுத்திடு

இதுதான் வேதியர், நந்தனுக்குக் கூறிய நீதி, மேல் சாதி தெய்வத்தை நந்தன் கனவிலும் நினைக்கக்கூடாது என்பது மட்டுமல்ல; நினைத்தால் கூலியைப் பிடித்துவிடுவாராம் நிலச்சுவான்தாரான வேதியர். சாதியும் நிலவுடமை ஆதிக்கமும் இவ்வாறு இணைந்து பிணைந்து நின்றன என்கிறார் கே.முத்தையா.

இப்படி எழுதியதற்காகவே பிராமண சமூகத்தில் பிறந்த கோபாலகிருஷ்ண பாரதியை சாதிப்பிரஷ்டம் செய்தார்கள். ஒதுங்குவதற்குக் கூட மேல்குலத்தோர் என்பவர்கள் தம் வீடுகளின் திண்ணைகளில் கூட இடம்தர மறுத்துவிட்டனர் என்றால் பார்த்துக் கொள்ளலாம். பிறகு நந்தனுக்கு என்ன நடந்தது என்று தெரியும்தானே.

இது தவிர, அவர் எழுதிய நீலகண்ட நாயனார் கீர்த்தனை, இயற்கை நாயனார் சரித்திரக் கீர்த்தனை, காரைக்கால் அம்மையார் சரித்திரக் கீர்த்தனை ஆகிய நூல்களும் சிறப்பானவை. மாயூரம் வேத நாயகம் பிள்ளை சர்வசமய சமரசக் கீர்த்தனை, சத்திய வேதக் கீர்த்தனை ஆகியவற்றை எழுதினார்.

கி.பி. 19ம் நூற்றாண்டின் துவக்கத்தில் கீர்த்தனை நூல்கள் மிகுதியாகத் தோன்றின. வேதநாயக சாஸ்திரி யார் பல கீர்த்தனைப் பாடல்களை எழுதினார். இவர் தவிர இதர ஐரோப்பியர் எழுதிய கீர்த்தனை நூல்கள் குறிப்பிடும்படியாக இல்லை என்கிறார் டாக்டர் சா.சவரிமுத்து.

வீரமாமுனிவர் கூறிய 96 பிரபந்தங்கள் தவிர ஒருசிலவற்றை பார்த்தோம். ஆயினும் சிற்றிலக்கியங்கள் எல்லாவற்றையும் தொல்காப்பியர் விருந்து எனும் வனப்பினுள் அடக்கலாம். எனினும் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை 160 என்று `இலக்கிய வகையும் வடிவம்’ என்கிற நூலில் ச.வே.சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார். குணவீர பண்டிதர் எழுதிய வச்சணந்தி மாலை எனப்படும் வெண்பா பாட்டியல் எனும் நூலில் சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தை அறிந்து கொள்ளலாம்.

நன்றி - தீக்கதிர்

கருத்துகள் இல்லை: