கையறுநிலை
அன்று வந்ததும் அதே நிலா இன்று வந்ததும் அதே நிலா எனும் பாடல் ஒரு திரைப்படத்தில் சோகமயமான சூழலிலும் பாடப்படும் இந்தப்பாடல் புறநானூற்றுப் பாடல் ஒன்றின் பிரதிபலிப்பு.
“அற்றைத்திங்கள் அவ்வெண்ணி லவில்
எந்தையும் உடையேம் எம் குன்றும்
பிறர்கொளார்
இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார் யாம்
எந்தையும் இலமே” (112)
இந்தப்பாடல் பாரி மகளிர் பாடியது. இது கையறுநிலை எனும் துறையைச் சேர்ந்தது.
கடையேழு வள்ளல்களில் ஒருவனாம் பாரியை மூவேந்தர்களும் சேர்ந்து போர் செய்து வீழ்த்தினர்.(!) அவனது புதல்விகள் இருவரும் புலவர் கபிலரின் பாதுகாப்பில் இருந்தனர். அவர் தந்தையைப் போல் சிந்தித்தார் செயல்பட்டார். அவர்களுக்கு மணம் செய்து வைக்க முயற்சித்தார். அதை தமது கடமையாக எண்ணினார் கபிலர். அவரது பாடல்கள் பல கையறு நிலைப்பாடல்தான்.
பொதுவாக புலவர்கள் மன்னர்களைப் பாடி பரிசில்கள் பெற்று வாழ்க்கையை நடத்துபவர்கள். கைகொடுக்கும் வள்ளல்கள். புரவலர்கள். அவர்கள் இல்லை எனில் அதாவது இறந்துபடின் புலவர்கள் நிலை என்னாகும்? நமது வாழ்வுக்கு என்ன செய்வது என்று கையைப்பிசைந்து கொண்டு நிற்கும் ஆதரவற்ற நிலைதான் கையறுநிலை.
புலவர் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனிடம் ‘பாராமலே’ கொண்டிருந்த நட்பு பார் போற்றும் தன்மையது. சோழன் வடக்குநோக்கி அமர்ந்து உண்ணாநோன்பிருந்து உயிர் துறக்க நினைத்தபோது பிசிராந்தையாரும் வருவார். அவருக்கும் இடம் போட்டு வையுங்கள் என்று கூறினானாம். அவ்வாறே பிசிராந்தையாரும் எவ்விதப் பிசிறுமின்றி நடந்து கொண்டார் என்பதை படிக்கும் போதே நம் கண்கள் பனிக்கும். அவரைப் போல் இன்னொரு உயிர் நண்பரான உறையூர்ப் பொத்தியார் என்பவரும் வடக்கிருந்தாராம். அவர் பாடியதும் கையறு நிலை பாடல்தான் (புறநானூறு217)” அன்னோனை இழந்த இவ்வுலகம் என்னாவது கொல்? அளியதுதானே!” அத்த கையவனை இழந்த சோழ தேசம் எவ்வாறு துன்பங்களுக்கு இரையாகுமோ? அதுவே இரக்கத்தைத் தருகின்றது என்பது பாடலின் பொருள்.
சோழன், பிசிராந்தையார் இருவரும் வடக்கிருந்ததை கண்ட கண்ணகனார் பாடிய பாடலும் (218) கையறு நிலையை சேர்ந்ததுதான். இதுபோல நிறைய உண்டு.
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் என்பவனை குடவாயில் நல்லாதனார் பாடிய பாடல் பின்வருமாறு கூறுகிறது. ஒல்லையூர் நாட்டிலே இளைய வீரர்கள் கண்ணிசூடாராயினர். வளையணியும் மங்கல மகளிரும் மலர் கொய்யாராயினர். பாணனும் மலர் சூடானாயினன். பாடினியும் மலர் அணியாளாயினள். வலிய வேலோனான சாத்தன் இறந்ததனால், இவ்வாறு யாவரும் நல்லணி துறந்திருக்கும் வேளையிலே முல்லையே நீமட்டும் பூக்கின்றாயோ?
“முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே?’’ (புறம் 242)
இவையெல்லாம் மன்னர்கள், வள்ளல்கள், புரவலர்கள் இறந்ததையொட்டிப் பாடியவை. ஆனால் ஒரு மன்னன் தன் மனைவி இறந்ததற்கு இரங்கிப் பாடிய பாடல் படித்திருக்கும் வாய்ப்பு அபூர்வம்.
சேரமான் கோட்டம்பலத்திலே துஞ்சிய மாக்கோதை, அவன் மனைவி பெருங்கோப்பெண்டு அதாவது பட்டத்தரசி இறந்துவிட்டாள்.
யாங்குப் பெரிதுஆயினும், நோய்
அளவு எனைத்தே
உயிர் செகுக் கல்லா மதுகைத்து
அன்மையின்
கள்ளிபோகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளை
விறகு ஈமத்து,
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி,
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை,
இன்னும் வாழ்வல்; என் இதன்
பண்பே (புறம் 245)
கள்ளி வளர்ந்த புறங்காட்டிலே, விறகு அடுக்கிய ஈமத்தின் கண், அழற் பாயலிலே அவளைக் கிடத்தினேன். அம்மடவாள் போய்விட்டாள். என் துயரம் எவ்வளவு பெரிதாயினும் என் உயிரையும் போக்கி அவளுடன் சேர்க்கும் வலியற்றதாயிற்றே. அவள் இறந்தும் யான் வாழ்கின்றேனே? இதன் பண்பு தான் என்னே? என்று அவளோடு தானும் இணைந்து உயிர்விடவில்லையே எனக் காதலால் வாடுகிறான் சேரமன்னன்.
பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், கண்ணகி வழக்கிலே குற்றமுடையவன் தான்தான் எனத் தெரிந்ததும் அரியணையிலிருந்து நிலத்தில் வீழ்ந்து உயிர் விட்டான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அவன் இறந்ததுமே ‘கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல்’ என்று கூறி அவனது மனைவி கோப்பெருந்தேவி அப்போதே உயிர்விட்டாள் என்றும் அது மேலும் கூறுவதை நாம் அறிந்து இருக்கிறோம் அல்லவா? அந்தக் காட்சிக்கு மாறுதலானது அல்லவா இது.
நன்றி - தீக்கதிர்
கருத்துகள்