மாலை
“மாலை வண்ண மாலை - இந்த உலகத்தில் ஆயிரம் மாலை ஆயிரம் பொன்பெறும் அருட்பா மாலை ஆண்டவன் அடியார்க்கு அருள்மணி மாலை...” என பலவகை மாலைகளை அடுக்கும் ஒரு திரையிசைப்பாடல்.
பிரபந்தங்கள் என்றழைக்கப்படும் சிற்றிலக்கியங்களில் ஏராளமான மாலை வகைகள் உண்டு. அவையாவன: அங்க மாலை, அநுராகமாலை, இரட்டை மணிமாலை, இணைமணிமாலை, நவமணி மாலை, நான்மணி மாலை, நாமமாலை, பலசந்தமாலை, கலம்பக மாலை, மணிமாலை, புகழ்ச்சி மாலை, பெருமகிழ்ச்சி மாலை, வருத்த மாலை, மெய்கீர்த்தி மாலை காப்பு மாலை, வேனில்மாலை, வசந்த மாலை, தாரகை மாலை, உற்பவமாலை, தானை மாலை, மும்மணிமாலை, தண்டகமாலை, வீர வெட்சிமாலை, காஞ்சி மாலை, நொச்சிமாலை, உழிஞை மாலை, தும்பை மாலை, வாகை மாலை. இவற்றுடன் வெற்றிக்கரந்தை மஞ்சரி, வதோரண மஞ்சரி ஆகியவற்றையும் சேர்த்தால் முப்பது ஆகிவிடும். ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு மாலை வகை சிற்றிலக்கியங்கள்.
இவற்றில் வீரவெட்சி மாலை, காஞ்சிமாலை, நொச்சிமாலை, உழிஞை மாலை, தும்பை மாலை, வாகை மாலை ஆகியவை போர் தொடர்புடைய திணைகளின் பெயரில் அமைந்தவை.
வெட்சி நிரை கவர்தல் மீட்டல் கரந்தையாம்
வட்கார் மேல் செல்வது வஞ்சி உட்காது எதிர் ஊன்றல் காஞ்சி
எயில் காத்தல் நொச்சி அதுவளைத்தலாகும் உழிஞை
அதிரப்பொருதல் தும்பை மிக்கார் செருவென்றது வாகை
என்பது புறப்பொருள் வெண்பாமாலை பாடல்.
புறப்பொருள் பற்றிய விபரங்களை வெண்பாக்களிலே பாடியிருப்பதால் இதற்கு புறப்பொருள் வெண்பாமாலை என்ற பெயர் வந்தது. இதேபோல் ஆசிரியப்பாவினால் பாடப்பட்டது ஆசிரிய மாலை என்ற பெயரைப் பெற்றது. ஆயினும் வெண்பா மாலையே பரவலாக எடுத்தாளப்படுகிறது.
பழங்காலத்தில் மன்னர்கள் தங்கள் போர் முறைகளாக சிலவற்றை மேற் கொண்டிருந்திருக்கிறார்கள். ஒரு நாட்டின் மீது படையெடுக்க நினைத்தால் முதலில் அவனது நாட்டில் உள்ள பசுக்களை (ஆநிரைகள்) கவர்ந்து வரச் செய்வார்களாம். இதுதான் வெட்சித் திணையில் பாடப்படுகிறது. அந்தப் பசுக்களை எதிரி மன்னன் படை மீட்டுச் சென்றால் அது கரந்தைத் திணையாகும். இந்த ஆட்டம் ஒரு வழியாக முடிந்தால் அடுத்த கட்டம் எதிரி நாடு மீது படையெடுத்துச் செல்வது வஞ்சித் திணை. அவர்களை தன் நாட்டுக்குள் நுழையவிடாமல் எதிர்த்து நிற்பது காஞ்சித்திணை. அதை முறியடித்து கோட்டை மதிலை சுற்றி வளைப்பது உழிஞைத் திணை. சுற்றி வளைத்த எதிரிப் படையிடமிருந்து மதிலை பாதுகாப்பது நொச்சித் திணை. மதிலையும் கடந்த நிலையில் இரண்டு படைகளும் மோதி போர் செய்வது தும்பைத் திணை. இதில் வெற்றி பெறுவது வாகைத் திணை.
போரில் வெற்றி பெற்றால் வாகை சூடினான் என்று குறிப்பிடுவர். அதாவது வாகைப்பூவை தலையில் அணிந்து வெற்றியை கொண்டாடுதல் வாகைத் திணை. இந்தத் திணைகளில் குறிப்பிடப்படுபவை எல்லாம் மலர்களே. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை மலர்களைச் சூடிக் கொண்டு போர் நிகழ்த்துவது அந்தக்கால போர் நெறியாக இருந்தது என்று இலக்கிய நூல்கள் குறிப்பிடுகின்றன.
மேற்கண்ட மாலைகள் யாவும் அரசர்கள் தொடர்புடையவையாக விளங்குபவை. இவை தவிர்த்த பிற மாலை வகைகள் இறைவன் மீது பாடப்படுபவை. வேனில் மாலை, வசந்த மாலை மட்டும் இயற்கை மீது பாடப்படுபவை. இயற்கை எழில் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வகையில் இயற்றப்பட்டவை வேனில் மாலையும் வசந்தமாலையும்.
கி.பி.10 அல்லது 11ம்நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தார் கோயில் நான்மணிமாலை எனும் மாலை நூலையும் எழுதியுள்ளார்.
14ம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது திருவாவடுதுறை ஆதீனம். இதை நிறுவியவர் நமச்சிவாய மூர்த்தி. அந்த மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ அம்பலவாண தேசிகர், நமச்சிவாயமாலை, அதிசய மாலை போன்ற நூல்களைப் படைத்துள்ளார். திருவாவடுதுறை ஆதீனத்தின் வித்வானாக விளங்கிய மீனாட்சி சுந்தரம் பிள்ளை ‘அகிலாண்டநாயகி மாலை’ உள்ளிட்ட 4 மாலை நூல்களை இயற்றியுள்ளார். மீனாட்சி சுந்தரம்பிள்ளை 19ம்நூற்றாண்டின் முக்கால்பகுதி வரை வாழ்ந்தவர். (1815ல் பிறந்து 1876ல் மறைந்தார்)
இதேகாலத்தில் வாழ்ந்த மாயூரம் வேதநாயகம்பிள்ளை திருவருள் மாலை, தேவதோத்திர மாலை போன்ற வழிபாட்டுப்பாடல்களை எழுதியுள்ளார். 17ம்நூற்றாண்டைச் சேர்ந்த சிவப்பிரகாசர் நால்வர் நான் மணிமாலை, அபிசேகமாலை, கைத்தல மாலை ஆகியவற்றை படைத்துள்ளார்.
நன்றி - தீக்கதிர்
கருத்துகள்