23/07/2011

இடைப்பாடி அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர்மேல் பாடப்பெற்ற நாட்டுப்புறப் பாடல்கள் - அ. கணேசன்

சேலத்திலிருந்து மேற்குத் திசையில் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இடைப்பாடி என்ற ஊர் அமைந்துள்ளது. இடைப்பாடிக்குக் கிழக்கே மேட்டூரும், மேற்கே ஈரோடும், தெற்கே பவானியும் எல்லைகளாக அமைந்துள்ளன. இடைப்பாடி என்ற இவ்வூரின் பெயரை எடப்பாடி என்று அழைத்தும் எழுதியும் வருகின்றனர். இவ்வூரில் சரபங்காநதியின் கரையோரத்தில் நகரின் முதன்மைப் பகுதியில் அருள்மிகு பிரசன்ன நஞ்சுண்டேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு மைசூர் மன்னர்களால் இத்திருகோயில் நிறுவப்பெற்றதாகக் கூறுகின்றனர். இத்திருகோயில் இறைவன் பெயர் பிரசன்ன நஞ்சுண்டேசுவரர்; இறைவி பெயர் தேவகிரி அம்மன் என்பதாகும். இவர்கள் மேல் பாடப்பெற்ற நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றிச் சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

நூலின் அமைப்பு:-

 

''எடப்பாடி ஸ்ரீ நஞ்சுண்டேஸ்வரர் சித்திரைத் திருவிழா வேடிக்கை - சிங்காரத் தங்கப்பாட்டு'' என்னும் தலைப்பில் பாயிரம் (2), காப்புப்பாடல் (1) உட்பட அறுபத்தைந்து பாடல்களைக் கொண்டு இந்நூல் அச்சாகியுள்ளது. இந்நூலை இயற்றியவர் தாராபுரம் பாலகவி வித்துவான். டி.எம். திருமலைதாஸ் என்பவராவர். தா.வெ.பா வெங்கட்ராமச் செட்டியார் அவர்கள் பதிப்பாசிரியராக அமர்ந்து இந்நூலை பதிப்பித்துள்ளார். இந்நூலை வெளியிட்டவர் எடப்பாடியிலுள்ள கலைமகள் புத்தக சாலையினர் ஆவர். 1936 - ஆம் ஆண்டில் எடப்பாடியிலுள்ள டி.எ.வி. அச்சுக் கூடத்தினர் இந்நூலை அச்சிட்டுள்ளனர். இந்நுலின் விலை ''ஒரு அணா'' என்பது குறிப்பிடத்தக்கது.

 

நூலில் அமைந்துள்ள மெட்டுகள்:-

 

இந்நாட்டுப்புறப் பாட்டில் பல்வேறு மெட்டுகள் கூறப்பட்டுள்ளன. அவற்றின் பெயர்கள் வருமாறு. மந்தையிலே மெட்டு, கட்டபொம்முமெட்டு, அடங்காது அடங்காது மெட்டு, பாங்கான பெண்மயிலே மெட்டு, சுருளிமலைமெட்டு, பஞ்சவதனிலே மெட்டு, பல்லவி, அநுபல்லவி, சரணம், இலாவணிமெட்டு, பாரினிலே புகழ்பாரத புத்திரரே மெட்டு ஆகிய மெட்டுக்கள் அடிப்படையில் பாடல்களைப் பிரித்து அமைத்துள்ளனர்.

 

நூலின் திரண்ட கருத்து:-

 

கிராமத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் தலைமைப் பாத்திரங்களாக அமைக்கப்பெற்று நூல் இயற்றப்பெற்றுள்ளது. கணவன், மனைவியைப் பார்த்து எடப்பாடி நஞ்சுண்டேசுவரர் திருக்கோயிலில் நடக்க இருக்கும் சித்திரைத் தேர்திருவிழாவைக் கண்டுகளிக்க அழைக்கின்றான். அந்நிலையில் மனைவியானவள் வர மறுக்கின்றாள். இருப்பினும் சித்திரைத் தேர்த்திருவிழாவில் நடக்க இருக்கும் வேடிக்கை வினோதவிழாச் சிறப்பினைக் கூறுமாறு கேட்கின்றாள். கணவனும் விழாவின் சிறப்புகளைக் கூற, அதைக்கேட்ட மனைவியும் உடன்பட்டு எடப்பாடி வந்து விழாவைக் கண்டுகளிக்கின்றாள். இடையிடையே தேர்த்திருவிழாவின் விழாநிகழ்ச்சிகள் வினாவிடை அமைப்பில் கூறப்பெற்றுள்ளன.

 

எடப்பாடி சித்திரைத் திருவிழாவின் தேரழகு:-

 

சித்திரைத் திருவிழாவில் அமைக்கப்பெற்றிருந்த தேரின் அழகை, நூலாசிரியர்,

 

''முத்துக் கண்ணாடி பதித்த சிங்காரம்

முன்னின்று பாரடி காணல் அலங்காரம்

சித்ரப் பதுமை சுற்றித் தொங்கும் ஒய்யாரம்

ஜொலிக்குது ரசகுண்டு மாணிக்க வயிரம்

நாற்புறம் பவளக்கால் தூண்களை நாட்டி

நவரத்ன குலோப்பு லைட்டுகள் மாட்டி

போல்டு கம்பிகள்வில் வளைவாகப் பூட்டி

புதிப்பித்த ரதம்பல கலர்களால் லைட்டு

பலவர்ண கண்ணாடிகள் பதித்த பஞ்சரத்னரதம்

எலக்ட்ரிக் பல்புகளால் இந்திர விமானம் செய்தார்

மானே- அதை பார்க்கப்பசி தீருமே செந்தேனே''

 

என்றவாறு காட்டியுள்ளார்.

 

சித்திரைத் திருவிழாவின் கடையழகு:-

 

சித்திரைத் திருவிழாவில் பல்வேறுவகையான கடைகள் உள்ளதாகக் கணவன், மனைவியிடம் கூறுகின்றான். அச்செய்தியை நூலாசிரியர் பின்வரும் பாடல்கள் வாயிலாக நமக்குக் காட்டியுள்ளார்.

 

''மாட்டுக்கடை கூட்டம் வேணதடி மங்கையரே யெந்தன் பூங்குயிலே

வட்டமாய் ஷாப்பு ஷறாப்பு கடை வளையல் ஜவுளி கடைகளுண்டு

கண்ணான் கடைகள் கரும்புக் கடைகணக்கில் அடங்காது மாமயிலே

இன்னும் பலகடை சிங்காரத்தை எடுத்தோதி வாரேண்டி பூங்குயிலே

வெற்றிலைப் பாக்கு தேங்காய் பழங்கள் புத்தக அல்மென்யா பூக் கடைகள்

சுற்றிப்பார்க்க இன்னும் வேண துண்டு சுந்தரியே எடப்பாடி தனில்....''

 

சித்திரைத் திருவிழாவில் கோயில் வாகனங்கள் உலாவரும் காட்சி:-

 

சித்திரைத் தேர்த்திருவிழாவில் நஞ்சுண்டேசுவரர் கோயில் தெய்வத்திருவுருவங்கள் ஏழுவாகனங்களின்மேல் அமர்ந்து உலாவந்ததாக நூலாசிரியர் காட்டியுள்ளார். அவ்வாகனங்களின் பெயர் வருமாறு; காமதேனு வாகனம், சிம்மவாகனம், மயில்வாகனம், மூஷ’கவாகனம், ரிஷபஹ்‘கம், யானைவாகனம், கெருட வாகனம், இதனை உணர்த்தும் பாடல் வருமாறு:

 

''கோவிலைக் கண்டார்கள் கும்பிட்டு நின்றார்கள்

தேவகிரி அம்மனையும் கண்டு போற்றினர் இருவர்

தோத்தரித்து மலர்மாலை செண்டு சாற்றினார்

காமதேனு வாகனமும் கற்பக விருட்சமதை

ஷேமசிம்ம வாகனமும்யென் கண்ணே சுந்திரமே இன்னும்

செப்புவேன்கேள் மயில்வாகனமாம் என் பெண்ணே சுந்திரமே

மூஷ’க வாகனமாம் முதன்மைப் பொருளான ஜோதி

யீசரிஷப வாகனம்யென் கண்ணே சுந்திரமே

யானையுட வாகனமாம் யென்பெண்ணே சுந்திரமே''

 

மேற்பாட்டில் வந்துள்ள இருவர் என்பது கணவன் மனைவியரைக் குறிக்கும். அத்துடன் இறைவியின் பெயர் தேவகிரி அம்மன் என்பதும் பெறப்பட்டது.

 

பாட்டில் கூறப்பட்டுள்ள புராணச் செய்தி:-

 

இந்நாட்டுப்புறப் பாட்டில் நஞ்சுண்டேசுவரர் பற்றிய புராணச் செய்தி கதை அமைப்புடன் கூறப்பெற்றள்ளது. அதனை உணர்த்தும் பாடல் வருமாறு,

 

''அசுரரும் தேவரும் ஒன்றாய் கூடி பெண்ணே

அமுர்தம் கடைந்தார் கடல்தேடி அதை

அசுரர்க்கு இல்லாமல் தேவர் அள்ளியுண்டதாலே இந்தக்

காஷ’ பெரு மாஷ’

.........................

.........................

.........................

........................

நஞ்சுண்ட ஐயன்எனப் பேரு இங்கு

நடக்க திருவிழாவின் ஜோரு வெகு

நாகரீக மாகத்தமிழ் ஓதும் திருமலைசாமி

தாசன் அன்பர் நேசன்''

 

பழைய தமிழ்ப் புராணங்களில் கூறப்பெற்றுள்ள நஞ்சுண்டேசுவரர் வரலாறு நாட்டுப்புறப் பாடல்களில் பதிவாகியுள்ளதால், நாட்டுப்புற மக்களும் புராணச் செய்திகளைத் தெரிந்து கொள்ள இடமேற்படுகின்றது.

 

வாணவேடிக்கைப் பெயர்கள்:-

 

தேர்த்திருவிழாவில் வாணவேடிக்கை நிகழ்த்துவது என்பது இன்றும் வழக்கில் உள்ளது. நூலாசிரியர் அன்று நடந்த வாண வேடிக்கையின் பல்வேறு பெயர்களை,

 

''மஹமேருதெப்ப உற்சவம் மானே வாண வேடிக்கை

திகலொழி மாமயிலே பாரு பாரு கண்ணே

தெரியும் பலவித வினோதம் ஜோரு ஜோரு

சிட்டு அவுட்வாணம் தேர்வாணம் புகைபஞ்சு

சீரல்எலி வாணமாம் கண்ணே கண்ணே இங்கு

பூற நடக்குமடி பெண்ணே பெண்ணே

நட்சத்திர அவுட்டு ரயில்வாணம் மத்தாப்புடன்

பச்சை ஊதாவின் பாம்பு வானம் வாணம் பொறி

பறக்கும் நிலவிரிச யேகம் யேகம்

சக்கர வாணமுடன் சதிர்வாணம் அதிர்வேட்டு

செக்கச் செவந்த பெண்ணே பாரு பாரு நாம்

சென்றிடுவோம் காரிலேறி ஊரு ஊரு''

என்றவாறு கூறியுள்ளார்.

 

எடப்பாடி ஸ்ரீ நஞ்சுண்டேசுவரர் சித்திரை திருவிழா வேடிக்கை - சிங்காரத்தங்கப்பாட்டு என்ற தலைப்பில் அச்சான நாட்டுப்புறப் பாடலிலுள்ள செய்திகளை அறிந்தோம். இத்திருவிழா இன்றும் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திங்களில் நடந்து வருகின்றது என்பது ஆய்வாளர் கள ஆய்வில் கண்ட உண்மையாகும். மேலும் இப்பாடலில் 1936 ஆம் ஆண்டில் விழா அறக்கட்டளையாளர்களாக இருந்த கொங்கணாபுரம் ஜமீன்தார் செங்கோட்டு வேலவக்கவுண்டர், சென்னை சட்டசபை மெம்பர் நாச்சியப்பக்கவுண்டர், பொன்னம்பலவாணன், சின்னாண்டி பக்தர், தர்மகர்த்தா வைத்திகண்டர், வெங்கட்ராம செட்டியார் ஆகியோர்க்கு வாழ்த்துக் கூறப்பட்டுள்ளது.

நன்றி: வேர்களைத்தேடி

கருத்துகள் இல்லை: